போர்க்களங்களின் புதியவரலாற்றுப் பெட்டகம்

Palraj

வன்னிமண் வனப்புடன் ஈன்ற ளித்தவெம்
    வரலாற்று வித்தகன் வானுலகம் சென்றனனே!
கன்னித் தமிழன்னை தன்மானம் காத்துநின்ற
    கட்டிளம் காளைகற் பூரமாய்ப் போயினனே!
முன்னிலைத் தளபதியாய் முடிசூடி நின்றவெம்
    முத்தான தத்துவம் முழுநிலவா யானதே!
சென்னியிற் பதித்தேநாம் தொழுதிடும் மாவீரனாய்ச்
    செந்தமிழ்ச் செல்வன் சேர்ந்தனன் இறையே!

தலைவனை மூச்செனக் கொண்டிலங்கு தம்பியாய்த்
    தமிழீழமே தன்னுயர் தாரக மந்திரமாய்
மலையெனத் திடமுடன் மாற்றான் படைக்கோர்
    மன்னும் சிம்மசொப் பனமாய்த் திகழ்ந்து
நிலையிலா இவ்வுலக வாழ்வினில் நிறைமாந்தர்
    நெஞ்சத்தில் ஒளிரும் நெய்விளக்காய்த் திகழ்
விலையிலாத் தன்வாழ் வீய்ந்தோன் தன்னுயர்
    வீரவர லாற்றினை விதந்துரைக்க விழைந்தோம்!

தேனொத்த தமிழனாய்த் திகழுயர் தலைவனைத்
    தேடினர் தீங்குசெய் இந்தியர் மணலாற்றினில்,
கானத்து விலங்குகளாய்க் கரிகாலனைச் சிறைப்பிடிக்கக்
    காட்டாற்று வெள்ளமென வளைத்து நிற்கையில்
மானத்தை உயிரென மதித்துவாழ் மறவனாய்
    மாசிலா வன்னிமகன் மழவன்பா லசேகரன்
ஈனத்துப் படையதன் இலக்கினை உடைத்து
     இன்னுயிர் அண்ணனின் பொன்னுயிர் காத்தனன்!

கொக்குத் தொடுவாயின் கொடையாய்க் கிடைத்தவன்
    கொள்கையிற் பிறழ்விலாக் குலமகனாய் விளங்கிக்
கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சித் தாக்குதலில்
    கொடியோராம் சி;ங்களத்தின் கொட்டம் அடக்கி
எக்காள மிட்டுக் கடற்காற்றுடன் மின்னலென
    எடுப்போடு எதிர்த்த படையெடுப்புத் தன்னைத்
தக்கதோர் தலைமை யெனத்;தானே தோன்றித்
    தடுத்தனன் முல்லையொடு மணலாற்றின் அழிவினை!
   
சிங்களத்தின் தலைகொய் சீரிய படைகொள்
    சார்ள்ஸ் அன்ரனியின் சிறப்புத் தளபதியாய்ப்
பொங்குதமிழ் மறவர்தம் புலிப்படை தன்னுயர்
    புகழார்ந்த துணைப்படைத் தளகர்த் தனாய்ச்
செங்கதிராய்த் திளைத்துத் துன்னலர் தானையிற்
    சுழன்று சிவப்பேற்றிச் சிதறிடச் செய்தோன்
மங்காத ஒளியெனத் துலங்கிடு மாணிக்கம்
    மாண்பு மெய்தனில் விழுப்புண்பல கண்டனன்!

சூரியக் கதிரொடு முன்னேறிப் பாய்தலிற்
    சூறா வளியெனக் கட்டளைகள் சுட்டிநின்றே
ஆரியர் படைதனை அடித்து விரட்டினன்!
    ஆனையிறவுச் சுற்றுலா விடுதிதனைத் தகர்த்து,
வாரி யழிக்கவென வவுனியா நின்றபடை
    வன்னி விக்கிரம நடவடிக்கை தொடுக்கவே
கூரிய நுண்ணறிவிற் குற்றமற்ற போர்புரிந்து
    கொடும்பகை விரட்டிக் குன்றென நின்றனன்!

ஓயாத அலைகள் ஒன்றிரண்டு மூன்றென
    ஓய்வின்றி உழைத்து ஆயுதங்கள் மீட்டுச்
சாயாத திண்மையில் ஜெயசிக்குறு தன்னிலும்
    தகர்த்தழித்த யாழ்தேவி தீச்சுவாலை களிலும்
நாயகனாய் நின்றுமே படைநடத்தி வென்று
    நானிலமும் மெச்சிட வாகைசூடி நின்றான்!
தாயாகத் தனைவளர்த்த அண்ணன்தன் எண்ணம்
    தடையின்றி நிறைவேறத் தம்பிதனைக் கொடுத்தான்!

ஆண்டாண்டு காலமாய் அன்னியரின் ஆட்சிக்குள்
அகப்பட்டு நுடங்கிய ஆனையி றவுதன்னை
மீண்டும்நா மாண்டிட மெய்வருத்தம் நோக்காது
    மிக்கவே பெற்றுத் தந்தோனாம் பால்ராஜ்
ஈண்டிங்கு பிறப்பான் எம்முயிரிற் கலந்தான்
    இணையிலா வெற்றிகள் மென்மேலும் பெற்றிட
ஆண்டவன் திருநிழலிற் சேர்ந்தவன் தான்வளர்த்த
    அரும்படை இயக்கியே அன்னைமண் மீட்பான்!
     
 -கனடாவிலிருந்து பவித்திரா-