அக்கினிப் பிரவேசம்...

காந்தனின் தீடிர் மறைவு வீட்டிலுள்ள அனைவரையும் ஓருகணம் கலங்க வைத்தக்கொண்டிருந்தது. வீடே மயான அமைதியாகயிருந்தது. அவரது வீட்டிற்கு முன்பின் பார்த்திராத பலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில் காந்தனின் மனைவி கோகிலா இருக்கவில்லை. காந்தன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி அடுக்கடுக்காக மொழிந்து கொண்டிருந்தார்கள். வாழ்கின்றபோது எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்கின்ற உலகம்... இறந்த பிறகு அவை பெரும்பாலும் நல்லவையாகவே இருக்கும் இது கண்கூடாக கண்டு கொண்டிருக்கும் நிஜங்கள்.

நல்லா கிடந்த மனுசர் இப்படி பட்டென்று போயிடுவார் என்று யார் நினைச்சவயள் என்றும் வருத்தம் என்டு மனுசர் ஒருநாளும் கூட படுக்கையிலே கிடந்தது இல்லை அவதிப்படாமல் உயிர் போட்டுது என்றம் கூறிக்கொண்டிருந்தார்கள்.

அவரின் இறப்பை யாருமே எதிர்பார்திருக்கவில்லை. எதிர்பாராமல் ஏற்பட்ட நிலைகண்டு அனைவரும் அதிசயித்ததோடு... அவரது பூதஉடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்கள்இ தெரிந்தவர்கள் எல்லோருமே வந்த வண்ணமே இருந்தனர். ஓவ்வொருவரும் வரும்போது கோகிலாவால் அழுகையை அடக்கமுடியவில்லை.

"ஓ..." வென மனதின் துயரினை கண்ணீரால் கழுவிக்கொண்டிருந்தாள்.

தொலைபேசி அழைப்புக்கள் வேறு மாறி மாறி அலறிக் கொண்டிருந்தன. வீடே நிசப்த அமைதியாகயிருந்தபோதும் இந்த தொலைபேசி ஒலி அந்த அமைதியை விரட்டிக் கொண்டிருந்தது.

காந்தனுக்கு கடைசியாய் என்ன உடுத்துவது என்று கேட்டுக்கொண்டு வந்து நின்றார் அவருடைய இணைபிரியா நண்பர் கமலநாதன்.

கோகிலா ஒருகணம் மின்சாரத்தில் கட்டுண்டவள் போல் ஆடிப்போனாள். சென்றகிழமைதான் அவள் அவருக்காக பல கடைகள் ஏறி இறங்கி அந்த சேட்டை வாங்கிக்கொண்டு வந்தாள். சின்ன சின்ன பெட்டிகள் போட்ட அந்த நீலநிற சேட் அவளுக்கு நிறையவே பிடித்திருந்தது. அன்று கணவனிடம் கூறியவை இப்போதும் அவள் நினையில் வந்து போயிற்று. "உங்களுக்கென்டு எத்தனை கடைகள் ஏறி இறங்கினன் தெரியுமா... மலிவுவிலை என்டு பாத்து வாங்கிப்போட்டு ஒருக்கா தோய்க்க நிறமெல்லாம் வெளிறிப்போகுது. காசுகூட என்டாலும் பரவாயில்லை என்டு போட்டு வாங்கினனான் எப்படி சேட் என்டு சொல்லுங்கோவன்..." தன் ஆசை எல்லாம் அடக்கமுடியாமல் கேட்டாள். ஆனால்... இன்று அதை அதிக காலத்துக்கு கூட உடுத்த முடியாதநிலையை எண்ணி கலங்கி... அவளின் கண்ணீர்த்துளிகள் அதில் பட்டுத் தெறித்தது. தன் முகத்தை அதில் புதைத்துக்கொண்டு தன்னை மறந்து விக்கிஇ விக்கி அழுதாள். பிறகு அந்த சேட்டை எடுத்துக் கொடுத்தபடியே அவள் "என்ட மூத்த மகன் சிவா வந்துட்டானே எனக்கு அவனைப் பார்க்கோனும்..." அவள் சிறுகுழந்தைபோல் விம்மிஇ விம்மி அழுதாள். அவளைப் பார்க்கவே ஏதோ பரிதாபமாக... மனநிலை பாதிக்கப்ட்டவள் போல் இருந்தாள்.

அவளின் செய்கைகள் ஒன்றிலும் காந்தனின் மீது அவள் கொண்ட காதல் அதன் மூலம் பட்டுத் தெறித்தக் கொண்டிருந்தது. முப்பது வருட தாம்பத்திய வாழ்வின் நெருக்கம் அதன் பரிணாமங்களாக... அவளின் உடலெங்கும் வியாபித்திருந்தது.

அவர்களின் வாழ்ந்த வாழ்க்கைக்கு அன்பு சாட்சியாக சிவாஇ குமார்இ சந்தியா மூவராக இருந்தனர்.

குமார், சந்தியா இருவரும் அருகில் இருக்க இல்லாத மகனை தேடி அந்த பேதை மனம் அலைந்தது.

தன் கணவனுக்கு கொள்ளி வைக்கும் உரிமையுள்ள மகனைத் தேடியது அந்தத் தாயுள்ளம்.

"அம்மா, அண்ணைக்கு டெலிபோனில எல்லாம் சொல்லிப்போட்டன். டிக்கட் விசயமா ஒடித் திரியிரார் எப்படியும் வந்திடுவார். நீங்கள் கவலைப்படாதீங்கோ..." சமாதானப்படுத்தினாள் அவளின் கடைசி மகள் சந்தியா.

"அம்மா, அப்பாவை எரிக்கிறதுக்கு ஒரு கிழமை ஆகுமாம். அதனால முதல்ல செய்ய வேண்டியதை எல்லாம் வார திங்கட்கிழமை செய்யட்டுமாம். பிறகு எப்ப எரிக்கிறது என்டு அவையள் அறிவிப்பினமாம் என்டு சொல்லி போட்டு போயினம்..." என்று அவளது இரண்டாவது மகன் குமார் தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவளால் அதை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.

அக்கினி பிரவாகத்தின் முன் தன் கணவனின் உடல் வெறும் சாம்பலாகப் போகிறதா...? அந்த அக்கினியின் வெப்பத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா...?

அவள் மனம் அந்த அக்கினி சூட்டில் வேகாமலே வெம்மிக் கொண்டிருந்தவேளையில்... அவள் கண்கள் தன் குடும்பநண்பர் கமலநாதனை தேடி அலைந்தது.

"நீங்கள் ஒருக்கா அவையளிடம் விசாரித்துப் பாருங்கோவன் கடைசியா அவருடைய உடம்பை இந்த வீட்டிக்கு கொண்டுவர முடியுமா..." என்று அவள் கெஞ்சாத குறையாக கேட்டாள்.

"இல்லைம்மா, அவையள் மாட்டன் என்டு முடிவாச் சொல்லிப் போட்டினம்..." என்றார் கமலநாதன்.

இந்த வீட்டில்தான் இருவரும் முதன்முதலாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்கள். அதன் ஒவ்வொரு அறையின் சுவாசக்காற்றும் ஆயிரம் கதை சொல்லும். இல்லற வாழ்வின் இனிய தாம்பத்தியத்தில் மூன்றுசெல்வங்களும் பிறந்து வாழ்ந்த வீடு அது. பிறந்தநாள் விழா, திருமணவிழா என பல விழாக்களை கண்டு அனுபவித்த ராசியான வீடு.

தொலைபேசி மணி அடித்துக் கொண்டிருந்தது.

கனடாவில் இருந்து அழைப்பு. அவள் மனதில் இனம்புரியாத ஒர் தவிப்பு மகனுடன் கதைக்கப்போவதை எண்ணிபடியே...

"சிவா, எப்படா வார..." குரல் தொண்டையை அடைக்கக் கேட்டாள்.

"அம்மா, நானும் எவ்வளவோ அலைஞ்சிட்டன். டிக்கட்டும் கிடைச்சபாடில்ல. அதோட திடிரென்று லீவும் எடுக்கமுடியல. நீங்கள் ஒன்னும் யோசியாதையுங்கோ அம்மா. திங்கட்கிழமை காரியம் எல்லாத்தையும் செய்யுங்கோஇ மறக்காம வீடியோவில எடுத்துவிடுங்கோ. நான் எப்படியும் எரிக்கிறதுக்கு முன்னுக்கு அங்கு வந்து நிற்பன். நீங்கள் ஓன்றுக்கும் யோசியாதேங்கோ..." என்று கூறிய வார்த்தைகள் ஆறுதலாகயிருந்தாலும் மனதின் அடித்தளத்தில் ஏதோ ஓர் வலி. சொல்லத்துடித்த வார்த்தைகள்... சொல்லமுடியாமல் அவளின் இதயத்துக்குள் அமிழ்ந்து போயிற்று.

மகன் கூறிய சொற்களுக்கிடையில் சிக்கிக்கொண்டு... அதிலிருந்து வெளியே வரமுடியாமல் உறுத்தியபடியே... மடங்கி வளைந்து யோசிக்கும் மூளைக்கும் அகப்படாமல் தவிக்கும் மனவேதனையோடு மகன் வரவுக்காய் காத்திருந்தாள்.

திங்கட்கிழமை வழமையாக அன்று காந்தனின் காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்தது. அவரது மூத்தமகன் சிவா இல்லை என்ற குறைதவிர வேறு ஒன்றும் பெரிதாக தலையெடுக்கவில்லை. வாகன உதவியோ... சரீர உதவியோ... என்று உதவுவதற்கு பலர் முந்தியடித்துக் கொண்டு நின்றார்கள். அவர் வாழ்ந்தகாலத்தில் பகைவர்களை விட நண்பர்களைத்தான் சம்பாதித்திருந்தார். வாழ்ந்த காலத்தின் நிஜங்கள்... அவரது இறந்த நேரத்தின் வழியனுப்புக்களாய்... சமர்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

சிலநாட்களின் பின் காந்தனின் உடல் எரிக்கப்படுவதற்காக திகதியும்இ நேரமும் அறிவிக்கப்பட்டது. அவர்களின் மூத்தமகன் சிவாவும் குறிப்பிட்ட நாளுக்கு முதலே வந்தது அவளுக்கு பெரும் நிம்மதியைத் தந்தது.

நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ படங்களாக காண்பிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அனைத்தும் ஒய்ந்த நிலையில்... இறுதியில் கோகிலாவின் இறுதிவாழ்க்கை எப்படி எங்கே அமையப்போகிறது... என்ற வினா எல்லோர் நினைவிலும் எழ கேள்விகளாக பதில்களாக சமர்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அவளின் இளைய மகள் சந்தியா லண்டனில் இருந்து வந்தவள் "அம்மா, நீங்கள் இனி என்னேடதான் வந்து இருக்கவேணும். நானும் இனி வேலைக்கு போகக்கே மகனை வீட்டிலேயே விட்டுப் போட்டு போகலாம்..." என்றாள்.

அவளின் இரண்டாவது மகன் குமார் "ஏனம்மா, பழகிய இடத்தைவிட்டு போறீங்கள். பேசாமல் இந்த வீட்டை விற்றுப்போட்டு அந்தக் காசில பெரிய வீடா வாங்கிப்போட்டு எங்களுடனே யேர்மனியிலே வந்து இருங்களன்..." தன் ஆதங்கத்தைக் கூறினான்.

அவளின் மூத்த மகன் சிவாவும் தன் பங்குக்கு "அம்மாஇ நீங்கள் பேசாமல் கனடாவுக்கு வாங்கோ உங்களை நான் ஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுறன் ஊரில இருக்குமாப்போல இருக்கலாம். உங்களுக்கென்டு ஒரு அபார்ட்மென்ட் எடுத்துத் தாறன் எங்கட இனசனம் கணபேர் இருக்கினம் ஒன்னும் யோசிக்கத்தேவையில்லை நல்ல சந்தோசமா இருக்கலாம்..." என்றான்.

கணவன் இறந்துவிட்டால் பூவையும் பொட்டையும் தான் அவனுடன் இழந்து விடுவதாக அவள் சரித்திரங்களிலும் காவியங்களிலும் அறிந்திருந்தாள். அவருடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் போய் விட்டது. ஆனால் அவளின் உயிர் போக வில்லை. அது ஏன் போகவில்லை அவள் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

தன் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருப்பதை மெதுவாக உணர்ந்து கொன்டாள்.

ஐந்து வருடங்களுக்கு முன் தன் கணவர் கூறியது இப்போதும் அவள் காதுகளில் ஒலிப்பது போன்ற பிரேமை அவளுக்கு ஏற்பட்டது.

"எங்கட கையில நாலுகாசு இருந்தால்தான் பிள்ளைகளும் வைச்சுப்பார்பினம் சொந்தம் பந்தம் என்டு இருக்கும். வெளிநாடென்டு வந்து எங்கட பெரிசுகள் படுற பாட்டை பாக்ககேக்க கவலையாக் கிடக்குது. நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலக்கிடக்கு..." என்று கூறியதை நினைவில் நிருத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்று அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் வளர்த்த பிள்ளைகள் அப்படி எங்களை நடுரோட்டில விடாயினம் தான் வளர்த்த பிள்ளைகளுக்காக அந்த அன்புப்பிடியில் சிக்குண்டு அன்று கூறினாள்.

ஆனால்... இன்று அந்த அக்கினிசுவாலையோடு அவரது உடல் ஐக்கியமானபோது சுமைகள் இதயத்திலிருந்து வெளிக்கிளம்பிய அவளுக்குள்ளும் ஓர் அக்கினிப் பிரவாகம் மெல்லென அவள் இதயத்தில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.

ஏன் என்னால் தனித்துவாழ முடியாதா... வாழ்ந்து காட்டுகிறேன் என்ற அக்கினிப் பிரவாகம் அவளின் உடல் எங்கும் வியாபித்துக் கொண்டிருந்தது.

(யாவும் கற்பனை)

-ஷண்முகி-