புலம்பெயர் வாழ்வில் அவலங்கள் சில..
குழந்தை;
அது சாதாரணமாகவே பத்து மாதங்களில் பிறக்கிறது
அது ஆணா பெண்ணா என்ற ஆதங்கம் பலருக்கு இருக்கின்றது
ஆணும் பெண்ணும் சமமாக இருக்கவே நினைக்கின்றது
வேணும் என்றால் வேண்டாததை அழிக்கவும் முடிகிறது.
பள்ளி வயது;
பெற்றோரின் ஆசையே பிள்ளையை நடத்துகிறது
கற்க விரும்புவதைக் கற்கவிடாது தடுக்கின்றது
பட்டப் படிப்பை விரும்பாவிட்டாலும் படிக்கின்றது
டாக்டராக்கவே பெற்ற உள்ளம் நினைக்கின்றது.
பல அரங்கேற்றங்கள் ;
நுழையாவிட்டாலும் நுண்கலைச் செல்வத்தை
நுழைக்க நூறு வகுப்புக்கள் செல்வதும்
வீணையைத் தொட்டதும் வாணி என்பதும்
மத்தளம் தொட்டதும் மேதை என்பதும்
வாயைத் திறந்ததும் வித்தகர் என்பதும்
நடக்கும்போதே நர்த்தகி என்பதும்
குழலைத் தொட்டதும் கண்ணன் என்பதும்
குறைவின்றி நடக்கையில் குழந்தைகள் என்செய்வார்?
பாதி கற்றதும் போதுமென்றெண்ணி
தேடிப்பிடித்து மேடைகள் அமைத்து
பொருந்தாவிடினும் பெரும் பொருள் கொடுத்து
பக்க வாத்தியம் பலவும் அமைத்து
அறியாதவர்க்கும் அழைப்பிதழ் கொடுத்து
விரும்பாதவரையும் வாவென்றழைத்து
வெளிநாட்டவரையும் வலிந்து இழுத்து
வரிசையாய் முன்னால் கதிரையில் இருத்தி
வார்த்தைக்கு வார்த்தை விழுந்து சிரித்து
விருந்தும் கொடுத்து வாழ்த்திட அழைப்பார்
மற்றவர் பார்த்து மனதினுள் ஏங்கி
சற்றும் சிந்தியா சிற்றறிவாளராய்
பித்துப்பிடித்துப் பேதலித் தலைவார்
சித்தங் கலங்கிச் செய்வதறியாது
வங்கிப் படியேறி வாய்விட்டுப் பொய்சொல்லி
எக்கடன் பட்டேனும் எண்ணியதை முடிப்பார்
எப்படியாயினும் அரங்கினில் ஏற்றிப்
பிறவிப் பயனைப் பெற்றதாய் மகிழ்வார்.
பெரியோர் வாழ்க்கை;
யார் பெரிதென்ற போட்டியில் பணத்தை
வாரி வாரி வீணே இறைப்பார்
பெரும் பெயர் பெறவேண்டும் என்பதற்காகப்
பட்டங்கள் தாமே தமக்கிடுவார்
காரின் இலக்கத்தில் தம்பெயரைக்
கலந்து பலர்காண விடுவார்
போரின் அனர்த்தங்கள் பிறந்தகத்தில் பாராமல்
பூனைபோல் கண்களை மூடியே வாழ்கிறார்.
பதவிக்குப் போட்டிபோடும் பக்தர்களின் கூட்டம்
பணத்தைச் சேர்க்கும் போலிகளின் கூட்டம்
அதிகமாய்ப் பேசும் அறிவிலிகள் கூட்டம்
அதர்மம் புரியும் ஆணவக் கூட்டம்
முட்டி மோதும் காட்டான்கள் கூட்டம்
அருவெருப்பாய் நடக்கும் அநாகரிகர் கூட்டம்
பொதுநலம் பேசும் சுயநலக் கூட்டம்
பொது இடங்களில் பலவாய் உண்டு.
உரும்பிராய்க்கவி எம்.ரி.செல்வராஜா.இலண்டன்
புலம்
புலம் பெயர்வாழ்வில்
புட்டுப் புட்டு வைத்திருக்கிறீர்கள்
உங்களுக்கு என் நன்றி.
கவிதன்