Reply to comment

தமிழ்ச்செல்வா.. மறப்போம் அல்லோம்!

சொல்லிலே தெறிக்கும் உண்மை
    தெளிவது காட்டும் எண்ணம்
கல்லிலே வார்க்கும் சிற்பிக்
    கணக்கதாய் நறுக்கின் தேடல்
வில்லது பறக்கும் அம்பு
    வேகமாய் உரைக்கும் தெம்பு
முல்லைபோல் சிரித்த வண்ணம்
    மொழிவைநீ மறப்போம் அல்லோம்!

தலைவனின் நெஞ்சில் ஆர்க்கும்
    தமிழீழ வார்ப்பின் தோற்றம்
அலையெனக் கொள்வாய் அந்த
    அடித்தளம் பலமாய் வைத்து
உலைக்களம் எதுவந் தாலும்
    உயிர்ப்பெனும் தேசம் செய்தாய்
மலைப்பகை எதற்கும் அஞ்சா
    மறவனே மறப்போம் அல்லோம்!

காலொடு விழுப்புண் பெற்ற
    காலத்தும் களத்தே நின்றாய்
கோலொடு ஊன்றி நின்று
    கும்பத்தில் சுடுகண் ஏற்றாய்
ஆலொடு விழுதே போன்றே
    அரும்படை தன்னைச் சேர்த்தாய்
நூலொடு உலகம் சென்றாய்
    நூதனே மறப்போம் அல்லோம்!

முள்ளிலே பிய்ந்த சேலை
    முடிச்சுகள் அவிழ்க வென்றே
வெள்ளைமா மனிதர் வந்தார்
    வேதனை தோய்ந்த சிங்கக்
கொள்ளையர் கொலையர் காதைக்
    கொடுமைகள் எடுத்துச் சொல்லி
தெள்ளுமாத் தமிழர் ஈழம்
    தீட்டினை மறப்போம் அல்லோம்!

-புதியபாரதி

Reply