
கனேடியத் தமிழர் வாழ்விற் பெரும் திருப்புமுனையாக வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியொன்று கடந்த செப்டம்பர், 20ம், 21ம் நாட்களில் கனடா கந்தசுவாமி கோவிலில் இரவு பகலாக நடத்தப்பட்டது. மூன்று மாதக் குழந்தையிலிருந்து பொல்லுப் பிடிக்கும் முதியோர் வரை பல்லாயிரக் கணக்கான மக்கள் உறக்கம் மறந்து பங்காற்றி வியப்பினை ஏற்படுத்தியமை முக்கியத்துவம் பெறுகிறது. தமது சொந்த நிலத்தில் வாழும் பொழுதுகளில் இவ்வாறான விழிப்புக்கள் அவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்டவையே. ஊர்க் கோவில்களிற் சிவராத்திரி, திருவிழாக் காலங்களில் உறக்கம் தவிர்த்திருந்தவர்களுக்கு நீண்ட காலத்தின் பின் அருமையான வாய்ப்பொன்றினை அளித்திருந்தனர் கனடா வானம்பாடியினர்.
இரண்டு விழிப்புக்களுக்கும் இடையே வேறுபாடு உண்டு. அங்கே பின்பற்றப்பட்டது தமது சொந்த நலன் சார்ந்ததாகும். ஆனால் இங்கே மேற்கொள்ளப்பட்டதோ அரச பயங்கரவாதத்தின் அடாவடித்தனங்களில் அகப்பட்டு அல்லலுறும் தமது உடன் பிறப்பக்களின் துயர் நீக்கும் பொருட்டானதாகும். தமிழீழத்திலே ஆயுதங்கள் ஏந்திப் போராட்டத்தினை எம்முயிர் வீராகள் நடத்தி வருகிறார்களென்றால், இந்த வேற்று மண்ணிலும் எமது இசைப் போராளிகளாகிய மேற்படி குழுவினர் இசைமழையென்னும் வேட்டுக்களால் இரு நாட்களும் யாகமொன்றினை மேற்கொண்டு மாபெரும் வெற்றியீட்டி உள்ளனர்.
என்றும் எமது வாழ்விற் தூய்மையான எண் எனக் கொள்ளும் இருபத்தேழினைத் தோந்தெடுத்து, அவ்வெண்ணுக்குச் சொந்தக்காரரான மாவீரத் தெய்வங்களை மனதில் நிறுத்தி, தமிழ்க் கடவுளாம் முருகன் வாழ்விடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தியமை இவர்களுக்கான வெற்றிக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறின் மிகையாகாது.
மூன்று கிழமைகளுக்குள் தீர்மானிக்கப்பட்டு, வெளியிலிருந்தும் இளம் பிஞ்சுகளையும் உள்வாங்கிப் பயிற்றுவித்து, தாள – லயம் தப்பாது தொடர்ந்து இருபத்தேழு மணித்தியாலங்கள் கண் விழித்து இவ்விடயத்தை ஆற்றினார்களென்றால் இவர்களது மனோ திடத்தையும், செயற்றிறனையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. பெற்றவளின் தாவணியைப் பற்றியவாறு உறங்கும் மழலைகள்கூட அன்றைய நித்திரை நீக்கிக் கலைஞர்களாகவும் பார்வையாளாகளாகவும் பங்கேற்றமை எமது ஈழத்தாய் செய்த தவப்பேறாகும். தமது தாயகத்தினதும், மக்களினதும் நிலமைகளை நன்கு அறிந்தவர்களாக இச்சிறார்கள் வளர்க்கப்பட்டுள்ளமை மெச்சத்தக்கவையே. இவர்களின் இணைவினால் அமைப்பினரின் வளர்ச்சியும் மென்மேலும் விரிந்து உயர்வதோடு, தாயவளாம் தமிழ் மொழியும் ஏற்றம் பெற்று வளர்ச்சியடைவாள் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இசையில் மயங்காதவர் உலகில் யாருளர்? மிகத் திறமையாக இசையமைத்துப் பாடப்பட்ட எமது போராட்டப் பாடல்களுக்கும் அதன் இனிமைக்கும் ஈடிணையாக உலகில் ஏதுளது? உலகின் சகல உயிரினங்களின் உணர்வுகளையும் தட்டியெழுப்பும் வண்ணம் படைக்கப்பட்ட பாடல்களைக் கொண்ட இவ்விசை மழையில் நனைந்து கொள்ள எவ்வளவு பணம் கொடுத்தாலும் தகுமே என்னும் எண்ணத்தில் அள்ளி வழங்கியோர் தொகை அளப்பரியதே. தமது உற்றவர்களை எண்ணிப் பார்த்து அளித்ததில் கொடுப்பனவு மேலும் பல மடங்காயிற்று.
இடையிடையே பாடப்பட்ட அதி உன்னத பாடல்கள் மக்களின் உணாவுகளைத் தட்டியெழுப்பி, மிகுந்த நெகிழ்ச்சியை உண்டு பண்ணியதுடன் கண்ணீரையும் வரவழைத்தது. தாயகப் பற்றோடு அனைத்தையும் அசையாது சுவைத்துக் கொண்டிருந்தவர்களாகவும் அவர்கள் விளங்கினர். வியப்பிலும், மகிழ்ச்சியிலும் திளைத்தவர்களாகச் சிலரும், வானமபாடியினரது இசைப்புயல் புதுமையானது அல்ல அவை காலம் காலமாகத் திறம்பட வீசப்பட்டு வருபவை என்னும் கருத்தினைத் தமக்குள் வெளிப்படுத்தியோராகப் பலரும் காணப்பட்டனர்.
பாடகர்களும், நாட்டியக்காரரும் மேடைக்கு வந்துபோக, இசைக் கருவி விற்பன்னர்கள் தொடக்கத்திலிருந்து முடியும் வரை கடமை ஆற்றியமையைப் புகழ்ந்துரைக்க வாhத்தைகளே இல்லை எனலாம். கைகள் கொப்பளித்த நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாது குறித்த இடத்தில் - நிலத்தில் அமர்ந்து இந்தக் கருவிகளை இயக்கித் தமது இலக்கினை அடைந்த இம்மறவர்களும் எமக்குக் கிடைத்தமை பெரும்பேறாகும். இக் கலைஞர்களிற் பெரும்பாலானோர் பல்கலைக்கழக, பாடசாலை, கல்லூரி மாணவர்களே. தமது பரீட்சைக் காலங்களிற்கூட இவாகள் இவ்வாறு நித்திரை விழித்துப் படித்தார்களோ இல்லையோ, அன்று முழுவதும் தமது உறவினர்களுக்காகத் தம்மை முற்றாக வழங்கினர்.
விழாவினைத் தொகுத்து வழங்கியவர்கள் இடையிடையே பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியற் கருத்துக்கள் - வரலாறுகளைத் தெரியத் தந்ததோடு விகடகவிகளாலும், பகிடி வார்த்தைகளாலும் மக்களை மகிழ்விக்க, மறுபுறம் இசைக் கலைஞர்கள் தமது அதி உயர்ந்த பணியினால் அவர்களைக் கவர்ந்திழுத்தனர்.
இடையிடையே அமைப்புக்கு வெளியிலிருந்து பங்காற்றிய சிலர், முற்று முழுவதாகப் பழைய திரைப்படங்களின் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர் அவர்கள் நடிப்பில் பாடப்பட்ட பல வீரதீரக் கருத்துக்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழீழ விடுதலைப் பயணத்தில் பெரும் பங்காற்றிய அந்த வள்ளலுக்கு உயிர் கொடுத்து, அவரும் இவ்விழாவிற் கலந்து சிறப்பித்தது போன்றதொரு தோற்றப்பாட்டினை உருவாக்கிய அமைப்பினருக்கு நன்றி!
மக்கள் வெள்ளம் பெருகி வழிந்து அலையெனக் காணப்பட்ட போதிலும் நெருக்கடி ஏற்படா வண்ணம் தொண்டர்கள் ஆற்றிய பணி போற்றுதற்குரியதே. அழகன் - முருகன் திருத்தலமாக விளங்கிய அம்மண்டபம், அணியணியாக மக்கள் திரண்டு உட்புகுந்த வேளையிலும் அவனருளாற் போலும் விரிந்து, பரந்து அனைவரையும் உள்வாங்கியது.
செவிக்கும் விழிகளுக்கும் எவ்வாறு இசையின்பம் கிடைத்ததோ அவ்வளவிற்கு நாவிற்கும் சுவையான பலவிதமான எமது பாரம்பரிய உணவுவகைகளை வழங்குவதில் மேற்படி நிறுவத்தினர் தவறவில்லை.
நெருக்கடி மிகுந்த பார்வையாளர் கூட்டம் வெளியே உணவிற்காகச் செல்வதும், புதிய வரவாளர் அவாகளது இடங்களை நிரப்புவதுமான நடவடிக்கைகள், அந்நாளின் நல்லூர்த் திருவிழா நினைவகளையே மனத்திரை முன் கொண்டுவந்தன. வயிராற உணவு படைத்தவர்களும் இளையோர், பெரியோர் என வேறுபாடின்றி மிகவும் ஒற்றுமையாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிச் சுவைஞர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிய பாங்கு இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதுமட்டுமல்ல, முற்று முழுதாக இளைஞர்களது செயற்பாடுகளும் இவ்விடயத்தில் விழாவின் இரண்டாம் நாளன்று காணப்பட்டது. ஆண்கள் அகப்பை பிடித்து உணவுப் பரிமாற்றம் செய்யும் புரட்சிகர நடவடிக்கையிற் தாமாக முன்வந்து இறங்கினர். வல்வை புளுஸ் விளையாட்டு மன்றத்தினர் மிகவும் சுவையான உணவுகளை, குடிபானங்களைத் தாராளமாக அள்ளி வழங்கியிருந்தனர். சேகரித்த பணம் யாவும் தாயகத்து மக்களுக்காகவே வழங்கப்பட்டது. இங்குள்ள பல்வேறு அமைப்புக்களும் இவர்களின் பாதையைப் பின்பற்றி இவ்வாறான தொண்டுகளை ஆற்றுவதன் மூலம தமது நாட்டிற்கும் மக்களுக்கும் பேருதவி புரிந்த திருப்தியுடன் நன்மையும் பெறுவர்.
வருகை தந்தோர், நிரம்பிய வயிற்றில் நித்திரை தவிர்த்து வீடு செல்ல வேண்டிய எண்ணத்தையும் மறந்தவர்களாய், இசை வெள்ளத்தில் மூழ்கியவர்களாகத் தொடக்கத்திலிருந்து முடியும் வரை அசையாது அமர்ந்து, விழாவினருக்காகவும் நாட்டிற் தவித்து நிற்கும் உறவினரையும் மனதிற் கொண்டும் தமது ஒத்துழைப்பை நல்கினர்.
வானலை, ஒளிப்பட ஊடகங்களின் செயற்பாடுகள் இந்நிகழ்ச்சியின் தரத்தினை மேலோங்கச் செய்வதிற் பெரும்பங்காற்றின. விழாவினைப் பற்றிய அறிவிப்புக்களை இங்குள்ள சகல ஊடகங்களும் தொடர்ச்சியாக மக்களைச் சென்றடையும் வண்ணம் வெளிப்படுத்தியிருந்தன. அவர்கள் போதிய தரவுகளைப் பெற்றுப் பெருந்தொகையாகத் திரண்டதில் இவர்களின் பணி கணிசமானதே.
விண்ணுலகும் வியந்திடும் வண்ணம் வானம்பாடிகள் ஆற்றிய பணி மிகவும் பாராட்டப்படவேண்டியதே. தாயகத்தில் அல்லுறும் மக்களின் இன்னல்கள் போக்கும் வண்ணம் அவர்கள் மேற்கொண்ட 'தாய்மடி தாங்குவோம்' நிகழ்ச்சியானது எதிர் பார்த்ததை விடப் பன்மடஙகு வெற்றியை அளித்திருக்கிறது என்பது திண்ணம்.
கனடாவிலிருந்து
-பவித்திரா-
Recent comments
2 years 3 weeks ago
2 years 4 weeks ago
2 years 12 weeks ago
2 years 13 weeks ago
2 years 34 weeks ago
3 years 11 weeks ago
3 years 41 weeks ago
4 years 1 week ago
4 years 1 week ago
4 years 1 week ago