
ஆயிரமாகத் தமிழன் திரண்ட அய்நாத் திடல்!
முப்பத்தி எட்டாய் முகிலைத் தழுவும்
செப்பிடும் உலகச் சிரசாம் கோபுர
அய்நா முன்றலில் ஆயிரக் கணக்கில்
தெய்தெய் என்று திரண்டான் தமிழன்
பொய்வாய் கொடுத்துப் பிச்சை கேட்கும்
ஐயா மகிந்தன் அரற்றிய வேளை
வேதனை சொல்லி விசுக்கிடும் குண்டின்
சூதினைக் காட்டித் திரண்ட தமிழன்
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆகினன்!
பாயிரம் வைத்துப் பாரினைக் காட்டினன்!
சரிதம் மறைத்துச் சார்நிலத் தமிழன்
உரிமை மறுத்து உண்மைகள் திரித்து
மகிந்தப் பக்சன் வழங்கிய அய்நாத்
தகத்த திடலில் தணலாய் வெடித்தான்
நீர்நிலம் துரத்தி நித்திரை இன்றித்
தாய்நிலம் எரித்துத் தரித்திரன் உரைக்கும்
பொய்யை உலகப் பூமியின் பந்தில்
அய்நா வீதியில் அடித்தான் தமிழன்!
இனப்படு கொலையை இராத்திரி பகலாய்
முனைப்பொடு கொல்லும் மூடன் மகிந்தன்
கனைப்பும் தெறிப்பும் கர்ச்சிப் பாகிடப்
புனையும் பொய்யைப் பேசினான் அறிக!
கொழும்பிலே கிழக்கில் கேளரும் வன்னி
எழும்வட யாழும் எங்ஙணு மாக
நாளைக்குப் பத்தாய் நறுக்கி எறியும்
வாளை ஏந்திய வன்மம் காட்டியே
தமிழன் எழுந்தான் தாரணிப் பந்தில்
குமிழை உடைத்துக் குதர்க்கம் காட்டினான்!
பதாதை எழுதி படங்கள் காட்டி
சிதறிக் கிடக்கும் சிறிசுகள் காட்டி
மதத்த அரசை மகிந்தன் ஆட்சியின்
வதைக்கும் படலம் வரிசை யாக்கினான்!
அய்நா மன்றும் அடுக்கிய வீதியும்
செய்கோள் ஆகவே செதுக்கிப் பறந்ததை
சரித்திரம் ஆக்கிய சார்புவி நாடுகள்
மரணம் உழக்கிடும் மகிந்தன் ஆட்சியை
மனத்துள் பதிந்தனர் மன்றமாய்த் தமிழன்
கனத்துள் நிறைந்தான் காலம் புலிக்கொடி
அய்நாத் திடலில் அழகாய்ப் பறக்கும்
மெய்நாள் ஒன்றை மேதினி கண்டதே!
உண்ணாது காட்டிய
இளைஞர் தவம்!
எரிகுண்டு குழிகுண்டு இரசா யனக்குண்டு
குரங்கின்கை யானது கொள்வீர் உலகமே
தேசிய இனமொன்றை வீசியே கொன்றிடும்
தேவாங்கு ஆட்சியின் தீவே இலங்கையே
பாரப்பா..உலகப் பந்தேநீ பாரப்பா
சோரம்போய் நின்றாலே சொல்லும் பழியப்பா!
அய்நா முன்றலில் ஆயிரக் கணக்கினில்
எய்திய தமிழனின் எழுகுரல் கேட்டதா?
வேவியூப் பிள்ளையார் பெரும்தல அரங்கிலே
சாவிலிலே நின்றிடும் சந்ததி நோக்கியே
உண்ணா விரதம் உவந்த இளைஞரை
கண்ணா லேநீ கண்டதும் இல்லையா?
பயங்கர வாதமாய் பார்த்திடும் உலகமே
சுயம்தரும் இருப்பைச் சிதைத்தவன் யாரடா?
கொழும்பிலே தமிழன் கொடுக்கைப் பிரித்து
அழுங்காய்க் கோத்தையன் ஆடுறான் பாரடா!
இயமனைக் கண்டு இறைஞ்சியே சிறையில்
பயத்தினால் வெம்பிப் பதைத்திடும் தமிழனை
மானிட உலகேநீ மதிக்கவே இல்லையே!
ஏனடா உனக்கு இழிகுணம் வந்தது?
ஓடவும் ஓடவும் உக்கிக் குதறும்
பாடையான் குண்டைநீ பார்க்கவும் இல்லையா?
சோடை போகினாய் சுதந்திர உலகே
ஆடை யின்றிய அம்மணம் உனக்கா?
ஏதில் தமிழராய் இல்லம் துறந்தவர்
வீதியில் கிடங்கில் வீழ்ந்து கிடந்திடும்
நாய்போல் இருக்கும் நமதினம் பாரடா
பேய்தரும் பிணத்தின் பெரும்தொகை பாரடா
ஆய்க்கினை இரத்த ஆறாய் ஆனதே
மாய்ந்திடத் தமிழர் மடியினி இல்லை!
சுதந்திரத் தேடலைச் சொல்லும் தமிழனை
விதந்துநீ ஏற்பாய் விடியல் தாய்நிலம்
அய்நாக் கொடியாய் ஆடும் அழகினை
மெய்யாய் ஆக்கிடு வேளைதான் இதுவே!
-புதியபாரதி
Recent comments
2 years 4 weeks ago
2 years 4 weeks ago
2 years 12 weeks ago
2 years 14 weeks ago
2 years 34 weeks ago
3 years 11 weeks ago
3 years 41 weeks ago
4 years 1 week ago
4 years 1 week ago
4 years 1 week ago