ஏழேழு பிறவிக்கும் ஏமாப்பு உடைத்து.

அழகிய தமிழீழம் எரிந்தங்கு அழிகிறது
    அரக்கர் வஞ்சனையில் அகப்பட்டுச் சிதைகிறது
எழில்மிகு வாழ்வுகொள் என்னருமைத் தமிழினமே!
    எமையன்றி யாரவர்க்குத் துணையாவார் எண்ணிடுவீர்!
தழல்நிறை நிலமெனத் தாயகம் நலிந்திடத்
    தத்தெடுத்த நாடுதான் தஞ்சமெனக் கொள்ளலாமோ?
நிழல்கொடுக்க வேண்டாமோ? நித்தமும் கண்ணீரில்
    நீந்திடும் நம்மினத்தைக் காத்தல் கடனன்றோ?

பொங்குதமிழ் நிகழ்ச்சிதனிற் பூரித்து நின்றோம்நாம்
    பொன்னான நாளாக அந்நாளில் மகிழ்ந்தோம்
எங்களரும் நாட்டில் இடர்ப்பட்டு வாழ்ந்திடும்
    எம்மினிய சொந்தங்களின் இன்னல் போக்கிட
உங்களில் ஒவ்வொருவரும் நாளொன்றில் மறவாது
    ஒருவெள்ளிப் பணம்தனை உண்டியலில் இட்டு
பங்காளி களாவீர்! பசிநீங்கும் வயிறுகள்தாம்
    போற்றுவரே வள்ளலென, வாழ்த்துவரே வாழ்கவென!

காப்பென நாம்கொள் கழனியொடு புனல்நிறை
    காவற் றெய்வங்கள் குலவிடும் வன்னிமண்
ஏப்பம் விட்டலையும் எதிரியின் அழிப்பிற்கு
    இலக்காகி வாழ்விடம் இழந்துமே எம்மினம்
கூப்பிய கைகளிற் குழவியெனக் கிழவரெனக்
    கூவிக் கதறிக்; குற்றுயிராய் அலைகின்றார்
தோப்புக்கள் துரவுகள் மரங்கள் செடிகளெனத்
    தாங்கிடும் வாழ்விடமாய்த் தவித்தங்கு நிற்கின்றார்!

திட்டமிட்ட பொருண்மியத் தடையிலும், இருப்பிற்
    தீர்ந்துள்ள மருந்துகளின் வெறுமையிலும் ஆங்கே
பட்டினியின் அழுகுரலாற் பெற்றோர்கள் கலக்கமுறப்
    பாதிக்கும் நோயதனாற் பெரியோர்கள் வருந்திநிற்கப்
பட்டுக்கள் நகைகள் பாயாசம் வடையுமெனப்   
    பாங்குடனே கிழமைதோறும் விழாக்கள் நடத்திச்
சுட்டும் பொரித்தும் சுவைத்திட வேகவைத்தும்
    சுற்றங்கள் சர்ர்ந்திடப் பூங்காவிற் கூடுகிறோம்!

ஒட்டிய வயிற்றினில் ஒருபருக்கை தானும்
    உணவாய்க் கிடைத்திடா உழல்மிகு வாழ்வங்கு
கட்டிய மனைகளும் காட்டுக் குரங்குகளாற்
    கட்டவிழ்த்த ஏவுகணை வான்பருந்து வாயிலாகத்
திட்டுக்கள் தூசிகளாய்த் தேய்ந்துதான் போயினவே!
    செந்தமிழ் இனமங்கு செங்குருதியில் நனைகிறதே!
பட்டங்கள் பதவிகள் பலவாறாய் நாமிங்கு
    பெற்றதனாற் பயனேது? பக்குவமாய் உணர்ந்திடுவீர்!

சேதியொன்று அறிவீரோ? சின்னக்குழவி யொன்றைச்
    சிறுபொழுதிற் சிலருடன் விட்டகன்றாள் அதன்அன்னை
நாதியற்ற பெண்ணவள் நலமிழந்த பிறிதொரு
    நவிலற் கரியகொடும் நோயினில் உழன்றதன்
ஏதிலிப் பிள்ளையின் இடர்தீர்க்கும் நோக்கில்
    எத்தனம் செய்தூரில் இரந்தங்கு அலைகையிற்
பாதிப் பொழுதினிலே பறிகொடுத்தாள் பாவியவள்
    பறந்துவந்து பார்க்கையிலே பிஞ்சினுடல் பாழ்கிணற்றில்!

கள்ளமற்ற நெஞ்சத்துக் கிள்ளை மழலையது
   
களிப்பினிற் றவழ்ந்தந்தக் கிணற்றினுள் வீழ்ந்ததே!
உள்ளத்தை உறுத்திடும் ஒவ்வாத நிகழ்விது
    ஒன்றா இரண்டா ஊர்களிலே நடக்கிறது?
பள்ளத்தில் வீழ்ந்தங்கு பரிதவிக்கும் உறவினரைப்
    பவ்வியமாய்த் தூக்கிடுவீர்! பணவுதவி வழங்கிடுவீர்!
அள்ளிக் கொடுத்திடுவீர்! ஆற்றிடும் ஈகையது
    ஏழேழு பிறவிக்கும் ஏமாப்பு உடைத்து!

இறுதிப்போர் இதுவன்றோ? இதன்பின்னர் ஈழத்தாய்
    ஏற்றமிகு அழகுடன் அனைத்தும் பெற்றிடுவாள்
உறுதியுடன் நாமதற்கு ஒத்துழைப்பு நல்கிடின்
    இல்லைத் தொலைதூரம், எங்களரும் பிள்ளைகள்
பெறுமதி மிக்கவுயர் பொன்விளையும் பூமியெனப்
    பாரெங்கும் புகழ்ந்துரைக்கப் பெரிதாய் ஆக்கிடுவார்
பொறுமையுடன் இற்றைக்குப் பேருதவி புரிந்திடுவீர்!
    பொன்மனம் படைத்தோராய்ப் புவிதனில் விளங்கிடுவீர்!

கனடாவிலிருந்து பவித்திரா-

Reply