பால்ராஜ் அஞ்சலி

Palraj
 
தமிழனின் சுருக்கு என்றும்
     தலையின்கீழ்க் கண்டம் என்றும்
அமையவே எதிரி நின்ற
     ஆனையாம் இறவு தன்னில்
சுமைதரும் கொடியார் ஓடச்
     செந்தமிழ் நிலத்தை மீட்டு
இமையெலாம் உலகம் விரிய
     எடுத்தவன் பால்ராஜ் தானே!
 
நாற்பதி னாயி ரம்மாய்
     நரிப்படை சூழ்ந்து நிற்க
கூற்றுவக் கொடியோர் கூட்டம்
     கொட்டிய நெருப்பின் உள்ளே
கீற்றெனக் கடலைத் தாண்டிக்
     குடாரப்பில் இறக்கம் செய்த
ஆற்றலின் வடிவம் ஒன்றே
     அகிலமே பதியும் ஏடு!
 
முப்பத்தி நான்கு நாட்கள்
     முற்றிலும் நடுவே நின்று
அப்பத்தைப் பிய்த்தல் போலே
     அரசமார் படையைக் கீறி
செப்பிய வெற்றிப் போரே
     செகத்தொரு களத்துப் பாடம்
கப்பிய கரியை வென்ற
     கரிகாலன் படையின் வீரம்!
 
பால்ராசு புயலின் வேகம்
     படையிடும் அறிவின் நுட்பம்
தோல்வியைத் தழுவா வேங்கை
     தொடர்களம் அவனின் வெற்றி
கால்படும் இடமே எங்கும்
     காட்டிடும் அவனின் காலம்
ஆல்மரம் போலே நின்ற
     அவன்கதை என்றும் வாழும்!
 
போர்க்களம் எதிலும் இந்தப்
     புலிமகன் தோற்ற தில்லை!
ஆற்றலில் களத்தின் உத்தி
     அமைப்பதில் இவனோர் எல்லை!
கூற்றத்தின் கூடா ரத்தைக்
     குடைந்துமே உடைப்பான் பிள்ளை
போற்றிடும் தமிழீ ழத்தின்
     பூக்களாய் விரியும் முல்லை!
 
களத்திலே மடியான் தன்னைக்
     கடியநோய் இழுத்துப் போச்சே!
உளத்திலே விடியற் போதம்
     எடுத்ததீ விழுந்து போச்சே!
குளத்திலே ஒன்றாய் நீந்தும்
     குலத்துமீன் அகன்று போச்சே!
தளத்திலே பால்ராஜ் வென்ற
     தமிழீழம் சமைப்போம் வாரீர்!
 
-புதியபாரதி

Reply