கிழக்கு வெளிக்கும்

கிழக்கு வெளிக்குமெனும் கீர்த்தியின் கூற்றினால்
      கீழ்மைச் சிங்களம் கதிகலங்கி நிற்கிறது
வழுதுரைத்து வருத்தியோர் வீணான கனவுகள்
      விரைவினிற் கலைந்திடும், வெற்றித் திருமகளின்
குழல்தனிற் பூச்சூடிக் குதூகலிக்கும் வாய்ப்பதனைக்
      குற்றமற்ற நெஞ்சத்துக் குலமாந்தர் பெறுவரே
முழந்தாளில் மண்டியிட்டு மன்னிப்புக் கோருவார்
      மாண்புடை மறவரிடம்;, மூர்க்கம் புரிந்தோர்!

குடும்பிமலை பிடித்தோமெனக் கூக்குரலிற் கொக்கரித்தோர்
      குய்யோ முறையோவெனக் கதறிக் கலைந்து
அடம்பிடித்து அனுப்பிய அரசினைக் கடிந்துமே
      எதிரான போராட்டம் அதிரடியாய் நடத்துவர்
வடுவந்து தொலைந்ததென வஞ்சக நெஞ்சத்து
      வாழ்வுகொள்; தலைமைகள் வெட்கித் தலைகுனிந்து
சடுதியாய் மறைந்திடுவர் தம்முயிர் காத்திடத்
      தக்கவிடம் தேடித் தஞ்சம் கோரிடுவர்!

தேர்தல்கள் வெற்றிகள் செப்பிட முடியாத்
      தப்பான நாடகங்கள,; நிலத்தினைத் தமக்காக்க
ஆர்வமிலா மக்களை அரசினர் வலிந்தழைத்து
      ஆதரிக்க வைத்தார் இருப்பினையும் பெற்றார்
போர்த்திறமை மிகப்பெற்ற புலிவீரர் தாம்பேணும்
      பொறுமைதனை நீக்கிப் புறப்பட்டார் களம்நோக்கி
மார்பினை உயர்த்தித் தடம்தோள்கள் புடைக்க
      மாவீரர் வாழ்த்துடன் மறவர்படை நகர்கிறது!
       
மடுப்பகுதி பிடித்திருந்து மக்களை வசப்படுத்த
      மனப்பால் குடித்தோர் மாதாவை இழந்தனரே
கடுகவே விரைந்துநின்று ஆயுதங்கள் வழங்கிடும்
      கப்பலது திருமலையிற் காணாமற் போனசேதி
இடுக்கண் ஏற்படுத்தி நிலைகுலைய வைத்ததன்றோ?
      எல்லாளன் படையணி நடத்திய தாக்குதலிற்
தடுமாறித் தத்தளித்துத் தம்நிலை உணர்ந்து
      தாங்கவொணாத் துயரினில் மூழ்கினரே அறிவோம!;

முப்படையின் வளர்ச்சிதனில் முடிசூட்டி நின்று
      மூச்சென்றும் தாயக விடுதலைக்காய் இயங்கி
எப்படை வரினும் எதிர்கொண்டு வீழ்த்தும்
      ஏற்றம் மிகப்பெற்ற எம்மினிய வீரர்கள்
தப்பிலாப் போர்புரிந்து தாயகம் மீட்டிடுவர்
      தங்கத்தென் தமிழீழம் தனையே விரைந்து
செப்பிட முடியாத் தீரத்தில் செயந்தன்அணி
      சமர்செய்து பெற்றிடுவர் தாய்மேனி தழுவிடுவர்!

நம்பிக்கை இழந்தவராய் நல்மனம் அற்றவராய்
      நாளும் கருத்துக்க ளுரைத்து அடுத்தவரைச்
செம்மைப் படுத்தும் சேதிகளை விடுத்துச்
      சிக்கலான சிந்தனைகள் தமையே சுமந்து
எம்மைப் பெற்றவளின் துயிலுரியும் பேடிகள்தம்
      ஈனம் அறிந்தும் அவர்பாற் சார்ந்து
தம்மையே உணராத் தன்மையோர் தம்மைத்
      தக்கவே உலகில் என்னவென் றுரைப்பது?

மாற்றான் தோட்டத்து மல்லிகை மலருக்கும்
      மணமுண்டு என்பதை மனமார ஏற்று
வேற்றுமைகள் களைந்து விடுதலையைச் சார்ந்து
      வீணான குற்றங்கள் கூறுதலைத் தவிர்த்து
சாற்றுதற் கரியநல் மேன்மைகள் படைக்கின்ற
      சான்று போராளிகள் தீரத்தை யென்றும்
போற்றுதல் வேண்டும்! புவிதனில் அவர்புரியும்
      பாங்கான கொடைதனைப் பகுத்துணரல் வேண்டும்!

பிரிவினை, பேதம் எமக்கென்றும் வேண்டாம்
      பின்னிப் பிணைந்த இனமானம் காப்போம்
இருகூறாய் எம்நிலத்தைப் பிரிக்கும் அரசின்
      எண்ணம் தகர்த்திட எமக்குள் ஒன்றாவோம்.
வரலாற்று ஏடுகளை வரிவரியாய்ப் படித்து
      வண்ணத் தமிழன் வாழ்வுதனை அறிவோம்!
உரிமைக்காய் உயிரையும் இழக்கும் உறுதியில்
      உள்ளம் பதித்து உணர்வுடன் வாழ்வோம்!    

கனடாவிலிருந்து பவித்திரா

படம்: மட்டுநகர் நகர மணிக்கூண்டுக் கோபுரம்

Reply