Reply to comment

மொட்டு

அமுதா தனது மகள் வேணியைத் தொலைபேசியில் அழைத்தபோது நெடுநேரமாகியும் அழைப்பிற்கு வராதது என்னவோ போலிருந்தது. ஒருநாளும் இப்படி தாமதமாகி வந்து தொலைபேசியை எடுத்ததில்லை. வேணி அன்று வேலைக்குப் போகாமல் தனது வீட்டிலேதான் இருக்கின்றாள் என்பது அவளது தாய் அமுதாவிற்குத் தெரியும். அதனால்தான் அவளுக்கு மனம் பதைபதைத்தது. இடையிடையே விட்டு விட்டு மூன்று தடவைகள் அழைத்த பின்னர்தான் வேணி வந்து தொலைபேசியை எடுத்தாள்.

அமுதா தனது மகள் வேணியைத் தொலைபேசியில் அழைத்தபோது நெடுநேரமாகியும் அழைப்பிற்கு வராதது என்னவோ போலிருந்தது. ஒருநாளும் இப்படி தாமதமாகி வந்து தொலைபேசியை எடுத்ததில்லை. வேணி அன்று வேலைக்குப் போகாமல் தனது வீட்டிலேதான் இருக்கின்றாள் என்பது அவளது தாய் அமுதாவிற்குத் தெரியும். அதனால்தான் அவளுக்கு மனம் பதைபதைத்தது. இடையிடையே விட்டு விட்டு மூன்று தடவைகள் அழைத்த பின்னர்தான் வேணி வந்து தொலைபேசியை எடுத்தாள்.

'என்ன வேணி, எவ்வளவு நேரமாக அழைத்தேன், ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை?' என்றாள்.

'அம்மா, எனக்கு ஒரு மாதிரி தலைச்சுற்றலாக இருந்தது. அதனால்தான் தாமதம். என்றாள் வேணி.

'என்ன தலைச்சுற்றலா? தலைச்சுற்றல் மட்டும்தானா? அல்லது வேறு ஏதாவதும் இருக்கின்றதா?

'அம்மா எனக்கு ஒரே சத்தியாகவும் இருக்குது. அதனால்தான் குளியலறையில் நின்றிருந்தேன்'

'என்ன வேணி உடம்புக்கு என்ன ஆச்சுது? நீ உடம்பு சுகமில்லை என்று என்னிடம் எதுவும் கூறவில்லையே' என்றாள் தாய்.

'காலையில்தான் தொடங்கியது, ஆனால் இன்னமும் நிற்கவில்லை. தலையிடியும் சேர்ந்துவிட்டது'

'ஜெகன் வேலைக்குப் போய்விட்டாரா, அவருக்கு இது தெரியுமா?'

'ம், வேலைக்குப் போய்விட்டார். இதென்ன சும்மா சத்திதானே அம்மா, இதையெல்லாம் அவருக்குச் சொல்ல வேணுமா?'

'சரி, நான் இன்னும் சிறிது நேரத்தில் உனது வீட்டிற்கு வருகிறேன். ஓர் இடத்தில் இருந்துகொள். சும்மா ஓடித்திரியாதே' என்று கூறிவிட்டு வேணியின் வீட்டிற்குப் போவதற்கு ஆயத்தமானாள் அமுதா.

'சத்தி சும்மா சத்தியாக இராது. நிச்சயம் அதுவாகத்தான் இருக்கும்' என்று தன் மனதுக்குள் எண்ணினாள் அமுதா. அதனால் ஏற்பட்ட ஆனந்தம் ஒருபுறமும் ஆட்ட, ஆதங்கம் மறுபுறமும் வாட்ட தனது மோட்டார்வண்டியில் ஏறி, நான்கு மைல் தொலைவில் இருக்கும் தனது மகள் வேணியின் வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

அமுதாவும், அவளின் கணவன் அருணும் இலண்டனுக்கு வந்து இப்போது முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. அது எப்படிச் சென்றது என்று தமது பிள்ளைகளான வேணியையும், வாணியையும் பார்;த்துத்தான் தெரிந்துகொள்வார்கள். வேணி பிறந்து இப்போது இருபத்தாறு வருடங்கள் கழிந்துவிட்டன. அவளுக்குத் திருமணமாகி ஆறு வருடங்களும் கழிந்துவிட்டன. வாணிக்கும் திருமணமாகி மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. அவளுக்கு ஒரு வயதில் ஓர் அழகான ஆண் மகன் இருக்கிறான். ஆனால் இதுவரை வேணிக்குத்தான் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை.

இதுவரையில் அதற்கான அறிகுறிகள் எதுவுமே தோன்றவில்லை. இனிமேல் அவளுக்குக் குழந்தை பிறக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமா? என்றுகூட சில தடவைகளில் அமுதாவும், கணவன் அருணும் ஏங்கியிருக்கின்றார்கள். இவற்றிற்கெல்லாம் ஒரு முக்கிய காரணம் உண்டு. அது என்னவென்று அருண், அமுதா, வேணி, வேணியின் கணவன் இவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; தெரியப்படுத்தவும் முடியாது.

எழுபதுகளில் இலண்டனுக்கு வந்த பலரைப் போல் படித்துக்கொண்டிருக்கும்போதே அருணும், அமுதாவும் திருமணம் செய்துகொண்டார்கள். அருண் அப்போது இறுதி வருடம் படித்துக்கொண்டிருந்தான். அருணுக்கும் அமுதாவிற்கும் திருமணமாகிச் சில மாதங்கள் கழிந்தபோது தாங்களும் இலண்டனிலே ஒரு வீடு வாங்கவேண்டும் என்று விரும்பினார்கள். அதன்படி தம்மால் இயன்றளவு பணம் போட்டு, மிகுதிப்பணத்தை கடனாக எடுத்துச் சிறிதாக ஒரு வீட்டை வாங்கினார்கள்.

வீடு வாங்கியதும் வீடு வாங்கிய செலவுகள், வீட்டிற்கு வேண்டிய தளபாடங்கள், கடன் வாங்கிய பணத்திற்கு வட்டி, தண்ணீர், மின்சாரம், தொலைபேசி என்று எடுத்ததற்கெல்லாம் பணம் பணமாகத் தேவைப்பட்டது.

அமுதாவும் அப்போது ஒரு சிறிய வேலைதான் செய்துகொண்டிருந்தாள். எல்லாவற்றிற்கும்; போதிய பணம் இல்லாததனால் அருணுடன் படித்துக்கொண்டிருந்த ரூபன், கமால் என்ற இரண்டு இளைஞர்களைத் தமது வீட்டில் வாடகைக்கு அமர்த்தினார்கள்.

அதன்பிறகு இவர்களுக்கு ஓரளவு பணமும் கிடைத்தது மட்டுமல்லாமல் சகல உதவிகளும் கிடைத்தன. ஏனென்றால் கமால் அப்போது புதிதாக ஒரு மோட்டார் வண்டி வாங்கியிருந்தான். அதனால் இவர்களுக்கு போக்குவரத்துக்கும், பொருட்களை வாங்கக் கடைகளுக்குச் செல்வதற்கும் பெரிதும் உதவியாகவும் இருந்தது.

ஆரம்பத்தில் எல்லோரும் தனித்தனியே சமைத்துச் சாப்பிட்ட போதிலும் அது அமுதாவிற்குச் சரியாகப்படவில்லை. வீட்டிலே அமுதாதான் ஒரு பெண். எனவே அவள் தான் எல்லோருக்கும் இரவில் சாப்பாடு சமைத்துத் தருவதாகக் கூறினாள். இதனால் சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், நேரம், பணம் எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் என்று எண்ணியே அப்படிச் செய்ய உடன்பட்டாள். சிறிது காலத்தின் பின்னர் வீட்டில் உள்ள நால்வரும் ஒரு குடும்பத்தவர் போலப் பழக ஆரம்பித்தனர்.

காலமும் இனிதாகவே ஓடிக்கொண்டிருந்தது. அவ்வேளையில்தாதன் வேணி அமுதாவின் வயிற்றிலே கருவானாள். கருவானவள் உருவாகி அழகிய கொழு கொழு குழந்தையாக வளர்ந்தாள். வயதுக்கு மிஞ்சிய வளர்த்தி. அமுதாவைப் போலவே நல்ல வாயாடியாகவும் வளர்ந்தாள்.

வேணி பிறந்து சில மாதங்களின் பின்னர் ரூபன் திருமணம் செய்து கொண்டு வேறிடம் சென்றுவிட்டான். ஆனால் கமால் இவர்களுடனேதான் இருந்தான். கமால் ஓர் நவநாகரீக ஆணழகன். பணம் கையில் இல்லாது விட்டால் யாரிடமாவது கடனாவது வாங்கி, காலத்துக்கேற்ப உடைகளும் கார்களையும் மாற்றி மாற்றிக் கொண்டே இருப்பான்.

அருண்-அமுதா தம்பதியினருக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேட்காமலே செய்து வந்தான். எப்போதும் ஒரு நல்ல நண்பனாக, உதவியாளனாக, உடன்பிறவாச் சகோதரனாக இருந்தான். அருண்- அமுதா இரு தடவைகள் தமது வீடுகளை விற்றுவிட்டுப் புதிய வீடுகளுக்கு இடம் மாறிய போதும் கமாலையும்; தம்முடன் அழைத்துக்கொண்டே சென்றனர். கமாலும் இவர்களோடு ஒரேவீட்டில் ஒன்றாகவே வாழ்ந்தான்.

அருண் படித்து முடித்து முழுநேர வேலையில் அமர்ந்ததும், அமுதாவும் நல்லதொரு வேலையில் அமர்ந்துகொண்டாள். வேணியைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வது, பாடசாலையிலிந்து திரும்பவும் வீட்டிற்குக் கூட்டிவருவது, பாடசாலையில் கொடுக்கும் வீட்டுவேலைகளை வேணிக்குச் சொல்லிக்கொடுப்பது எல்லாம் கமால்தான். வேணியும், வாணியும் அடுத்தடுத்துப் பிறந்ததனால் அவர்களுக்கு இப்படியான ஓர் உதவி அவசியம் தேவைப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

சிறுவயதிலிருந்தே வேணியும், வாணியும் கமாலை மாமா மாமா என்றே அழைத்து வந்தனர். தமது உடன்பிறவாச் சகோதரன் என்று தாமே ஏற்றுக்கொண்ட பிறகு தமது பிள்ளைகளும் மாமா என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருப்பதாகவே அருணுக்கும் அமுதாவி;ற்கும் பட்டது.

சிலவேளைகளில் அம்மாவுடன் கோபித்துக்கொண்டு வேணி கமாலில் மடியில் இருந்துதான் சாப்பிடுவாள். அப்பாவைவிட கமாலிடம் வேணி அதிக அன்பு வைத்திருப்பதாகவே அமுதாவிற்குப் பட்டது. அருணிற்கு இதனைப் பார்க்க ஒருமாதிரியாக இருந்தாலும் அமுதாவிடம் எதுவும் கூறியதில்லை.

ஒருமுறை வேணியின் பிறந்த தினத்தன்று அருண் வாங்கிய பரிசுகளைவிட கமால் விலையுயர்ந்ததாகவே வாங்கிவந்தான். இது இன்று நேற்றல்ல் கமாலினுடைய சுபாவமே அதுதான். பரிசில்களைப் பிரித்துப் பார்த்தபோது 'வேணி, அப்பாவினுடைய பரிசா, மாமாவினுடைய பரிசா நல்லது' என்று கேட்டான்.

'மாமாவினுடையதுதான் நல்லது' என்று கூறினாள். அமுதாவும் அதனை ஆமோதிப்பதுபோல் பேசினாள். அருணுக்கு உள்ளுக்குள் சிறிது வெறுப்பாக இருந்தாலும் பலர் முன்னிலையில் அமுதாவிடம் எதுவுமே கூறவில்லை. ஆனால் வாணி அப்பாவின் பிள்ளையாகவே வளர்ந்துவந்தாள். அமுதாவைவிட அருணிடமே கூடுதலான பாசம் வைத்திருந்தாள்.

வேணிக்கு இப்போது பத்து வயது ஆகிவிட்டது. வயதிற்கு மிஞ்சிய வளர்த்தி, அளவுக்கு மீறிய பேச்சு எல்லாம் வேணிக்கே பொருத்தமாக இருந்தன. அவள் பத்து வயதிலேயே பருவமடைந்தும் விட்டாள். பூப்புனித நீராட்டு விழாவில்கூட கமால் தனது சொந்தப்பிள்ளையின் விழாப்போல வீடு முழுவதும் ஓடித்திரிந்து செய்தவற்றைப் பார்த்த சிலர் மற்றவரைப் பார்த்துத் தமது கண்களால் பேசிக்கொண்டதை அமுதாவும், அருணும் கவனித்தார்கள்.

'வேணியும் வளர்ந்துவிட்டாள், அவளுக்கென்று ஒரு தனி அறை வேண்டும். ஆதலால் கமாலை வேறு எங்காவது வீடு பார்க்குமாறு சொல் அமுதா' என்று அன்றிரவு அருண் படுக்கையில் இருக்கும்போது கூறினான்.

'ஏன் என்னைக் கூறச் சொல்கிறீர்கள்? உங்களின் நண்பர்தானே. நீங்கள் சொன்னால் என்ன?

'எனது நண்பன்தான், ஆனால் வீட்டிற்கு முதலாளி நீர்தானே. அதனால்தான் உம்மைச் சொல்லச் சொன்னேன்' என்றான் அருண்.

'அப்படியா? அது எனக்கு இதுவரை தெரியாதே' என்று அமுதா கூறிவிட்டு அருணை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். 'எப்படித் திடீரென்று அப்படிக் கூறுவது? இதுவரை காலமும் எம்முடன் இருந்து எமக்குத் தேவையான எல்லா வேலைகளையும் நாம் கேட்காமல்கூட செய்தார். அவரை திடீரென்று வேறிடம் போகும்படி என்னால் கூற முடியாது' என்றாள் அமுதா.

'அப்போ நான் எங்காவது வெளியில் போய் இருக்கிறேன்' என்றான் அருண்

'ஏன் இப்படிக் கதைக்கிறீர்கள்? எவ்வளவு காலமாக கமால் எம்முடன் இருக்கிறார். அவருக்கு வேறு வீட்டில் இருந்தே பழக்கம் இல்லை. இதுவரை காலமும் எம்முடன் இருப்பதால்தான் திருமணம்கூடச் செய்யாது இருக்கிறார்;. அவரை எப்படித் திடீரென வெளியே போகச் சொல்வது?'

'நான் திடீரெனப் போகச் சொல்லவில்லை. எமது நிலைமையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்தால் நல்லது. தனது சீவிய காலம் முழுவதும் கமால் எம்முடன் இருக்க முடியாது என்றுதான் சொல்கிறேன்'.

'எனக்கென்னவோ இப்போது அது சரியாகப்படவில்லை. இப்படிக் கூறினால் நாங்கள் தன்னில் ஏதோ சந்தேகப் படுவதாக அல்லவா நினைப்பார். என்னால் இப்போது அப்படிச் சொல்ல முடியாது' என்று அடியோடு மறுத்துவிட்டாள் அமுதா.

காலமும் ஓடிக்கொண்டேயிருந்தது. வேணிக்கு இப்போது பதினைந்து வயதாகிவிட்டது. அழகான பருவ மங்கையாக, பூத்துக்குலுங்கும் பூச்செடியாக, ஆடி அசைந்துவரும் அழகிய தேராக அவளைப் பார்க்கும்போது இருக்கும்.

'முதலில் பெண் பிள்ளைகள் பிறந்துவிட்டால் பெற்றோர் விரைவில் வயதானவர்களாக ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்று எப்போதோ கேட்டது எவ்வளவு உண்மை. அது இப்போது அடிக்கடி நினைவிற்கு வந்துகொண்டே இருக்கின்றது. இன்னும் சில வருடங்களில் வேணிக்கு ஒரு வரனைப் பார்த்துத் திருமணம் முடித்துவைக்க வேண்டியதுதான்' என்று அருண் அமுதாவுடன் பேசும்போது கூறினான்.

'வேணி படிக்கின்றாள். அவளின் படிப்பு எப்படிப் போகின்றதோ அவற்றைப் பார்த்துத்தான் அவளுக்கு திருமணம் எப்போது என்று தீர்மானிக்கவேண்டும். அதுவுமல்லாமல் அவர்கள் இலண்டனிலே பிறந்து வளர்கிறார்கள். எல்லாம் நாம் நினைத்தபடியா நடக்கின்றது?' என்று கூறினாள் அமுதா.

இப்போது எத்தனையே தமிழ் இளைஞர்களும், பெண் பிள்ளைகளும் வேறு இனத்தவர்களைத் திருமணம் செய்ய விரும்பியதும், அவர்களுடைய பெற்றோர்கள் படும் பாடுகளை அமுதாவும் அருணும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். அப்படியான நிலைமை தமது பிள்ளைகளுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது பட்டும் படாமலும் தனக்குத் தெரிந்த சில புத்திமதிகளைக் கூறி வந்தாள் அமுதா.

ஒருநாள் ஒரு நெருங்கிய உறவினரின் திருமணவீட்டிற்குச் சென்று வந்தார்கள். செந்தி என்ற அந்த மணப்பெண்ணின் மாப்பிள்ளை ஓர் ஆங்கிலேயர். வீடுவந்ததும் அமுதா

'வேணி! பார்த்தாயா, செந்தி எவ்வளவு அழகான பிள்ளை. அவள் வெள்ளைக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்யாமல் ஒரு தமிழ் மாப்பிள்ளையைத் திருமணம் செய்திருந்தால் அவளது பெற்றோர்கள் எவ்வளவு நன்றாக, சந்தோசமாக அந்தத் திருமணத்தை நடாத்தி வைத்திருப்பார்கள். திருமணவீட்டிலே அரைவாசிப்பேர் முகங்களிலே சந்தோசமேயில்லை. மாப்பிள்ளையின் பெற்றோரை தமிழ் முறைப்படி சேலையும், குருதாவும் அணியச் சொல்லி அழகு பார்த்தால் மட்டும் போதாது. பிள்ளையைப் பெற்றவர்களின் மனம் நோகாமலும் நடக்க வேண்டும். இந்தக் கல்யாணம் எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியாது' என்று பெரிய பிரசங்கத்தையே வேணிக்கு முன்னால் நிகழ்த்தினாள் அமுதா.

'அம்மா! நீங்கள் எனக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் நிச்சயம் ஒரு தமிழ் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன். பயப்படவேண்டாம்;' என்று கூறிவிட்டு துள்ளிக் கொண்டு சென்றுவிட்டாள் வேணி.

வேணிக்கு ஜி.சி.எஸ்சி பரீட்சைக்கு இன்னும் நான்கு மாதங்களே இருந்தன. தான் விரும்பிய துறையில் படித்துப் பட்டம்பெறவேண்டும் என்று வேணி விரும்பி அதற்காகப் படித்துக்கொண்டிருந்தாள். ஏதாவது விளங்காத கேள்விகளை அருணிடமும், கமாலிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். வீட்டில் இருந்த பொது அறையிலே இருந்துதான் படிப்பாள். அருணும், அமுதாவும், வாணியும் குசினிக்குப் பக்கத்தில் இருந்த சாப்பாட்டு அறையினுள்தான் சாப்பிட்டுவிட்டுத் தொலைக்காட்சி பார்ப்பார்கள். அக்காவிற்குத் தெந்தரவு கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு வாணியை தனது அறையில் இருந்தே படிக்கச் செய்தார்கள்.

வேணிக்கு அடிக்கடி படிக்கும் பாடங்களில் உதவி தேவைப்பட்டதால் கமாலும் கூடியளவு நேரம் வேணிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதிலேயே தனது ஓய்வு நேரத்தைச் செலவிட்டான். “மாமா, மாமா” என்று வேணி அழைப்பதும், “வேணி, வேணி” என்று கமால் அழைப்பதும் குசினிக்குள் இருக்கும்போதே திறந்த கதவின் வழியாக தெளிவாகக் கேட்கும். இப்படியிருக்கும்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வெளியில் கதைக்கும் சத்தம் தன்னைக் குழப்புவதாக வேணி கூறி தான் படிக்கும் அறையின் கதவை மூடிவிட்டுப் படிக்க ஆரம்பித்தாள்.

ஒருநாள் வெளியில் சென்றுவிட்டு வந்த அருண், அமுதா, வாணி மூவரும் வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வரும்போது வேணி படித்துக்கொண்டிருந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு கமால் முன்னே ஓட, பின்னால் வேணி ஒரு சிறு தடியைக் கையில் கொண்டு துரத்திக்கொண்டு வெளியே ஓடி வந்தாள். திடீரென்று பெற்றோரைக் கண்டதும் சற்றுத் திகைத்துவிட்டாள். உடனே சமாளித்துக்கொண்டு

'என்னை மாமா இந்தத் தடியால் அடித்துவிட்டார். அதுதான் இப்படி…..' என்று இழுத்தாள்.

'சரி, உள்ளே போய்ப் படி' என்று மட்டும் அமுதா கூறிவிட்டு அருணை ஒரு மாதிரிப் பார்த்தாள். அருண் அமுதாவைப் பார்த்தான்.

அன்றிரவு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போதும் வேணி பொருத்தமில்லாத வார்த்தைகளைக் கூறுவதும், அடிக்கடி கமாலைப் பார்த்துச் சிரிப்பதும் அமுதாவிற்கும், அருணுக்கும் என்னவோ போல் இருந்தது. ஆனால் அவர்கள் எதுவுமே பேசவில்லை.

இரவு படுக்கையில் இருக்கும்போது அமுதா, 'அருண் எனக்கென்னவோ பயமாக இருக்கின்றது. நாங்கள் தவறு செய்துவிட்டோம் போல் இருக்கிறது' என்றாள்.

'நீர் இன்று நடந்தவைகளைக் கண்டுவிட்டுத்தானே இப்படிக் கூறுகின்றீர்? இதற்காகத்தான் உம்மை முன்பே எச்சரித்தேன். ஆனால் நீர் கேட்கவில்லை. ஆனால் இப்போதும்; காலம் கடந்துவிடவில்லை' என்றான்.

அடுத்தடுத்த தினங்களில் அருண் கமாலை அழைத்து தனது பெற்றோர் ஊரிலிருந்து வருகிறார்கள். அவர்கள் இருப்பதற்கு ஓர் அறை தேவைப்படுகின்றது ஆதலால் கமால் இருக்கும்

அறையைச் சில மாதங்களுக்கு அவர்களுக்குக் கொடுக்கும்படியும், அவர்கள் ஊருக்குத் திரும்பியதும் மீண்டும் அங்கே கமால் தங்கலாம் என்று ஒரு பொய்யைக் கூறினான்.

கமால் எதும் சொல்லாமல் 'நான் நாளைக்கே வேறு இடம் பார்த்துக்கொண்டு செல்கிறேன், நீங்கள் விரும்பியபடியே செய்யலாம். இதிலே எனக்கு எதுவித மனத்தாங்கலும் இல்லை' என்று கூறினான்.

கமால் வீட்டை விட்டு வெளியே சென்ற சில கிழமைகளில்தான் அவன் ஏன் அவ்வளவு சீக்கிரம் வெளியே சென்றான் என்று விளங்கியது. பதினைந்து வயதான வேணி ஒருநாள் சாப்பிடும்போது மயங்கி வீழ்ந்துவிட்டாள். அவசரமாக டாக்டரை அழைத்து அவளைப் பரிசோதித்தார்கள். அப்போதுதான் வேணியின் வயிற்றிலே ஒரு குழந்தை கருவாகி இருப்பது பெற்றோருக்குத் தெரிந்தது.

அமுதாவுக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது. டாக்டர் வெளியே போனதும் தனியே வேணியைக் கூப்பிட்டுக் கேட்டாள். 'நீ சின்னப்பிள்ளை, உனக்கு ஒன்றும் தெரியாது என்று நான் நம்பி ஏமாந்துபோனேன். இந்த அவமானத்தை நான் வெளியே எப்படிச் சொல்லுவது, யாரிடம் போய்ச் சொல்லுவது? எங்கள் குடும்ப மானத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டாயே. நான் மற்றவர்கள் முன்னால் எப்படி இனிமேல் தலைநிமிர்ந்து நடப்பது?'

'அம்மா, நீங்கள் ஒன்றிற்கும் பயப்படவேண்டாம். ஒரு தமிழ் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் எனக்கு அடிக்கடி கூறுவீர்கள். அதன்படி ஒரு தமிழ் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்' என்றாள்.

'நான் என்ன சொல்கிறேன் நீ என்ன விளையாட்டாகக் கதைக்கிறாய். யார் அந்தத் தமிழ் மாப்பிள்ளை?'

வேணி சிறிதும் அச்சமில்லாமல் 'அவர் உங்களுக்குத் தெரிந்தவர்தான். கமால் மாமாதான்' என்றால்

'கமால் மாமாவா? எத்தனை நாட்களாக இப்படி நடக்கிறது? ஏன் நீ இதுபற்றி என்னிடம் எதுமே சொல்லவில்லை? அவர் உனக்கு அப்பா மாதிரி. அவரையா கலியாணம் செய்யப் போகிறாய்?' என்று அமுதா வேணியைக் கேட்டாள்.

இங்கே வெள்ளைக்காரர் எல்லாம் முறைகள் பார்த்தா திருமணம் செய்கிறார்கள்? மனதுக்குப் பிடித்திருந்தல் சரி. முதலில் ஒன்றாக வாழ்கிறார்கள், பிறகு திருமணம் செய்துகொள்கிறார்கள்.

'நீ ஒரு விபரம் தெரியாத பெண்பிள்ளை என்று நினைத்தேன். பெரிய அனுபவசாலி மாதிரிப் பேசுகின்றாயே. இதெல்லாம் யார் உனக்குச் சொல்லித் தந்தது?

'எனக்கு எதுவும் தெரியாது. கமால் மாமாதான் இப்படிச் சொன்னார்;. என்னை எதற்கும் பயப்படவேண்டாம் யாரும் என்னைக் கலியாணம் செய்யாது விட்டால் தான் என்னைக் கல்யாணம் செய்துகொள்வதாகவும் கூறினார்' என்றாள்.

இதனைக் கேட்டதும் அமுதா தலையிலே இடிவிழுந்ததுபோல் ஆனாள். 'வளர்த்த கடா மார்பிலே பய்ந்ததுபோல்' இருந்தது. இப்படியான எண்ணம் கொண்ட ஒருவனையா இவ்வளவு காலமும் எமது வீட்டிற்குள் வைத்திருந்தோம்? இதற்காகத்தானா இவன் இவ்வளவு காலமும் திருமணம் செய்யாது இருந்தான், எல்லா உதவிகளும் செய்தான்?

அவனை வீட்டிலே வைத்திருந்த தவறு தங்களுடையதுதான் என்பதை உணர்ந்தாள்.

'பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அறைக் கதவைச் சாத்திவிட்டு இந்தப் பாடம்தானா சொல்லிக் கொடுத்தான்? எது எப்படி நடந்தாலும் வயதில் குறைந்த பெண் பிள்ளையுடன் தகாத தொடர்பு வைத்த குற்றத்திற்காக நிச்சயம் கமாலிற்கு சிறைத்தண்டனை கிடைக்கும். கமாலைக் கண்டால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது' அருண் கொதித்தான். ஆனால் அப்படிச் செய்ய அமுதா விரும்பவில்லை. 'நாம் இப்போது அவசரப்படக்கூடாது. நாம் எடுக்கும் முடிவுகள் எமது பிள்ளையின் எதிர்காலத்தை மேலும் பாதிக்கக் கூடாது'.

'இனி என்ன இருக்கிறது பாதிப்பதற்கு?' மேலும் கொதித்தான் அருண்.

'சட்டப்படி குற்றவாளிக்குத் தண்டனை கொடுத்துவிட்டால் மகள் வேணியின் எதிர்காலம் வளமாகிவிடுமா?' இது அமுதாவின் வாதம்.

கமாலுக்கும் வேணிக்கும் அப்பா மகள் என்கிற வயது வித்தியாசம். அதனால் கமாலுக்கும் அவளைக் கொடுக்க முடியாது அதுவுமல்லாமல் கமாலை ஒரு நம்பிக்கைத் துரோகியாகவே அருணும் அமுதாவும் பார்த்தார்கள். தூக்கி வளர்த்த பிள்ளையுடன் தகாத உறவு கொள்பவன் நிச்சயம் ஒரு நல்ல மனிதனாக இருக்கமாட்டான்.

சிறு வயதிலே கெட்டுப்போனவள் என்ற பழி வேணிக்கு வந்து சேரும். அவளை யாரும் மனமுவந்து மணம் முடிக்கவும் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் அது பலகாலம் நீடிக்காது. மேற்கத்திய நாடுகளிலே இவையெல்லாம் சர்வசாதாரணமாக இருந்தாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே இந்த நிலைமை முற்றுமுழுதாக ஏற்றக்கொள்ளப்படவில்லை. எதிர்காலத்திலும் முழுதாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் சந்தேகம்தான்.

வேணி ஒரு மொட்டு. அவள் இன்னமும் மலராகவேயில்லை. அவள் மலராகி, காயாகி, கனியாகும் நாட்களை எதிர்பார்த்திருந்த அருணுக்கும் அமுதாவுக்கும் தமது வாழ்வு தடம் புரண்டுவிட்டதாகவே பட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. தெரிந்தவர்களுடன் இதுபற்றிக் கதைக்கவும் முடியாது, கதைக்கவும் விருப்பமில்லை. காவல் துறையினரிடம் சென்று முறையிட்டால் அவர்கள் மீதியைப் பார்த்துக் கொள்வார்கள். கமாலைத் தேடிக் கண்டுபிடித்து சட்டப்படி மறியலில் இடுவார்கள். இது உறுதி. ஆனால் அப்படிச் செய்யவும் அமுதா விரும்பவில்லை.

கமாலும் எங்கு சென்றான் என்று தெரியவில்லை. அறை தமது பெற்றோருக்குத் தேவை என்று சொன்னவுடன் எதுவித கேள்விகளுமின்றி அவசரமாக அவன் வெளியேறியது ஏன் என்று இப்போதுதான் அருணுக்கு நன்கு விளங்கியது.

பதினாறு வயதினை அடையும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களினால் இளைஞர்களுடைய மனங்களும் மாற்றமடையும். அந்த வயதில் அவர்களுடைய இதயங்கள் பளிங்குபோல் இருக்கும். அதில் யாராவது ஒரு கீறல் செய்துவிட்டால் அது இறுதிவரை மாறாது இருக்கும். ஆழமான காதலானால் அங்கே இனிய மலர்கள் மலரும், எந்நாளும் நறுமணமே வீசிக்கொண்டிருக்கும். அது இறுதிவரை அழியாது. ஆனால் அசிங்கமான காதலானால் அங்கே மலரும் மலர்கள் நறுமணம் வீசாது, துர்நாற்றமே வீசும்.

வேணிக்கும் கமாலுக்கும் ஏற்பட்டது காதல் அல்ல. பருவ வயதில் அவளுக்கு ஏற்பட்ட காம உணர்ச்சிக்கு அவள் அடிமையானாள். அதனைக் கட்டிக்காத்து அறிவுரை சொல்லவேண்டிய கமாலே அதனைத் தனக்குச் சாதகமாக ஏற்படுத்திக்கொண்டான். காமம் கரைபுரண்டு வரும்போது அதற்கு வயது ஓர் அணையாக இருக்க முடியாது. தீயையும், பஞ்சையும் பக்கத்திலே பாராமுகமாய் விட்டது எவ்வளவு தவறென்று இப்போதுதான் அமுதாவுக்குப் புரிந்தது. இப்படியான நிகழ்வுகளால் பாதிக்கப்படுவது இளைஞர்களின் வாழ்வும் உடலும் மட்டுமல்ல, அவர்களைப் பெற்றவர்களின் மனதும் உடலும் கூடத்தான்.

அமுதாவும், அருணும் தாங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு வேண்டிய பொருள்களையும், வசதிகளையும் தேடுவதிலேதான் கூடிய கவனம் எடுத்தார்கள். அனால் அவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருவதில் கவனம் செலுத்தவில்லை. ஒரு மாற்றானை நம்பி மோசம் போய்விட்டதாகவே எண்ணினார்கள். மகளை ஆத்திரப்பட்டு அதட்டவோ, அடிக்கவோ மனம் வரவில்லை. என்ன இருந்தாலும் அவர்கள் பெற்ற பின்ளைதானே.

தாயும், தந்தையும் தன்னால் படும் வேதனைகளையும், தூக்கமற்ற இரவுகளைனயும் கண்ட பின்னர்தான் வேணிக்கும் தான் செய்தது தவறு என்று பட்டது. தான் செய்த தவறிற்காகத் தனக்கு பெற்றோர் இதுவரையில் தண்டனை எதுவும் தரவில்லை. மாறாக அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்றுதான் அல்லும் பகலும் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். இதனைக் காண வேணிக்கு அவர்கள்மேல் பாசம் மேலும் பெருகியது. தாயிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடினாள். தந்தையிடம் பேசவோ, அவரது முகத்தைப் பார்க்கவோ வேணி பயப்பட்டாள்.

இந்த நிலைமையை நீடிக்க விடாது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்பினாள் அமுதா. வேணிக்கும் அதுவே விருப்பமாக இருந்தது. ஆனால் எப்படி முற்றுப்புள்ளி வைப்பதென்றுதான் தெரியவில்லை. வேணியை அழைத்துக்கொண்டு தமது குடும்ப டாக்டரிடம் சென்று விளக்கினாள் அமுதா.

அவரின் ஆலோசனைகளையும் கேட்டாள். இறுதியில் எதுவரினும் வேணியின் நல்வாழ்வுக்காக வயிற்றிருக்கும் கருவைக் கலைப்பதென்றே முடிவுசெய்தார்கள். அதன்படி சில கிழமைகளில் ஒரு தனியார் மருத்துவமனையில் கருச்சிதைவும் செய்யப்பட்டது.

வேணிக்கும், அமுதாவிற்கும் இவை புது அனுபவமாகவே இருந்தன. இருவரும் தமக்கு ஏற்பட்ட இந்த அசிங்கமான அனுபத்தை எண்ணிக் கண்ணீர் வடித்தனர். கட்டித்தழுவி தமது ஆதங்கத்தை அழுது தீர்த்தனர்.

அழகான உடலில் ஒரு கீறல் வீழந்துவிட்டது. காலம் செல்லச்செல்லக் காயம் ஆறினாலும் அதன் வடு மாறாது என்பது எல்லோருக்கும் தெரியும். எதற்கும் வேணியைச் சிறிதுகாலம் தமது தாய்நாட்டிற்கு அனுப்புவது என்று அருணும், அமுதாவும் முடிவுசெய்தார்கள். வேணியும் இதற்குச் சம்மதித்தாள்.

தாயகம் சென்ற வேணி, அங்கு யாரிடமும் தனக்கு நடந்த எதையும் பற்றிச் சொல்லவில்லை. சொல்லக்கூடாது என்று தந்தை தாயின் கட்டளை. வேணி சிறுவயதாக இருக்கும் போது முன்னர் ஒருமுறை பெற்றோருடன் தாயகம் சென்றுவந்தவள். அதன்பிறகு இப்போதுதான் சென்றாள். அங்கு வாழ்பவர்களின் வாழ்க்கை முறைகள், குடும்ப பாசம், அவர்களிடையே இருக்கும் இயற்கையான பிணைப்பு, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அயலவர்களின் அக்கறையான கண்காணிப்பு என்பன அவளை வெகுவாகக் கவர்ந்துவிட்டன.

நான்கு மாதங்களின் பின்னர் புது மொட்டாக, புதுப் பொலிவுடன், புது மெருகுடன் மீண்டும் இலண்டனுக்கு வந்து சேர்ந்தாள் வேணி. வேணி தாயகம் சென்றபோது இவளுடைய சொந்த மைத்துனன் ஜெகன் வேணியின் அழகைக் கண்டு மயங்கிவிட்டான். வேணியைத் தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அருணிற்கும் அமுதாவுக்கும் வேணி திரும்பி வருமுன்னரே கடிதமும் அனுப்பியிருந்தான். தன்னுடைய சொந்தச் சகோதரனின் மகனாக இருந்தபோதிலும் திருமணம் செய்வதானால் அதற்கான காலம் வரும்போது அவனுக்கு நடந்த உண்மைகளைச் சொல்லி அவன் சம்மதத்தைப் பெற்ற பிறகே செய்வது என்று முடிவுசெய்தார்கள்.

தாயகத்திலே எத்தனையோ இளம் பெண்கள் இளம் வயதில் கற்பைப் பறிகொடுத்தும், கயவர்களால் கசக்கி எறியப்பட்டும், விதவைகளாகவும் வாழ்வதைக்கண்ட ஜெகனிற்;கு தனது சொந்த மாமனும், மாமியும் நடந்த உண்மைகளைக் கூறியது உள்ளத்தை நெகிழ வைத்தது. ஏதும் அறியா இளவயதில் வேணி தவறியதற்காக அவன் உண்மையிலேயே வருந்தினான். அவன் எதுவித மறுப்பும் கூறாது வேணிக்கு வாழ்வு கொடுப்பதற்குச் சம்மதம் தெரிவித்தான்.

ஜெகன் – வேணி திருமணம் நிகழ்ந்து ஆறு வருடங்களாகிவிட்டன. ஆனால் இதுவரை அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. எத்தனையோ டாக்டர்களிடம் சென்று எத்தனையோ பரிசோதனைகள் செய்தும் பார்த்தார்கள். ஆனால் எதுவித பயனும் இல்லை. அவள் தனது இளவயதில் கருத்தரித்து, கருச்சிதைவு செய்ததனால்தான் இப்போது அவளுக்குக் கர்ப்பம் தரிக்க முடியாமல் இருக்கின்றது என்று ஒரு டாக்டர் கூறினார். இப்படிச் சிலருக்கு நடந்திருக்கின்றது என்று அமுதாவும் கேள்விப்பட்டு இருக்கின்றாள்.

வாழ்க்கையில் எல்லா வசதிகள் இருந்தும் ஒரு குழந்தைப் பாக்கியம் இல்லாதுவிட்டால் வாழ்க்கை முற்றுப் பெறாத கவிதை போன்றே இருக்கும். வேணியின் வாழ்க்கையை எண்ணி எண்ணி அருணும் அமுதாவும் கலங்காத நாளே இல்லை. ஆனால் வேணியின் வாழ்வில் நடந்த அந்தக் கோர சம்பவம்பற்றி இவர்கள் நால்வருக்கும்தான் தெரியும். வாணிக்குக்கூடத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கின்றார்கள். வெளியில் தெரிந்தால் சிலர் பட்டும் படாமலும் ஏதாவது கூறி வேணியினதும், ஜெகனதும் மனங்களை நோகடிக்கவும் கூடும் என்பதற்காகவே இப்படியான முடிவை எடுத்தார்கள்.

காலையில் வேணிக்குத் தொலைபேசி அழைப்புத் தொடுத்த நேரம் தொட்டு அமுதாவின் மனம் அமைதியாக இருக்கவில்லை. வேணி சத்தி, தலையிடி என்று இதுவரை காலமும் இருந்ததில்லை. மகள் இதுபற்றிக்கூறிய நேரம் தொடக்கம் அது நிச்சயம் வேணி கருத்தரித்துவிட்டதற்கான அடையாளமாகத்தான் இருக்கும் என்று அவள் நம்பினாள். ஆண்டவனே இனிமேலும் எம்மைச் சோதிக்க வேண்டாம், ஏதோ அறியாத வயதில் தவறியதற்காக அவளை இனிமேலும் தண்டிக்க வேண்டாம். அவளுக்கு ஒரு வாரீசைக் கொடுங்கள் என்று மனதார வேண்டினாள். அமுதா தன் மனதில் கடந்த கால நினைவுகளை மீட்டிப் பார்த்தபடி தனது மோட்டார் வண்டியை மேலும் வேகமாக வேணியின் வீட்டை நோக்கி ஓட்டினாள்.

உரும்பையூர் எம்.ரி.செல்வராஜா, இலண்டன்.
09.08.2003

Reply

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.