கதை கதையாம்

"நினைவில் நின்றவள்"

1 week 2 days ago
"நினைவில் நின்றவள்"
 
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பரீடசை எழுதிவிட்டு, மறுமொழிக்காக காத்திருந்த காலம் அது. மறுமொழிக்கு பின்புதான் முறையாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.என்றாலும் அந்த இடைவெளி காலத்தை வீணாக்க விரும்பவில்லை. எனவே உயர் வகுப்பு கணித பயிற்சி வகுப்புக்கள் நடத்த தீர்மானித்தேன். அப்படி சேர்ந்தவர்களில் அவளும் ஒருவள்.
 
அவள் கொஞ்சம் நவீனமாக, அந்த கால பாணிக்கு ஏற்றவாறு, தன்னை அலங்கரித்தும் அதற்கு பொருத்தமான ஆடையும் அணிந்து வருவாள். கொஞ்சம் பணக்கார குடும்பமும் கூட. நாள் செல்ல செல்ல அவள், கொஞ்சம் கொஞ்சமாக தனிப்பட்ட முறையிலும் என்னுடன் பழக தொடங்கினாள். அந்த நட்பு ஒரு எல்லைக்குள் இருந்தாலும், அதில் ஒரு பிடிப்பு எம்மை அறியாமலே வளரத் தொடங்கியது.
 
"ஒட்டி உடையில் பெண்மை காட்டி
எட்டி நடையில் வேகம் காட்டி
சுட்டி விடையில் புத்தி காட்டி
வெட்டி பேச்சில் வெகுளி காட்டி
தட்டி கழித்து நாணம் காட்டி
முட்டி முட்டாமல் விலகி நிற்பவளே! "
 
இப்படித்தான் நான் அவளை வர்ணிக்க கூடியதாக இருந்தது எனலாம். காலம் போக, அது ஆசிரியன் - மாணவி என்ற நிலை மாறி, நண்பன
- நண்பி என்ற நிலையாக வலுவடைய தொடங்கியது. அதற்குள் எனக்கு பரீடசை மறுமொழிவரவும், அதை தொடர்ந்து நிரந்தர உத்தியோகம் கிடைக்கவும், நான் தனியார் கல்வி போதிப்பதை நிறுத்தி, நான் படிப்பித்த மாணவர்களிடம், அவளையும் சேர்த்து பொதுப்படையாக மட்டும் சொல்லி விட்டு, என் முதல் உத்தியோகத்தை பொறுப் பேற்க வேறு ஒரு நகரத்திற்கு சென்று விட்டேன். அவளின் நட்பை ஒரு சாதாரண ஒன்றாகவே அன்று கருதியதால், அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
 
ஒரு மாதத்திற்கு பின்பு எனக்கு ஒரு கடிதம், நான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அவளின் பெயருடன் வந்தது. நான் அதில் என்ன எழுதி இருக்கு என்று அறிய ஆவலுடன் உடைத்து பார்த்தேன். திகைத்தே விட்டேன். அந்த முதல் வரியிலேயே! ஆமாம் அந்த முதல் வரி, 'அத்தான்' என்று தொடங்கியது. ஒரு நவீன நாகரிக பெண்ணாக சிரித்து குலுங்கி பகிடிவிட்டு கதைத்தவள், இப்படி எழுதுகிறாள் என்று , ஒரே ஆச்சரியமாக இருந்தது, அது மட்டும் அல்ல, என் அண்ணனிடம், தான் என் பெண் நண்பி என்று தொலைபேசியில் கூறி, விலாசம் பெற்றதாக வேறு கூறி இருந்தாள். அது மட்டும் அல்ல, அவள் என்னை காதலிக்கிறாள் என்று கூட எனக்கு தெரியாது. அப்படியான எண்ணம் என்னிடம் ஏற்படவும் இல்லை.
 
உண்மையில் அவரின் நட்பை சாதாரணமாகவே நான் இதுவரை கருதி இருந்தேன். அதை என்றும் பெரிது படுத்தவில்லை. மற்றது என் தந்தை சாதாரணமான சுருட்டு தொழிலாளி, ஆனால் நாம் எல்லோரும் நன்றாக படித்து, நல்ல உத்தியோகம் பெற்றோம். அவள் அதற்கு எதிர்மாறு !
 
'இடையது கொடியாய் இளமையது பொங்க
நடையது அன்னமாய் நயனம் இமைத்து
உடையது ஜொலிக்க புன்னகை சிந்தி
சடையது அலைபாய கலந்து பழகுபவளே !"
 
இப்படி ஒரு பருவ மங்கையாக எல்லோரிடமும் மகிழ்வாக கலந்து பழகுவாள் என்பது மட்டும் தெரியும். அப்படியே என்னுடனும் நட்பாக இருந்தாள் என்று தான் நான் கருதினேன். எது எப்படியாகினும், என்னை விரும்பி ஒருவர் கை நீட்டி இருப்பதால், அதை மதித்து, அடுத்தமுறை விடுதலையில் திரும்பும் பொழுது அவரை சந்தித்தேன். இருவரும் அமைதியான கடற்கரையில், குளிர் பணம் அருந்திக்கொண்டு கதைக்க தொடங்கினோம். அவளின் கதையில், எண்ணத்தில் தமிழர் பண்பாடு முழுமையாக வெளிப்படுவதை நன்றாக உணரக் கூடியதாக இருந்தது. அது மட்டும் அல்ல இன்றைய அரசியல் பிரச்சனைகளைப் பற்றியும் பேசினாள். அதில் தமிழர்கள் சிக்கி தவிப்பதை மிக மிக கருணையாக எடுத்துக் கூறினாள். அது அவளின் உடை மற்றும் தலை முடி அலங்காரத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு புரியாத ஒன்று!!. என்றாலும் என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கு அது ஒத்துவராது என்பது தெரியும். ஆகவே அதில் இனிமேல் மாற்றம் செய்தால், நான் பெற்றோரிடம் அனுமதி பெறுவது இலகு என்று விளங்கப் படுத்தினேன். அது மட்டும் அல்ல, கல்யாணத்தின் பின், நீ மெல்ல மெல்ல முன்போல் உடை மற்றும் முடி அலங்காரத்தில் மாறலாம் என்றும் கூறினேன். அவள் என்னை தன் பெற்றோரிடம் முதலில் கதைக்க கூறினார்.
 
ஒரு ஞாயிற்று கிழமை நானும் அங்கு சென்றேன் . தாயும் தந்தையும் என்னை வரவேற்றனர். மகள் ஏற்கனவே எல்லாம் சொல்லி விட்டதாகவும், மகள் என்னை கல்யாணம் செய்வதில் எந்த தடையும் இல்லை என்றும், ஆனால் அவரின் கோலம், பாணி அப்படியே தான் இருக்கும் என்று ஆணித்தரமாக கூறினார். நானும் அவர் கேட்டதற்கு மற்றும் அவரின் கடிதத்துக்கு மதிப்பு கொடுத்தே சந்திக்க வந்ததாகவும், என் பெற்றோர் விரும்பும் ஒருவரையே என்னால் திருமணம் செய்யலாம் என்றும் அவர்களிடம் கூறிவிட்டு திரும்பினேன். அவள் எழுந்து கதவு வரை வந்து, நடந்த சம்பவங்களை மன்னித்து மறக்கும் படியும், பெற்றோரை மீறி தானும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், என்றாலும் தன் அன்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கொஞ்சம் கண்ணீருடன் விடை தந்தார்.
 
"கார் கூந்தல் சரிந்து விழுந்து
காற்றோடு அது அலை பாய
காதணி குலுங்கி இசை அமைத்து
கார்த்திகை அதற்கு ஒளி வழங்க
காசனம் செய்யும் விழிகள் திறந்து
காதோரம் மெதுவாய் செய்தி கூறி
காதல் ஆசையை இறுக்கி பூட்டி
கால்கள் தள்ளாட விலகி போனாள்!"
 
[காசனம் - Killing,slaying; கொலை]
 
இப்படித்தான் அவளை கடைசியாக பார்த்த அந்த காட்சி என் மனதில் இன்றும் நிற்கிறது. அவளின் நடத்தையும் மற்றும் உள்தோற்றமும்
எவ்வளவு அழகாகவும் பண்பாடாகவும் இருப்பதை கண்டு ஆச்சரியமும் மதிப்பும் தானாக என்னில் தோன்றி, என்றுமே நெஞ்சை விட்டு அகலாத, 'நினைவில் நின்றவள்' ஆக இன்னும் என்னுடன் வாழ்கிறாள் அவள்!!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"காதலா ? காமமா ??"

1 week 3 days ago
"காதலா ? காமமா ??"
 
வவுனியா காட்டின் ஒரு எல்லையில் அமைந்த ஒரு குக் கிராமம் அது. பொதுவாக அங்கு எல்லா வீடுகளும் மண் வீடாக இருக்கும் பொழுது ஒரு வீடு மட்டும் கல் வீடாக அங்கு தனித்து காணப்பட்டது. அந்த வீட்டின் இளவரசி தான் எம் கதாநாயகி. அழகிலும் அதே நேரத்தில் படிப்பிலும் சிறந்து விளங்கிய அவள், அருகில் உள்ள பாடசாலையில் உயர் வகுப்பில், விஞ்ஞான பிரிவில் கற்று வந்தாள். அவளின் அழகும் நளினமும் மற்றும் உடையும் கண்டு மயங்காத ஆண் மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லலாம்.
 
அதே பாடசாலையில் குழப்படி பையன் என பெயர்பெற்ற, ஆனால் கம்பீரமான மிடுக்கான ஒரு பையன் இருந்தான். அவன் ஏற்கனவே உயர்தர பரீட்சை எடுத்து இரு முறையும் கோட்டை விட்டவன். என்றாலும் பாடசாலை அருகில் இருக்கும் மதவில் தன் கூட்டாளிகளுடன் இருந்து மாணவிகளை கிண்டல் செய்வான். அவனின் கடைக்கண் இப்ப எம் இளவரசியின் மேல். தான் எப்படியும் அவளை மடக்க வேண்டும். அது தான் இப்ப அவனின் எண்ணம். அவன் வலையில் ஏற்கனவே சிக்கி சில மாணவிகள் பட்ட துயரம் வேறு. அது எம் இளவரசிக்கும் நன்றாகத் தெரியும். எனவே அவன் லீலைகள் ஒன்றும் அவளிடம் பலிக்கவில்லை. ஆனால் அவன் விடுவதாக இல்லை. அவன் அவளின் அன்றாட நடவடிக்கைகளை நோட்டமிட தொடங்கினான். எங்கேயாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று. அது அவளுக்கு தெரியாது?
 
அவள் வழமைபோல, பாடசாலையின் பின், வீட்டிற்கு விறகு பொறுக்க அன்றும் தன் தங்கையுடன் சென்றாள். அவள் என்ன நினைத்தாளோ தெரியாது, தங்கையை ஒரு பக்கமும், தான் மறுபக்கமுமாக சென்று விறகு பொறுக்க தொடங்கினாள். அவளையே, அவளுக்கு தெரியாமல் கவனித்துக் கொண்டு வந்த அந்த வாலிபன், தன் துவிச்சக்கர வண்டியை ஒரு மரத்துடன் சாத்திவிட்டு, திடீரென பின்னல் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டான். எம் இளவரசி அப்படியே திகைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டாள்.
 
தங்கை பக்கத்தில் தான் விறகு பொறுக்கிறாள். சத்தம் போட்டால் உடனே வந்திருப்பாள். ஆனால் அவள் செய்யவில்லை ? அவள், அவன் உண்டாக்கிய திடீர் மலைப்பில் அப்படியே சிலையாட்டம் நின்று விட்டாள். அவனுக்கு அது இலகுவாக போய் விட்டது. தடுக்கவும் இல்லை அணைக்கவும் இல்லை.
 
எனக்கு அகலிகை - இந்திரன் கதை ஞாபகம் வருகிறது. பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடித்ததால் அகலிகையுடன் கௌதமர் உடல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே அகலிகை பொழுதை கழித்தாள். ஆனாலும் அவ்வப்போது காம உணர்ச்சி அகலிகைக்கு எழும். அகலிகை மேல் காமம் கொண்ட இந்திரன், ஒரு நாள் பின்னிரவில் சேவல் போல் கூவ, கௌதமரும் விடிந்து விட்டது என எண்ணி நீராட செல்ல, இந்திரன் கௌதமர் உருவில் அங்கு வந்து அவளுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டார். என்றாலும் பிற்பாடு அது இந்திரன் என்று அவள் உணர்ந்தாலும், அமைதியாய் இருந்ததாக ராமாயணத்தில் உண்டு. அப்படித்தான் எம் கதாநாயகியும் இருந்தார்?
 
எம் கதாநாயகி அதை வன்முறை என்று எடுக்கவில்லை. அவள் மனதில் எதோ சந்தோசம். அதற்கு நியாயம் கற்பிப்பது போல "எனக்கு காதலும் வரவில்லை காமமும் வரவில்லை. ஆடவன் ஒருவன் என் உடலை தீண்டிவிட்டான் என்று விருப்பமோ விருப்பம் இல்லையோ இவன் என் கணவன் என்று பட்டிக்காடு நான் முடிவு எடுத்து அமைதியாக நின்றேன்" என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
 
என் தந்தையார் கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார் அவற்றை வாசித்து, நானும் என்னை அவர்களைப் போல் எண்ணிய பட்டிக்காடு என்பது அவரின் பிந்திய வாதம்.
 
எத்தனையோ போராட்டத்தின் பின், ஏறத்தாழ ஐந்து வருடத்தின் பின், அவன் அரேபியாவில் இருந்து நாடு வந்ததும், அவள் அவனையே திருமணம் செய்தாலும். அது தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக் கொண்டே இருந்தது. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் முதல் இரவே அவளுக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம் தான். அரேபியாவில் அவனின் பெண் நண்பியான, யாரோ ஒரு யயந்தி பற்றியே அவனின் கதை முழுக்க முழுக்க இருந்தது. அவள் இத்தனைக்கும் இடையிலும், தன் கோபம், உணர்ச்சி எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக் கொண்டு, 'நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள்' என்று அவனை திசை திருப்ப சொல்லி பார்த்தாள். 'எல்லாம் யயந்தி வளர்த்து விட்டது' என்றவன் கூறி, குறட்டை விட்டுத் தூங்கியும் விட்டான்!. இப்படித்தான் அவளின் வாழ்க்கை ஆரம்பித்தது.
 
பெற்றோர்கள் சூழ்ந்து இருந்ததால், எப்படியோ ஒருவாறு, பல இழுபாடுகளுக்கு இடையில், ஓரளவு சுமுகமாக குடும்ப வாழ்வு நகர்ந்தது. எனினும் அன்றைய நாட்டுப் பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தை பிள்ளைகளுடன் அவனையும் அவளையும் பெற்றோர்கள் வெளிநாடு அனுப்பி வைத்தனர். இது அவர்களின் பெற்றோர்கள் செய்த பெரும் தப்பு!
 
அந்த கதாநாயகன், இப்ப மீண்டும் சுதந்திர பறவையாகி, வெளிநாட்டு கலாச்சாரமும் துணை புரிய, அவளை விட்டு விட்டு இப்ப ஆறாவது பெண்ணுடன் வாழ்கிறான்!
 
எம் கதாநாயகி காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் பிள்ளைகளுடன் போராடிக் கொண்டு உலகின் ஒரு மூலையில் அமைதியாக கண்ணீருடன், அவனின் புது மனைவியையும், அவள் யாருக்கோ பெற்ற பிள்ளைகளை சுமந்து செல்லும் தன் கணவனையும் பார்த்துக்கொண்டு, இன்னும் காத்து நிற்கிறாள்!!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"பாசம்"

1 week 3 days ago
"பாசம்"
 
எம் திருமணத்தின் பரிசாக எம்கையில் தவழும் அவன்மேல் பாசம் அத்தனையும் கொட்டிவளர்த்தோம். அது தன்னலம் என்று என்றுமே எண்ணவில்லை. ஏன் - பாசத்தை உணரவும், கொடுக்கவும் பெறவும் திறன் பெரும்பாலும் உயிரியல் ரீதியானது என்றுகூட சிந்திக்கவில்லை. இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்றுயாராவதுகேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே பாசமும் ஆகும்.
அவனுக்கு எல்லா வசதியும் கொடுத்து, படிப்பில் ஒரு எல்லைக்கே கொண்டுபோனோம். நல்ல உயர்தர வேலையும் கிடைத்தது. அழகானபெண்ணும் காதலியாக வரவே, அவனின் விருப்பத்தின்படி, சிறப்பாக ஆடம்பரமாக திருமணமும் மகிழ்வாக நிறைவேறியது.
 
பாசத்திற்கு நாம் நாளாந்தவாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக்கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "பாசத்தை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய பாசம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது.
 
திருமணத்துக்கு முன் இருந்த அவனின் போக்கு இப்ப மாறத் தொடங்கி, நாம் இதுவரை புரியாததை ஒவ்வொன்றாக அளந்து காட்ட தொடங்கியது. பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் அவசியமாகிறது. அதுமாட்டு அல்ல, தன்னலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. பாசம்கூட அதற்கு விதிவிலக்கல்ல!!
 
ஆனால், பெற்ற தாய் தந்தையரைகூட புறந்தள்ளும் அளவிற்கும் அதுபோகும் என்பது நாம் நினைக்கவே இல்லை. பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் மறைக்கும் என்பது உண்மைதான் !
 
தாயின் மறைவிற்கு கொள்ளிவைக்கவென வந்த பொழுது தான் நான் கடைசியாக அவனை பார்த்தேன். தமிழ் மூதாட்டி ஔவையாரின் ஒரு பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது
 
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு"
 
இப்ப என்னை பாடையில் கிடத்திவிட்டார்கள். எனக்கு இன்று இறுதிச்சடங்காம். நான் தீயில் சங்கமிக்கும் பொழுது, நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது, மகனை ஒருமுறை பார்க்க தேடிப் பார்த்தேன்.
 
உறக்கம் துறந்த பாசங்களை கண்டேன். அவர்களுக்கிடையில் உரிமை காட்டிட வந்த மகனையும் கண்டேன்!! கடைசியாக என் மகனிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன், என் பெயரை மறக்க வேண்டாம், என் பெயர் எம் அடையாளம், எங்கள் இருப்பு, இனத்தின் வாழ்வு!!
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"விடியலுக்கு காத்திருக்கிறேன்"

1 week 4 days ago

"விடியலுக்கு காத்திருக்கிறேன்"


இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை  வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால்,  1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற  சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை!


சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆனால் இன்னும் விடியல் கிடைக்காமல், முன்னையதைவிட கேவலமாக இன்று இருக்கும் இந்த சூழ்நிலையில் தான், நானும் ஒரு தமிழனாக, இலங்கையின் பழம் குடிகளின் ஒருவனாக, தலை நிமிர்ந்து, என் சொந்த மண்ணில் வாழ, விடியலுக்காக காத்திருக்கிறேன்! 
பத்தாம் வகுப்பில் நான் படித்த, எமிலி டிக்கின்ஸன் [Emily Dickinson] என்ற கவிஞரின் பாடல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.


"I many times thought Peace had come
When Peace was far away —
As Wrecked Men — deem they sight the Land —
At Centre of the Sea —
And struggle slacker — but to prove
As hopelessly as I —
How many the fictitious Shores —
Before the Harbour be"


"தூரத்தில் விடியல் [சமாதானம்] இருக்கும் பொழுது
பலதடவை விடியல் வருமென்று எண்ணினேன்!
கடலின் மையத்தில், குழம்பிய மனிதனாக  
நிலத்தை, கரையை பார்ப்பதாக நினைத்தேன்! 
ஆனால், அவை எல்லாம் பொய் 
நம்பிக்கை அற்றது, ஏமாற்று வித்தை! 
உண்மையான விடியலுக்கு, [துறைமுகத்திற்கு] முன், 
எத்தனை கற்பனைக்கரைகள் இன்னும் காண்பேன்!"


ஆமாம், தூரத்தில் விடியல் தெரிவது போல, வானில் 4 ஜூன் 1987 இல் பூமாலை என்ற ஒரு செயல் திட்டத்தின் கீழ், இந்தியா விமானப் படை, யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து, அங்கு உணவுக்காக வாடிக்கொண்டு இருந்த மக்களுக்கு, என்னையும் உட்பட, 25 தொன் [tons] எடையளவு உணவு பொதிகளை போட்டது. அதை தொடர்ந்து, இலங்கை - இந்தியா ஒப்பந்தம்  29 ஜூலை 1987 கைச்சாத்திடப்பட்டது, ஒரு உண்மையான கரையை காட்டுவது போல அன்று எனக்கு இருந்தது. என்றாலும் எமிலி டிக்கின்ஸனின் பாடலை நான் மறக்கவில்லை.       


உச்சத்தில் கிட்ட தட்ட 80,000 ஆட்பலம் கொண்ட  இந்திய அமைதி காக்கும் படை 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அப்பொழுது நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்துகொண்டு இருந்த காலம். எனவே நானும் என் குடும்பமும், அமைதி பிறந்து விட்டது என்ற நம்பிக்கையில், 270 கிலோ மீட்டர் பயணமாக யாழ் புறப்பட்டோம். இருண்ட குகைக்குள் வெளிச்சம் வந்ததுபோல, ஒரு விடியல் அண்மையில் தெரிவது போன்ற மகிழ்வுடன், நாம் பேருந்தில்  சென்றுகொண்டு இருந்தோம். நாம் 221 கிலோ மீட்டர் கடந்து, ஆனையிறவு பாலம் வரும் வரை அமைதியாக இருந்த எம் பயணம், திடீரென ஒரு குழப்பத்தில் முடிந்தது. அங்கு முகாமிட்டு காவலுக்கு நின்ற அமைதி படை, எம் பேருந்தை சூழ்ந்து சோதனை செய்ததுடன், ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகுது என்றும், உடனடியாக கெதியாக யாழ் சென்று, வீடு செல்லும் படியும் எச்சரித்து அனுப்பினர். 

    
எமக்கு ஒரே திகைப்பும் பெரும் ஆச்சரியமும். என்ன நடந்தது? எமக்கு ஒன்றுமே புரியவில்லை?. நாம் எதிர்பார்த்தது அமைதியும், சம உரிமையுடன் ஒரு மனிதனாக தலை நிமிர்ந்து தமிழனாக, தமிழ் பண்பாட்டுடன் வாழ்வது மட்டுமே? ஆனால், மீண்டும் ஓட்டமும், பதுங்கு குழியும், தமிழன் என்று தலை குனிந்து ஒழிந்து திரியவல்ல? என்றாலும், இப்ப யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் வந்துவிட்டதால், இனி திரும்பவும் முடியாது. ஆகவே, நடப்பது நடக்கட்டும் என்று சில நம்பிக்கைகளுடன் மிகுதி பயணத்தை தொடர்ந்தோம்


நாம் யாழ் நகரை அண்மிக்கும் முன்பே சண்டை ஆரம்பித்துவிட்டது. எம்முடன் எம் குழந்தைகளும் பயணிப்பதால், நாம் கலங்கி, எமிலி டிக்கின்ஸன் [As Wrecked Men] கூறியது போல சிதைத்த மனிதனாக இருந்தாலும், எம்முடைய முன்னைய அனுபவங்கள் எமக்கு தைரியம் தந்தன. ஒருவாறு அவசரம் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக, குழந்தை ஒன்றை தூக்கிக் கொண்டும் சென்றோம். அப்பொழுது யாழ் கோட்டையில் இருந்து ஷெல் அடிக்க தொடங்கிவிட்டார்கள். அதில் சில எமது தலைக்கு  மேலாக போவதையும், வெடித்து சிதறும் சத்தமும் ஒரு பீதியை உண்டாக்கினாலும், ஒருவாறு சமாளித்துக்கொண்டு வீடு சேர்ந்தோம். என்றாலும் குழந்தைகளின் அழுகையும் பயமும் எமக்கு மேலும் கவலை அளித்தது. அன்று இரவு ஏறக்குறைய முழுநேரமும் நாம் பதுங்கு குழிக்குள் தான் இருக்கவேண்டி இருந்தது. பயண களைப்போ , நித்திரையோ எம்மிடம் இருந்து தூர விலகிவிட்டது. அது மட்டும் அல்ல, எந்த விடியலை எதிர்பார்த்தமோ, அது இப்ப பின்னோக்கி நகருவதைத் தான் நாம் உணர்ந்தோம். ஆமாம்  இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்து கொண்டு இருந்தது! பிரித்தானியாவிடம் இருந்து கிடைக்காதது, இலங்கை அரசிடம் இருந்ததும் கிடைக்காதது, இப்ப இந்தியா அமைதி படையிடம் இருந்தும் கிடைக்காமல் விலகுவது நன்கு தெரிந்தது. இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்ததுதான் எனோ ? 


"மனிதனே உனக்கேன் அலட்சியம்; விதையுங்கள் மனதில் நல்லெண்ணம் என்னும் விதையை; தூவுங்கள் இரக்கம் என்னும் கருணையை; பிறக்கட்டும் மனிதம் மீது கண்ணியம்; பொழியட்டும் அன்பென்னும் பெருமழை; வளரட்டும் மனித நேயம், அங்கே விடியட்டும் விடியல்;  பிறக்கட்டும் உதயம்; வடியட்டும் சோகங்கள்; முடியட்டும் குரோதங்கள்; தொடரட்டும் உறவுகள்; தொழுவட்டும் விடியலை எம் கரங்களும்;  மரம் செடி கொடிகள் போன்று மணக்கட்டும் மண்ணில் சமதருமம்!"


என் மனம், பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டும் தன் பாட்டில் இப்படி முழங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் அது ஒரு ஆறுதலாகவும் இருந்தது உண்மையே! இந்தியா இலங்கை பேச்சு வார்த்தையின் பொழுது, கைக்கு எட்டுவது போல இருந்த விடியல், விடியாமலே, மேலும்  கடும் இருட்டாக மாறி, இன்றுவரை எம்மை, எம் இருப்பை குழப்பத்தில்  மூழ்கடித்துக்கொண்டு தான் இருக்கிறது. என்றாலும் என் நம்பிக்கை குறையவில்லை!      


ஏறத்தாழ முப்பத்தி ஐந்து அல்லது முப்பத்தி நாலு ஆண்டுகள் கழித்து, மார்ச்சு மாதம் 31 திகதி, 2022 ஆண்டு சிங்கள இளைஞர்கள் சனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு தமது வரலாறு காணாத போராட்டத்தை தொடங்கினர். அவர்கள், இன, மத வேறுபாட்டை  தாண்டி, தமிழர்களின் புரையோடி இருக்கும் சில பிரச்சனைகளையும் உள்வாங்கி, கடந்த 74 ஆண்டுகளாக, இனத்துவேசத்தை வளர்த்து, தமது இருப்பையும், அதே நேரத்தில் சரியான பொருளாதார திட்டம் இல்லாமல், நாட்டை குட்டிச் சுவராக்கி, தம் வளத்தை பெருக்கியவர்களை இனம் காட்டி துரத்தும் தமது போராட்டத்தை அரசுக்கு எதிராக மூன்றாவது மாதமாகவும் தொடர்கிறார்கள். இது உண்மையில் நல்ல ஒரு அடையாளமே!. 


என்றாலும் இன்று கூட  குருந்தூர் மலை பிரச்சனை தமிழர்களை வேதனை படுத்திக்கொண்டு இருக்கிறது. மக்கள் சாப்பாட்டுக்கும், எரிபொருளுக்கும் வரிசையில் நின்று, இதுவரை 11 பேர் இறந்த நிலையிலும், இனவாதம் பேசும் சில புத்த பிக்குகள் மற்றும் கும்பல்கள் ராணுவ உதவியுடன் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை நிறுவவும், அதை சாட்டாக வைத்து, காணிகள் பறிக்கவும், குடியேறவும் வரிசையில் நிற்பது வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது? இதை காலிமுக இளைஞர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்ற நோக்கில், விடியலை நோக்கி அவர்கள் செல்லும் பயணத்தில், இன்று நானும் சேர்ந்து எமது விடியலுக்கு காத்திருக்கிறேன்!


பரிபாடல் 19 கூறியது போல, பசும்பிடி மலர் இளந் தளிர்களுடனும், ஆம்பல் மலர் விரிந்த வாயுடனும், காந்தள் மலர் கைவிரல் போலவும், எருவை மலர் மணக்கும் மடலுடனும், வேங்கை மலர் எரியும் தீ போலவும், தோன்றி மலர் உருவ அழகுடனும், நறவம் மலர் நீண்ட காம்புகளுடனும், கோங்கம் மலர் பருவம் தோன்றா நிலையிலும், இலவம் மலர் பகைவர் போல் சிவந்த நிலையிலும், தனித்தனியேயும், கோத்துக்கொண்டும், பின்னிக்கொண்டும் மலை எங்கிலும் மீன் பூத்த வானம் போல், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பூத்துக் கிடந்தன என விரைவில் வரலாறு கூறட்டும்! 


"பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,        
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க    
மணந்தவை, போல, வரை மலை எல்லாம்
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
விடியல் வியல் வானம் போலப் பொலியும்
நெடியாய்! நின் குன்றின்மிசை."
[பரிபாடல்19]


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"தாத்தாவும் பேரனும்"

1 week 4 days ago

"தாத்தாவும் பேரனும்"


குழந்தைகள், சிறுவர்கள் எப்படியாவது தமது பாட்டனை கூப்பிட்டாலும், உதாரணமாக தாத்தா, அப்பப்பா, அம்மப்பா ஏதுவாகியினும், அவர்கள்  என்றும் தம் பாட்டனை விரும்புகிறார்கள் என்பது நாம் கண்ட  உண்மை. அது மட்டும் அல்ல, பாட்டன், பாட்டி அவர்களுக்கு ஒரு மகிழ்வான சிறப்பு உறவும் ஆகும். அவர்களுடன் எந்தநேரமும் விளையாட, அவர்களை அணைத்து கதைகள் சொல்ல, துயில வைக்க ... இப்படி அனைத்துக்கும் ஒருவராக இருப்பதுடன் பாட்டன் பாட்டி தான் குடும்பத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் மற்றும் தாய் மொழியில் அவர்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். ஏன் என்றால் இந்த அவசர கால உலகில் தாய் தந்தை மற்றும் இளைய உறவினர்கள் எல்லோரும் வீடு, வேலை, கடை , உடற்பயிற்சி கூடம் ... இப்படி ஒரே ஓய்வில்லாது இருக்கிறார்கள். ஆக பாட்டன் பாட்டி தான் பொதுவாக அவர்களுடன் பொழுது போக்கக் கூடியவர்களாக இருப்பதே ஆகும். இப்படியான சூழ்நிலையில் தான், நான் ஓய்வு பெற்றதும் என் மகள் என்னை தங்களுடன் வந்து இருக்கும்படி அழைப்புவிட்டார். 


என் மகளின் வீடு லண்டனுக்கு வெளியே உள்ள, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் [Hertfordshire] என்ற ஊரில் உள்ள வெலின் கார்டன் சிட்டி [welwyn garden city] என்ற ஒரு சிறு கிராமம் ஒன்றில் இருந்தது. அங்கு தொண்ணுற்று ஐந்து வீதத்துக்கும் மேற்பட்டோர்கள் பிரித்தானியா வெள்ளை இனத்தவர்கள் ஆவார்கள். ஆகவே எனக்கு தொடக்கத்தில் நண்பர்கள் என ஒருவரும் சேரவில்லை. எனக்கு நண்பர்கள் என்றால் என் இரு பேரன்கள் மட்டுமே! 


ஒரு சனிக்கிழமை, சின்ன பேரன், அவருக்கு வயது சில மாதங்களே, தாயுடன் இருக்க, பெரிய பேரனுடன், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நடந்து போய்,  அதன் அருகில் உள்ள ஒரு குளத்திற்கு வந்தோம். அந்த குளத்தில் பல சிறுவர்கள் தொலைமுறைக் கட்டுப்பாட்டு மூலம் படகுககளை [remote-controlled boats] இயக்கி மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள். என் பேரனும் நாமும் அவர்கள் விளையாடுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, அங்கு இருந்த வாங்கு ஒன்றில் நாம் இருவரும் அமர்ந்தோம்.


கொஞ்சநேரம் போக, பேரன் என்னிடம் தாத்தா வீட்டுக்கு போய் எமது விளையாட்டு படகை எடுத்து வருவமோ என்று கேட்டார். இனி நாம் வீடு போய் திரும்பி வர நேரம் போகும் என்பதாலும், நான் என்னுடன், பேரனுடன் பொழுது போக்க காகிதம், கத்தரிக்கோல் & வண்ண எழுதுகோல்கள் எடுத்துக்கொண்டு வந்ததால், ஒரு காகித படகு செய்து அதற்கு வண்ணம் பூசி, குளத்தில் விட்டு அவருக்கு ஒரு புது உற்சாகம் ஊட்ட எண்ணினேன்.    


முதலில் அதை மறுத்து, இது உங்க ஊருக்குத்தான் சரி என்று பேரன் அடம்பிடித்தாலும், நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய, அதில் அவருக்கு ஒரு ஆர்வமே வந்துவிட்டது. 


நான் அந்த காகித ஓடத்தை மேலும் நன்கு அழகுபடுத்த அங்கு மரங்களில் இருந்து விழுந்த ஓர் இரு சுள்ளிகளையும் சில புல்லுகளையும் ஓர் இரு பூக்களையும் பொறுக்கி வரும்படி பேரனிடம் கூறினேன். அவனும் மிக மகிழ்வாக துள்ளி ஓடி எடுக்க தொடங்கினார். நானும் மு.கருணா நிதியின் 'மறக்க முடியுமா ?' பாடலை எனக்குள் முணுமுணுக்க தொடங்கினேன்


'காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்'


அப்படி எம் படகு ஒருக்காவும் கவுலாது, அவன் என் பேரன், கட்டாயம் வெற்றி வீரனாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் தருவாயில், திடீரென ஒரே ஆரவாரத்தைக் கேட்டு திரும்பி பார்த்தேன், என் பேரனுடன், அங்கு விளையாடிக் கொண்டு இருந்த மற்ற வெள்ளை சிறுவர்களும் நான் செய்வதை பார்க்க கூட்டமாக தங்கள் மூத்தோர்களுடன் சுற்றி நின்றார்கள். எல்லோருக்கும் இது அதிசயமாகவும் உற்சாகமாகவும் இருந்தததை உணர்ந்தேன் 
நான் அவர்களுக்கு எப்படி செய்வது, அழகு படுத்துவது என்று விளங்கப் படுத்திக் கொண்டு, பேரன் கொண்டு வந்தவற்றை  இணைத்து ஒரு செயல் விளக்மே [demonstration] செய்து காட்டினேன். எல்லோரும் கை தட்ட, பேரன் அந்த தொலை முறைக் கட்டுப் பாட்டு மூலம் இயங்கும் படகுகளுடன் ஓரளவு போட்டி போல் தண்ணீரில் விட்டார். 


முதலில் எம் காகித படகு கொஞ்சம் தத்தளித்தாலும், அங்கு வீசிய இளம் காற்று துணை சேர அது ஆடி ஆடி அழகாக குளத்தில் பயணிக்க தொடங்கியது. 


மேலும் கொஞ்ச நேரம் போக, மற்றவர்களின் மின்கலம் [battery], தம் தம் வலுவை இழக்க அவர்களின் விளையாட்டு படகுகள் ஓய்வுக்கு வந்துவிட்டன. ஆமாம் 


'கொண்டாட்டம் போட்டு கொடிகளும் ஏற்றி
படகை ஓட்டி மகிழ வைத்தது 
காலமும் போக நேரமும் வர 
வலு இழந்து சோகம் செய்தான்' 


என்றாகி விட்டது! சங்ககாலத்தில் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர். பின்படகு (rowing),  முன்படகு (canoeing]   பாய்மர படகு (wind-surfing) என்பன முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்ததாக அறிகிறோம். படகை அன்று புணை என்றும் அழைத்தனர். எம் காகித படைக்கும் காற்றால் இயங்கும் ஒரு பாய்மர படகு என்று சொல்லலாம். அது இயற்கை சக்தியில் இயங்குவதே.  ஆகவே பேரனின் காகித படகு மட்டும் நிமிர்ந்து நின்று இன்னும் ஓடிக் கொண்டு இருந்தது!. இப்ப எல்லா சிறுவர்களின் கவனமும் பேரனின் படகில் மட்டுமே. பேரன் இப்ப பெரிய வீரன் போல [hero] புன்முறுவலுடன் அவர்களின் மத்தியில் நின்று துள்ளிக் கொண்டு நின்றான்!!


'கதைப்பதைக்  கேட்க ஆட்களும் இல்லை
நட்பு  வழங்க யாருமே இல்லை' 
என்று இருந்த எனக்கு, அன்று முதல் பல நண்பர்களும் வளர தொடங்கின!!  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"தலை தீபாவளி"

1 week 5 days ago
"தலை தீபாவளி"
 
 
எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை நன்றாக எனக்கு முதலிலேயே தெரியும் . அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்கு தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். குறிப்பாக தமிழர் பண்பாட்டுக்கு அல்லது தமிழரை இழுவுபடுத்தும் எதையும் நான் ஏற்றுக் கொளவதில்லை. அது மட்டும் அல்ல தமிழர் சமயமான சைவ சமயம்  இந்து மதத்துக்குள் [வைதீக மதம்] உள்வாங்கப்பட்டதே, அது தன் தனித்துவத்தை இழக்க காரணம் என்பதே என் வாதம். உதாரணமாக முருகன்- ஸ்கந்தன் ஆகியதை அல்லது சிவன்- ருத்திரன் ஆனதை கூறலாம்.
நாம் இருவரும் இந்த விடயங்களில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் மிக அன்பாக, நட்பாக, விட்டுக்கொடுப்புடன் வாழ்க்கை ஆரம்பித்தது. எந்தவித பிரச்சனையும் எமக்கிடையில் வரவில்லை. நல்ல புரிந்துணர்வுடன் குடும்ப வாழ்வு நகர்ந்தது. அவர் ஒழுங்காக விரதங்கள், ஆலயம் போவது, எல்லாம் கடைப்பிடிப்பார். அது அவரின் தனிப்பட்ட விடயம். அவரின் சுதந்திரம். நான் தலையிடுவதில்லை. நான் பிறவியில் சைவம் [சைவ உணவு உண்பவன்] என்பதால், அது உண்மையில் என்னை தாக்கவே இல்லை.
 
இரண்டு மாதம் கழிய தீபாவளி நாள் நெருங்கி வந்தது. அவள் அது 'எமது' தலை தீபாவளி என்று பெரிதாக கொண்டாட வேண்டும் என ஒரு திட்டமே போடத் தொடங்கிவிட்டார். அவர் அதை கொண்டாடுவது பற்றி எனக்கு கவலை இல்லை. அதற்குத் தேவையான பணம், நேரம் ஒதுக்கி கொடுப்பதிலும் பிரச்சனை இல்லை. ஆனால் அது 'எமது' என்று என்னையும் அதற்குள் இழுப்பதில் தான் பிரச்சனையாக எனக்கு இருந்தது. என் மனச் சாடசிக்கு விரோதமாக என்னால் என்னை ஈடுபடுத்த முடியாது. அது அவளுக்கும் தெரியும். என்றாலும் அவள் பிடிவாதமாக அதில் இருந்தாள்  
 
தீபாவளி என்ற பெயரில்,உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும் ஒரு  தமிழ் [திராவிட] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்! ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும். அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும். அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்?  அது தான் என் கேள்வி . உதாரணமாக காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால், அதற்கு நீ  எவ்வாறு முகம் கொடுப்பாய் ? இதைத்தான் நான் அவளிடம் விளக்கமாக கேட்டேன். 
 
ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண். மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண். ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது. ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் தமிழர்களின் [திராவிடர்களின்] பிரதிநிதியாக கருதப்படும் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்? இது, இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை ஞாபகப்படுத்தவே  உதவும் என அவளுக்கு விரிவாக எடுத்து கூறினேன். ஆனால் அவள் அதில் விட்டுக்கொடுப்பு செய்ய மறுத்துவிட்டாள்.
 
தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். நீங்க எங்கள் வீட்டிற்கு வந்து அப்பா அம்மா என் சகோதரர்களுடன் அதில் பங்குபற்றவேண்டும். இது நான் கல்யாணத்துக்கு முன்பே கண்ட கனவு! என் நம்பிக்கை!! . அவள் கோபமாக சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு போய் படுத்துவிட்டாள் !
 
எனக்கு இது தலை தீபாவளியா அல்லது தலை போகும் தீபாவளியா புரியவில்லை. அன்று என்னுடன் சமயமா ? மானிடமா ? என்ற விவாதத்தில் தோற்று கண்ணீருடன் கோபமாக போனது ஞாபகம் வந்தது. நான் ஏளனச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டு கைதட்டிக் கொண்டு இருந்தேன் . ஆனால் இன்று நிலைமை வேறு? ஆனால் நாம் தமிழர். உலகின் மூத்த குடிகளில் ஒருவன். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு  முன்பே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பறைசாற்றிய இனம் என்ற கர்வமும் என்னை விட்டு விலகவில்லை?  
 
அவள் இரவு சாப்பாடு சாப்பிடவும் இல்லை, ஏன் இரவு உடை கூட மாற்றவில்லை, அப்படியே கட்டிலில் குறுக்காக படுத்து இருந்தாள். நான் ஒரு தேநீர் மட்டும் குடித்துவிட்டு, இரவு செய்திகளை பார்த்துவிட்டு அறைக்கு வந்தேன். அவள் குறுக்காக மட்டும் அல்ல, கைகளையும் நீட்டி, நான், தனக்கு பக்கத்தில் படுக்காதவாறு போர்வையால் மூடி படுத்து இருந்தாள். உண்மையில் நித்திரையா ஊடலா எனக்கு தெரியாது?
 
"நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே"
 
என்ற வரி என் நெஞ்சில் மின்னலாக வந்தது. உனக்கான துன்பத்துக்கு காரணமான நீயே அதற்கான ஆறுதல் என்றது இனி என் வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணாதே. பிறப்பு இறப்பு போல இன்ப துன்பமும் உண்டு என எச்சரிக்கையும் விட்டது. அது உண்மையில் அவளுக்கு சொல்ல வேண்டியது. தேவையில்லாமல் தானே தன் தலைக்கு வலிய துன்பத்தை வாரிப் போட்டுக்கொண்டு, மற்றவரையும் படுக்கவிடாலால் வருத்திக் கொண்டு படுத்து இருப்பவள் அவள்தானே!  
  
குடும்பம் என்றால், ஒருவரை ஒருவர் வீட்டுக் கொடுத்து நடக்கவேண்டும். ஆனால் அதற்காக எம் மானத்தை விற்கமுடியாது. எனவே காலை நாம் இருவரும் அவளின் தாய் வீட்டுக்கு போவதாகவும், என்றாலும் ஏதாவது சாட்டு சொல்லி, கொண்டாட்டத்தின் பொழுது அதில் இருந்து விலகுவதாகவும் யோசித்தேன்.  நான் மற்ற அறையில், அவளை குழப்பாமல் படுத்துவிட்டேன். 
 
ஆனால் எனக்கு நித்திரை வரவில்லை. கண் மூடி சும்மா படுத்து இருந்தேன். ஓர் சில மணித்தியாலத்தில் பின், யாரோ என் கதவை மெல்ல திறப்பது கேட்டது. மெல்ல கண் திறந்து பார்த்தேன். அவள் தான் ! இரவு உடையில், அழகு தேவதையாக, என் கிட்ட  வந்து, என்னை தட்டினாள். "சரி நாம் இறப்பை கொண்டாடாமல் முடிசூட்டு விழாவை மட்டும் கொண்டாடுவோம், இப்ப எழும்பு வாங்க சாப்பிட " என்று கையை பிடித்து இழுத்தாள்!  
 
இருவரும் சாப்பிட்ட பின், அவள்  திருஞானசம்பந்தர் தேவாரம் ஒன்றை  எனக்கு கேட்கக்கூடியதாக
 
"வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்"
 
பாடிக்கொண்டு, மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அழாக்குறையாக கேட்டாள். எனக்கு சிரிப்புத் தான் வந்தது. கபாலீச்சரம் என்னும் கோயிலில் [சிவன் கோவில்] விளங்கும் பெருமானைக் என்று குறிப்பிட்டதை அவள் கவனிக்கவில்லை போலும்.    
 
"மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய           
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!"
[அகநானுறு 141]
 
தெருவெங்கிலும் விளக்கு வைக்கின்றனர். மாலைத் தோரணம் கட்டுகின்றனர். பழமை மேம்பாடு கொண்ட நம் ஊரில் எல்லாரும் கார்த்திகை என்ற விளக்கீட்டு விழாவை [தீபம் + ஆவளி / விளக்கு வரிசை] கொண்டாடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் விழாக் கொண்டாட அவர் வரவேண்டும் என்ற அவளின் ஏக்கம் முழுதாக தேவாரத்தை பார்க்க விடவில்லை போலும்.
 
தலை தீபாவளி, தலை போகாமல் , புரிந்துணர்வுடன் அவள் தீபாவளியாகவும் நான் கார்த்திகை விளக்கீடாகவும் ஒன்றாக இரு தரப்பு குடும்பகங்களுடனும் ஆனால் மரணத்தை, இழவு படுத்துதலை தவிர்த்து மகிழ்வாக கொண்டாடினோம்!  
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"உன்னை மறக்க முடியவில்லை?"

1 week 5 days ago
"உன்னை மறக்க முடியவில்லை?"
 
 
ஒரு பொத்தானை அழுத்தி, அந்த கணமே  என் நினைவை உடனடியாக அழிக்க முடியும் என்றால்,  நான் உன்னுடன் ஒன்றாய் இருந்த தருணங்கள் எல்லாம் மனதில் இருந்து போய்விடும். ஆனால் நான் இப்ப  ஒரு தந்தையாக இருந்தும், அழகான அன்பான மனைவி காதல் கிழத்தியாக, விழித்ததும் நான் தேடும் ஆசை முகமாக, மறக்காது நான் ரசிக்கும் வண்ண உடலாக, நித்தமும் நான் சுவாசிக்கும் மூச்சுக் காற்றாக இருந்தும், இன்னும் உன்னை மறக்க முடியவில்லை? இது என்ன மாயமோ, அது புரியாமல் நான் தவிக்கிறேன். காலம் மாறும் கோலம் மாறும் என்பது பொய்யோ?, நான் அறியேன் பராபரமே!
 
காதல் என்பது உலகில்  உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து வரும் தொப்புள்கொடி உணர்வு என்று கூட சொல்லலாம் . வரலாற்றின் பக்கங்களை வண்ணமயமாக மாற்றியதில் காதலுக்கு கணிசமான பங்குண்டு. அது வெற்றியாகவும் இருக்கலாம். தோல்வியாகவும் இருக்கலாம். எத்தனையோ தியாகங்களையும், எண்ணற்ற மாயங்களையும் அதனால் மட்டுமே நிகழ்த்த முடிந்திருக்கிறது என்பதை வரலாற்று சான்றுகள் எமக்கு எடுத்து கூறுகின்றன. காதலைத் தொடாமல் தன் வாழ்வைக் கடந்தோர்  மிக மிக சிலரே. அதனால் தானோ என்னவோ நானும் அதற்கு விதிவிலக்கல்ல. 
 
எப்போதும் என்றும் என் நினைவலைகள் புரண்டு எழும்போது காலடியில் வந்து உரசி கிளர்ச்சியூட்டுகிறதே அந்த அவளின் முதல் முத்தம்! எத்தனை முத்தங்களை மனைவி தந்திருப்பாள், ஆனால் அவ்வற்றை எல்லாம் தாண்டி, அந்த முத்தம், முதல் அனுபவம் இன்னும் நெஞ்சில் நிற்கிறதே, இது தான் முதல் காதலின் வலிமையோ? இப்ப நீ யாரோ ஒருவனின் மனைவி, நான் யாரோ ஒருவளின் கணவன். அது தான் நான் உன்னை மறக்க முயல்கிறேன், மற்றும் படி உன் நினைவு மகிழ்வானதே! நீ தந்த காதலும் காமமும் உயர்வானதே! இன்று கல்யாணம் முன் காதலை சிலர், பலர்  காமம் காமம் என்று அதை இழித்துப் பேசுவது எனக்குத் தெரியும். என்னை பொறுத்தவரையில் அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதிமதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிது சிறிதாகக் கூடுவது போல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு ஒருவருக்கு  ஏற்படும் (மதம் போல) பரவச நீட்சியையே காமம் என்று நான் நினைக்கிறன். மற்றும் படி அங்கு ஒன்றும் இல்லை. 
 
”காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே"
 
காலம் எம்மை இருவேறு திசையில் அனுப்பிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் சில முரண்பாடுகள், விட்டுக்கொடுக்கும் பக்குவம் அன்று வரவில்லை. பக்கத்து வீட்டில் இருந்ததால், பலதடவை நாம் ஒருவரை ஒருவர் பார்த்துள்ளோம். என்றாலும், அவள் ஒரு நாள், எதிர்பாராத விதமாக, 'ஹலோ' சொல்லும் மட்டும் கதைக்கவேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை? அவள் நல்ல அழகு, நல்ல கவர்ச்சி, நான் இல்லை என்று சொல்லவில்லை, இன்றைய நவீன நாகரீகம் அத்தனையும் அவளில் இருந்தது, நானும் நல்ல படிப்பு படித்துள்ளேன், நல்ல உத்தியோகம் வரும் காலத்தில் கிடைக்கும், என்றாலும் இப்ப சாதாரண வறுமைக் கோட்டில் வாழ்ந்தவன், இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பவன், அதனால் தான் நான் அன்று அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மற்றும் படி ஒரு இளைஞனுக்கு இருக்கும் அத்தனை ஆசையும் எனக்கும் இருந்தது!  
 
'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்' என திருவள்ளுவர் உரைத்தது போல, மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்று இருக்குமோ என்ற ஒரு எண்ணம் அந்தக்கணம் என் மனதில் தோன்றியது. என்றாலும் அவள் அந்த 'ஹலோ' வார்த்தைக்குப் பின் எனக்கு ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் தனது கைத் தொலைபேசியில் எனக்கு கேட்கக் கூடியதாக, கொஞ்சம் உரத்த இனிய குரலில், 'நாளை காலை நான் சுருக்கெழுத்து பாடம் படிக்க தொடங்குகிறேன், முதல் நாள் என்பதால் நேரத்துடன் ஒன்பது மணிக்கு பேருந்து தரிப்பு நிலையத்துக்குப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டு தனது வீட்டுக்குள் போனாள். கட்டாயம் அது எனக்குத் தான் என்று அவளின் செய்குறி எடுத்துக் கூறியது. அந்தக் கொடிச்சி செல்லும் பின்னழகைப் பார்த்துக் கொண்டிருந்த என் நெஞ்சத்தைத் திரும்பி வாங்க முடியவில்லை, அவள் வீட்டுக்குள் போய் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தேன்! ஆமாம் ஆறு வயது முதல் அறுபது வயது வரை அனைவரும் ரசிப்பது அழகு.  அழகை வெறுப்பவர் உலகில் ஒருவரும் இல்லை. நான் என்ன முனிவரா? கண்ணை மூடிக்கொண்டு என்பாட்டில் போக!
 
"தளதள ததும்பும் இளமை பருவமே  
தகதக மின்னும் அழகிய மேனியே 
நறநறவென பல்லைக் கடித்து நின்று   
திருதிருவென 'ஹலோ'வென அழைப்பது ஏனோ ?"
 
"சல்சல் என சலங்கை ஒலிக்க
சிலுசிலு எனக் காற்று வீச
கமகம என முல்லை மணக்க 
தடதடவென என்மனதை தட்டுவது ஏனோ ?"
 
"திக்குத்திக்கு இன நெஞ்சு துடிக்க 
திடுதிடு என என்னுள்ளத்தில் நுழைந்து 
தரதர என்று என்னை இழுத்து 
விக்கிவிக்கி மெதுவாய் சொல்லுவது ஏனோ ?" 
 
"தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி 
சிவசிவக்க கன்னம் வெட்கப் பட்டு 
துடிதுடிக்கும் இதயத்தை தொட்டுப் பார்த்து  
கிளுகிளுப்பு தந்து ஓடிஒழிவது ஏனோ?"
 
"கலகல பேச்சு நெஞ்சை பறிக்க
படபட என இமைகள் கொட்ட  
கிசுகிசு ஒன்றை தொலைபேசியில் சொல்லி 
சரசரவென்று வீட்டுக்குள் செல்லுவது ஏனோ ?"
 
அன்று நடுசாமம் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தேன். புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. என்னுடய மனம் எனோ பதற்றத்திலே இருந்தது. இது காதலா, ஈர்ப்பா எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது தான் என் மனதில் அடித்த முதல் அலை!  கண்ணை மூடினால் வந்து ஒட்டிக் கொள்ளும் தூக்கம் அன்று என்னை திக்கு முக்காடத்தான் செய்தது. என் போர்வைக்குள் வந்து பதுங்கி கொண்டது அன்று சாயங்காலம் பார்த்த முகம். எவளவோ துரத்த முயன்று பார்த்தேன் அது ஏனோ என் இதயத்தோடு ஒட்டிகொண்டது. இது என்ன உணர்வு ஏன் இப்படி என்று புரியாமல் எப்படியோ போராடி, நாளை காலை சந்திப்பேன் என எனக்கே நான் ஆறுதல் கூறி, கடைசியில் தூங்கிவிட்டேன்.
 
காலையில் நான் நண்பனை சந்திக்கப் போகிறேன் என, அவசரம் அவசரமாக தோசை சாப்பிட்டு விட்டு, 8:55 க்கு வீட்டில் இருந்து வெளியே வந்தேன். எங்கள் வீட்டு மல்லிகை வாசம் அன்று அதிகமானது போல் எனக்குத் தோன்றியது. வீட்டு முன் நின்ற ரோசா மரம் அதீத அழகுடன் தென்பட்டது. மெல்ல பக்கத்து வீடடை எட்டி பார்த்தேன். அவள் வெளியே முற்றத்து தோட்டத்தில், வெளியே போக ஆயுத்தமாக  நின்றாள். என்னைக் கண்டதும், ' அம்மா போய்விட்டு வாறன்' என்று  தன் விழிகளால் எதேச்சையாக என்னை நோக்கியவாறு வீதிக்கு வந்தாள். நானும் அவள் பின்னால் பேருந்து தரிப்பு நிலையத்துக்கு போனேன். அந்த பேருந்தில் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தோம். கண்கள் இரண்டும் மௌனமாக பேசின. கைகள் மெல்ல இணைந்தன, வாய்கள் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின் அவள் கலகலவென்று பேசத் தொடங்கினாள். அது தான் என் முதல் காதல் அனுபவம்! 
 
காதல் என்பது காற்றை போல, அதை சுவாசிக்காமல் இருக்க முடியாது. இன்று அதைத்தான் சுவாசித்தேன். அவளும் என்னுடன் சேர்ந்து சுவாசித்தாள். ஆனால், அது அனைவருக்கும் வெற்றிகரமாக அமைகிறதா? என்பது தான் பெரிய கேள்வி. முதல் காதலில் வெல்பவன், அந்த காதலை மட்டும்  தான் வெற்றிப் பெறுகிறான். முதல் காதலில் தோற்றவன் தனது வாழ்க்கையிலேயே வெற்றிப் பெறுகிறான் என்று யாரோ கூறியது இப்ப, காலம் கடந்து ஞாபகம் வருகிறது. ஆமாம், முதல் காதல் என்பது தொப்புள்கொடி போல அறுத்து எறிந்தாலும் கூட, தொப்புள் மரணிக்கும் வரை மறையாது. அது தான் அவளை மறக்க முடியவில்லை? 
 
அவளின் பெயர் சுகந்தினி, கொழும்பில் பிறந்து வளர்ந்தவர், அந்த நேர நாகரிக உடையில், சீகை அலங்காரத்தில் உச்சியில் இருந்தாள். குறுகிய கூந்தல் மற்றும் கொஞ்சம் பருமன் கூட, நியாயமான கொஞ்சம் சிவப்பு நிறம். ஆனால் “குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள்வேலி”  போல, தீண்டப்படாத குமரிப் பெண்ணின் கூந்தலைப்போல் எவராலும் தாண்டப்படாத அரிய முள்வேலி போல அவள் இருந்தாள். அது தான் எனக்கு அவளில் பிடித்துக் கொண்ட அவளின் இயல்பு, அது மட்டும் அல்ல, ஓயாது கலகலப்பாக, என்றும் சிரித்த முகத்துடன், பகிடிகளும் விட்டு கதைக்கக் கூடியவள். ஒரு நாள் "woman இல் முன்னாள் இருப்பது cow இல் பின்னால் இருக்குது அது என்ன என்று கேட்டாள்?" மேலாக பார்க்கும் பொழுது வேறு ஒன்றின் நினைவு வந்தாலும், ஆங்கிலத்தில் woman [பெண்], cow [பசு] என்று சொன்னதால் நான் உடனடியாக 'W' என்றேன். நான் வென்றுவிட்டதால், 
 
'சினம் கொண்டு முறைத்தாள், 
கொஞ்சம் விலத்தி இருந்தாள், 
வெறுப்பாய் என்னைப் பார்த்தாள், 
நறுக்காய் பின் சிரித்தாள்'        
 
அந்த அவளின் புரியாத புதிர் தான் எனக்கு உண்மையில் பிடித்த அழகு. எது எப்படியாகினும், நெருங்கி பழகும் பொழுது நான் கண்ட அவளின் பருமன், என்னை விட ஒரு அங்குல உயரம் எனக்கு கொஞ்சம் சஞ்சலமும் கொடுத்தது.
 
ஆண் பெண் நண்பர்களாக இருப்பதும், கணவன் மனைவியாக இருப்பதும் ஒன்றல்ல, கூடி வாழும் பொழுது ஜோடி பொருத்தம் ஒரு முக்கியம், நான் இங்கு சாதக, சாதி பொருத்தங்களை கூறவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. செந்தாமரைப் பூப்போன்று சிவப்பு கால்களுக்கு வெள்ளி கொலுசு போல, பரந்து விரிந்த செவிக்கு தங்க தோடு போல, உயர்ந்த கூரான மூக்கிற்கு சிவப்பு கல் மூக்குத்தி போல, கருங்கூந்தலிலே தஞ்சமிட்டுள்ள மல்லிகைப்பூ போல, அப்படியான ஒரு அழகு பொருத்தத்தைத்தான் நான் இங்கு கூறுகிறேன். அது தான் என்னை மெல்ல மெல்ல அவளிடம் இருந்து விலக வைத்தது. அதை அவளும் உணர்ந்தாள். ஆனால் அந்த நட்பு, முதல் காதல் போர்வைக்குள் மறைந்து இருந்ததே தவிர, விலகவில்லை என்பதை, ஒரு கிழமைக்கு முன்பு, நாம் விடுதலையில் கொழும்பு சென்று, கடற்கரைக்கு பிள்ளைகளுடன் போனபொழுது அறிந்துகொண்டேன். 
 
அவள், அவளேதான் கடற்கரையின் ஒரு ஓரத்தில் இருந்த வாங்கில், கடல் அலைகளை பார்த்துக் கொண்டு தனிய இருந்தாள். 'ஹலோ' என்று சொல்ல என் மனம் துடித்தாலும், நான் அதை நிறுத்தி விட்டேன். சுகந்தினி மேல் கடற்கரை புழுதிகள் படர்ந்து இருந்தாலும், ஐம்பது வயதை நெருங்கி இருந்தாலும் இன்னும் பொலிவு குறையாமல் அப்படியே இருந்தாள். எனினும் நிலவின் கிரணங்களை மேகங்கள் மறைத்து விடுவது போல, நெடு நாட்கள் வாசிக்கப்படாத வீணை போல, எனக்கு அவள் தோன்றினாள். எதோ ஒரு சோகம் என்ற பெரும் கடலில் அவள் மூழ்கி இருப்பதை உணர்ந்தேன். நானும் மனைவியும் போவதை  அவள் எப்படியோ பார்த்துவிட்டாள். இமைகள் வெட்டாமல் அப்படியே கொஞ்ச நேரம் பார்த்தாள். மான் போன்ற விழிகொண்ட அவள், அதே கம்பீரமாக, ஆனால் இப்ப மெலிந்து ஒன்றும் பேசாமல் மனம் ஒடுங்கி இருந்தாள். நான் அவளை நெருங்கவும் இல்லை, குழப்பவும் இல்லை. பொதுவாக அண்ணா என்று தொடங்கி, அத்தான் என்று முடியும் நட்புகளை பார்த்துள்ளேன், ஆனால் என்னுடையது அதற்கு தலைகீழ், ஆமாம் 'கண்டி அண்ணா' என்று முடிந்தது அது! 
 
நான் வெறுத்த அந்த பருமன் இப்ப இல்லை. "என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும் நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசம் சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து." அதாவது, அவள் கூந்தலில் மலர் சூடி இருக்கிறாள். அந்த மலர்களில் இருந்து தேனை உண்ண வண்டுகள் வருகின்றன. அந்த வண்டுகள் தங்கள் சிறகுகளை அடிக்கின்றன. அந்த சிறகில் இருந்து காற்று வருகிறது. அந்த காற்று அவளின் தலை மேல்  உள்ள பூவின் மேல் மோதுகிறது. அதனால் அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது, வளைகிறது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து அவள் இடை நாளடைவில் தேய்ந்தே போயிற்றாம் என்பது போல, அவள் இன்று கொடி இடையாக இருந்தாள்!  நான் மெதுவாக, இடைக்கிடை அவளை பார்த்துக்கொண்டு நகர்ந்தேன்!  "என்ன மெதுவாக, பிள்ளைகள் முன்னுக்கு ஓடிவிட்டார்கள். கெதியாக நடவுங்கள்"  என்ற சத்தம் கேட்காவிட்டால்,  ஒருவேளை நான் அவளை விசாரித்து இருப்பேன். பெருமூச்சுடன் நான் கெதியாக, மனைவியுடன் பிள்ளைகளை நோக்கி நடந்தேன்.
 
முதல் காதல் மட்டுமல்ல சிறு வயதில் ஆசைப்பட்ட  பொம்மை, பள்ளிப் பருவத்தில் விரும்பய சைக்கிள், பல்கலைக்கழகம் படிக்கும் போது ஆசைப்பட்ட உத்தியோகம்  என எதுவெல்லாம் நாம் மிகவும் விரும்பி அது கிடைக்கவில்லையோ அதன் மீதான மோகம் என்றுமே நமக்கு தீராது! மறக்காது! ஆனால் முதல் காதல் தான் ஒருவரை எப்படி காதலிக்க வேண்டும், ஒருவரை எப்படி காதலிக்க கூடாது, காதல் என்றால் என்ன என்பதன் உண்மையான விளக்கத்தை தருகிறது.
 
"கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுத் தளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்.."
 
திருமணச் சடங்கிற்குப் பின்னர், தங்குதடையின்றி இன்பத்தைத் துய்ப்பர் என்கிறது தொல்காப்பியம். ஆனால் கல்கிசை கடற்கரையால் ஹோட்டல் திரும்பி நானும் மனைவியும் ஒன்றாக எம் அறையில் தூங்கினாலும், அழகு தேவதையாக அவள் என்னை அணைத்தபடி முத்தம் கொடுத்தாலும், இன்று என் மனதில், சுகந்தினியின் அந்த சோக முகம் தான் நிறைந்து இருந்தது? இந்த கடற்கரையில் எத்தனை நாட்கள் நானும் சுகந்தினியும் சந்தித்து இருப்போம், அப்ப எல்லாம் அவள் முகம் காலையில் தோன்றும் கதிரொளி போல அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். இன்று ஏன் இப்படி?, அவளுக்கு என்ன நடந்தது? அது தான் மனதை வாட்டிக்கொண்டு இருந்தது. இதே கடற்கரையில் தான் கடைசியாக நானும் அவளும் விலகியது கூட. " உங்களுக்கு என்ன நடந்தது?", மனைவி வராத கோபத்துடன் செல்லமாக அதட்டினாள். சந்தேகத்தோடு நம் வாழ்வில் ஒரு நிமிடம் கூட பொய்யாக நகரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான். ஆகவே சுகந்தினியைப் பற்றி முழுமையாக என் மனைவிக்கு கூறி, இன்று கண்ட கோலத்தையும் கூறினேன். 
 
அவள் மௌனமாக இன்னும் ஒரு முத்தம் தந்தாள், என் கைகளை இறுக பிடித்தாள். "நான் சொன்னதை முழுதும் கேட்டாயா ?, என்னை மன்னித்துவிடு. என் மனதில்  அவளுக்கு என்ன நடந்தது, ஏன் அவள் இந்தக் கோலம்?, அது தான் வாட்டுகிறது, மற்றும்படி நீயே என் தேவதை" என்று படபட என்று சொல்லி முடித்தேன். அவள் என்னையே கொஞ்ச நேரம் பார்த்தாள். " நாளைக்கு நாம் இருவரும் அவளை சந்தித்து பேசினால் என்ன?, அதில் ஒரு தப்பும் இல்லை, ஓகேயா கண்டி அண்ணா" என்று புன்சிரிப்புடன் தன்னையும் என்னையும் சேர்த்து போர்வைக்குள் மறைத்தாள்! 
 
நன்றி  
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 

"காதல் அழிவதில்லை"

1 week 6 days ago

"காதல் அழிவதில்லை"

யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில்  சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்பு நீர்கொழும்பு போன்ற தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்தமை, போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. 


அப்படியான யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், அங்கு தமக்கேயுரிய சமையல் மசாலாக்களின் வாசனை காற்றில் மிதக்க, பாடசாலை மாணவ மாணவிகளின் துடிப்பான வாழ்க்கையின் ஒலிகளுக்கு மத்தியில், யாழோன் என்ற உயர் வகுப்பு மாணவன் வெளிநாடு ஒன்றில் உயர் கல்வி கற்க கனவு கண்டான். அவனது  விருப்பம், ஏக்கம் எல்லாம் அவனை சொந்த ஊரின் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்றது, யாழோனின் கனவுகள் நியமாகி, தனது சொந்த ஊரின் அமைதியான அரவணைப்பிலிருந்து லண்டனின் பரபரப்பான பெருநகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லும் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை. அது மட்டும் அல்ல, அங்கே தனக்கு காதல் மலர்ந்து, கசப்பான நினைவுகளை அது விட்டுவிட்டு வாடிப்போகும் என்றும் அவனுக்கு அப்பொழுது தெரியாது. "காதல் அழிவதில்லை" என்பது தான் அவனின் நினைவாக, கருத்தாக அன்று இருந்தது. 


யாழோனின் கல்வித் திறமையும் இடைவிடாத உறுதியும் அவனுக்கு  லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் புலமைப் பரிசு வழங்கியது. பரபரப்பான பெருநகரமும் அதன் வான் உயரும் கட்டிடங்களும் புதிய வாழ்வின் தொடக்கங்களின் வாக்குறுதிகளும் அவனை வரவேற்றது. லண்டன், கலை, இலக்கியம், பொருளாதாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து கொண்டு இருக்கிற இங்கிலாந்து நாட்டின் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தலைநகரம் ஆகும். பலப்பல இனம், பண்பாடு, மொழி ஆகியன பேசும் மக்கள் சுமார் ஒன்றரைக் கோடி பேர் லண்டனில் வாழ்கிறார்கள். அதில் 125000 க்கும் - 150000 க்கும் மேலான தமிழர்கள் இங்கிலாந்துவில் வாழ்கிறார்கள், அதில் கூடிய தொகையினர் லண்டனில் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, லண்டனை சுற்றி பல மலைகள் சூழ்ந்துள்ளன. லண்டன் நகரத்தை அணைத்தபடியே தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் தேம்ஸ் நதி ஓடுகிறது. போக்குவரத்தை மிக இலகுவாகும் லண்டனின் பாதாள ரெயில் ஐரோப்பாவில் மிகவும் பழமையானதும் நீளமானதும் கூட. ஆகவே அவனுக்கு அங்கு படிப்பதில் மட்டும் அல்ல, தமிழ் பண்பாடும் அங்கு நிறைந்து இருந்தது. 


ஒருமுறை பல்கலைக்கழகத்தின் மாணவ கொண்டாட்டம் ஒன்றில் யாழோனின் பாதை, அமோதினி என்ற இளம் மலையாளப் பெண்ணின் பாதையுடன் குறுக்கிட்டது. அவளும் தொலைதூர தேசத்தில் இருந்து வந்தவள்தான்! கண்ணகி கோவலன் மாதவி வாழ்ந்த, பண்டைய தமிழ் பேசும் மன்னன் சேரனின் பூமி, இன்று அது மலையாளம் பேசும் பூமியாக மாறிவிட்டது. என்றாலும் இன்னும் இலங்கைத் தமிழரின் தோற்றமும் பண்பாடும் அங்கு ஓரளவு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்துப்பூச்சி (moth) யைப் போல யாழோனை இழுத்துச் செல்லும் ஒரு புதிரான வசீகரத்தைக் அவள் கொண்டிருந்தாள். 


யாழோன், அளவான உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு, பொது நிறம், நெற்றியை முத்தமிடும் முடி, கர்ணனின் வில் போல், வளைத்து இணைந்த புருவங்கள், காண்போர் அனைவரையும், குறிப்பாக இளம் பெண்களை கண்டிப்பாக ஈர்க்கும் அளவான கூர்மையான விழிகள், செதுக்கிய மூக்கு, கொஞ்சம் இறுக்கமான, கொஞ்சம் மென்மையான உதடு, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படையான நேர்மையான குணம் கொண்டவன். அதனாலோ என்னவோ அமோதினியும் தன் விழிகளை அவன் மேல் இருந்து எடுக்கவே இல்லை. 


மகிழ்ச்சியான பெண் என்ற பெயரைக் கொண்ட அமோதினியைக்  கண்டதும் அவனுக்கு அவள் மேல் மையல் உண்டாகிவிட்டது. அவன் ஆசை கரை கடந்து போய் அவளைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொள்ள வேண்டு மென்று எண்ணம் கொண்டான். இளம் பெண்ணான அவளும் அவனைக் கண்டவுடன் அவன் மீது மோகம் கொண்டு விட்டாள். அவளை அவன் கூர்ந்து கவனித்தான். அவளும் அவனை ஒரு புரியாத உணர்ச்சியுடன்  நோக்கினாள். அப்படி இருவரின் பார்வைகளும் சந்தித்த போது அவர்களின் உயிரும் உடலும் ஒன்றாய்க் கலந்தது போல் உணர்ந்தார்கள்.


அவள் உள்ளம் பூரித்தாள், மகிழ்ச்சி கொண்டாள். பேரலை போல் வந்த மகிழ்ச்சியில் மூழ்கி வெட்கத்தை நீக்கினாள், இவ்வுலக நினைவுகளே இல்லாமல், எல்லையில்லா இன்பக் கனவினிலே உறைந்து விட்டாள். யாழோனின் திண் தோளை ஆசையோடு கட்டித் தழுவிக் கொண்டு, அவன் இதழில் தேன்பருக சிந்தை கொண்டாள். யாழோனோ தேனில் விழுந்த ஈயினைப் போல், விந்தைமிகு காந்தத்தால் இழுக்கப்படும் இரும்பினைப் போல், ஆசையோடு அவளை ஆறத் தழுவி முத்தமிட முயன்றான், எனினும் இருவரும் கொஞ்சம் தள்ளி நின்றே ஒருவரை ஒருவராவர் தங்கள் கண்ணுக்குள் சிறைவைத்தனர்.


அவர்களின் சந்திப்புகள் அதன்பின் தொடர் ஆரம்பித்து, நெரிசலான விரிவுரை மண்டபங்களில் கண்ணியமான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டது. அவளது சிரிப்பு காற்றில் நடனமாடும் ஒரு மெல்லிசையாக இருந்தது, அவளுடைய கண்கள் ரகசியங்களை புதைத்து வைத்திருந்தன. அவர்களின் ஆரம்ப சந்திப்புகள் வெட்கப் புன்னகை மற்றும் தயக்கமான வார்த்தைகளால் ஆரம்பித்தாலும் ஒவ்வொரு நாளும், அவர்களின் தொடர்பு ஆழமாகி ஆழமாகி, வெறும் அறிமுகத்தின் எல்லைகளைத் தாண்டியது.


சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் என்றால் எந்தக் குறையும் இல்லாத படி, செய்கின்ற அந்த வடிவத்தில், சிறுத்த இடையை, மூங்கில் போன்ற தோள்களை, பார்ப்போரின் மனம் கொள்ளும் புன்னகையை நிலையாக வடித்துப் போகமுடியும். ஆனால் இங்கோ எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று தன் முன் நிற்கும் உயிருள்ள இப்பெண்ணின், அமோதினியின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று அவன் மனதுக்குள் ஏங்கிக் கொண்டான். 


“புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்,"


அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை உடையவள். பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். என் உள்ளத்தைக் கட்டி வைத்திருப்பவள். என் நெஞ்சு அவளைக் கண்டு அல்லாடுகிறது என்று உள்ளத்தில் புலம்பினான். 


"நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்; நிறை அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்..."


அமோதினி, நீயும் தவறிலை. உன்னைத் [லண்டன் பல்கலைக்கழக] தெருவிலே சுதந்திரமாகத் திரிய விட்ட பெற்றோரும் [சுற்றத்தாரும்] தவறுடையவரில்லை. [அந்த காலத்தில்,] மதங்கொண்ட யானையை நீர்த்துறைக்கு விட்டால் முதலில் பறையறைந்து பின்னர் அனுப்புவார்களே அதுபோல் உன்னையும் பறைசாற்றியே செல்ல விடல் வேண்டும் என்று ஆணையிடாத இந் பல்கலைக்கழக அதிகாரிகளே  [இந் நாட்டு மன்னனே] தவறுடையவன் போல அவன் உணர்ந்தான்.


யாழோனும் அமோதினியும்  பல்கலைக்கழகத் பூந் தோட்டத்தின் ஒதுக்குப்புறமான மூலையில் ஒரு பெஞ்சில் அமர்ந்து, மறையும் சூரியனின் மென்மையான ஒளியில் குளித்தனர். அமோதினியின் கை யாழோனின் கையை வருடியது, அவளது அந்த பட்டும்படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வால் அவன் எல்லையற்ற ஒரு உணர்வை அனுபவித்தான். அவர்கள் இருவரும் நெருக்கமாக ஒருவர் மேல் ஒருவர் இறுக்கமாக சாய்ந்தனர், அவர்களின் உதடுகள் ஒரு மென்மையான முத்தத்தில் முதல் முதல் சந்தித்தன, அது ஒருவருக் கொருவர் புரியாத மொழியில் பேசியது. அவர்கள் இருவரும் தங்கள் உணர்ச்சியின் ஆழத்தில் தங்களை இழந்தார்கள்.


யாழோனுக்குத் தெரியாமல், அமோதினி ஆங்கில பையன் ஒருவனுடனும் சில உறவுகளை வைக்க தொடங்கினாள். அவளைப் பொறுத்தவரையில் வாழ்வை எப்படி எப்படி விதம் விதமாக அனுபவிக்க வேண்டுமோ அப்படி அப்படி அனுபவித்து, பின் ஒரு நேரம் நல்ல வசதியான, தன் மனதுக்கு ஏற்ற பையன் கிடைக்கும் பொழுது அவனை நிரந்தரமாக தனக்கு ஏற்றவனாக மாற்றிட வேண்டும் என்பதில் மட்டும் ஆர்வமாக இருந்தாள். அதில் முதல் அவளின் சந்திப்புத் தான் யாழோன். ஆனால் யாழோன், முதல் காதலே இறுதிக்காதலும் என்றும், 'காதல் அழிவதில்லை' என்பதிலும் முழு நம்பிக்கை உள்ளவன். அவன் அமோதினியை முழுதாக நம்பினான். ஏன் அமோதினி கூட  'காதல் அழிவதில்லை' என்று தான் சொல்லுவாள், ஏன் எனறால், தன் உணர்ச்சிகளுக்காக மட்டும் வெவ்வேறு ஆண்களுடன் தற்காலிகமாக பழகுகிறாள்,  பொழுது போக்குகிறாள், அவ்வளவுதான்! காதலுக்காக அல்ல என்பதுதான் அவளின் கொள்கை! காலம் செல்ல, அவளின் நடத்தையில் கொஞ்சம் கொஞ்சமாக யாழோனுக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியது.


ஒருமுறை யாழோன் அவர்களுக்குப் பிடித்தமான ஓட்டலில் அமோதினிக்கு எதிரே அமர்ந்திருந்தான், என்றாலும் ஒரு அமைதியின்மை அங்கு நீடித்தது. அவர்களுக் கிடையில் இப்ப வளர்ந்து வரும் இடைவெளியை, அதன் தூரத்தைப் பற்றி, அவனது குரல் கவலையுடன் அமோதினியிடம் கேட்டது. ஆனால் அமோதினி அதை தந்திரமாக சமாளித்து, அவனின் மடியில் தலை வைத்து படுத்தபடி, அவனுக்கு எம் காதல் அழியாது என்று, ஒரு இனிய முத்தத்துடன் உறுதியளித்தாள். அவளது வார்த்தைகள் என்றென்றும் பொய்யான வாக்குறுதிகள் என்பது அவனுக்கு அந்தநேரம் விளங்கவில்லை.


"நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல அவள் பெண்மை திரண்டு நிற்கிறதே! திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா? என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே!" அவன் வாய் அவளின் உறுதியை நம்பி முணுமுணுத்தது! 


நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறிய போது, யாழோன் மற்றும் அமோதினியின் உணர்ச்சி பூர்வமான காதல் வசந்த காலத்தின் வெம்மையில் ஒரு மென்மையான மலராக மலர்ந்தது. அவர்களின் காதல் நெரிசலான விரிவுரை அரங்குகளில் திருடப்பட்ட பார்வைகளிலும், நிலவொளி வானத்தின் அடியில் கிசுகிசுக்கப்பட்ட உரையாடல்களிலும் வெளிப்பட்டது. அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவழித்த போது, யாழோன் அமோதினியிடம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான். அவளது சிரிப்பு அவன் காதுகளுக்கு இசையாக இருந்தது, அவளது புன்னகை லண்டனின் குளிரை போக்கும் அரவணைப்பாக இருந்தது. ஆனால் அத்தனையும் பொய் என்பதை அவன் மனது நம்பவில்லை.  


ஒரு நாள், யாழோனும் அமோதினியும் இருக்கமாகப் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு, தங்களையே மறந்து ஒரு பூங்காவின் ஓரத்தில் அமைந்து இருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துக் கொண்டு இருந்தார்கள், அவர்களுக்கு தேவைப்பட்டது தனிமை, எங்கே போகிறோம் என்று தெரியவில்லை, அந்தப் பாதையில் ஆள் நடமாற்றம் குறைவு, அந்த மாலை நேரத்தில் அவர்களுக்கு அது தான் தேவைப்பட்டது. அமோதினி எப்போதும் பார்க்க அடக்கமான பொண்ணு, கேரளாவில் பாடசாலை காலத்தில் அடர்த்தியான முடியை இரட்டை பிண்ணல் பிண்ணி ரிபன் கட்டி குனிந்த தலை நிமிராமல் பாடசாலை போனவள் தான், ஆனால் இப்ப குடும்பத்தில் இருந்து தொலை தூரத்தில், எந்த பயமும் மனதில் இல்லாமல், எவனோ ஒருவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தனிமையில் நடக்கும் அளவிற்கு தைரியத்தை கொடுத்துள்ளது காதல், இல்லை, இல்லை, இளமை பாலின்ப விருப்பம், பருவ ஆசை!, ஒரே பல்கலைக்கழகத்தில் இருவரும் கற்றல் நெறியை பயின்றாலும், பார்த்து, கதைத்து சிரித்ததால் அதை காதல் என்று யாழோனும் முழுமையாக நம்ப, இருவரும் இவ்வளவு தூரம் தனிமையைத் தேடி வந்திருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவளின் நிலைப்பாடும் அவனின் நிலைப்பாடும் முரண்பாடானது என்பது அவனுக்குத் தெரியாது. 


நம்முள் இருக்கும் அழியா தன்மை தான் ஆத்மா. காற்று அதை தீண்டாது; தீ அதை சுடாது. இந்த உடல் ஆனது வெறும் சட்டையை போன்றது. நாம் சட்டையை மாற்றுவது போல் ஆன்மாவும் உடலை மாற்றுகிறது. இறுதியில் அது தக்க தருணம் கிடைக்கும் பொழுது அழிவில்லாத ஒரு முத்தியை அடைகிறது, அது போல காதலை சோதித்து சோதித்து, தனக்கு ஏற்ற, ஒத்த காதல் கிடைக்கும் பொழுது அதை அழியவிடாமல் பற்றிக்கொள்வது தான் அவளின் உள்நோக்கம், அவளைப் பொறுத்தவரையில் காதல் ஒரு இனக்கவர்ச்சி, வருக்காலத்தை ஒன்றாக வெற்றிகரமாக அமைக்க ஒன்று சேர வழிவகுக்கும் ஒன்று, எனவே சோதித்து, வயதுக்கு ஏற்ற ஆசையை அனுபவித்து, தெரிந்து எடுப்பதில் தவறு என்ன ? ஆனால் அவன், காதல் என்று ஒன்று முதலில் வந்தவுடனேயே, அது அழிவதில்லை என்று நம்புகிறவன். காதல் புனிதமானது, ஒரு நாளும் நாங்கள் பிரிய மாட்டோம், கடைசி மட்டும் சேர்ந்து வாழ்வோம், உங்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியுமா? என்று மற்றவர்களை  திருப்பி  கேட்பவன்! 


பிறந்த நாள் பரிசு, காதலர்தின பரிசு என்று இருவரும் பரிமாறிக் கொண்டார்கள், கையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்து உதட்டளவில் வந்து நிற்கின்றார்கள், அத்துமீறல் தொடுகைகளும் இருக்கவே செய்தது, எதுவென்ன வென்றாலும் என்றாவது தன் எதிர்காலத்தைப் பற்றி அவள் அவனுடன் கதைத்தது உண்டா? இருக்கவே இருக்காது, அன்று, அந்த தருணம் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மட்டுமே யோசிப்பாள் அவள், அது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம் 


அமோதினி மெல்ல மெல்ல யாழோனிடம் தந்திரமாக விலகத் தொடங்கினாள். அவள் யாழோனை சந்திக்காததற்கு சாக்குப்போக்கு சொன்னாள், அவளது பொய்கள் ஒவ்வொரு நாளிலும் மேலும் விரிவடைந்தன. யாழோனின் சந்தேகங்களும் அதிகரித்தன, ஆனால் அவர்களின் காதல் அனைத்தையும் வெல்லும் என்ற நம்பிக்கையில் அவன் இன்னும் அவளுடன் ஒட்டிக் கொண்டே இருந்தான், அவனின்  பலவீனமான காதல் இதயத்தில் தாக்கத் தயாராக இருக்கும் அமோதினி என்ற குத்துவிளக்கை அறியும் பக்குவத்தில் அவன் இருக்கவில்லை. அவன் இன்னும் "காதல் அழிவதில்லை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறான்! 


என்றாலும் அவன் லண்டன் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவனது இதயம் சோகத்தால் கனத்தது, யாழோன் இனி ஒருபோதும் அன்பின் கொடூரமான அரவணைப்பிற்கு சிக்க மாட்டேன் என்று தனக்குத்தானே சபதம் செய்தான். பேராசை மற்றும் தன்னல லட்சியத்தால் நுகரப்படும் இந்த நவீன உலகில், காதல் என்பதும் ஒரு வியாபாரம் தான் என்ற  கசப்பான உண்மையை அவன் கற்றுக் கொண்டான்!


அதனால், கனத்த இதயத்துடனும், சோர்வுற்ற உள்ளத்துடனும், யாழோன் லண்டன் தெருக்களில் இருந்து பிரியா விடை பெற்றான், ஒரு காலத்தில் பிரகாசமாக எரிந்த காதலின் சிதைந்த துண்டுகளை தன்னுடன் சுமந்தான். ஏனென்றால், அவர்களது உடைந்த காதலின் சாம்பலில், காதல் மங்கினாலும், அதன் உடனடி அரவணைப்பின் நினைவுகள் நெஞ்சில் அழியாமல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால்! 


காலப்போக்கில் அமோதினி மீதான அவனது காதல் வெளி உலகத்துக்கு மங்கிவிட்டாலும், அவர்களின் பகிர்ந்த காதல் பயணத்திலிருந்து அவன் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள்  என்றென்றும் அவனது இதயத்தில் அழியாமல் பதிந்து இருந்தது!

ஆமாம் அவனது  நினைவுகளின் திரையில், சிரிப்பு மற்றும் கண்ணீருக்கு மத்தியில், அமோதினி மேல் அவன் கொண்ட காதல் மற்றும் அனுபவம் அதன் அனைத்து சிக்கலான தன்மையிலும், உண்மையில் ஒருபோதும் இறக்காமல், அவனுக்கு, அவனின் வருங்கால வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக இருந்து, மீண்டும் ஒரு பொய்யான சிக்கலான நிலைக்குள் மாட்டுப்படாமல் இருக்க, சரியான வழியைக் காட்டிக்கொண்டு இருந்தது!


காதல் நம் சமூகத்திற்குப் புதிதல்ல. அது சங்க இலக்கியங்கள் முதல் தற்போதைய நவீன இலக்கியங்கள் வரை காதலைப் பற்றி எழுதாத இலக்கியவாதிகளே இல்லை. ஆனால் சமூகம் அதை எப்படி ஏற்று நடந்து கொள்கிறது என்பதில் தான் சிக்கல்கள் உருவாகிறது. காதலைப் புரிந்துகொள்வோம்! சிறந்து வாழ்வோம்!! 


நன்றி 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை]

1 week 6 days ago

"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை]

 
இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன்.  
அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வைத்த அன்புக்கு அடையாளமாக நான் பலவற்றை சொல்லலாம் என்றாலும், நான் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.

 
நான் உடுப்புகளை, அதிகமாக வார இறுதியில் தோய்த்து [கழுவி] நூல் கொடியில் காய்வதற்காக போடுவது வழமை. என்றாலும் இது வார இறுதி என்பதால், சிலவேளை வெளியே நடக்கப் போய்விடுவேன். அப்படியான ஒரு நாள் திடீரென மழை தூர தொடங்கிவிட்டது. கலைமதி, என் உடுப்புகளுடன், அவர்களின் உடுப்புகளும் ஈரமாவதை கண்டார். அவருக்கு ஒரே பதற்றம். என்ன செய்வது என்று புரியவில்லை. அவருக்கு இரண்டு அல்லது இரண்டரை வயது இருக்கும். தாயிடம் ஓடினார். மழையில் என் உடுப்புக்கள் நனைவதை சுட்டிக்காட்டி, அதை முதலில் எடுக்கும் படி அடம் பிடித்தார். இன்றும், அவரை பற்றி எண்ணும்  பொழுது,  நிழலாக ஆடும் நினைவுகளாக அண்ணி என்னிடம் அதைச் சொல்லுவார். 


எனக்கும் மறுமொழி வந்து, வேலைகளுக்கு விண்ணப்பித்து, முதல் நிரந்தர வேலையும் இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியலாளர் விரிவுரையாளராக கொழும்பிலேயே கிடைத்தது. ஆகவே அண்ணாவின் வீட்டிலேயே தொடர்ந்து தங்கினேன். 
இப்ப வேலை முடிந்து, வீடுவந்தால் அவருடனும், மற்றும் அண்ணாவின் மூத்த பிள்ளைகளுடனுமே பொழுது போக்கு. நேரம் போவதே தெரியாது. அவருக்கு மூன்று வயது தாண்ட, எனக்கும் அரசாங்க கல்வி உதவி தொகை [Scholarship] கிடைத்து ஒரு ஆண்டு மேல் படிப்பிற்கு ஜப்பான் செல்ல வேண்டி வந்தது. அவரை விட்டு பிரிய மனமே இல்லை. அப்படியே அவருக்கும். என்றாலும், நான் விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கி வர விமானத்தில் போவதாக கூறி, ஒருவாறு, அவரும் கட்டி பிடித்து முத்தம் தந்து விடை தந்தார். 


அப்பொழுது நான் யோசிக்கவில்லை, இது தான் அவரின் கடைசி முத்தம் என்று. இன்றும் என் மனதில், நிழலாக ஆடும் நினைவுகளாக அது இன்றுவரை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. 


நானும் எல்லோரிடமும் விடைபெற்று, முதல் முறையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமனநிலையத்தின் ஊடாக பயணம் செய்தேன். என்றாலும் விமானத்தில் அயர்ந்து தூங்கும் பொழுது எல்லாம் அவரின் விடை தந்த முத்தம் தான் நிழலாக ஆடும்!!


கலித்தொகை 80 இந்த சில அடிகள் என் ஞாபகத்துக்கு வந்தன. 


"கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்  
தளர் நடை காண்டல் இனிது!"
"ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின்
தே மொழி கேட்டல் இனிது!"
"ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது!"


ஆமாம் நீ அணிந்திருக்கும் ஒளி திகழும் மணியொலி கேட்கும்படிச் சாய்ந்து சாய்ந்து தளர் நடை போட்டு நீ செல்வதைக் காணும்போது எனக்கு இனிமையாக இருக்கிறது. என் ஐயனே! அன்பு ததும்ப நீ பார்க்கிறாய். "அத்தா அத்தா" என்று அழைக்கிறாய். இந்தத் தேன் மொழியைக் கேட்க இன்பமாக இருக்கிறது. என் ஐயனே வருக! பிறை  நிலாவே என் ஐயனிடம் வருக! என்று நான் அழைத்து உனக்கு அம்புலி காட்டுவது இனிமையாக இருக்கிறது. 


என் செல்லக் குழந்தை கலைமதியை வர்ணிக்க கலித்தொகை போதாது! என்றாலும் அவளின் குறு குறு நடை நடந்து மழலை மொழி பேசி இதயம் கவரும் அழகும் அம்புலிகாட்டி நிலா சோறு  ஊட்டிய நினைவுகளும் என் மனதில் இன்னும் புதைந்து இருப்பதை காண்கிறேன்!  


"காற்று வீசுது காகம் பறக்குது 
காலைப் பொழுது இருளாய் மாறுது 
காடைக் கோழி எட்டிப் பார்க்குது
காவி வருகிறேன் அன்னம் உனக்கு!"


என நிலாவைக் காட்டி கதை சொல்லி, சோறு தீத்தியது 


"சின்ன பூவே சிங்கார பூவே  
சிஞ்சிதம் காதில் தேனாய் விழ 
சித்திரம் பேசும் கண்ணும் ஓய  
சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ ?"


என துயிலவைத்தது எல்லாம் எப்படி மறக்கமுடியும்? 


எதோ ஜப்பானில் படிப்புடன் காலம் உருள, ஒரு ஆண்டு நிறைவுற்றதே தெரியாமல் போய்விட்டது. அவசரம் அவசரமாக அவளுக்கு சில மின்னணு பொருட்களும் பொம்மைகளும், உடுப்புகளும் மற்றவர்களுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டு டோக்கியோவில் இருந்து இலங்கை திரும்பினேன். கட்டாயம் இன்னும் ஒரு பெரிய முத்தம் கிடைக்கும் என்ற பெருமிதத்தில்!


ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் என்னை அக்கா குடும்பமே வரவேற்றது. அவர்கள் கண்கள் ஈரமாக இருந்தது. அக்கா மெல்ல என் காதில், அண்ணா குடும்பம், ஒரு திருமண கொண்டாட்டத்திற்காக இடைக்காட்டுக்கு போனதாகவும், நேற்று அங்கு எல்லோரும் கல்யாண விழாவுக்கு தேவையான முன் ஏற்பாட்டு அமளியில் இருக்கும் பொழுது, அது மாரி காலம் என்பதால் கிணறு முட்டி இருந்ததாகவும், கலைமதி அவர்களிடம் இருந்து நழுவி, தனிய வீட்டிற்கு பின் பக்கம் போய், தவறுதலாக யாரும் காணாமல்  கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என கூறினார்.  


எனக்கு, என் மனதில் இடி முழங்கிய மாதிரி இருந்தது. அந்த கடைசி முத்தம், அவளின் குறும்புகள், அவளின் மழலை பேச்சு, என் நெஞ்சில் படுக்கும் அழகு, சித்தப்பா என்று பின்னால் ஓடிவரும் காட்சி .... எல்லாமே நிழலாக ஒன்றின் பின் ஒன்றாக வந்தவண்ணம் இருந்தன. அந்த நாலுவயது குழந்தை என்னை மீண்டும் காணாமலே கண் மூடிவிட்டது!! 


"மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே  
மடியில் தவழ்ந்து நெஞ்சை கவர்ந்தவளே 
மவுனமாய் இன்று உறங்குவது ஏன் ?
மகிழ்வு தரும் முத்தங்கள் எங்கே ?"


"மயக்கம் தரும் அழகு அழிந்ததோ ?
மனதை கவரும் குறும்பு மறைந்ததோ ?  
மரண தேவதைக்கு இரக்கம் இல்லையோ?
மதியென்று இனி யாரை கூப்பிடுவேன்!" 


முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டியவளே,  எல்லாமே இனி நிழலாக ஆடும் நினைவுகள் தானோ ?? 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

"எனக்காக பிறந்தவள்"

2 weeks ago

"எனக்காக பிறந்தவள்"


"இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் 
குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் 
திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால்  
வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால் 
அரம்பை தேசவில்லும் விரும்பி ஆசை சொல்லும் புருவத்தாள்
கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள்
துடிக்குள்அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன இடையினாள்
துட்டன் அரண்மனைக்குக் கட்டும் கதலிவாழைத் தொடையினாள்
[ குற்றால குறவஞ்சியில் நாயகியின் வர்ணனை]


நான் வேலை செய்யும் பணிமனையில், எனக்கு ஒரு உதவியாளராக  ஒரு பெண் நாளை தனது பதவியை ஏற்பார் என்றும், அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி என்றும், இது அவரின் முதல் வேலை என்றும், ஆகவே அவருக்கு வேலையை பற்றிய அறிமுகமும், பயிற்சியும் வேண்டும் என்றும், அதற்கான ஒழுங்கை செய்யும் படி எனக்கு அமைச்சில் இருந்து கடிதம் வந்து இருந்தது. அதில் அவரின் படம், மற்றும் சில விபரங்களும் இருந்தன. வழமையாக எனக்கு கீழ் வேலை பார்க்கும் அணி தலைவரிடம் கொடுத்துவிடுவேன். நான் அதில் நேரடியாக பங்குபற்றுவதில்லை. ஆனால், அவளின் படம், வயது, படிப்பு 
எனோ என்னை இம்முறை கவர்ந்து விட்டது. 


நான் பொறியியலாளர் என்றாலும், பொழுது போக்காக இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவன் என்பதால், அவளின் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க, குற்றாலக் குறவஞ்சி ஞாபகம் தான் வந்தது. என் கற்பனையில், எனக்காக ஒருவள் கட்டாயம் பிறந்திருப்பாள், அவள் எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்தேனோ, அதைவிட, குற்றாலக் குறவஞ்சியை விட,  அவள் உயர்வாக தெரிந்தாள். 'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி' யாய் .. 'பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்' என இருந்தாள்!


முதல் முதலாக அன்று இரவு முழுவது அந்த, அவளின் படம் தான் கண்ணில் வந்து கொண்டே இருந்தது. இது என்ன கொடுமை ? எனக்கு புரியாத ஒரு உணர்வு ? அது என்ன ? அவள் யார் ? அந்த படமும், சிறு குறிப்பும் ஒருவரை அறிய கட்டாயம் காணாது, அப்படி என்றால் ஏன் என் மனம் அதை நம்பவில்லை,  'அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்' அப்படி ஒன்றும் இன்னும் நடை பெறவில்லையே, மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் உறங்க முயன்றேன். 

"உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து , 
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் 
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,"


புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே; கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு; அவற்றுள் ஒன்று துயர் தரும் மாலைப் பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்தது போல, என்னை திடீரென வாட்டும் இந்த எண்ணமும் மறையட்டும் என்று போர்வையை இறுக மூடிக்கொண்டு கொஞ்சம் அயர்ந்து தூங்கினேன். 


"சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப,
அருள் புரி நெஞ்சம் உய்த்தர 
இருள் பொர நின்ற இரவினானே." 


சிறு கண்களை உடைய மதம் கொண்ட யானை பற்றி பொருட் படுத்தாது, பூ மாலை அணிந்த அன்பு உள்ளம் உடையவளே, எப்படி நீ என்னை காண இந்த கரும் இருட்டில் வந்தாய்? என கேட்டபடி, ஆனால், திடீரென அவள் எதிரே வந்துநின்றதால், எனக்கு கைகால் பதறி. மேலும் பேசுவதற்குச் சொற்கள்  வராமற்போகத்தான் தெரிந்தது இது கனவென்று, எனக்கே என் மேல் கோபம் கோபமாக வந்தது. நேரத்தை பார்த்தேன் காலை ஆறு தாண்டி விட்டது. 


அவசரம் அவசரமாக, காலைக்கடன் முடித்து, நேற்று வாங்கி மிகுதியாக இருந்த இரண்டு பாண் துண்டுகளை வாழைப் பழத்துடன் அருந்தி, சுடச் சுட ஒரு காபி குடித்துவிட்டு, என்னிடம் இருந்த உடுப்புகளில், சிறந்த ஒன்றை தெரிந்த்தெடுத்து கம்பீரமாக பணிமனைக்கு என் மோட்டார்வண்டியில்  கொஞ்சம் முந்தியே சென்றேன்.


"இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?"


சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ என்று அவளை வரவேற்று சொல்ல வேண்டும் போல் இருந்தாலும், அவளுக்கு எப்படி என்னை தெரியும், என் உருவமோ, வயதோ, படிப்போ அவளுக்கு தெரியாதே ! அவள் என்னையோ, என் படத்தையோ பார்த்தது இல்லையே ? அவளுக்கு ஆண் நண்பர் இருக்க இல்லையா, அது கூட எனக்கு தெரியாதே? நான் என்னையே நொந்தேன். என்றாலும் என் நெஞ்சு அவள் எனக்காக பிறந்தவள் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது.


"சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ"


கண்களில் இருந்து வெளிப்படுகின்ற ஒளி இரண்டும் சூரிய கதிர்கள் போலும், குளிர்ந்த நிலாவொளி போலும் ஒளிர்கிறதே! தூய்மையான, கருமையான வானம் போலே வட்ட வடிவில் அழகிய கருமையான கண் விழிகளுடன் அவள் அன்ன நடை நடந்து, புது இடம், புது மனிதர்  என்பதால் அச்சம், நாணம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் சாதாரணமாக எமது பணிமனையின் வரவேற்பில் காத்து நின்றாள். எதோ அவர்களுடன் கதைப்பதும், அவர்கள் என் அறையை காட்டுவதும் எனக்கு தெரிந்தது. என்றாலும் ஏதும் தெரியாதது போல், என் கோப்புகளை எடுத்து, அதில் மூழ்கி இருப்பது போல இருந்தேன். என்றாலும் கண் என்னை ஏமாற்றிக்கொண்டே இருந்தது.  


"மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின்
சாயர் கிடைந்து தங்கான் அடையவும்

அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து
நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும்"  


கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று விட்டனவோ?. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறந்தனவோ? என மனதில் என்னை அறியாமலே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தன. 


வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப,
கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட"


மூங்கில் போல் திரண்டிருக்கும் தோளினையும். மணத்தால் வெறியூட்டும், ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட, வளர்ந்த கூந்தலையும்,  மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும் . மயில் போன்ற சாயலையும், நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும், கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் தோன்றித் தோன்றாத, கண நேரத்தில் யாதென்றே தெரியாத, அந்த மெல்லிய இடையாளை கண்கள் நாடி சென்றன   
 

என் கண் கோப்புக்குள் இருந்ததால், போலும் வரவேற்பில் சிறிது நேரம் காத்திருக்க சொல்லி இருக்கவேண்டும். அவள் எம் பணிமனைக்கு முன்னால் இருந்த தோப்புக்குள் மேய போய்விட்டாள். நான் வண்டு என்றால் அங்கு போயிருப்பேன். என்ன செய்ய ? என்ன கொடுமை? நானும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் ? இதைத்தான் விதி என்பதோ ? யான் அறியேன் பராபரமே!


என் ஒரு ஊழியர் உங்களுக்கு ஒரு கடிதம் என்று அந்த நேரம் கொண்டுவந்து தந்தார். அது அம்மாவின் கடிதம். ஒவ்வொரு முறையும் யாரோ ஒரு பெண் பற்றி, இப்ப கொஞ்ச நாளாக வரும். மகனே பார்த்து சொல்லு என்று. அத்துடன் ஒரு புலம்பலும் இருக்கும், எனக்கும் வயது போகிறது. இம்முறையானது சரி என்று சொல்லாயோ என்று ஒரு அதட்டலுடன்.  சரி அதை அவள் வரும் மட்டும் பார்ப்போம் என்று அதை திறந்தேன். என்ன ஆச்சரியம்  அதற்குள் இருந்தது அவளின் இரு படங்களே! அவள் குடும்பத்தை பற்றிய சிறு குறிப்புடன், அவள் பல்கலைக்கழகம் முடித்து, இப்ப வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள் என்றும் அதில்   இருந்தது. அது வாசித்து முடிய, அவளும், என் ஒரு ஊழியர் சகிதம் உள்ளே வர சரியாக இருந்தது. நான் விதியை, அதிர்ஷ்டத்தை நம்புபவன் அல்ல. என்றாலும் அவள் வருகையும், அம்மாவின் கடிதமும், அதில் அவளின் படமும் எனோ ஒன்றாக அமைந்து விட்டது.  


அவள் வந்து அமர்ந்ததும், என் ஊழியர் தன வேலைக்கு திரும்பிவிட்டார்.  நான் அமைதியாக அவளிடம் சிலகேள்விகளை கேட்டு, எம் வேலைகளைப் பற்றியும் அதில் அவளின் பங்கு பற்றியும் தெளிவு படுத்தினேன். அவளும் ஆவலாக கேட்டது மட்டும் அல்ல, பல கேள்விகளும் கேட்டு மேல் அதிகமாக அறிந்தாள். அது வரவேற்கத் தக்க ஒரு நடத்தையாக இருந்தது. பிறகு பணிமனையை சுற்றி காட்ட  மற்றும் சக ஊழியர்களை அவளுக்கு அறிமுகப்படுத்த என் அணித்தலைவருடன் அனுப்பவேண்டியதே மிகுதி, என்றாலும் அதற்கு இடையில் சிறு ஓய்வு எடுத்து, அவளுக்கு காப்பி, பிஸ்கட் பகிர்ந்து நானும் அருந்தினேன். 


அந்த இடைவெளியில் அவளின் அம்மா அப்பா பற்றி, முன்னமே அம்மாவின் கடித்ததால் அறிந்து இருந்ததால், எதோ அவர்களை முன்னமே தெரிந்தது போல் சில கேள்விகள் கேட்டேன். அவள் திடுக்கிட்டே விட்டாள். அந்த நேரம் பார்த்து, அம்மாவின் கடிதத்தை எடுத்து, அவளின் படத்தை வெளியே எடுத்தேன். தன் படம் என்று அறிந்துவிட்டாள். நானும் விபரமாக அம்மாவின் கடிதத்தை கூறினேன். அவள் கண்களில் எங்கிருந்தோ ஒரு ஒளி பிரகாசித்தது. கூடவே நாணமும் அவளை கவ்வியதை கண்டேன். அது அவளின் சம்மதத்தின் அறிகுறி. இனி கட்டாயம் அவள் எனக்காக பிறந்தவளே! என் உள்ளம் எதோ ஒரு மகிழ்ச்சியில் திளைத்தது. அவளை பார்த்தேன், அவள் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது !!  


"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]  
 

"சத்தம் போடாதே"

2 weeks ago

"சத்தம் போடாதே"

இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer]  எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம் 


என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்க்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன்,  ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது!


ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை!


1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து  பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும்  பின்பு தான் தெரிந்தது


ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும்  


மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம் . எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக  அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம்  வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்!


சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு கூறிய காதல் மொழிகள் தான், என் மனைவியின் அழகு பற்றி எண்ணும் பொழுது வரும். அது எனோ எனக்கு தெரியாது. அதில் உள்ள தமிழின் சிறப்பாக கூட இருக்கலாம் அல்லது அதைவிட அவளின் அழகு மேன்மையாக இருக்கலாம்


"மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,"


குற்றம் இல்லாத [24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ... எனக்கே என்றும் புரியவில்லை. ஆனால் அது இப்ப முக்கியம் இல்லை, ஆமாம்  அவள்  உடலில் மட்டும் அழகு அல்ல, அறிவிலும் அழகானவள். அது தான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவள் ஒருவாறு மெதுவாக கதைகள் சொல்லி, காரணம் நாம் சாதாரணமாக கதைப்பது தமிழில் தான். எனவே காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்! 


அவர்கள் தூங்கிய கையோடு, தான்  முன்பு  வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக  மாற்றி அமைத்து, ஓ!  அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! , நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக , கொண்டாட்டம் முடியும் வரை இருந்தாலும், நாம் இருவரும் அருகில் அருகில் இருந்தது எமக்கு ஒரு சங்க பாடலையும் [அகநானுறு  136] நினைவூட்டி சென்றது.


இவளை நன்கொடையாக வழங்கி [சத்தம் போடாதே என கட்டளையிட்டு ஒரு அறையில் இருட்டில் அடைத்து]  , ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில் (இந்த பிறந்தநாள் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்.. ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு ! அவள்  நெற்றி இப்படி வேர்க்குதே?  கொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி [ஒரு சாட்டாக அதை என் கையில் எடுத்து], அவள் அழகை பார்க்கும் ஆவலுடன், ஆடையை திறவாய் எனச் சொல்லி, ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை நான் கவர. அய்யோ [அலற முடியாது, 'சத்தம் போடாதே' தடுக்கிறதே என அவள் முழிக்க] உறையில் இருந்து உருவிய வாளைப் போல, அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். [பிள்ளைகள் ஒரு பக்கம், தூங்கி இருந்தாலும், இயல்பாக பெண்களில் எழும்] வெட்கப்பட்டாள் (ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா -ன்னு இறைஞ்சுகிறாள் [ஆனால் சத்தம் வராமலே ?]; வண்டுகள் மொய்க்கும் … ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, மறைச்சிக்கிட்டு வெட்கப்படுகிறார்   


"தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே."


1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. இவை 'சத்தம் போடாதே. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே '  நிறைவேறிக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.! 


என் கதை வாசிப்பவர்களுக்கு என் ஒரு வேண்டுகோள் 

தயவு செய்து இந்த கதை பற்றி 

'சத்தம் போடாதே!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]

2 weeks 1 day ago
"மாற்றம்"
[யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]
 
 
துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார்.
 
 
குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தார். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான்.
 
 
குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை  [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான். 
 
 
குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான். 
 
 
ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?  
 
 
மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.  
 
 
சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்! 
 
 
ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்! 
 
 
புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
 
 
குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர். 
 
 
"இருஇனம் வாழும் ஒரு நாட்டில் 
இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி
இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி
இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " 
 
"இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி 
இணக்கம் கண்டு இதயம் பரிமாறி 
இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு 
இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! "
 
 
இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது.
 
 
வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது. 
 
 
ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள்.
 
 
'සිහිනෙන් වගේ
ඇවිදින් ආයෙත්
සැගවී හිටියේ කොහෙදෝ?
මදකින්  පෙනී නොපෙනී ගියේ
මේ ආදරේ හැටිදෝ  ?'
 
'නෙත සනසනා
නුඹගේ සිනා
මා රැය පුරා එය සිහි කලා
නිදි දෙවු දුවත්
අද නෑ ඇවිත්
ඈතින් ඉදන් සරදම් කලා.'.
 
'නෙතු වෙහෙසිලා 
දහවල  පුරා
නුඹ සොය සොයා සිත දුර ගියා 
මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'  
 
 
குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான்.
 
 
"மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ?
எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ?
திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்?
உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?"
 
"சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம்
இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன் 
இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்? 
தூர விலகி கிண்டல் செய்கிறாள்?."
 
"பகலில் கண்கள் சோர்வு அடையுதே 
இதயம் அலைந்து உன்னைத் தேடுதே! 
கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது?
கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?"
 
 
குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான்.
 
 
பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது. 
 
 
"மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ
என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?"
 
"பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ
இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ
தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?"
 
 
ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள்.
 
 
ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன.
 
 
அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது.
 
 
யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & வலிமை கொடுத்தது.  
 
 
"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே 
உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் 
எங்கே பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, 
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!"
 
[கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா]
 
 
நன்றி 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

 "அன்பின் வெகுமதி"

2 weeks 1 day ago

 "அன்பின் வெகுமதி"


இலங்கை திருகோணமலை மூன்று மலைகள் சூழ்ந்த வளம் மிக்க திரிகோணம் எனப் பெயர் பெற்ற இயற்கையான துறைமுகம் கொண்ட, பண்டைய நூல்கள் சிலவற்றில்  'கோகண்ண' எனவும் [தீபவம்சம், மகாவம்சம்], திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் சில தேவாரப் பாடல்களில் 'கோணமாமலை' ["குரைகட லோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே"] எனவும் அழைக்கப்பட்ட இடம் ஆகும். இந்த அழகிய கடற்கரை நகரத்தில், அடர்ந்த நீல நிறமுடைய அலைகள் தங்கக் கடற் கரை மேல் நடனமாடியபோது, அதன் ஆழத்தைத் தழுவத் துணிந்தவன் போல், ஆனால் பணிவான மீனவனாக ரவி, தன் சிறிய படகில் இருந்தபடி கடல் அன்னையைத் இரசித்துக்கொண்டு, புத்தி கூர்மையும் உடல் வலிமையும் ஒருங்கே பெற்ற, சூரியன் தினம் முத்தமிட்ட  முறுக்கேறிய தோல் மற்றும் நீலக்கல் வானத்தை பிரதிபலிக்கும் கண்களுடன், அவன் அசைக்க முடியாத ஆர்வத்துடன் தனது அன்றைய மீன் பிடிப் பயணத்தை தொடங்கினான்.  


அவன் எண்ணம் எல்லாம் இன்று, வழமைக்கு மாறாக, தான் பிடிக்கப் போகும் மீன்களைப் பற்றி இல்லாமல், அவன் கடந்து வந்த அந்த சந்தையின் ஒரு மூலையில் இருந்த உள்ளூர் கைவினைஞர் ஒருவளின் மட்பாண்ட கடைப் பக்கமே இருந்தது. பட்டை தீட்டப்பட்ட புருவம், கூரிய கண்கள், ஆண்மைக்கே உரிய மீசை, முரட்டுத்தனமான அவனுடைய அதரம், அவனைப்போல அடங்காத அவன் சிகை, அவன் முகத்தில் எப்போதும் ஒரு திமிர் இருக்கும். ஆனால் இன்று அந்த திமிரைக் காணவில்லை. 


அமரா, கண்ணை உறுத்தாத அழகு, மாநிறதேகம், வில் போன்ற புருவம், மிரட்சியான கண்கள், மொத்தத்தில் அவள் ஒரு அமைதி பூங்கா என்றாலும் தன் கண்ணுக்குள் கடல் ஆழத்தின் மர்மங்கள் போல, என்னென்னவோ எல்லாம் வைத்திருந்தாள். அவள் களிமண்ணை நுட்பமான தலைசிறந்த படைப்புகளாக வடிவமைத்ததால், ஒவ்வொன்றும் அதன் கதையைச் சொல்லாமல் சொல்கிறது. சந்தையின் சலசலப்புக்கு நடுவே, கரைக்கு எதிரான அலைகளின் தாள முழக்கத்தில் அவள் சிலவேளை கவிதைகளும் எழுதி, அதையும் சிறு புத்தகமாக பார்வைக்கு வைத்திருந்தாள். அதில் ஒரு கவிதையும், நிர்வாணமான சிந்துவெளி நடன மாதுவை ஒத்த நுட்பமான வேலைப்பாடு கொண்ட அந்த களிமண் உருவமும் தான் அவனின் இன்றைய மாற்றத்துக்கு காரணமாக இருந்தது. 


இந்த ஒய்யார களிமண் வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது என்றாலும் அது அவனுக்கு அமராவின் பிரதி போலவே தென்பட்டது.  அவள் உடையில்லாது தனது நீண்ட  தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க, வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும், அவளின் இடுப்பு கவர்ச்சி யூட்டக் கூடியதாக முன்தள்ளி [முன்பிதுங்கி] இருப்பதும், அவனுக்கு பல எண்ணங்களைப் ஏற்படுத்தியது போலும்! 


அடுத்தநாள், எதிர்பாராத கனமழை திடீரென காற்றுடன் கொட்டியது. எனவே ரவி அமராவின் களிமண் பாத்திரக் கடையில்  ஒதுங்கி, அந்த சிலையை கையில் எடுத்து இரசித்துக்கொண்டு இருந்தான். அமரா அவனையே உற்றுப்பார்த்தபடி, அவன் அருகில் வந்து, அந்த சிலையின் கதையைக் கூறி, அதன் விலையையும் கூறினாள். ஆனால்  அவர்களின் கண்கள் சந்தித்தபோது, பிரபஞ்சம் இடைநிறுத்தப்பட்டு, அவர்களின் ஆத்மாக்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத, இனி நடக்கப்போகும் அவர்களின் விதியின் இழைகளை ஒன்றாக நெய்தது போல் இருந்தது.


"எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்!"


ரவியினது பார்வை அமரா மேல் செல்ல. அவள் கண் ரவி மேல் பாய், இருவரது மனவுணர்ச்சியும் ஒன்றுபட்டு ஒரு தனித்துவமான காதலைக் இருவரும் அவர்களுக்கு தெரியாமலே, விதியின் சதியால் பகிர்ந்தனர்  அன்று முதல், நாளுக்கு நாள், அவர்களின் சந்திப்புகள் மெல்ல மெல்ல அதிகரித்து அடிக்கடி நிகழ்ந்தன,.


மாறுபட்ட சமுதாயத்தில் இருவரும் பிறந்து வாழ்ந்து வந்தாலும், அவர்களது காதலுக்கு எல்லையே இல்லை. அவர்கள் ஒருவருக் கொருவர் மற்றவரில்  ஆறுதல் கண்டனர், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வு மற்றும் கட்டுப்பாடுகள் மத்தியில் தங்களுக்கு கிடைத்த தருணங்களில் அன்பின் வலிமையைப் ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டனர். அவர்களின் காதல், இருவருக்கும் இடையில் வருங்கால  நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறியது, அவர்களின் இதயத்தின் இருண்ட மூலைகளை எல்லாம் பிரகாசமான நாளைய உறுதிமொழியுடன் ஒளிரச் செய்தது.


ஆயினும் கூட, அவர்களின் காதல் மலர்ந்தபோது, அவர்களைக் பிரிக்க அச்சுறுத்தும் கொந்தளிப்பான அலைகளைப் போல சவால்கள் வெளிப்பட்டன. சமூக விதிமுறைகள் மற்றும் குடும்ப எதிர்பார்ப்புகளின் கிசுகிசுக்கள் அவர்களின் உறவின் மீது சந்தேகத்தின் நிழல்களை ஏற்படுத்தின. பாரம்பரியத்தில் வேரூன்றிய அமராவின் குடும்பம், ஒரு மீனவருடன் அவளின் உறவின் சாத்தியக் கூறுகளை கேள்விக் குள்ளாக்கியது, அதே நேரத்தில் ரவியின் குடும்பத்தனரும் வேறு சமூக அடுக்குகளை நேசிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்தனர்.


ஆனால் காதல், கடல் போல இடைவிடாது, சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆளாக மறுத்தது. அமரா மற்றும் ரவி உறுதியுடன் இருந்தனர், அவர்களின் இதயங்கள் அமராவின் மட்பாண்டங்களை அலங்கரிக்கும் சிக்கலான வடிவங்களைப் போல பின்னிப்பிணைந்தன. தளராத உறுதியுடன், புயலில் நங்கூரமாக மாறிய காதலை கைவிட மறுத்து அலையை எதிர்த்து நின்றார்கள்.


இதமான காற்று, மிதமான போதை அவர்களுக்கு துணைபோக, மொழியில், வார்த்தைகள் தீராதது போல, அவர்களது கொஞ்சல் பேச்சும் நீண்டு, எல்லா சவால்களையும் மீறி தொடர்ந்தது. அவர்கள் எப்போது இரவில் உறங்கினார்கள் என்பது அந்த இரவுக்கு மட்டுமே தெரியும். கற்பனை அவர்களிடம் உறக்கத்தில் தங்கு தடையின்றி சிறகடித்து பறந்தது. இதுதான் இந்த காதல் பயணத்தின் இனிமையான நேரம் என்பதை அப்போதே அவர்கள் உணர தொடங்கினார்கள். இதுவே இளமை வாழ்வின் மறக்கமுடியாத தருணம் என்பதையும் உணர்ந்தார்கள்.


அமராவுக்கு சில கவிதைகள் தோன்றின. அந்த பாறையை தொட்டுக் கொண்டு இருந்த தண்ணிரிலேயே எழுதினாள். ஆனால் அலைகள் அவைகளை அபகரித்து சென்று விட்டது. கடல் எப்போதாவது, அதை பிரசுரிக்கும். எங்களைப் போல வருபவர்கள் வாசிக்கட்டும் என்றாள். கவிதை எழுத, தெரிந்து எடுத்த இனிய காதல் வார்த்தைகள் மட்டும் மனதில் நின்று கண்களை வம்புக்கிழுத்தன. அவள் நீரில் மிதந்தாள், நிலத்தில் மிதந்தாள், காற்றில் மிதந்தாள், எதை அடைந்தாள், எதை இழந்தாள், அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை? 


ஏன் அவன்கூட எதோ கற்பனையில், பாறையில் இன்னும் ஒரு உடைந்த சிறு சுண்ணாம்பு கல்லால் ஒரு கவிதை வரைந்து கொண்டு இருந்தான், அது அழியவில்லை, திருப்ப திருப்ப அதை வாசித்து மகிழ்ந்து கொண்டு இருந்தான். 


"உப்பு சாப்பிட்ட மென் காற்று 
உதடுகளை முத்தமிட்டு செல்கிறது! 
உள்ளம் வருத்தும் காந்த விழிகளில் 
உயிரைப் பறிகொடுத்துச் சாகிறேன்!" 


"பஞ்சுப் பாதங்களை நனைக்க மனமின்றி 
பருத்த அலையும் கடலுக்கு திரும்புது! 
பள்ளம் மேடு தோண்டும் நண்டுகளும்
பதுமை இவளென விழியுர்த்தி பார்க்கின்றன!" 


"அமராவின் எழிலில் கோபம் கொண்டு 
அழகிய நிலாவும் முகிலில் மறையுது! 
அடர்ந்த கூந்தலின் வாசனை முகர்ந்து  
அடைக்கலம் தேடினேன் அவளின் மடியில்!"


எதிர்ப்புகளை எதிர்கொண்டாலும், இருண்ட இரவுகளில் அவர்களை வழிநடத்தும் நம்பிக்கையின் கலங்கரை விளக்கைப் போல, அவர்களின் காதல் வழி அமைத்து வலுவடைந்தது. கடுமையான புயல்களை தாங்கள் எதிர்கொண்டு விட்டதாக அவர்கள் நினைத்த போது, அவர்களின் அன்பின் இறுதி சோதனையை விதி அவர்களுக்கு வழங்கியது. நாளை பெப்ரவரி 14 , மீண்டும் சந்திப்போம் என்று பிரிய மனமின்றி  அவள் விடைபெற்றுச் சென்றாள். ஆனால் அவனுக்கு  பெப்ரவரி 14 ஒன்றும் பெரிதாக்கத் தெரியவில்லை, என்றாலும் 'கட்டாயம்' என்று கூறி அவனும் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.  


அமரா அவன் திருப்ப திருப்ப இரசிக்கும் அந்த நடன மாது சிலையையும் அத்துடன் சிவப்பு ரோஜாக்களின் ஒரு மலர்க் கொத்தையும் எடுத்துக் கொண்டு நேற்று இருவரும் அமர்ந்து இருந்த அந்த பாறைக்கு தேவதை போல், தெரிந்து எடுத்த அழகான உடையில் வந்தாள். அவன் ஏற்கனவே காடுகளிலும் மற்றும் பாதைகளிலும் காணப்படும் ஒரு வெள்ளை நிற காட்டு ரோஜாவுடன் மட்டும், சாதாரண, ஆனால் சீரான உடையில் அமர்ந்து இருந்தான். அவனைப் பொறுத்தவரை, அன்பிற்கு வெகுமதி இல்லை. அன்பு அன்பிற்காகவே செய்யப்படுகிறது! 


"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்'


நேசிப்பது கொடுக்கல் வாங்கல் அல்ல, அதனால் தான் அவன் வெறும் காட்டு ரோஜாவுடன், ஆனால் வெள்ளை மனத்துடன் அங்கு காத்திருந்தான். காதல் வாழ்க்கை - அன்பின் பெரிய வெகுமதிகள்! பலர் தவறாகப் புரிந்து கொள்வது போல் காதல் அது உணர்வு அல்ல. அன்பு ஒரு கட்டளை. அன்பின் மிகவும் விரும்பப்படும் பரிசு வைரங்கள் அல்லது ரோஜாக்கள் அல்லது சாக்லேட் அல்ல. இது ஒருவர் மேல் தனிக் கவனம் செலுத்துதல் ஆகும். இதுவே அவனின் தத்துவம்!


ஆனால், அமரா அன்பை, காதலை அவனை மாதிரி நினைக்கவில்லை. அன்பை, பரந்து விரிந்து பெருங்கடலுடனும், கோபத்தை ஊதும் போது பெரிதாகி பட்டென்று வெடித்து விடும் பலூனுடனும் பலர் ஒப்பிடுவார்கள். அப்படித்தான் அவள் இருந்தாள். அவன் உண்மையான பாசத்துடன் கொடுத்த அந்த வெள்ளை ரோசாவின் ஐந்து இதழ்களையும் பிடிங்கி எடுத்து கசக்கி கடலின் அலைக்குள் தூக்கி வீசினாள். அவன் அப்படியே மலைத்துப்போய் மௌனமாக அவளைப் பார்த்த படியே இருந்தான். 


அவள் அக்கம் பக்கம் எங்கும் பார்த்தாள். தான் கொண்டு வந்த காதலர் தின பரிசை இன்னும் அவளே வைத்துக்கொண்டு இருந்தாள். ஒரு பேரழிவுகரமான சுனாமி போல அந்த கடலோர நகரத்தின் கடற்கரையை தன் கண்ணால் வலம் வந்தாள். அங்கே கொஞ்சம் தள்ளி, அவளின் சொந்த மச்சானும் பிரசித்திபெற்ற கணித ஆசிரியருமான 'கவி' கடல் அலையை இரசித்த வண்ணம் இருப்பதைக் கண்டாள். கோபத்தின் திடீர் எழுச்சியில், அவள் தன்னை மறந்தாள். அழிவைத் தரும் குழப்பம் மற்றும் விரக்தியின் மத்தியில், தான் என்ன செய்கிறேன் என்பதை மறந்தாள். ரவியை உடனடியாக விட்டு விலகி கவி நோக்கி அந்த காதல் பரிசுடன் புறப்பட்டாள். ரவி ஒன்றும் சொல்லவில்லை. நடப்பது நடக்கட்டும், கிடைப்பது கிடைக்கட்டும் என்று அப்படியே இருந்துவிட்டான்!    


'அன்பு' என்பது வேறு; 'அன்பு காட்டுவது' என்பது முற்றிலும் வேறு என்பதை முற்றாக புரிந்தவன் அவன்! நிபந்தனையின்றி அன்பைக் கொடுக்கும் போது, நாம் ஏற்கனவே வெற்றி பெறுகிறோம். அதாவது, அன்பின் உணர்வு, அதை வேறொருவருக்குக் கொடுக்கத் தேர்ந்தெடுக்கும் போது நமக்கு ஏற்படுகிறது. அன்பின் அனுபவம் அதைக் கொடுக்கும் போது ஏற்படுகிறது. வேறொருவர் நம்மைப் உண்மையில் புரிந்து பிடிக்கும் வரை அல்லது உண்மையில் நேசிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. நம் அன்பைக் கொடுப்பதற்காக அது நடக்கும் வரை நாம் காத்திருந்தால், நாம் நிபந்தனையுடன் நேசிக்கிறோம். இப்படித்தான் அவன் மனம் அவனுக்குள் வாதாடிக் கொண்டு இருந்தது. அவன் உண்மையில் பாசத்துடன் அமராவை புரிந்து காதலிக்கிறான். அதனால்த் தான் அவளின் செய்கையை அவன் பொருட்படுத்தவில்லை. 


"அன்பின் வெகுமதி, பெருமதி எல்லாம் புன்னகையுடன் சேர்ந்த அன்பின் கருணையே!"


ஆனால் அந்த கோபம் என்ற பலூன் மதியை அடையும் முன் வெடித்து சிதறிவிட்டது. அவள் அங்கிருந்து திரும்பி ரவியை பார்த்தாள், அவன் இன்னும் அவள் கசக்கி எறிந்த காட்டு ரோஜாவின் இதழ்களை ஒன்று ஒன்றாக அலைகளில் இருந்து பொறுக்கி எடுத்து ஒன்றாக சேர்த்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவளிடம் இப்ப அவனின் காதலில் முழு உறுதி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது , அவள் மீண்டும் ரவியுடன் இணைவதற்கான பயணத்தைத் திரும்பித் தொடங்கினாள், அவளின் ஒவ்வொரு அடியும் உண்மையான அன்பின் வெகுமதியை நினைவூட்டியது. 


அதே பாறையின் மேல் கைகோர்த்து, அவர்கள் ஒரு புதிய விடியலினை நோக்கி நின்றார்கள், இது உண்மையில் அவர்களின் காதல் பக்தியின் நீடித்த சக்திக்கு ஒரு சான்றாகும். ஏனென்றால், திருகோணமலையின் இதயத்தில், அலைகள் காதலின் வெற்றியின் கதைகளை கிசுகிசுத்தன, அமராவும் ரவியும் அவர்களின் மிகப் பெரிய வெகுமதியைக் கண்டனர் - இது நேரம், இடம் மற்றும் கடலின் ஆழங்களைக் கடந்த காதல்! 


அந்த பெரும் மகிழ்வில், ரவி, அவனுக்கு பிடித்த அவளின் கவிதையை கடல் அலைகளின் மற்றும் மீன்களை பிடிக்க வட்டமிடும் நாரை, கொக்கு போன்ற புள்ளினங்களின் ஓசையுடனும் சேர்ந்து அவளுக்கு கேட்கக் கூடியதாக முணுமுணுத்தான். அவளும் அவனுடன் சேர்ந்த தன்னுடைய கவிதையை ராகத்துடன் பாடினாள்.   


"ஒவ் ஒருவர் வாழ்விலும்  ஒவ் ஒரு கதை,
உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!"

"அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது,
அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!"

"யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை
சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!"

"எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? 
சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!"

"வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சாணமும் பூசுவார்கள்.
வெவ்வேறு கட்டத்தில், போற்றி பதக்கமும் தருவார்கள், அன்பே!"

"எங்களுக்கும் ஒரு காலம் வரும், ஒரு வாழ்வு வரும்,
மேலே உயர்ந்து நாம் வானத்தையும் தொடுவோம், அன்பே!"

"காலம் கைவிட்டால், தொட்டது எல்லாம் வசை பாடும்,
தோல்வியின் கால் அடியில் குப்பற விழுவோம், அன்பே!"

"ஒவ் வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும், 
அது ஒரு கனப் பொழுது, எம்மை ஆட்டிப் படைக்கும் அன்பே!"

"ஒவ் வொரு கதைக்கும், தொடக்கமும் முடிவும் உண்டு,
அது நேராக அல்லது வளைந்து செல்லும், அன்பே!"

"உனது கதை எந்த வழி, நீ அறிவாய் 
புளிப்பும் இனிப்பும் கலந்த கலவையடி அன்பே!"  


நன்றி


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"ஈரம் தேடும் வேர்கள்" 

2 weeks 2 days ago

"ஈரம் தேடும் வேர்கள்" 

"கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு."

என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது.  கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்டங்களை எதிர்கொண்டவர் . அவளது சுருக்கம் விழுந்த முகமும் வெள்ளை முடியும் எண்ணற்ற அனுபவங்களையும் கதைகளையும் அவள் இதயத்திற்குள் சுமந்து கொண்டு இருக்கின்றன. 

கண்மணிக்கு இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக  இயற்கையோடு ஒரு தனிப் பிணைப்பு என்றும் இருந்தது. அவள் தன் ஓய்வு நாட்களை தோட்டத்தைப் பராமரிப்பதிலும், செடிகளையும் பூக்களையும் கனிவான கவனத்துடன் வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். அவளுக்குப் பிடித்த தாவரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டவை, அவை செழிக்கத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டறிய மண்ணுக்கு அடியில் நீண்டிருந்தன, ஈரம் தேடும் வேர்களாக. 

இலங்கையில், வடக்கு கிழக்கில் அன்று நிலவிய ஒரு போர் சூழ்நிலை மற்றும் அடக்குமுறைகளில் கண்மணி தன் கணவரை இழந்தார். அதனால் மிகவும் பயந்துபோன கண்மணி, தன் மூன்று இளம் பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு படிப்பிற்காகவும் மற்றும் பாதுகாப்புக்காகவும் அனுப்பிவிட்டார். தான் தனித்துப்போவேன் என்று அவள் சிந்திக்கும் நிலையில் அப்ப கண்மணி இருக்கவில்லை. அவள் எண்ணம் செயல் இரண்டும் பிள்ளைகள், பிள்ளைகள், பிள்ளைகள், அது மட்டுமே!    

வருடங்கள் செல்ல செல்ல, கண்மணி தன் சொந்த வாழ்க்கைக்கும் தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டார். ஈரத்தைத் தேடும் வேர்களைப் போலவே அவளும் வாழ்வு மலர.. வாசணை துளிர.. வேதனை மறைய..சந்தோஷங்கள் நிறைந்த நேரத்தை தேடும் ஏக்கம் இருப்பதை அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் அருகில் இல்லாதது இப்ப பெரும் குறையாகவே அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் எத்தனைப்  பணம் அனுப்பினாலும், வசதிகளை அமைத்து கொடுத்தாலும், அவள் எதையோ இழந்து தவிப்பது தெரிந்தது.  


ஈரத்தைத் தேடும் வேர்களைப் போல, நேரடியான பாசம், அன்பு ... என்ற ஈரங்களை தேடி மனம் அலைந்து கொண்டே இருந்ததை அவள் உணர்ந்தாள்.

ஒரு கோடை நாளில், கண்மணி  தனது தோட்டத்தில் அமர்ந்திருந்த போது, ஒரு இளம் மரக்கன்று வறண்ட மண்ணின் மத்தியில் வளர போராடுவதைக் கண்டாள். அது பலவீனமாகவும் வாடிப்போகக்  கூடியதாகவும் தோன்றியது, அதனால் உயிர்வாழத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் அந்த மரக்கன்று பிடிவாதமாக அதன் வேர்களை தரையில் ஆழமாக நீட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். அந்த மரக்கன்றின் உறுதி கண்மணிக்கு ஒரு தெம்பை கொடுத்தது. 

கடினமான அல்லது சவாலான வாழ்க்கை அனுபவங்களை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் மரக்கன்றுகளின் செயல்முறையால் [மீள்தன்மையால்] ஈர்க்கப்பட்ட கண்மணி, தானும் அப்படியான ஒரு  கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார். வேர்கள் தண்ணீரைத் தேடுவதைப் போல, அவளும் தனக்கான நேரடி  ஆதாரங்களைக் கண்டு பிடிக்க ஏங்கினாள். கையில் ஒரு கைத்தடியை [வாக்கிங் ஸ்டிக்கை] எடுத்துக் கொண்டு  கொண்டு, தன் ஆர்வத்தாலும், அசையாத உள்ளத்தாலும் வழிநடத்தப்பட்ட அவள், போரினால் கடுமையாக பாதிக்கப்படட, திருகோணமலையின் ஒரு எல்லைக்கிராமமான  முல்லைத்தீவு சென்றாள்.

அவள் கிராமத்தின் பழக்கமான எல்லைகளைத் தாண்டிச் சென்றபோது, கண்மணி பல்வேறு சவால்களையும் தடைகளையும் பாதுகாப்பு படையிடம் மற்றும் புலனாய்வு அலுவலர்களிடம்  எதிர்கொண்டார். வாழ்க்கை அடிக்கடி அளிக்கும் கஷ்டங்களையும் சோதனைகளையும் அவள் அறிவாள். எனவே தன் ஒவ்வொரு அடியிலும், கண்மணி  உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வலுவாக தன்னை திடப்படுத்திக் கொண்டார். 

தனது பயணத்தில், கண்மணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளையும், கணவன் இல்லாத ஒற்றைத்  தாய்களையும், கை அல்லது கால் இழந்த ஆண்களையும் கண்டார். என்றாலும் அந்த வேதனையிலும், இழப்பிலும்  கஷ்டத்திலும் கூட அவர்களின் அன்பை, ஆதரவான பேச்சை பார்த்து , கேட்டு அதிசயப் பட்டாள். அங்கு ஈரத்தை கண்டாள்! அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்ததுடன், தன் தேடல் வெற்றி அடைந்ததை உணர்ந்தாள். எதை தேடினாலோ அது அங்கு கிடைத்தது. அவள் இதயம் அந்த ஈரத்தில் நனைத்தது!   

தன்னிடம் உள்ள பணம், வசதிகளை முதலீடாக அமைத்து, கண்மணி அங்கே ஒரு அநாதை இல்லம் அமைத்து, அவர்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தாள். அவளை சுற்றி குழந்தைகள் முதல் வயதானவர்கள் இருந்தனர். அவள் தேடிய நேரடிப்  பாசம், அன்பு, துணை என்ற ஈரங்கள் அவளை நனைத்து மகிழ்வைக் கொட்டிக்கொண்டே இருந்தன!

ஈரப்பதத்தைத் தேடும் வேர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்குத் தகவமைத்துக் கொள்வது போல,  அதாவது,  புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் போல, ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் அனுபவங்களை மாற்றியமைத்து கற்றுக் கொள்ளவதுடன், ஏற்படும் சவால்களைத் எதிர்த்து, வாழ்வு மலர தேவையான ஆதாரங்களைக் தேடிக் கண்டறியவேண்டும் என்ற தன் அனுபவத்தை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக கண்மணி பாட்டி தனது எண்பதாவது அகவையிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். 

ஈரம் தேடும் வேர்களைப் போலவே, அவள் தன் சொந்த ஆவியையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தொடர்ந்து வளர்த்து, வாழ்க்கைத் தோட்டத்தில் அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறாள்! 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"அப்பாவின் பேனா..!"

2 weeks 3 days ago

"அப்பாவின் பேனா..!"


அப்பாவின் படம் சுவரில் அழகாக தொங்குகிறது. அதில் அவரின் சட்டை  பையில், அந்த பேனா எட்டி பார்த்துக்கொண்டு இருக்கிறது. இன்று அவரின் நினைவு தினம். நான் அவரின் அந்த படத்துக்கு மலர் மாலை அணிவித்துவிட்டு, அவரின், அவர் என்றும் தன்னுடன் எடுத்து செல்லும் அந்த பேனாவை, அவரின் படத்துக்கு அருகில் கொழுந்துவிட்டு எரியும் தீபத்தின் ஒளி அதிலும் படக்கூடியதாக வைத்தேன். 

அப்படி என்ன இந்த பேனாவில் உள்ளது?  இந்த பேனாவின் வலிமை உண்மையில் என் அப்பாவின் எண்ணத்தின் வலிமை, அவரின் சொல்லின் வலிமை! ஆமாம். என் அப்பாவின் பேனா நீதி பேசும் , கதை சொல்லும், கவிதை பாடும், ஏன் புரட்சி கூட  செய்யும்!! அது தான் அதன் பெருமை!! பேனா என் அப்பாவின் வாழ்வில் இரண்டறக் கலந்த்துடன் அவரை யார் என்று உலகத்துக்கு காட்டியதும் அதுவே! கத்தி முனையை விட பேனா முனை வலிமையானது!!


என் அப்பா கட்டை என்றாலும், கம்பீரமான தோற்றம் உள்ளவர். அவரை 'க க' அல்லது 'கட்டை கந்தையா'  என்றே பொதுவாக எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெரிதாக படிக்கவில்லை, ஆனால் வாசிப்பதில் குறிப்பாக ஊர் புதினம், அரசியல் நிலைப்பரம் மற்றும் சாதாரண மக்களின் அல்லது தொழிலாளர்களின் பிரச்சனைகள் அறிவதில் ஆர்வம் உடையவர்.  ஆரம்பத்தில் ஒரு சுருட்டு தொழிலாளியாக நல்லூர் வடக்கு வீதியில் உள்ள அன்னலிங்கம் சுருட்டு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தார். அத்தியடியில் உள்ள எமது வீட்டில் இருந்து, அவரின் வேலை நிலையம் ஒரு மைல் தூரத்துக்குள் தான் இருக்கும். அவர் நடந்தே போவார்.  


அவர் கணக்கில் புலி என்பதால், அங்கு வேலை செய்யும் மற்றவர்களுக்கான கூலியையும், மற்றும் தனதையும் சேர்த்து, கணக்கிட்டு கொடுப்பார். நாளடைவில் அவர் கணக்குப் பிள்ளையாகவும்  தொழிற்படத் தொடங்கினார். அப்பொழுது தான் அவருக்கு பேனாவில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது. சுருட்டு கம்பெனியின் முதலாளி ஒரு 'மை பேனா' அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அன்றில் இருந்து பேனாவை தனது சட்டை  பையில் வைக்கும் பழக்கமும் ஆரம்பித்தது எனலாம். சக தொழிலாளர்களுடன் இதனால் நெருக்கமாக பழகும் சூழ்நிலையும் ஏற்பட்டது. அவர்களின் பிரச்சனைகளை அப்பாவிடம் ஆலோசிக்க தொடங்க, அவர் ஒரு தொழிலாளர் ஆலோசகராக, ஏன் தலைவனாக கூட பரிணமிக்க தொடங்கினார். இது தான் அவரை மாற்றிய பெரும் நிகழ்வு எனலாம்
தான் கேள்விப்பட்ட நிகழ்வுகளை, பிரச்சனைகளை இப்ப சிறு சிறு கவியாக கதையாக எழுத தொடங்க, அவை நல்லூர், அன்னலிங்கம் சுருட்டு கம்பனிக்கு வெளியேயும் பரவத் தொடங்கி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளிலும் வரத் தொடங்கி, பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது. அப்பாவை, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட, ஒன்றிணைந்த தொழிலாளர் சங்கம், தமது செயலாளராக நியமித்ததுடன், அன்றைய ஆண்டு, யாழ் பத்திரிகைகள் நடத்திய கதை கவிதை போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றார். அந்த நிகழ்வில் தான் அப்பாவுக்கு இந்த தங்க பேணா, யாழ்ப்பாண முதல்வரால் பரிசாக அளிக்கப் பட்டது. அன்றில் இருந்து அவர், சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லும் மட்டும், இந்த பெருமைக்குரிய பேனா, அவருடனே என்றும் பயணம் செய்தது.


"ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்           
ஆள வந்தவனின் ஊழல் சொல்ல  
ஆகாயம் தொடும் வன் செயலை 
ஆபத்து வரும்முன் தடுத்து நிறுத்த!"


இது தான் என் அப்பாவின் பேனா, யார் எவர் என்று பாகுபாடு காட்டாமல் பேசியது. அவர் பேணா எடுத்தல் தீப்பொறி பறக்கும். ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும்!  ஆமாம் , கடலில் ஏற்படும் சுனாமிகளை விட, அப்பாவின் பேனாவின் எழுத்துக்கள் மிக வலிமை வாய்ந்தவை. அது கரையிலும் கூட சூராவளி காற்றை உண்டாக்கியது. கள்ளர்கள் , ஊழல் அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் கரைகளிலும் ஒதுங்க முடியாத நிலை ஏற்படுத்தியது இந்த தங்க  பேனாதான்! அதுதான் அப்பாவின் பேனா !


நான் அப்ப பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரே ஒரு முறை தான், அப்பா அதே பேனாவால், என் அம்மாவின் பிறந்த நாளுக்கு, ஒரு காதல் பாட்டு எழுதியதை பார்த்தேன். நானே அசைந்துவிடேன். அத்தனை இனிமை. ஆனால் எம் முன்னால் இருக்கும் பிரச்சனையே பேனாவில் பொறியாக பறக்கவேண்டும் என்று நம்புபவர் என் அப்பா.  


"உச்சங் கொண்டையும் கரும் விழிகளும் 
உகவைதரும் உன் உடல் வனப்பும் 
உள்ளம் கவரும் உன் புன்னகையும் 
உரிமை கொண்டு என்னை அழைக்கிறது"


"ஓவியமாக வந்தாய் கவிதை தந்தாய் 
ஓசை இன்றி என்னில் கலந்தாய்  
ஓரமாய் இழுத்து முத்தம் தந்தாய் 
ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்"  


'பேனாவின் வலிமை கத்திக்கு இல்லை' இப்படித்தான் அப்பா அடிக்கடி சொல்லுவார். ஆனால் அன்று நால்வர், அப்பா வேலை முடிந்து, வீடு திரும்புகையில், வைமன் வீதி, அரசடி வீதி சந்திக்கும் பருத்தித்துறை வீதியில்,  மாறி மாறி கத்தியால் குத்தி கொலைசெய்தனர். இத்தனைக்கும் அரச ராணுவத்தின் வீதித்தடையும் காவலும் கூப்பிடு தூரத்திலேயே! அப்பாவின் பேனா ஓய்ந்துவிட்டதாக, அந்த நால்வரையும் ஏவிய அரசியல்வாதி இன்றும் நம்பிக்கொண்டு இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. பாவம் காசுக்கு மார்தட்டும் இந்த நாலு கொலையாளிகளும்!  


 "வாருங்கள், வந்து கை கொடுங்கள்
இமைகள் மூடி பல நாளாச்சு ...         
 தாருங்கள், தீர்வை தந்து கவலைதீருங்கள் 
கேள்விகள் கேட்குது அப்பாவின் பேனா ..."

"எழுதுங்கள் உரக்க எங்கும் ஒலிக்கட்டும் 
உண்மைகள் வாழ வழி தேடுங்கள் ... 
கூடுங்கள் ஒன்றாய் அநியாயத்துக்கு எதிராக
அப்பாவின் பேனா என்னிடம் மாறுது .."  


நான் அந்த தங்க பேனாவை, அப்பாவை வணங்கிய பின் என் சட்டை  பையில் வைத்தேன், கண்ணாடியில் என்னை ஒருமுறை பார்த்தேன். அப்பாவின் மிடுக்கு என்னில் தெரிந்தது. நான் இதுவரை கீறிய வரைபடங்கள், செய்த கணக்குகள், போட்ட  பொறியியல் திட்டங்கள் , இனி எனக்கு தேவை இல்லை. என் அப்பாவின் பேனா, நீதி கேட்கும். உரிமை கேட்கும். தட்டிக்கழித்தால்  வழக்கு உரைக்கும். அது அப்பாவின் ஆன்மா. உலக சாதாரண மக்களின் குரல். கொலையால், மிரட்டலால் அது ஓயாது! அது தான் அப்பாவின் பேனா!!


"அப்பாவின் பேணா என் பையில் 
அத்து மீறியவர்களை பிடுங்கி எறியும்
அடித்து துரத்த கூட்டம் சேர்க்கும் 
அயர்ந்து தூங்க உனக்கு முடியாது!"

"அழகான பெண்ணை அளவோடு பாடும் 
அகிலம் எங்கும் உண்மை உரைக்கும் 
அறிவு வளர்த்து மனிதம் பேணும்
அன்பு விதைத்து நீதி கேட்கும்!"  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

"உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை]

2 weeks 3 days ago

"உயர்ந்த மனிதர்கள்"
[உண்மைக்கதை]


ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக  கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு.  நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது.


நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை பொழுதிலும், வார இறுதியிலும்
துடுப்பாட்டம் [கிரிக்கெட்], பூப்பந்தாட்டம் [பேட்மிண்டன்], மேசைப்பந்தாட்டம் [டேபிள் டென்னிஸ்], சுண்டாட்டப் பலகை [கரம் பலகை] .. இப்படி வசதியை பொறுத்து விளையாடுவோம்.  துடுப்படியில் இரு குழுவாக பிரித்து ஆடுவோம், அதில் ஒரு அணிக்கு தவராஜாவும், மற்ற அணிக்கு நானுமே தலைவர்கள். பல நேரம் அங்கு வாக்குவாதம் வரும். நான் கொஞ்சம் முரடு  என்பதால், விட்டுக்கொடுக்காமல் வாதாடுவேன், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மிக அமைதியாய் இருந்து விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு ஒழுங்காக விளையாட்டை தொடர்வதில் மிக கைதேர்ந்த, சாமர்த்தியம் நிறைந்தவர் தான் தவராஜா. அது மட்டும் அல்ல, ஒருவருக்கு எந்த உதவி தேவை என்றாலும், வேலையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆயினும்  யாரும் அவரை  இலகுவாக அணுகலாம். கட்டாயம் தன்னலம் பார்க்காமல், நேரகாலம் பார்க்காமல் உடனடியாக உதவ கூடியவர். இன்றும் இன்னும் என்னுடன் நண்பராக இருக்கிறார். ஆனால், எனது மற்ற  நண்பரான ராஜரத்னா, இன்று எம்மிடம் இல்லை. அவர் சாக்கடிக்கப் பட்டுவிட்டார். அவர் ஒருமுறை உதவி தொகைப்பெற்று ஜப்பான் சென்று, திரும்பி வரும் பொழுது எனக்கு கொண்டுவந்து  தந்த பரிசு மட்டும் இன்னும் என்னிடம் உள்ளது,
வடக்கிலும் தெற்கிலும் அரசுக்கு எதிராக, ஆனால் வேறு வேறு இரு குழுக்களால் போராட்டம் நடந்து கொண்டு இருந்த ஒரு காலத்தில்,  நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் கதைக்கும்  பொழுது என்னிடம் கூறினார், தெற்கில் போராடும் சிங்கள இளைஞர்களுக்கு ஆதரவாக, எமது தொழிற்சாலையிலும் சிலர் இருப்பதாகவும், அது தனக்கு தெரியும் என்றும், எம் நாட்டிற்கு அமைதி வேண்டும். அது தொழிற்சாலையில் வளரவிடக் கூடாது என்றும் கூறினார். அவரும் ஒரு சிங்கள சமூகம் என்பதால், நான் கூறினேன், இதில் நீ  தலையிடாமல்  நடுநிலையாக நிற்பதே நல்லது என்று. அதன் பின் நான் அந்த விடயங்களைப்பற்றி கதைக்காமல் அமைதி காத்தேன். வீண் பிரச்சனைக்குள் ஏன் போவான் என்று, ஏன் என்றால், வடக்கில் நாம் பெற்ற, கண்ட, கடைபிடித்த அனுபவம் தான்! 


இருள தொடங்கிய ஒரு மாலை பொழுது, நாம் துடுப்பாட்டம் வழமை போல் விளையாடிவிட்டு, இரவு சாப்பாட்டிற்கு முன், நானும் ராஜரத்னாவும், விடுதியில் கரம் பலகை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, திடீரென ஒரு பதினைந்து இருப்பது சிங்கள இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் எமது உத்தியோகத்தர் விடுதிகளுக்கு புகுந்து, எம்மை  எல்லோரையும் துப்பாக்கி முனையில் ஒரு வரிசையில் நிற்பாட்டினார்கள். அவர்களில் ஒருவர் சிங்களத்தில், நீங்கள் பயப்படவேண்டாம். நாம் சில விசாரணை செய்யவேண்டி உள்ளது. அதற்கு உங்களில் சிலரை கூட்டிக்கொண்டு போகிறோம். விசாரணையின் பின் அவர்களை விடுவோம் என்றனர். சிலரின் பெயர்களை வாசித்து, மூவரை கூட்டி சென்றனர். அதில் ஒருவராக என் நண்பன் ராஜரத்னாவும் இருந்தார். அன்று நாம் விளையாடிய துடுப்பாட்டத்தில், ராஜரத்னா என் குழுவில் இருந்ததுடன், அன்று திறமையாக பந்து வீசி, தவராஜாவை தவிர மற்ற எல்லோரையும் ஆட்டம் இழக்கச் செய்தார். 


நான் அப்பொழுது தான் யோசித்தேன், அவருக்கு  நான் கூறிய அறிவுரைகளை அவர் ஒரு வேளை, செவிசாய்க்கவில்லை என்று.  அவருக்கு எப்பவும் ஒரு அமைதியான ஒழுங்கு முறை  வேண்டும். அது குழம்பிடுமோ என்ற கவலை கொண்டவர், நாட்டின் மேல் உள்ள பற்றாலும், தனது தன்னலம் அற்ற கொள்கையாலும், எதாவது அரசுக்கு சொல்லி இருக்கலாம் என்று  எண்ணினேன். அப்படி இருக்காது, விசாரணையின் பின் அவர் வருவார் என்று என்னையே நான் தேற்றினேன். எமக்கு வடக்கில் இருந்த அனுபவம் அவருக்கு இல்லை. ஏன் என்றால், தெற்கில் ஒரு முறை 1971 இல் ஒரு எழுச்சி வந்து, அந்த ஆண்டே அரசு அதை அடக்கி விட்டது. அதன் பின் அது வெளிப்படையாக இயங்கவில்லை. அது மீண்டும் 1988 /1989 இப்ப தான் வந்துள்ளது.

ஒரு பத்து இருப்பது நிமிடத்தின் பின் துப்பாக்கி சத்தங்கள் அடுத்து அடுத்து கேட்டன, அவரின் மனைவி, அவரின் சில மாதமே கொண்ட குழந்தையுடன் ஓடிவந்து , எம்மில் சிலராவது சத்தம்  வந்த திசை பக்கம் போய் பார்க்கும்படி, ஒரே அழுதபடி கேட்டார். எதுக்கும் முன்னுக்கு நிற்பவர் தவராஜா தானே. எனவே நானும் தவராஜாவும் முன்னுக்கு செல்ல மற்றும் சில சிங்கள நண்பர்களும் எம்மை தொடர,  இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு புறப்பட்டு சென்றோம். எம் தொழிற்சாலை ஒரு சிறு காட்டு பிரதேசத்தில் இருந்ததால், சுற்றிவர பத்தை  பத்தையாகக் இருந்தன. அப்படி ஒரு பத்தைக்கு அருகில் அவரின் உடல் துப்பாக்கி சூடுகளுடன் விழுந்து இருந்தது. அந்த உயர்ந்த மனிதன் தன் கொள்கைக்காக அங்கு இறந்து கிடந்தான்.
அவருக்கு அண்மையாக ஒரு எச்சரிக்கை தூண்டும் இருந்தது. அது சிங்களத்தால் , 'இவன் ஒரு காட்டி கொடுத்த துரோகி, இவனின் இறுதி சடங்கிலோ மரண ஊர்வலத்திலோ கலந்து கொள்பவர்களும் துரோகிகளே!' என்ற வாசகம் இருந்தது. ஆகவே நாம் எல்லோரும் அதில் தொடர்ந்து நிற்பதோ அல்லது அவரின் உடலை எடுப்பதோ பிரச்னையை ஏற்படுத்தும் என்று, உடனடியாக திரும்ப முற்பட்டோம். ஏன் என்றால், அந்த இளைஞர்கள் அங்கு எங்கேயாவது ஒளிந்து இருந்து எம்மை நோட்டமிடலாம் என்பதால். ஆனால், அங்கு நிலவும் சூழலையும் பொருட் படுத்தாமல், தவராஜா அவரை தொட்டு வணங்கினார் !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Comments from S Thavaraja, Former Electrical Engineer, Puttalam cement works:

Dear Thillai: You have expressed the memorable heartfelt painful events at PCW. Let' Rajaratna's Soul is BLESSED. I Think we played the CRICKET match just before this event on this match Late Rajaratna got all the wickets except mine. Dear Thillai i am humbled by your Expressions about me I feel your kindness and compassion about merit forced you to over expressing my simple human dealings. Thank you dear. I am very proud to have a friend in you which started very late in our life. Manitham Enpatu Itukkinratu. Om Shanthy Shanthy OM.  Rajaratna,  Jayaweera etc. we remember and Respect you all dear Late PCW friends who were lost on both side then. Regards

"அறம் பேசுமா?"

2 weeks 3 days ago

"அறம் பேசுமா?"


அறம் பேசுமா? என்று என்னை கேட்டால், கட்டாயம் இல்லை என்று தான் சொல்வேன். கர்ணன் படம் பார்த்து விட்டு, அரங்கிற்கு வெளியே வந்த பொழுது என் மனம் அப்படித்தான் இருந்தது. நான் அப்பொழுது பாடசாலை இளம் மாணவன். விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் என கருதப்படும் கிருஷ்ணர், நிராயுதபாணியாக நிலத்தில் இறங்கி, மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கும் கர்ணனை கொல்ல. யுத்த தர்மத்திற்கு எதிராக,  அருஜுனனை அம்பு விட தூண்டுகிறான். ஆனால் அவன் சாகவில்லை. எனவே, பொய் வேடம் போட்டு, அம்பு துளைத்த கர்ணனை ஏமாற்றி புண்ணியங்களை (ஆயுள் முழுக்க தானம் செய்ததால் பெற்ற புண்ணியம் முழுவதையும்) தானமாக  கேட்கிறான். அவனோ அந்த நிலையிலும் கொடுக்கிறான். அதன் பின் கர்ணன் இறந்து விடுகிறான். அறம் அவனை காக்கவில்லை. அறத்திற்கு எதிரானவனின் பக்கம் போய், அவனை கடவுளாகவும் பிற்காலத்தில் ஆக்கிவிட்டது. புண்ணியம் செய்தவன் இறந்து விட,  அந்த புண்ணியத்தை ஏமாற்றி பெற்றவன் கடவுளாகிறான். இது தான் என் மனதை குழப்பிக் கொண்டு இருந்தது.


அன்று தீபாவளியை எம் பாடசாலை கொண்டாடிக்கொண்டு இருந்தது. என் மனக் குமுறல் எரிமலையாக வெடித்தது. நான் எப்படியோ துணிவை வரவழைத்து, அதிபரிடம், மிக பணிவாக என் கருத்தை கூறி, நான் இன்று இரவு நடக்க போகும் மகாபாரத நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் போட மாட்டேன் என்று திடமாக, ஆனால் அடக்கமாக கூறினேன்.


அதிபர் என்னை தனது அலுவலகத்திற்கு கூட்டி சென்று, நீ நடிக்கிறாய் , இல்லை என்றால் பாடசாலையில் இருந்து விலத்துவோம் என்று வெருட்ட தொடங்கினார். நான் மிக பணிவாக என் நிலையை காரணத்துடன் கூறினேன்.  அவர் என்னை பிரம்பால் அடித்து, ஒரு மாதம் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன்.
நான், என் மனதில் இருந்த உண்மையை, பொய் கூறாமல், உண்மைக்கு புறம்பாக நடிக்காமல், அதை அப்படியே கடைபிடிக்க விரும்பினேன். அதையும் அடக்கத்துடனும் பணிவுடனும். ஆகவே எனக்கு இந்த தண்டனைகள் ஒரு வேதனையையும் தரவில்லை.


பொய் பேசாமலிருப்பது சிறந்த அறம். அதை நிஜமாகவே கடைபிடிப்பவர்களுக்கு தர்மங்கள் செய்யத் தேவையே இல்லை என்ற திருவள்ளுவரின் குறள் தந்த இன்பத்துடன் வீடு சென்றேன்.


 "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று." (குறள் – 297)


அதன் பின் நான் பல்கலைக்கழகம் நுழைந்து பொறியியலாளராகவும் பட்டம் பெற்றேன். என் முதல் நேர்முகப் பரீடசைக்கு அன்று சென்று இருந்தேன். என் பாடசாலை அல்லது பல்கலைக்கழக வாழ்வில் நடந்த, மறக்க முடியாத சம்பவம் ஒன்றை கூறச்  சொன்னார்கள். நானும் எந்த பொய்யும் சொல்லாமல், எனக்கு நடந்த பிரம்படியையும், தற்காலிக நீக்கத்தையும் அதற்கான காரணத்தையும் கூறினேன். அவ்வளவுதான், நீங்க போகலாம் என ஏளன சிரிப்புடன் உடனடியாக முடித்து விட்டார்கள். அது ஏன் என்பது ஒரு மாதம் கழித்து வந்த ' உங்கள் தேர்வு வெற்றி பெறவில்லை' என்ற வாசகம் எனக்கு தெரிய படுத்தியது.
அங்கு ஒரு பொய் சொல்லி இருந்தால் அல்லது மறைத்து இருந்தால்  கட்டாயம்  வேலை கிடைத்து இருக்கும். ஆனால் நான் கவலைப் படவில்லை. அறம்  பேசுதோ பேசவில்லையோ,  முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கை என்னை மீண்டும் விண்ணப்பம் செய்ய வைத்தது!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

இன்னொருவர் கடந்து வந்த பாதை

1 month 1 week ago
http://1.bp.blogspot.com/_XsbRJpGRhp0/TFR50OkOdtI/AAAAAAAAAXc/Irhmr0Fwxio/s320/life.jpg
 
ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து.

அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார்.

ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் அன்னியோன்யமாய் பேசினார்.

பலாலி கிழக்கில் காணி, நிலங்களுடன் பெருமையாய் வாழ்ந்திருந்ததாயும், பாதுகாப்புவலையத்துக்குள் அவை உட்பட்டுப் போனதால் தங்களின் குடும்பச் சொத்துக்கள் என்று அவற்றை தம்மால் உரிமைகொண்டாடவோ, விற்பனை செய்யவோ முடியாதிருக்கிறது என்றார்.

விடுதலைப்போராளியாய் வாழ்ந்திருந்திருக்கிறார் மட்டக்களப்பில். உட்கட்சிப் பிரச்சனையின் பின் விடுதலை வெறுத்து ஓதுங்கிக் கொண்டாராம்.

வெளிநாட்டில் வேலை செய்து தங்கைகளுக்கு கலியாணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். தாயார் தன்னுடன் வசிக்கிறாராம். அவருக்கு இன்னும் கல்யாணகமாகவில்லை  என்றும் அறியக்கிடைத்தது.

பிரான்ஸ்,  நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டு வருடம் விசா இன்றி அலைந்திருக்கிறார். அது பற்றி அவர் சொன்ன விடயங்களே என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. வாழ்வின் உச்சம் தொட்டாரோ என்னவோ, ஆனால் நிட்சயமாக வேதனையின் உச்சம் தொட்டிருந்தார் இந்த மனிதர்.

பிரான்சில் விசா இல்லாமல் பல தமிழர்களிடம் கள்ளமாய் வேலை செய்த பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாய் புன்னகையுடன் சொன்னார். மேசன் வேலை, கழுவல் வேலை, கடையில் எடுபிடி வேலை, என்று எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறார். வேதனை என்னவென்றால் அடிமாட்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கும் பல நாட்கள் கைகட்டி, வாய்பொத்தி அலையவேண்டியிருந்ததாம். ”மனிசனுக்கு மதிப்பில்ல அங்க” என்று அவர் சொன்னபோது ஏனோ பலமாய் வலித்தது.

பிரான்ஸ்சில் இன்னொரு குடும்பத்துடன் ஒரு வீட்டில் வாடகைக்கிருந்தாராம்,. அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்ததாயும் அவற்றில் ஒன்றில் அக்குடும்பமும் மற்றயதில் இவருடன் சேர்த்து 5 ஆண்களும் வாழ்ந்திருந்திருக்கிறார்கள்.

வீட்டு உரிமையாளர் இவரை தினமும் குளிக்காதீர்கள் தண்ணீர் ”பில்” அதிகமாய் வருகிறது என்று சொன்னதாயும், தான் அவரிடம், மேசன்வேலை 15 மணிநேரம் செய்து வந்தபின் எப்படி குளிக்காமல் இருப்பது என்று கேட்ட போது அது உங்கட பிரச்சனை என்று அவர் சொன்னதாயும், பின்பு தான் அதிக வாடகை குடுத்த பின்பே தினமும் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

எனக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது.

வெளிநாட்டில் பணத்துக்காய் மனிதர்கள் பிணமாவாதயும், வாழ்கையை மனிதத்துடன் வாழ மறுக்கிறார்கள் என்றும் சொன்னார்.

நெதர்லாந்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்ததாயும், வின்டர் குளிரில் வாழ்ந்திருந்த நேரத்தை விட விறைத்திருந்த நேரங்களே அதிகமென்றார்.

ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து IMO மூலமாக ஊர் திரும்பியிருக்கிறார். 

வெளிநாடு போவதற்கு பட்ட கடனையும், தங்கைகளுக்கு கலியாணத்தையும் செய்ய வெளிநாடு தனக்கு உதவியிருந்தாலும், அது கற்பித்த பாடங்களே தனக்கு பிச்சையெடுத்தென்றாலும் ஊரிலே வாழ் என்று உபதேசம் பண்ணியதாம்.

ஊர் வந்து, ‌ ஹோட்டேல் மனேஜ்மன்ட் படித்து, தற்போது விடுதி முகாமையாளராக வாழ்வதாயும், வருமானம் சிறிது என்றாலும், வலியில்லாத வாழ்க்கை வாழ்வதாய் சொன்ன போது அவரின் முகத்தைப் பார்த்தேன், உண்மையின் உண்மை தெரிந்தது அவர் முகத்தில்.

சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?"..[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

1 month 2 weeks ago
சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?"
 
காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில், தான் பார்க்கும் நோயாளிகளை முறையாக இன்னும் ஒரு செவிலியிடம் பாரம் கொடுத்து விட்டு, தற்கொலையை எனோ ஒரு தீர்வாக எடுத்து, இரவு இந்த உலகை விட்டு போக வேண்டும் என்பதே அவளின் இறுதி முடிவாக இருந்தது. அதற்கிடையில் இது!
 
ரமேஷ் மீதான அவளுடைய காதல் ஆழமாக இருந்தாலும், காலத்தையும் சமூக எல்லைகளையும் தாண்டிய ஒரு பந்தம் இருவருக்கும் இடையில் இருந்தாலும், அவர்களின் காதல் சமூகத்தின் கடுமையான மரபுகளுடன் மோதியதால், காவியா விரக்தியின் தவிர்க்க முடியாத வலையில் சிக்கிக் கொண்டாள். சமூக எதிர்பார்ப்புகளின் கனமும், அவளது காதலுக்கும் வேரூன்றிய மரபுகளுக்கும் இடையிலான மோதலும், ரமேஷ் இல்லாத எதிர்காலத்தைப் பற்றிய பயமும் காவியாவிற்குள் ஒரு நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கியது. தான் ஆழமாக நேசித்த ஒருவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணமும், அவர்களின் காதல் செழிக்கக் கூடிய எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாத இயலாமையும் சேர்ந்து, அத்தகைய சோகமான தீர்வை யோசிக்க வைத்தது அவளுக்கு.
 
எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா? தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா? தற்கொலைகளில் தியாகமாக? ஒரு மானுட உச்சமா? அவளால் சிந்தித்து பார்க்கும் நிலையில் அவள் இப்ப இல்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் அவரது கதாபாத்திரங்கள் தற்கொலையால் இறக்கின்றன. ரோமியோ ஜூலியட்டின் இறுதிக் காட்சியில், இளம் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது கதைக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்து இருக்கலாம்? மற்றும் படி அது எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை!
 
இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், யாழ்ப்பாணத்துக்கே உரிய மசாலா வாசனை, பாரம்பரியத்தில் ஊறிய கலாச்சாரத்தினையும் சேர்த்து ஆழமாக எதிரொலிக்க, பாலச்சந்திரன் குடும்பம் அங்கு பெருமையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தது. பாலச்சந்திரனுக்கு ரமேஷ் என்ற ஒரு மகனும் மூன்று மகளும் இருந்தனர். அதில் ஒருவளுடன் சிறு வயது முதல் நண்பியாக இருப்பவள் தான் காவியா. அதனால் ரமேஸுடனும் தோழியாக, சிறுவயதில் நெருக்கமாக இருந்ததால். பிற்காலத்தில் அது காதலாக மாறி, ஒருவருக்கொருவர் சகவாசத்தில் ஆறுதல் கண்டனர். என்றாலும் அவர்களின் காதல் இரகசியமாகவே மலர்ந்தது. ஏனென்றால் அவர்களுக்கிடையில் சமூக ஏற்றத் தாழ்வுகள், அவர்களின் இணைப்புக்கு குறுக்காக நின்றது. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும் [அழகாகத் திலகம் இட்ட அழகிய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும்] மட்டும் அல்ல,
 
"அறம்திகழ் தவமும் அகிலமும் இதனால்
அழியுமென் றயன்படைத் திலனோ
சிறந்தவேல் விழியை முன்படைத்தயர்ந்து
செங்கரம் சோர்ந்ததோ திகைத்து
மறந்ததோ கரந்து வைத்ததோ களப
வனமுலைப் பொறைசுமந் துருகி
இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல்
எய்துமோ அறியொணா திடையே."
 
அறநெறி விளங்கும் வீட்டு நெறியும் உலகியல் நெறியும் இடையினால் அழியும் என்று எண்ணி இடையினைப் படைக்கவில்லையோ? சிறந்த வேல் போன்ற கண்களை முதலில் படைத்து இளைத்துச் சிவந்த கைகள் தளர்ந்தனவோ? செய்வதறியாது மதிமயங்கி மறந்துபோனினனோ? அல்லது அவள் வடிவில் மறைத்து வைத்திருக்கிறானோ? சந்தனக் குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச் சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ? இடை இருக்கிறதோ இல்லையோ அல்லது இனி மேல்தான் உண்டாகுமோ? இடை இருப்பதாகவே அவளிடம் தெரியவில்லை. அப்படி ஒரு அழகு அவள். அவள் தான் காவியா!
 
அவள் தனது பிரகாசமான புன்னகையுடனும் உறுதியுடனும், காதல் அனைத்தையும் வெல்லும் எதிர்காலத்தை கனவு கண்டாள். ரமேஷ், சமமான உற்சாகத்துடன், ஆனால் குடும்பப் பொறுப்புகளின் சுமைகளை சுமந்து கொண்டு, தனது இதயத்தின் ஆசைகள் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட கடமைகளுக்கு இடையே, தவிர்க்க முடியாத மோதலுடன் போராடினான். தன்னால் இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற தெம்பு அவனிடம் இருந்தது. ரமேஷ், யாழ்ப்பாணத்தில் உள்ள பல மேல் மட்ட தமிழ் மக்களைப் போலவே, பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு இறுக்கமான சமூகத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே, குடும்ப மரியாதை, கடமை, பெரியவர்களுக்கு மரியாதை போன்ற மதிப்புகளை ஊட்டி வளர்க்கப் பட்டவன். அதிலும் மூன்று தங்கைகளுடன் பிறந்தவன் என்பதால் பொறுப்பும் அதிகம் இருந்தது. இந்த கலாச்சார, கடமை நெறிமுறைகள் அவனது தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் ஆசைகளுடன் மோதின.
 
ரமேஷின் போராட்டத்தின் அடிப்படையானது காவியா மீதான அவனது இதயப்பூர்வமான பாசத்திற்கும் அவனது குடும்பம் அமைத்துள்ள, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதைக்கும் இடையிலான மோதலாகும். பாரம்பரிய நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த அவனது குடும்பம், ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களுடன் இணங்கக்கூடிய இன்னும் ஒரு ஒத்த குடும்பத்தில் அவனுக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இருந்தாலும் ரமேஷின் இதயம் காவியாவுக்கே ஏங்கியது. குழந்தைப் பருவத்தில் உருவான அவர்களின் பிணைப்பு, காலப்போக்கில் வலுப்பெற்று, எல்லைகளைத் தாண்டிய காதலுக்குச் சான்றாக இருந்தது. அவன் தனது இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றவும், அன்பே வழிகாட்டும் சக்தியாக இருக்கும் எதிர்காலத்தைத் தழுவவும் விரும்பினான்.
 
இதனால், தன் தங்கையினூடாக தன் காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தினான். தான் காவியாவை திருமணம் செய்தாலும், கட்டாயம் மூன்று தங்கையின் வாழ்வை தீர்மானிப்பேன், நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். ஆகவே பயம் தேவையில்லை என்று உறுதிமொழியும் கொடுத்தான். என்றாலும் அவனது தந்தை பாலச்சந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாயும் கூட தந்தையின் பக்கமே நின்றாள். இதனால் ஏற்பட்ட தவறான புரிதல்களும் குடும்ப அழுத்தங்களும் காவியா, ரமேஷ் இடையே கடக்க முடியாத சுவர்களை எழுப்பின. ஏங்கித் தவிக்கும் இரு இதயங்களுக்கும் ரமேஷ் குடும்பத்தின் தவிர்க்க முடியாத கோரிக்கைகளுக்கும் இடையில் அகப்பட்ட காதலர்கள் இருவரும், வாழ்வில் ஒரு பள்ளத்தை எதிர்கொண்டனர். தங்கள் காதலுக்கு, தாங்கள் சேர்ந்த உலகில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்ற மனவருத்தம் தரும் உணர்வு அவர்களை கடுமையான நடவடிக்கைகளைச் சிந்திக்கத் தள்ளியது. என்றாலும் ரமேஷ் தான் இன்னும் பெற்றோருடன் கதைத்து பேசி நல்ல முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தான்.
ஆனால், குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அழுத்தம், சமூகத்தின் தீர்ப்பு பற்றிய பயம் மற்றும் அவர்களின் இக்கட்டான நிலைக்கு சாத்தியமான தீர்வு கிடைக்காது என்ற விரக்தி ஆகியவை காவியாவின் தோள்களில் தாங்க முடியாத பாரமாக மாறியது. இது அவளுடைய தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் அன்பைத் தடுக்கும் சமூகத் தடைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியின் வழியில் நிற்கும் கடக்க முடியாத தடைகள் பற்றியதாகவும் விரிந்தது. தன் இறப்பு மூலம் தன் வேதனைக்கு, மனச் சஞ்சலத்துக்கு முடிவு கட்டலாம் என்பதுடன் இது பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து, பிள்ளைகளின் கருத்தையும் அலசும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்று எண்ணினாள்.
 
காதல் வெற்றி பெற முடியாததால், அவள் இதயம் வேதனைப் பட்டபோது, அவளுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் ஒரு தீர்வாக அவளுக்கு தோன்றியிருக்கலாம்? இது ஒரு பகுத்தறிவு முடிவு அல்ல, மாறாக அவளது வேதனையின் ஆழத்தின் பிரதிபலிப்பு, அவளுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் அவள் மூழ்கடிக்கப் பட்ட போது தன்னை இழந்த நிலையில், ஏற்பட்ட ஒரு உணர்வு.
 
அவள் தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால், அது பிந்திவிட்டது. பக்கத்து வீட்டாரின் துணை பெற்று, கதவு உடைத்து திறக்க நேரம் கடந்து விட்டது. தந்தையின் எதிர்பாராத திடீர் விபத்து மரணத்தால், மனம் உடைந்த இளம் உயர் வகுப்பு மாணவன் தாயின் சீலையில் கழுத்தில் தூக்கு போட்டு அங்கு சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் விட்டு சென்றது தாயும், தங்கையும், தந்தை இல்லா நேரம் ஒரு வலுவான துணையாக இருந்து பொறுப்புகளை சுமக்க வேண்டிய ஒருவன், தன்னை மரித்து அதில் இருந்து தப்பிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும் என்று அவளுக்கு, காவியாவுக்கு தோன்றியது. அப்படி என்றால் ? அவள் சிந்திக்க தொடங்கினாள்!
 
ரமேஷ் மீதான அவளது காதலுக்கு இடையூறுகள் தோன்றி, கடக்க முடியாத தடைகளை எதிர்கொண்டபோது, அவள் அனுபவித்த தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து, தற்கொலை என்ற இந்த கடுமையான நடவடிக்கை பற்றிய அவளது சிந்தனை தோன்றியது என்னவோ உண்மையே. ஆனால் இப்ப இந்த தொங்கும் சடலத்தையும், வெம்பி வெம்பி அழுது புலம்பிக் கொண்டு இருக்கும் அவனின் தாயையும் தங்கையையும் பார்த்த பின், அவள் மனதில் ஒரு ஞானம், ஒரு தெம்பு பிறந்தது. தான் சாவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை, தன்னை விரும்பியவர்களுக்கு, தன் குடும்பத்துக்கு கவலை மற்றும் துன்பத்தையே அது கொடுத்து, அவர்களின் வாழ்வைக் கூட அது சிதைக்கலாம் என்ற ஞானமே அது!
 
அவள் அன்று வேலை முடிய நேராக ரமேஷ் வீட்டுக்கு போனாள். முன்பு எத்தனையோ தடவை ரமேஷின் தங்கையுடன் அங்கு போனவள் தான். அவனின் பெற்றோர்களை சந்தித்தவள் தான். ஆனால் இந்த சூழ்நிலை வேறு. "தற்கொலை தீர்வாகுமா?" என்ற மனதில் ஏற்பட்ட போராட்டத்துக்கு ஒரு மறுமொழியாக அங்கு போகிறாள். வலது கால் எடுத்து மங்கள வாத்தியம் ஒலிக்க ரமேஷின் குடும்பத்துடன் இணைவதற்கு, தானே அவர்களுடன் கதைத்து, விளங்கப்படுத்தி உறுதிகொடுக்க போகிறாள். அது தான் வேறுபாடு.
 
காவியாவுடன் ரமேஸும் இணைய, இருவரின் உணர்ச்சிபூர்வமான நேர்மையும் ஆர்வமும் நிறைந்த வேண்டுகோள், ரமேஷின் பெற்றோர்களுக்கு எதையோ தூண்டியது. மெதுவாக, பாரம்பரியத்தின் விறைப்பு தணிந்து, புரிதல் மற்றும் பச்சாதாபத்தின் ஒரு மினுமினுப்புக்கு வழிவகுத்து, பெற்றோர்களின் மன மாற்றத்திற்கான வாய்ப்பு அடிவானத்தில் மின்னியது.
 
பாலச்சந்திரன் குடும்பம், காவியா ரமேஷின் நேர்மையால் நகர்ந்து, அது உணர்த்திய ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தனர். இதனால் காவியாவும் ரமேஷும் நம்பிக்கையுடன் மீண்டும் உற்சாகமடைந்தனர், அவர்கள் கைகோர்த்து நின்றனர், இது ஒரு உடனடி புரட்சி அல்ல, ஆனால் மாற்றத்தின் விதை விதைக்கப் பட்டு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்வதற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தியது.
"தற்கொலை தீர்வாகுமா?" என்றால் கட்டாயம் இல்லை. காவியா அதைத்தான் அந்த கடைசி நிமிடத்தில் மனம் மாறி தெம்பு பெற்று, ரமேஸுடன் சேர்ந்து செய்தாள். அந்த இளம் உயர் வகுப்பு மாணவனின் தற்கொலை எந்த தீர்வையும் தந்ததா? என்ற காவியாவின் கேள்வி, அவளுக்கும் ஒரு வாழ்வு சமைக்க வழிவகுக்கிறது என்று நம்புவோம். பாலச்சந்திரனும் அதற்கு எந்த தடையும் இல்லாமல் ஒத்துழைக்கட்டும்!
 
"தற்கொலை தீர்வா? இல்லை
வாழ்க்கை ஒரு பாடல்!
ஒவ்வொரு இசைச்சுரமும் இடைநிறுத்தமும்
வளர ஒரு வாய்ப்பு!
வலி கடந்து போகும்
காயங்கள் காய்ந்து குணமாகும்!
ஆறுதல் ஒன்று தேடுங்கள்
அன்பில், நண்பரில் உங்களில்!"
"பொறுமையுடன் வாழ்நாள் இருந்தால்
பல பெருமைக்கு ஆளாவாயே!
துணிந்து நின்றால் துர்க்கையையும்
நீ வதம் செய்திடுவாயே!
சரித்திரத்தில் இடம் பெற்று
சாதிக்க பிறந்த மனிதா!
நிற்காமல் ஓடு மானிடா
தற்கொலை உனக்கு எதற்கடா?"
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
430667976_10224782078762084_383574583930429970431_10224782079642106_732898873804430657300_10224782078882087_565978060447

யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்?

1 month 3 weeks ago
யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா?
 
 

என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில்  நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும்  தொழில் செய்துகொண்டிருந்தேன்.

அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து  உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன்.

மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும்,  நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார்.
எனது வேலையைத் தொடங்கினேன்.

முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது.

நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும்.

85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்.. கண்பார்வை  மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார்.  தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர்.

மிகவும் குசும்பு பிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால்  எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார். இல்லை, இல்லை என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே  அன்று அவரிடம் இருந்து தப்பினேன்.

அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன்.

அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன்.

இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும்.

எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம்.

அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப் பக்கமாக எறித்துக் கொண்டிருக்கிறது.

ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன்.

இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள்.

என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது.

அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை

அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள்.

அம்முதியவரின்  கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன.

மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன். நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார்.
மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன்.

தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார்.

மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன.

அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்... ”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது,  கைகளை மெதுவாய் நீவிவிட்டேன்.

அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார்.

மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது.

ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு.

எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது.

நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று.
இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா.

http://visaran.blogspot.com/2009/10/blog-post_19.html

Checked
Thu, 04/18/2024 - 23:35
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed