யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்

விடுப்பு ராணிகள்

Fri, 16/03/2018 - 12:44

வாத்தியார் தோட்ட வேலையை முடித்து விட்டு கைகால் அலம்பி கொண்டு

 "டேய் குகன் ஆட்டுக்கு குழை ஒடிச்சு போட்டனீயே"

"ஒம் அப்பா "

"எங்க அம்மா"

"எங்க போறது இங்க தான் நிற்கிறேன், டி போடுறன்  கொண்டு வாரன்"

.

"உவள் சுதா அவளோட கம்பசில படிக்கிற குகனை லவ் பண்ணுறாள்"

"நீ கண்டனீயே"

"பக்கத்து வீட்டு பவளத்திற்கு முன் வீட்டு பர்வதம் சொன்னவளாம்"

"அவளுக்கு யார் சொன்னதாம்"

"அவளுக்கு செல்வராணி சொன்னதாம்"

"அவளின்ட கதையை கேட்டு ஒரு பொம்பிளை பிள்ளையின் வாழ்க்கையில் விளையாடதையுங்கோ, அவள் 'R Q' வேற வேலையில்லை ஊர் விடுப்புக்களை தன்ட இஸ்டப்படி சொல்லிக்கொண்டு திரிவாள் நீங்களும் நம்பிகொண்டிருங்கோ"

செல்வராணி காலையில் வெளிக்கிட்ட என்றாள் பின்னேரம் வந்தா ஊரில இருக்கிற புதினம் எல்லாம் எடுத்து கொண்டு வந்திடுவா.அடுத்த நாள் கை கால் வைத்து தன்னுடைய இஸ்டப்படி அந்த கிராமத்திற்கு சென்றுவிடும்

செல்வராணிக்கு  "ஆர் க்யூ" என்று பட்ட பெயரை குகன் வைத்து விட்டான் அது அவனது வீட்டிலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரும்   பாவிக்க தொடங்கி விட்டார்கள்.  செல்வராணி என்ற பெயரை ஆங்கிலத்தில் மாற்றி அதன் முதல் எழுத்துக்களை   தான் வைத்தான்.

அதே போன்று அவளது கணவன் பேரம்பலத்தை பிபி என்று அழைப்பார்கள்.மொட்டை கடிதம் போடுதல்,பெட்டிசன் போடுதல்  போன்றவற்றுக்கு பெயர் போனவர்தான் பேரம்பலத்தார்.பெட்டிசன் பேரம்பலம் போடாத பெட்டிசனே இல்லை என்று சொல்லாம்.

இப்படித்தான் ஒரு நாள் குகன் மாமரத்தில ஏறி அக்கம் பக்கத்து வீடுகளை விடுப்பு பார்த்து கொண்டிருந்தான்.

" பரதேசி பேரம்பலம் தான் போட்டிருப்பான்,அவன் வரட்டும் அவனின்ட காலை முறிக்கிறேன்"

என்று நாலு வீடு கேட்க தக்கனா கத்திகொண்டிருந்தார் பாங்கர் பரம்.இவரின்ட சத்ததிற்கு வீட்டுக்குள்ளிருந்த‌ திருமதி பரம் வெளியே ஒடிவந்து

"ஏனப்பா உப்படி கத்திறியள் நெஞ்சு நோகப்போகுது"

"கத்தாமல் என்ன செய்ய சொல்லுறாய்,நாங்கள் ரோட்டோட வீடு கட்டுறமாம் என்று உவன் பரதெசி கவுன்சில்காரனுக்கு அறிவிச்சு போட்டான்,"

"பக்கத்துவீடும் றோட்டொடதானே இருக்கு,பிறகு ஏன் எங்களை மட்டும் கட்டவிடமாட்டாங்களாம்"

 

"கவுன்சில்காரனுக்கு அவங்கள் காசு கொடுத்தவங்களாம்"

"அப்ப நீங்களும் கொடுக்க வேண்டியது தானே"

"கொடுத்திட்டன் கொடுத்திட்டன் "

"பிறகு ஏன் கத்தி கொண்டிருக்கிறீயள்"

"இப்ப சும்மா நூறு ரூபா வீண் தானே"

"அவனை கண்டன் என்றால் பெட்டிசன் எழுதுற‌ கையை முறிச்சு போட்டுத்தான் மற்ற வேலை எனக்கு"

"சும்மா றோட்டீல நின்று கத்திகொண்டிருக்காதையுங்கோ பிறகு அவன் பொலிஸுக்கு போய் எதாவது அண்டி போடுவான் பெரியவளின்ட‌  கலியாணம் முடியும் வரை சும்மா இருங்கோ"

"ஏன் அவனின்ட மனிசி போய் குத்தி கித்தி போடுவாள் என்று நீ பயப்பிடுறீயே"

"போன தடவை பவளத்தின்ட மகளுக்கு வந்த   லண்டன் வரனை அவள் தானே தடுத்தி நிறுத்தினவள்"

"அதென்று உமக்கு தெரியும்,"

" பவளம்தான் சொன்னவள்,அவள் செல்வராணிக்கு   தனக்கு இரண்டும் பெடியள் என்ற திமிரில ஊர்சனத்தின்ட கலியாணங்களை குழப்பி கொண்டு திரியிறாள்"

"பவளமும் செல்வராணி யும்  உம்முடைய சொந்தக்காரர் தானே"

"அதுகளின்ட பரம்பரையே எரிச்சல் பிடிச்ச பரம்பரை, ஆனால் நாங்கள் அப்படியில்லை"

"வெளியில் நின்று குடும்பகதைகளை கதைக்காமல் உள்ள போவம் வாரும் ,ஒரு பிளேன் டீ போடும் வாரன்" கூறியபடி மனைவியை பின் தொடர்ந்து உள்ளே சென்றார் பாங்கர் பரம்.

 

அன்று சுரேஸுக்கு நல்ல விடுப்பு கிடைத்து விட்டது ,அம்மா என்று அழைத்த படி வீட்டினுள் ஒடிச்சென்றான்.

"அம்மா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமே"

"சொன்னால் தானே தெரியும்"

" பாங்கரின்ட வீட்டுக்கு பிபி பெட்டிசன் போடிட்டாராம்"

"யார் சொன்னது"

" பாங்கர் தான் ஊர் கேட்க கத்தினார் நான் மரத்தில இருந்து கேட்டனான், பவளம் அன்ரியின் மகளின்ட லண்டன் வரனையும் செல்வராணி குழப்பினவவாம் என்று பாங்கரின்ட வைவ் சொல்லி கொண்டிருந்தா"

 

"உனக்கு ஏன் பெரிய ஆட்களின்ட கதை  ,போய் பெடியளோடா போய் விளையாடு"

"தம்பி கதவு தட்டி கேட்குது போய் பார்,யார் வந்திருக்கினமென்று"

 

"அம்மா! பவளம் அன்ரி வந்திருக்கிறார்"

"வாங்கோ அக்கா வாங்கோ இருங்கோ"

 

இருவரும் சுகம் விசாரித்த பின்பு

"என்ன அக்கா திடிரென்று இந்த பக்கம்"

"உவள் செல்வராணி இந்த பக்கம் வந்தவளே"

"இல்லை ஏன்"

"உனக்கு விசயம் தெரியுமோ அவளின்ட பெடியன் இந்த முறையும் பாஸ் பண்ணவில்லையாம்"

"அப்படியே பெரிசா புளுகி கொண்டு திரிஞ்சாள்"

"அவளின்ட மனசுக்குத்தான் உப்படி நடக்குது"

"மற்றவன் வெளி நாட்டுக்கு களவாய் போனவன் இப்ப எங்க நிற்கிறானாம்"

"நான் அவளிட்ட கேட்கவில்லை கேட்டாள் புளுகி தள்ளுவாள் மலிந்தா சந்தைக்கு வரும் தானே,சுவிஸ்க்கு தான் போய்யிருப்பான் என்று நினைக்கிறன்"

"அக்கா ,ஞாயிற்று கிழமை வீரகேசரி பேப்பரில வந்த கதையை படிச்சனீங்களா?"

"இல்லை ஏன்"

"நான் படிச்சனான் உவள் சுதா வின்ட கதை போல இருக்கு உவன் பிபி தான் எழுதியிருக்கான் ஊர்குருவி என்ற புனை பெயரில்"

"அப்படி எழுத முடியாதே"

""எல்லாத்தையும் எழுதி போட்டு கடைசியில் சுத்த கற்பனை எண்டு போட்டிட்டான்"

"பேப்பரை உன்னிட்ட இருக்கோ ஒருக்கா தா நானும் வாசிச்சு பார்ப்போம்"

"உவள் செல்வராணியின்ட பேப்பரைத்தான் நானும் வாசிச்சனான் அவளிட்ட‌ ,வாங்கி தரட்டே"

"சீ, சீ, நான் போகும் பொழுது பர்வதத்திட்ட‌ வாங்கி கொண்டு போறன்"

"வந்த விசயத்தை மறந்திட்டு சும்மா கதைச்சுக்கொண்டிருக்கிறன் பெரியவளுக்கு வெளிநாட்டு வரன் ஒன்று வந்திருக்கு ,மாப்பிள்ளை வீட்டார் பெண்னை பார்க்க வேணும் என்று சொல்லுயினம் அது தான் உன்னிட்ட கேட்பம் என்று வத்தனான்"

"போனமுறை செய்த மாதிரி இந்த முறையும் வீட்டை கூப்பிடுங்கோவன்"

,"எனக்கு வீட்டை கூப்பிட விருப்பமில்லை, உவள் செல்வராணி மணந்து பிடிச்சிடுவாள் அது தான் வேற எங்கயாம் காட்டுவோம் என்று நினைக்கிறன், என்ட சிங்காரிக்கும் தெரியாம இருந்தால் நல்லம் "

" அப்ப கோவிலுக்கு கூட்டிகொண்டு போய் காட்டுங்கோ"

"நீ தான் அவளை வெள்ளிக்கிழமை ஒருக்கா கூட்டிகொண்டு போகவேணும்"

"சிங்காரிக்கு சொல்லிபோடாத பொம்பிளை பார்க்கப்போயினம் என்று"

"சரி அக்கா வெள்ளிக்கிழமை நான் கூட்டிகொண்டு போறான்"

இருவரும் கதைத்தபடி படலையை திறக்க,எதிரே சென்ற செல்வ‌ராணி

 "என்ன இரண்டு பேரும் நிற்கிறீயள் எதாவது விசேசமே"

"சும்மா வந்தனான் "

"மகளுக்கு எதாவது வரன் புதுசா வந்திச்சோ"

"இல்லை அக்கா ,உங்களுக்கு எதாவது தட்டுபட்டால் சொல்லுங்கோ"

"சொல்லுறன் சொல்லுறன்"

"உங்கன்ட மகன் வெளிநாடு போனான் எங்க நிற்கிறான்"

"அவன் கனடாவுக்கு போயிற்றான் அவனுக்கு பேப்பர் எல்லாம் கொடுத்திட்டாங்கள் "

மீன்காரன் மீன் ,மீன் என கூவிக்கொண்டு வர எல்லோரும் அவனை மொய்த்துக்கொண்டனர்..

அந்த‌  இடம் ஒரு சின்ன சந்தையாக மாறிவிடும் ஒரு அரை மணித்தியாலத்திற்கு அதன் முதலாளி மீன்கார அந்தோனி தான்.

அவரிடம் கடனுக்கும் மீன் வாங்குவார்கள் .

"என்ன வர வர மீன் விலை கூடிகொண்டு போகுது"

"என்னத்தை செய்ய ஒரு பக்கம் பெடியள் மற்ற பக்கம் நெவி உதுகளை சுழிச்சு கொண்டு மீன் பிடிக்கிறதென்றால் அவன்களுக்கு கஸ்டம் தானே,விடியற்காலை நெவி போர்டுக்கு அடிச்சு போட்டாங்கள் அவன்கள் திருப்பி செல் அடிச்சு தள்ளுறாங்கள்"

"இனி உன்னிட்ட வாங்கிறதிலும் பார்க்க சந்தைக்கு போய் வாங்கலாம்"என்று சொல்லி போட்டு செல்வராணி அந்த இடத்தை விட்டுஅகன்றாள்

"போறபோக்கில நாங்கள் எல்லாம் மீன் சாப்பிட இருப்போமோ தெரியவில்லை"

"ஏன் அப்படி சொல்லுறாய் அந்தோனி "என எல்லோரும் கோரோசாக‌

குரல் கொடுத்தனர்

",கடற்கரை பக்கம் நிலமை நாளுக்கு நாள் மோசமா போய் கொண்டிருக்கு இன்றைக்கு ஒரு பெரிய மீன் மட்டும் தான் கிடைச்சுது சமனாக வெட்டி பிரிப்போம்" கூறிய படி கத்தியை தீட்டி மீனை வெட்டி கொடுத்துவிட்டு கழிவுகளை வீதியோரம் வீசினான்.

 மற்ற தெருவுக்கு இன்றைக்கு மீன் இல்லை என்றவன் சைக்கிளை தனது வீட்டுக்கு பக்கம் செலுத்தினான் .

சந்தை கலைந்து ஒரு மணித்தியாலத்தின் பின் அதே இடத்தில் செல் வந்து விழுந்தது கழிவிகளை தின்றுகொண்டிருந்த நாய்கள் சிதறின.ஒரே ஓலம் பெடிசன் பேரம்பலம்,பாங்கர் பரம்,வாத்தியார் ,குகன், செல்வராணி,பவளம்,சுதா,பர்வதம்,பவளத்தின் மகள் ,செல்வராணியின் இரண்டாவது மகன் எல்லோரும் ஒடினார்கள் .வீட்டை விட்டு ஓடினார்கள் ,ஊரை விட்டு ஒடினார்கள் ,நாட்டை விட்டே ஒடினார்கள் ....மீன்கார அந்தோனி ஊர் விட்டு ஒடி புதிய தொழில் தேடினான்...

 

காலமும் ஒடியது....

 

குடை ராட்டினம்

Thu, 15/03/2018 - 14:21

 

 

 

                                        

                                                                               குடை ராட்டினம்

 

images?q=tbn:ANd9GcTGoaqYZj_TS4Y4fYiy8G-

 

 


கண்ணுக்குள் நூறு கனவு.

ஒரு பார்வை ஒரு உதட்டசைவு ஒரு புன்முறுவல்

அடடா.. இதைத்தான் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து என்று பாடி வைத்தார்களோ? வந்த வேலை மறந்து மீண்டும் மீண்டும் அதே தேடல்..
பார்த்த விழி பூத்திருக்க அங்கே ஒரு மௌன நாடகம் அரங்கேறியது.
ஆரம்பப் பாடசாலையை முடித்து இன்று உயர்தர பாடசாலையில் சேர்வதற்காக வந்திருக்கும் பல்லின மாணவர்களின் கூட்டம் அழகிய மலர்த்தோட்டம்.
இத்தனைபேர் நடுவில் அவள் மட்டும்.....


என்ன இது... பார்வையை எங்கும் அலைமோத விடாமல் ஒரே இடத்தையே காந்தமாய் கட்டிப்போட்டது
பதினாறின் பருவங்கள் உள்ளுக்குள் உமிழ்ந்து உடலெங்கும் மின்சாரம் பாய்ச்ச....
அவளுக்குள்ளும் அதே நிலைதானோ? அவளது பார்வையும்; அடிக்கொரு தடவை மின்வெட்டி மீண்டது.
பாடசாலை ஆரம்ப முதல்நாள்.

வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவர்களாகவே பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
படிப்பில் அதி சுட்டியான பிறேம் அது முதல் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாதபடி காதல் அந்த இரு இளம் உள்ளங்களையும் ஆட்சி செய்ய....
அங்கு கல்வி பின்தள்ளப்பட்டு காதல் முன் வைக்கப்பட்டது.
இரவு பகலாக கைத்தொலைபேசியுடனேயே காலம் நகர்ந்;தது.
அபிநயாவும் பிறேமும் காதல் வானில் சிறகடிக்க சுற்றியுள்ள உறவுகளோ உலகமோ அவர்களுக்கு துச்சமாகியது.
எங்கேயும் காதல் எதிலும் காதல் என்ற உலகத்தில் அவர்களைத் தவிர யாருமில்லை.
இருவர் வீட்டிலும் விடயம் தெரிந்து எல்லைகள் போடப்பட்டு அறிவுரைகள் கூறப்பட்டு எதுவுமே அவர்களிடம் எடுபடவில்லை.
அவர்களது நண்பர்குழாம் அவர்கள் காதலுக்கு வெற்றிக்கொடி கட்ட காலமும் கை கொடுக்க பதினெட்டு வயதை எட்டியதும் பதிவுத் திருமணம் செய்து தம் காதல் வாழ்வை ஆரம்பித்தனர்.

அதன்பின்தான் அவர்களுக்கு உண்மையான யதார்த்த வாழ்க்கை புரியத் தொடங்கியது.
இருவரும் மேற்படிப்பைத் தொடராததினால் நிரந்தரமான தரமான தொழில் தேட சிரமம்
வருமானம் குறைவு
செலவு அதிகம்
வாழ்க்கையின் மேடு பள்ளங்கள்
முதிர்வடையாத மனநிலை
இளமையின் எதிர்காலக் கனவுகளில் ஏறுமாறான எதிர்பார்ப்புகள்
யார் யாருக்கு விட்டுக்கொடுப்பது
யார் யாரை அனுசரித்துப் போவது
யார் யாரை திருப்திப் படுத்துவது
யார் யாருக்கு உண்மையாக இருப்பது
யாருடைய அன்பு அதிகமானது
யாருடைய அன்பளிப்பு பெறுமதியானது
யார் தமது நேரத்தை அதிகமாக குடும்பத்திற்காகச் செலவழிப்பது
தாய்மை அடைந்திருந்த அவள் அவனது அண்மையை அருகாமையை பராமரிப்பை அதிகம் விரும்பினாள்.
அவனோ குடு;ம்பச் சுமையை சமாளிக்க பெரும் பாடுபட்டான்


பிறேம் தன் நண்பர்களுடன் வெளியே செல்வதை அபிநயா அறவே வெறுத்தாள்
முன்பு போல் விதவிதமான உடை அணியவோ விதவிதமாக றெஸ்ரோரண்டில் சாப்பிடவோ நேரம் அரிதாகியது
காதலித்தபோது தன்னைத் தாங்கியவன் கல்யாணத்தின் பின் தன்னை உதாசீனம் செய்வதான உணர்வு
காதலித்தபோது விதவிதமான பரிசளித்தவன் கல்யாணத்தின்பின் தன்னை மறந்து விட்டதாக மனதுக்குள் குறுகுறுப்பு
காதலித்தபோது பிரியாய் நடந்தவன் இப்போ தன்னைப் பிரிந்து நடப்பதாய் மனதுக்குள் வெறுமை
காதலித்தபோது கொஞ்சிக் கொஞ்சிப் பேசியவன் இப்போ கடமைக்காகப் பேசுவதாய் ஏக்கம்
காதலித்தபோது தினமும் பரிசாக வாங்கிக் குவித்தவன் இப்பொழுது பரிசு தருவது காதலர் தினத்துக்கு மட்டு;தான்
மனமே வெறுமையாகி விட்டதுபோன்ற உணர்வில் தவித்தாள் அபிநயா.


வயிற்றினுள் குழந்தை உதைப்பதுகூட அவன் தன்னை அடிப்பதுபோல மனதுக்குள் மாயத் தோற்றம்
பிறேமின் மனநிலையும் அதேதான்
அபிநயாவின் மின்னல் வெட்டிய பார்வையில் வெறுமை
கவர்ச்சி காட்டிய இதழ்களில் கயமை
தேன் சொட்டிய அவளது வார்த்தைகளில் கசப்பு
காதல் பொழிந்த அவர்களது கைத்தொலைபேசி அடிக்கடி கடும் சொற்களை மட்டுமே தாங்கி கிணுகிணுத்தது.
இருவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் விரிவடைந்து ......
சில சமயங்களில் ஒட்டியும் பல சமயங்களில் ஒட்டாமலும் ஏனோ தானோ என்று வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக.....
காதலும் கடந்து போகும் என்று இதைத்தான் சொன்னார்களோ....                                                                                                                                                                                                      

அனுபவ எழுத்தாணி கொண்டு எழுதி முடிக்கும் புத்தகம் வாழ்க்கை இதில் இவர்கள் எழுதுவது எத்தனை பக்கங்களோ?

 

                                                                                  -x-x-

அவள் மட்டுமா???

Wed, 14/03/2018 - 22:48

யுத்தம் முடிவடைந்த பின்னர் நம்பிக்கை ஒளி என்னும் நிறுவனம் மூலம் அறிமுகம் ஆனாள் அவள். பிரடேனியாப் பல்கலைக் கழகத்தில் BSE செய்வதாக அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அங்கிருப்பவர்களுக்கு பண உதவி மட்டும் செய்தால் போதாது. அவர்களை அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாரத்தில் ஒரு முறை அவளுடன் போன் செய்து கதைப்பேன்.  போரினால் தாயாருக்கு  புத்தி சிறிது பிசகிவிட்டதாகவும் தமையனுக்கு காலில் சிறு காயம் என்றும் தானும் தம்பியும் படித்துக்கொண்டு இருப்பதாகவும் கூறினாள். தந்தையைப் பற்றிக் கேட்டபோது தந்தை போரின் பின் தம்முடன் இல்லை. தனியாக வாழ்கிறார் என்றும் கூறினாள்.

நீர் பிரடேனியா வந்துவிட்டால் யார் அம்மாவைப் பார்ப்பார்கள் என்றதற்கு அண்ணன் தான் பார்க்கிறார். அவருக்கும் கோழி வளர்ப்புக்கு உதவுகிறீர்களா?? என்றாள். சரி என்று அதற்கும் தேவையான பணத்தை அனுப்பினேன். கோழிக் குஞ்சுகள்  கூட்டுக்குள் நிற்பதுபோல் படம் ஒன்று அனுப்பினாள். மாதா மாதம் இலங்கைப் பணம் 6000 ரூபாய்கள் ஒரு ஆண்டாக அனுப்பிக்கொண்டு இருந்தேன். அடுத்த ஆண்டு கோழி வளர்ப்புப் பற்றிக் கேட்டதற்கு கோழிகள் பலவும்  நோயினால் செத்துவிட்டது  அன்ரி. அண்ணாவும் கால் ஏலாததில் கவனிக்கிறார் இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் தானே. அதுக்குப் பிறகு நான் வேலை செய்து குடும்பத்தைப் பார்ப்பேன் என்றும் உங்களை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள் எனக்கு அம்மா போல் என்றெல்லாம் கூறி என் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டாள்  அவள்.

இடையில் ஒருமுறை பணமனுப்ப வேண்டாம் என்றாள். ஏன் என்று கேட்டதற்கு இம்மாதம் ஸ்ரைக் நடக்குது. அதனால் வீட்டில் நிக்கிறன் என்றவுடன் நான் உருகித்தான் போனன். பரவாயில்லை நான் மூன்று வருடம் முடியும் மட்டும் அனுப்பிக்கொண்டுதான் இருப்பன் என்றுவிட்டு அம்மாதமும் பணத்தை அனுப்பினன். ஒரு வாரம் என்னால் போன் எடுக்கமுடியவில்லை. அவளிடமிருந்து போன். என்ன அன்ரி பிரச்சனை?? உங்கள் போன் வரவில்லை நான் தவிச்சுப் போனன் என்றவுடன் யாரோ பெத்த பிள்ளை என்னில் இத்தனை அன்பாக இருக்கே என்று நான் பூரித்துப் போனேன்.  

மூன்று வருடம் முடிவதற்கு ஒருமாதம் இருக்கும்போது அவளிடமிருந்து போன். "அன்ரி உங்களிட்டை ஒண்டு கேட்கப்போறன். உங்களை விட்டால் எனக்கு ஒருத்தரும் இல்லை.மாட்டன் என்று மாத்திரம் சொல்லிப் போடாதேங்கோ" என்ற பீடிகை. "சரி என்ன என்று நீர் சொன்னால் தானே தெரியும்" என்று நான்கூற, "மூன்று வருஷம் உதவி செய்து போட்டியள் இன்னும் ஒருவருடம் செய்தியள் எண்டால் நான் MA செய்யலாம். நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் நான் செய்யிறதும் விடுறதும் உங்கட கையில்தான்" என்றவுடன் எனக்கோ என்ன செய்வது என்ற தடுமாற்றம். சரி நாளை சொல்கிறேன் என்றுவிட்டு கணவருடன் கதைக்க கணவரோ மூண்டுவருசம் செய்தது காணும் பேசாமல் இரு என்றார்.

இரண்டு நாள் முடிய அவளுக்குத் தொலைபேசி எடுத்து MAசெய்யுங்கோ என்றதும் அவளிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியில் எனக்கு ஒரு நின்மதி ஏற்பட்டது. கணவர் உனக்கு விசர் என்று புறுபுறுத்ததை சட்டை செய்யாது நான் என்பாட்டுக்கு பணம் அனுப்பினேன். அந்த ஆண்டும் முடிய அப்பாடா இனி நின்மதி என்று எண்ண முதல் "தம்பி AL எடுக்கிறான் அன்ரி. அவனுக்கு டியூசனுக்கு கொஞ்சம் தந்து உதவமுடியுமா அன்ரி. எனக்கும் இன்னும் வேலை கிடைக்குதில்லை. எனக்கு என்ன செய்யிறது என்று தெரியேல்ல" என்று அவள் அழுதபோது எனக்கு வேறு வழியே இருக்கவில்லை.

அந்த ஆண்டு முழுதும் நான் பணமனுப்பினாலும் முன்னர்போல் போனில் உரையாடுவதை நிறுத்தியிருந்தேன். பணம் கிடைத்ததும் அவள்போனில் அல்லது மின்னஞ்சலில் கிடைத்ததாகப் பதில் போடுவாள். அவ்வளவே. ஆனாலும் அவள் விடாது  மின்னஞ்சல் அனுப்புவாள். ஏன் அன்ரி என்னுடன் கதைப்பதில்லை. என்மேல் வெறுப்பா என்றெல்லாம் எழுதுவாள். என் மனம் குற்ற உணர்வில் தவித்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்தியபடி எனக்கு கொஞ்சம் வேலை அதிகம் என்றுவிட்டு இருந்துவிடுவேன்.

அந்தன்று AL ரிசல்ட் வந்துவிட்டது என்று தெரியும். ஆனாலும் நான் போன் செய்து கேட்கவில்லை. அடுத்தநாள் காலை அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "தம்பி நல்லாப் பாஸ் பண்ணீட்டான் அன்டி, உங்களுக்குத்தான் தாங்க்ஸ் சொல்லோணும்" என்றவுடன் "எனக்கு எதுக்கு நன்றி எல்லாம். அவர் தானே படிச்சது" என்றேன் நான். "என்னைப் படிப்பிச்ச மாதிரி தம்பியையும் நீங்கள் தான் படிப்பிக்கவேணும்" என்றாள் கூலாக. எனக்கு வந்த கோபத்தை அடக்கியபடி "உமக்கு நாலு வருடமும் உமது தம்பிக்கு ஒரு வருடமும் உதவி செய்திட்டன். இனி நீர் தான் உம்மட தம்பியைப் படிப்பிக்க வேணும்"  என்றவுடன் சன்னதம் வந்தவள் போல் "நீங்கள் உதவி செய்யாட்டி என்ர தம்பி படிக்காமல் வீட்டை இருக்கட்டும்" என்றாள் கிரீச்சிட்டபடி. எனக்கு ஒரு நிமிடம் ஏதேதோ உணர்வுகள் வந்து மோத "நல்லது" என்று மட்டும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். 

அந்நிய தேசம்

Wed, 14/03/2018 - 21:02

ஆசைகளின் அலைதலுடன்

அவாக்கொண்டு காத்திருந்தேன்

 

எத்தனை ஆண்டுகள் ஆனபின்னும்

அத்தனை முகங்களும் கண்முன்னே

கனதியாய் கண்ணாமூச்சியாடியபடி

காலம் எண்ணிக் காத்திருந்தேன் 

 

கனவுகளின் கால்பரப்பலுடன்

மனத்துள் நெருடிய முள்ளகற்றி

என் தேசம் என்னும் எண்ணம் அகன்றிட

ஆர்ப்பரித்த மனம் அடங்கிப் போனது

 

மனித முகங்கள் முதிர்வாய் மாறி

ஊரின் தெருக்கள் சிறிதாய் ஆகி

அயலின் நெருக்கம் அறுந்தே போக

அந்நிய தேசம் ஆனது வீடு

 

வெறிச்சோடிய வீதிகள் நடுவே

விண் தொட்டன வீடுகள் ஆயினும்

மண் அளைந்து மகிழ்ந்து கழிக்க

மானுடப் பிள்ளைகள் எங்கே போயினர்

 

கிட்டிப்புள் விளையாடிய கிழவர்களும்

கொக்கான் வெட்டிய கிழவிகளும்

தாச்சி மறித்துத் தாயம் உருட்டி

தம்பி தங்கையுடன் விளையாடிய

தம் கால நினைவுகளைக்

கூடிக் கதைக்கவும் நேரமின்றிப் போனது 

 

ஆசைகளின் ஒசையடக்கி

அகப்படாத அன்பைத்தேடி

ஆயிரம் மைகளைக் கடந்து ஓடி

மனங்கள் தோறும் மாயம் கண்டு

பிணங்கும் மனிதரின் பேதைமை கண்டு

மீண்டும் அந்நியள் ஆனேன் நான்    

 

 

 

   

பிளாக்பாந்தர் (Black Panther)

Wed, 14/03/2018 - 14:41

நாய்க்குட்டி தனது படுக்கையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நிமிடத்தில் அது பார்ப்பதை மட்டும் செய்து கொண்டிருந்தது. நாளைக்கான திட்டமிடல்களோ நேற்றைய நினைவுகளோ நாய்க்குட்டியிடம் இருப்பதில்லை.

மகிந்தன் நாய்க்குட்டியினை நிலைகுத்திப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள், நாயின் கண்கள் என்ற வித்தியாசங்கள் அவனுள் மறைந்து, இடையில் இணையவலை இருப்பது மறந்து இந்தக் கதையினை இப்போது படித்துக்கொண்டிருக்கும் வாசகரைப் போல, மகிந்தனிற்கு நாய்க்குட்டி தெரிந்தது. நாய்க்குட்டிக்கும் தனக்கும் இடையே இருந்த தூரமோ நேரமோ அவனிற்குள் மறைந்து போனது.

மிகமிகப் பழைய காலத்தில், படைப்பெதுவும் நடப்பதற்கு முன்னால், ஆதிக்கு முந்திய ஒரு ஆதிக் கணம் இருந்தது. அது வெறுமையாய் இருந்தது. ஒன்றில் இருந்து இன்னுமொன்று வந்தது என்று எவரும் சொன்னால், எடுத்த எடுப்பில் எதில் இருந்து அந்த முன்னையது வந்தது என்ற கேள்வி பிறந்து விடும். ஆகையால், புரிகிறதோ இல்லையோ, ஒன்றுமில்லாமலிருந்தது பின் எல்லாம் வந்தது என்று நினைப்பது ஏனோ மகிந்தனுள் ஒரு அமைதியினை உருவாக்கியது. 

--------

'பிளாக்பாந்தர்' திரைப்படத்தை முன்னைய நாளில் தான் மகிந்தன் பார்த்திருந்தான். அவனது வாழ்வில் அவன் ஆயிரக்கணக்கான திரைப்படங்களை இருபத்தியைந்து மொழிகளில் இதுவரைக்கும் பார்த்திருந்தபோதும், இப்போதைக்கு 'பிளாக்பாந்தர்' தான் தான் பார்த்தவற்றில் சிறந்தபடம் என்று அவனால் தயக்கமின்றிக் கூற முடிகிறது. பிளாக்பாந்தர் படம் பார்த்த பொழுதிலேயே இப்போதும் அவன் உட்கார்ந்திருக்கிறான்.

காலை எழுந்ததும் இரைச்சல் கூடப் பிறந்துவிடுவதால் நடக்கும் போது கூட பல பில்லியன் மனிதர்கள் தூங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மகிந்தனின் கவனத்தில் ஏனென்று தெரியாது இந்த எண்ணம் எழுந்து மறைகிறது. தொடர்ந்து, எங்கிருந்தோ ஒரு பழைய செய்தி அவனிற்குள் வருகிறது. விசுவரூபம் படம் பிரச்சினையின் போது ஒரு ஊடகவிலயலாளர் கமலகாசனிடம் எப்படி இந்த உழைச்சலைச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'நிறையத் தூங்குகிறேன்' என அவர் பதிலளித்திருந்தார். இந்தப் பழைய செய்தி மகிந்தனுள் எழுந்து மறைகிறது. தொடர்ந்து சில சிந்தனைகள் மகிந்தனின் பிரக்ஞையில் ஏன் எப்படி என்று தெரியாது பிறக்கின்றன....தாமாகத் தூங்கமுடியாதோர், ஏதோ ஒரு போதைக்குள் மறைய முனைந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் பல பில்லியன் மனிதர்கள் தினந்தோறும் தூக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு, எந்த ஒரு வரிசைக்கிரமமும் இன்றி, தான்தோன்றியாய்த் தன்னுள் எழுகின்ற சிந்தனைகளை எதிர்வினையின்றி மகிந்தன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

....பிளாக்பாந்தர் திரைப்படம் கறுப்பின மக்களை நோக்கி பேசுவதுபோல் உலகின் அனைத்து மனிதர்களிடமும் பேசுகிறது. சட்டத்துள் பூட்டப்பட்டதாய் நம்பி தூக்கத்தைத் தேடும் என்சனமே பரந்த வெளியில் நீ பறந்துகொண்டிருப்பதைக் கண்டுகொள் என்கிறது. நீந்திக்கொண்டே நீச்சல் தெரியாதெனும் மாந்தர்காள் நீங்கள் நீந்தும் அழகினைக் கண்ணுறுங்கள் என்கிறது. நேற்றைய கைவிலங்குள் இன்றைய செய்திகள் மட்டுமே என்கிறது. இந்தக் கணத்தின் சிறகில் அமர்ந்துகொள்ளுங்கள் என்கிறது. இந்தக் கணத்தின் சிறகு அலாவுதீன் பாய் போன்று உங்களிற்கு உங்களின் சுதந்திரம் உணர்த்தும் என்கிறது. உங்களின் அடிமுடி தொடமுடியாத நீட்சி உங்களை ஆதிக்கு முந்தைய, ஏதுமற்ற ஆதிக்கணத்தில், ஏதுமேயின்றி இருத்தி வைக்கும் என்கிறது. மேலும், அப்படியமர்கையில் எல்லாமும் உள்ளமை தெளிவாய்த் துலங்கும் என்கிறது.

-------------

முப்பதியொருவயதே நிரம்பிய இயக்குனருள் பிளாக்பாந்தர் பிறந்து விரிந்தமை நேர பரிமாணத்திற்கு அப்பாற்பட்டது என்பதாய் மகிந்தன் நினைதுக்கொள்கிறான். நாய்க்குட்டியினைப் பார்த்துக் கொண்டிருந்த மகிந்தனிற்கு, நாய்க்குட்டியின் கண் வழியாக தனக்குள்ளுள்ளும் பிளாக்பாந்தர் இருந்தமை தெரிகிறது.

வக்காண்டாவிற்கும் வன்னிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. வைபிறேனியத்தை விஞ்சிய வைராக்கியம் வன்னியிலும் இருந்தது. 1972ம் ஆண்டிலோ 2018ம் ஆண்டிலோ வன்னியும் வக்காண்டாவும் பிறக்கவில்லை. ஆதிக்கு முந்திய ஆதிக்கணத்தில் இருந்தே அவை இருக்கின்றன. நேர பரிமாணத்தில் பார்வைகள் குளப்பம் தரும். சலனமற்ற ஏகம் தெளிவாய் உறைந்து கிடக்கிறது  என்ற எண்ணம் மகிந்தனுள் எங்கிருந்தோ வந்து உட்கார்ந்து கொள்கிறது. 

 

-----------

மகிந்தன் நாய்க்குட்டியின் சுதந்திரத்தைத் தானும் உணர்ந்து கொள்கிறான். அருகில் நடக்கும் புனரமைப்பு வேலைத் தளத்தில் யாரோ ஒரு பெரிய இரும்புக் குளாயினை இன்னுமொரு குளாய் மீது போட்டபோது, இல்லாதிருந்து இருக்கத்துவங்கிய ஒலி, கோவிலின் காண்டாமணி போன்று மகிந்தனுள்ளும் நாய்க்குட்டியுள்ளும் விரிகிறது. இல்லாதிருந்து பிறந்த ஒலியின் சலனமற்ற உறைந்த வெறுமைத் தோற்றுவாய் மகிந்தனின் கவனத்தில் வருகிறது. தானும் நாய்க்குட்டியும் கூட அவ்வொலி போன்று இல்லாமைக்குள் அருவமாய் இருந்து உருவம் பெற்றதாய் அவன் நினைத்துக் கொள்கிறான். 


வக்காண்டாவினது சுதந்திரம் மகிந்தனிற்குப் பூரணமாகச் சாத்தியப்படுகிறது. அச்சுதந்திரம் வன்னிக்கும் உரித்தானது.


 

துரோணரும் அருச்சுனனும்

Wed, 14/03/2018 - 09:40

 

தம்பி சுடுவதாக இருந்தால் நீயே சுட்டுவிடு. அது உனக்கும் பெருமை உனக்கு சுட பழக்கிய எனக்கும் பெருமை.”

 

மணலாறு கொண்டாடிய ஒரு முதுபெரும் தளபதியின் என்னுடனான இறுதி உரையாடலின் ஒரு பகுதியே மேற் கூறிய வசனம்.

 

 

 

போர் புதுகுடியிருப்பை தாண்டி, ஆனந்தபுரம் - தேவிபுரம் வரை வந்திருந்த காலம் அது.

 

போர்க்களத்தை விட்டு, குடும்ப மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தளபதிகளும், முதுபெரும் வீரர்களும் ஓடி ஒளிந்து கொண்டிருந்த வேளையில், மூன்று நாட்கள் மட்டுமே பயிற்சி எடுத்து விட்டு கட்டாய ஆட்சேர்ப்பில் களமாடி கொண்டிருந்தார்கள் எம் விடுதலை வேங்கைகள்.

 

தலைமைக்கு கடுமையான முடிவெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை. தர்மத்தின் சமநிலையை சரிகாக்க வேண்டிய சூழலில் களத்தை விட்டு தப்பியோடிய வீரர்களுக்கு மீண்டும் களம் திரும்ப ஒரு பொது மன்னிப்பு காலம் வரையறுக்கபட்டது.

 

காலம் கடந்தும் மீள களம் திரும்பியோர், தப்பி ஓடியவர்களின் எண்ணிக்கையில் பத்து வீதம் கூட இல்லை. இறுக்கமான தலைமை, மன்னிப்பு காலம் முடிந்தும் திரும்பி வராத இருவருக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் ஏனையவர்களை வரவைக்க முடியும் என்று உறுதியாக நம்பியது.

 

அத் தண்டனையை தப்பியோடிய முது பெரும் தளபதிகளுக்கு வழங்குவதன் மூலமே ஏனையவர்களுக்கு புரியவைக்க முடியும் என்பதே நீண்ட கலந்துரையாடலின் முடிவு. ஐவரை தெரிவு செய்து அதில் இருவரை இறுதி செய்யப்பட்டது. 

 

அதில் ஒருவரான மேற்சொன்ன தளபதியை அவரது குடும்பத்தின் தற்காலிய குடியில் இருந்து அழைத்து வரும் பொறுப்பு எனக்கு வழங்கபட்டிருந்தது. எனது மெய்பாதுகாவலனுடன் அவரது குடிலை அடைந்த போது, அவரது மனைவி மட்டுமே எங்களை வரவேற்றார். இரண்டு பிள்ளைகளும் போர் மேகத்தின் கீழே மணல் விளையாடி கொண்டிருந்தார்கள். ஏற்கனவே பழக்கமான என்னை அன்று கண்டதில் மகிழ்ச்சி அடைந்த அண்ணி (தளபதியின் மனைவி), பக்கத்து வீட்டில் கடன் வாங்கி இரண்டு பிளாஸ்டிக் குவளைகளில் தேநீரை தந்து விட்டு வந்த நோக்கம் தெரியாமல் உரையாடினார்.

 

அண்ணி.. அண்ணையை கூட்டிக்கொண்டு போகத்தான் வந்தனாங்கள்.”

 

இல்லை தம்பி, அவரை கண்டு கன நாட்கள். அவரது முகமே பொய் சொல்லியது.

 

மன்னிக்க வேண்டும் அண்ணி எங்கள் கடமையை செய்ய விடுங்கள். “சொல்லி முடிக்க முன்னரே எனது காவலனுக்கு கட்டளையிட்டேன். 

 

குடில் முழுக்க ஒரு இடம் விடாமல் தேடு. “

 

கட்டளை இட்ட நான் வெளியில் சென்று பிள்ளைகளிடம் அப்பா எங்கே என்று கேட்கவும், கள்ளமில்லா அந்த குழந்தைகள் தந்தையின் இருப்பிடத்தை காட்டி நின்றன.

 

எதிரியிடம் சரணடைந்த போர் வீரனைப்போல அவர் குறுகி நின்றதைப் பார்க்க மனதில் எங்கேயோ பிசந்தது.

 

அண்ணை உங்களை கூட்டி கொண்டு போகத்தான் வந்தனாங்கள். என்ன இருந்தாலும் நீங்கள் அங்கே வந்து கதையுங்கள் அது தான் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.”

 

மறு பேச்சில்லாமல் ஒரு அரைக்கை மேலங்கியை மாட்டி கொண்டு சரத்துடன் கிளம்பிவிட்டார். 

 

புறப்படும்போது எனது கால்களை பிடித்தன அந்த குழந்தைகள். 

 

மாமா அப்பாவை ஒன்றும் செய்யாதீர்கள்.”

 

எங்கேயோ ஒரு இடி இடித்தது. 

 

ஒன்றுக்கும் யோசிக்காதீங்கள். ஒரு சின்ன விசாரணை முடிந்ததும் நானே கொண்டுவந்து விடுகிறேன் அண்ணி, குழந்தைகளுக்கு புரியவையுங்கள்.”

 

பிள்ளைகளுக்கு இறுதி முத்தத்தை வழங்கிய அண்ணை வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்தபடியே வானத்தை வெறித்த படி இருந்தார்.

 

குடிலுக்குள் நுழைந்த அண்ணிக்கு நாங்கள் குடிக்காத தேநீரை இலையான்கள் மொய்த்த போது தான் நிலமை விளங்கி இருக்கும் போல,  குளறிக் கொண்டே வாசலுக்கு வரும் போது வாகனம் பார்வை எல்லையை தாண்டி இருந்தது.

துவரங்கேட்டியும் அகப்பை காம்பும்

Wed, 14/03/2018 - 04:59

 

வேலாயுததத்தின் வீடு.

 வீட்டை சுற்றி  பலா கமுகு பப்பாசி என மரங்கள் சூழ்ந்து சோலையாய் இருக்கின்றது,பின் பக்கம் மாதுளையும் தேசிமரமும், மரத்துக்கடியில் அடுப்பெரித்த சாம்பலை வேரை கரையான் அரிக்கமல் கொட்டிவிடுவது வழக்கம். மத்தியாண வெக்கைக்கு  வீட்டு நாய்களும் படுத்திருக்கும்  கோழிகளும் சாம்பல் அவ்வப்போது சம்பல் குளிக்கும். 

முன்பக்கம்  சுவர் நீட்டுக்கும் நந்தியாவட்டையும்       பக்கவாட்டில் குரோட்டன்களும் நாலுமணிப்பூச் செடிகளும் எப்போதும் செழிப்பாக இருக்கும் . வீட்டுக்கு ஈசான மூலையில் கிணற்றில் இருந்து குளிக்கும் தண்ணி சுவரோர பூச்செடிகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்கின்றது.. வீட்டு வாசலுக்கு இரண்டுபக்கமும்  திண்ணைகள் மத்தியாணத்திலும் குழுமையாக இருக்கும்.. திண்ணைக்கு நேர முன்னுக்கு பலாமரம்  முற்றத்தை நிழலாக வைத்திருக்கும்.

வேலாயுதத்துக்கு ஒரு பொடியன் பதினொரு வயதிலிருக்கின்றான். வைரவநாதன். வீட்டுப்பெயர் நாதன். நாதனின் நண்பன் அடுத்ததெருவில் இருக்கும் சிவன் என்கின்ற சிவனேசன்.

சிவன் அன்று பள்ளியால் வந்ததும்  கழுசானைக் கழட்டி ஒருகாலை வெளியே எடுத்து அடுத்தகாலால் தூக்கி எத்திவிட்டான் கழுசான் கணக்காக உடுப்பு போடும் கொடியில்    விழுந்தது. அனேகமாக ஒற்றைக் காலால் எத்திவிடும் கழுசான்கள் சரியான இடத்தில் விழும்.  அன்றும் அப்படிஎத்திவிட்டு வீட்டுக்கு போடும் கழுசானை மாற்றிக்கொண்டு குசினிக்குள் போய் அம்மா போட்டு மூடிவைத்த சாப்பட்டை அவசரமாக விழுங்கிவிட்டு நாதன் வீடு நோக்கி விழையாட வெளிக்கிட்டான்.

 வழமையாக நாதன் வீட்டை போனதும்   திண்ணையில் கொஞ்ச நேரம் இருந்து வைரவநாதன் வந்ததும் அவனோடு போய் பிள்ளையார் கோயில் மரத்தடியில் விழையாடுவார்கள். அன்று படலையை துறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் திண்ணையில் வேலாயுதம்  கையில் உழவுமாட்டுக்கு அடிக்கும் துவரம் கேட்டியுடன் உரத்த குரலில் கததுகின்றார். முன்னால் ஊமையன் பிலாமரத்தடியில் நீ அடித்தாலும் பரவாயில்லை என்று ஏட்டிக்கு போட்டியாக கத்துகின்றான். 

ஊமையனின் குரல் ஆ.. ஊ. என்று மட்டுமே வரும் முகபாவனைகளும் கை அசைவுகளும் பதில் வார்த்தைகளை விட ஆவேசமாக இருக்கின்றது.. கடும் காற்றில் கமுக மரங்களின் அசைவுகள்   முறிந்துவிடும போல் இருக்கும் ஆனால் முறியாததை காற்று நின்ற பின்தான் உணரமுடியும். அதுபோல் ஊமையன் சொல்வது இரவு நித்திரைக்கு பாயில் படுக்கும் போது ஒருவேளை உணரமுடியும்.

வேலாயுதத்துக்கு பின்னால் அவரின் மனிசி தெய்வானையக்க வாசல் கதவு நிலைக்கு முண்டுகொடுத்துக்கொண்டு நிற்கின்றா.  வழமையாக அந்நேரத்துக்கு தேசிமரத்தடியில்  படுத்திருக்கும் நாய்  ஊமையனுக்கு அருகில் நின்று புரியாத புதிராக வேலாயுதத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றது. 

படலையை துறந்துகொண்டு போன சிவன்   வீடடு படலைக்கும் முற்றத்துக்கும் இடையில் நின்ற செவ்வரத்தம் பூ மரத்தோடு நின்றுவிட்டான்..வேலாயுதத்தை பார்க்க அவனுக்கும் பயமாய் தான் இருந்தது.. துவரம் கேட்டியால் தனக்கும் அடித்துவிடுவாரோ என்ற பீதி சம்மந்தமில்லாமல் வந்தது.

ஊமையனுக்கு வயது 45 க்கு மேலிருக்கும். அவருடைய குடும்பம் எங்கிருக்கின்றது என்று யாருக்கும் தெரியாது. நாலுவருடத்திற்கு முன்பு எங்கிருந்து வந்தார் என்றும் தெரியாது. ஊரில் முக்கால்வாசிப்பேர் அவர் பால் அன்பாகவே இருப்பார்கள்.ஒருவித இரக்கத்துடன் கூடிய அன்பு. பக்கத்தில் பிள்ளையார் கோயிலில் பொங்கினாலும் சரி, அயல் வீடுகளில் அந்தியோட்டி  துவசம் பாறணை என்றாலும் அயலவர்கள் கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பார்கள். தோட்க் காவலில் நின்றால் சிலர் சைக்கிளில் சாப்பாடு கொண்டுபோய் கொடுப்பார்கள்.

தெய்வானையக்க சற்று உரத்த குரலில்          அவன்தான்    நாலுவருசமா இங்க தோடடக் காவிலில் நிக்கிறானே அவன்ர சம்பளததை கொடுத்துவிடுங்கோவன். இந்த பாவம் எல்லாத்தையும் எங்கபோய் கழுவிறது....

வேலாயுதம் அண்ணை இப்படி இருந்து ஒருபோதும் பார்த்ததில்லை.  ஊமையன் எங்கள் ஊருக்கு வந்ததில் இருந்து அவருக்கு சாப்பாடு கொடுத்து உதவ பலர் இருந்தாலும் இருப்பிடம் வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. வேலாயுதமண்ணை முன்வந்தார். தன் கூடவே வைத்திருந்தார். கழிவாற்றங்கரையில் உள்ள அவரது தோட்டக் கொட்டிலில் தங்கவைத்து தோட்டக் காவலுக்கும் வைத்துக்கொண்டார். அவர் வீட்டில் உள்ளவர்கள் என்ன உண்டு குடிக்கின்றார்களோ அதையே ஊமையனுக்கும் கொடுத்தார்..

என்ன நடந்திருக்கும்...? சிவன குழம்பியபடியே அவனுள் பல கேள்விகள்.. 

 ஊமையனுக்கு மலேரியா வரும்போதெல்லாம் சைக்கிளில் பின்னுக்கு ஏத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு மருந்தெடுக்க பலமுறை போனதை பார்த்திருக்கின்றான்..

ஒருமுறை பிள்ளையார் கோயிலடியில்        கிளித்தட்டு விழையாடிய பொடியள் ஊமையனோடு சேட்டை விட்டு ஊமையன் குழம்பியடித்தபோது அந்த இடத்தால் வந்த வேலாயுதமண்ணை கோபத்துடன் உறுமினார்..

யாராவது ஊமையனோடு சொறிராத்தினால் துவரங்கேட்டியல் விளாசுவன்....

அதற்கு பிறகு ஒருவரும் சொறிச்சேட்டை செய்வதில்லை.

என்னமோ பெரிய பிரச்சனை.. நாதன் வெளியில் வந்தால் தான் அறியலாம் அவன் என்னும் குசினிக்குள்ள தின்னுறான் போல கிடக்கு.. திண்ணையை கடக்க சிவனுக்கு தைரியம் இல்லை.

முதல்ல இந்த கம்ப அங்கால வையுங்கோ..தெய்வானையக்க துவரம்கேட்டியை இழுத்து கதவுக்கு பின்னால் வைத்துவிட்டா

அப்பாடா என்று சிவனுக்கு கொஞ்சம் நிம்மதி..

கொஞ்ச நேரம் கழித்து நாதன் வண்டியை தடவிக்கொண்டு வெளிய வந்தான்.

அம்மா கோயிலடிக்கு போட்டு வாறன் என்று பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்..

போறவளியில் சிவன் கேட்டான் .. என்ன பிரச்சனை?

ஊமையன் வேணுமென்று தோட்டத்து கண்டாயத்தை திறந்து விட்டுட்டான்.  இரவு மாடு பாய்ஞ்சு எல்லாத்தையும் சுத்தமா துடைச்சு மேஞ்சுட்டுது.. அப்பா வேலையை விட்டு போக சொல்லிட்டார் அவன் காசு கேட்டுக்கெண்டு நிக்கின்றன்.

குடுக்க வேண்டியதுதானே ?

பயிர் அழிஞ்சதுக்கு சம்பளக்காசு தான் மிச்சம் எண்டுறார் அப்பா..

ஏன் வேணுமெண்டு துறந்து விட்டவர்? யார் கண்டு பிடிச்சது ?

சிங்கமண்ணை கருக்கல்ல வயலுக்கு போகேக்க மாட்ட உள்ள விட்டு கண்டாயத்த சாத்தியிருந்தத பார்த்து ஊமையன எழுப்பி மாட்ட விரட்டினதெண்டு மூர்த்தியண்ணைக்கு சொன்னவராம்.

அப்படி இருக்காது என்றான் சிவன்

டேய் எனக்கும் ஊமையனை பாரக்க பாவமாய் இருக்கு ஒண்டு சொல்லவா ? யாரெட்டையும் சொல்லாத

ம்..

இரவு சாப்பாடு கொடுத்திட்டு வரேக்க நான்தான் கண்டாயத் தடியை கொழுவ மறந்துட்டன்..

டேய்...

ஓமெடா ...... உமையன் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இரண்டு மாடுகள் உள்ள போட்டுது.. சாப்பிட்டு கொஞ்ச நேரத்தால ஊமையன் படுக்க போகேக்க கண்டாயத்த பாத்து மாடு உள்ளுக்கு இருக்கிறது தெரியாம சாத்தி விட்டான்..

நீதான் மறந்திட்ட எண்டுறது அவருக்கு தெரியுமே !

ஓம் ஆனா சொல்ல மாட்டார்.. அப்பா என்க்கு துவரம்கேட்டியால அடிச்சுப்போடுவார் என்று ஊமையனுக்கு பயம்..

டேய் பாவமெடா  பேசாம சொல்லிவிடடா..

அடிச்சே சாக்காட்டிபோடுவார்..

நீ இந்த பத்தேக்க ஒளிஞ்சிரு நான் தண்ணி குடிக்கிறது போல போய் கொம்மாட்ட சொல்லுறன்.. கொப்பற்ர கோவம் போனதும் பொழுதுபடேக்க வீட்ட போவம்.. எங்கட அப்பாவ கூட்டிக்கொண்டு போவம்...

ஒருமாதிரி சம்மதித்தான் நாதன்

சிவன் பயத்துடன் நாதன் வீட்டை போனான்

 தெய்வானையக்க தண்ணி வேணும்

குசினிக்க கிடக்கு எடுத்துக் குடி..

தெய்வானையக்காவை குசினிப்பக்கம் வர வைக்கோலாது போல கிடக்கே !

கையெல்லாம் மண்.. வாத்து தாங்கோ..

தெய்வானையக்க பின்பக்கம் போக அவ பின்னாலயே போய் குசினிக் கதவடியில் வைத்து நாதன் சொன்னதை சொன்னான் சிவன்

எங்க அந்த கழுசடை ?

பயத்தில எங்கட வீட்டை போறான் இரவு வாறானாம்

சொன்னது தான் சிவன் முன்பக்கமாக போகாமல் பின்பக்கம் வேலிக்குள்ளால பூந்து கோயில் நோக்கி விரைந்தான்..

சிவனும் நாதனும்  பத்தைக்குள்ள மறைந்திருந்து தகப்பன் துவரம் கேட்டியுடன் வருகின்றாரா என்று பதபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்...

ஏன்டா கொம்மா சொல்லியிருப்பாவே.. என்னும் கொப்பர காணேல்ல

அதுதாண்டா நானும் யோசிக்கிறன்..

ஒரு மணித்தியலத்தின் பின் படலையை திறந்துகொண்டு வேலாயுதத்தின் சைக்கிள் வயல்பக்கம் புறப்பட்டது.. பின்னால  ஊமையன் இரண்டு கைகளையும் கரியரில் இறுக்க பிடித்தபடி இருந்தார் ...

ஊமையனும் தகப்பனும் சமாதானமாகினது பெரும் நிம்மதியாய் இருந்தாலும் இரவு என்ன பூசை நடக்கும் என்ற பீதி நின்றபாடில்லை..

டேய் கொம்மாட்ட முதல் போவம்.. என்று பிள்ளையார் கோயிலடி பத்தையை விட்டு தெய்வானையக்காவிடம் நாதனை இழுத்துக்கொண்டு போனான் சிவன்..

தெய்வானையக்க அடுப்பு ஊதுற குழலால குசினிக்குள்ள புகைக்கிற அடுப்பை ஊதிக்கொண்டிருந்தா..

நீ குசினிக்குள்ள போடா என்றான்..

நாதன் திண்ணையோட நின்றுவிட்டான்.. முதல் ஒருக்கா பயித்தங்கொடியை பாரடா என்று நாதனிடம் சொல்லிவிட்டு உரமெடுக்க போய்வாறதுக்குள்ள ஆற்றங்கரை கூழா மரத்தில் ஏறி குழம்பழம் தின்ன குரங்குகள் பயித்ததங்கொடிகளை மொட்டை அடிச்சுபோட்டுது. அண்டைக்கு தகப்பன் துவரங்கேட்டியால் இழுத்த குறி என்னும் குண்டியில இருக்கு.  குறுக்க வந்த தெய்வானையக்காவுக்கும் முதுகில ஒண்டு விழுந்தது. 

நாதன் தகப்பன் வாறாரோ என்று படலையும் பார்த்தபடி திரும்ப அகப்பைக் காம்போடு தாய் குசினிக்குள்ளால வாரவோ எண்டு இரண்டுபக்கமும் மாறிமாறி பார்த்து முழுசிக்கொண்டிருந்தது சிவனுக்கு பாவமாக இருந்தது. 

பொழுதுபட்டுவிட்டது. இனி சிவனும் நிக்கேலாது..  நாதனை விட்டு போறது பாவமாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்யேலாது.. 

நான் போறன்டா என்றுவிட்டு சிவன் வெளிக்கிட்டான். படலைதாண்டி சொட்டு தூரத்தில் நாதன் அம்மா அம்மா என்று குழறுவது கேட்டது.. இனி செய்யமாட்டன் அம்மா என்று குழறுவது கேட்டது.. 

விடிய நாதன் பம்மிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிட்டு வந்து சிவன் வீட்டு படலையடியில் சிவனுக்கு காத்துக்கொண்டிருந்தான்..

சிவனின் தகப்பன் சிற்றம்பலத்தார் ஆத்திப் பட்டைகளை காலில் உழக்கி கையால் ஆத்திநாரை உரித்துக்கொண்டிருந்தார்.. நாதனைக் கண்டதும் 

என்னடா இரவு நல்ல பூசைபோல கிடக்கு.. நாதன் முழுசிக்கொண்டு நிண்டான்

ஏண்டா கொப்பன் கஸ்டப்பட்டு பயிக்கொடி வளர்த்தா அதன மாட்டுக்கும் குரங்குக்கும் தின்னக் குடுத்தா என்னத்த உருப்படுறது ?  அத்தோட சிற்றம்பலத்தார் உரித்த ஆத்தி நாரை எடுத்துககொண்டு பின்பக்கம் போய்விட்டார்..

சிவனும் நாதனும் பள்ளிக்கூடத்துக்கு நடந்துகொண்டே

ஏன்டா காலம கோயில்கு போய் வாறியோ? திருநூறு எல்லம் வைச்சிருக்கு

இல்லடா அம்மா பூசிவிட்டா..

ஏன்டா கொப்பரும் அடிச்சவரோ ?

இல்லை.. அம்மா அடிச்சதோட அழுகொண்டு சாப்பிடாம நித்திரயாபோனன்.. அப்பா ஆத்திரத்தோட தான் வந்தவர் ஆனா அம்மா அடிச்சு ஆழுதுகொண்டு படுத்திட்டதால அப்பா இரவு பத்துமணிபோல எழுப்பி சாப்பிட வைச்சார்.. ஒண்டும் சொல்லேல்ல.. 

ம்.. என்றான் சிவன் எதிர்பார்த்தது போல.. 

பார்க்காதே பார்க்காதே

Sat, 10/03/2018 - 22:13

பார்க்காதே பார்க்காதே

புலம் பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்த பொழுது, “நாட்டுக்கே திரும்பி போய்விடலாமா?” என்ற நினைப்புதான் ஓங்கி நின்றது. குளிர் ஒரு காரணமாக இருந்தது என்றாலும்,குளிரில் வரும் நடுக்கத்தை விட டொச் மொழியை கேட்கும் போது ஏற்பட்ட உதறல் அதிகமாக இருந்தது.

ஜேர்மனியர்கள் கதைக்கும் வார்த்தைகளுடன் ‘ஸ்ஸ்ஸ்’ என்று காற்று வரும் பொழுதெல்லாம் என்னுள் இருந்து தன்னம்பிக்கைக் காற்று தானாக வெளியேறிக் கொண்டிருக்கும்.

“என்ன பாஷை இது. தமிழுக்கு வசப்பட்ட நாக்கு டொச்சுக்கு பிரளமாட்டுதாம்” என்னுடன் ஊரில் இருந்து யேர்மனிவரை கூட வந்த ரத்தினம் இப்படி என்னுடன் அடிக்கடி சலித்துக் கொண்டிருப்பான்.

ரத்தினம் என்னைவிட இரண்டு வயது இளமையானவன். அவனது தமையன் சந்திரன் என்னுடன் ஒன்றாகப் படித்தவன். நான் ஜேர்மனிக்கு வெளிக்கிடப் போகிறேன் என்று கேள்விப்பட்டு,  “தம்பியையும் உன்னோடு ஜேர்மனிக்கு கூட்டிக் கொண்டு போ மச்சான்” என்று ரத்தினத்தையும் என்னுடன் சேர்த்து விட்டான்.

எங்களது பயணம் எயார் பிரான்ஸில் தொடங்கியது. பரிஸ் இல் இடைத்தங்கல். அங்கிருந்து கிழக்கு ஜேர்மனி சென்று பின்னர் ரெயின் எடுத்து மேற்கு ஜேர்மனி புகுந்து அரசியல் தஞ்சம் கேட்பதாகத் திட்டம். பயணத்தின் போது விமானத்தில் இன்னும் இரண்டு பேர் எங்களுடன் ஒட்டிக் கொண்டார்கள். 

பரிஸில் இறங்கி கிழக்கு ஜேர்மனிக்கு பறப்பதற்கு விமானத்தில் ஏறுவதற்காகச்  சென்று கொண்டிருக்கும் போது, எங்கள் நான்கு பேரையும் பிரான்ஸ் காவல்துறையினர் பிடித்துக் கொண்டார்கள். முதலில் எங்களிடம் இருந்த கடவுச்சீட்டுக்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். பிறகு நீண்ட தூரம் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

“எங்கையண்ணை கூட்டிக் கொண்டு போறாங்கள்?” ஒட்டிக் கொண்டவர்களில் ஒருவன் என்னிடம் கேட்டான். திருப்பி நாட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயம் அவனிடம் தெரிந்தது. அந்தப் பயம் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட இருந்தது. நான் வாய் திறப்பதற்கும் முன்னர் ரத்தினம் முந்திக்கொண்டு கொண்டு அவனுக்கு பதில் கொடுத்தான்.

“பார்த்தியா, முன்னுக்கும் பின்னுக்கும் பொலீஸ்காரர்கள் வர, சனங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க பிரான்ஸ் எயர்போட்டிலை அழைச்சுக் கொண்டு போறாங்களே, இதுதான் இராஜ மரியாதை. இப்பிடியே திருப்பி சிறிலங்காவுக்கு  அனுப்பினாங்கள் எண்டால், லலித் அத்துலக்முதலியே நேரிலை  வந்து இதைவிட அமோகமான ஒரு பெரிய வரவேற்பு அங்கை தருவார்”

என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயந்து கொண்டு நடந்து கொண்டிருக்கும் போது ரத்தினத்தின் அந்தப் பேச்சு சூழ்நிலையின் அழுத்தத்தை கொஞ்சம் குறைத்தது.

இறுதியாக ஒரு அறைக்குள் கொண்டு போய் விட்டார்கள். என்ன கேட்டாலும் அவர்கள் எங்களுக்காக வாயைத் திறக்கவேயில்லை. அதிலும் மறந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட அவர்களிடம் இருந்து வரவேயில்லை. தங்களுக்குள் பிரெஞ்சில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். 

எங்களை அழைத்து வந்தவர்கள் காவலுக்கு நிற்க மேலும் இரு போலீஸ்காரர்கள் உள்ளே வந்தார்கள். வந்தவர்கள் எங்களுடன் பயணித்த ஒருவனை அழைத்துச் சென்றார்கள். பதினைந்து நிமிடங்கள் போயிருக்கும். கூட்டிக் கொண்டு போனவனை கொண்டு வந்து விட்டு விட்டு மற்றவனை அழைத்துப் போனார்கள். முதலில் போய் வந்தவன் எதையோ இழந்துவிட்டவன் போல முகத்தில் கவலையோடு காணப்பட்டான்.

ரத்தினம் அவனருகில் போய் தனது பார்வையால் விசாரித்தான். 

“உடுப்பெல்லாம் கழட்டிப் பார்த்தாங்கள்” மிகுந்த கவலை அந்த இளைஞன் முகத்தில் தெரிந்தது.

“எதைப் பார்த்தாங்கள்?” ரத்தினம் அந்த இளைஞனை விசாரிப்பதைப் பார்த்த ஒரு பொலீஸ்காரன், இளைஞனிடமிருந்து  ரத்தினத்தை  பிரித்து வைத்தான்.

திரும்பி வந்த மற்றைய இளைஞனும் ஏறக்குறைய முதலாவது இளைஞனைப் போலவே முகத்தை வைத்திருந்தான். இப்பொழுது  எனது முறை. இருவர் இருந்த அறையில் நின்றேன். உடுப்புகள், சப்பாத்துக்களை எல்லாம் கழட்டச் சொல்லி சைகையால் காட்டினார்கள்.

அவர்கள்  முதலில் உடுப்பு, சப்பாத்துக்களை தடவி, தட்டி எல்லாம் பார்த்தார்கள். அடுத்ததாக எனது உடம்புக்கு வந்தார்கள். தலை தொட்டு உள்ளங்கால்வரை எல்லாம் ஆராய்ந்தார்கள்.  பிறகு குனி என்றார்கள். குனிந்தேன். அவர்களுடைய ‘டோர்ச் லைற்’றின் வெளிச்சம் என்னுடைய விம்பத்தை அறைச் சுவரில் காட்டியது. மீண்டும் சைகயால் உடுப்பை போடு என்றார்கள். 

எண்பதுகளில் நன்றாக பொதியிட்டு, பாகிஸ்தானில் இருந்து மலவாசலுக்குள் வைத்து ஐரோப்பிய நாடுகளுக்குப் போதைப் பொருட் கடத்தல் நடந்து கொண்டிருந்ததுதான் எங்களை விமான நிலையத்தில் தடுத்து வைத்ததும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சோதணையும்.

இப்பொழுது ரத்தினத்தின் முறை. எதற்காக அழைத்துப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத் தெளிவு இருந்தது. சிரித்தபடியே அவர்களுடன் போனான். ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது. போனவன் அதே சிரிப்புடன் திரும்பி வந்தான்.

“எங்களுக்கெல்லாம் பதினைந்து நிமிசங்கள் எடுத்தது. அதெப்படி உன்னை உடனேயே விட்டிட்டாங்கள்?”

“இப்பிடி ஒரு சூத்தை பிரெஞ்சுக்காரன் ஒருநாளும் கண்டிருக்க மாட்டான். வாழ்க்கையிலை இனி ஒருத்தனின்ரை சூத்தையும் பார்க்கவே மாட்டான்”

இப்பொழுது ரத்தினம் நான் இருக்கும் இடத்தில் இருந்து அறுபது கிலோ மீற்றர் தூரத்தில்தான் வசிக்கிறான். எனக்கும் அவனுக்குமான தொடர்புகள் குறைந்து குறைந்து இன்று இல்லாமலேயே போய்விட்டது. ஆனால் அவனது நினைவுகள் மட்டும்  என்னுடன் இன்றும் இருக்கின்றது.

 

கவி அருணாசலம்

10.03.2018

அக(த்தீ)தி

Fri, 09/03/2018 - 16:54

இதுவரை என் வாழ்வில் சகல பிரச்சனைகளும் ஓய்ந்து விட்டது ஓர் தேடலைத்தவிர என்று வாழ்வை அமைதியாக கழிந்த நாட்களில் அந்த ஓர் அழைப்பொன்று வாழ்வின் அடிமனதில்  புதைந்த ஓர் புதையலை மனதில் இருந்து மெதுவாக தோண்ட ஆரம்பிக்கிறது .ஹலோ வணக்கம் வணக்கம் நீங்கள் நான் கலியபெருமாள் பேசிறன்டா ஓ ஐயா சொல்லுங்க எப்படிடா இருக்க இருக்கன் ஐயா இருக்கன் நல்ல சுகம் நீங்கள் எப்படி நான் நல்லம் நலமா இருக்கிறன் என்ற பிள்ளைகள் உன்னை பார்க்க வேண்டுமாம் வாவன் உன்ற ரத்தமும் ஓடுது இங்க ஒருக்கா இந்தியா வந்துவிட்டு போவன் இல்லை ஐயா நான் இன்னும் பாஸ்போட் எடுக்கல எடுக்கவும் நினைக்கல எடுக்கணும் என்று நினைக்கிறன் நேரமும் கிடைக்கல அது எடுக்க போனால் இரண்டு மூன்று நாள் அங்க மெனக்கெடணும். அந்த கொழும்பில நிற்கிற நாளும் கஸ்ரமா இருக்கும் ஆனால் எடுப்பன் எடுத்திட்டு வருவன். சரி உடம்ப பார்த்துகொள் காலா காலத்துல கல்யாணம் கட்ட வேணும் சரியோ சரி ஐயா கல்யாணத்துக்கு சொல்லு கட்டாயம் வருவன் (ம்கும் பேச்சுக்கு சொல்லுது மனுசன் என்ற நினைப்பு என் மனதிற்குள்) சரி ஐயா அம்மா பிள்ளைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தேன் நான்.

அழைப்பை துண்டித்து அந்த ஓர் அறையினுள் ஓட்டை கதிரையில்வெறும் உரப்பையினால் ஆன சாய்ந்த கதிரையில் இருந்து அந்த புதையலை மூடியிருக்கும் மணல்களை மெதுவாக கிளறிக்கொண்டு இருக்கிறேன் . இப்போது நடந்தால் போல் ஓர் ஞாபகம். நாளைக்கு ஓர் படகு போகபோகிறதாம் இந்தியாவுக்கு  தமிழரசா நீயும் போ நீ போன பிறகு அடுத்த படகு வெளிக்கிடக்குள்ள நாங்களும் அங்கு வந்து அகதிகளா சேருவம். என்று அம்மா சொல்ல இல்லையம்மா நான் உங்களை விட்டு போக மாட்டன் நீங்களும் வாங்க தம்பி நீ விசர் மாதிரி கதையாத நீ முதலில போ உன்ன வச்சிருக்கிறதுதான் இஞ்ச பெரும் பாடு அவனுகளும் விடமாட்டானுகள் இவனுகளும் விடமாட்டானுகள்  ஏற்கனவே ரெண்டு பேரை கொடுத்திட்டன் எனக்கு நீ மட்டும் தான் இப்ப இருக்கிற நீயாவது வேண்டும் சரீயே சொல்லுற விளங்குதா ஓர் அன்னையின் கட்டளை போல் ஒலித்தது.

நாங்க இங்குள்ள சொத்துக்களை ஆரிட்டையும்கொடுத்து விட்டு இல்லாட்டா வித்துவிட்டு அடுத்த செக்கனில் அங்கு நிற்பம் சரியா சரி அம்மா சொல்லுறத கேழு உன்ற நல்லதுக்குத்தான் சொல்லுறன் என்று சொல்லி அந்த மாலை வேலையில் கடற்கரைக்கு அழைத்து சென்றார்கள். மாலை இருளை கவ்விக்கொள்கிறது கன பேரின் வருகையை எதிர்பார்த்த எங்களுக்கு வெறும் 20 பேர்தான் வந்திருந்தார்கள் சிலரின் வருகையில் தடங்கலோ அல்லது சிக்கிவிட்டார்களோ தெரியாது சரி சரி கெதியா வாங்கோ கெதியா வாங்கோ என்று படக்குக்காரன் கத்திக்கொண்டு இருந்தான். ஒரு வழியாக எல்லோரும் ஏறும் போது அம்மாவை கட்டிப்பிடித்து அழுதுகொண்டேன் அழாத அம்மா வருவேன் நீ நல்லா படிச்சிருக்கிற அங்க போய் ஓர் வேலை தேடு நிலமை சரியான பிறகு  ஊருக்கு வந்திடலாம் என்று சொன்னாலும் அந்த சூழல் என்னை உயிரை உடம்பில் வைத்துக்கொள்ள தப்பித்து ஓடிவிடு என்று சொல்ல அன்று கடல் வழி பயணம் தொடர்ந்தது . கொஞ்ச தூரம் சென்றது கடல் காற்று உப்பையும் மண்ணெண்ணை மணம் மெல்ல மெல்ல மூக்கின் நுனியில் இருந்து மெல்ல இறங்கி ஓங்காளங்களாக சத்தி எடுக்க ஆரம்பித்தனர் படகில் இருந்தவர்கள். அவர்கள் சத்தி எடுத்ததும் அதை பார்க்கவில்லை இருட்டில் அந்த சத்தம் என் குடலையும் குடைந்தெடுத்து சத்தியாக கொண்டுவந்தது வந்தது உணவல்ல வெறும் தண்ணியும் ரத்தமும்தான் மெல்ல தலை சுற்ற அந்த படகில் எனை அறியாமல் மயக்கமான ஓர் நித்திரை வந்தது அந்த நித்திரையானது என்னை  கொலைசெய்து கடலில் தூக்கிபோட்டாலும் யார் என்று கண்டு பிடிக்க முடியாதளவுக்கு மயக்கமாக இருந்தது .

தூரத்தில் கேட்ட ஓர் எஞ்சின் சத்தத்தில் எமது படகின் எஞ்சினின் சத்தத்தை நிறுத்துவது என் கண் முன்னால் ஓடியது யாரும் சத்தம் போட வேண்டாம் குனிந்து படுத்து கொள்ளுங்கள் ஏற்கனவே ஒருத்தர் தலையும்  நிமிர்ந்தில்லை இதுக்குள்ள எங்க குனிந்து படுக்கிறதாம் அது கடற்படையின் ரோந்து கப்பல் தான் அவன் வேற திசையில் வேறு யாரையோ நோக்கி போய்க்கொண்டிருந்தான். ஒரு சில மணித்தியாலங்கள் பின்னர் அந்த படகு ஓர் மணல் திட்டில் கால் நடக்கும் பகுதியளவில் இறங்கி கொள்ளுங்கோ அந்த மணல் திட்டில் நின்றால் இந்திய நேவி வருவாங்கள் இல்லாவிட்டால் மீனவர்கள் உங்களை கண்டால் அகதி முகாம்களுக்கு சேர்த்துவிடுவார்கள் இன்று யார் செய்த புண்ணியமோ யார் கண்ணிலையும் நாம் அகப்படவில்லை போய் சேருங்கோ நாங்க அங்க போகணும். கெதியா இறங்குங்கோ என்றனர் அவர்கள் நாங்களும் பாதி மயக்கத்தில் மணல் திட்டில் வந்து அந்த உடுப்பு பையுடன் இறங்கி அந்த கூதல் காற்றில் அன்றைய இரவை கழித்தோம். அந்த மணல் திட்டில் 

அடுத்த நாள் காலை யாரும் வரமாட்டார்களா சாப்பாடும், தண்ணீரும் தா என வயிறு கேட்டுக்கொண்டது அப்போது அவ் வழியாக வந்த மீனவர்கள் எங்களை கண்டு கொண்டனர் அவர்களுக்கு சைகை காட்டி ஒரு வழியாக அவர்கள் வந்திறங்கி எத்தனை பேர் வந்து இருக்குறீர்க்ள் நாங்கள் 20 பேர் 15 பெண்கள் 4 சிறுவர்கள் நான் மட்டும் இருபத்து நான்கு வயது நிரம்பிய ஓர் இளைஞன் சரி வாங்கள் வந்து படகில் ஏறுங்கள் என்று சொல்லி ஏற்றிக்கொண்டார்கள் படகில் இருந்த உணவை தந்தார்கள் ஆனால் யாரும் சாப்பிட முடியவ்வில்லை காரணம் சத்தி எடுத்ததால் தொண்டையால் தண்ணி கூட இறங்குவது  சிரமமாக இருந்தது. நானும் தண்ணீர் மட்டுமே குடித்தேன் குடித்த பின்பு அங்கே ஓர் முகாம் அருகே கொண்டு விட்டார்கள் அப்போதுதான் சோதனைகள் ஆரம்பிக்கின்றன இந்திய தேசத்தில் எல்லோரது பெயர்களும் பதியப்பட்டு பெண்களை விசாரிக்கின்றனர் குழந்தைகளை விட்டுவிட்டார்கள் என்னை மட்டும் வேற இடத்திற்கு கொண்டு சென்றார்கள் அவர் பொலிஸ்க்காரரா என்று எனக்கு தெரியாது சிவிலில் நின்றார் உன்ற பெயர் என்ன தமிழரசன் உன்ற சொந்த பெயரா இல்லை இயக்கம் வச்ச பெயரா என்ற சொந்த பெயர்தான் ஏன் இங்க வந்த நீ  அங்க சரியான பிரச்சினையா இருக்கிறது எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறாங்கள் இருக்க முடியல அதான் இங்க அகதியாக வந்தன் சரி இயக்கிதில இருந்த நீ யா? இல்லை உன்மைய சொல்லு இருந்த நீயா? இல்லை உன்மையை சொன்னால் கூட அடித்தார்கள் இத்தனைக்கும் அவர்களும் தமிழர்கள். ஈழத்தில் தமிழனுக்கு சிங்களவர்கள் கேள்விகேட்காமலே அடிக்கிரார்கள் என்றால் இங்கே தமிழர்கள் கேள்வி கேட்டே அடிக்கிறார்கள்  இல்லை ஐயா.

தீ வரும்

ஆண் சிங்கம் ஒன்று அழுகின்றது...!

Tue, 06/03/2018 - 09:56

06cpbs-hariharan-s_1079836g.jpg

 

கண் தெரியும்  தூரம் வரை…..

காலம் தின்று..துப்பிய ….,

எச்சங்களின் மிச்சங்களாய்….,

செத்துப் போன வீடுகளின்,

எலும்புக் கூடுகள் !


 

வெறுமைகளை மட்டுமே…,

வெளியே காட்டிய படி…,

உண்மைகளை ஆழப் புதைத்து..,

கண் மூடித் துயில்கின்ற…..,

வரலாறுகளின்  சுவடுகள் !

 

அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்..,

ஆளப் புதைந்திருக்கும் …..,

வைரவ சூலம் மட்டும்….,

எத்தனை வடை மாலைகளையும்,

எத்தனை தேசிகாய்களையும்,….,

தன் மீது சுமந்திருக்கும் ?

 

அந்தக் கருக்குவாச்சி மரம்,

எத்தனை காதலர்களின்,

இரவு நேரச் சந்திப்புக்களை…,

விரக தாபங்கள் சிந்தும்,

கற்பூர சத்தியங்களை….,

தன்னுள் புதைத்திருக்கும் ?

 

காவோலைச் சேலை இழந்து….,

கதியால் கரங்களால் …,

தங்கள் மானம் காத்து..,

காவிளாய்ச் செடிகளின் விரிப்பில்,

மறைந்து கிடக்கிறதே நிலம் !

 

ஒரு காலத்தில்,,

கரும் பேட்டுக் குஞ்சுகளாய்…,

வரம்புகளில் மரக்கறிகளும்,

வளவு நிறைந்த மிளகாய் மரங்களுமாய்.,

நான் செய்த தோட்டம் !

 

நத்தை பொறுக்கும் செண்பகங்களும்….,

மிளகாய் கடிக்கும் கிளிகளுமாய் …,

கல கலத்த தோட்டம்….!

 

எனது மகன் …,

உழக்கிய துலா கூட….,

இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது !

 

மகன் கனடாவிலும்,,,.

மகள் ஜெர்மனியிலும…..!

 

பிள்ளைப்பெறு …..,

பாக்கப் போன மனுசியும்,

பிள்ளையள் பாவம் எண்டு….

அங்கையே நிண்டுட்டுது !

 

அக்கினி சாட்சியான.....,

வசிட்டர் வடக்கிலும்,

அருந்ததி தெற்கிலுமாய்....,

ஆரிட்டைப் போய் அழுகிறது ?

 

உனக்கென்னப்பா பிரச்சனை எண்டு....,

ஊரே பொறாமைப்  படுகுது !

 

எனக்கென்ன குறைச்சல் ?

ஆஸ்பத்திரி மாதிரி..,

எல்லா மருந்துகளும்...,

அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு !

ஆரோ ஒருத்தி வந்து..,

அடிக்கடி  சமைப்பாள் !,

 

பொறுங்கோ….வாறன் !

வல்லுவத்துக்குள்ள போன் சிணுங்குது !

 

ஒரு பேரனோட இங்கிலிசும்…,

மற்றப் பேரனோட ஜெர்மனும்..,

தமிழில கதைக்க வேணும் !

 

எனக்கென்ன குறைச்சல் ?

 

அரோஹரா!ஆறுமுகா!

Mon, 05/03/2018 - 20:54

அரோஹரா!ஆறுமுகா!

 

“அந்தக் கூட்டத்துக்குள்ளை நேற்று உன்னைக் காணேல்லை” திங்கட்கிழமை வேலை இடத்தில் மரியா என்னைக் கேட்ட போது, எந்தக் கூட்டத்தை அவள் சொல்கிறாள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை.

 அவளே தொடர்ந்தாள். “இத்தாலியில் வீதியில் வைச்சு ஆளாளுக்கு தக்காளி அடிச்சு ஒரு விளையாட்டுவிழா (Tomatina Festival) நடக்குமே அது போலை உங்கடை நாட்டிலையும் தேங்காய் அடிச்சு விளையாடும் ஒரு விளையாட்டுவிழா இருக்குதோ? ”

 “நீ என்ன சொல்ல வாறாய்?”

 நேற்று, போக்குவரத்து வீதியை மறிச்சு தடை போட்டிருந்தார்கள். அதாலை அடுத்த வீதியாலை போகவேண்டி வந்திட்டுது. என்ரை காரைத் திருப்பிக் கொண்டு அடுத்த வீதிக்குப் போற பொழுதுதான் பார்த்தன், உன்ரை நாட்டுக்காரர்கள் நிறையப் பேர் வீதியிலை ஊர்வலம் போலை வந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் எல்லாம் கலர் கலராக உடுப்புகள் போட்டிருந்தார்கள். முதலிலை உன்ரை நாட்டு 'கார்ணிவேல்' என்றுதான் நினைச்சன். ஆண்களெல்லாம் தெருவிலை தேங்காய்களை போட்டு உடைச்சுக் கொண்டே பெரிசா ஒன்றை இழுத்து கொண்டு வந்தார்கள். தக்காளி விழாபோலை தேங்காயாலை ஆளாளுக்கு அடிச்சுக் கொள்ளுவார்களோ என்று முதலிலை பயந்து போனன்'

 மரியா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதுதான் புரிந்தது, அவள் குறிப்பிடுவது எங்களது தேர்த்திருவிழா என்று.

 “‘கூடு’ என்று நீங்கள் மேரி மாதவை ஊர்வலமாக கொண்டு போவீங்களே, அதுபோலத்தான் நாங்களும் எங்கடை கடவுள்களை வீதியிலை ஊர்வலமாக கொண்டு போவம். எத்தனை காலத்துக்கு எங்கடை சாமிகள் கோயிலுக்குள்ளையே அடைபட்டுக் கிடக்கிறது. அவையளும் காத்து வாங்க வேண்டாமோ?” மெதுவாகச் சமாளித்துக் கொண்டேன்.

 “தேங்காய் 1.70க்கு கடையிலை விற்கிறார்கள். அந்த விலைக்கு வாங்கி இப்பிடி தெருவிலை போட்டு உடைக்கோணுமோ?”

 “நீ சொல்லுற விலை சுப்பர் மாக்கெற்றில். எங்கடை நாட்டுக் கடைகளுக்குப் போய்ப் பார், ஒரு யூரோவுக்கு கிடைக்கும்”

 “தெருவிலை போட்டு வீணாக உடைக்கிறதுக்கு ஒரு யூரோ என்றாலும் அதிகம்தான்”

 நாட்பட்ட தேங்காய்களை தட்டி விடுவதற்கு கடைக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பாக தேர்த்திருவிழாவை, கடவுள் தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்தது. 

 மரியா கேட்டதிலும் அர்த்தம் இருந்தது. இவ்வளவு விலை கொடுத்து எதற்காக தேங்காய்களை தெருவில் போட்டு உடைக்க வேண்டும்? மணலில் தேரினது மரச்சில்லுகள் உருளுவதில் இருக்கும் சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே  எமது முன்னையவர்கள் எங்களது நாட்டில், தேரின் முன்னால் தேங்காய்களை போட்டு  உடைத்தார்களோ தெரியவில்லை. சரியான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் நாங்கள்தான் யேர்மனியின் தார்வீதிகளில் தேங்காய்களை வீணே சிதறடித்துக் கொண்டிருக்கிறோமா? யாராவது அறிஞர்கள், தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது. 

 கடவுளை தேரில் வைத்து இழுப்பதற்காக நாங்கள் Audi, Mercedes, BMW கார்களில் வந்து கோவிலின் வாசலில் இறங்கிக் கொண்டிருக்கிறோம். காலங்காலமாக பாவப்பட்ட ஜென்மமாக கடவுள் மட்டும் மரத்தேரில் பவனிக்க வேண்டி இருக்கிறது என்பதை நினைக்கையில் நெஞ்சு வெம்புகிறது. அதுவும் மனிதன் இழுத்தால்தான் கடவுள் அமர்ந்திருக்கும் தேரே நகரவேண்டிய நிலையும் இருப்பது அந்தோ பரிதாபம்.

 போர் முடிந்து ஒன்பது வருடங்களாகின்றன. புலம் பெயர்ந்தவர்கள் வழங்கும் நிதியை நேரடியாகப் பெற்று, அந்த நிதியைப் பயன் படுத்தி பாதிக்கப்பட்டவர்களது வாழ்வை மேம்படுத்தவோ, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவோ, யாரிலும் தங்கியிராது சுயமாக வாழும் நிலையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவோ முடியாதவகையில் மாகாணசபையை சிறீலங்கா அரசு கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

ஒரு பொது அமைப்பை தாயகத்தில் உருவாக்கி அதனூடாக உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து உதவிகளைச் செய்யவிடாமலும் சிங்கள அரசு தடுக்கிறது. போரினால் பாதிக்கப் பட்டவர்கள் மேலும் மேலும் துன்பத்துக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் சிந்திக்க வேண்டிய நாங்கள் பக்திக்குள் பரவசம் காண நினைக்கிறோம். 

 ‘கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் வயிற்றுக்குள் இருக்கும் கருவுக்கும் ஈசன் உணவளிப்பான்’ என்று, தெரியாமல் படித்து விட்டோம். அதனால்தான் எல்லாவற்றையும் தூரப்போட்டுவிட்டு  கடவுள்களுக்கு இன்று புலம் பெயர்ந்த நாடுகளில்  கோயில்களை உருவாக்கி அர்ச்சனைகள்  செய்து கொண்டிருக்கிறோம்.

 இதற்குள், கோவில்களில் எரியும் விளக்குகளுக்கு தாங்களும் எண்ணெய் விடுகிறோம் என்று ஒரு ஊடகம் ‘ஆன்மீகத் தொலைக்காட்சி’  ஒன்றை மார்ச் 10ம்  திகதி தொடங்க இருப்பதாக பெருமையாக அறிவித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் பிரச்சனைகளை பேச்சுக்கு மென்று துப்பிக் கொண்டு அந்த ஊடகம் மோடியின் ஆன்மீகத்துக்குள் வந்து விட்டதோ என்ற அச்சம் ஏனோ தானாகவே வருகிறது.

 இப்படியே போனால், “படைத்தவன் இருக்கிறான். பார்த்துக் கொள்வான்” என்று சொல்லிக் கொண்டு, தாயகம், சுதந்திரம் என்று சத்தமிட்ட குரல்களெல்லாம், ‘அரோஹரா, ஆறுமுகா” என்று ஒலிக்க ஆரம்பித்து விடும்.

 கவி அருணாசலம்

06.03.2018

 

மூன்று சகோதரிகள்

Sat, 03/03/2018 - 17:33

2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள்.

                                                                                 நாளைக்கு எல்லோரும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம்.10 மணிக்கு இங்கிருந்து  வெளிக்கிட வேண்டும் எல்லோரும் வேளைக்கு எழும்பி வெளிக்கிடுங்கோ என்று மகன் சொன்னான்.அடுத்த பக்கத்தில் சுட்டு சாப்பிடக் கூடிய இறைச்சி சோளன் பாண் பழங்கள் என்று நிறைய சாமான் பட்டிலிட்டு கொண்டிருந்தார்கள்.என்னடா திறி சிஸ்ரேஸ் என்று இப்ப இதையும் கொண்டு போய் என்ன செய்கிறதென்று கேட்க பரவாயில்லi சித்தப்பா திறி சிஸ்ரேசைப் பார்த்துவிட்டு 2 மைல் ஓடினால் நல்ல பார்க் ஒன்று வரும் அங்கு போய் இதுகளை சுட்டு சாப்பிடுவோம் என்றான்.

                                                                               ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி எல்லோரும் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தனர்.நானும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம் என்று வழமைக்கு மாறாக கொஞ்சம் நல்ல உடுப்பும் போட்டு அட திறி சிஸ்ரேசில ஒரு சிஸ்டர் தன்னும் என்னைப் பாரக்காதா என்று கொஞ்சம் பூசி மொழுகி கறுப்பு கண்ணாடியும் போட்டு கொண்டு வெளிக்கிட்டேன்.அப்பவும் மனைவி என்னப்பா இண்டைக்கு வழமையை விட தூக்கலாக இருக்கு என்றவுடன் திறி சிஸ்ரேசை எல்லோ பார்க்க போகிறோம் என்றவுடன் சரி சரி வாலிபத்தில் ஆடினது இப்ப காலைக்காலை போட்டு அடிக்கிறீங்கள் என்று ஒரு நமட்டு சிரிப்பு வேறை.  

                                                                             அன்று எல்லோரும் வேளைக்கே எழும்பி சொன்ன நேரத்தை விட கொஞ்ச நேரம் முன்பாகவே தாயாராக நின்றோம்.எப்படி இருந்தாலும் அதைக் காணவில்லை இதைக் காணவில்லை என்று ஒரு மாதிரி 5 கார்களில் எல்லோரும் புறப்பட்டோம்.இரண்டு மணி நேர ஓட்டம் என்றார்கள்.போகிற வழியில் நினைத்ததைத் தருகிற சிறிய வேதக் கோவில் இருக்கிறது அதையும் போய் கும்பிட்டு எல்லோர் வேண்டுதல்களையும் சொல்லிப் போட்டு வரும் என்றார்கள்.ஓசியில் கேட்பது கிடைக்குமென்றால் யார்தான் விடுவார்கள்.அங்கே போனால்அமைதியான ஒரு இடம் சிறிய கோவில்.யார் யார் என்னென்ன வேண்டினார்களோ தெரியாது.எனக்கு ஒரே திறி சிஸ்ரேசின் ஞாபகம் தான்.


                                                                              ஒரு மணி நேர ஓட்டத்தின் பின் இடத்துக்கு வந்துவிட்டோம் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்றார்கள்.கிட்ட போக போக ஒரே மலைப் பிரதேசமாக இருந்தது.இன்னும் கிட்ட போக ஊரிலே மாட்டு இலையான் என்று சொல்வார்களே அந்த இலையான் எல்லோர் முகத்தையும் சுற்றி சுற்றி ஒரு வித இரைச்சலுடன் வந்து கொண்டிருந்தது.நல்ல அழகான இயற்கையாக இருந்தாலும் மாட்டு இலையான் ரொம்ப மோசமாக இருந்தது.வாயைத் திறந்து கதைக்க முடியவில்லை.என்னடா திறி சிஸ்ரேசைப் பாரக்க வந்து கதைக்கவும் ஏலாமல் இருக்கு திறி சிஸ்ரேசை கொண்டு போய்  காட்டுங்கோடா என்றால் சித்தப்பா எங்கை தெரியுது பாருங்கோ என்றான்.நானும் சுற்றி சுற்றி பார்க்கிறேன் எங்களோடு வந்திருந்தவர்களும் சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்.பின்பு தான் சொன்னான் மூன்று ஆள் மாதிரி மலை தெரியுது அது தான் திறி சிஸ்ரேஸ்.நான் மாத்திர மல்ல அங்கே புதிதாக வந்த எவருமே இதை எதிர் பார்க்கவில்லை.

                                                                            மலையைப் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் ஏதேதோ எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு போய் ஏமாந்துவிட்டது போல ஒரு உள்ளுணர்வு.என்னைப் போலவே பலரும் எண்ணிக் கொண்டு வந்ததை பின்னர் பார்க்கில் போயிருந்து கதைக்கும் போது அட இதாடா திறி சிஸ்ரேஸ் நாங்களும் ஏதோ என்று எண்ணிவிட்டோம் என்னும் போது எனது மனமும் ஆகா நம்மளை மாதிரியே எல்லோரும் எண்ணி வந்ததை நினைக்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.நாங்கள் பார்த்து ரசித்த மூன்று சகோதரிகளை நீங்களும் ரசிக்க வேண்டாமோ?

 

IMG_1473.jpg

செத்துப்போன கருவாடு

Thu, 01/03/2018 - 05:22

செத்துப்போன கருவாடு

 பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயன உரங்களைப் பாதிப்பதால், நுகர்வோருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது. 

பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன  உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை.

 வியாழக்கிழமை தமிழ்க்கடைக்குப் போனால் fresh ஆக மரக்கறிகள் வாங்கலாம் என்பது அனேகமாகன புலம்பெயர் தமிழர்களின் மூளைக்குள் பதியப்பட்டு விட்டது. தமிழ்க்கடை என்றால் ஊரின் நினைவு வரவேண்டாமோ?  ஊரில் கிராமங்கள் தோறும் உள்ள பெட்டிக்கடைகளில், கோபால் பற்பொடி, தேயிலை, பொரித்த கடலைப் பருப்பு, எள்ளு உருண்டை போன்ற பல பொருட்கள் பக்கெற் பக்கெற்றாகத் தொங்குமே ஏறக்குறைய அதே பாணியில்தான் இங்கே ஐரோப்பாவில் பல தமிழ்க் கடைகள் தங்களை வடிவமைத்து இருக்கின்றன.

 கடைக்கு உள்ளே போனால், முதலாளி யாருடனோ தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருப்பார். அல்லது கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார். இதில் அவரது தொலைபேசி உரையாடல் இருக்கே அது எப்போதுமே full volume தான். 

 கடைக்குள் பெட்டி பெட்டியாக இருக்கும் மரக்கறிகளை ஓரளவு அவதானித்து எடுத்து விடலாம். பச்சை மிளாகாயில்தான் கொஞ்சமாகத் தடுமாற்றம் வரும். முதற்கிழமை மிஞ்சிய, காம்புப் பக்கம் சாடையாக கறுத்து நசிந்து அழுது கொண்டிருக்கும் பச்சை மிளகாய்களும் புதியவைகளோடு சாமர்த்தியமாக கலந்து இருக்கும். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க நேரம் எங்கே இருக்கிறது? அள்ளிப் போட்டு வங்கிக் கொண்டுபோய் வீட்டிலும் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் இருக்கு.

உள்ளே இருப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தேங்காயின் ஓடு இவ்வளவு கடினமாக இருக்கிறதோ என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று ஒரு தடவை கடை முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரி” என்று அவர் ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னைக் கவலைப்பட வைத்து விட்டார்.

 எங்கள் நாட்டுக் கடலில் பிடிபடும் மீன்கள் செத்தாலும் வீரியம் மிக்கவை. அவைகளை ஒருநாளும் பக்கெற்றுக்குள் அடைத்து வைக்க முடியாது. கடைக்குள் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்குள் அவை துள்ளிக் குதித்து பக்கெற்றை விட்டு வெளியே வந்து ஐஸ் படிந்து விறைப்பாகவே இருப்பதை பார்த்தாலே தெரியும்.

 சரி விடயத்துக்கு வருகிறேன்.

 எனது நகரில் இருக்கும் தமிழ்க்கடைக்கு போன கிழமை போயிருந்தேன். எனக்கான மரக்கறிகளை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் காசு கொடுக்கப் போகும் போதுதான் நினைவுக்கு வந்தது, முதல்நாள் வாங்கிய வெங்காயம். மலிவாக இருக்கிறதென்று Super market இல் இரண்டரைக் கிலோ வெங்காயம் 89 சென்ற்ஸுக்கு  வாங்கியிருந்தேன். “எதுக்கு இவ்வளவு? “ என்று வீட்டில் ஒரு பார்வை பார்த்த போது, “சீனிச்சம்பல் செய்யலாம்” என்ற சமாளிப்போடு தப்பிவிட்டேன். சீனிச்சம்பலுக்கு மாசிக்கருவாடு போட்டால் அதன் ருசியே தனி. அந்த நினைவுதான் இப்பொழுது எனக்கு வந்தது.

 “தம்பி மாசிக்கருவாடு இருக்கே?”

 “மாசிக்கருவாடோ? முடிஞ்சுது எண்டு நினைக்கிறன்” சொல்லிக் கொண்டே நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்த முதலாளிக்கு என்னவோ மனதில் சட்டென்று தோன்றி இருக்க வேண்டும். “பொறுங்கோ கீழே இருக்குதோ எண்டு பாத்திட்டு வாறன்”

 போனவர் ஒரு கொர்லிக்ஸ் போத்தலுக்குள் இருந்த மாசிக்கருவாட்டு துகள்களுடன் வந்தார். “உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கண்ணை.ஒரு போத்தல் இருக்கு ”

 எனக்கான அதிர்ஷ்டம்  போத்தலுக்குள் இருந்த மாசிக் கருவாட்டுத் துகள்களுக்குள் அடங்கிபோனதில் சற்று கவலை இருந்தாலும் சிரித்துச் சமாளித்தேன்.

 முதலாளி மேசையில் வைத்த எனது ‘அதிர்ஷ்ட’ மாசிக் கருவாட்டு போத்தலை எதேச்சையாக நான் பார்த்த போதுதான் அது சொன்னது, use before 08.11.2016 என்று.

 “தம்பி கருவாடு செத்து ஒரு வருசத்துக்கு மேலாச்சுது போலை”

 “செத்தால்தான் அண்ணை கருவாடு. உயிரோடு இருந்தால் அது மீன்” முதலாளி அல்லவா. பேச்சு அந்த மாதிரி.

 “டேற் முடிஞ்சுது. 2016 எண்டு போட்டிருக்கு”

 “ஊரிலை கருவாட்டுக்கு expiry date இருக்கே? இஞ்சை எல்லாத்துக்கும் ஒரு  date  போடுவாங்கள். சாமான் பழுதில்லை நம்பிக்கையா கொண்டு போங்கோ. இதுன்ரை விலை ஆறு யூரோ. உங்களுக்கு நான் நாலு யூரோ போடுறன்”

 மலிவு வெங்காயத்துக்கே வீட்டில் ஒரு பார்வை கிடைச்சிருக்கு. மாசிக்கருவாட்டுக்காக இன்னொரு பார்வையை  எதுக்கு வில்லங்கத்துக்கு வாங்குவான்?

 “வேண்டாம் தம்பி”

 முதலாளிக்கு சற்று கோபம் வந்திருக்க வேண்டும். அவரது பார்வை மாறியிருந்தது.

 “நீங்கள்  expiry date முடிஞ்சதை கடையிலை வைச்சிருக்கிறதாலை பிரச்சினைகள் வரலாம். கவனம்” என்றேன்.

 “பிராங்போர்ட்டிலை வேண்டின இடத்திலை இதைக் கொண்டுபோய் திருப்பிக் குடுத்தால் புது லேபிள் ஒட்டி புது expiry date அடிச்சுத் தருவாங்கள். அப்ப சிலநேரம் விலை ஏழு யூரோவா இருக்கும்” சொல்லிக் கொண்டே மாசிக் கருவாட்டுப் போத்தலை பத்திரமாக தன் மைசைக்குக் கீழே வைத்தார்.

 தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போது ‘இந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

 கவி அருணாசலம் 

01.01.2018

கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே

Thu, 22/02/2018 - 21:23

கள்ளுக் கொட்டில் பக்கம் போகாதே

 

இது ஒரு கறுப்பு வெள்ளைக் கதை. பல வருடங்களுக்கு முந்தியது. நான், பாடசாலை முடிந்து வந்து மாலையில் கிளித்தட்டோ, கிரிக்கெற்றோ விளையாடிய காலம்.

‘ட’ வடிவில் அமைந்த ஒரு காணிதான் எங்கள் விளையாட்டுத் திடல். காணியின் ஒரு பக்கம் மரங்கள் எதுவுமின்றி வெளியாக இருக்கும். மற்றைய பக்கத்தில்  பனைமரங்கள் நிறைய இருக்கும். அது பீற்றர் குடும்பத்துக்கு சொந்தமானது.

கிரிக்கெற் விளையாடும் போது பந்து பீற்றர் குடும்பத்துக் காணிக்குள் போய் விழுந்து விட்டால் பந்தை யார் போய் எடுப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வரும். பீற்றர் வீட்டில் கழிப்பிட வசதி கிடையாது. அந்த பனைக்கூடல்தான் அவர்கள் `குடும்பத்துக்கான திறந்தவெளிச் ‘சுழல் கக்கூஸ்’. (கொஞ்சம் அதிகமாக இருந்து விட்டால் இருக்கும்  இடத்தில் இருந்து சுழன்று சற்று அரக்கி தள்ளிப்போய் இருப்பதால் அதற்கு ‘சுழல் கக்கூஸ்’ என்ற செல்லப் பெயர்) பீற்றர் குடும்பத்தின் சுழல் கக்கூஸோடு ஒட்டி இருந்ததுதான் அன்ரன் வீடு. இந்தப் பத்தியின் நாயகன் அவன்தான்.

அன்ரன் என்னைவிட இரண்டு வயது கூடியவன். ‘ஊருக்கு வீரன் உள்ளத்தில் கோழை’ என்பது அவனுக்குப் பொருத்தமானது. தேவாலயத்துக்குப் பக்கத்தில் சேமக்காலை இருப்பதால் அந்தப் பக்கம் பாராமலேயே தேவாலயத்துக்குள் ஓடிவிடுவான். சேமக்காலையில் உள்ள பேய்கள் தன்னை பிடித்துவிடும் என்ற பயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்  என்ன காரணம் சொல்லி தேவாலயத்துக்குப் போகாமல் இருக்கலாம் என்று யோசிப்பவன். அவனது தந்தை பெனடிக் மெகா குடிகாரன். வேலை முடிந்து வரும்போதோ அல்லது அந்தப் பக்கமாகப் போகும் போதோ கள்ளுக் கொட்டில் ஓரம் அவர் ஒதுங்காமல் இருந்தது கிடையாது. எப்போதும் அவர் பானை வயிறுடையோன்தான்.

கள்ளுத் தவறணைகள் வருவதற்கு சற்று முன்னரான காலம். ஆங்காங்கே கள்ளுக் கொட்டில்கள் இருந்தன. கள்ளுக் கொட்டில்களுக்குப் போனால், தங்கள் தரம் குறைந்து விடுமென்று கள்ளை வீட்டுக்கு வரவழைத்து மேட்டுக்குடிகள் குடிப்பார்கள். சாதாரண மெகா குடிகளுக்கு கொட்டில்தான் சுவர்க்கபுரி. கிடுகுகளால் வேயப்பட்ட அந்த சொரக்கபுரியில் நாலு பக்கமும் இருந்து குடிக்க வசதிகள் இருக்கும். நாலு பக்கத்தில் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் யார் யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை அவதானிப்பதற்கு கிடுகுகளில் சின்ன சின்ன யன்னல்கள் இருக்கும். மணலை குவித்து அதில் மெலிதான பள்ளம் ஏற்படுத்தி  அதற்கு மேலே பிளா நிறைந்த கள்ளை வைத்து இன்ரெநெற் இல்லாமலே ஊர்ப்புதினங்களை நாள் முழுதும் மெண்டு கொண்டிருக்கலாம். போதாததற்கு, பொன்னையா அண்ணனின் மெதுவடை, பருத்தித்துறை வடை, மரவள்ளிக்கிழங்குப் பொரியல், பொரித்த றால், வதக்கிய கும்பிளா மீன் எல்லாம் நாங்கள் உனக்குத் துணைக்கு நிற்கிறோம்  நீ எவ்வளவு  கள்ளையும் உள்ளே தள்ளு என்று  உற்சாகம் தரும்.

 

சொல்லுறதைக் கேள் கிட்டவா”

“அன்ரன், கிட்ட போகாதையடா மனுசன் கொண்டு போடும்”

“பப்பா இனி  செய்யமாட்டன்” 

“வாடா கிட்ட”

“அன்ரன் ஓடுடா. எங்கையாவது போய் துலை. ஓடு”

அன்று மாலை விளையாடிக்கொண்டிருந்த பொழுது அன்ரன் வீடு அமர்களமாக இருந்தது.

எங்கள் வீட்டில் என்ன குழறுபடிகள் இருந்தாலும் அடுத்தவன் வீட்டில் நடக்கும் பிரச்சனை என்றால்  மழை மேகம் கண்ட மயில்கள்தானே நாங்கள். விளையாட்டை விட்டு விட்டு பூராயம் பாரக்கப் போனோம். நாங்கள் போன போது எல்லாம் முடிந்து விட்டது. அன்ரன் தெருவில் ஓடிக்கொண்டிருந்தான். அவனை துரத்திப் பிடிக்க முடியாதளவுக்கு வயதும், வயிற்றில் இருந்த கள்ளும் பெனடிக்கைத் தடுத்து விட்டன.

“எங்கை போகப் போறாய்? வீட்டுக்கு வருவாய்தானே அப்ப பாக்கிறன்” பெனடிக் சத்தமா  சொன்னபடி வீட்டுக்குள்ளே போனார்.

நடந்தது என்னவென்று அறிய முடியாமல் எங்களுக்கு அன்றைய விளையாட்டு ‘போர்’தான்.

ஆனாலும் அன்று இரவு ஊரெல்லாம்  ஒரே பரபரப்பாக இருந்தது. அன்ரனை ஊரே சேரந்து தேடியது. 

“என்ன இருந்தாலும் பெனடிக் இப்பிடி அடிச்சிருக்கக் கூடாது” சில பெண்கள் இப்படிச் சொல்லியே அன்ரனின் தாயின் சோகத்தைக் கூட்டி “ சரி சரி அழாதை. சூசையப்பர் கைவிட மாட்டார்” என்று சமாதானமும் செய்தார்கள். அன்றைய இரவு அன்ரனின் கள்ளுக் கொட்டில் கதையோடு கழிந்தது.

 

 டுத்தநாள் காலையில் குருவானவர் அன்ரனின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு அவனது வீட்டுக்கு வந்தார். குருவானவர் பெனடிக்கோடு கதைத்து அவரை சமாதானம் செய்து விட்டுப் போனார். 

நட்பு ரீதியாக நலன் விசாரிக்கலாம் என்ற சாட்டில் என்னதான் பிரச்சனை என்பதை அறிய நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் அன்ரன் வீட்டுக்குப் போனோம்.

நாங்கள் அன்ரன் வீட்டுக்குப் போனபோது, “பகலிலேயே சேமக்காலை பக்கம் போகாத என்ரை பெடியன் ராத்திரி முழுக்க அப்பனுக்குப்  பயந்து அத்துக்குள்ளையே படுத்திருந்திருக்கிறான். சொல்லிக் குடுத்து பிள்ளை வளக்கத் தெரியாது. எதுக்கெடுத்தாலும் அடியும் உதையும்தான்” அன்ரனின் தாய் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

நாங்கள் தொடர்ந்து பல தடவைகள் கேட்டதால் அன்ரன் நடந்த விடயத்தைச் சொன்னான்.

கள்ளுக் கொட்டிலில்  குடித்து விட்டு வரும் போது வீட்டில் வைத்து குடிப்பதற்கென்று ஒரு போத்தல் கள்ளு வாங்கி வருவது பெனடிக்கின் வழக்கம். அன்ரன் களவாக அதில் கொஞ்சமாக ருசி பார்க்கத் தொடங்கினான். வீட்டில் மா இடிபதற்கு அன்ரனின் தாய் வெள்ளைப் பச்சரிசி ஊறப் போட்டால் அவனுக்கு சந்தோசம். அரிசி ஊறிய தண்ணீரை எடுத்து வைத்துக் கொளவான். பெனடிக் கொண்டு வரும் கள்ளில் பாதிக்கு மேல் குடித்து விட்டு எடுத்து வைத்திருந்த அரிசித் தண்ணியை கள்ளோடு கலந்து வைத்துவிடுவான். இந்த களவுக்குடி அன்ரனுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. என்றாவது ஒருநாள் கள்ளுக்கொட்டிலுக்குப் போய் ஆறுதலாக இருந்து அனுபவித்து பிளாவில் கள்ளு குடிக்க வேண்டுமென ஆசை அவனுள் வளரத்தொடங்கியது. 

அதைத்தான் முதல் நாள் அன்ரன் செய்திருக்கிறான். கள்ளுக் கொட்டிலுக்குப் போய் பிளாவில் கள்ளு வாங்கி, மண் குவித்து அதில் குழியிட்டு, பிளாவை வைத்து ஆற அமர இரசித்து இரசித்து கள்ளு குடிக்கும்வரை எந்தவித பிரச்சினையும் அன்ரனுக்கு இருக்கவில்லை. பிளாவை உதறி கம்பில் மாட்டும் போதுதான் பிரச்சினையின் அரிச்சுவடி தொடங்கியது.

“காசு எவ்வளவு?” அன்ரன் கேட்ட போது பதில் கள்ளுக் கொட்டிலுக்குப் பின்னால் இருந்து வந்தது.

‘அன்ரன், அதொண்டும் நீ குடுக்க வேண்டாம். நான் குடுக்கிறன்”

வயித்துக்குள் போன கள்ளு இன்னும் போதையை ஏற்றவில்லை. அதுக்குள் உடலில் இருந்த சக்தி எல்லாம் தரையில் இறங்கியது போன்று அன்ரன் உணர்ந்தான்.

“கோவிந்தன், அவனிட்ட வேண்டாதை. அவன்ரை காசையும் நான் தாரன்” சொல்லிக் கொண்டே கொட்டிலின் பின்னால் இருந்து வந்த பெனடிக்கின் முகத்தைப் பார்க்காமல் அன்ரன் தலை குனிந்து நின்றான்.

“மீன் வேண்டினனான். நான் வரக் கொஞ்ச நேரம் பிடிக்கும். மீன் பழுதாப் போடும். நீ கொண்டுபோய் கொம்மாட்டை குடு” பெனடிக் தந்த மீன் பையை அன்ரன் வாங்கிக்கொண்டு புறப்படப் போகும் பொழுது பெனடிக் சொன்னான், “சைக்கிளிலேயே வந்தனீ? பாத்து கவனமாக ஓட்டு”

சைக்கிள் ஓட்டும் போது காற்று முகத்தில் பட உள்ளிழுத்த கள்ளு மெதுவாக தன் வேலையைத் தொடங்க, இதுதான் போதையா என்ற உணர்வோடு, கள்ளடித்ததற்கு அவனது தந்தை தந்த அங்கீகாரமும் சேரந்து கொள்ள வேறொரு உலகத்தில் அன்ரன் இருந்தான்.

வீட்டுப் படலையைத் திறந்து கொண்டு பெனடிக் வந்து முதல் உதை விட்ட போதுதான் அன்ரனுக்கு தந்தை தனக்குத் தந்த அங்கீகாரத்தின் மதிப்பு புரிந்தது. 

 

ன்ரனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

“ராத்திரி முழுக்க சேமக்காலைக்குள்ளையே இருந்திருக்கிறாய். பயமா இருக்கேல்லையே?”

“அப்பன் கையிலை நேற்று மாட்டி இருந்தால் இண்டைக்கு சேமக்காலைக்குள்ளை புதைச்சிருப்பாங்கள். குருவானவர் கூட்டிக்கொண்டு வந்ததாலை உங்களோடை கதைச்சுக்கொண்டிருக்கிறன்”

 

இவ்வளவு நேரமும் கறுப்பு வெள்ளையில் கதை சொன்னேன். கொஞ்சம் கலருக்கு மாத்திப்பார்க்கிறேன்.

 

இப்பொழுது அன்ரன் தனது மனைவியோடு மன்னாரில் இருப்பதாகவும்,அவனது ஒரே மகனான ஜூற் வீரமரணம் அடைந்து விட்டதாகவும் அறிந்தேன். மற்றும்படி அன்ரன் இப்பொழுது கள்ளு குடிக்கிறானா, அவனுக்கும் தகப்பனை போல பானை வயிறா போன்ற விபரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.

கவி அருணாசலம்

22.02.2018

 

 

 

 

 

சின்ன ஐயர்

Wed, 21/02/2018 - 20:23

நான் வெளிநாடுகளில் கோயில்களுக்குப் போவதில்லை ஆயினும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறமுடியாது. அதுபோல்  நல்ல காரியங்களுக்கு கடவுளிடம் நேர்த்தி வைத்து அவரும் எதோ இரக்கப்பட்டு எனக்கு சிலசில நன்மை செய்தாலும் சில விடயங்களில் இன்னும் கண்டும் காணாமல் தான் இருக்கிறார்.

கொஞ்ச நாளா இரண்டு மூன்று பண முடிப்பு முடிஞ்சு வச்சாச்சு. ஒண்டும் நல்லதா நடக்கிறதாக் காணேல்ல. நாட்டுக்குப் போறன் எண்டு சொன்னதும்  என் நண்பியும்  தனக்கும் சேர்த்து சுவாமி கும்பிட்டு வா என்றாள். சரி அவ்வளவு தூரம் போரம் வன்னியில உள்ள அந்தக் கோவிலுக்கும் போட்டு வருவம் என எண்ணி கடவுளே எந்தத் தடையையும் ஏற்படுத்தி விடவேண்டாம். நானும் கணவரும் உம்மிடம் வரவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். 

அது காட்டுக்குள் இருக்கும் ஒரு கோவில். மதியம்தான் பூசை. மாலையில் பூட்டிவிடுவார்கள். பூசை எத்தனை மணிக்கு என்று யாருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அந்தக் கோவிலுக்குப் போவதற்கு பஸ்சும் இல்லை. அதனால் கிளிநொச்சியில் இருந்து ஓட்டோ பிடித்துக்கொண்டு ஒரு மணித்தியாலம் மேடு பள்ளங்கள் எல்லாம் கடந்து பத்து மணிக்குக் கோயிலை அடைந்தோம். தம்பி உங்கள் போன் நம்பரைத் தாங்கோ. பூசை எப்ப முடியும் என்று கேட்டுவிட்டு உங்களுக்குப் போன் செய்யிறம் எங்களைத் திரும்ப வந்து ஏற்றுவீர்கள் தானே என்றார் கணவர். எப்பிடியும் நான் முடியிற நேரம் இந்தப் பக்கம் வந்திடுவன். நீங்கள் போன் செய்யுங்கோ அண்ணா என்றுவிட்டு இலக்கங்களைத் தந்துவிட்டுப் போய்விட்டார். 

அக்கம் பக்கம் சிறு பெட்டிக்கடை கூட இல்லை. சுற்றிவரக் காடும் தொட்டம் தொட்டமாக சில வீடுகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. காலைக் கழுவிவிட்டு கோயிலினுள்ளே சென்றால் இரண்டொரு வயோதிபர்களே உள்ளே இருந்தனர். நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வாறம். எத்தினை மணிக்குப் பூசை என்று கேட்டதற்கு அது பன்னிரண்டு ஒண்டு செல்லும் என்றுவிட்டு நேத்திக்கடனோ என்றனர். ஓம் ஆர் இங்க பொறுப்பாய் இருக்கினம் என்று கேட்டதுக்கு ஒரு பக்கத்தைக் கைகாட்டிச்சினம். அங்கு சென்று பார்த்தால் காணிக்கையோ அல்லது கோயில் நிவாரணப் பணிக்கு உதவுவோரோ பிரதான குருக்களிடம் பணம் செலுத்திப் பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று போட்டிருந்துது. 

அதில் போட்டிருந்த இலக்கத்துக்கு கணவர் போன் செய்ய இருங்கோ உடன வாறன் என்றபடி வந்து சேர்ந்தார் பிரதம குருக்கள். அவரைப் பார்க்க நல்ல சாந்தமானவராக இருந்தார். நீங்கள் வெளிநாடோ என்று உடனே கேட்டார். இல்லை என்று கூறுவோமோ என்று நான் என்னமுதலே ஓம் ஐயா என்றார் கணவர். இண்டைக்கு மோதக பூசை இருக்கு. நீங்களும் ஒரு  பூசை செய்யுங்கோவன் என்றவுடன்  எனக்கு முந்திக் கணவரும் தலையாட்ட, பணத்தைச் செலுத்திவிட்டு ஒருபக்கத்தில் போய் அமர்ந்தோம்.

அரை மணிநேரம் கழிய நேரம் எனக்குப் பசிக்க ஆரம்பித்துவிட்டது. குடிக்கப் பச்சைத் தண்ணீர் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் தானே மூண்டு நேரம் சாப்பிடுறாய். ஒரு அரை நாள் உனக்குப் பட்டினி கிடக்கேலாமல் இருக்கு என்று மனிசன் இதுதான் சாட்டு என்று என்னை வார வெளிக்கிட, பசிக் களைப்பைவிட உங்கள்  கதை தான் களைக்கப் பண்ணுது  என்று ஒருவாறு அவரின் வாயை அடைத்துவிட்டு கடவுளே எனக்கு இது சோதனையோ என்றுவிட்டு கொஞ்சநேரம் புதினம் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் பூணூல் போட்ட ஒரு ஐயர் கோவிலுக்குள் வந்தார். எல்லோரையும் சுற்றிவரப் பார்த்துவிட்டு எம்மையும் பார்த்துத் தலையாட்டிவிட்டு மூலஸ்தானத்துக்குக் கிட்டப் போனார். பின் பரபரப்பாகத் தானே எல்லாம் செய்வதுபோல் அங்கும் இங்கும் போய்வந்தவர். இவர் தான் பூசை செய்யப் போகிறாரோ என்று எண்ணிய என் மனம் சீச்சீ இவராக இருக்காது, இவரின் கண்களைப் பார்க்க எதோ நேர்மை அற்றவர் போல் தெரிகிறது என்று எண்ணியதை என் கணவருக்கும் கூறினேன். உனக்கு ஆரைப் பார்த்தாலும் சந்தேகம் தான். நாங்கள் புது ஆட்கள் என்று எம்மை அடிக்கடி பாக்கிறார. உனக்குப் பசி கண்ணை மறைக்குது போல என்று நக்கலாகக் கூறியபடி ஐந்து சென்று அங்கு நின்ற ஒருவரிடம் மனிசன் எதோ கேட்பதும் திரும்புவதுமாக இருக்க, என்னப்பா விஷயம் என்றேன் நான்.

பக்கத்தில எங்காவது கடையள் இருக்கோ என்று விசாரிச்சனான். அரை மணித்தியாலம் போகவேணுமாம். நான் போய் ஏதும் உனக்குக் குடிக்க வாங்கிக்கொண்டு வரட்டோ என்றார் கணவர். வேண்டாம் அப்பா. இண்டைக்கு ஒருநாள் தானே விரதம் இருக்கிறன் என்றேன். திட்டினாலும் அவருக்கு என்னில அன்புதான் என்று மனதுள்ளே நான் எண்ணியதை வெளியே சொல்லவில்லை. இப்போது அந்தச் சின்ன ஐயர் மூலஸ்தானத்தை திறந்து உள்ளே இருக்கும் கடவுள் எமக்குத் தெரியாதபடி கேட்டின் ஒன்றை இழுத்து மூடிவிட்டு உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார். இடையிடை பெரிய ஐயாவும் அங்கு சென்றுவிட்டபடியால்  இனிப் பூசை தொடங்கிவிடும் என்று எண்ணியபடி நான் எழுந்திருந்தேன்.

மூலஸ்தானத்துக்கு வெளியே வந்த சின்ன ஐயர் இடுப்பில் செருகியிருந்த தொலைபேசியை எடுத்து அவதியாகக் கதைப்பதுபோல் ஏதோ கதைத்தபடியும் எம்மைப் பார்த்தபடியும் வெளியே சென்றார். மீண்டும் எம்மை நோக்கி வந்தார். ஏனோ தெரியவில்லை எனக்கு மனதில் பிசைவதுபோல்  ஒரு எண்ணம் தோன்றியது. கணவரிடம் வந்தவர் உங்களிடம் ஒரு மூவாயிரம் ரூபாய் இருக்குமா? பூசை முடியத்தருகிறேன் என்றார். என்னிடம் ஐயாயிரம் ரூபாய்த் தாளும் கொஞ்சச் சில்லரையும் தான் இருக்கு. மாதத்தின காசு இல்லை என்றார் கணவர். பரவாயில்லை அதைத் தாங்கோ பூசை முடிஞ்ச உடன தாறன் என்றார் மீண்டும். உடனே நான் என்னட்டை இரண்டாயிரம் இருக்கு என்று கூறி என் கைப்பையில் இருந்ததை எடுத்துக் குடுத்தேன். மீண்டும் வெளியே சென்ற அவர் வருவாரோ மாட்டாரோ என நான் எண்ணிக்கொண்டு இருக்கத் திரும்பிவந்து பூசைகளுக்கான உதவியைச் செய்யத் தொடங்கினார்.

மனம் கொஞ்சம் நின்மதியானாலும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இப்ப கிட்டத்தட்ட ஒரு முப்பது பேராவது கோவிலினுள்ளே வந்திருந்தார்கள். முப்பதுபேரும் அர்ச்சனை செய்தாலும் ஐநூறு வருமோ என்று என் மனதில் சந்தேகம் இருந்தது. சரி கோவிலுக்கு வந்த இடத்தில எதுக்கு கண்டதையும் நினைச்சுக் குளம்பவேணும். எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்ளுவார் என்று மனதை ஒரு நிலைப் படுத்தியபடி கடவுளை வணங்க  ஆரம்பித்தேன். பூசை எல்லாம் முடிந்து அர்ச்சனை எல்லாம் முடிந்து கொண்டம் கொஞ்சமாக ஆட்கள் வெளியேறிக்கொண்டு இருந்தனர்.

பூசைக்குக்காசு கட்டினவை எல்லாம் வாங்கோ வந்து உங்கட பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போங்கோ என்று பிரதம குருக்கள் கூற நான் வாங்கோ அப்பா என்றேன் கணவரைப் பார்த்து. நீ போய் வாங்கிக் கொண்டு வா நான் ஓட்டோவுக்கு போன் செய்யிறன் என்றார் கணவர்.  பிரசாதத்தை வாங்கி வந்தவுடன் உடனே அதில் இரண்டு மோதகங்களை எடுத்துக் கணவனுக்கும் ஒன்றைக் கொடுத்து நானும் உண்ணத் தொடங்கினன். இன்னும் பசி கூடின மாதிரி இருக்க வெண் பொங்கல், சக்கரைப்பொங்கல்  என்று கட கடவென்று உண்ணத் தொடங்க ஓட்டோவில போகேக்குள்ள சாப்பிடலாம் தானே. உப்பிடிச் சாப்பிட விக்கப் போகுது என்ற கணவர், வெளியே போன ஐயரையும் காணேல்ல. காசைத் தருவாரோ அல்லது அப்பிடியே போட்டாரோ தெரியவில்லை என்றார்.

அப்பிடிச் செய்ய மாட்டார். சரி வாங்கோ வெளியில போய்ப் பார்ப்பம். நேரம் செல்லுது என்றபடி கொண்டுவந்த பைகளைத் தூக்கினேன். நாம் வெளிப் படியைக் கடக்கும்போது சின்ன ஐயர் உள்ளே வந்துகொண்டிருந்தார். என் கணவர் எதுவும் கேட்க முன்னரே ஓட்டக் காரரிடம் உங்கட காசு குடுத்திருக்கிறன். வாங்குங்கோ. என்று கூறியபடி உள்ளே சென்றுவிட நாம் ஓட்டோ நிற்கும் இடத்துக்குப் போனோம். ஓட்டோக்காரரின் கையில் மடித்தபடி  பணமிருந்தது. ஐயர் காசு தந்தவரோ என்று கணவர் கேட்க, ஓமண்ணா இந்தாங்கோ என்றபடி அந்த ஆட்டோக்காரர் காசைக் கணவரிடம் நீட்டினார். நீங்கள் தான் எங்கள் ஓட்டோக்காரர் என்று எப்பிடி ஐயருக்குத் தெரிந்தது என்று நான் அவரைக் கேட்க, இங்குள்ளவை ஓட்டோவில் வாறதில்லை அக்கா. வெளியில இருந்து வாரவைதான் ஓட்டோவில வாறவை என்று ஐயாவுக்குத் தெரியும். என்னட்டை வந்து நீர்தான் வெளிநாட்டுக் காரரை ஏற்றிக்கொண்டு வந்ததோ என்று கேட்டவர். நான் ஓம் என்றவுடன் காசைத் அவையிட்டைக் குடுங்கோ என்று காசைத் தந்துவிட்டுப் போட்டார் அக்கா என்றவர் ஓட்டோவைத் திருப்பி வேகம் எடுக்கத் தொடங்கினார். 

அட ஐயர் கெட்டிக்காரர் தான் எண்டு நான் எண்ணி முடிக்கமுதல் தம்பி ஓட்டோவை நிப்பாட்டுங்கோ என்றார் கணவர். என்னப்பா ஏதும் விட்டிட்டு வந்திட்டியளே என்று நான் கணவரைப்பார்க்க அவர் கையில் ஐயர் கொடுத்துவிட்டுப் போன பணம். ஆயிரத்தி முன்நூறுதான் இருக்கு. மிச்சக்காசைத் தராமல் விட்டதுகூடப் பரவாயில்லை. எங்களை விசரர் ஆக்கிப் போட்டாரே ஐயர் என்று கடுப்போடு இறங்கிய கணவரை கையைப் பிடித்து  மீண்டும் ஓட்டோவுக்குள் இருத்திவிட்டு தம்பி நீங்கள் ஓட்டோவை எடுங்கோ என்றேன். கோயில்ல பூசை செய்துகொண்டு இதென்ன அங்கிடுதத்தித் தனம் என்றபடி அங்கலாய்த்த கணவனிடம் கடவுள் அவரைப் பார்த்துக் கொள்ளுவார். இதுவும் நேர்த்திக்காகக் குடுத்தது என்று நினைத்து இனி அதுபற்றிக் கதைக்கவேண்டாம் என்றேன். அண்ணர் சொல்லுறது சரிதான் அக்கா. உங்களிடம் நேரே விசயத்தைச் சொல்லிக் காசைத் தந்திருக்கலாம் என்று கூறிய ஓட்டோக்காரருக்கு எதுவும் கூறாது. கணவனின் கையை ஆறுதலாகப் பற்றினேன்.

 

சான்றிதழ்.

Tue, 20/02/2018 - 14:48

சான்றிதழ்.

அது ஒரு முன்னிரவு கூடிய மாலை நேரம். மலைநாட்டுக்கே உரிய குளிரும், குளிர்காற்றுடன் சாரலும் அடித்து கொண்டிருக்கு. பாதையும் படுத்திருக்கும் பாம்புபோல் வளைந்து நெளிந்து மேலே மேலே போகிறது.அதில் அந்த ஹையஸ் வண்டி கொண்டைஊசி வளைவுகளில் நிதானமாக ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கு.அதன் ஹெட்லைட் இரண்டும் புலியின் கண்கள்போல் மினுங்கி கொண்டிருக்கு. இராகவன் மூன்றாவது கியரில் வண்டியை மிகவும் மெதுவாக செலுத்திக் கொண்டிருக்கிறான். வண்டியின் ஸ்டீரியோவில் சன்னமான குரலில் h.r  ஜோதிபால.......,

"ஆதர மல் பவண்னே 

ஆயன மே கமண்ணே 

ஹொய்தோ யன்னே 

கவுதோ என்னே 

துலீகா ....துலீகா ...... பாடிக்கொண்டு வருகிறார்.

அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது. அவனின் பல்லிடுக்கில் r .v .g .பீடி எரிய மூக்கினால் புகை வெளியேறுகின்றது. வண்டி சமதளத்தில் வருகின்றது. சற்று தூரத்தில் ஒரு பஸ் தரிப்பிடம். அதில் வீதியை பார்த்தபடி ஒராள் நிக்கிறார். அருகே வருகையில் அது ஒரு பெண் எனத் தெரிகின்றது. அவள் முகத்தில் வேதனையுடன் காலை உதறிக் கொண்டிருந்தாள். வண்டியை பார்த்ததும் தனது தாவணியை உருவி அசைத்து நிறுத்துமாறு சைகை செய்கின்றாள். வண்டி நிக்காமல் அவளைக் கடந்து செல்கின்றது. ஒரு நிமிஷம் யோசித்தவன்,தனக்குள் இந்த நேரத்துக்கு இனி இங்கு பஸ் வராது. கூட்டிக்கொண்டு போய் கடைகளுக்கு கிட்ட விடுவம் என நினைத்து றிவ்வார்ஸில் அவளருகே வருகின்றான். அவள் வலியுடன் பதட்டமாய் நிப்பதைப்  பார்த்து, வண்டியை சிறிது திருப்பி அந்த இடத்துக்கு வெளிச்சம் படுமாறு நிறுத்தி காண்ட் பிரேக் போட்டுவிட்டு இறங்கி அவளருகே வருகின்றான்.

இராகவன்: மொக்கத நோனா கோகேத யன்னே ....,( என்ன பெண்ணே எங்கு போகிறாய்).

பெண் : மாத்தையா, ஓயாட்ட  மட்ட உதவி கறன்ன புழுவந்த. யம் பழிபோதாக் கயி.....( ஐயா எனக்கு கொஞ்சம் உதவ முடியுமா, எதோ பூச்சி கடிக்குது ).

அவளது முகத்தையும் உடையையும் பார்த்தவன், நீங்கள் தமிழா. இங்கு யாரையாவது தேடி வந்திருக்கிறீர்களா. எங்கு காட்டுங்கள்.

ஓம் நான் தமிழ்தான். இங்கு கடிக்குது என்று காலை காட்டுகின்றாள். எடுக்க வருகுதில்லை.

பொறுங்க நான் பார்க்கிறன், என்று சொல்லி பார்த்தால் அவளது கணுக்காலுக்கு மேல் ஆடுதசையில் மலை அட்டை ஒன்று கடித்து இரத்தம் உறிஞ்சிக்கொண்டிருக்கு. இது மலை அட்டை  அசைய வேண்டாம் என்று சொல்லி வில்லுக் கத்தியை எடுத்து  அவளது சுடிதாரை வெட்டி விட்டு பார்க்க அது இரத்தம் குடித்து குண்டாகிக்  கொண்டிருக்கு. இராகவன் சற்றும் தாமதிக்காமல் பீடியின் நெருப்பை கிள்ளி எறிந்துவிட்டு அந்த பீடியை சப்பி அந்த ஜந்துவின் மேல் பொளிச் பொளிச் என்று துப்புகிறான்.அவளிடம் பேச்சு குடுத்துக் கொண்டே மீண்டும் மீண்டும் எச்சிலை உமிழ அது கடிப்பதை விட்டு தலையை உயர்த்துகிறது. அவனும் சுணங்காமல் கத்தியால் அதை வழித்து எடுத்து அப்பால் போட்டுவிட்டு அவளையும் ஏற்றிக்கொண்டு கடைகள் இருக்கும் இடத்துக்கு வருகின்றான். சில கடைகள் மட்டுமே அங்கிருக்கு.அங்கே அவளை இறக்கிவிட்டு செல்கிறான். அவனது கடையும் பேக்கரியும் அந்த வீதியின் கோடியில் இருக்கு.அங்கு வானை நிறுத்திவிட்டு உள்ளே போனவன் உறங்கி விடுகின்றான்.

சோதனை தொடரும்....!

 

 

இன்றைக்கு முழுகப்போகிறோம்

Tue, 20/02/2018 - 00:56

 நவநாகரீகமான உலகில் முழுகப்போகிறேன் என்றால் இவ்வளவு நேரமும் நன்றாக இருந்தவருக்கு இப்ப என்ன நடந்தது என்று யோசிப்பார்கள்.ஆனால் 1960 களிலும் அதற்கு முன்னரும் பிறந்தவர்களுக்கு முழுக்கைப் பற்றிய பெரிய பெரிய கதைகளே இருக்கும்.

ஊரில் இருந்த காலங்களில் குளித்தல், தோய்தல் ,முழுகுதல் என்று மூன்று வகைப்படுத்தியிருந்தனர்.

முதலாவதாக தலையிலே தண்ணீர் படாமல் அள்ளி ஊற்றிக்கொண்டே இருந்தால் குளித்தல்.

அடுத்து ஒரு செத்தவீடு போய் வந்தால் தலையிலே தோய் என்பார்கள்.

மூன்றாவது தான் முழுக்கு.எனது பதின்ம வயதுக்கு முதல் முழுக்கு எப்படி இருந்தது. உங்களுக்கும் முழுக்கைப் பற்றி நிறைய அனுபவம் இருக்கலாம்.ஆணாக இருந்தா என்ன பெண்ணாக இருந்தா என்ன வெட்கப்படாமல் எழுதுங்கள்.

அனேகமானவர்களுக்கு சனிக்கிழமை என்றால் முழுக்கு நாள் என்றே சொல்வார்கள்.எமக்கும் சனிக்கு சனி முழுக்கு தான்.கிராமப் புறங்களில் ஆட்டிறைச்சி வாங்குவதை விட பங்கு இறைச்சி தான் அதிகம்.எமது ஊரிலும் ஓரிவருக்கு சனிக்கிழமை என்றால் ஆடு அடிக்கிறது தான் வேலை.அப்பாவிடம் வந்து இன்றைக்கு ஆடடிக்கிறம் உங்களுக்கு  எத்தனை பங்கு என்றால் அவன் கந்தையா முதலே வந்து கேட்டான் ஒரு பங்குக்கு சொல்லி போட்டன்.சரி சரி பரவாயில்லை அடுத்த சனி நான் அடிக்கிறன்  எத்தனை பங்கு என்று அப்பாவுக்கு விருப்பமில்லாவிட்டாலும் ஓடர் எடுத்துவிடுவார்கள்.அவர்கள சொன்னது போலவே பனை ஓலையில் பெரிய ஒரு புனல் மாதிரி செய்து அதற்குள் ஆட்டிறைச்சி இருக்கும்.தொட்டுப் பார்த்தால் சுடும்.

அந்தக் காலத்தில் முழுககு என்றால் இரண்டே விதம்.ஒன்று அரப்பு வைக்கிறது மற்றது சீயக்காய் அவித்து அரைத்து முழுகுவது.பெண்களில் அனேகமானோர் சீயக்காய் தான் வைப்பார்கள்.இன்று வரை காரணம் தெரியவில்லை.

எமது வீட்டில் அப்பா அம்மா இரண்டு வயது மூத்தவரான அண்ணன் அடுத்து நான்.சிறிய குடும்பம்.சனிக்கிழமை என்றால் ஒரே சந்தோசம்.மிகவும் சிறுவர்களாக இருந்த காலத்தில் காலை9 ,10 மணிக்கே போட்டிருக்கிற காற்சட்டை எல்லாம் கழற்றிவிட்டு தலையில் இருந்து உள்ளங்கால் வரை நல்லெண்ணை போட்டு தேய் தேய் என்று அப்பா தேய்த்துவிடுவார்.தலையில் எண்ணெய் வைத்து தேய்க்கும் போது ம்ம்ம்ம்ம் என்று தொடர்ந்து சத்தம் போடுவோம்.இந்த சத்தம் ஒருவித் அனுங்கல் சத்தமாக வெளிவரும்.எண்ணை தேய்த்து முடிந்ததும் வளவு முழுக்க ஓடியாடி விளையாட்டு தான்.

இதுவே கொஞ்சம் வளர்ந்த பின் உரிந்து போட்டு நிற்க கொஞ்சம் வெட்கம்.சரி இந்தா கோமணம் கட்டு என்று ஆரம்பத்தில் அப்பாவே கட்டிவிடுவார்.அந்தக் காலங்களில் அரைநாண் கயிறு இல்லாத ஆண்களையே பார்க்க முடியாது.இப்போ அரைநாணுடன் அந்த ஆணையும் பார்க்க முடியாது.ஆனாலும் எப்பவும் போல அவர்தான் எண்ணெய் தடவி தேய்த்துவிடுவார்.

12, 1 மணிபோல் இறைச்சி வீடு தேடி வந்து மறக்காமல் பணத்தையும் வாங்கிக் கொண்டு போவார்கள். நாங்கள் விளையாட்டுடன் நிற்க அப்பா இறைச்சி வெட்டி கொடுத்து சகல வேலைகளையும் முடித்து விட்டு அரப்பு வைக்க கூப்பிடுவார்.எண்ணெய் தேய்க்கிற மாதிரி அரப்பையும் தலையிலிருந்து கால் வரை தேய்த்துவிடுவார்.அரப்பு கண்ணுக்குள் போக எரியத் தொடங்கும்.அப்போ கொஞ்சம் திழுறினால் படார் என்று ஒன்று விழும்.இப்படி இருவருக்கும் மாறி மாறி தேய்த்து விட்டு ஏற்கனவே தொட்டியில் அடைத்திருந்த தண்ணீருக்குள் கொஞ்ச நேர விளையாட்டு முடியும் போது ஒவ்வொருவராக கூப்பிட்டு சுகம் சுகம் சுகம் என்று சொல்லி மூன்று வாளி.அவரே வந்து தலையை போட்டு ஒரு ஈரமும் இல்லாமல் துடைத்துவிடுவார்.நாங்களும் முழுகி முடிய இறைச்சி கறியும் வாசம் மூக்கi துளைக்கும்.எமது வீட்டில் இறம்பை இலை நிறைய இருந்தது.இதுவும் இறைச்சிக்கு புறும்பான சுவையும் மணமும்.

விறு விறு என்று வீட்டுக்குள் ஓடியதும் அம்மா ஒரு கையில் உடுப்படனும் மறு கையில் பவுடர் ரின்னுடம் நிற்பா.இப்போ கறுப்பாக இருந்த மயிரெல்லாம் வெள்ளளையாக தெரியும்.புட்டு குழல் மாதிரி பவுடர் ரின்னுகள் குட்டிகுறா திறிறோசஸ் என்று பெரிய பெரிய சைசில் இருக்கும்.அப்படியே  நேராக குசினி தான் இயன்றவரை சாப்பிட வேண்டியது தான்.இதற்கிடையில் அப்பாவும் முழுகிவிட்டு வந்து விடுவார்.

இப்போ வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்க முடியுமோ?ஏதாவது விளையாட்டு என்று தொடங்கினால் எப்படா இவங்கள் பிழை விடுவாங்கள் என்று பார்த்து கொண்டிருக்கும் அப்பா ஏதாவது ஒரு சாட்டை வைத்து இருவரையும் கூப்பிட்டு இரண்டு மூன்று அடி போட கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்து விட்டு அப்படியே நித்திரையாகிவிடுவோம்.அன்று பிற்பகல் விளையாட்டே இருக்காது.அனேகமான சனிக்கிழமைகளில் முழுக்குடனே அந்த நாள் போய்விடும்.

இரவின் ஸ்பரிசம்.

Mon, 19/02/2018 - 16:54

இரவின் ஸ்பரிசம்.

இரவுக்கு  உருவம் கிடையாது 

பகலுக்கு வட்டமான வடிவம் உண்டு 

தினமும் பகல் இரவை உரசி செல்லும் 

இரவு மீண்டும் வளர்ந்து நிக்கும் 

 

ஆனந்தமாய் அலைகள் பொங்குவது இரவில் 

அபரிதமாய் ஆசைகள் ஆர்ப்பரிப்பதும் இரவில் 

ஈசல்கள் தீயை அணைப்பதும் இரவில் 

இயற்கையம் இயல்பாய் உறங்குவதும் இரவில் 

 

மல்லிகை தூது விடுவதும் 

மலர் மணம் நாசி நுகர்வதும் 

அழகுமயில் அலங்கரித்து வந்து 

உண்ட தாம்பூலம் உண்ண தருவதும் 

 

சிறு நண்டு வளை விட்டு எழும்ப 

கிளையமர்ந்த ஆந்தை கிள்ளியே பறக்க 

ஓநாய்கள் கவிபாடும் காட்டில் 

குறு முயல்கள் குழிக்குள் குறட்டை விடும் 

 

விரலோடு விரல் பிணைந்திருக்க 

இதழோடு இதழ் சுவைத்திருக்கும் 

விழி நான்கும் இமை மூடியிருக்க 

இடையின் ஸ்பரிசம் இடையில் அடங்கும் 

 

உழைப்பின் வலிகள் பகலுக்கு 

உடலின் ஒய்வு இரவுக்கு 

வானத்தில் நிலவு ஒளிர்ந்தாலும் 

வீட்டுக்குள் விளக்கணைய விலகாதிரவு.....!

 

ஆக்கம் சுவி......!

 

கடன் வாங்கிக் களியாட்டம்

Sun, 18/02/2018 - 19:17

கடன் வாங்கிக் களியாட்டம்

 கள்ளன் பொலீஸ் விளையாட்டில் கள்ளனாக இருப்பதைவிட பொலீஸாக இருப்பதைத்தான் அதிகமான சிறார்கள் விரும்புவார்கள். பொலிஸ் என்றால் எங்களிடம் ஒரு மதிப்பு, பயம் எல்லாம் இருந்தது. ஆனால் பின்னாளில் விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின்னர் பொலிஸாக இருப்பது பொலிசுக்கே பயமாகப் போயிற்று.

 வடமராட்சியில் அதுவும் குறிப்பாக வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் கடமையாற்ற அன்று சிங்களப் பொலிஸார் பெரிதும் விரும்பினார்கள். அதிலும் வல்வெட்டித்துறை என்றால் பொலிசுக்கு சொர்க்கபுரி. குசேலனாக வரும் பொலிஸ்காரனை குபேரனாக மாற்றிவிடும் மந்திர பூமி அது. எதுவுமே இல்லாமல் பொலிஸ் சேவைக்கு வந்தவர்கள் கூட அங்கிருந்து மாற்றலாகிப் போகும் பொழுது இனி வாழ்க்கையிலே எதுவுமே தேவை இல்லை என்ற நிலையிலேயே திரும்பிச் செல்வார்கள்.

 அன்று வல்வெட்டித்துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் சட்டபூர்வமற்ற வியாபாரம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வியாபாரத்திற்குத்தான் ‘கள்ளக் கடத்தல்’ என்று ஒரு குறியீட்டுப் பெயர். எம்ஜிஆர் படம் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே தினத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து தமிழகம் சென்று அதைப்பார்த்து விட்டு, படம் முடிய முட்டைத் தோசை சாப்பிட்டு, பயணத்தின் இடைநடுவே உள்ளே தள்ள எள்ளுப்பிண்ணாக்கும் வாங்கி வரக்கூடிய அளவிற்கு கடல் போக்குவரத்து வல்வெட்டித்துறையில் அப்பொழுது வெகுசிறப்பாக இருந்தது.

 அந்த ஊரில் நடப்பதை எல்லாம் கண்டு கொள்ள வேண்டிய கடமை உணர்வோ, அவசியமோ அங்கிருந்த பொலிஸாருக்கு துளியளவும் இருந்ததில்லை. அதற்காகத்தான் அவர்களுக்கான கொடுப்பனவுகள்  தாரளமாக நடந்து கொண்டிருந்தன. ஆனாலும் ஒரு தமிழ் இன்ஸ்பெக்டர் அங்கே பொறுப்பில் இருந்த பொழுது ‘அந்தத் தொழில்’ செய்பவர்களுக்கு பாரிய பின்னடைவு இருந்தது. அந்த இன்ஸ்பெக்டர் பெயர் குமார். ‘இன்ஸ்பெக்டர் குமார்’ என்ற பெயரைச் சொன்னாலே போதும் அந்த இடம் அமைதியாகிவிடும். கண்டிப்பும்,கடமையும் நேர்மையும் இணைந்த ஆறடி உயர மனிதர் அவர். வல்வெட்டித்துறைக்கு அடுத்த நகரான வல்வெட்டி என்ற நகரத்தைச் சேர்ந்த அவர் ஓய்வு பெற்ற பின்னர் அரசியல் காரணங்களுக்காக குட்டிமணியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

 வல்வெட்டித்துறையில் இருந்து ஒரு பத்து கிலோமீற்றர் நகர்ந்தால் பருத்தித்துறை. விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு நகரம். இலங்கையின் ஒரு முனை இங்கேதான் இருக்கிறது. அதிசயமாக அந்த முனையில் ஒரே ஒரு பனை இருந்தது. அதனால் பனைமுனை என்று பெயராயிற்று. புகையிரத சேவையைத் தவிர ஒரு நகரத்துக்கு தேவையான அனைத்தும் பருத்தித்துறையில் இருந்தன.

 பருத்தித்துறையில் இருந்த பொலிஸ் நிலையத்துக்கு முன்புறமாகவே நீதிமன்ற வளாகம் இருந்தது. காணி வழக்குகள், அல்லது கொடுக்கல் வாங்கல்களினால் வரும் பிணக்குகளைத்தான் பெரும்பாலும் அந்த நீதிமன்றத்தில் காணக்கூடியதாக இருந்தது. எப்போதாவது, நகரத்துக் காலிகளுக்குள் வந்த அடிதடி வழக்குகள் அந்த  நீதிமன்றத்திற்கு வரும். அதற்கான கோப்புகளைத் தூக்கிக்கொண்டு வந்து தங்கள் நேரம் வரும் வரை தூங்கி வழிந்து நீதிபதிக்குக் காட்டிவிட்டு தூசி பறக்காமல்  மூடி எடுத்துச் செல்வதே அன்றிருந்த பொலிஸாரின் முக்கிய வேலையாக இருந்தது. அதைத் தவிர பெரிதாகச் செய்து கொள்ள அவர்களுக்கென்று அங்கே வேலைகள் இருக்கவில்லை. குடி, கும்மாளம், விளையாட்டு என்று அவர்கள் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருந்தது.

 எழுபதுகளின் பிற்பகுதியில் சிறு வேளாண்மையை ஊக்குவிக்குமுகமாக சிறு கடன் உதவித்தொகை வழங்கும் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.  விவசாயிகளின் நன்மைக்கென கொண்டுவரப்பட்ட அந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கடனை பெற்றுக்கொள்ள அதில்  ஒரு ஓட்டை இருந்தது. அந்தக் கடனை பெற்றுக் கொள்வதாயின் அதற்கு காணி ஒன்று அவசியம் இருக்க வேண்டும். கடன் பெறுபவருக்கு அந்தக் காணி சொந்தமாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. குத்தகைக்குக் கூட அந்தக் காணியை எடுத்திருக்கலாம். அல்லது “இன்னாரான நான் எனது காணியில் சிறு பயிர் செய்வதற்கு இன்னார்க்கு சிறிது காலத்துக்கு இலவசமாக தருகிறேன்” என்று எழுதி ஒப்பம் இட்டுக் கொடுத்தாலும் போதுமானதாக  இருந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக காணி விவசாயத்துக்கு உகந்தது என்ற விதானையாரின் சான்றிதழ்தான் முகியமாகக் கவனிக்கப் பட்டது. (விதானையார்தான் பின்னாளில் கிராம சேவையாளர் என்று அழைக்கப்படுகிறார்) அரசாங்கத்தின் இந்தக் கடன் திட்டத்தால், பனைமுனைக்கு அருகில் இருந்த 105 அடி உயர கலங்கரைவிளக்கத்துக்கு மேலாக விதானைமார்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.

 பனைக்கூட்டமா?, பற்றைகள் நிறைந்திருக்கின்றனவா?, தென்னைகளின் சோலையா?, பள்ளமான காணியா?, நீர்ப்பாசன வசதி கிடையாதா? எதுவாக இருந்தாலும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் வேண்டியவர்களுக்கு எல்லாம் விதானைமார்கள் சான்றிதழ்கள் தந்தார்கள். இந்தத் திட்டத்தால் விதானைமார்கள் சம்பாதித்தார்களா?, சந்தோசம் அடைந்தார்களா? என்பது இங்கே தேவையில்லாத விசயம் என்பதால் அதை விட்டு விடுகிறேன். 

பருத்தித்துறை நகரம் ஒளிர ஆரம்பித்தது. பயிர் வளர்க்கக் கொடுத்த பணத்தில் பலர் கைகளில் தங்கமுலாம் பூசிய சிற்றிசன், சீக்கோ கடிகாரங்கள் முளைத்திருந்தன. நடந்து செல்லக்கூடிய தூரத்தில் இருந்த சென்றல் தியேட்டருக்கு வாடகைக் காரில் வந்து சினிமா பார்த்து விட்டுப் போனார்கள். புஹாரி ரெக்ஸ்ரைல், ரவி ரெக்ஸ்ரைல் இரண்டும் தங்கள் வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்காக புது வேலையாட்களை அமர்த்திக் கொண்டார்கள். கலாவதி நகை மாளிகையினர் தங்கள் தங்க இருப்பு முடிந்து யாழ்ப்பாணத்தில் தங்கம் கொள்வனவு செய்ய ஆள் அனுப்பினார்கள்.   எல்லாவற்றுக்கும்  மேலாக துரைசிங்கம் சாராயக்கடைக்கு முன்னால் எப்போதும் ஒரு ஆண்கள் கூட்டம்  நின்றது.

 இந்தக்கடன் திட்டத்தால்  காலையில் ஒன்பது மணிக்கு திறக்கும் பருத்தித்துறை இலங்கை வங்கிக்கு முன்னால் ஆறு மணிக்கே ஒரு நீளமான வரிசை காத்து நிற்கத் தொடங்கியது. பலமணி நேரம் காத்து நின்றாலும் வங்கி திறக்கும் போது ஒரு கூட்டம் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உள்ளே நுளைந்து விடும். எதிர்த்து யாராவது குரல் கொடுத்தால் அழகு தமிழில் அரச்சனைகள், ஆலாபனைகள் அமர்க்களமாக இருக்கும். பருத்தித்துறையில் மீன் சந்தை மரக்கறிச் சந்தை என்று இரண்டு சந்தைகள் இருந்தன. இப்பொழுது இலங்கை வங்கி மூன்றாவது சந்தையாக மாறிப் போயிருந்தது.

இலங்கை வங்கி மதியம் ஒரு மணியுடன் வெளியாளர்களுக்கான சேவையை நிறுத்தி விடுவதால், இவ்வாறான நிலையில் வழமையான வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் சிரமப்பட்டார்கள். வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான முறைப்பாட்டால் வங்கி முகாமையாளர் பொலிஸின் உதவியை நாட வேண்டியதாயிற்று. கூட்டத்தை ஒழுங்கு செய்ய இரண்டு பொலிஸ்காரர்கள் கடமைக்கு வந்தார்கள். வந்தவர்களில் ஒருவன் கருணாரட்ண. கருணாரட்ண களுத்துறையைச் சேர்ந்தவன். தனது இளம் மனைவி, ஒரு வயது மகளுடன் ஆத்தியடி என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். யாருடனேயும் அதிகம் நெருக்கம் காட்டாமல் தான், தனது குடும்பம், வேலை என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே அவனது வாழ்க்கை இருந்தது.

 ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட விண்ணப்பங்களைத்தான் பெற்றுக் கொள்வார்கள் என்பதால் வங்கியில் அன்றும் முண்டியடிப்பு பலமாக இருந்தது. பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் கடனுக்கான தனது விண்ணப்பத்தை முதலில் கொண்டுபோய்க் கொடுப்பதற்காக எல்லோரையும் தள்ளிக் கொண்டு ஒரு இளைஞன் முன்னேறிக் கொண்டிருந்தான். `தவிட்டுமூட்டை´ என்று அவனது நண்பர்கள் அவனை அழைப்பதால், அவனது பெயர் என்னவென்று அனேகருக்குத் தெரியாது. மரக்கறிச் சந்தையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். சந்தை வியாபாரம் மட்டுமல்ல சாராயமும், சண்டித்தனமும் அவனுக்கு விருப்பமானவை. அவனைத் தெரிந்தவர்கள் எச்சரிக்கையாக விலகிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் ஏற்படுத்திய சலசலப்பு கருணாரட்ணவை அந்தப் பக்கம் பார்க்க வைத்தது.

 தனக்கு முன்னால் வந்து நின்ற கருணாரட்ணாவை தள்ளிவிட்டு முன்னே போக தவிட்டுமூட்டையால் முடியவில்லை. கருணாரட்ண  தவிட்டுமூட்டையின் கையைப் பிடித்து இழுத்து வந்து வரிசையின் கடைசியில் விட்டு விட்டுப் போனான். அங்கே நின்றவர்கள் முகத்தில் சிரிப்பு. தவிட்டுமூட்டையின் முகத்தில் மட்டும் நெருப்பு. தவிட்டுமூட்டையின் உருட்டல், வெருட்டல் எல்லாம் கருணாரட்ண என்ற பொலீஸிடம்  தோற்றுப் போயின.

 மறுநாள், பத்திரகாளி ஒழுங்கையும் விநாயகர் முதலியார் வீதியும் சந்திக்கும் இடத்தில் இருந்து துறைமுகம் வரை, வீதியில் 20 அங்குல அளவில் ஒரு நீண்ட சிவப்பு கோடு இருந்தது. பலர் வந்து பார்த்து விட்டுப் போனார்கள்.

 மதியம் ஒரு மணியளவில் துறைமுகத்தில் இருந்து மெதடிஸ் பெண்கள் பாடசாலைவரை பல பொலிஸ் ஜீப்புகள் நின்றன. கரையில் இருந்து கடலில் 300 மீற்றர் உள்ளே இருந்த முருகைக்கற்களின் மேலே கூட்டமாக பறந்தபடி காகங்கள் கத்திக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு அசாதாரண நிலை அங்கே உருவாகி இருந்தது.

 காற்று அதிகமாக இருந்ததால், அலைகள் வேகமாக வந்து துறைமுகத்தையே அசைத்து விடுவது போல அதன் சுவரை மோதிவிட்டு போய்க் கொண்டிருந்தன. மோசமான அலைகளால் கடலில் படகுகளை இறக்குவதற்கு யாருக்கும் துணிவு வரவில்லை. பொலீஸாரின் வேண்டுகோளை ஏற்று சுழியோடி ஒருவர் தன் படகில் முருகைக்கல் வரை போக ஒத்துக் கொண்டார். போய் வந்தவர் சொன்னார், “ முருகைக்கல்லுக்குள் சிக்கி ஒரு பிணம் இருக்கிறது” என்று.

 “நேற்று வேலைக்குப் போன என் புருசன் இன்னும் வீட்டுக்கு வரயில்லை” என்று கருணாரட்ணவின் மனைவியின் முறைப்பாடு, முருகைக்கல்லுக்குள் இருக்கும் பிணம் இரண்டையும் பொலிஸ் இணைத்துப் பார்த்தது. இப்பொழுது காங்கேசன்துறையில் இருந்தும் மேலதிக பொலீஸார் வந்து சேர்ந்து கொண்டார்கள். ஏகப்பட்ட பொலீஸ்காரர்கள் இருந்தும் முருகைக்கல்வரை போக முடியாத அளவில் கடலில் எழுந்த அலைகள் அவர்களைத் தடுத்தன.

 “முருகைக்கல்லுக்குள் இருப்பது என் புருசனா இருக்கக் கூடாது “ என்று கருணாரட்ணவின் மனைவி கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அது கருணாரட்ணவின் உடல்தான் என்பது மூவருக்கு மட்டும் தெரிந்திருந்தது. அவர்கள்தான் முதல்நாள் இரவு வேலை முடிந்து வந்த கருணாரட்ணவை அடித்து வீழ்த்தி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு  வீதியில் இழுத்து வந்து துறைமுகத்துக்குக் கீழே கடலில் போட்டுவிட்டுப் போனவர்கள்.

 அந்த மூவரில் ஒருவன் தவிட்டுமூட்டை. மற்றைய இருவரும் அவனது நண்பர்கள். பொலிஸ் துப்புகள் துலக்கி இவர்கள்தான் கொலையாளிகள் என்று கண்டறியும் முன்னரே அவர்கள் மூவரும் நகரத்தை விட்டு ஓடி விட்டார்கள். யேர்மனிக்கோ? பிரான்சுக்கோ அவர்கள் போய் விட்டதாக பின்னர் நகரத்தில் பேசிக் கொண்டார்கள்.

 இது நடந்து இப்பொழுது நாற்பது வருடங்களாயிற்று. “முதன் முதலில் பருத்தித்துறையில் சிங்களப் பொலிஸை கொன்றவர்கள் நாங்கள்தான்”  என்று தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டில்  அன்று ஓடிப் போனவர்கள் இன்று சொல்லிக் கொண்டிருக்கலாம். கருணாரட்ணவின் மனைவி கூட “தன் பேரப்பிள்ளைகளுக்கு வேறு ஒரு கதையை சொல்லிக்கொண்டும் இருக்கலாம்.

 

கவி அருணாசலம் 

18.02.2018

 

ஒரு சோடி செருப்பு

Sun, 18/02/2018 - 12:11

கடந்த ஆண்டு தாயகம் சென்றிருந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நானும் கணவனும் மினி பஸ்சிலோ அல்லது பேருந்திலோ யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்துகொண்டிருந்தது. போய் வரும் நேரங்களில்  அக்கம் பக்கம் புதினம் பார்ப்பது வழமைதானே. சில வேலைகளில் கூடப் பயணம் செய்வோரைப் பார்க்கும்போது அட எமது மக்கள் இத்தனை அழகாய் ஆடை அணிகிறார்களே என்பதற்கும் அப்பால் நான் இன்னும் கொஞ்சம் நல்ல உடுப்புகளாகக் கொண்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றாமல் இருந்ததில்லை.

அன்று என்னவோ எனக்கு கோண்டாவிலுக்குக் கிட்டவே பின் இருக்கை ஒன்றில் இடம் கிடைத்து விட்டது. இடம் கிடைத்த நின்மதியில் எல்லோரையும் அராய முற்பட்டேன். நான் மற்றவகளின் ஆடைகளைஎல்லாம் பார்த்துவிட்டு காலில் என்ன அணிந்துள்ளனர் எனப் பார்க்கத் தொடங்கினேன். இளம் ஆண்கள் வெளிநாடு போலவே நல்ல சப்பாத்துக்களை அணிந்திருந்தனர். பல இளம் பெண்கள் அழகான சாண்டில்ஸ் அணிந்து நாகரீகமாகவே தெரிந்தனர். ஒன்று இரண்டு பேர்தான் செருப்பு.  ஒரு இளம் பெண் வயது ஒரு இருபத்தைந்துள் இருக்கும்,  எனக்கு முன்னே நின்றிருந்தார். அவரின் காலைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காலில் அவர் எதுவும் அணிந்திருக்கவில்லை. என்னை அறியாமல் எனக்கு அவர்மேல் இரக்கம் ஏற்பட்டது.

நான் வேம்படியில் படித்த காலத்தில், யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் கிரிக்கற் போட்டி ஒன்று மத்திய கல்லூரி மைதானத்தில் நடந்தது. அதைப் பார்ப்பதற்கும் எமக்குப் பிடித்தவர்களுக்கு உர்சாகமூட்டுவதர்க்காகவும் நானும் என் நண்பிகளும் சென்றிருந்தோம். போட்டி முடிவடைந்த பின் சுபாஸ் கபேக்குப் போய் நாங்கள் ரோல்சும் ஐஸ்கிறீமும் உண்டுவிட்டு வெளியே வர என் சாண்டில் அறுந்துவிட்டது. சாண்டில்சைப் போட்டுக்கொண்டு மேற்கொண்டு நடக்கவே முடியவில்லை. சாதாரணமாக் பள்ளிக்கு சப்பாத்தே அணிவதால் இப்படியான நிலை முன்பு ஏற்பட்டதுமில்லை. பயங்கார வெய்யில்வேறு. அதைவிட அந்த டவுனுக்குள்ள செருப்பின்றி நடப்பது என்றால் என் கவுரவம் என்ன ஆவது? என்னை சைட் அடிக்கும் பெடியள் கூட பஸ்ஸிலோ ரோட்டிலோ காணலாம் என்ற எண்ணமே பீதியைக் கிளப்பியது.

எல்லோரும் நன்றாக உண்டதில் யார் கையிலும் புதிய செருப்புக் கூட வாங்கப் பணமும் இல்லை. வேற வழி இல்லையடி சாண்டில்சை கையில தூக்கு என்றாள் ஒருத்தி. அன்றுதான் நான்வேறு யாரையும் ஏறிட்டுப் பார்க்காது தலை குனிந்து வீடுவரை வந்தது. அதுவும் பஸ்ஸில் சனக்கூட்டத்தில் மற்றவர் செருப்போ சப்பாத்தோ  என் காலில் படாமலிருக்க நான் பட்ட பாடு இந்த நேரத்திலும் என் கண்முன்னே வந்தது.

பாவம் இந்தப் பெண் கோண்டாவிலில் ஏறும் போதே செருப்பு அணியாமல்தான் ஏறியுள்ளார் போல என்று எண்ணியபடி  யாழ்ப்பான பஸ்ரான்ட் வரை அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டே வந்தேன். நிறுத்தம் வந்ததும் அந்தப் பெண் விரைவாக இறங்கி நடக்கத் தொடங்கினார். செருப்புப் போட்டிருந்தாலும் சுடும் வெய்யிலில் வெறுங்காலுடன் ஆவர் நடப்பதைப் பார்க்க மனம் எதோ செய்தது. தூரத்தில் பஸ்ரான்ட் ஓரத்தில் காலணிகளை வைத்து விற்றுக் கொண்டிருப்பது  என் கண்ணுக்குத் தெரிய விரைந்து சென்று அப் பெண்ணை அண்மித்தேன். அவர் அந்தக் கடையின் பக்கம் சென்று ஒரு செருப்பை  எடுத்து விலை கேட்டுக்கொண்டிருந்தார்.  கடைக்காரன் முந்நூறு ரூபாய்கள்  என்று சொல்ல, அந்தப் பெண் விலை கூட என்று கூறியபடி செருப்பை போட்டுவிட்டு நகரத் தொடங்கினார். 

தங்கச்சி குறை நினைக்காதைங்க. நான் உங்களுக்கு வாங்கித் தாறன். நீங்கள் நல்லதா ஒண்டை எடுங்கோ என்றேன் நான். ஒரு நிமிடம் என்னைப் பாத்தவர் பின் செருப்புகளை ஆராய்ந்துவிட்டு ஒரு குதி உயர்ந்த  சாண்டில்சை எடுத்துப் போட்டுப் பார்த்தார். அவருக்கு அளவு சரியாகப் பொருந்தியிருக்க கடைகாறனைப் பார்த்து இதையே எடுக்கிறன் என்றார். நான் கடைகாரரின் பக்கம் திரும்பி எவ்வளவு என்று கேட்டதற்கு 850 என்று பதில் வந்தது. காசை எடுத்துக் குடுத்துவிட்டு கடைக்காரர் தரும் மிச்சக் காசை வாங்கி கைப்பையில் வைத்துவிட்டுத் திரும்பினால் அந்தப் பெண் தூரத்தில் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது.