தமிழகச் செய்திகள்

சிங்கம் அமர்ந்த இடத்தில் இவர்களா? - கேள்வி எழுப்பிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.

Wed, 15/02/2017 - 05:18
சிங்கம் அமர்ந்த இடத்தில் இவர்களா? - கேள்வி எழுப்பிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.

 

 
கோவை விளாங்குறிச்சிக்கு வந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை வரவேற்ற பொதுமக்கள்.
கோவை விளாங்குறிச்சிக்கு வந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை வரவேற்ற பொதுமக்கள்.
 
 

ஓ.பன்னீர்செல்வத்துடன் முதலில் இணைந்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டிக்கு அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த இவர், அந்த ஊராட்சியில் 1996-ம் ஆண்டு முதல் 3 முறை தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். 2011, 2016 தேர்தல்களில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுக்குட்டி, தனது ஜமாப் இசையால் ஜெயலலிதாவை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னீர்செல்வத்துடன் இணைந்த பிறகு, அவர் எப்போது ஊருக்கு வருவார் என்று அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அவர் நேற்று விளாங்குறிச்சிக்கு வந்தார். அவருக்கு அதிமுகவினர் மட்டுமின்றி, ஊர் மக்களும் பலத்த வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், சால்வைகள், மாலைகள் அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சட்டப்பேரவை உறுப் பினர்கள் கூட்டத்தில் முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தையே தனியாக உட்கார வைத்தார் சசிகலா. கட்சிப் பிரமுகர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜோக்கர்’ என்று கிண்டல் செய்தார். ஒரு முதல் அமைச்சருக்கே இந்த நிலையை உருவாக்கும் இடத்தில் நான் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். மேலும், எனக்கு வாக்களித்த மக்களின் முடிவும் இதுதான். எனக்கு ஆயிரக்கணக்கில் வந்த செல்போன் அழைப்புகளும், வாழ்த்துகளும் அதை உறுதிப்படுத்தியது.

நாளை என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. மாவட்டச் செயலாளர் பதவி தருகிறோம், கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என்றெல்லாம் கூறினார்கள். எனக்கு எதுவுமே வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அப்போதும் அவர்கள் விடவில்லை. வெறும் 6 பேர் தான் ஓபிஎஸ் உடன் இருக்கின்றீர்கள். என்ன செய்துவிட முடியும்? என்றும் கேட்டனர். எனக்கு எதுவும் வேண்டாம். சசிகலா முதல்வர் இருக்கையில் அமர்ந்தால், உடனடியாக நான் ராஜினாமா செய்துவிடுவேன் என்றேன். ஒரு சிங்கம் அமர்ந்த இடத்தில் இவர்கள் அமரலாமா?

இவர்கள் முதல்வர் பொறுப்பு வகிக்காவிட்டால், தினகரன் அந்தப் பதவியை ஏற்பாராம். அதுவும் இல்லையென்றால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமாம். இது என்ன நியாயம்? இதற்காகவா கட்சித் தொண்டர்கள் காலம்காலமாக சிரமப்பட்டனர்? தற்போது ஓ.பன்னீர்செல் வத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இப்போதுதான் மேட்டுப் பாளையம் ஓ.கே.சின்னராஜ் இணைந்துள்ளார். அடுத்து எங்கள் மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ.க் களும் வந்துவிடுவார்கள்.

எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்ய நாங்கள் என்ன பைத்தியக்காரர்களா? அவரை ஜெயலலிதா முதல்வராக அறிமுகப்படுத்தினார்? ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும்தான் 2 முறை முதல்வராக்கினார். எனவே, ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர, வேறு யாரையும் முதல்வராக்க நான் உடன்படமாட்டேன்.

எனக்கு அமைச்சர் பதவி, மாவட்டச் செயலர் பதவி கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வத்துடன் இணையவில்லை. மக்கள் விருப்பம்தான் முக்கியம் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சிங்கம்-அமர்ந்த-இடத்தில்-இவர்களா-கேள்வி-எழுப்பிய-ஆறுக்குட்டி-எம்எல்ஏ/article9544246.ece?homepage=true

Categories: Tamilnadu-news

சசிகலா கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

Wed, 15/02/2017 - 05:15
 
 
 
 
Tamil_News_large_1711290_318_219.jpg
 

சென்னை : சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா, சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.

 

வாய்மொழியாக...:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர்.

 

நிராகரிப்பு:

ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711290

 

 

Categories: Tamilnadu-news

3 நாளில் தமிழக நிலைமை தெளிவாகும்: அட்டர்னி ஜெனரல் எதிர்பார்ப்பு

Wed, 15/02/2017 - 05:13
 
 
3 நாளில் தமிழக நிலைமை தெளிவாகும்: அட்டர்னி ஜெனரல் எதிர்பார்ப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Tamil_News_large_1711288_318_219.jpg
 

புதுடில்லி: மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.தமிழக அரசியல் சூழ்நிலை 2 அல்லது 3 நாளில் தெளிவாகும் என எதிர்பார்க்கிறேன். இதன் பின்னர் வழக்கமான முதல்வர் செயல்படுவார். இனிமேல், இரண்டு தரப்பும் சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத்தரவிடலாம். அல்லது ஒரு தரப்புக்கு போதிய பலம் உள்ளது என கவர்னர் கருதினால், அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, சட்டசபையில் பலத்தை நிருபிக்க உத்தரவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711288

Categories: Tamilnadu-news

திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர திடீர் உத்தரவு!

Wed, 15/02/2017 - 05:05
திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர திடீர் உத்தரவு!
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடும்பட்சத்தில் தி.மு.க எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிவு செய்துள்ளது
 
 
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் சசிகலா அணியில், 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் ஆட்சியமைக்க வாய்ப்பு கோரியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிடும்பட்சத்தில் தி.மு.க எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் கேட்க முடிவு செய்துள்ளது திமுக.

 

 

http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-calls-it-s-mla-s-meeting-on-today-274134.html

Categories: Tamilnadu-news

சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

Wed, 15/02/2017 - 04:53
மிஸ்டர் கழுகு: சசி சாம்ராஜ்யம் சரிந்தது! - அ.தி.மு.க நெக்ஸ்ட்?

 

p44a.jpg‘‘ஆமாம்! ஆமாம்! அப்படித்தான் சொல்கிறார்கள்...’’ என்று யாரிடமோ போனில் பேசியபடி பரபரப்பாக எதிரில் வந்து தரிசனம் தந்தார் கழுகார். ‘சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு’ குறித்த நமது நிருபர்களின் கட்டுரையைப் படித்தவர், ‘‘ஒன்பதே நாட்களில் தங்கள் கனவு சிதையும், சாம்ராஜ்யம் சரியும் என சசிகலா எதிர்பார்த்திருக்க மாட்டார்’’ என்றார்.

‘‘கடந்த 5-ம் தேதி சட்டமன்ற அ.தி.மு.க தலைவராகத் தேர்வான நிமிடத்திலிருந்தே அவரிடம் உற்சாகம் கரை புரண்டு ஓடியதே’’ என்றோம்.

‘‘ஆமாம்! ஆனால் அவர் முழுமனதாக இந்த முடிவில் இல்லை என்கிறார்கள். மன்னார்குடி குடும்பத்தினர் அவசரம் காட்டியதன் விளைவு இது. ‘நாம் அமைதியாக இருந்திருந்தால், நீதிமன்றம் இவ்வளவு வேகம் காட்டியிருக்காது, இந்த அவமானமும் ஏற்பட்டிருக்காது’ என்று தீர்ப்புக்குப் பிறகு கோபத்தோடு அவர் சொன்னாராம். தீர்ப்புத் தகவலை அவரிடம் சொல்வதற்கே மன்னார்குடி உறவுகள் தயங்கியிருக்கின்றன.’’

‘‘ஓஹோ!’’

‘‘சொல்லப்போனால் இப்படி ஒரு தீர்ப்பை சசிகலா எதிர் பார்த்தார் என்றே சொல்லலாம். டெல்லியிலிருந்து வழக்கறிஞர்கள் சொன்ன தகவல்கள் எதுவும் உற்சாகம் தருவதாக இல்லை. ‘எதற்கும் தயாராக இருங்கள்’ என்றே சொல்லப்பட்டதாம். அதனால், தீர்ப்புக்கு முதல் நாள் திங்கள்கிழமை, ‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என தகவல்கள் போயஸ் வட்டாரத்தில் பரப்பப்பட்டன. அன்று மூன்றாவது நாளாக அவர் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை சந்திக்கக் கிளம்பினார். அதற்கு முன்னதாக ஒரு ஆம்புலன்ஸ் கூவத்தூர் சென்றது. போயஸ் கார்டனிலிருந்து கிளம்பி காரில் ஏறிய சசிகலாவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. ஆனாலும் செயற்கையான சிரிப்பை வரவழைத்துக்கொண்டு வழியில் பொதுமக்களை சந்தித்தார். கூவத்தூரில் திடீரென சில வீடுகளுக்குள்ளும் நுழைந்து மக்களோடு பேசுவது போல பயணத்திட்டம் வகுக்கப்பட்டது. அன்று இரவு சசிகலா அங்கேயே தங்கினார். தீர்ப்பு வெளியானதும், குழப்பத்தில் எம்.எல்.ஏ-க்கள் வெளியில் கிளம்பிவிடக்கூடும் என்ற பயம் இருந்தது. அவர்களை கட்டுக்குள் வைப்பதற்காக சசிகலா அங்கேயே தங்கினார். ஆனால், முந்தின நாட்கள்போல அவர் எம்.எல்.ஏ-க்களுடன் பேசவில்லை. பெண் எம்.எல்.ஏ-க்களுடன் தனியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போதும்கூட அவரிடம் இயல்பான உற்சாகம் இல்லை.’’

p42a1.jpg‘‘கடைசி நேரத்தில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் வெளியேறி இருக்கின்றனரே?”

‘‘சசிகலா கூவத்தூர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் அங்கிருந்து தப்பித்து வந்தார். மாறுவேடத்தில் வந்ததாக அவர் சொன்னார். செம்மலை மறுநாள் காலை வந்தார். சரவணனைத் தொடர்ந்து வேறு யாரும் போய்விடக்கூடாது என்பதற்காக, இரவோடு இரவாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

‘‘திங்கள்கிழமை இரவு முதல் கூவத்தூரில் திடீரென பெரும் போலீஸ் படை குவிக்கப்பட்டதே... ஏனாம்?’’

‘‘கூவத்தூரிலிருந்து வெளியேறி பன்னீர்பக்கம் சேர்ந்த எம்.எல்.ஏ சரவணன், திங்கள்கிழமை நள்ளிரவு டி.ஜி.பி அலுவலகம் சென்றாராம். அங்கு நைட் டியூட்டியில் இருந்த டி.எஸ்.பி-யிடம், ‘கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள். இதற்கு நானே நேரில் பார்த்த சாட்சி. உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவரையும் மீட்க வேண்டும்’ எனப் புகார் கொடுத்தாராம். அதோடு, ‘நீங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கவர்னர் மாளிகைக்குப் போவேன்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் இரவோடு இரவாக டி.ஜி.பி-க்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக மூன்று ஐ.ஜி-க்கள், 11 எஸ்.பி-க்கள் தலைமையில் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டது. ஆனால்,
அவர்கள் யாரிடமோ ஆலோசனை செய்துவிட்டு, தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருக்க முடிவு செய்தார்கள்.’’

‘‘இனி என்ன ஆகும்?’’

‘‘இந்த இதழ் வெளியாகும் நேரத்தில், சசிகலா உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவமனையில் இருக்கலாம்; அல்லது பெங்களூரு சென்று சரணடையலாம். எதுவும் நடக்கும். அதேநேரம், இந்தத் தீர்ப்பால் மன்னார்குடி குடும்பத்தினர் பின்வாங்கவும் இல்லை. சசிகலாவின் மகுடத்தை யார் தலையில் சூட்டலாம் என அவசர ஆலோசனைகள், தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே தொடங்கிவிட்டன. கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி என இருவரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன. ஆனால், ‘வேறு யாரையும் அமர வைத்து, இன்னொரு பன்னீர்செல்வத்தை நாமே உருவாக்கி விடக்கூடாது. நம் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் முதல்வர் பதவி ஏற்கலாம்’ என மன்னார்குடி உறவுகள் தரப்பிலிருந்து நெருக்கடி தரப்படுகிறது. ஆனால், ‘யாரைப் பரிந்துரைப்பது’ என்பதில், அவர்களுக்குள் ஏகப்பட்ட மோதல் நடந்ததாம். ‘ஜெயலலிதாவால் அரசியலுக்கு அறிமுகம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனை முன்னிலைப்படுத்தினால், எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்காது. பன்னீர் பக்கம் சென்றிருக்கும் கட்சிக்காரர்களைக் கூட இழுக்கும் சக்தி படைத்தவர் அவர்’ எனச் சிலர் சொன்னார்களாம். ஆனால், அவர்மீதான வழக்குகளில் ‘நான் சிங்கப்பூர் குடிமகன்’ என அவரே நீதிமன்றத்தில் சொல்லியிருப்பதால், ‘தினகரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் சம்மதிப்பாரா?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது! குடும்பத்துக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதோடு, ‘இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் ஒருவரை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்வதே பாதுகாப்பானது’ எனச் சட்ட நிபுணர்கள் சொன்ன யோசனையும் பரிசீலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக கவர்னர் மாளிகைக்குத் தகவலும் அனுப்பப்பட்டது.’’

p44.jpg

‘‘ஓஹோ! எம்.எல்.ஏ-க்களுக்கு ஏகப்பட்ட கவனிப்புகள் செய்துவிட்டு, கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து விடுவார்களா என்ன?”

‘‘ஆமாம்! இந்தக் களேபரத்தால் எம்.எல்.ஏ-க்கள் காட்டில் மழை. அவர்களை சொகுசு விடுதியில் வைத்துக் குளிப்பாட்டுகிறார்கள் என்பதை வைத்து மட்டும் சொல்லவில்லை. எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் சசிகலா தரப்பும் பன்னீர் தரப்பும் பணமழையால் குளிப்பாடடுகிறார்கள். ‘பன்னீர்செல்வம் கோஷ்டிக்கு தாவினால் ஒரே செட்டில்மென்ட். சசிகலா கோஷ்டிக்குத் தாவினால் முதலில் அட்வான்ஸ். பிறகு செட்டில்மென்ட்...’ என்று ரகசிய விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டில் எது சரிப்பட்டுவரும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ-கள் ‘பூவா... தலையா’ போட்டுப்பார்த்து வருகிறார்கள். கூவத்தூர் ரிசார்ட்ஸுக்கு இரண்டாவது முறையாக பிப்ரவரி 12-ம் தேதியன்று மாலை சசிகலா சென்றபோது, ஒரு டெம்போ டிராவலர் வேன் சென்றுள்ளது. அதில்தான், லக்கேஜ்கள் இருந்ததாம். சசிகலா தரப்பு எம்.எல்.ஏ-களுக்கு முதல்கட்ட அட்வான்ஸாக ஒரு சி. வினியோகிக்கப்பட்டதாக பன்னீர்செல்வம் தரப்பினர் சொல்கிறார்கள். இதேபோல், பன்னீர்செல்வத்திடம் தற்போதுள்ள எம்.எல்.ஏ-கள் தவிர புதிய வரவாக நிறைய பேரை இழுக்கப் பணம் ரெடி பண்ணி வைத்திருப்பதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இருதரப்பிலும் 135 எம்.எல்.ஏ-களுக்கும் தலைக்கு 10 கோடி ரூபாய் நிர்ணயித்திருக்கிறார்கள்.”

‘‘இவ்வளவு கரன்சியைத் திரட்டி விட்டார்களா?”

‘‘சர்வ சாதாரணமாகத் திரட்டப்படுகிறது. பசை உள்ள துறைகளை வைத்திருக்கும் முன்னணி அமைச்சர்களின் பங்களிப்பும் இதில் அதிகமாம். கொங்கு மண்டல கோட்டைப் பிரதிநிதி ஒருவர் தன் பங்கிற்கு சில எம்.எல்.ஏ-களுக்கு தங்க பிஸ்கட்டுகளைத் தந்து குஷிப்படுத்தினாராம். நாமக்கல், சேலம் ஏரியாக்களைச் சேர்ந்த கோட்டைப்பிரதிநிதிகள், மேலும் பல எம்.எல்.ஏ-களுக்குப் புது கரன்சியைக் காட்டி அசத்தினார்களாம்.”

‘‘சசி தரப்பு போலவே பன்னீர் தரப்பும் பணம் தருகிறதா?”

p44b.jpg

‘‘சசிகலா குடும்பத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் மூன்று தொழில் அதிபர்கள் இந்த உதவிகளைச் செய்து வருகிறார்களாம். ஒருவர் மணல் மனிதர். இன்னொருவர் மலை மனிதர். மற்றொருவர் லாட்டரி மனிதர். மூவரும் இந்தப் பக்கம் பணம் திரட்டிக் கொடுக்கிறார்களாம். ‘இதுவரை அவர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்தோம். எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்குத் திருப்தி வரவில்லை. இனியாவது அவர்களது ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று அவர்கள் மூவரும் சொல்லி இந்தக் காரியத்தில் இறங்கி இருக்கிறார்களாம்.”

‘‘கூவத்தூர் மனிதர்களுக்குப் போய் சேர்ந்துவிட்டதா?”

‘‘சசிகலா கோஷ்டி எம்.எல்.ஏ-களை, ரிசார்ட்ஸ் செல்வதற்கு முன்பாக தனது வீட்டுக்கு அழைத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி இருக்கிறார். அப்போதே அவர்களின் தற்போதைய வீட்டு முகவரி, தகவல் தொடர்பு நபர் பெயர், போன் எண்களைக் கேட்டு வாங்கினர். எதற்கு என்று கேட்டபோது, ‘ஒரு கடித பார்சல் தருவதற்காக’ என்றார்களாம். சட்டென்று எம்.எல்.ஏ-களுக்குப் புரிந்துவிட்டது. நான்காவது நாளே, அட்வான்ஸ் பட்டுவாடா ஆனதாம். மேலும் மேலும் வந்துகொண்டே இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்களாம். அதனால்தான் எந்தக் கவலையும் இல்லாமல் எம்.எல்.ஏ-க்கள் ஹாயாக இருக்கிறார்கள். ‘எங்கிருந்து பணம் வருகிறது... எங்கே கை மாறுகிறது...’ என்றெல்லாம் உன்னிப்பாக வருமானவரித் துறையினர் கவனித்து வருகிறார்கள். பழைய நோட்டுகளுக்குப் புதிய நோட்டை யார் மாற்றித்தருகிறார்கள் என்று வலைவீசித் தேடிவருகிறார்கள். சென்னையின் முக்கியப் புள்ளிகளை காரில் மறைமுகமாகப் பின்தொடர்வது, போன் உரையாடலைக் கண்காணிப்பது என்று இறுக்கிவருகிறார்கள். இதனால், சசிகலா கோஷ்டி புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.”

p44c.jpg

‘‘இதே நெருக்கடிதானே பன்னீர் கோஷ்டிக்கும் இருக்கும்?”

‘‘அதுதான் இல்லை. பன்னீர் கோஷ்டியினர் சுதந்திரமாக உலா வருகிறார்கள். வருமானவரித் துறையினரும் கண்டும்காணாமல் இருக்கிறார்கள். வெளிமாநில வங்கிகளில் எங்கே போனால், பழைய நோட்டுக்குப் புதுநோட்டு கிடைக்கும் என்றெல்லாம் க்ளூ கொடுத்து அனுப்புகிறார்கள் மத்திய அரசின் சில அதிகாரிகள்.”

‘‘ஏழுநாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை தலைமைச் செயலகம் வந்தாரே பன்னீர்?’’

‘‘ஆமாம்! முதல்வர் 12 மணிக்கு வருவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அதே நேரத்துக்கு ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்குள் என்ட்ரி கொடுக்க... அங்கி்ருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். ஸ்டாலின் நேராக தனது அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார். அதே நேரம் 12 மணிக்குக் கிளம்ப வேண்டிய ஓ.பி.எஸ், கிளம்பாமல் வீட்டிலேயே இருந்தார்.’’

‘‘ஓ.பி.எஸ்-ஸை சந்திக்கத் திட்டமிட்டரா ஸ்டாலின்?’’

‘‘அப்படித் திட்டமில்லை என்கிறார்கள் தி.மு.க-வினர். ஆனால், அவர் எந்த நோக்கமும் இல்லாமல் திடீரென தலைமைச்செயலகம் வரவேண்டிய அவசியம் இல்லை. அதுவும், முதல்வர் வரும் நேரம் அறிந்தேதான் வந்துள்ளார். முதல்வர் வந்திருந்தால், அவரை சந்திக்கும் திட்டமும் ஸ்டாலினிடம் இருந்துள்ளது. ஆனால், முதல்வர் தாமதமாக வந்ததால், அதற்குள் ஸ்டாலின் கிளம்பிவிட்டார்” என்றபடி பறந்தார் கழுகார்.

படங்கள்: சு.குமரேசன், சொ.பாலசுப்ரமணியன், அ.குரூஸ்தனம், தே.அசோக்குமார்

உளவுத்துறைக்குப் புதுத் தலைமை!

ளவுத்துறைக்குப் புதிய ஐ.ஜி-யாக டேவிட்சன் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு காவல்துறையின் நலவாழ்வு பிரிவின் ஐ.ஜி-யாக இவர் இருந்தார். அது ‘டம்மி’ பதவி. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் சூடுபிடித்தபோது, அது தொடர்பான சில வேலைகளை ஸ்பெஷல் அசைன்மென்ட்டாக இவரிடம் ஒப்படைத்தார், உளவுத்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன். அதைக் கனக்கச்சிதமாக முடித்துக்கொடுத்ததற்கான பரிசுதான், உளவுத்துறை ஐ.ஜி. நியமனம். இதற்கு முன்பு ஜெயலலிதா காலத்திலும், இதே பதவியில் இருந்தவர்தான் டேவிட்சன். தற்போது, உளவுத்துறை ஐ.ஜி. பதவியில் இருந்து மாற்றப்பட்ட சத்தியமூர்த்தி ஒரு சாந்தசொரூபி. அதனாலேயே தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அவரே ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விட்டார். முக்கியமான பதவியைக் காலியாக வைத்திருக்கக்கூடாது என்ற காரணத்தால், அந்த இடத்துக்கு டேவிட்சனை நியமித்துவிட்டனர்.

அட்டர்னி ஜெனரல் அட்வைஸ்!

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் பொங்கி எழுந்த நிமிடத்திலிருந்து, கவர்னர் வித்யாசாகர் ராவ் பக்கம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் திரும்பியிருந்தது. ‘கவர்னர் இவரிடம் ஆலோசனைக் கேட்டார்’, ‘இப்படி அறிக்கை அனுப்பினார்’ என புதுப்புது தகவல்கள் வந்துகொண்டிருந்தன. ‘கவர்னர் அனுப்பிய அறிக்கை’ என போலி அறிக்கை ஒன்றைக்கூட உலவ விட்டார்கள். இந்தநிலையில், ‘மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகியின் ஆலோசனையை கவர்னர் கேட்டார்’ என்பது மட்டும் உறுதி ஆகியுள்ளது. ‘‘எப்படியும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்துவிடப் போகிறது. அதன்பின் இந்த வாரத்திலேயே சட்டமன்றத்தைக் கூட்டி, ஆட்சிக்கு உரிமை கோரும் இரண்டு தரப்பையும் தங்கள் பலத்தை நிரூபிக்கச் சொல்லுங்கள்’’ என ஆலோசனை வழங்கியிருக்கிறார் ரோதகி.

p44d.jpg

இதற்கு அவர் உதாரணமாகக் காட்டியது, உத்தரப் பிரதேச ஆட்சிக்காக கல்யாண் சிங்கும் ஜெகதாம்பிகா பாலும் மோதிக்கொண்ட விவகாரத்தை. கடந்த 98-ம் ஆண்டு உ.பி முதல்வராக இருந்த கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்தார், மாநில கவர்னர் ரொமேஷ் பண்டாரி. இதைத் தொடர்ந்து ஜெகதாம்பிகா பால், பிப்ரவரி 21-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். மூன்றே நாட்களில், ‘கல்யாண் சிங் அரசை டிஸ்மிஸ் செய்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி காட்ட, ஜெகதாம்பிகா பால் பதவி விலகினார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குப் போனபோது, ‘அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்புக்கும் வாய்ப்புத் தர வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் ஆட்சி சிக்கல்கள் வரும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பே முன்னுதாரணமாகக் காண்பிக்கப்படுகிறது. சமீபத்தில் உத்தரகாண்ட் சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதும், இந்தத் தீர்ப்பைக் காட்டியே காங்கிரஸ் ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார்

Wed, 15/02/2017 - 04:51
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை தயார்: பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகிறார்

 

 
 பிடிஐ.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ.
 
 

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள நகர குடிமையியல் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணா கூறியதாவது:

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இதனால் சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு நகர குடிமையியல் நீதிமன்றத்தில் உள்ள 48-வது அறையில் நீதிபதி அஷ்வத் நாராணா முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த உடன் மூவரும் ஆஜராவார்கள். அதன்பிறகு மூவரும் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைத் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே பெங்களூரு மத்திய சிறை நிர்வாகத்தினர், சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் மகளிர் சிறையிலும், சுதாகரனுக்கு ஆண்களுக்கான சிறையிலும் தனித்தனி அறைகளைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அனைத்து அலுவல் பணிகளும் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல நீதிமன்ற வளாகத்திலும் பாது காப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் பரி சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

http://tamil.thehindu.com/india/பரப்பன-அக்ரஹாரா-மத்திய-சிறை-தயார்-பெங்களூரு-நீதிமன்றத்தில்-சசிகலா-ஆஜராகிறார்/article9543577.ece?homepage=true

Categories: Tamilnadu-news

அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா

Wed, 15/02/2017 - 04:37
அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா

 

 
 பிடிஐ
சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ
 
 

கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அரசியல் வாழ்வில் தற்போது மாபெரும் சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1956 ஜனவரி 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவே கானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 குழந்தைகளில் 5-வதாக பிறந்தவர் சசிகலா. எல்லா பெண்களைப் போலவே வளர்ந்த சசிகலாவின் வாழ்வில் திருமணம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. திமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவரும், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான மன்னார்குடியைச் சேர்ந்த ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

ஜெயலலிதாவுடன் அறிமுகம்

தீவிர அரசியலில் இறங்கிய ஜெயலலிதா 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் எம்ஜிஆர் கேட்டுக் கொண்டார். இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார் சந்திரலேகா.

அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாக இருந்த நடராஜன் தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது சசிகலா தம்பி திவாகரனுடன் இணைந்து ஆழ்வார்பேட்டையில் வீடியோ கடை நடத்தி வந்தார். அந்த வீடியோ கடையிலிருந்து ஜெயலலிதா தனக்குப் பிடித்த படங்களின் வீடியோக்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

முதல் அரசியல் பணி

அந்த காலகட்டத்தில் எஸ்.டி.சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக் கூட்டம் நடத்தினர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்த பொதுக் கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் ஜெயலலிதாவும் - சசிகலாவும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இதுதான் சசிகலாவின் முதல் அரசியல் பணி.

அதன்பிறகு போயஸ் தோட்ட இல்லத்திலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். ஜெயலலிதா எங்குச் சென்றாலும் அங்கு சசிகலாவும் இருப்பார். அந்த அளவுக்கு இருவரது நட்பும் வளர்ந்தது.

எம்ஜிஆர் மறைவு தந்த வாய்ப்பு

1987-ல் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைந்ததும் அரசியலில் இருந்து ஜெயலலிதாவை ஓரங்கட்ட அதிமுக மூத்த தலைவர்கள் முயன்றனர். எம்ஜிஆரின் உடல் அருகில் கூட ஜெயலலிதாவை நிற்க அனுமதிக்காமல் அவமானப்படுத்தினர்.

அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் அவரின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. 1989 தேர்தலில் அதிமுக ஜெ. அணி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியால் அவரது தலைமையில் அதிமுக ஒன்றிணைந்தது. இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. இதுபோன்ற சோதனையான காலகட்டங்களில் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்தவர் சசிகலா.

வளர்ப்பு மகன் திருமணம்

1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, அவருக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தினார். இது அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில்தான் சசிகலாவுக்கு அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் 1996 தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவால் கூட எம்எல்ஏ ஆக முடியவில்லை.

சசிகலா வெளியேற்றம்

அதனைத் தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். சுதாகரனைத் தனது வளர்ப்பு மகன் இல்லை என்றும் அறிவித்தார். கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். ஆனால், சில மாதங்களிலேயே போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா திரும்பினார்.

அதன்பிறகு சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனை ஜெயலலிதா எம்பியாக்கினார். சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன் சில ஆண்டுகள் கட்சிப் பொறுப்பில் இருந்தார். இவர்களைத் தவிர சசிகலா குடும்பத்தில் யாருக்கும் ஜெயலலிதா பதவி அளிக்கவில்லை.

2-வது முறையாக வெளியேற்றம்

2011-ல் ஜெயலலிதா முதல்வ ரானதும் சில மாதங்களிலேயே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கியதுடன் போயஸ் கார்டனில் இருந்தும் வெளியேற்றினார். ஆனால், சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுக்க 10 மாதங்களில் அவரை மட்டும் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா அனுமதித்தார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா கட்சியிலும், வீட்டிலும் அனுமதிக்கவில்லை.

தலைமை செயற்குழு உறுப்பினர் தவிர வேறு எந்த பொறுப்பும் சசிகலாவுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த அதிகார மையமாக அவரே இருந்தார். அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் கூட்டணி பேச்சு, அதிமுக நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, அமைச்சர்கள் நியமனம், நீக்கம் என அனைத்தையும் சசிகலாவே மேற்கொண்டார் என பேசப்பட்டது. அந்த அளவுக்கு அதிகாரம் மிக்கவராக சசிகலா இருந்தார்.

ஜெ. மறைவுக்குப் பிறகு..

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வமாக அதிமுக சசிகலாவின் கட்டுக்குள் வந்தது. சசிகலாவின் அரசியல் வாழ்வில் பெற்ற மிகப்பெரிய ஏற்றம் இது.

கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்த அவர் முதல்வர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார். கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 7 அல்லது 9 ஆகிய தேதிகளில் அவர் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அவரது அரசியல் வாழ்வில் சறுக்கல் தொடங்கியது. முதல்வர் பதவியேற்பு தள்ளிப்போனது.

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் 4 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சசி கலாவின் முதல்வர் கனவு தகர்ந்துள்ளது. அரசியல் ஏற்ற இறக்கங்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை கைப்பற்றி உச்சத்துக்குச் சென்றார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/அரசியல்-வாழ்வில்-மாபெரும்-சரிவை-சந்திக்கும்-சசிகலா/article9543529.ece?homepage=true

Categories: Tamilnadu-news

அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்!

Wed, 15/02/2017 - 04:36
அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்!

TTV Dinakaran

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் அ.தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sasikala wirth dianakaran

நேற்று, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பால், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் மற்றும் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்டுள்ளதாக 'நமது எம்ஜிஆர்' நாளிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'டி.டி.வி. தினகரன் மற்றும் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரி, தங்களை  மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.' என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80861-is-ttv-dinakaran-to-be-next-deputy-general-secretary-of-admk.html

Categories: Tamilnadu-news

எந்த தீர்ப்பை எதிர்த்து தாடி வளர்த்து, காவடி எடுத்து, மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்பை இன்று அதிமுகவினர் கொண்டாடுவது வேடிக்கை: ஸ்டாலின் பேட்டி

Tue, 14/02/2017 - 21:53
எந்த தீர்ப்பை எதிர்த்து தாடி வளர்த்து, காவடி எடுத்து, மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்பை இன்று அதிமுகவினர் கொண்டாடுவது வேடிக்கை: ஸ்டாலின் பேட்டி
 
கோப்புப் படம். | க.ஸ்ரீபரத்.
கோப்புப் படம். | க.ஸ்ரீபரத்.
 
 

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது எந்த தீர்ப்பை எதிர்த்ஹ்டு தாடி வளர்த்து, காவடி எடுத்து மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்புக்கு இன்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுப்பது வேடிக்கையானது என்று கூறினார்.

அவர் கூறியதாவது:

சசிகலா தான் எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஒரு அணி சொல்லிக் கொண்டிருந்தது. இன்று அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக குற்றவாளிகளைத் தான் முதலமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுக்கும் நிலை இருந்து வருகிறது. நான் சொல்ல விரும்புவது, நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த வரலாற்று சிறப்புக்குரிய தீர்ப்பு நியாயமானது தான் என்று தீர்ப்பாகி, கடந்த 21 வருடங்களாக நடந்த வழக்கு, இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.

நீதிபதி குன்ஹா அவர்கள், முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும், அவருடைய ஆருயிர் தோழி சசிகலா நடராஜன் அவர்களுக்கும், சசிகலாவின் உறவினர்களாக இருக்கக்கூடிய இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 வருட சிறை தண்டனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம், மீதமுள்ளவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு விதித்தார். ஆனால் இடையில் அந்த தீர்ப்பு என்ன நிலைக்கு ஆளானது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். பிறகு மேல் முறையீடு செய்யப்பட்டு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பு நியாயமானது என்று இன்று வந்துள்ள தீர்ப்பு நிரூபித்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வெளியான போது அதனை திமுகவின் சதி என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, காவடி எடுத்தார்கள், அலகு குத்திக்கொண்டு, மொட்டையடித்து, தாடி வளர்த்துக் கொண்டு, இப்படியெல்லாம் பலவற்றை செய்து, திமுக மீதும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்றைக்கு அதே தீர்ப்பை நியாயமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அப்போது யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ, அலகு குத்தினார்களோ, அவர்கள் எல்லாம் இன்றைக்கு இனிப்பு கொடுக்கிறார்கள்., பட்டாசு வெடிக்கிறார்கள். வழக்கு போட்டது இப்போது எதிர் கட்சியாக உள்ள திமுக. இந்த தீர்ப்பில் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நாங்கள் கூட அதை கொண்டாடவில்லை. ஆனால் அதிமுகவினர் இதை பெரிதாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அது தான் வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு கூறினார் ஸ்டாலின்.

http://tamil.thehindu.com/tamilnadu/எந்த-தீர்ப்பை-எதிர்த்து-தாடி-வளர்த்து-காவடி-எடுத்து-மொட்டையடித்தார்களோ-அதே-தீர்ப்பை-இன்று-அதிமுகவினர்-கொண்டாடுவது-வேடிக்கை-ஸ்டாலின்-பேட்டி/article9543030.ece

Categories: Tamilnadu-news

தீபாவை ஏன் பா.ஜ.க முன்னிறுத்துகிறது? - ஆர். அபிலாஷ்

Tue, 14/02/2017 - 21:26
தீபாவை ஏன் பா.ஜ.க முன்னிறுத்துகிறது?

சில நண்பர்கள் இது பா.ஜ.கவின் பார்ப்பனிய சதி என்கிறார்கள். ஆனால் எனக்கு பா.ஜ.கவின் நோக்கம் வேறு என படுகிறது. அதிமுகவில் தீபாவுக்கான இடத்தை பா.ஜ.க ஆரம்பத்திலேயே சின்னதாய் கோடிட்டு உருவாக்கி விட்டார்கள். அவரை தயாராக்கி இப்போது சரியான சந்தர்பத்தில் கொணர்ந்திருக்கிறார்கள். முக்கியமான காரணம் கடந்த சில நாட்களில் ஒ.பி.எஸ் பெற்றுள்ள பரவலான மக்கள் ஆதரவு. அவரை எதிர்க்கிறவர்கள் கிட்டத்தட்ட யாரும் இல்லை எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தி.மு.க கூட ஒ.பி.எஸ் பக்கம் என்கிறார்கள் (இதை ஸ்டாலின் மறுத்தாலும் கூட). இப்போது சசிகலா ஜெயிலுக்கு போவது உறுதியாகி விட்ட பின், வரும் நாட்களில் கணிசமான எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் அணிக்கு தாவுவார்கள் எனில் அதிமுகவின் ஒரே “சிங்கம்” ஒ.பி.எஸ் தான்.

 ஒரு பக்கம் மக்கள் ஆதரவு, மறுபக்கம் கட்சி மீதான முழு அதிகாரம். முன்பில்லாத அளவு அதிகாரமும் மக்கள் ஆதரவும் கொண்ட வேறொரு மனிதர் ஆகி விடுவார் ஒ.பி.எஸ். அவரை இது போல் ஒரு வருடம் ஆளவிட்டால் “அடிமைப்பெண்” எம்.ஜி.ஆர் நிமிர்ந்து நேராக நடக்க கற்றுக் கொண்ட கதையாகி விடும். அதை பா.ஜ.க விரும்பாது. எப்போதும் ஒ.பி.எஸ் தலைக்கு மேல் கத்தி தொங்க வேண்டும். அவர் பலவீனமானவர் எனும் உணர்வில் இருந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவரை ஆட்டி வைக்கவும் அதிமுகவை தன் கைக்குள் வைத்திருக்கவும் பா.ஜ.கவால் முடியும். அதனால் ஒ.பி.எஸ்ஸுக்கு தீபா மூலமாக ஒரு சேதியை விடுக்கிறார்கள். ”எங்களால் உன்னைப் போல் மற்றொரு பொம்மையை உருவாக்கி ஆட்சியை கையகப்படுத்த முடியும்.” ஆனால் ஒ.பி.எஸ் சமர்த்தோ சமர்த்து. உடனே தீபாவுக்கு இணக்கம் தெரிவிக்கிறார். அவர் வீட்டில் வைத்து தீபாவுக்கு ஆரத்தி எடுக்கிறார். நான் எப்போதும் உங்கள் அடிமை தான் என பா.ஜ.கவுக்கு உரக்க மறுசெய்தி விடுக்கிறார்.

வரும் நாட்களில் இது போல் பல பொறிகளை, கண்ணி வெடிகளை, ஒ.பி.எஸ் நடக்கும் வழிகளில் எங்கும் பா.ஜ.க வைத்துக் கொண்டே இருக்கும். அவரும் தனக்கு அடிபடாதது போல் நடித்துக் கொண்டே இருப்பார்.

பா.ஜ.க இதன் மூலம் அதிமுகவை செங்கல் செங்கல்லாக பெயர்த்து அடிக்க ஆரம்பித்திருக்கிறது. 1972இல் ஆரம்பித்து திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கிறது அதிமுக. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுத்து அவரை திமுகவில் இருந்து துரத்த கலைஞர் முயன்று தோற்றார். விளைவாக அதிமுக தோன்றியது. எம்.ஜி.ஆர் எனும் புயலில் அவர் பஞ்சாக பறந்து போனார். அடுத்து எம்.ஜி.ஆர் மரணத்துக்கு பிறகேனும் தனக்கு நியாயமான ஆட்சி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என அவர் நம்பி இருக்கலாம். அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு ஒரு வலுவான வாரிசு அமையக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு முடிந்த வரை இடைஞ்சல்கள் கொடுத்தார். சட்டமன்றத்தில் ஜெயா முதலில் நுழைந்த போது அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு எதேச்சையாய் நடந்தது அல்ல. ஆனால் என்ன தான் விரட்டியும் ஜெயா நின்று போராடி வென்றார். கலைஞரின் அரசியல் வாழ்வில் இரண்டாவது இருண்ட காலம் துவங்கியது. ஜெயலலிதாவை அதற்கு தேர்தலில் அவர் முறியடித்த பின் அத்தோடு நில்லாமல் ஊழல் வழக்குகளில் அவரை சிறையில் தள்ளினார். அங்கே கைதிகள் யாரும் பயன்படுத்தாத சிதிலமான சிறையில் தன்னை அடைத்து வைத்து அச்சுறுத்த பார்த்ததாக ஜெயலலிதா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். ஆரம்ப நாட்களில் தினமும் கலைஞர் ஜெயிலருக்கு போன் செய்து ஜெயலலிதா அழுகிறாரா என விசாரிப்பாராம். ஜெயலலிதாவை ஒரு பக்கம் அச்சுறுத்தியும் ஊழல் வழக்குகள் மூலம் அல்லல்படுத்தியும் அரசியலில் இருந்து துரத்த அவர் விரும்பி இருக்கலாம். முக்கியமான விசயம் ஜெயலலிதா மூலம் மீண்டும் அதிமுக எழுந்து வந்து தனக்கு துர்கனவாய் தொடரக் கூடாது என பயந்தார். அந்த வேளையில் ஜெயலலிதா மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்தாலும் கலைஞர் தன் எதிர்கால அரசியல் வாழ்க்கையின் முக்கிய தடையாக ஜெயலலிதாவையே கண்டார். ஆனால் வழக்குகள், சிறை எதுவும் ஜெயலலிதாவை பின்வாங்க செய்யவில்லை. ஜெயலலிதா எவ்வளவு தவறுகள் செய்திருந்தாலும் மக்கள் அவரை மீளமீள தேர்ந்தெடுத்தனர். கலைஞர் மீது என்றுமே இந்தளவு பரிவை மக்கள் காட்டியதில்லை. ஜெயலலிதா தனது பண பலம் மற்றும் நிர்வாகத்திறன் மூலம் அதிமுகவை உறுதியான உள்கட்டமைப்பு கொண்ட அமைப்பாக வளர்த்தெடுத்தார். ஜெயலலிதா இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருந்தால் கலைஞரின் அரசியல் வாழ்வும் இருளாகவே முடிந்திருக்கும். எம்.ஜி.ஆரை விட, ஜெயலலிதாவை விட ஆளும் தகுதியும் அனுபவமும் மிக்கவர் கலைஞர் தான். அதிமுக எனும் கட்சி தோன்றாமல் இருந்திருந்தால் கலைஞருக்கு போட்டியாக இங்கு மற்றொரு தலைவர் வந்திருக்க முடியாது. அவரே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆண்டிருப்பார். ஆனால் இப்போது முதன்முறையாக தன் கனவு நனவாவதை - அதிமுக இல்லாத ஒரு தமிழகம் உருவாகிறதை - தன் கண்முன் காண்கிறார். 

மக்கள் ஆதரவு என்பது பருவநிலை போன்றது. மாறிக் கொண்டே இருக்கும். மக்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் அதிமுகவை கட்டுப்படுத்தி அதற்கு தெளிவான பாதை அமைத்துக் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர் சசிகலா மட்டும் தான். அதிமுக மாதிரியான கட்சி அவரை மாதிரியான ஆளிடம் மட்டுமே அடங்கும் காளை. அவர் கையில் கட்சி ஒரு வருடம் இருந்தால் இயல்பாகவே மக்கள் ஆதரவை பல்வேறு நலத்திட்டங்கள், டிராமா மூலம் உருவாக்கி இருப்பார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சசிகலா துடைத்தெறியப்பட்டு விட்டார். இதை இரண்டு விதமாக பார்க்கலாம். தமிழகத்துக்கு நிச்சயம் நல்லது. அதிமுகவுக்கு பாதகமானது. இனி அதிமுக தொடர்ந்து உட்கட்சி பூசல்கள் கொண்ட வலுவான தலைமை அற்ற கட்சியாக நீடிக்கும். அதன் மூலம் மக்கள் ஆதரவை முழுக்க இழக்கும். குறிப்பாக ஒ.பி.எஸ் எந்த விதத்தில் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவராக மலர பா.ஜ.க அனுமதிக்காது. பா.ஜ.க தீபா உள்ளிட்ட வேறு பல போட்டி முனைகளை அதிமுகவுக்குள் ஏற்படுத்தி வளர்த்து விட்டபடி இருக்கும். ஒ.பி.எஸ் ஒரு உயரத்துக்கு மேல் வளர்வதாக தெரிந்தால் இப்போது சசிகலா பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அவருக்கு எதிராக பா.ஜ.க கலகத்தை ஏற்படுத்தும். வருமான வரி ரெய்டுகள் நடத்தும். ஒ.பி.எஸ்ஸை ஒரு மரத்தை போல் சாய்க்கும். அதாவது கலைஞரால் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக செய்ய முடியாத ஒன்றை இப்போது பா.ஜ.க கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது. 

இப்படி திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரே நோக்கம், இலக்கு, கொள்கை – அதிமுகவை நிர்மூலமாக்குவது. 

அதிமுகவின் செல்வாக்கு, உள்கட்டமைப்பு மற்றும் தொண்டர்களை பயன்படுத்தி பா.ஜ.க இங்கு குறிப்பிடும்படியான இடங்களை அடுத்த தேர்தலில் வெல்லுமா என்பது இப்போதைக்கு விடையில்லாத கேள்வி. ஆனால் இப்போதைக்கு பா.ஜ.கவினர் தாம் திமுகவின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாய் எதிர்காலத்தில் சட்டமன்றத்தில் இடம் பெறுவோம் கனவு காணலாம். 

இதன் மூலம் திமுகவுக்கு கிடைக்கும் பலன் பலமடங்கு பெரிது. அடுத்த சில பத்தாண்டுகளில் திமுகவுக்கு போட்டியே இருக்காது. 

 

http://thiruttusavi.blogspot.co.uk/2017/02/blog-post_14.html?m=1

Categories: Tamilnadu-news

முதல்வரை துரோகியாக்கிய துணை சபாநாயகர்

Tue, 14/02/2017 - 19:37
முதல்வரை துரோகியாக்கிய துணை சபாநாயகர்
 
 
 

''பன்னீர்செல்வம் ஒரு துரோகி; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரைப் பற்றி, இனி பேசி பயனில்லை,'' என, கூறியிருப்பதன் மூலம், அனைத்து, எம்.பி.,க்களும் முகாம் மாறினாலும், தம்பிதுரை மட்டும் மாறமாட்டார் என, தெரிய வந்துள்ளது.

 

Tamil_News_large_171091020170214233045_318_219.jpg

சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என, தீவிரமாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்தவர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பிரச்னை ஏற்பட்ட பின், தனக்கு முக்கிய பதவி கிடைக்குமென, தம்பிதுரை நம்பினார். ஆனால், கட்சி நிர்வாகிகளை சசிகலா மாற்றியமைத்த போதும், தம்பிதுரையை கண்டு கொள்ளவில்லை.

பொருளாளர், அவைத் தலைவர் என, முக்கிய பதவிகளில், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர்

நியமிக்கப்பட்டதில் இருந்தே, தம்பிதுரை தரப்பு அமைதியானது. எம்.பி.,க்கள் பலரும், பன்னீர்செல்வம் அணிக்கு தாவ ஆரம்பித்த போதும் இந்த அமைதி தொடர்ந் தது. எப்போதும் உடனிருந்த வந்தநிலையில், சமீபத்திய நாட்களில், சசிகலா பேட்டி, ஆலோசனை களின் போது, தம்பிதுரை தென்படவில்லை.

இவர் எங்கிருக்கிறார் என, பலருக்கும் சந்தேகம் எழுந்த நிலையில், சமீப காலமாகவே, டில்லியில் தான், தம்பிதுரை தங்கியிருந்தார். தாவலை தடுத்து நிறுத்தும் நோக்கில் சில, எம்.பி.,க்களுடன் அவர் பேசியபடி இருந்தார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்த, அவசர நடவடிக்கைகள் ஏதும், டில்லியில் மேற் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம் என கருதியும், டில்லியில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று தீர்ப்பு வெளியான நிலையில்,தம்பிதுரை, டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

பன்னீர்செல்வம் ஒரு துரோகி. கட்சிக்கு துரோகம் செய்த அவர் நீக்கப்பட்டுவிட்டார். அவரைப் பற்றி, இனி பேசி எந்த பயனுமில்லை. சட்டசபை, அ.தி.மு.க., தலைவராக, எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

 

ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும் பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் பலம் எங்களிடம் உள்ளது. கவர்னரிடம் இருந்து அழைப்பு வரும். விரைவில், புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும்.

தீர்ப்பு குறித்து, மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இவ்வாறு கூறுவதன் மூலம், மீதமுள்ள அனைத்து, எம்.பி.,க்களும் அணி மாறினாலும், தம்பிதுரை மட்டும், பன்னீர்செல்வம் முகாமுக்கு செல்லாமல் இருக்கப் போவது உறுதியாகி உள்ளது.

- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710910

Categories: Tamilnadu-news

போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி?

Tue, 14/02/2017 - 19:18
போயஸ் இல்லத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்குக் கிளம்புகிறாரா சசி?

சசிகலா பயணம்

கூவத்தூரில் இருந்து கிளம்பி, போயஸ்கார்டன் வந்த சசிகலா சற்றுமுன் 11.15 மணிக்கு போயஸ் இல்லத்தில்  பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பின், அங்கு குழுமியிருந்த தன் கட்சித் தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கச்சொல்லி பேட்டி கொடுத்தார்,சசி.  அவரைச்சுற்றி இருந்த பெண்தொண்டர்கள் சசியைப்பார்த்து அழுதவண்ணம் இருந்தனர். பேட்டி கொடுத்த பின், உடனடியாக வீட்டுக்குள் சென்ற சசி, இன்று அதிகாலை  4 மணி அளவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அங்கு செல்லும் சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சிறிதுநேரம் பிரார்த்தனைச் செய்துவிட்டு, காரிலேயே பெங்களூரு நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

http://www.vikatan.com/news/sasikala/80845-in-sasi-4-oclock-in-the-morning-from-home-get-ready-for-out.html

Categories: Tamilnadu-news

'சசிகலாவைச் சிக்க வைத்த சொந்தங்கள்!’ அதிர்ச்சி விலகா போயஸ் கார்டன் #DACase #OPSVsSasikala

Tue, 14/02/2017 - 15:13
'சசிகலாவைச் சிக்க வைத்த சொந்தங்கள்!’ அதிர்ச்சி விலகா போயஸ் கார்டன் #DACase #OPSVsSasikala

                    சசிகலா

’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா-வுக்கு முதல்வர் கனவை உண்டாக்கிச் சொத்துக்குவிப்பு வழக்கில் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கி... அவரை, சிறைக்குள்... அவரின் நெருங்கிய உறவினர்களே தள்ளிவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சசிகலா ஆதரவு அ.தி.மு.க-வினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று (14-2-17) உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலை 10.35 மணிக்கு தீர்ப்பை வாசித்தனர். அதில்,சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர். முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவரது பெயர் இவ்வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4  ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது போயஸ் கார்டன் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது ஒரு மாயம் நிகழ்ந்து சசிகலா, நீதிமன்றத்தின் பிடியில் இருந்து தப்பிப்பார் என்று எதிர்பார்த்த அவரின் ஆதரவு அ.தி.மு.க-வினர் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். ’’அமைதியாக இருந்த நீதிபதிகளை, மன்னார்குடி ரத்த சொந்தங்களே தூண்டிவிட்டுவிட்டன’’ என்று கொதிக்கிறார்கள் சசிகலா ஆதரவு பிரமுகர்கள்.

               சசிகலா

இதுதொடர்பாக போயஸ் கார்டன் தரப்பில் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள் கூறுகையில்,"ஜெயலலிதா மறைவு எங்களுக்குப் பெருத்த இழப்பு. அதிலிருந்து இன்னும் மீளாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இந்த நிலையில், ’கட்சியை வழிநடத்த நான் இருக்கிறேன்’ என்று கூறி, பொதுச் செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்றார். அவரை, அம்மாவுக்குப்பிறகு... ’எங்களைக்காக்க வந்த சின்னம்மா’ என்று நாங்கள் கொண்டாடினோம். ஆனால், இப்போது நிலைமை வேறாகிவிட்டது. நீதிபதிகளின் கறார் தீர்ப்பில் சசிகலா சிறைவாசம் பெற்றுள்ளார். இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலைக்கு டி.டி.வி.தினகரனும், திவாகரனும், டாக்டர் வெங்கடேஷும்தான் காரணம். ஏனெனில், சசிகலாவுக்கு முதல்வர் ஆசை காட்டியது அவர்கள்தான். எப்படியும் முதல்வராகிவிட்டால் வழக்கு விடுதலை எளிமையாகிவிடும் என்று கூறி, அவரைத் தூண்டிவிட்டது அவர்கள்தான். அதனால்தான் அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வத்தை நெருக்கடி கொடுத்து ராஜினாமா செய்யவைத்தனர். உடனடியாக சசிகலா முதல்வராக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தனர். 

ஆனால், நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலைக்குத் தள்ளியவர்கள் சசிகலா சொந்தங்களே என்பது இப்போதுதான் அவருக்கே புரிந்து இருக்கும்" என்றனர்.

http://www.vikatan.com/news/politics/80782-sasikala-fell-prey-because-of-her-relatives--dacase-opsvssasikala.html

Categories: Tamilnadu-news

ரிசார்ட்டில் இருந்து மாயமான எம்.எல்.ஏ.க்கள்! வெலவெலத்த சசிகலா #VikatanExclusive #OPSvsSasikala

Tue, 14/02/2017 - 11:08
ரிசார்ட்டில் இருந்து மாயமான எம்.எல்.ஏ.க்கள்! வெலவெலத்த சசிகலா #VikatanExclusive #OPSvsSasikala

 

   ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சசிகலா மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை ரிசார்ட் முழுவதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் தேடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சசிகலா

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருஅதிகார மையங்கள் உருவாகின. இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் சசிகலா, ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் சசிகலா முகாமிலிருந்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் பன்னீர்செல்வம் அணிக்குத் தாவினர். இது சசிகலா தரப்புக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. பன்னீர்செல்வத்தின் ஆதரவு பெருகிவதைப் பார்த்த சசிகலா, ரிசார்ட்டிலிருந்து இனி எந்த எம்.எல்.ஏவும் பன்னீர்செல்வத்தின் அணிக்கு செல்லக் கூடாது என்பதற்காக பல்வேறு வகையில் வியூகம் அமைத்தார். 

 இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதும் சசிகலா தரப்பு அதிர்ச்சிக்குள்ளாகியது. ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்களும் அணித்தாவ முடிவு செய்தனர். அதைத்தடுக்க உடனடியாக சசிகலா, அங்குள்ள எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அ.தி.மு.க. சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக சசிகலா அறிவித்தார்.  இந்தக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் மாயமாகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதுகுறித்து ரிசார்ட்டிலிருக்கும் எம்.எல்.ஏ. ஒருவர் கூறுகையில், "ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான். எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வராமல் ரிசார்ட்டிலிருந்து மாயமாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை ரிசார்ட்டில் தேடிப்பார்த்தோம். இந்த தகவல் வெளியில் தெரிந்தால் சிக்கல் என்று கருதி அதை மூடிமறைத்து விட்டனர்" என்றார். 

 ரிசார்ட்டில் தற்போது ஆட்சி அமைக்கும் அளவைவிட குறைவான எண்ணிக்கையிலேயே எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

 இதுகுறித்து சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், "ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதை ஆரம்பத்திலிருந்தே எங்களது எதிரணியினருக்குப் பிடிக்கவில்லை. இதனால் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதாவை காணவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். அதற்கும் விளக்கம் அளித்து விட்டோம். அடுத்து ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது. இதன்பிறகு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் போலீஸாரும் நேரில் வந்து விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்ததால் எங்கள் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டுள்ளார் பன்னீர்செல்வம். ஆனால் சின்னம்மா, அதிரடியாக முடிவெடுத்து எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்துள்ளார். சின்னம்மாவின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவோம். பன்னீர்செல்வம் மற்றும் அவரை ஆதரித்தவர்களை சின்னம்மா கட்சியிலிருந்தே நீக்கி விட்டார். அவர் ரிசார்ட்டுக்கு வந்தாலும் ஏமாற்றத்துடன்தான் செல்வார். சசிகலாவை ஆதரிக்கும் யாரும் கட்சிக்குத் துரோகம் செய்த பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80773-sasikala-in-shock-as-few-admk-mlas-have-escaped-from-golden-bay-resort.html

Categories: Tamilnadu-news

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Tue, 14/02/2017 - 07:24
அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Edapaadi Palanisamy

அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூவத்தூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வரவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80746-edappadi-palanisamy-selected-as-admk--legislative-party-leader.html

Categories: Tamilnadu-news

‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க.

Tue, 14/02/2017 - 07:15
‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க.

மு.க.ஸ்டாலின்

தமிழகம் அரசியல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலவர முகத்தோடு அமர்ந்துள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'அடுத்து என்ன செய்வது?' என்ற ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. 'பா.ஜ.க மேலிட நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பில் இருந்து சிலர் தூது சென்றுள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு, முதலமைச்சர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார் சசிகலா. 'அதிகாரத்திற்குள் நீங்கள் வர வேண்டும் என்று விரும்பினால், உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்' என தொடக்கத்திலேயே எச்சரித்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். 'அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உடனே முதல்வர் பதவியை ஏற்றாக வேண்டும்' என சசிகலா தரப்பில் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, முதலமைச்சர் பதவியை கடந்த 5-ம் தேதி ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம். 'எம்.எல்.ஏக்கள் செல்வாக்கு யார் பக்கம்?' என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், தி.மு.கவின் நடவடிக்கைகளையும் உற்று கவனித்து வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

"தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நேற்று அறிவாலயத்தில் நடந்தது. 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 'ஆளும்கட்சிக்குள் யார் முதல்வர் என்ற அதிகாரப் போட்டி நிலவுகிறது. நிலையான அரசை அமைக்க முன்வராமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். அரசியல் சட்டவிதிகள் மற்றும் மரபுகளுக்கு உள்பட்டு நிலையான ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 'அரசியல் சட்டப்படி, சட்டப் பேரவையில் இரண்டாவது கட்சி என்ற பலத்துடன் இருக்கும் எங்களுக்கு ஆளுநர் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்பதுதான் தி.மு.கவின் கோரிக்கையாக இருக்கிறது" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

கவர்னர் வித்யாசாகர் ராவ்"தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல்களை தி.மு.க மிகுந்த எச்சரிக்கையோடு கையாண்டு வருகிறது. எந்தச் சூழலிலும், 'அதிகாரத்தைப் பெறுவதற்காக தி.மு.க போராடுகிறது' என்கின்ற பிம்பம் தெரியாத அளவுக்கு அரசியல் நடவடிக்கைகளை முன்வைக்கிறார் ஸ்டாலின். மத்திய அரசும் தி.மு.கவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 7-ம் தேதி பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டியில், 'தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு ராஜினாமா பெறப்பட்டது' என்றார். கடந்த ஒரு வார காலமாக அரசியல் சூழல்களை ஆளுநர் முடிவுக்குக் கொண்டு வரவில்லை. 'ஆளுநர் தாமதிப்பது கட்சியை பிளவுபடுத்தும்' என சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்தாலும், ஆளுநர் அலுவலகம் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. 'அரசியல் சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி வருகிறார் ஸ்டாலின். தற்போதுள்ள சூழலில் மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வதையே அவர் விரும்புகிறார்.

இந்நிலையில், பா.ஜ.கவின் முன்னாள் தேசியத் தலைவராகவும் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் முக்கியப் புள்ளியை சந்தித்துப் பேசினார் தி.மு.கவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஒருவர். இந்த சந்திப்பில், பா.ஜ.கவின் விருப்பங்களை எந்த வகையில் நிறைவேற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ' 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தென்மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் 12 தொகுதிகளை அடையாளம் காட்டுகிறோம். அதில் 5 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தி.மு.கவால் தீர்வைக் கொடுக்க முடியும். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அழைத்தால், அ.தி.மு.கவின் கணிசமான எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள். எளிதாக எங்கள் பலத்தை நிரூபிக்க முடியும்' என விவரித்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை. தி.மு.கவின் கோரிக்கையை பா.ஜ.க ஏற்றால், அடுத்தகட்டத்தை நோக்கி தமிழக அரசியல் களம் நகரும்" என்றார் விரிவாக. 

"சசிகலாவை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதற்கு, சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் காரணமல்ல. அவர் மீது நான்கு பெரா வழக்குகள் இருப்பதும் ஒரு காரணம். தவிர, அவர் எம்.எல்.ஏவாகவும் இல்லை. இதற்காகத்தான் ஆளுநர் அமைதி காத்தார். கூடவே, எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை. அங்கிருந்து தப்பி வருகின்றவர்களும், 'அடைத்து வைத்திருப்பதாகச்' சொல்கின்றனர். அ.தி.மு.கவில் நிலவும் உச்சகட்ட குழப்பத்தால், கட்சித் தொண்டர்கள் பல அணிகளாக சிதறியுள்ளனர். இதில், பன்னீர்செல்வத்தின் பலத்தை அதிகரிக்க வைத்து, நிரந்தர முதலமைச்சராக்குவது; அது நடக்காதபட்சத்தில் தி.மு.கவுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாமா என்பது குறித்து பா.ஜ.க மேலிடம் விவாதித்து வருகிறது. அ.தி.மு.க சிதறி இருப்பதால், தி.மு.கவை பலம் பொருந்திய கட்சியாக அவர்கள் பார்க்கிறார்கள். அதை மனதில் வைத்துத்தான், கனிமொழி வெளிநாடு செல்ல சி.பி.ஐ விதித்திருந்த தடையை நீக்கினார்கள். தி.மு.கவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியது. கருணாநிதி உடல்நிலை குறித்தும் கவலைப்படுகிறார் மோடி. வரும் காலங்களில் தி.மு.கவுடனான கூட்டணி வாய்ப்பையும் பரிசீலனையில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80742-we-can-show-our-majority---dmk-tells-bjp.html

Categories: Tamilnadu-news

உச்ச மன்ற தீர்ப்பு பற்றி திருமாவளவன்

Tue, 14/02/2017 - 06:44

உச்சமன்ற தீர்ப்பு பற்றி திருமாவளவன்

 

 

Categories: Tamilnadu-news

கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு!

Tue, 14/02/2017 - 06:26
கூவத்தூர் ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு!

5a_11539.jpg

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வரும் நிலையில், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டனர். இதில், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் நான்கு பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

இதனிடையே, கூவத்தூர் ரிசார்ட்டில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் இன்று வாக்குவாதம் ஏற்பட்டதோடு கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரிசார்ட் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80737-clash-between-admk-mlas-at-koovathur-resort.html

Categories: Tamilnadu-news

சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase

Tue, 14/02/2017 - 06:18
சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase

சசிகலா

ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்திருந்தார். இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது தமிழகத்தின் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. இப்போதைக்கு கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இன்னொருபுறம் முதல்வர் பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடித த்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, முதலில் பன்னீர்செல்வத்தை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் சொல்லலாம். ஓ.பி.எஸ் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அவர் பதவி விலக நேரிடும். அப்போது சசிகலாவால் சுட்டிக்காட்டப்படும் நபர் ஆளுநரிடம் சென்று தமக்கு இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை அவர் தரக்கூடும். அதன் அடிப்படையில் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம். சசிகலா ஆதரவு அணி ஆட்சி அமைத்த தில் இருந்தது ஆளுநர் தரும் கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அவர் முதல்வராக ஆட்சியில் தொடர முடியும். இதுதான் மரபு.

வித்யா சாகர் ராவ்

சட்டசபையில் வாக்கெடுப்பு முறை எப்படி இருக்கும்?

மூத்த அரசியல்வாதியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்சிடம் கேட்டோம். "ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி தரும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களின் அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதிப்பார். பின்னர் அந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளும் கட்சிக்கு ஆளுநர் உத்தரவிடுவார். சட்டசபையில் ஆளும் கட்சி மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அந்த கட்சியின் அவை முன்னவர் முன்மொழிவார். அந்தத் தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்படும். குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை இருப்பதாக சபாநாயகர் சொன்னால், அது ஏற்கப்படும்.

எதிர் அணியினர் அதை ஏற்க மறுத்து, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்களை எண்ணி அதனை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். அப்படிக் கேட்கும் பட்சத்தில், அவையின் கதவுகள் அடைக்கப்பட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிப்பவர்களை கைகளை உயர்த்தச் சொல்லி அவர்களை சட்டசபை செயலகத்தின் பணியாளர்கள் எண்ணுவார்கள். அந்த எண்ணிக்கையை சபாநாயகரிடம் கொடுப்பார்கள். 117 பேரின் ஆதரவை நிரூபித்தால் அந்த ஆட்சி தொடரும். பெரும்பான்மை நிரூபிக்கப்படும் நாளில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் கொறடா உத்தரவு போடப்படும். தங்கள் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் அவசியம் சபையில் இருக்க வேண்டும் என்று கட்சிகளின் கொறடா  உத்தரவிடுவார்" என்றார்.

நம்பிக்கைத் தீர்மானம் முன்மொழியப்படும்போது அவையில் இருந்து ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் நம்பிக்கைத் தீர்மானத்தின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனிடம் பேசினோம்.
"அசாதாரண சூழலில் சட்டசபையை கூட்ட ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆட்சி அமைக்க உரிமை கோரிய கட்சி, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கைத் தீர்மானத்தை முன்மொழியலாம். தீர்மானம் கொண்டு வரப்படும் சமயத்தில் சபையில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் எத்தனைபேர் நம்பிக்கைத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு சபையில் இருக்கும் 50 எம்.எல்.ஏ-க்களில் 40 பேர் ஆதரவு தெரிவித்தால் கூட அந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று அர்த்தம்தான்" என்றார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான நிலையில் ஆளுநர் இப்போது முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

http://www.vikatan.com/news/coverstory/80725-sasikala-convicted-in-da-case--what-will-be-the-next-move-of-governor--opsvssasikala-dacase.html

Categories: Tamilnadu-news

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: காவல்துறையின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் சொகுசு விடுதி

Tue, 14/02/2017 - 06:02
உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: காவல்துறையின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் சொகுசு விடுதி

 

 
 
 கோ.கார்த்திக்
கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சொகுசு விடுதிக்கு செல்லும் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் | கோப்புப் படங்கள்: கோ.கார்த்திக்
 
 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் சொகுசு விடுதி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் காவல்துறை நுழைந்தது.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த புதன்கிழமை முதல் 7 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 200 அதிவிரைவுப் படையைச் சார்ந்த வீரர்கள் சொகுசு விடுதிக்குள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கூவத்தூர் சொகுசு விடுதி காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

http://tamil.thehindu.com/tamilnadu/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பு-எதிரொலி-காவல்துறையின்-கட்டுப்பாட்டில்-கூவத்தூர்-சொகுசு-விடுதி/article9540971.ece?homepage=true

Categories: Tamilnadu-news