தமிழகச் செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு டிடிவி.தினகரன் ஆதரவு

Fri, 23/06/2017 - 08:45
ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு டிடிவி.தினகரன் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 
 
 பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு டிடிவி.தினகரன் ஆதரவு
 
சென்னை:
 
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. அறிவித்துள்ள வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஒருமனதாக ஆதரவு அளிக்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி நேற்று முன் தினம் அறிவித்தார்.
 
இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பன்னீர் செல்வம் நேற்று அறிவித்தார். 
 
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவில் உத்தரவின்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக, டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்றும் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். 
 
அதிமுகவை பொறுத்த வரை தினகரனுக்கு 34 எம்.எல்.ஏ.க்களும், சில எம்.பி.களும் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/23123640/1092458/TTV-Dinakaran-also-extend-his-support-to-Bjp-candidate.vpf

Categories: Tamilnadu-news

'நண்பர்களுடன் அரசியல் குறித்து பேசினேன்'... ரஜினி பரபர பேட்டி!

Thu, 22/06/2017 - 17:06
'நண்பர்களுடன் அரசியல் குறித்து பேசினேன்'... ரஜினி பரபர பேட்டி!
 

அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்துவருவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துகளால் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியின் அரசியல் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வருகின்றன. மேலும், தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் என்று அரசியல் கட்சித் தலைவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.


இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியிடம், அரசியல் பிரவேசம் மற்றும் பிரச்னைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினி, "நான் அரசியலுக்கு வந்தால் உங்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். என் நண்பர்களுடன் அரசியல் குறித்து நான் பேசியதை மறுக்கவில்லை. அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறேன். ஆனால், முடிவு செய்யவில்லை.

 


தற்போது ஐந்து நாள் படப்பிடிப்புக்காக மும்பை செல்கிறேன். செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/93118-rajini-speaks-about-his-political-entry.html

Categories: Tamilnadu-news

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்

Thu, 22/06/2017 - 07:47
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் நரேந்திர மோடியுடன் வென்று நாடாளுமன்றத்துக்குள் சென்ற 543 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 39 பேர்.

மோடி ஆட்சியின் மூன்றாண்டு கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நம் எம்.பி-க்களும் நாடாளுமன்றத்துக்குள் சென்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அங்கே, அவர்களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி, அரையாண்டுப் பரீட்சையில் அவர்கள் வாங்கிய மார்க் என்ன?

2014 ஜூன் 4-ம் தேதிதான் 16-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆரம்பமானது. அன்றுமுதல் இன்றுவரையில் 11 கூட்டத் தொடர்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கூட்டத்தொடர்களின் மொத்த நாள்கள் 213. அதாவது, இந்த மூன்றாண்டுகளில் 213 நாள்கள் நாடாளுமன்றம் கூடியிருக்கிறது. நான்காவது கூட்டத்தொடர்தான் மிக அதிக பட்சமாக 35 நாள்கள் நடைபெற்றது. இந்தக் கணக்கு எல்லாம் தெரிந்தால்தான், நம் எம்.பி-க்கள் எந்த அளவுக்கு மட்டம் போட்டார்கள் என்பது தெரியும். நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் எம்.பி-க்கள் கையெழுத்துப் போடுவதற்காக வருகைப் பதிவேடு வைக்கப் பட்டிருக்கும். அதில் போடப்படும் கையெழுத்தை வைத்துத்தான் எம்.பி-க்களின் வருகைப் பதிவேடு கணக்கிடப்படுகிறது. அமைச்சர்கள், சபாநாயகர் போன்றவர்கள் கையெழுத்திடுவதில்லை. அதனால் தம்பிதுரை, பொன்.ராதாகிருஷ்ணன் இந்த லிஸ்ட்டில் இல்லை.

p10a.jpg

நம்பர் ஒன் அன்புமணி

அன்புமணியின் நாடாளுமன்ற அட்டெண்டன்ஸ் ரொம்ப வீக். 37 எம்.பி-க்களில் அதிகம் மட்டம் போட்டதில் முதல் இடத்தில் இருப்பவர் அன்புமணிதான். 213 நாள்களில், 101 நாள்கள்தான் அவர் அவைக்கே வந்திருக்கிறார். அதாவது, பாதிநாள்கள்கூட அவர் அவைக்கு வரவில்லை. மொத்தமே, 10 விவாதங்களில்தான் கலந்துகொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய மொத்தக் கேள்விகள் வெறும் 23-தான்.

அணி மாறிய அன்வர்

அன்புமணிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அன்வர் ராஜா. தினகரனுக்கு ஆதரவாக டி.வி விவாதங்களில் தலைகாட்ட நேரம் இருக்கும் அன்வர் ராஜாவுக்கு, நாடாளுமன்றத்துக்குள் செல்ல காலம் கைகூடவில்லை. 154 நாள்கள்தான் அவைக்கு வந்திருக்கிறார். 28 விவாதங்களிலும் 107 கேள்விகள் எழுப்பியிருக்கிறார். பெரம்பலூர் மருதராஜா, தஞ்சை பரசுராமன், சிவகங்கை செந்தில்நாதன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் மட்டம் போட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

வாழ்றதே அங்கேதான்!

அதிக நாள்கள் அவைக்கு வந்த ‘மக்கள் பிரதிநிதி’களில் ஆரணி ஏழுமலைதான் முதல் இடத்தில் இருக்கிறார். அவர், 194 நாள்கள் அவைக்கு வந்திருக்கிறார். 61 விவாதங்களில் பங்கேற்றதுடன் 333 கேள்விகளையும் கேட்டி ருக்கிறார். இரண்டாவது இடத்தில் திருவண்ணா மலை வனரோஜாவும் (193 நாள்கள்), மூன்றாவது இடத்தில் அரக்கோணம் ஹரியும் (191 நாள்கள்), நான்காவது இடத்தில் கள்ளக்குறிச்சி காமராஜும், திருப்பூர் சத்தியபாமாவும் திருவள்ளூர் வேணுகோபாலும் (190 நாள்கள்) இருக்கிறார்கள்.

ஏப்ரல் மேயிலே...

2016 ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கூட்டத் தொடரில்தான் தமிழக எம்.பி-க்கள் அதிக அளவுக்கு அவைக்கு வராமல் இருந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், அப்போது தமிழகச் சட்ட சபைத் தேர்தல் நடைபெற்றது. பிரசாரத்துக்குப் போனதால், பலரும் நாடாளு மன்றத்துக்குச் செல்லவில்லை. 

p10b.jpg

விவாத மன்னர்கள்!

விவாதங்களில் கலந்துகொண்டவர்களை எடுத்துக்கொண்டால், விருதுநகர் ராதாகிருஷ்ணன்தான் மிகக் குறைந்த விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர், பங்கேற்ற விவாதங்கள் ஏழு மட்டுமே.  இவருடைய வருகைப் பதிவு 166 நாள்கள். இப்படிக் குறைந்த விவாதங்களில் கலந்துகொண்டவர்களில் ராதாகிருஷ்ணனுக்கு மேலே இருப்பவர்கள் அன்புமணி (10 விவாதங்கள்), திருநெல்வேலி பிரபாகரன் (12), பெரம்பலூர் மருதராஜா (14), விழுப்புரம் ராஜேந்திரன் (15) ஆகியோர். 

அதிக விவாதங்களில் கலந்துகொண்ட வர்களைப் பட்டியல் போட்டால், திருப்பூர் சத்தியபாமா முதல் இடத்தில் இருக்கிறார். அவர், 80 விவாதங்களில் கலந்துகொண்டார். சத்தியபாமாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் தஞ்சாவூர் பரசுராமன் (73 விவாதங்கள்), நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் (68 விவாதங்கள்), கிருஷ்ணகிரி அசோக்குமார் (67 விவாதங்கள்), ஆரணி ஏழுமலை (61 விவாதங்கள்) ஆகியோர் இருக்கிறார்கள். 

கேள்வியின் நாயகரே...

அடுத்து, கேள்விகள் கேட்டவர்களின் பெர்ஃபாமென்ஸ் எப்படி எனப் பார்ப்போம். மிகக் குறைந்த அளவு கேள்வி கேட்டவர்களின் பட்டியலிலும் அன்புமணிக்குத்தான் முதல் இடம். அவர் எழுப்பிய மொத்த கேள்விகள் 23. அவருக்கு  அடுத்தடுத்த இடங்களில் திருநெல்வேலி பிரபாகரன் (79 கேள்விகள்), ஈரோடு செல்வகுமார சின்னையன் (89 கேள்விகள்), ராமநாதபுரம் அன்வர் ராஜா (107 கேள்விகள்), விழுப்புரம் ராஜேந்திரன் (130 கேள்விகள்) ஆகியோர் உள்ளனர்.

அதிகக் கேள்விகளைக் கேட்டவர்களில் விருதுநகர் ராதாகிருஷ்ணன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் எழுப்பிய கேள்விகள் 571. இவருடைய வருகைப்பதிவு 166 நாள்கள்தான். இரண்டாவது இடத்தில் மத்திய சென்னை விஜயகுமாரும் (549 கேள்விகள்), மூன்றாவது இடத்தில் வட சென்னை வெங்கடேஷ் பாபுவும் (519 கேள்விகள்), நான்காவது இடத்தில் திருவள்ளூர் எம்.பி டாக்டர் வேணுகோபாலும் (483 கேள்விகள்), ஐந்தாவது இடத்தில் தென் சென்னை ஜெயவர்த்தனும் (454 கேள்விகள்) இருக்கிறார்கள்.

39 எம்.பி-க்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பி.ஜே.பி எம்.பி பொன் ராதாகிருஷ்ணன், தர்மபுரியைச் சேர்ந்த பா.ம.க எம்.பி. அன்புமணி தவிர, மற்ற 37 எம்.பி-க்களும் அ.தி.மு.க-வினர்தான். நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி அ.தி.மு.க. ஆனால், இவ்வளவு பலம் இருந்தும் என்ன புண்ணியம்?

http://www.vikatan.com

Categories: Tamilnadu-news

`என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்': ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் கோரிக்கை

Wed, 21/06/2017 - 18:57
`என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள்': ராஜீவ் கொலையாளி ராபர்ட் பயஸ் கோரிக்கை
 

சிறையில் இருந்து விடுதலை கிடைக்காது என்ற நிலையில், தன்னைக் கருணைக் கொலை செய்து, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுமாறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் தெரிவித்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ராபர்ட் பயஸ் சிறையில் உள்ளார்படத்தின் காப்புரிமைAFP Image captionராஜீ்வ் காந்தி

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு ராபர்ட் பயஸ் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், 2014-ஆம் ஆண்டில் தங்களது விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் எடுத்த முடிவை எல்லா அரசியல் தலைவர்களும் ஆதரித்ததாகவும் நீதிமன்றங்களும் அதனைப் பரிந்துரைத்ததாகவும், இருந்தபோதும் அந்த முடிவு நிறுத்திவைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாநில அரசின் முடிவை, முன்பிருந்த மத்திய அரசும் தற்போதைய மத்திய அரசும் கடுமையாக எதிர்த்து வருவதாகவும் தங்கள் வாழ்வை சிறைக்குள்ளேயே முடித்துவிட வேண்டுமென விரும்புவதாகவும் ராபர்ட் பயஸ் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த நீண்ட சிறைவாசம் தன்னை மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பத்தையும் தண்டனைக்குள்ளாக்கியிருப்பதாகவும் கடந்த பல ஆண்டுகளாக தன்னைத் தன் குடும்பத்தார் வந்து சந்திக்காத நிலையில், வாழ்வில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.

'சிறைக்குள் வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது'

இனி விடுதலை இல்லை என்ற நிலையில், உயிர்வாழ்வதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ஆகவே தன்னைக் கருணைக் கொலை செய்து உடலை, தன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிடுமாறும் ராபர்ட் பயஸ் தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

கடந்த ஜூன் 11-ஆம் தேதியோடு, தான் சிறைக்குள் வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ராபர்ட் பயஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

"நான் இன்று ராபர்ட் பயஸிடம் பேசினேன். அவருக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். இருந்தும் வாழ முடியவில்லை. ஆகவே இந்த முடிவுக்கு வந்துவிட்டார். இந்தக் கடிதம் சிறைத் துறைக் கண்காணிப்பாளர் மூலம் முதல்வருக்கு அனுப்பப்பட்டது" என பிபிசியிடம் கூறினார் அவரது வழக்கறிஞரான சந்திரசேகர்.

பேரறிவாளன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபேரறிவாளன்

முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

http://www.bbc.com/tamil/india-40357253

Categories: Tamilnadu-news

தினகரனைக் கட்டம் கட்டும் சசிகலா குடும்பம்! - கொதிப்பைக் கூட்டிய சிறை சந்திப்புகள்

Wed, 21/06/2017 - 08:02
தினகரனைக் கட்டம் கட்டும் சசிகலா குடும்பம்!  - கொதிப்பைக் கூட்டிய சிறை சந்திப்புகள் 
 
 

சசிகலா-தினகரன்

' அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் துணைப் பொதுச் செயலாளரான எனக்கு உண்டு' என தினகரன் அறிவித்திருப்பதன் மூலம், கட்சிக்குள்ளும் சசிகலா குடும்பத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் புகைச்சல் கிளம்பியுள்ளது. ' எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் வேலைகளில் திவாகரன் ஈடுபட்டு வருகிறார். தினகரனை ஓரம்கட்டும் வேலைகள் தீவிரமடைந்ததால், தனக்கான கட்சி அதிகாரத்தை முன்னிலைப்படுத்துகிறார் தினகரன்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று சசிகலாவை சந்தித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அவருக்கு அடுத்து, தினகரனும் சசிகலாவை சந்தித்துப் பேசினார். ஒரு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில், 'குடும்ப விவகாரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது' என்கின்றனர் குடும்ப உறுப்பினர்கள். சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த தினகரன், ' சித்தி என்ற முறையில் அவரை நான் சந்தித்து வருகிறேன். அரசியல்ரீதியாக எதுவும் பேசவில்லை' என்றதோடு முடித்துக் கொண்டார். தம்பிதுரையும், ' குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் விரைவில் இணையும்' எனக் கூறிவிட்டுச் சென்றார். 

' சிறை சந்திப்பு' குறித்து, அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னத்தைப் பெறும் வேலைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். திகார் சிறையில் இருந்து பெயிலில் வந்த நாள்முதலாக, 'அமைச்சர்கள் தன்னை சந்திக்க வருவார்கள்' என எதிர்பார்த்தார். தொடக்கத்தில், திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் அவரைச்  சென்று சந்தித்தார். அதன்பிறகு, அவரும் ஒதுங்கிக் கொண்டார். ஓ.எஸ்.மணியன், காமராஜ், விஜயபாஸ்கர் உள்பட தினகரன் ஆதரவு அமைச்சர்களும் அமைதியாக இருந்தனர். தன்னைப் புறக்கணிக்கும் வேலைகள் நடப்பதை அறிந்த தினகரன், ' நாங்கள் நினைத்ததால்தான், இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது' என எடப்பாடி பழனிசாமிக்குச் சுட்டிக் காட்டும் வகையில், எம்எல்ஏ-க்களில் 34 பேரை தன் பக்கம் திருப்பினார். இதைப் பற்றி ஆட்சியில் உள்ளவர்களும் கவலைப்படவில்லை. அமைச்சர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளைப் பற்றி, தினகரனிடம் பேசிய எம்எல்ஏ. தங்க.தமிழ்ச்செல்வன், ' பன்னீர்செல்வம் வகித்த அமைச்சர் பதவியை எனக்குத் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது ஓரம்கட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி அவரிடம் பேசியபோதும், ' தனிப்பட்ட முறையில் என்ன வேலை நடக்க வேண்டும் என்றாலும் கேளுங்கள். அமைச்சர் பதவியைத் தருவதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறுகிறார். அவர் இவ்வாறு கூறுவதற்குக் காரணமே, பன்னீர்செல்வம் மீதுள்ள பழைய பாசம்தான். கட்சிக்கும் குடும்பத்துக்கும் துரோகம் செய்துவிட்டுப் போனவர்களை எப்படி ஏற்பது?' எனக் கொந்தளிப்பைக் காட்டினார். 

திவாகரன்இதே கொதிப்பில்தான் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் இருக்கின்றனர். ' கட்சியின் 90 சதவிகித நிர்வாகிகள் உங்கள் பக்கம்தான் வருவார்கள். நீங்கள் பழையபடி செயல்பட ஆரம்பியுங்கள். 'தலைமை அலுவலகத்துக்குள் உங்களை நுழையவிடக் கூடாது' என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நாம் பார்க்காத பிரச்னைகளா? என தினகரனை உசுப்பேற்றி வருகின்றனர். தற்போது அவர் பக்கம் ஆட்சியைக் கவிழ்க்கப் போதுமான எம்எல்ஏ-க்கள் பலம் இருப்பதால், ' கட்சி அலுவலகத்துக்குள் வந்து பணி செய்வேன்' என அறிவிக்கிறார். இந்த ஆட்டத்துக்கு எதிராக தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறார் திவாகரன். ' தினகரனை ஓரம்கட்டாமல் இணைப்பும் சாத்தியமில்லை. இரட்டை இலையும் சாத்தியமில்லை. அவர் தன்னிச்சையாக செயல்படுவதால், ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இன்னும் நான்காண்டுகள் நாம் ஆட்சியை நடத்தியாக வேண்டும். உங்களை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும். எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. தினகரனைக் கட்டம் கட்டி வையுங்கள்' என சசிகலாவிடம் கறாராகக் கூறிவிட்டனர்.

இதனை தினகரனிடம் கூறிய சசிகலா, ' நான் சொல்வதைக் கேட்டு நடந்திருந்தால், குடும்பத்திலேயே இவ்வளவு எதிர்ப்புகள் வந்திருக்காது. உனக்கு நீயே வினையைத் தேடிக் கொண்டாய். கொஞ்ச நாள் அமைதியாக இரு' என அவர் கூறியதை, தினகரன் ஏற்கவில்லை. ' இத்தனை நாள்கள் அரசியலில் இருந்துவிட்டு, திடீரென ஒதுங்கச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? எனக்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவதே திவாகரன்தான். அவர்களைப் போல மறைமுகமாக இருந்து கொண்டு செயல்பட வேண்டிய அவசியமில்லை. நானும் ஒதுங்கிக் கொண்டால், கட்சியில் நமக்கான பிடி காணாமல் போய்விடும். கட்சியும் வேறு ஒருவர் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். பிறகு நாம் உள்ளே வரவே முடியாது' எனப் பல விளக்கங்களைக் கூறியிருக்கிறார். சிறை சந்திப்பிக்குப் பிறகு, இன்னும் உக்கிரத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார் தினகரன். இந்தமுறை, வரலாறு காணாத சண்டைகளை அ.தி.மு.க தலைமைக் கழகம் சந்திக்க இருக்கிறது" என்றார் விரிவாக. 

" தினகரன் ஆதரவு மனநிலையில் சில எம்எல்ஏ-க்கள் இருந்தாலும், இவர்கள் எல்லாம் சசிகலா மீதான பாசத்தில் இருப்பவர்கள். ' அந்தக் குடும்பத்தை நம்பினால், அமைச்சர் பதவி கிடைக்கும்' என்ற எண்ணத்தில் வலம் வருகின்றனர். ' ஆட்சி போய்விட்டால், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்' என்பது நிச்சயம் இல்லாததால், எடப்பாடி பழனிசாமி பக்கமும் அவர்கள் பாசம் காட்டுகின்றனர். உறுதியாகச் சொல்லப் போனால், 5 எம்எல்ஏ-க்கள் மட்டும்தான் தினகரன் பக்கம் இருக்கின்றனர்.  மீதமுள்ளவர்கள் அமைச்சர்கள் மீதான அதிருப்தியில் தினகரன் பக்கம் தலைகாட்டியவர்கள். அவர்களையும் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்திவிட்டார். ' குடியரசுத் தலைவர் தேர்தலில், நாம் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தால், டெல்லியோடு சமசரம் பேசியிருக்கலாம்' என நினைத்தார் தினகரன். அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. கூடவே, கட்சி அதிகாரத்துக்குள் வருவதற்கு திவாகரன் குடும்பம் ஆர்வமாக இருக்கிறது. அதற்கு தினகரன் தடையாக இருப்பதால், அவரை ஓரம்கட்டும் வேலைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. கழகத்துக்குள் ஒரு சுமுகமான சூழல் உருவாவதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால், இணைப்பும் சாத்தியமில்லை. இரட்டை இலையும் கிடைக்கப் போவதில்லை" என்கிறார் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர். 

 

நேற்று சட்டசபையில் பேசிய அ.தி.மு.க எம்எல்ஏ பெரிய புல்லான், 'என்னுடைய தொகுதியில் குரங்குகள் தொல்லை தாங்க முடியவில்லை. குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. அந்த அடங்காப்பிடாரி குரங்குகளை அமைச்சர்தான் அடக்க வேண்டும்' எனச் சொல்ல, இதற்குப் பதில் அளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ' காட்டுக்குள் மட்டுமா குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. இங்கும் சில அடங்காப்பிடாரி குரங்குகள் இருக்கின்றன' என அதிருப்தி எம்எல்ஏ-க்களை குறிவைத்துச் சொன்னார். 'அவர் யாரை குறிவைத்து அவ்வாறு சொன்னார்' என்பதை யூகித்துக் கொண்டு, அவையில் சிரிப்பலையில் மூழ்கினர் ஆளும்கட்சி எம்எல்ஏ-க்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/92959-sasikala-and-co-plan-to-corner-dhinakaran.html

Categories: Tamilnadu-news

தேமுதிக கட்சி சரிந்து வருகின்றதா ?

Wed, 21/06/2017 - 07:29

தேமுதிக கட்சி சரிந்து வருகின்றதா ?

 

 

Categories: Tamilnadu-news

எடப்பாடிக்கு தினகரன் கெடு... ரஜினிக்கு அமித் ஷா கெடு!

Wed, 21/06/2017 - 06:59
மிஸ்டர் கழுகு: எடப்பாடிக்கு தினகரன் கெடு... ரஜினிக்கு அமித் ஷா கெடு!
 
 

 

‘‘தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் போயஸ் கார்டன் மாறப் போகிறது” என்றபடியே கழுகார் வந்தார்.

‘‘வேதா நிலையத்தில் புதிதாக யாராவது வரப் போகிறார்களா?” என்றோம்.

“போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ மட்டும் இல்லை. ரஜினிகாந்தின் ‘பிருந்தாவனம்’ இல்லமும் இருக்கிறது” என்று சிரித்தபடியே கழுகார் பேச ஆரம்பித்தார்.

p44d.jpg‘‘ரஜினியின் பிருந்தாவனத்தின் ஆதரவைப் பெற பல கட்சிகள், பல சக்திகள், பல ஆண்டுகளாக, பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றன அல்லவா? அைத வைத்துச் சொல்கிறேன். தினமும் ஏதாவது ஒரு பிரமுகரை ரஜினி சந்தித்து வருகிறார். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆர்வத்தைக் காட்டுகின்றன. இவற்றையெல்லாம் மற்ற கட்சிகளை விட       பி.ஜே.பி-தான் உன்னிப்பாகக் கவனிக்கிறதாம்!”

‘‘ஏன்?”

‘‘ரஜினியை எப்படியாவது பி.ஜே.பி-க்குள் இணைக்கவே பிரதமர் மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் விரும்புகிறார்கள். ஆனால், ரஜினி அதற்குப் பிடி கொடுக்கவில்லை. மும்பையில் ‘காலா’ ஷூட்டிங்கில் இருந்தபோதும் அவர் மனதைக் கரைக்க முயற்சி செய்தார்கள். மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ்கூட ரஜினியைச் சந்தித்துப் பேசினார். எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசினாலும், எந்த உறுதிமொழியையும் ரஜினி எப்போதும் கொடுக்கவில்லை.  அதேநேரத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை, பல அமைப்புகளின் பிரமுகர்களை அவர் சந்தித்து வருவது      பி.ஜே.பி-க்குக் குழப்பத்தைக் கொடுத்துள்ளது.”

‘‘ஓஹோ!”

‘‘இந்த நிலையில், ‘பி.ஜே.பி-யில் இணைவீர்களா...மாட்டீர்களா?’ என்ற ரீதியில் ரஜினிக்கு அமித் ஷா கெடு வைத்துள்ளாராம். டெல்லி தூதர் ஒருவர் ரஜினியின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்துள்ளார். ‘விரைவில் மோடியைச் சந்திக்க ரஜினி வரவேண்டும்’ என்ற நெருக்கடியும் தரப்படுகிறதாம். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் ரஜினி தவிப்பதாகவும் சொல்கிறார்கள். ‘நான் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் ஆரம்பிப்பேன் என்று தெளிவாகச் சொன்ன பிறகு எதற்காக இப்படி நெருக்கடி கொடுக்கிறார்கள்? நான் பி.ஜே.பி-யில் இணைவதாக எப்போதுமே சொல்லவில்லையே?’ என்று புலம்புகிறாராம் ரஜினி!”

‘‘தினமும் அவர் நடத்தும் சந்திப்புகளைப் பார்த்தால் அரசியலில் இறங்குவது முடிவாகிவிட்டது போலத் தெரிகிறதே?”

p44e.jpg

‘‘1996-ம் ஆண்டு ரஜினியை எந்தக் காரணங்கள் தயங்க வைத்தனவோ... அதே காரணங்கள்தான் 2016-ம் ஆண்டு இறுதிவரையிலும் அவரைத் தயக்கத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தன. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் தங்கள் ஆளுமையாலும், அரசியலாலும் அவரை அச்சுறுத்தியே வந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டதாக ரஜினி உணர்கிறார். ரசிகர்கள் சந்திப்பில், ‘நான் என்ன பேசினாலும் அதற்கு அதிகமாக எதிர்ப்பு வருகிறது. அரசியலில் எதிர்ப்புதானே மூலதனம்...’ என ஸ்லோமோஷனில் தொடங்கி, ‘நான் ஒரு பச்சைத் தமிழன்’ எனச் சொல்லி, ‘போர் வரும்வரை காத்திருங்கள்...’ என்று முடித்தது வரை எல்லாமே அவர் தயார் ஆகிவிட்டதற்கான முஸ்தீபுகள். அதைவிட முக்கியம், அந்தச் சந்திப்புக்குப் பிறகு தொடர்ந்து ரஜினி நடத்திய ஆலோசனைகள். பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், அரசியல் பிரபலங்கள் என்று பலதரப்பு மக்களிடமும் அவர் இன்னும் தொடர்ந்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்.”

‘‘இவை அனைத்துமே அவர் நடிக்கும் ‘காலா’, ‘2.0’ திரைப்படங்களின் புரமோஷனுக்காகத்தான் என்பதுதானே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு?”

‘‘அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அரசியல் ஆசை வந்துவிட்டதுதான் முக்கியமான காரணம் என்கிறார்கள்!”

‘‘தி.மு.க-வுடன் நெருக்கமாக இருந்த தொல்.திருமாவளவனையே ரஜினி புயல் அசைத்துவிட்டதே?”

‘‘அரசியல் வட்டாரம், ரஜினியின் ஆலோசகராக திருமாவளவனைச் சொல்ல ஆரம்பித்துவிட்டது. திருமாவைப் பாராட்டி பகிரங்கமாக ரஜினி பேசினார். இப்போது, ரஜினியைப் பாராட்டி திருமா பேட்டி தந்து வருகிறார். ‘ஆனந்த விகடனி’ல் திருமாவின் பேட்டி வெளியானது. ‘தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்ற தொனியில் திருமா கருத்துச் சொன்னார். ஸ்டாலினைக் குறை சொல்லும் வார்த்தைகளும் அந்தப் பேட்டியில் இருந்தன. இது தி.மு.க-வுக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்குமான பிரிவினைக்கும், ரஜினிக்கும் திருமாவுக்குமான நெருக்கத்துக்கும் காரணமாக மாறியது.”

‘‘இது எப்படி நடந்தது?”

‘‘ஒடுக்கப்பட்டவர்கள் அரசியலை ரஜினி அறிந்துகொண்டது சமீபத்தில்தான். ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் இயக்குநர் பா.இரஞ்சித் இணைந்தார். அப்போது இருந்தே ரஜினியோடு அரசியல் விவாதங்களையும் இரஞ்சித் நடத்தி வந்தார். இப்போது மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பிலும் அது தொடர்ந்தது. இந்த வழியில் திருமாவளவனோடும் ரஜினிக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே ரஜினியும் திருமாவளவனும் நல்ல அறிமுகம் என்றாலும், ரஜினி - இரஞ்சித் கூட்டணிக்குப் பிறகு இது இன்னும் பலமானது. திருமாவளவனின் ஆலோசனைகளும் கருத்துக்களும் கூடுதலாக ரஜினியை எட்டின. ரஜினியின் எண்ண ஓட்டங்களும் திருமாவளவனை வந்தடைந்தன.”

p44c.jpg

‘‘திருமாவளவனின் பேட்டிகளுக்கு ரஜினியின் ரியாக்‌ஷன் என்ன?”

‘‘அந்தப் பேட்டியைப் படித்ததும் திருமாவளவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசி உள்ளார். அதில், ‘இதுவரை எல்லோரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது மட்டுமே, ‘நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று கூறியுள்ளனர். ஆனால், நீங்கள் மட்டும்தான் வெளிப்படையாக ‘அரசியலுக்கு நான் வரவேண்டும். அதுவும் தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்’ என்று நெகிழ்ந்தாராம். அதுபோல, தன் குடும்பத்தினர் திருமாவளவன் பேட்டியைப் படித்து மிகவும் பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.”

‘‘அப்படியானால் பி.ஜே.பி-க்கு ஆதரவாக ரஜினியின் செயல்பாடுகள் இருக்காதோ?”

‘‘ரஜினிக்குத் திருமாவளவன் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களில் மிக முக்கியமானவை, ‘தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சியும் எடுபடாது; அதன் கொள்கைகள், தத்துவங்கள் எதுவுமே மக்களை வசீகரிக்காது. பி.ஜே.பி-யோடு சேர்ந்தால் ரஜினிக்குப் பலவீனம்’ என்பவைதான். திருமாவளவன் சார்பில் வலுவாக இதற்கு வாதங்களும் வைக்கப்பட்டுள்ளன.”

‘‘திருமாவளவனின் பேட்டியை எதிர்க்கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன?”

‘‘ஆளும் அ.தி.மு.க தரப்பு அதைப் பெரிதுபடுத்தவில்லை. காரணம், தங்களுக்குள் இருக்கும் ஓராயிரம் பஞ்சாயத்துகளைப் பேசித் தீர்க்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இந்த நேரத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம், திருமாவளவனின் பேட்டி எல்லாம் அவர்கள் சிந்தனையிலேயே நிற்காது. ஆனால், தி.மு.க தரப்பில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.”

p44a.jpg

‘‘இருக்கத்தானே செய்யும்?”

‘‘ ‘கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்று சொன்ன திருமாவளவன், ‘கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு வசீகரத் தலைமை தமிழகத்தில் இல்லை. ரஜினி அந்த இடத்தை நிரப்பக்கூடும். மு.க.ஸ்டாலினுக்குத்  தி.மு.க வாக்கு வங்கியைத் தாண்டி பொதுவான மக்களின் நம்பிக்கையை, வரவேற்பைப் பெறக்கூடிய அளவுக்கு இன்னும் ஓர் அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது ஸ்டாலினைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ‘திருமாவளவன் இதை வேண்டுமென்றே செய்கிறார். கலைஞர் வைரவிழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் திருமாவளவனை மேடை ஏற்றாதது... 2014 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது நடைபெற்ற சில கசப்பான நிகழ்வுகள்... போன்றவற்றை வைத்துக்கொண்டு திருமாவளவன் இப்படிச் செய்கிறார்’ எனச் சொல்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.”

‘‘ரஜினி அரசியலுக்கு வரப் போவதில் அவரைவிட, அவரின் ரசிகர்கள் மிகுந்த பரபரப்பில் இருக்கிறார்கள். உற்சாக மிகுதியில் அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், வழக்கமான கழக அரசியல் போன்றதாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிகம் கலந்துகொண்டது ரஜினி ரசிகர்கள்தான். சில நிர்வாகிகளே ஆட்களைத் திரட்டிக்கொண்டு போனார்களாம். கூடங்குளம் போராட்டத்தை நடத்திய சுப.உதயகுமார், அந்த நிகழ்ச்சியில், ரஜினி பற்றிக் கடுமையான விமர்சனங்களை வைத்தபோது, அவரைக் கண்டித்து மோசமான கோஷங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பினர். இதேபோல நாஞ்சில் சம்பத்தையும் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளார்கள். ‘அரசியலுக்கு வருவதற்கு முன்பே இப்படிச் செய்கிறார்களே இவர்கள்’ என நொந்துபோய் விட்டாராம் நாஞ்சில். இதற்கெல்லாம் தெளிவாக ஹோம்வொர்க் செய்துகொண்டு ரஜினி ரசிகர்கள் வந்ததாகச் சொல்கிறார்கள்.’’ 

‘‘சட்டமன்றத்தில் தினம் தினம் ஏதாவது பரபரப்புகள் நிகழ்கின்றனவே..?”

‘‘ஆமாம்! ஒருபக்கம் ஸ்டாலின் தினமும் ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி எடப்பாடிக்குத் தலைவலி கொடுக்கிறார். இன்னொரு பக்கம், சொந்தக் கட்சியிலேயே அவருக்குச் சங்கடங்கள் கொடுக்கும் காரியங்கள் நிகழ்கின்றன. ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியில் எத்தனை நாள் நீடிப்பார்’ என்று பந்தயம் கட்டாத குறையாக கோட்டையில் பலரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்குக் காரணம், தினகரன் வைத்துள்ள கெடுதான். ‘தன்னைக் கண்டுகொள்ளாமல் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் எடப்பாடி’ என்ற கோபம் தினகரனுக்கு இருக்கிறது. ‘ஏற்கெனவே நான் சொன்ன சில அமைச்சர்களை நீக்க வேண்டும். சில அமைச்சர்களைச் சேர்க்க வேண்டும். அதைச் செய்யாமல் இந்த ஆட்சி நீடிப்பது நல்லது அல்ல. இந்த ஆட்சியை ஸ்டாலின்தான் கவிழ்க்க வேண்டும் என்று இல்லை. நானே கவிழ்ப்பேன். மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்’ என்று கொந்தளித்துக் கொண்டு இருக்கிறாராம் தினகரன். ‘எனது அமைதி எல்லாம் ஜூலை 17 ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான். அதன்பிறகு நான் யார் என்று காட்டுவேன்’ என்கிறாராம் தினகரன்!”

‘‘அப்படியா?”

‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை எடப்பாடி அணியும் பன்னீர் அணியும் போட்டி போட்டுக் கொண்டு செய்கின்றன. ஜூலை மாதத்தில் ஒருநாள் சென்னை வந்து சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை மோடி திறக்க இருக்கிறாராம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை டிசம்பர் மாதம் எடப்பாடி அணி சென்னையில் நடத்துகிறது. இந்த இரண்டு விழாக்களின்போதும் தனக்கு முக்கியத்துவம் தர  வேண்டும் என்று தினகரன் விரும்புகிறாராம். அதற்குள் தனது கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி வர வேண்டும். அதைத் தொடர்ந்து பன்னீர் அணி இணைக்கப்பட வேண்டும் என்று தினகரன் நினைக்கிறாராம்.”

p44.jpg

‘‘பலே திட்டமாக இருக்கிறதே?”

‘‘சசிகலா குடும்பத்துக்குள் நடைபெறும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். திவாகரனின் மகன் ஜெயானந்த், டாக்டர் வெங்கடேஷ், தினகரனின் தம்பி பாஸ்கரன் ஆகிய மூன்று பேரும் சந்தித்து, சில விஷயங்களைப் பேசி இருக்கிறார்கள். சசிகலாவைச் சிறையில் சந்தித்தபோது, அவர் சொன்ன சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டாராம் டாக்டர் வெங்கடேஷ். தங்கள் குடும்பத்தின் பிடியிலிருந்து இந்த ஆட்சி விலகிச் செல்வதை விடக்கூடாது என்பதே இவர்களின் முடிவாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க ஆதரவைக் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசினார் மோடி. ஆனால், ‘ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க ஆதரவு யாருக்கு என்பதை சசிகலா முடிவு செய்வார்’ என்கிறார் தினகரன். அ.தி.மு.க-வில் இன்னமும் தங்கள் குடும்பம் வைப்பதுதான் சட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் தினகரன்.”

‘‘இனி என்ன ஆகும்?”

‘‘தினகரன் தனது வட்டாரத்தில் பேசும்போது, ‘எடப்பாடி வந்துவிட்டால் பன்னீரை அரை மணி நேரத்தில் வர வைப்பேன்’ என்றாராம். தமிழக சட்டமன்றத்தில் தினகரன் ஆதரவு     எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்தார். ஆளும்கட்சி ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததன் மூலம், எடப்பாடியை அச்சுறுத்த தினகரன் விரும்புவது தெரிகிறது. இதுபோன்ற ஷாக் ட்ரீட்மென்ட் தொடரும் என்கிறார்கள்” என்றபடி கழுகார் பறந்தார்.

விசாரணையைக் குலைக்க மிரட்டல்!

ல்லிக்கட்டுப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகள் மற்றும் போலீசாரின் அத்துமீறல்கள் பற்றி விசாரிக்க நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. புகார் மனுக்கள் அளித்தவர்களிடம் கடந்த 7-ம் தேதி முதல் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 800 வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ‘‘ஒரு வாரம் விசாரணை நடந்தும் 7 பேர்தான் ஆஜராகினர்’’ என்று நீதிபதி ராஜேஸ்வரனே தெரிவித்துள்ளார்.

p44b.jpg

‘‘இதற்குக் காரணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டதுதான்’’ என்கிறார்கள். இதுபற்றி மக்களிடம் விசாரணை நடத்திய உண்மையறியும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்தான் இப்படிக் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை, மதுரை, கோவையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்குகளைப் பதிந்துள்ளது. போராட்டக் களத்தில் இருந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை சம்மன் அனுப்பி வரவழைத்து, சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு துளைத்துள்ளது. ‘‘ஆணையத்தில் ஆஜராக விடாமல் தடுக்கும் மறைமுக மிரட்டலே இது’’ என விமர்சனத்தை முன்வைக்கின்றன, சிவில் உரிமை அமைப்புகள்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி

Wed, 21/06/2017 - 06:34
அமைச்சர்களை நீக்க எனக்கு அதிகாரம்: டிடிவி தினகரன் அறிவிப்பால் அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி

 

 
 எல்.சீனிவாசன்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.
 
 

அமைச்சர்களை நீக்க துணைப் பொதுச் செயலாளரான எனக்கு அதிகாரம் உண்டு என டிடிவி தினகரன் அறிவித்துள்ளதையடுத்து அதிமுகவில் அதிகாரப் போட்டி வலுத்து வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக செயல்பட்டு வரு கின்றனர்.

இந்நிலையில், அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், டெல்லி திஹார் சிறையில் இருந்து வந்தபிறகு தனியாக செயல்படத் தொடங்கி யுள்ளார். அவரை 34 எம்எல்ஏக்கள் மற்றும் சில எம்பிக்கள் சந்தித்து ஆதரவு அளித்தனர்.

அதனால், தற்போது அதிமுகவில் 3-வது அணி உருவாகிவிட்டது. முதல்வர் பழனிசாமி அணியில் உள்ள அமைச்சர்களையும் ஓபிஎஸ் அணி யினரையும் தினகரன் ஆதரவாளர் கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

சசிகலா, தினகரன் உள்ளிட் டோரை நீக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில் தினகரன் உள்ளிட்டவர் கள் ஒதுக்கிவைத்த முடிவில் மாற்றமில்லை என அமைச்சர்களும் தெரிவித்துவிட்டனர்.

நேற்று முன்தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தபின் நிருபர்களிடம் பேசிய மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, ‘‘அதிமுக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா. அவரை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’’ என்றார்.

அமைச்சரை நீக்க முடியும்

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், ‘‘பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். அதனால், என்னிடமே அதிகாரங்கள் உள்ளன. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

அமைச்சர்கள் சிலர் அவ்வாறு கூறுவது, அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் விரைவில் கட்சி அலுவலகத்துக்கு சென்று பணியாற்றுவேன்’’ என்றார்.

ஆதரவு எம்எல்ஏ வெளிநடப்பு

தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் முதல்வருக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளனர். பேரவையில் பேசும்போது சசிகலா, தினகரன் பெயரை குறிப்பிட்டு பேசுகின்றனர். தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ நேற்று முன்தினம் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததும் இதன் வெளிப்பாடாகவே உள்ளது.

அதிமுக (அம்மா) கட்சி சார்பில் சென்னையில் இன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச் சிக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அழைக்கப்படவில்லை. ஆட்சி யையும், கட்சியையும் கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் கொண்டு வர முதல்வர் கே.பழனிசாமி முயற்சித்துவருவதாக அதிமுக வினரே கூறுகின்றனர்.

இந்நிலையில், தினகரனின் செயல்பாடுகள் அதிமுகவுக்குள் அதிகாரம் யாருக்கு என்ற போட்டி வலுத்து வருதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் பழனிசாமிக்கு ஆதரவாக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பேரவையில் செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/அமைச்சர்களை-நீக்க-எனக்கு-அதிகாரம்-டிடிவி-தினகரன்-அறிவிப்பால்-அதிமுகவில்-வலுக்கும்-அதிகாரப்-போட்டி/article9731675.ece?homepage=true

Categories: Tamilnadu-news

“இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட்!

Fri, 02/06/2017 - 09:11
“இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட்! - பாகம் 1 ⁠⁠⁠⁠
 

ரஜினி  தொடர்

2016...தமிழக அரசியலில் மிகமுக்கியமான ஆண்டு! ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்து வரலாறு படைக்கப்பட்ட வருடம். அந்த சாதனையைப்படைத்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பரில் இறந்தும் போனார்.

2016 டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலே மாறிப்போனது. அதுவரை ஊமைகளாக இருந்த ‘மாண்புமிகுக்கள்’ எல்லாம் மீடியா முன்பு பேச ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் பேட்டி தர மாட்டார்களா என மைக்குடன் பத்திரிகையாளர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிய காலம்போய், பைட் கொடுப்பதற்காக, மைக்கைத் தேடி அமைச்சர்கள் அலையத் தொடங்கினார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், அவரது மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சி ஆதரிக்கத் தொடங்கியது. 

தன் படத்துக்கு சிக்கல் வந்தபோது, ‘‘நாட்டை விட்டு வெளியேறுவேன்’’ என ‘விஸ்வரூபம்’ எடுத்தார் கமல். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவர் காட்டிய அதிகபட்ச எதிர்ப்பு இதுதான். சென்னையை பெருவெள்ளம் புரட்டிப்போட்டபோது, ‘‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது? அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது’’ எனத் தெரிவித்தார் கமல்ஹாசன். ஆனால் பிறகு ‘‘வேறு மாதிரியாக எழுதிவிட்டார்கள்’’ என ஜகா வாங்கினார். ஜெயலலிதா இறந்த பிறகு, கமலுக்கும் வீரம் வந்துவிட்டது. ‘107செயற்கை உறுப்பினர்களை ஏவியவரைவிட 104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்’ என கூவத்தூர் கூத்தை கிண்லடித்தார். ‘தப்பான ஆளு, எதிலும் வெல்லும் ஏடாகூடம்’ என்றெல்லாம் கமல்போட்ட ட்வீட்கள் தமிழக அரசியலைத் திணறடித்தன.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலாவும் பாய்ச்சல் காட்டினார். ஜெயலலிதாவைப் போலவே மேக்-அப் போட்டுவந்து, ‘‘அக்கா... கோட்டையைவிட்டுக் கிளம்பிட்டீங்களா... மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?’’ என அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் பேசிய பேச்சின்போது கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் சிந்தினார். ஜெயலலிதா பயன்படுத்திய கார், சேர் மற்றும் அவரைப் போன்றே ஹேர்ஸ்டைல் என சசிகலா மாறிப்போனதற்கு காரணம் ஜெயலலிதாவின் மரணம்தான்.

‘துணிச்சல்காரி’ என பெயர்பெற்ற ஜெயலலிதா, இந்த உலகத்துக்கு விட்டுச் சென்றது துக்கத்தை அல்ல. தைரியத்தை! ஒரு மரணம், அரசியல் நகர்வுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை.சிலரின் குருதியில் ‘தைரியம் மற்றும் பாசிட்டிவ்’ குரூப் ரத்தத்தையும் செலுத்திவிட்டுப் போயிருக்கிறது. இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் விதிவிலக்கல்ல.‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.’’ என்று 21 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கிய ரஜினியின் உதடுகளின் உறைப்பு காலப்போக்கில் கரைந்துபோனது.பிறகு சூப்பர்ஸ்டாரே, ஜெயலலிதாவுக்கு ‘தைரியலட்சுமி’ பட்டம் எல்லாம் கொடுத்தது அக்மார்க் தடம் மாறுதல்கள். 

ரஜினி

ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு, ரஜினி தடம் மாறியிருக்கிறார். அண்மையில் ரசிகர்களைச் சந்தித்தபோது அவர், ‘‘போர் வந்தால் களத்தில் குதிப்போம்... இங்கே சிஸ்டம் கெட்டுக்கிடக்கு... பச்சைத் தமிழன்’’ என்றெல்லாம் முழங்கி இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திரையில்பேசிய அரசியல் வசனங்களை அவர் உயிருடன் இல்லாதபோது, நிஜத்தில் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார். கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டுவந்த ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்கிற பேசுபொருள், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘ஆண்டவன் கட்டளை’ இந்தமுறை நிஜமாகும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு. கடந்த காலங்களில் அரசியல் பேசிவிட்டு போய்விடுவார். இந்தமுறை அரசியல் புள்ளிகளையும் பத்திரிகையாளர்களையும், நண்பர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘‘ரஜினியின் அரசியல் என்ட்ரி இந்தமுறை நிச்சயம் நடக்கும்’’ என்பதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வந்த பலரின் கணிப்பாக இருக்கிறது.

DSC_4717_10349_12498.jpg

 

ஜெயலலிதா இல்லை...கருணாநிதி அரசியலில் தீவிரமாகச் செயல்படும் நிலையில் இல்லை... அ.தி.மு.க. பலவீனமாக உள்ளது. இப்படியான வெற்றிடத்தில் கால்பதிக்க நினைக்கிறார் ரஜினி. அவருக்கு அரசியல்கைகூடுமா? அவரின் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின? ரஜினியின் முதல் அரசியல் அத்தியாயம் எங்கே ஆரம்பித்தது? அதற்கான தொடக்கப்புள்ளி எங்கே விதைக்கப்பட்டது? அத்தனையும் இந்தத் தொடரில் அலசுவோம். அரசியலை ரஜினியோடு முடிச்சுப்போட்டு, முதன்முதலில் பேச ஆரம்பித்தார்களே, அந்த தருணத்தில் இருந்து இன்றைய ராகவேந்திரா தரிசனம்வரை அவ்வளவும் இங்கே இடம்பெறும்...

http://www.vikatan.com/news/coverstory/91116-rajinis-route-to-politics-episode-1.html

Categories: Tamilnadu-news