தமிழகச் செய்திகள்

‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive

Wed, 19/04/2017 - 07:20
‘பன்னீர்செல்வம் செய்த தப்பை, நான் செய்ய மாட்டேன்!’ - எடப்பாடி பழனிசாமியின் ‘முதல்வர்’ லாஜிக் #VikatanExclusive

 

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.கவின் அணிகள் இணைப்பில் நடக்கும் நிபந்தனைகளால் தினகரன் வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 'மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார் பன்னீர்செல்வம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை. தற்போதுள்ள அரசு தொடர்வதையே பா.ஜ.க தலைமையும் விரும்புகிறது' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 
 
'சசிகலா குடும்பம் அல்லாத அ.தி.மு.க' என்ற ஒற்றை கோரிக்கையோடு பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோர்த்துள்ளனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த அவசர ஆலோசனையில், ‘ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், கழகமும் நம் கையைவிட்டுப் போய்விடும்' என விவாதித்துள்ளனர். முதல்வரின் முடிவை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அ.தி.மு.கவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் விருப்பகமாக உள்ளது' என்றார். இந்தக் கருத்தை எதிர்பார்த்த தினகரனும், 'எம்.எல்.ஏக்கள் அனைவரும் என் பின்னால்தான் உள்ளனர்' எனப் பேட்டியளித்தார். தற்போது தினகரனுக்கு ஆதரவாக, வெற்றிவேல், சுப்ரமணியம், தங்க.தமிழ்ச்செல்வன் உள்பட மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 

"அ.தி.மு.கவின் இரண்டு அணிகளையும் இணைப்பது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து முன்கூட்டியே சில நிபந்தனைகளை விதித்தனர். அதில், ‘முதல்வர் பதவியை மீண்டும் பன்னீர்செல்வத்துக்கே வழங்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர். கூடவே, மா.ஃபா.பாண்டியராஜன் உள்பட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனை கொங்கு மண்டல அமைச்சர்கள் ரசிக்கவில்லை. இதுகுறித்து, தங்களுக்குள் விரிவாக ஆலோசனை செய்தனர். இந்த விவாதத்தில், ‘முதல்வர் பதவியில் சமசரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்ற கருத்தையே கொங்கு மண்டல அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்" என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவி மட்டுமல்லாமல், அமைச்சரவை மாற்றத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பமில்லை. அமைச்சர்களின் ஒருமித்த கருத்தாகவும் இது உள்ளது. இதற்குக் காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலா எதிர்ப்பு என்பது தீபா பக்கம் சென்றது. முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பிறகு, சசிகலா எதிர்ப்பு அவர் பக்கம் சென்றது. மக்களும் அவர் பக்கம் நின்றார்கள். இந்த இடத்தில்தான் பன்னீர்செல்வம் தவறு செய்தார் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபற்றி கொங்கு மண்டல நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, 

பன்னீர்செல்வம்

‘சசிகலா குடும்பத்தின் நிர்பந்தத்தை ஏற்று பன்னீர்செல்வம் பதவியில் இருந்து விலகினார். அரசியலில் பாலபாடம் என்பது, உறுதியான உத்தரவாதம் இல்லாமல் எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதுதான். பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்த நேரத்தில், 'மீண்டும் அமைச்சரவையில் அவரை சேர்க்கக் கூடாது' என்பதில் சசிகலா உறுதியாக இருந்தார். இந்த ஏமாற்றத்தில்தான் அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்தார். 'தற்போது நிலைமை அப்படி இல்லை. மிகக் குறைந்த மெஜாரிட்டியில்தான் இந்த அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு அப்படியே தொடரும். இன்னொரு மாற்று அரசு அமைவதற்கு வாய்ப்பில்லை. எந்தச் சூழ்நிலையிலும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பன்னீர்செல்வத்தை மீறித்தான் இந்த அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்ததுபோல, இந்தப் பதவி நமக்கு வந்து சேரவில்லை. அமைச்சரவையில் நம்பர் டூ இடத்தில் இருந்ததால்தான் முதல்வர் பதவி வந்து சேர்ந்தது. இதை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அனைத்து அமைச்சர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து அரசை செலுத்துவேன். நான் பொம்மை முதல்வர் என்று யாரும் சொல்ல முடியாது. நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போதும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிரடியை பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இரு தரப்பும் ஏற்கும்விதமாக பேச்சுவார்த்தைக் குழு அமைக்க உள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் விவகாரம் முடிவுக்கு வரும்" என்றார் விரிவாக. 

"பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அதிலும், கொங்கு மண்டல லாபியை வளர்த்துவிடுவதான் பா.ஜ.கவின் முக்கிய நோக்கம். கொங்கு மண்டலத்தின் சில தொகுதிகளில் பா.ஜ.கவுக்குக் கணிசமான வாக்குவங்கி இருக்கிறது. அ.தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை வளர்த்துவிடுவதன் மூலம், அந்த வாக்குகளையும் பா.ஜ.கவை நோக்கித் திருப்ப முடியும் என உறுதியாக நம்புகிறது பா.ஜ.க தலைமை. அதையொட்டியே, 'எடப்பாடி பழனிசாமியே பதவியில் தொடரட்டும். கட்சிப் பதவியை பன்னீர்செல்வத்திடம் கொடுத்துவிடலாம்' என சீனியர் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

தினகரனால் வளர்த்துவிடப்பட்ட பன்னீர்செல்வமும் சசிகலாவால் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமியும் ஒரே நேர்க்கோட்டில் இணைந்துவிட்டனர். இந்தக் கோட்டை அழிக்கும் வித்தை தெரியாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம், 'துரோகம் தொடர்ந்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது?' எனப் புலம்பி வருகிறாராம் தினகரன்.

http://www.vikatan.com/news/tamilnadu/86890-no-compromise-on-giving-up-cm-post---eps-to-ops.html

http://www.vikatan.com/news/

Categories: Tamilnadu-news

வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி

Wed, 19/04/2017 - 05:18
மிஸ்டர் கழுகு: வேட்டையாடு விளையாடு... தங்கமணி, வேலுமணி
 
 

 

‘வெப்பக்காற்று அதிகரிக்கும், வெளியில் போக வேண்டாம்’ என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த செவ்வாய்க்கிழமை.  காலையிலேயே சூரியன் தகித்துக் கொண்டிருக்க, கழுகார் உள்ளே நுழைந்தார். ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடித்தவர், ‘‘இந்த வெப்பக் காற்றைவிட பயங்கரமான பாலைவனப்புயல் சசிகலா குடும்பத்தில் வீசிக்கொண்டிருக்கிறது. 1996-2001 காலகட்டத்தில் அனுபவித்ததைவிட பல மடங்கு சிக்கல்களை அந்தக் குடும்பம் இப்போது சந்திக்கிறது. திடீர் திருப்பங்கள் தினம்தோறும் அரங்கேற்றமாகின்றன. ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை வைத்து, சசிகலா குடும்பத்துக்கு எதிராக சென்னையில் போர் வியூகம் வகுக்கப்படுகிறது’’ என்றார்.

p44a.jpg

‘‘இந்தத் திருப்பங்களின் மையப்புள்ளியாக தினகரன்தானே இருக்கிறார்?” என்று கேட்டோம்.

‘‘ஆம்! டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. சசிகலா குடும்பம் மொத்தமும் அங்கே அணிவகுத்து நின்றது. ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த பிரதமர் நரேந்திர மோடி, சசிகலாவின் தலையில் கை வைத்தார். அப்போது தொடங்கியது சசிகலாவின் சரிவு. அ.தி.மு.க என்ற கட்சியும், அதன் தலைமையில் தமிழகத்தில் அமைந்துள்ள ஆட்சியும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் போய்விடக்கூடாது என்று மோடி அரசாங்கம் ஒவ்வொரு காயாக நகர்த்தியது. சசிகலாவும் அவருடைய குடும்பமும் இதை கவனமாகவே எதிர்கொண்டாலும், கடந்த காலங்களில் அந்தக் குடும்பம் செய்த தவறுகள் அவர்களைவிடாமல் துரத்தின.

p44b.jpg

பன்னீர்செல்வத்தை வைத்து கட்சி இரண்டாக உடைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றதால், சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது. அதன்பிறகு டி.டி.வி.தினகரன் வந்தார். தினகரனை எளிதாகச் சமாளித்து ஓடவிடலாம் என பி.ஜே.பி ஆரம்பத்தில் நினைத்தது. ஆனால், தினகரன் அவ்வளவு லேசுப்பட்ட ஆளாக இல்லை. ஏற்கெனவே காத்திருக்கும் ஃபெரா வழக்குகளோடு, ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் பாயவிட்ட பணமும், அதை மையமாகவைத்து நிகழ்ந்த ரெய்டும், அவர் தலைக்கு மேலே புதிய கத்திகளாக இப்போது தொங்குகின்றன.”

‘‘போதாக்குறைக்கு டெல்லியில் புதிதாக ஒரு லஞ்ச வழக்கு பாய்ந்திருக்கிறதே?”

‘‘கடந்த வாரத்தில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்தார். தமிழக விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்து, பிரதமர் மோடியிடம் பேசுபவர் நாயுடுதான். அவர் தம்பிதுரையிடம் இந்தச் சந்திப்பில் தெளிவாக சில விஷயங்களைச் சொல்லி அனுப்பியதாகத் தெரிகிறது. ‘சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல், அ.தி.மு.க ஒரே கட்சியாக இணைந்து செயல்படுவதை பி.ஜே.பி விரும்புகிறது’ என்று சொன்ன வெங்கய்ய நாயுடு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி விளக்கினாராம். ரெய்டுக்கு முன்பும் ரெய்டின்போதும் கிடைத்த தகவல்கள் பற்றியும் நிறைய சொன்னாராம். இதன் பின்விளைவுகள் பற்றி வெங்கய்ய நாயுடு சொன்னதை, தம்பிதுரை அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டாராம். இதுபோன்ற தகவல்களை போனில் பேசுவது சிக்கல் என்பதால், திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தம்பிதுரை சந்தித்துப் பேசினார்.’’

‘‘ஓஹோ!”

‘‘இந்தச் சந்திப்புக்கு முன்பாகவே, டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்ட விவகாரம் வெளியில் வந்துவிட்டது. ரூ.1.30 கோடி பணத்துடன் சுகேஷை கைதுசெய்தது டெல்லி போலீஸ். இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெறுவதற்காக இந்த சுகேஷ் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது. தினகரனும் சுகேஷும் போனில் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறது டெல்லி போலீஸ். ஆனால், தினகரன்  அதை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரா ஏற்கெனவே பல மோசடி வழக்குகளில் கைதானவர். கருணாநிதியின் பேரன் என்று சொகுசு கார்களை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று மோசடி செய்த வழக்கு ஒன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ளது. மேலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுகேஷ் சந்திரா மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட ஓர் ஏமாற்றுப்பேர்வழியை நம்பி பேரம் பேசுவதற்கு தினகரன் ஏமாளி அல்ல. அதனால், இந்த விவகாரங்கள் எல்லாமே நம்ப முடியாதவை என்கின்றனர் தினகரன் தரப்பில்.’’

‘‘இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?”

‘‘பெயரைக் கெடுப்பது, தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது, சில நாள்கள் சிறையில் அடைத்து பல வருடங்களுக்கு வழக்கை இழுத்து தினகரனை முடக்குவதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை வைத்து ஆட்சியையும் பன்னீர்செல்வத்தை வைத்து கட்சியையும் நடத்துவதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். அதற்கான பேச்சுவார்த்தைகள்தான் இப்போது நடந்துவருகின்றன.’’

‘‘அதாவது தினகரனை நீக்கிவிடுவார்கள் என்கிறீரா?”

‘‘அப்படித்தான் நிலைமைகள் போகின்றன. ஏப்ரல் 14-ம் தேதி தினகரன் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து உமது நிருபர் எழுதி இருப்பதைப் படித்தேன். பன்னீர் அணியையும் எடப்பாடி அணியையும் சேர்த்துவைக்க பலரும் முயற்சிசெய்கிறார்கள். ஆனால், அதில் சசிகலாவையும் தினகரனையும் சேர்த்துக்கொள்கிறார்களா என்பதுதான் இரண்டு தரப்பும் முடிவுக்கு வர முடியாத விஷயமாக இருக்கிறது!”

‘‘யார் யார் என்ன சொல்கிறார்கள்?”

‘‘தினகரனை முழுமையாக நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி தரப்பு சொல்கிறதாம். இந்த ஆபரேஷனே கொங்கு மண்டல சீனியர் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணியின் ‘வேட்டையாடு விளையாடு’தான். ‘சசிகலாவையும் தள்ளி வைத்துவிட்டு வாருங்கள்’ என்று பன்னீர் தரப்பு சொல்கிறதாம். இதுதான் இன்றைய சிக்கலுக்குக் காரணம். முதலமைச்சராக இருப்பதால், எடப்பாடியால் பல விஷயங்களில் நேரடியாக இறங்க முடியவில்லை. அதனால், அனைத்துக் காரியங்களையும் பார்க்கும் வேலையை வேலுமணி, தங்கமணியிடம் ஒப்படைத்துள்ளாராம். திங்கள்கிழமை இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில் பெரும்பாலான அமைச்சர்கள் கூடிவிட்டார்கள். இவர்கள் அனைவருமே பன்னீர் அணியுடன் சேருவதுதான் நல்லது என்கிறார்கள்.”

p44c.jpg

‘‘இதனை தினகரன் ஏற்க மாட்டாரே?”

‘‘ஆமாம்! ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் தினகரனை வைத்துக்கொள்வது, இல்லாவிட்டால் தினகரனை நீக்கிவிடுவதுதான் இவர்களின் திட்டமாம். சசிகலாவைப் பார்க்க பெங்களூருக்கு தினகரன் சென்ற நேரமாகப் பார்த்து இப்படி ஒரு நடவடிக்கையில் அமைச்சர்கள் இறங்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? ‘என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்ற ரீதியில் அமைச்சர்கள் செயல்படத் தொடங்க விட்டார்கள் என்றுதானே அர்த்தம்!”

‘‘அதற்காக சசிகலாவை தள்ளிவைத்து விடுவார்களா?”

‘‘பன்னீர் தரப்பு சசிகலாவையும் நீக்கிவிட வேண்டும் என்கிறதாம். ஆனால் சீனியர் அமைச்சர்கள் சிலர், ‘தினகரன் வேண்டாம், சசிகலா இருக்கட்டும்’ என்கிறார்களாம். ‘அம்மா இடத்தில் சின்னம்மா பொதுச்செயலாளராக இருக்கட்டும். இத்தனை வருஷம் நமக்காகப் பாடுபட்டவர் அவர். சிறைக்குப் போய்விட்டார் என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று வந்துவிடக்கூடாது’ என்று ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் சொன்னார்களாம். ஆனால், இதை பன்னீர் ஏற்கவில்லை என்கிறார்கள்!”

‘‘இந்த இணைப்பு பன்னீருக்கு முழு சம்மதமா?”

‘‘ஆமாம்! திங்கள்கிழமை பெரியகுளம் சென்றார் பன்னீர். ‘இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது’ என்று சென்னை விமான நிலையத்தில் வைத்து பன்னீர் சொன்னார். அதே நாளில்தான் தினகரனிடம் பணம் வாங்கியதாக டெல்லியில் சுகேஷ் கைதானதும் நடந்தது. இது சம்பந்தமாக மதுரை விமானநிலையத்தில் பன்னீரிடம் கேட்டபோது, ‘எதையும் பணத்தைக் கொடுத்து வாங்கிவிட சசிகலா குடும்பத்தினர் நினைக்கிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார். சசிகலா குடும்பத்தினர் மீதான கோபம் அவருக்கு அடங்கவில்லை என்று இதன் மூலமாகத் தெரிகிறது!”

‘‘அடுத்து என்ன நடக்கும்?”

‘‘விரைவில் தினகரனை கட்சியில் இருந்து நீக்கி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். அ.இ.அ.தி.மு.க அம்மா அணி-அ.இ.அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்படலாம்.”

‘‘தினகரன் சும்மா இருப்பாரா?”

p44d.jpg

‘‘அது எப்படி இருப்பார்? அவர் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு இந்த ஆட்சியைக் கலைத்துவிடுவார் என்று சொல்கிறார்கள். மகாதேவன் இறப்புக்கு மன்னார்குடி சென்ற தினகரன், ‘முதலமைச்சர் பதவி நம் குடும்பத்துக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆட்சியே நமக்குத் தேவையில்லை’ என்ற ரீதியில் சொன்னாராம்.”

‘‘தினகரன் பக்கம் எத்தனை பேர் வருவார்கள்?”

‘‘சுமார் 42 எம்.எல்.ஏ-க்கள் தன்னை முழுமை யாக ஆதரிப்பார்கள் என்று நினைக்கிறாராம். இது உண்மையானால் பன்னீர், எடப்பாடி சேர்ந்தாலும் ஆட்சி நிலைக்காது. ஆனால், ‘பதவி போனாலும் பரவாயில்லை என தினகரன் பின்னால் போகிற அளவுக்கு இங்கு விசுவாசிகள் யாருமில்லை’ என்கிறார்களாம் வேலுமணியும் தங்கமணியும்.”

‘‘சசிகலா ரியாக்‌ஷன் என்ன?”

‘‘அவருக்கு இது எதுவுமே பிடிக்கவில்லையாம். தினகரனை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று சொன்னவர் சசிகலா. அதனை மீறி அவர் போட்டியிட்டார். ‘கொஞ்ச காலம் காத்திரு’ என்று சசிகலா சொன்னார். தினகரன் கேட்கவில்லை. இந்த நிலையில் என்னென்னவோ நடந்துவிட்டன. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக சசிகலா முடிவெடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். தனக்கு இனி அரசியல் வேண்டாம் என்றும் நினைக்கிறாராம். தேர்தல் கமிஷன் தனது பதவியைப் பறிப்பதற்கு முன்னதாக தானே விலகிவிடுவது நல்லது என்றும் அவர் நினைக்கிறாராம்!”

‘‘ஓஹோ!”

‘‘சசிகலா சிறைக்குப் போன பிறகு தினகரன் மட்டும் தனி ஆளாக ஆவர்த்தனம் செய்து கொண்டி ருக்கிறார். அவரது குடும்பத்தில் மற்றவர்கள் இதனை ரசிக்கவில்லை. நடராசனே ஒதுங்கி விட்டார். பிறகு என்ன மற்றவர்கள்? திவாகரன்தான் அடிபட்ட புலியாக உறுமிக்கொண்டிருக்கிறார். பன்னீர், எடப்பாடி அணியினருடன் தொடர்ந்து திவாகரன் பேசிக்கொண்டு இருக்கிறாராம். ‘எனக்குக் கட்சி உடையக்கூடாது... ஆட்சி நிலைக்க வேண்டும். அவ்வளவுதான். தினகரன் இருக்கணும்னோ, நான் வரணும்னோ எந்த எண்ணமும் எனக்கு இல்லை’ என்று சொல்லி வருகிறாராம் திவாகரன். இதை சசிகலாவிடமும் அவர் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.”

p44.jpg

‘‘சிறையில் சசிகலாவை தினகரன் ஏன் சந்திக்க முடியவில்லை?”

‘‘17-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு தினகரன் சென்றார். ஆனால், சசிகலா தினகரனைச் சந்திக்கவில்லை. அவர் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. அவர், மிகவும் நொந்து போய் இருக்கிறார். தினகரன்தான் குடும்பத்துக்குள்ளும் பிரச்னைகளை ஏற்படுத்தி, கட்சிக்குள்ளும் மேலும் மேலும் சிக்கல்களை உண்டாக்குகிறார் என்று சசிகலா கருதுகிறார். அதனால், அவர் தினகரனைச் சந்திக்கவில்லை என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால், ‘பார்வையாளர்கள் நேரம் முடிந்துவிட்டதால்தான் சின்னம்மா அண்ணனைச் சந்திக்கவில்லை. குறிப்பிட்ட தினங்களில்தான் சிறையில் இருப்பவர்களைச் சந்திக்க முடியும் என விதி இருக்கிறது. அண்ணன் மீண்டும் வந்து சந்திப்பார்’ என்று தினகரன் தரப்பில் சொன்னார்கள். தினகரன் அனைவராலும் தனிமைப்படுத்தப்படுவது தெரிகிறது!” என்றபடி எழுந்த கழுகாரிடம், அமித்ஷா வருகை குறித்து கேட்டோம்.

‘‘மே 10-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். விரைவில், தேர்தல் வரப்போகும் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்தான் அமித்ஷாவின் சுற்றுப்பயணம் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென அதில் தமிழகமும் கேரளாவும் சேர்க்கப்பட்டு உள்ளன. பி.ஜே.பி தனது ஆபரேஷன்களை வெளிப் படையாக இனிதான் நடத்தப்போகிறது” என்றபடி பறந்தார்.

படம்: மீ.நிவேதன்

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி

‘முழு முயற்சி எடுக்கிறார் கலெக்டர்’

‘சிவகங்கை சீமை... கருவேல சர்ச்சை!’ எனும் தலைப்பில் கடந்த 2.4.17 இதழில், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர் விழிக்கு எதிரான குற்றச் சாட்டுகள் குறித்து எழுதியிருந் தோம். இது தொடர்பாக,  சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பான நீதிமன்ற உத்தரவைக் கண்காணிக்கும் சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் ஆணையர்களில் ஒருவரான எஸ்.காமேஸ்வரன், நமக்குக் கடிதம்  ஒன்றை அனுப்பியிருந்தார்.

 அதில், “படமாத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி நீதியரசர்கள் வந்தபோது, நல்லா குளம் அருகே வேம்பத்தூரைச் சேர்ந்த பசும்பொன் ராஜா என்பவர் நீதியரசர்களின் காரை மறித்து, தான் சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஏலம் எடுத்துள்ளதாகவும், கிராமத்தில் சிலர் இந்தப் பணிகளைச் செய்ய விடாமல் தடுப்பதாகவும் முறையிட்டார். அதற்கு நீதியரசர்கள் ‘கலெக்டரிடம் முறையிடுங்கள்’ என்றார்கள். இதுதான் நடந்தது. பசும்பொன் ராஜாவைக் கைது செய்யுமாறு கலெக்டர் சொன்னதாகவும், இதைக் கேட்ட நீதியரசர்கள் அவரைக் கண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது உண்மைக்கு மாறானது. கலெக்டர் மலர்விழி, சீமைக் கருவேல மரங்களை அழிக்க, முழு முயற்சி எடுத்து வருவதற்காக நீதியரசர்கள் அவரைப் பாராட்டினார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன்

Wed, 19/04/2017 - 05:15
கைவிரித்த உறவுகள்..கடிவாளம் போட்ட பி.ஜே.பி!- திணறும் தினகரன்
 
 

 

“அ.தி.மு.கவில் முப்பது ஆண்டுகளாக ஆளுமை செலுத்தி வந்த சசிகலா குடும்பத்திற்கு அந்த கட்சியில் முடிவுரை எழுதப்பட்டு விட்டது” என்கிறார்  தமிழக அமைச்சர் ஒருவர். 

Dina_1_500_03412.jpg

ஆர்.கே நகரில் தொப்பி சின்னத்தில் தினகரனுக்கு வாக்குகேட்ட அமைச்சர்கள் எல்லாம் இன்று தினகரன் குடும்பமே கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று போர்க்கொடி துாக்கியுள்ளார்கள். எந்த குடும்பத்தை சசிகலா பலமாக நினைத்தாரோ அந்த குடும்பத்திலே குழப்பம் உச்சத்துக்கு வந்துள்ளது. திரைமறைவில் திறமையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்த சசிகலா குடும்பத்தினரால், திரைக்கு முன்னால் தினகரன் திண்டாடுவதை அவர்கள் குடும்ப உறவுகளே ரசிப்பது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மரணம் அடையும் முன்பே சசிகலாவுக்கு கட்சி பதவி தரவேண்டும் என்று  திவாகரன் விரும்பினார். ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியபோது தான் சசிகலாவின் குடும்பம் அ.தி.மு.க-வின் தலைமை பதிவிக்கு வந்துவிடும் என்ற கணிப்பு அ.தி.மு.கவினர் மத்தியில் ஏற்பட்டது. அதன் பிறகு சசிகலாவிடம் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வலியுறித்தியதன் பின்னணியிலும் சசிகலாவின் குடும்ப உறவுகளே இருந்தார்கள். பன்னீர்செல்வத்திடம் இருந்த முதல்வர் பதவியின் மீது சசிகலாவின் பார்வையை திரும்ப செய்தவர்களும் அதே குடும்பத்தினர் தான்.

முதல்வராக சசிகலா பதவியேற்கும் விழாவை  தங்கள் குடும்ப விழாவாக கொண்டாட சசிகலா உறவுகள் திட்டமிட்ட போதுதான் திருப்பங்கள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. பன்னீர் போர்க்கொடி, உச்சநீதிமன்ற தீர்ப்பு என  சசிகலாவை நோக்கி ஒவ்வொரு அம்பாக ஏவப்பட்டது. அப்போது தான் மத்திய அரசு தங்களுக்கு எதிராக திரும்பிவிட்டதை உணரத் துவங்கியது சசிகலா குடும்பம். பி.ஜே.பி அரசை சரி செய்ய சசிகலா தரப்பில் இருந்து பலகட்ட முயற்சிகளுக்கும் இன்றுவரை பலனில்லை. 

Dina_2_400_03582.jpg

சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் நீக்க வேண்டும் என்கிற முடிவை மத்திய அரசு எடுத்ததுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வல்லமை சசிகலா தரப்பில் இல்லாமல் போய்விட்டது. சிறைக்கு போகும் வேலையில் அவசர அவசரமாக தினகரனை துணைப் பொதுச்செயலாளர் பதவியில் அமர வைத்துவிட்டு கொத்துசாவியை தினகரன் கையில் கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. அது வரை தினகரனை கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசு, அவர் மீது கண்வைத்தது. பத்தொன்பது ஆண்டுகள் நிலுவையில் இருந்த பெரா  வழக்கை துாசிதட்டி எடுத்தது. 

அதே நேரம் தினகரன் கட்சிக்குள் குடும்ப உறவுகள் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்று கடுமையாக இருக்க குடும்ப உறவிலும் சிக்கல் எழுந்தது. தினகரனின் மாமா திவாகரன் பெங்களுர் சிறையில் இருந்த சசிகலாவிடம், “ஆர்.கே நகர் தேர்தல் முடிந்தவுடன் எனக்கு பதவிவேண்டும்” என்று கோரிக்கைவைத்தார். அதற்குக் காரணம் தினகரன் கட்சியில் செலுத்திய ஆளுமை தான். தங்கள் குடும்ப சொத்தாக அ.தி.மு.கவை கருதிய குடும்ப உறவுகளுக்கு தினகரனின் தனி ஆவர்த்தனம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினகரனை காலி செய்ய வேண்டும் என்ற சத்தம் அவர்கள் உறவுகளின் வாயில் இருந்தே கேட்க துவங்கியது.

மத்திய அரசோ தினகரனை கட்சியில் இருந்து கழற்றுவதற்கு முன் அவரை சுற்றி அரணாக நிற்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. தினகரன் பக்கத்தில் இருந்தால் இது தான் நிலை என்ற அச்சத்தை தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் மத்திய அரசு ஏற்படுத்தியது. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டு அமைச்சர்களுக்கு தரப்பட்ட எச்சரிக்கை சிக்னலாகவே பார்க்கபட்டது. அதன் பிறகு தான் அமைச்சர்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதை அறிந்து கொண்ட பி.ஜே.பி தரப்பு, தமிழகத்தின் சில முக்கிய புள்ளிகள் மூலம் அமைச்சர்களிடம் தனித்தனியாக மத்திய அரசின் எண்ணத்தை பதியவைத்துள்ளார்கள். ஆட்சியும் கட்சியும் காப்பாற்றவேண்டுமானால் ஓ.பி.எஸ் அணியுடன் இணைவதை தவிற வேறு வழியில்லை என்பதை தெரிவித்துள்ளார்கள். 

மறுபுறம் சசிகலா குடும்பத்தில் இருந்தே தினகரனுக்கு நெருக்கடிகளை கொடுக்க முடிவு செய்து, சில அமைச்சர்களை தினகரனுக்கு எதிராக பேசச் சொல்லியுள்ளார்கள். திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராகவே செயல்பட நெருக்கடியின் உச்சத்துக்கு சென்றார் தினகரன். ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று குடும்பத்தையும் மத்திய அரசையும் சரி செய்துவிடலாம் என்று கணக்கு போட்டு காய் நகர்த்திய தினகரனுக்கு தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு அடுத்த சோதனையாக அமைந்தது. தேர்தல் ரத்து செய்யபட்டாலே அ.தி.மு.கவில் மீண்டும் ஒரு குழப்பம் வந்துவிடும் என  மத்திய உளவுத்துறை சொன்ன தகவலும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

OPS_and_EPS_400_03503.jpg

மத்திய அரசு எதிர்பார்த்தது போலவே ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானதும் கொங்கு அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக வாய்திறக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்த நினைத்த மத்திய அரசு, தினகரனுக்கு அடுத்த நெருக்கடி கொடுக்க இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தார் என்ற வழக்கை டெல்லியில் பதிவு செய்ய அமைச்சர்கள் மனநிலை அப்போதே சசிகலா குடுமபத்துக்கு எதிராக மாறியுள்ளது. அதே நேரம் திவாகரன் தரப்பில் இருந்து சில அமைச்சர்களிடம் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்குங்கள், ஓ.பி.எஸ் அணியுடன் நீங்கள் இணைந்து செயல்படுங்கள் என்று சொன்னதாக ஒரு தகவல் உள்ளது.

குடும்ப  உறவுகள் ஓருபுறம், மத்திய அரசு ஒருபுறம் என தினகரனுக்கு கொடுக்கபட்ட நெருக்கடியால் தனது பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் தான் தினகரன் இருந்துள்ளார். ஆனால் எங்கிருந்தோ வந்த ஒரு தகவலால் தான் நேற்று காலை வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் சில அமைச்சர்களை வீட்டிக்கு வர வைத்துள்ளார். அவர்ளிடம் என்னை ஒதுக்கினால் ஆட்சி கவிழ்ந்துவிடும். மத்திய அரசு இந்த அரசை செயல்படவிடாது என்று சொல்லியுள்ளார். அதற்குள் ஓ.பி.எஸ், “சசிகலா குடும்பம் இருந்தால் கட்சி ஒன்றிணைய வாய்ப்பில்லை” என்று சொன்னதும், அமைச்சர்கள் தரப்பினர் இதைப் பார்த்து காத்திருந்தது போல “தினகரன், சசிகலா குடும்பத்தின் தலையீடு இனி இருக்காது” என்று பேட்டி கொடுத்துள்ளார்கள். இப்படி பேட்டி கொடுப்பார்கள் என்று தினகரனும் எதிர்பார்த்திருந்தாராம். இந்த சிக்கலில் தனது குடும்ப உறவுகள் சிலருக்கு போன் போட்டு என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார். ஆனால் அங்கிருந்து இவருக்கு சரியாக ரெஸ்பான்ஸ் வரவில்லையாம். “இத்தனை நாள் நீதானே எல்லாம்னு சொன்ன, இந்த பிரச்னையும் நீயே பார்த்துக்கோ” என்ற ரீதியில் கடுப்பாக பேசியுள்ளார் குடும்ப உறவினர் ஒருவர். 

தலைக்கு மேல் தண்ணீர் போய்விட்டதை தினகரனும் உணர்ந்துள்ளார். "எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு பெரிதாக இருக்காது, மத்திய அரசுக்கு  பயந்து தான் அவர்கள்  செயல்படுவார்கள், இனி  விசுவாசத்துக்கு வேலையில்லை” என்று தனது நண்பரிடம் போனில் சொல்லியுள்ளார். ஆனாலும் “கட்சியை விட்டு விலகாமல் கடைசி வரை போராட வேண்டும் என்ற முடிவில் தினகரன் இருக்கிறார். இரண்டு அணியும் ஒன்றிணைந்தாலே அங்கு கிளம்ப போகும் பிரச்னைக்குப் பிறகு நாம் அடுத்த கட்டமாக விஸ்வரூபம் எடுப்போம், மாவட்டச் செயலாளர்களை சரி செய்தாலே  இப்போது போதும் என்ற முடிவில் தினகரன் உள்ளார்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தினகரனுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய தகவல் வந்ததும் மன்னார்குடியில் இருந்து திவாகரன் புறப்பட்டு சென்னை வந்துவிட்டாராம். இன்று கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் அறிவிப்பே தன் பின்னால் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்து கொள்ளதானாம். ஆனால் இந்த கூட்டத்தையும் நடத்தவிடாத வேலைகளில் அமைச்சர்கள் தரப்பினர் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

“கண் அசைவிக்கு கட்டுபட்டவர்கள் எல்லாம், கல்லெறிய ஆரம்பித்துவிட்டார்கள் ”என்ற கவலை தினகரனை இப்போது வாட்டிவருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/86875-as-tension-within-admk-increases-ttv-dinakaran-struggling-to-hold-his-power.html

Categories: Tamilnadu-news

சென்னையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்: தினகரனை இன்று விசாரிக்கின்றனர்

Wed, 19/04/2017 - 05:09
சென்னையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்: தினகரனை இன்று விசாரிக்கின்றனர்
 
 

டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் சென்னை வந்தடைந்தனர். டி.டி.வி தினகரனிடம் இன்று அவர்கள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

ttv.dinakaran

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர்  என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது. இது தொடர்பான எப்ஐஆர் நகலையும் நேற்று வெளியிட்டது போலீஸ்.

இதுகுறித்து தினகரனிடம் விசாரணை நடத்த, ஏ.சி.பி. சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நேற்று சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர்கள் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக, டி.டி.வி.தினகரனிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். 

Categories: Tamilnadu-news

அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?

Tue, 18/04/2017 - 20:58
அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன?
 
 
 

சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர்.

 

Tamil_News_large_175409020170419000632_318_219.jpg

அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக் குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை யோசிக்க வைத்தது. இனிமேலும் சசிகலா குடும்பத்தின் பின்னால் சென்றால், அரசியல் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதை உணரத் துவங்கினர்.அதன் பிறகே, சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் வெளியேற்றும் முடிவுக்கு வந்துள்ளனர்.
 

'நிபந்தனையை கைவிட மாட்டோம்!'


பெரியகுளத்தில், நேற்று பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: எம்.ஜி.ஆர்.,- - ஜெ., ஆகியோர், குடும்ப அரசியலை ஒருபோதும் ஏற்றதில்லை.

தன் அண்ணன் அரசியலுக்கு வருவதை கூட, எம்.ஜி.ஆர்., விரும்பவில்லை. 2011ல் சசிகலாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 16 பேரும், கட்சியி லிருந்து நீக்கப்பட்டனர். நான்கு மாதத்திற்கு பின், சசிகலா, மன்னிப்பு கடிதம் கொடுத்து, கட்சியில் சேர்ந்தார். ஜெ., இறக்கும் வரை, நீக்கப்பட்ட சசிகுடும்பத்தினரை, கட்சியில் உறுப்பினராக்க வில்லை.
கட்சி பொதுச்செயலரை, தொண்டர்கள், நிர்வாகிகள் தான் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மாறாக, நியமன முறையில், சசிகலா, பொதுச்செயலரானது செல்லாது. அவரால் நியமிக்கபட்ட துணைப் பொதுச்செயலர், தினகரன் நியமனமும் செல்லாது. சசிகலா குடும்பம் இல்லாமல், எம்.ஜி.ஆர்., - ஜெ., கொள்கைக்கு உடன்பட்டு பேச்சு நடத்தினால், இணைவதற்கு தயாராக உள்ளோம்.

கட்சியில் இணைந்தாலும், நாங்கள் முன்பே தெரிவித்தது போல, ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு அளித்த சிகிச்சை முறைகள், மரணத்தில் பொதிந்துள்ள உண்மைகளை, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், வெளிக்கொண்டு வர வேண்டும்.
தேர்தல் கமிஷனில், குறுக்கு வழியில் சின்னத்தை பெற, புரோக்கர் மூலம் தினகரன் பணம் கொடுத்துள்ளதை, மத்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 

3 மாதங்களுக்கு முன்ஒலித்த முதல் குரல்!


சசிகலா குடும்பத்திற்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எதிர்ப்பு குரல் எழுப்பிய, 90வது நாளில், அவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்படுவதாக, அமைச்சர்கள்
அறிவித்துள்ளனர்.

 

ஜெ., மறைவுக்கு பின், ஜன., 18ம் தேதி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 'சசிகலா குடும்பத்திடம் இருந்து, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும். ஜெ., மறைவில் உள்ள சந்தேகம் தீர, நீதி விசாரணை நடத்த வேண்டும்' என, முதலில் குரல் கொடுத்தார்.
அவர் எதிர்ப்பு குரல் கொடுத்து, நேற்றுடன், 90 நாட்கள் நிறைவு பெற்றது. நேற்றைய தினம், சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து விலக்குவதாக, அமைச்சர்கள் அறிவித்தனர்.
 

விரைவில் பொதுக்குழு!


அறிவித்தபடி, சசிகலா, தினகரனை, கட்சியில் இருந்து நீக்கவும், புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யவும், அ.தி.மு.க., பொதுக்குழு, விரைவில் கூட்டப்படுகிறது. முதல்வர் பழனிசாமி வீட்டில், நேற்றிரவு நடந்த ஆலோசனையில், இந்த முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.
இரு அணிகள் இணைப்புக்கு பின், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754090

Categories: Tamilnadu-news

தினகரன் மீது எப்.ஐ.ஆர்., - 10 அம்சங்கள்

Tue, 18/04/2017 - 20:56
தினகரன் மீது எப்.ஐ.ஆர்., - 10 அம்சங்கள்
 
 
 

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்று தினகரன் சிக்கியது எப்படி என்பது குறித்து, டில்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆரில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

 

Tamil_News_large_1753974_318_219.jpg

இது தொடர்பாக டில்லி குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ெஷகாவாத் பதிவு செய்துள்ள எப்.ஐஆர்., ரில் கூறப்பட்டுள்ள முக்கிய, 10 அம்சங்கள் வருமாறு:
1.புதுடில்லி, சாணக்கியாபுரியில் உள்ள என் அலுவலகத்தில் 15.4.17 அன்று இரவு, 11:30 மணிக்கு நான் இருந்த போது, ரகசிய தகவல் வந்தது. பெங்களுரை சேர்ந்த சுகேஷ் என்ற சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் அவரது கூட்டாளியும், டில்லியில் உள்ள ஹயாத் ரிஜென்சி என்ற ஓட்டலில் 263 என்ற எண் கொண்ட அறையில் தங்கி இருக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் சசிகலா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருபவர் அவர். அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னை குறித்து இருவரும் தொடர்ந்து பேசி வருகின்றனர் என தகவல் கிடைத்தது.
2. இரட்லை இலை சின்னம் தொடர்பான

விசாரணை, 17.4.17 அன்று நடக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தில் தனக்கு ஆட்கள் உள்ளனர். சசிகலா அணிக்கு ஆதரவாக உத்தரவு பெற்று தர தன்னால் முடியும் என சுகேஷ் கூறியுள்ளார். இதற்கு, அவருக்கு 50 கோடி ரூபாய் தர பேரம் பேசப்பட்டுள்ளது. சுகேஷ் ஏற்கனவே, பல மோசடி வழக்குகளில் தொடர்பு உடையவர்.
3.சுகேஷ், மெர்சிடெஸ் பென்ஸ் சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். அந்த காரின்முன் பக்க மற்றும் பின் பக்க பதிவு எண் பலகையில், பார்மென்ட் உறுப்பினர் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். அவர் தங்கி உள்ள ஓட்டல் அறையில் சோதனை மேற்கொண்டால்,ஏராளமான அளவில் பணம் கிடைக்கும் என ரகசிய தகவல் கிடைத்தது.
4. இந்த ரகசிய தகவல் குறித்து, துணை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த தகவலின் நம்பகதன்மையை உறுதி செய்த பின், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பிறகு, நான் உள்ளிட்ட போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்றோம்.
5. அந்த வழியாக சென்ற சிலரை அழைத்து, விஷயத்தை கூறி, சோதனை நடக்கும் போது சாட்சியாக இருக்கும்படி அழைத்தோம். ஆனால், அவர்கள் தங்களின் அடையாளத்தை கூறாமல் அங்கு இருந்து சென்று விட்டனர்.
6. அதன் பின்னர் நானும், போலீசாரும் ஓட்டல் வரவேற்பு பகுதிக்கு சென்று சுகேஷ் தங்கி இருப்பது, 263வது அறையில் என்பதை உறுதி செய்து கொண்டோம். ஓட்டல் ஊழியர்களை அழைத்து கொண்டு அந்த அறைக்குசென்றோம். அந்த அறையில் இருந்த ஒருவர் கதவை திறந்து எங்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் தான் சுகேஷ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை மடக்கி விசாரிக்க தொடங்கினோம்.
7.தன்னிடம் பணம் ஏதும் இல்லை; சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என அவர் மறுத்து பேசினார். பின்னர் அந்த அறையில் சோதனை

 

மேற்கொண்ட போது ஒரு பையில், கத்தை கத்தையாக புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு 1.30 கோடி ரூபாய். அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து சுகேஷ் சரியாக பதில் அளிக்கவில்லை.
8. எனவே, இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைப்பற்றபட்ட பணம் மற்றும் சுகேஷ் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வந்து விசாரித்த போதும், பணம் குறித்து சுகேஷ் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.
9. அவரிடம் இருந்த கார், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரும், தினகரனும் சேர்ந்து, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையை சட்டவிரோதமாக தீர்க்க, சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
10. சுகேஷ் மீது, சென்னை பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் பல மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவாகி உள்ளன.
இவ்வாறு டில்லி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1753974

Categories: Tamilnadu-news

சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி!

Tue, 18/04/2017 - 19:59
சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி!
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர்.

Jayakumar

குறிப்பாக, இன்றும் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்,  "தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. தினகரன் குடும்பத்துக்கு இனி கட்சியில் இடம் கிடையாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத்  தயார். தினகரன் குடும்பத்தின் தலையீடு, கட்சியிலும் ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது. ஒற்றுமையாகக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும்.  கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும். ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்டு, சிறப்பான ஆட்சியைத் தொடர்வோம். முதலமைச்சர் உள்பட, அனைத்து அமைச்சர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பர்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது" என்றார்.

"தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளது . பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார்" என்று அமைச்சர் சி.வி சண்முகம் கூறினார்.

"அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார் கூறினார். அனைவரும் சேர்ந்து இரட்டை இலையை பெறுவோம்" என்று நடராஜன் கூறினார்.

'ஜெயலலிதா விருப்பத்தின்படி ஆட்சியை கொண்டு செல்வோம்' என்று வைத்திலிங்கம் கூறினார்.

'கட்சியில் பிரிவு இருக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்" என்று அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/86861-we-will-remove-sasikala-and-family-says-minister-jayakumar.html

Categories: Tamilnadu-news

ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்!

Tue, 18/04/2017 - 19:58
ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்!
 
 

TTV_3_23560.jpg

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு என்று தொடர் சம்பவங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்று தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூறினர்.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறு வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
 

http://www.vikatan.com/news/tamilnadu/86867-ttv-dinakaran-is-in-discussion-with-his-support-mlas.html

Categories: Tamilnadu-news

சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்.. அதிமுக (அம்மா) திடீர் அறிவிப்பு!

Tue, 18/04/2017 - 17:24

minister jayakumar press meeet

கட்சி, ஆட்சியை விட்டு... சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறோம்.. அதிமுக (அம்மா) திடீர் அறிவிப்பு!

அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு இதனை அவர் அறிவித்தார்.

ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டு மொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென்றால் டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார். இது சட்டமன்ற , நாடாளுமன்ற, அதிமுக நிர்வாகிகளின் ஒட்டு மொத்த விருப்பம் என்றார்.

டிடிவி தினகரனின் குடும்பத்தினர் எந்த ஒரு தலையீடும் இல்லாமல் இருக்கும். இந்த முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் இன்று அறிவிக்கிறோம். அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் இணைந்து முடிவு எடுத்துள்ளோம் என்று ஜெயக்குமார் கூறினார்.

கட்சி வழிநடத்துவதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த அவர், ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

Categories: Tamilnadu-news

சசிகலா எதிர்ப்பு: அம்மா சமாதி முதல் பெரியகுளம் வரை பேச்சு மாறாத பன்னீர்செல்வம்!

Tue, 18/04/2017 - 12:42
சசிகலா எதிர்ப்பு: அம்மா சமாதி முதல் பெரியகுளம் வரை பேச்சு மாறாத பன்னீர்செல்வம்!

 

 
O_Panneerselvam

சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேசியதும், தமிழக மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் கட்சியில் இணையப் போவதாகவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அம்மா அதிமுக அணி சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் பரபரத்தன.

சசிகலாவின் குடும்ப ஆட்சி முறையே எதிர்த்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையின் கீழ் எப்படி இணைவார் என்றும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மங்கள் அனைத்தும் இப்போது நீங்கி விட்டனவா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இன்று பன்னீர்செல்வம் கூறியதாவது, இணைவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று தான் கூறியது வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. கட்சியில் இணைய நான் புதிதாக எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன் என்பதைத்தான் அவ்வாறு கூறினேன். ஆனால், கட்சியில் இருந்து எந்த கொள்கைகளுக்காக வெளியேறினேனோ, அந்த கொள்கைகளை சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் பன்னீர்செல்வம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்  அப்பொழுது அவர் கூறியதாவது:

எங்களுடைய அணியின் நிலையை நான் முன்பே ஜெயலலிதா சமாதியிலும், தொலைக்காட்சி நேர்காணல்களிலும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். முன்னாள் முதல்வரான எம்ஜிஆரால் அதிமுக ஒரு மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்டது. அது ஒரு தனி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்சென்று விடக் கூடாது என்பதில் அவரும், பின்னர் ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தனர். இதுதான் எங்களது உறுதியான நிலைப்பாடும் ஆகும்.

ஜெயலலிதாவின் வழியிலேயே கட்சியும் ஆட்சியும் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் அதிமுக சட்ட விதிகளுக்கு மாறாக கட்சி பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரது நியமனங்களும், கட்சி  நீக்க அறிவிப்புகளும் செல்லாது.

எனவே சசிகலா இருக்கும் வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நிபந்தனைகள் அற்ற பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அதே போல இரு அணிகளும் இணைந்தாலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கண்டிப்பாக நீதி விசாரணை நடைபெறும். அவரது மரணத்தை சூழ்ந்துள்ள மர்மம் நீங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.

இதன் மூலம், பதவி ஆசைக்காக கொள்கைகளை விட்டுவிட்டாரா பன்னீர்செல்வம் என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அமைச்சர்கள், டிடிவி தினகரனுக்குத் தெரியாமல்தான் ஓபிஎஸ் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அம்மா அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

மேலும், 4 அமைச்சர்கள் சேர்ந்து முடிவு செய்துவிட்டால் போதுமா என்றும், சசிகலா குடும்பத்தினர் வெளியேற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது குறித்து கருத்துக் கூறிய வெற்றிவேல், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது என்றும் தெரிவித்தார்.

இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா அணிக்குத் தர தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரன் மீது தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டிடிவி தினகரன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், டிடிவி தினகரன் இல்லாத சமயத்தில் திங்கட்கிழமை இரவு தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியிருப்பதும், மற்றொரு பக்கம் தினகரன் அணியுடன் ஓபிஎஸ் அணி இணைவதற்கு பச்சைக் கொடி காட்டியதற்கும் மிகப்பெரிய காய்நகர்த்தல்கள் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-இல் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து மெளனமாக இருந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிப்ரவரி 8ம் தேதி தனது மெளனத்தை கலைத்தார்.

 

Panneerselvam.jpg

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்தார்.

ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம் பேசியதன் முழு விவரம்...

பின்னர் அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:

என் மனசாட்சி உந்தப்பட்டதால் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மெளன அஞ்சலி செலுத்த வந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா என்னை உந்துதல்படுத்தியது. அதன் விளைவாகத்தான் நான் இங்கு வந்து நிற்கிறேன்.

சுமார் 70 தினங்கள் ஜெயலலிதா உடல்நிலை நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன். பின்னர் கழகத்தின் பொதுச் செயலாளராக மதுசூதனனை அமர்த்தவேண்டும் என்று சொன்னார். அதே சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச் சொன்னார். நான் அதை முதலில் ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமர வைத்தால், கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால் நான் மீண்டும் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

அதன்பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து, திவாகர் உங்களிடம் கேட்கச் சொன்னார். "கழகத்தின் பொதுச் செயலாளராக அக்காவை (சசிகலா) ஆக்கவேண்டும், இல்லையென்றால் அவரை நான் ஊருக்கு அழைத்துச் செல்லவேண்டியதுதான்' என்று சொன்னார்.

அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து கேட்டேன். அவர்களும் அந்தக் கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலாவை, பொதுச் செயலாளராக்க சம்மதித்தோம்.

இதற்கிடையே வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து முடித்தேன். அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றே அனைத்தும் செய்தேன். இதற்குப் பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டம், மெரீனாவில் நடந்தது. சட்டம் ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று கருதி பிரதமரைச் சந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தினேன்.
 
ஆனால் பிரதமர் மோடி, மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருமாறு யோசனை கூறினார். அதன்படி சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எனது நடவடிக்கையை சரியாக மேற்கொண்டேன்.
 
அந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே, வேறு ஒருவரை முதல்வராக ஆக்கவேண்டும் என்று சொன்னால், அது தேவையில்லாமல் ஒரு பிரச்னையை உருவாக்குமே என்று கேட்டபோது, அவரைக் கண்டித்துவிட்டோம். இனி யாரும் அப்படிப் பேசமாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் அதன் பிறகு செல்லூர் ராஜு, செங்கோட்டையன் போன்றவர்களும் அதே கருத்தைச் சொன்னார்கள். அதன்பிறகு என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன். நாட்டு மக்களும் தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும் வருத்தத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் இதுபோன்ற கருத்துகளால் பொது மக்கள் கட்சி மீது அதிருப்தியிலும், கட்சியினர் வருத்தத்திலும் இருப்பதாக கூறினேன்.

மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்களிடம் நாம் கட்டுப்பாட்டுடன், கவனமுடன், பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் கடுகளவும் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பொறுமையுடன், எதையும் விளம்பரப்படுத்தாமல் இருந்தேன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

என்னையும் போயஸ் தோட்டத்துக்கு வரும்படி அழைத்தார்கள். நானும் சென்றேன். மூத்த அமைச்சர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள், பொதுச் செயலாளரின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர்.

பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். இதற்கு என்ன அவசரம் என்று கேட்டேன். பொதுச் செயலாளர், முதல்வர் இரண்டு பதவிகளையும் சசிகலாவுக்கே தர வேண்டும். அதற்கு நான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்கள்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இப்போது ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறுகிறீர்களே என்றேன். இது நியாயம் தானா என்று கிட்டத்தட்ட 2 மணி நேரம் விவாதம் செய்தேன்.

என்னை கீழ்நிலைப்படுத்துவதற்காக செய்யப்பட்ட செயல்களை வருத்துத்துடன் எடுத்துக் கூறினேன். யாரும் எதுவும் சொல்லவில்லை. அந்த நிலையிலும் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்றுங்கள். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாக ஆகும். எனது தாயிடம் சொல்லி விட்டு வருகிறேன் என்று கூறி திரும்பிவிட்டேன். என்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தில் கையெழுத்திடும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன்.

யார் முதல்வராக வர வேண்டும்? அம்மாவின் ஆன்மா நாட்டு மக்களுக்கும், கோடானு கோடான தொண்டர்களுக்கும் இதனை தெரியப்படுத்தச் சொன்னதால் இங்கு வந்தேன். கட்சிப் பொறுப்புக்கு அடிமட்ட செயல்வீரர்கள் எண்ணுகிற ஒருவர்தான் பொதுச் செயலாளராக வர வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் எண்ணுகிற ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும்.

தமிழகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஓ.பி.எஸ். இல்லை. யாரோ ஒருவர் இன்றைக்கு கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிற நல்ல பெயரை காப்பாற்றும் ஒருவர் வர வேண்டும். இந்த எண்ணத்தில்தான் இப்போது இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். கடைசியாக உறுதியாக இருப்பேன். தன்னந்தனியாக இருந்து போராடுவேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

மேலும், நான் முதல்வர் பதவியில் இருந்தபோதே அவமானப்படுத்தப்பட்டேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வர வேண்டுமென, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை வலியுறுத்துகிறார். மூத்த உறுப்பினர் செங்கோட்டையனும் அதே கருத்தை வலியுறுத்துகிறார்.

இதையடுத்து, நான் சில அமைச்சர்கள் சில எம்.எல்.ஏ.க்களை அழைத்து அதிமுகவின் ஒற்றுமையை கருதி, ஆட்சியை நிலைமை கருதி கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது என்று வேண்டாம் என்று சொன்னேன்.

முதல்வராக அமர வைத்து, ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள் என்றே கேட்டேன். தனிப்பட்ட முறையில் என்னை இகழ்ச்சியாக அவமானப்படுத்திப் பேசினால், பொறுத்துக் கொள்வேன். பொது வாழ்க்கைக்கு வந்தால் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தாங்கிக் கொண்டிருந்தேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த நிலையில், தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பன்னீர்செல்வம், முதல்வராக பணியாற்றிய போது தமிழக மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, தானே நேரடியாக புது தில்லி சென்று, அவசரச் சட்டம் இயற்றி, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்தவர்.

vardha.jpg

தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலின் போதும், தீவிர நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரண உதவி கிடைத்ததால், சிறந்த நிர்வாகியாகவும் பேசப்பட்டார்.

ஆந்திராவுக்கு நேரடியாகச் சென்று கிருஷ்ணா நதி நீர் விவகாரம் குறித்து அம்மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாநில பிரச்னைகளில் நேரடியாகவே தலையிட்டு பணிகளைச் செய்த பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், திடீரென சசிகலா அணியில் இணைவதாகக் கூறியதும், அவர் மீதான நன் மதிப்புகள் மளமளவென சரியத் தொடங்கியது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற பழமொழி இருந்தாலும், ஒரு முழு அரசும் தனக்கு எதிராக இருக்கும் போது, ஐந்தாண்டு பதவி, ஆட்சி என எதையும் சிந்திக்காமல், சசிகலாவுக்கு எதிராகக் கொடி பிடித்த முதல் நபர் பன்னீர்செல்வம்தான்.

அதன்பிறகு அவரது அணியில் முக்கிய நபர்கள் இணைந்தனர். மிகப்பெரிய அரசியல் போராட்டத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் பன்னீர்செல்வம் தோல்வியடைந்தாலும், மக்கள் மனதில் ஒரு சிம்மாசனம் போட்டுவிட்டார்.

தற்போதும், தமிழக அரசில் பதவி கிடைக்கும் என்றாலும்  தனது கொள்கைகளில் இருந்து சற்றும் பின்வாங்காமல்  பன்னீர்செல்வம் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஏன் வாய் திறக்கவில்லை, முதல்வராக பதவியில் இருந்த போது ஏன் வாய் திறக்கவில்லை, பதவி போனதால்தானே வாய் திறந்தார் என்று கேட்கும் நபர்களுக்கு எல்லாம், தனது செயல்கள் மூலமாகவே பதில் கொடுத்துள்ளார் பன்னீர்செல்வம்.

இந்த நிலையில், அடுத்து என்ன செய்வது என்ற முடிவை எடுக்கும் நல்வாய்ப்பு தமிழக அமைச்சர்களின் பக்கம் திரும்பியுள்ளது. 

http://www.dinamani.com/

Categories: Tamilnadu-news

‘பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’

Tue, 18/04/2017 - 11:05
‘பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - தினகரனை ஓரம்கட்டிய ‘கொங்கு லாபி’
 
 

 

 

 

அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தைக் காக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் ஒன்றிணைய முடிவெடுத்துள்ளனர். 'சசிகலா குடும்பத்தைத் தவிர்த்த அ.தி.மு.கவைத்தான் தொண்டர்கள் விரும்புகின்றனர். நேற்று அமைச்சர்கள் நடத்திய கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கும் முடிவில் முதல்வர் இருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நேற்று தலைமைச் செயலகத்துக்கு இரண்டு முறை வருகை தந்தபோதே, அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கிவிட்டதை அ.தி.மு.க தொண்டர்கள் உணர்ந்து கொண்டனர். 'தொகுதிப் பிரச்னை தொடர்பாகத்தான் முதல்வரை சந்தித்தேன்' என நழுவியவர், 'அணிகள் இணைவது குறித்த பன்னீர்செல்வத்தின் கருத்தை நான் ஆதரிக்கிறேன்' என நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்குத் தொடக்கப் புள்ளி கொடுத்துவிட்டுச் சென்றார். இதையடுத்து, முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் சண்முகம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இதன்பின்பு விமான நிலையத்தில் பேசிய தம்பிதுரை, 'ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் வருந்திய நிலையிலும், மக்களை சந்தித்து இந்த ஆட்சியை மலர வைத்தார். அதைத் தக்கவைப்பது மிகவும் முக்கியம்' என்றார். பன்னீர்செல்வமும், 'யார் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்' என்றார்.

இதன்பின்னர் நேற்று விடிய விடிய கொங்கு மண்டல அமைச்சர்கள் தீவிர ஆலோசனையில் இறங்கினர். "இரு அணிகளுக்குள்ளும் இந்த மாற்றம் தென்படுவதற்கு முக்கியக் காரணமே எடப்பாடி பழனிசாமிதான். மௌனமாக இருந்து கொண்டே இரு அணிகள் இணைப்பு குறித்து மூத்த அமைச்சர்களிடம் விவாதித்து வந்தார். 'தேர்தல் ஆணையத்துக்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனியும் நாம் அமைதியாக இருந்தால் சின்னம் மட்டுமல்ல, கட்சியே காணாமல் போய்விடும்' எனக் கவலை தெரிவித்தார். இதுகுறித்து, தினகரனிடம் வலியுறுத்தியபோது, 'பன்னீர்செல்வம், பாண்டியராஜன் தவிர யார் வந்தாலும் வரவேற்போம்' என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். இதனால் எரிச்சலான எடப்பாடி பழனிசாமி தரப்பினர், 'தொடர்ச்சியான வழக்குகளால் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இனியும் நாம் பிடிவாதம் பிடிப்பது நல்லதல்ல' என எடுத்துச் சொல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்ட பிறகு பேசிய தினகரன், 'கட்சியின் நன்மைக்காக யார் வந்தாலும் வரவேற்போம்' என்றார். ஆனாலும், சசிகலா-தினகரன் தலையீடு இல்லாத அ.தி.மு.கவைத்தான் பா.ஜ.க மேலிடம் விரும்புகிறது. அதை நோக்கியே கொங்கு மண்டல அமைச்சர்கள் பயணிக்கின்றனர்" என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், 

தினகரன்

"அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் சில நிபந்தனைகளை தினகரன் விதித்தார். இதை மூத்த அமைச்சர்கள் பலரும் விரும்பவில்லை. ஒருகட்டத்தில், 'முதலில் இணைப்பை வலியுறுத்துவோம். பிறகு தினகரனை ஒதுக்கி வைப்போம்' என்பதுதான் கொங்கு லாபியின் முக்கிய நோக்கம். கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடியை தம்பிதுரை சந்தித்துப் பேசியபோது, 'இனியும் அந்தக் குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள். அவர்கள் தொடர்புடைய யாரையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம். அவர்களோடு இணக்கம் காட்டுகிறவர்களுக்கும் சேர்ந்தே சிக்கல் வரும்' எனக் கோடிட்டுக் காட்டினார். தினகரனுக்காக சமசரம் பேசப் போன தம்பிதுரைக்கு டெல்லியின் நோக்கம் தெளிவானதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசியிருக்கிறார். இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்து, கொங்கு மண்டல அமைச்சர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் தினகரன். இதுபற்றி பா.ஜ.க மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர். இதையடுத்தே, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் சிக்கினார் தினகரன்.

‘இணைப்பு முயற்சிக்கு இடையூறு வரலாம் என்பதை அறிந்து, தினகரனின் ஒவ்வொரு காய் நகர்த்தல்களையும் டெல்லியின் கவனத்துக்குக் கொண்டு சென்றது பன்னீர்செல்வம் தரப்பு. இதற்குப் பதில் கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகள், 'டெல்லி போலீஸ் வர இருக்கிறது. தினகரனை கைது செய்யப்பட இருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கோடு சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது போல, இந்த வழக்கின் மூலம் தினகரனின் பதவி ஆசையும் முடிவுக்கு வந்துவிடும். கட்சிப் பொறுப்புக்கு பன்னீர்செல்வத்தையும் ஆட்சிப் பொறுப்பை எடப்பாடியும் கவனித்துக் கொள்ளட்டும். ஒன்றுபட்ட அ.தி.மு.கவை உருவாக்குவதன் மூலம் கட்சியின் எதிர்காலமும் காப்பாற்றப்படும்' என டெல்லித் தலைமை சமசரம் பேசியது. இதனை பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டனர். நேற்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்திலும், தினகரனை ஓரம்கட்டியே வைத்திருந்தனர். அவருக்கு நெருக்கமான கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட சிலர் மட்டும் தனிக் கூட்டம் போட்டனர். தினகரனுக்கு நெருக்கமான விஜயபாஸ்கரும் கொங்கு மண்டல அமைச்சர்கள் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றதுதான் ஆச்சரியம். தினகரனை ஒதுக்கும் வேலைகள் தீவிரமடையத் தொடங்கிவிட்டன" என்றார் விரிவாக. 

" நிபந்தனையற்ற பேச்சு என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. சசிகலா குடும்பம் அ.தி.மு.கவில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம்" என இன்று மதியம் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இதனால் தினகரன் தரப்பு ஆதரவு அமைச்சர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 'இந்த ஒரு காரணத்தால் மீண்டும் பிளவு ஏற்பட்டுவிடுமோ?' என்ற அச்சமும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

ஐ.என்.எஸ் போர்க் கப்பலை சென்னைக்கு அர்ப்பணித்துவிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து நாட்டு மக்களையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தையும் முப்படைகள்தான் காக்கின்றன என்பதில் பெருமை அடைகிறேன்' என்றார். அதேநேரம், அ.தி.மு.கவைச் சூழ்ந்துள்ள போர் மேகங்களை விலக்கி வைக்கும் வித்தையையும் தினகரனுக்கு சுட்டிக் காட்டிவிட்டார். 

http://www.vikatan.com/news/tamilnadu/86779-how-dinakaran-was-sidelined-in-admk.html

Categories: Tamilnadu-news

சைலன்ஸ்!’ சசிகலா, டி.டி.வி.தினகரனின் ‘அமைதி’ பின்னணி!

Tue, 18/04/2017 - 11:04
சைலன்ஸ்!’ சசிகலா, டி.டி.வி.தினகரனின் ‘அமைதி’ பின்னணி!
 
 

டி.டி.வி.தினகரன்

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகள் இணைவதற்கான முயற்சிகள் நடந்துவருவதற்கு சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராகும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டார். இந்தச் சூழ்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சிறைக்குச் சென்றதால் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சசிகலாவுடன் ஏற்பட்ட அதிகார மோதலால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிட்டது. இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்த சமக தலைவர் சரத்குமார், துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது, சசிகலா அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து இன்னும் சில அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தவுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில்சசிகலா ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். வருமான வரித்துறை சோதனை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக சில அமைச்சர்கள் பேசினர். துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனைக்கூட சிலர் எதிர்த்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டத்தில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க ஓ.பன்னீர்செல்வம் அணியை நம்முடன் இணைப்பதே நிரந்தரத் தீர்வு என்று ஆறு அமைச்சர்கள் பேசியுள்ளனர். இதற்கு, டி.டி.வி.தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 17-ம் தேதி  குறுக்குவழியில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பிரபல புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம் டி.டி.வி.தினகரன் தரப்பு ஒருகோடியே 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். டி.டி.வி.தினகரன் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். இதன்பிறகு டி.டி.வி.தினகரன் தரப்பு அமைதியாகிவிட்டதாம்.

இதன்பிறகு ஆறு அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைப்பது தொடர்பாக தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சீனியர் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பன்னீர்செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சசிகலா அணியிலிருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், வேலுமணி, தங்கமணி மற்றும் எம்.பிக்கள் வைத்தியலிங்கம், வேணுகோபால் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரில் இருக்கிறார். அந்த அணி தரப்பிலும் சசிகலா அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படவுள்ளது. இந்த இரண்டு குழுக்களும் இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த மூத்த அமைச்சர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, டி.டி.வி.தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சப்போர்ட்டாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு மூத்த அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது. சசிகலா அணியில் உள்ள தீவிர விசுவாசிகள், சசிகலாவைச் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் பெங்களூருக்குச் சென்றுள்ளனர். சசிகலாவிடம் ஆலோசனை நடத்தியப்பிறகு தீவிர விசுவாசிகள் முடிவு எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் நடந்து வருவதை தீபா அணியினர் அதிர்ச்சியுடன் பார்த்துவருகின்றனர். அதேநேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைவில் இரட்டை இலைச் சின்னம் மீட்டெடுக்கப்படவுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள இரண்டு அணிகளைச் சேர்ந்த கட்சியினர் மீண்டும் அரசியல் பேசத் தொடங்கிவிட்டனர். 

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க இரண்டு அணிகள் ஒன்று சேர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் அணி தரப்பில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். அதற்கு சசிகலா அணியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பதவி வழங்க அந்த அணியினர் தெரிவித்தனர். அதற்கு நாங்களும் சம்மதம் தெரிவித்துள்ளோம். இதுபோல கட்சிப்பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இவையெல்லாம் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்களின் குறிக்கோளான சசிகலா, டி.டி.வி.தினகரன் என ஒருகுடும்பத்தின் பிடியில் கட்சி இருக்கக்கூடாது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்" என்றனர். 

 சசிகலா அணியினர் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். சசிகலா, டி.டி.வி.தினகரனிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவது குறித்து ஆலோசித்துள்ளோம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இதுதான் நல்லமுடிவு என்று சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பினரும் கருதுகின்றனர். விரைவில் அ.தி.மு.க.வின் இரண்டு அணிகள் இணைந்து இரட்டை இலைச் சின்னம் மீட்டெடுக்கப்படும். அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்படும்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/86789-why-is-sasikala-silent-in-dinakaran-issue.html

Categories: Tamilnadu-news

இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம்

Tue, 18/04/2017 - 08:22
இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம்

 

  • sengotaiyan_3155477g.jpg
     
  • PRESSMEETjpg_3155457g.jpg
     
 

அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'ஐஎன்எஸ் சென்னை' கடற்படை போர்க் கப்பலைப் பார்வையிடுவதற்காக கப்பலில் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (திங்கள்கிழமை) இரவு 26 அமைச்சர்கள் கூடி இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்த நிலையில் இன்று இவ்விவகாரத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:

12.30 pm: தயக்கங்களை மறந்து மீண்டும் ஒன்றிணைவோம்- வைகைச் செல்வன்

11.50 am: போர்க்கப்பலை கூவத்தூர் விடுதியாக அதிமுக அம்மா அணியினர் மாற்றிவிட்டனர்: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

11.45 am: ஓபிஎஸ் அணியை இணைப்பது குறித்தும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது என செங்கோட்டையன் தகவல்.

11.25 am: முதல்வருடனான ஆலோசனையை முடித்துக் கொண்டு டிடிவி.தினகரனை சந்தித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

11.15 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு. முன்னதாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோரும் சந்தித்தனர்.

11.10 am: மக்கள் வாக்களித்த இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்- டெல்லியில் தம்பிதுரை பேட்டி.

11.05 am: சசிகலா, தினகரன் வழக்குகளை கட்சிப் பிரச்சினையுடன் சேர்த்து பார்க்கக் கூடாது- தம்பிதுரை

11.05 am: கப்பலில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றுகூடியிருப்பதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை: டி.ஜெயக்குமார்.

11.00 am: "இரு அணிகள் இணைவது குறித்து சசிகலா தரப்பில் குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் யார் என எங்களுக்குத் தெரியவில்லை" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

10.55 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு.

10.50 am: அதிமுக அம்மா அணியினரும் புரட்சித் தலைவி அம்மா அணியினரும் இன்று மாலை சந்திக்க வாய்ப்பு.

முந்தைய நிகழ்வுகள்:

அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஓபிஎஸ், சசிகலா ஆகிய இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

வருமான வரி சோதனை முடிந்ததுமே, அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என டிடிவி தினகரனிடம் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்த தினகரன், "அவர் படித்தவர். இதுதொடர்பாக அவரே முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார்.

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மேலும், "இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச்சின்னம் எங்கள் அணிக்குதான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" எனவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். இதனைத் தொடர்ந்து திங்கள் இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றுமையாக செயல்பட்டு சின்னத்தை மீட்போம் எனக் கூறியிருந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/இரு-அணிகள்-இணைப்பு-விவகாரம்-தற்போதைய-நிலவரம்/article9645514.ece?homepage=true

Categories: Tamilnadu-news

ஐ.என்.எஸ் சென்னை கப்பலுக்கு அ.தி.மு.கவால் கிடைக்கவிருக்கும் ‘அடடே’ பெருமைகள்!

Tue, 18/04/2017 - 07:52
ஐ.என்.எஸ் சென்னை கப்பலுக்கு அ.தி.மு.கவால் கிடைக்கவிருக்கும் ‘அடடே’ பெருமைகள்!
 

ஐ.என்.எஸ் சென்னை ( INS Chennai) போர்க்கப்பலை சென்னைக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தப் போர்க்கப்பல் 7500 டன் எடை மற்றும் 164 டன் நீளம் கொண்டது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்ட போர்க் கப்பல் இது. கடலின் மேற்பரப்பு, கடலின் அடிப் பரப்பு, ஆகாயம் என மூன்று நிலைகளில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விட இன்னும் பல பெருமைகளை அ.தி.மு.க-வின் மூலம் அடையப்போகிறது ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல். இந்தப் போர்க்கப்பலைப் பார்வையிடுவதற்காகத்தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். போர்க்கப்பலில் அணிப் பேச்சுவார்த்தையா... இது பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது? என ஆதங்கப்படாமல் மேலே படியுங்கள். 

INS chennai - ஐ.என்.எஸ்

பொதுவாக, விருதுகள் வழங்கும்போது 'விருது பெறும் பிரபலத்தால் அந்த விருது பெருமை கொள்கிறது' எனச் சொல்வார்கள். அதேபோலத்தான் பல பெருமை வாய்ந்ததாகக் கருதப்படும் ஐ.என்.எஸ் போர்க்கப்பல் தற்போது ஒரு மாநிலக் கட்சியின் ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் சந்தித்துக் கொள்வதற்குப் பாலமாக இருக்கப் போகிறது. அதுமட்டுமல்லாது, ஒரே நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆட்சியிலிருக்கும் முக்கிய நிர்வாகிகளைச் சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறது ஐ.என்.எஸ் போர்க்கப்பல். 

தமிழக மீனவர்களுக்குப் பெரும் துயரமாக நீடித்துக் கொண்டிருப்பது கச்சத்தீவு விவகாரம். இன்று கப்பலில் நடக்கும் பேச்சுவார்த்தை முடிந்ததும் அ.தி.மு.க நிர்வாகிகள் அப்படியே கச்சத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்று அதையும் மீட்டு இந்தியாவோடு சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒன்று நடந்தால் அந்தப் பெருமையும் ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கே சென்று சேரும். 

அப்படியே அவர்கள் ஸ்ட்ரைட்டாக சிலோனுக்குப் போய், இலங்கை கடற்படையோடு பேச்சுவார்த்தை நடத்தினால், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்திய மொத்தப் பெருமையும் கப்பலுக்கே வந்து சேரும். 

கப்பலில் ஆலோசனை நடத்தி முடித்துத் திரும்பும் அமைச்சர்கள் 'தர்மம் மறுபடி வென்றது' எனச் சூளுரைப்பார்கள். 'தர்மத்தைக் காத்த கப்பலே' என ரத்தத்தின் ரத்தங்கள் பேனர் வைப்பார்கள்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு இரு அணிகளும் இணக்கமாகச் செயல்பட முடிவெடுத்தால் பல பஞ்சாயத்துகளுக்கும் தீர்வு ஏற்படும். ஜெயலலிதா மரணத்தில் இருந்துவந்த மர்மம் விலகி அது இயற்கையான மரணம் எனும் செய்தி பரவும். அப்போலோ மருத்துவமனையின் மீது ஏற்பட்டுள்ள களங்கம் தெளியும். மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்பதால் தொடங்கப்பட்ட பல கட்சிகள் சர்ச்சை தீர்ந்தபின்பு கட்சியைக் கலைக்கவும் வாய்ப்புள்ளது. 

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் சாதனைகளின் நினைவாக 'விக்ராந்த்' பைக் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டதைப் போல, இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்று அ.தி.மு.க காக்கப்பட்டால் அதன் நினைவாக இந்தக் கப்பலையே கொண்டுவந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படலாம். வெளியூரிலிருந்து வரும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அவரது சமாதியில் காதை வைத்து கடிகாரச் சத்தம் கேட்பதைப் போல அ.தி.மு.க தொண்டர்கள் கப்பலை குலதெய்வமாகக் கொண்டாடுவார்கள்.

துரோகிகள் என மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்ட இரு அணியினரும் ஆரத்தழுவிக் கட்டிக்கொண்டால், ஆரோக்கியமான அரசியல் என தமிழக மக்கள் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம். இந்தியாவிலேயே... ஏன் உலகிலேயே... ஆட்சியைக் காப்பாற்ற போர்க்கப்பலில் ஆலோசனை செய்த இனம் தமிழினம் என நாளைய வரலாறு பேசும். 

http://www.vikatan.com/news/miscellaneous/86782-a-satirical-article-on-the-admk-party-meet-happening-on-ins-chennai.html

Categories: Tamilnadu-news

பிரதமர் மோடி வேடமணிந்து சாட்டையடி! நூதனப்போராட்டத்தில் விவசாயிகள்

Tue, 18/04/2017 - 07:38
பிரதமர் மோடி வேடமணிந்து சாட்டையடி! நூதனப்போராட்டத்தில் விவசாயிகள்
 
 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சாட்டையடி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமணிந்த விவசாயி ஒருவர், பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்று செய்கை செய்து வருகிறார்.

TN farmers protest
 

டெல்லியில் 36-வது நாளாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்  காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

TN farmers protest
 

எலிக்கறி, பாம்புக்கறி உண்ணும் போராட்டம் தொடங்கி நிர்வாணப் போராட்டம் வரை நடத்திவிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

TN farmers
 

இந்நிலையில் 36-வது நாளான இன்று, தமிழக விவசாயிகளில் ஒருவர், பிரதமர் மோடி போன்று வேடமணிந்து, பிற விவசாயிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்துகிறார். தங்களை அடிக்க வேண்டாம் என்று விவசாயிகள், மோடி போன்று வேடமணிந்தவரிடம் மன்றாடுகின்றனர். இவ்வாறு நடித்து விவசாயிகள் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

http://www.vikatan.com/news/india/86783-tn-farmers-protest-in-delhi-enters-day-36.html

Categories: Tamilnadu-news

தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா?

Tue, 18/04/2017 - 07:12
தினகரனை கழற்றி விடுவது சாத்தியமா?

 

 

சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, 'தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்' என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் நிபந்தனை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கு ஏற்றவாறு, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் இன்று காலை அவரை சந்தித்து பேசி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை பல பரபரப்பான சம்பவங்கள் நடந்தேறின. மதுரை செல்வதற்கு முன் நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'இரு அணிகளும் இணைய நிபந்தனை ஏதும் இல்லை 'என்றார். ஆனால், அவரது அணியை சேர்ந்த மதுசூதனன், 'ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களிடம் கட்சி சென்று விட கூடாது' என, கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று இரவு, 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு அணிகளும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு அதிகம் என்றே கருதப்பட்டது.


தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவு:

எனினும், தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தனர். தினகரனுக்கு ஆதரவாக இருந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நடுநிலை வகிக்க துவங்கினர்.


இந்த சூழ்நிலை இன்று காலை மாற துவங்கியது. பெங்களூருவிற்கு சென்று இருந்த தினகரன் நள்ளிரவே சென்னை திரும்பி, இன்று காலை முதல் அடையாற்றில் உள்ள வீட்டில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த துவங்கினார். அவரை சந்திக்க அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்றனர்.

அவர்களுடன் தினகரன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு நடப்பதற்கு முன் நிருபர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், ' இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் சந்தோஷம் தான்' என்று மட்டும் பேசி, இரு அணிகளும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள டில்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் முகாமிட்டு உள்ள நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, தினகரன் தரப்பினர் எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.


ஒன்று சேர என்ன வேண்டும்?:

இப்போது உள்ள சூழ்நிலையில், இரு அணிகளும் சேர வேண்டும் என்றால், ஒன்று சசிகலா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது தேர்தல் ஆணையம் சசிகலா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். மூன்றாவதாக தினகரன் மேல் உள்ள, இரண்டு முக்கிய வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றால் ஒழிய, அனைவரும் விரும்பினாலும் இந்த இணைப்பு நடக்காது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


சென்னை ஐகோர்ட்டில், 'ஜூலை மாத இறுதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்' என்று எந்த நேரத்திலும் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இரட்டை இலை இல்லாமல், அ.தி.மு.க.,வினர் எந்த கால கட்டத்திலும் தேர்தலை சந்திக்க விரும்ப மாட்டார்கள். இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற இரு அணிகளின் இணைப்பு ஒன்றே சாத்தியம். இதை மனதில் வைத்து, தினகரனை மீறி அ.தி.மு.க.,வினர் முடிவு செய்வார்களா. அ.தி.மு.க.,வினர் எதிர்காலம் சில தினகரன் ஜால்ராக்களின் கைகளிலே உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1753941

Categories: Tamilnadu-news

பெங்களூருவில் 'தண்ணி காட்டிய' தினகரன்

Tue, 18/04/2017 - 07:09
பெங்களூருவில் 'தண்ணி காட்டிய' தினகரன்

 

 

பெங்களூரு: பெங்களூருவில் டில்லி போலீசார் கைது செய்ய வந்திருப்பதை தெரிந்து கொண்ட தினகரன், சசிகலாவை சந்திக்காமல், தமிழக எல்லையான அத்திப்பள்ளியுடன் திரும்பி வந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசியை சந்திக்க செல்வதாக கூறி தினகரன் பெங்களூரு சென்றார். ஆனால் சந்திக்காமல் சென்னை திரும்பினார்.

 

டில்லி போலீஸ் வருகை:

இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தினகரனை சந்திக்க அனுமதி கேட்டு சசி இன்னும் சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கவில்லை. சிறை விதிகளின்படி திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பார்வையாளர்களை சந்திக்க முடியும். இனி சசியை சந்திக்க வெள்ளி வரை தினகரன் காத்திருக்க வேண்டும். பெங்களூருவிற்கு நேற்று(ஏப்ரல்18) தினகரனை கைது செய்ய டில்லி போலீசார் முன்னறிவிப்பின்றி வந்தனர். சிறை வாசல் முன்பு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பெங்களூரு போலீசாரும் நிறுத்தப்பட்டனர். டில்லி போலீசார் பெங்களூரு வந்தது வேகமாக பரவ துவங்கியது.

 

சுற்றி வந்த கார்:

இதனையறிந்த தினகரன் பெங்களூரு சிறைக்கு வரவில்லை. 3.30 மணியளவில் சசி அணியை சேர்ந்த பெங்களூரு நிர்வாகிகள் மட்டும் சிறை வந்து சென்றனர். தினகரன் தனது சந்திப்பை 5.30 மணிக்கு மாறினார். 4.30 மணியளவில் தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளிக்கு வந்த தினகரன், போலீசார் வந்த தகவல் தெரிந்து பெங்களூரு சிறை நோக்கி செல்லவில்லை. தினகரனுடன் வந்த தமிழக பதிவெண்(7777) கொண்ட கார் மட்டும் பெங்களூரு சென்று சசி அடைக்கப்பட்ட சிறை அருகே சுமார் 15 நிமிடம் நிறுத்தப்பட்டது. அந்த காரிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. பின்னர் அந்த கார் சிறை வாசலை நீண்ட நேரம் சுற்றிவிட்டு அங்கிருந்து அத்திபள்ளி கிளம்பி சென்றது. 6 மணிக்கு மேல் சிறையில் யாரையும் சந்திக்க முடியாது என்பதால், தினகரனும் சசியை சந்திக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1753942

Categories: Tamilnadu-news

“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!

Tue, 18/04/2017 - 06:38
“தினகரனுக்கு கொடுத்த டைம் முடிந்துவிட்டது”- பொங்கிய அமைச்சர்!
 
 

DIna_new_1_03486.jpg

“சித்தியிடம் கேட்டு முடிவு சொல்கிறேன்” என அமைச்சர்களிடம் தினகரன் தரப்பு சொன்ன கால அவகாசம் முடிந்தது தான் தங்கமணி வீட்டில் நடந்த அவசர கூட்டத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தே தினகரன் மீது அமைச்சர்கள் சிலர் வருத்ததில் இருந்துள்ளார்கள். மக்கள் செல்வாக்கும் இல்லை, கட்சியினர் செல்வாக்கும் இல்லை, எதற்காக இவர் கட்சியை கைப்பற்ற துடிக்கின்றார் என்று மூத்த அமைச்சர்கள் சிலரே முணுமுணுத்தனர். அடுத்து இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதும் அ.தி.மு.கவில் அடித்தளத்துக்கே ஆபத்து வந்ததை அக்கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உணரத்துவங்கினார். சின்னத்தை முடக்கிய மத்திய அரசு அடுத்த அதிரடியைக் காட்டியது. சசிகலாவைத் துாக்கி பிடித்தால் இதுதான் நிலை என்பதை சொல்லாமல் சொல்லியது மத்திய அரசு. 

ஆர்.கே நகர் தேர்தல் ரத்தான பிறகு கடந்த வாரம் தினகரனை அவரது வீட்டில் முக்கிய அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது, “அ.தி.மு.க என்ற கட்சியை அம்மா உயிரை கொடுத்து வளர்த்தார். ஆனால் அந்த கட்சி இப்போது அழிவுப்பாதைக்கு செல்லும் நிலை வந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணமே உங்கள் குடும்பம் தான், மக்களிடமும் செல்வாக்கு இல்லாமல், கட்சியிலும் செல்வாக்கு இல்லாமல் நீங்கள் தொடர்ந்து எதற்கு இந்தப் பதவியில் இருக்க வேண்டும்” என்று தினகரனைப் பார்த்து  தங்கமணி கேட்டதும், அதிர்ச்சியடைந்த தினகரன் “நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் விலகி இருந்தால் கட்சி நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சித்தியிடம் கேட்காமல் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. 17-ம் தேதி சித்தியை சந்திக்கிறேன். அதன்பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி பேசலாம்” என்று டைம் வாங்கித் தான் அன்று அமைச்சர்களை தனது வீட்டில் இருந்து அனுப்பியுள்ளார். 

Ops_and_thambi_1_400_03006.jpg

அதன்பிறகு, மத்திய அரசிடம் இருந்து தம்பிதுரையை தொடர்பு கொண்டுள்ளார்கள். கட்சியின் சின்னம் தினகரன் தரப்புக்கு கிடைப்பது கடினம், அவர் சின்னத்தைப் பெறுவதற்கு குறுக்குவழியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த தகவல் எங்களிடம் உள்ளது. இனியும் நீங்கள் சசிகலா தரப்பு பின்னால் நிற்க வேண்டாம்” என்று கொஞ்சம் மிரட்டலாகவே சொல்லியுள்ளார்கள். மத்திய அரசு சொன்னது போலவே தினகரன் மீது லஞ்ச வழக்கு இன்று அதிரடியாக பதிவாகியது. இதை சற்றும் எதிர்பார்க்காத தம்பிதுரை அதன் பிறகு சில அமைச்சரகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பேசியவர்களிடம் அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு, “பன்னீர் பக்கம் மத்திய அரசு இருக்கிறது. மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. தினகரன் கையில் கட்சி தொடர்ந்து இருந்தால் நாளை ஆட்சிக்கே ஆபத்து வந்துவிடும். எனவே பன்னீர் தரப்புடன் இணைந்து போவதுதான் இப்போது நல்லது” என்று கூற, அதன்பிறகு தான் முதல்வரை சந்திக்க கோட்டை வந்தார் தம்பிதுரை.

கோட்டையில் முதல்வரிடமும் இதைப் பற்றி பேசியுள்ளார். முதல்வரும் அதே கருத்தை ஒப்புக்கொண்டதும் வெளியே செய்தியாளர்களிடம், “இரண்டு அணிகளும் இணைவதற்கு வாய்ப்புள்ளது” என்று தம்பிதுரை கருத்து தெரிவித்தார். தம்பிதுரையின் கருத்து வெளியானதும் தினகரன் தரப்பில் இருந்து முக்கிய அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு அவசரப்பட வேண்டாம் என்று சொல்லியுள்ளார்கள்.

இந்த தகவல் தங்கமணி காதுக்கு வந்ததும், “அவருக்குக் கொடுத்த டைம் இன்றோடு முடிந்துவிட்டது. இனியும் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது” என்று பொங்கியுள்ளார். அதன்பிறகு தான் அமைச்சர்களை தனது வீட்டுக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்தார். முதலில் ஒத்தக் கருத்துடைய சில அமைச்சர்களுக்கு மட்டுமே அழைப்பு போனது, ஆனால்  செய்திகள் வேறு மாதிரி வெளியானதும் லிஸ்டில் இல்லாத அமைச்சர்களும், தினகரனுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்களும் தங்கமணி வீட்டுக்கு படையெடுத்தனர். 

தங்கமணி வீட்டில் பன்னீர் தரப்புடன் யார் பேசுவது என்றும், அமைச்சரவை பற்றி பன்னீர் தரப்பிடம் என்ன டிமாண்ட் வைப்பது என்பது பற்றியும் பேசியுள்ளார்கள். இந்த இணைப்புக்கு தினகரன் முட்டுக்கட்டை போட்டால் அவரையே கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்துவிடலாம் என்று பேசியுள்ளனர். பன்னீர் தரப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கும்போது தற்போதைய அமைச்சர்களில் ஐந்து பேருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது. தங்கமணியின் மூலமே பன்னீர் தரப்புடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தங்கமணிக்கு நெருக்கமானவர்கள் தகவல்களை கசிய விடுகிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/86764-the-time-given-to-dinakaran-has-ended-fumes-a-minister.html

Categories: Tamilnadu-news

தினகரனுக்கு திகார்?

Mon, 17/04/2017 - 20:46
gallerye_005434701_1753453.jpg

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர, சசிகலாவின் அக்கா மகன், தினகரன் முயற்சித்தது அம்பலமாகி உள்ளது. இடைத்தரகராக செயல்பட்டவன், 1.30 கோடி ரூபாயுடன் டில்லியில் சிக்கியதை அடுத்து, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்துள்ள டில்லி போலீசார், இன்று அவரிடம் விசாரணை நடத்தியதும், கைது செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil_News_large_1753453_318_219.jpg


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, ஓட்டுக்களை பெற முற்பட்ட தினகரனின், அடுத்த தில்லாலங்கடி தற்போது அம்பலமாகி உள்ளது.

இரட்டை இலை சின்னத்துக்கு, தேர்தல் கமிஷனில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் உரிமை கொண்டாடியதால், இருதரப்புக்கும் இடையிலான பஞ்சாயத்து, சமீபத்தில், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது, ஊடகங்களில் வெளியான செய்தியில், 'சின்னத்தை கைப்பற்ற, அதிகார, அரசியல் தரகர்கள் பலரை, இருதரப்பினரும் களமிறக்கி, பல கோடி ரூபாய் பேரம் பேசி வருகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியை உண்மையாக்கும் விதமாக, நேற்று டில்லியில், சுகேஷ் சந்தர், 27, என்ற அதிகார தரகரை, போலீசார் கைது செய்தனர். ஒரு மாதமாகவே, இவனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும், டில்லி போலீஸ் கண்காணித்து வந்துள்ளது.

இவனுடன், தினகரனுக்கு ஏற்கனவே, நான்கு ஆண்டுகளாக தொடர்பு இருந்து உள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் தான், இரு தரப்பினரும் நேரடியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். அப்போது, தனக்கு, 10 கோடி ரூபாய், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சமாக தர, 50 கோடி ரூபாய் என, 60 கோடி ரூபாய்க்கு, சுகேஷ் சந்தர் பேரம் பேசியுள்ளான்.
 

கண்காணித்தனர்


இதன்பின், கேரளாவின் கொச்சியிலும், டில்லியில், சாந்தினி சவுக் பகுதியிலும் உள்ள ஹவாலா புரோக்கர்கள் மூலமாக, முதல் கட்டமாக, இரண்டு கோடி ரூபாய், சுகேஷ் சந்தருக்கு கைமாறியுள்ளது. அதனால், டில்லியில், சுகேஷ் சந்தரின் நடவடிக்கைகளை, போலீசார் கண்காணிக்க துவங்கினர்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான பின், மீண்டும் சின்னம் விவகாரம் சூடுபிடித்ததால், அதை மையமாக வைத்து, தொலைபேசி உரையாடல்களும் தீவிரமடைந்தன. எனவே, சுகேஷ் சந்தரின் ஒவ்வொரு அசைவையும், டில்லி துணை கமிஷனர் மாதுார் வர்மா தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கடந்த வாரத்தில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு என பேரம் பேசப்பட்ட, ௫௦ கோடி ரூபாய், வெவ்வேறு ஹவாலா வழிகளில் கைமாறியதாக தெரிகிறது. இதையடுத்து, டில்லி மோதிபாக்கில் உள்ள ஹயாத் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த, சுகேஷ் சந்தர், நேற்று வளைக்கப்பட்டான். அவன்பயன்படுத்திய, பி.எம்.டபிள்யூ., உயர் ரக காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1.30 கோடி ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுகேஷ் சந்தர் பயன்படுத்திய, மற்றொரு மெர்சிடிஸ் காரும் அங்கு இருந்தது. அதில், 'பார்லிமென்ட் உறுப்பினர்' என்ற, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஓட்டலுக்கு இந்த காரில் தான், அவன் வந்து போவது வழக்கம். அதில் தான், எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும், கார் பாஸ் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளான். அந்த காரும், பறிமுதல் செய்யப்பட்டது.
 

மூன்றுபிரிவுகளில் வழக்கு


உடனடியாக, சாணக்யபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுகேஷ் அழைத்து வரப்பட்டான்; அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தினகரனுடன், அவன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளது உறுதியானது. இருவரும், 40 நிமிடங்கள் பேசிய பதிவையும், டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், தினகரனின் துாதர்களாக, சில முக்கிய வக்கீல்களும் செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும், விரைவில் வளைக்கப்பட உள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி போலீசார், குற்றச் சதி, லஞ்சம் தருதல் உட்பட, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையில், முதல் குற்றவாளியாக தினகரனும், இரண்டாம் குற்றவாளியாக சுகேஷ் சந்தரும் இடம் பெற்றுள்ளனர்.

தினகரனை நேரில் சந்தித்து சம்மனை வழங்குவதற்காக, டில்லி துணை கமிஷனர் சஞ்சய் ஷெராவத், சென்னை வந்துள்ளார். இன்று, தினகரனை சந்தித்து, சம்மனை வழங்குவதோடு, அவரிடம் விசாரணையும் நடத்தப்படலாம். அதன்பின், அவரை டில்லி அழைத்துச் சென்று, சுகேஷ் சந்தருடன் ஒன்றாக அமரவைத்து விசாரணை நடத்த, டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின், தினகரன் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்படலாம் என, டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


 

ஆடம்பரத்தில் திளைத்தவன்


டில்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர், ஆடம்பரமாக வாழ்வதில் விருப்பம் உடையவன். நாட்டின் பல பகுதிகளில், அவனுக்கு சொந்தமாக, ஏராளமான பண்ணை வீடுகள் உள்ளன.
சுகேஷ் சந்தர், கையில் அணிந்திருந்த, 'பிரேஸ்லெட்'டின் விலை, 6.5 கோடி ரூபாய் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த, விதம் விதமான, 'ஷூ'க்களை, சுகேஷ் சந்தர் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
 

அவர் யாரென்றே தெரியாது: தினகரன்


''டில்லியில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்பவர், யார் என்றே தெரியாது,'' என, சசிகலா அக்கா மகன் தினகரன் தெரிவித்தார்.தினகரன் அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னத்தை பெற, நான் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுவது, தவறான தகவல். டில்லியில் கைது செய்யப்பட்ட, சுகேஷ் சந்திரசேகர், யார் என்றே தெரியவில்லை.
எனக்கு எதுவும் புரியவில்லை. 'டிவி' பார்த்து தான் தெரிந்து கொண்டேன். என்னிடம் பணம் வாங்கினார் என்றால், எங்கு வாங்கினார்?இதன் பின்னணி புரியவில்லை. இப்பிரச்னையை, சட்டப்படி சந்திப்பேன். என் வாழ்க்கையில், சுகேஷ் சந்திரசேகர் என, யாரிடமும் பேசியதில்லை. வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர்களிடம் பேசி உள்ளேன்.
அ.தி.மு.க.,வை அழிப்பதற்காக, இது போன்ற தகவலை பரப்புகின்றனர்; அது, யாருடைய திட்டம் என, தெரியவில்லை. சசிகலாவை சந்திக்க, பெங்களூருக்கு புறப்பட்ட போது, 'டிவி'யில் செய்தி பார்த்தேன். இது தொடர்பாக, போலீசாரிடம் இருந்தும், எந்த தகவலும் வரவில்லை.
என்னுடன், ஆயிரம் பேர் போனில் பேசுவர்; ஆயிரம் விஷயங்கள் சொல்வர்; எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுவர். அந்த நேரத்தில், சரி என்போம். அதற்காக, பேசிய எல்ேலாரையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, ஆவணங்கள் எதையும், அமைச்சர்கள் அழிக்கவில்லை. கட்சியில், பிரச்னை எதுவும் இல்லை. என்னை விலகும்படி, அமைச்சர்கள் யாரும் கூறவில்லை. விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படியும், யாரும் வற்புறுத்தவில்லை; அவரிடமும், யாரும் பேசவில்லை.
இவ்வாறு தினகரன் கூறினார்.


- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1753453

Categories: Tamilnadu-news

ஆலோசனை நடத்தியதற்கான காரணம் என்ன? - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Mon, 17/04/2017 - 20:08
ஆலோசனை நடத்தியதற்கான காரணம் என்ன? - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
 

கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 
 
 
 
ஆலோசனை நடத்தியதற்கான காரணம் என்ன? - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
 
சென்னை:

அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது, ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த கருத்து குறித்தும் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார்.

அதிமுக கட்சியின் இரு அணிகளும் ஒன்று சேர்வது குறித்த ஆலோசனை நடத்தினால் அதில் பங்கேற்போம் என்று (அம்மா) அதிமுக கட்சியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக (அம்மா) கட்சியின் அமைச்சர்கள் அளைவரையும் சென்னைக்கு அழைத்துள்ளார்.
201704172340352929_Copy%20of%20Untitled-
இந்நிலையில், அமைச்சர்கள் குழுவினர் இரண்டு, மூன்று குழுக்களாக இணைந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் அமைச்சர் தங்கமணி வீட்டில் முக்கிய அமைச்சர்கள் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,

ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது, ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த கருத்து குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என்று அவர் கூறினார்.

பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற இந்த ஆலோசனையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க முதல்வரை இருமுறை சந்தித்த பின்னர் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி விரைந்துள்ளார். அதிமுக (அம்மா) கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/17234028/1080469/What-Discussions-by-ADMK-Ministers-Minister-Jayakumar.vpf

Categories: Tamilnadu-news