தமிழகச் செய்திகள்

டெல்லி போராட்டம் தற்காலிக வாபஸ் : விவசாயிகள் தமிழகம் வந்தடைந்தனர்!

Tue, 25/04/2017 - 06:52
டெல்லி போராட்டம் தற்காலிக வாபஸ் : விவசாயிகள் தமிழகம் வந்தடைந்தனர்!
 
 

டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாள்களாகப் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், இன்று காலை சென்னை வந்தடைந்தனர். 

TN Farmers

ஜந்தர் மந்தரில், மார்ச் மாதம் 14-ம் தேதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அந்தச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

TN Farmers
 


எலிக் கறி, பாம்புக் கறி உண்ணும் போராட்டம் தொடங்கி, நிர்வாணப் போராட்டம் வரை நடத்திவிட்டனர்.  இந்த நிலையில்... கடந்த ஞாயிற்றுகிழமை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
 

TN Farmers
 

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “நதிகளை இணைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார் அய்யாக்கண்ணு. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தின்மூலம் ஓய்வூதியம் கிடைக்க வழிவகுக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்துவேன். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிசெய்வோம்”, என்றார்.

விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் முதல்வர் வழங்கினார். விவசாயிகளிடம் போராட்டத்தைக் கைவிடும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்ற விவசாயிகள், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக  அறிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் இன்று காலை 7.10 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

படங்கள்:வி.ஶ்ரீனிவாசலு

http://www.vikatan.com/news/india/87470-tn-farmers-reached-chennai-after-41-days-of-protest.html

Categories: Tamilnadu-news

‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்

Tue, 25/04/2017 - 06:51
‘அது தீபா பேரவை இல்ல... தீபா சிட்ஃபண்ட்ஸ்!’ - கடுகடுக்கும் பொறுப்பாளர்
 
 

தீபா

ள்கட்சிப் பூசல், ஆர்வக்கோளாறால் முடிவு எடுக்கிறார், மற்ற கட்சியினரிடம் பணம் பெற்றார், கணவரை தனியாகத் துரத்தி விட்டார்... என்றெல்லாம் எத்தனையோ குற்றசாட்டுகள் தன் மீது கூறப்பட்டாலும், "நான் முதலைமைச்சர் ஆகியே தீருவேன்' என வைராக்கியத்துடன் தெரிவித்து வருகிறார் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின்' பொதுச்செயலாளர் தீபா. 

இந்நிலையில், "பதிவு செய்து கட்சி ஆரம்பித்தவர்கள் மட்டும்தான் அரசியல் வாழ்க்கை பற்றிக் கனவு காணத் தகுதி படைத்தவர்கள். ஆனால், இன்றுவரை கட்சியைப் பதிவு செய்யாமல், தன்னை நம்பி வரும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் வரை நன்கொடையாகப் பெற்று, அந்தப் பணத்தை மோசடி செய்திருக்கிறார் தீபா" என்று அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தென்மண்டல பொறுப்பாளர் ஜானகிராமன்.

இந்த மோசடிப் புகார் குறித்து ஜானகிராமனிடம் பேசியபோது "நான் பல வருஷமா அ.தி.மு.க.வின் உண்மையான விசுவாசியாக இருந்தவன். முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தவுடன் கட்சி இரண்டாக உடைந்தது. எனக்கு யார் பக்கமும் சேரப் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அ.தி.மு.க-வை காப்பாற்ற இவர்தான் சரியான நபர் என்று கருதி பலர், தீபாவின் பின்னால் படையெடுத்துச் சென்றார்கள். நானும் அந்த எண்ணத்தில்தான் தீபாவுக்கு ஆதரவு அளித்தேன். உருவ ஒற்றுமை, இவரின் வேகம், அரசியல் குறித்த பார்வை ஆகிய அனைத்தும் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால், போகப்போகத்தான் தெரிந்தது. ஒரே உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும் புலி வேறு; பூனை வேறு என்பது. தீபா தலைமையிலான கட்சியில் உறுப்பினர் ஆவதற்கு ஆரம்பத்தில் 20 ரூபாய் கொடுத்து ஒரு மனுவை வாங்கி எழுதிக் கொடுத்தோம். பின்னர் தீபா பேரவை ஆரம்பித்ததும் நிர்வாகிகள் பட்டியலைத் தயார் செய்தார். அதில் என்னையும் சேர்த்து மொத்தம் 24 பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டோம். 'ஒவ்வொருவரும் கண்டிப்பாக நன்கொடை கொடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். நான் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தேன். என்னைப்போல ஒவ்வொருவரும் அவரவர் வசதிகேற்ப பல லட்சங்களைக் கொடுத்தனர். இது தவிர, கட்சியோட எல்லா செலவுகளையும் ஒவ்வொருத்தர் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்க.. ஆனால், ரசீது ஏதும் கொடுக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலின்போது, நான் மட்டுமே ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு பண்ணிருக்கேன்.

ஜானகிராமன்

அதுக்கப்பறம் ஏற்கெனவே உள்ள உறுப்பினர்களை மறுபடியும் ஃபார்ம் வாங்கி உறுப்பினராகச் சேர்க்கணும்னு சொல்லி இரண்டரை லட்சம் மனுக்களை கொடுத்தாங்க. ஒரு மனுவோட விலை 20 ரூபாய். நான் மட்டும் 5,000 ஃபாரம் வாங்கி எங்க தொகுதியில இருக்குற தொண்டர்களிடம் கொடுத்து, நிரப்பிக்கொடுக்கச் சொன்னேன். இந்த நேரத்துலதான் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ரத்தான அடுத்தநாளே தீபா பேரவை கேன்சல் ஆயிருச்சி. அதுபற்றி எந்தவொரு பதிலும் இப்போ வரைக்கும் வரவில்லை. ஆனால், தீபா பேரவை ரத்தானது குறித்து ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இருந்து பேரவையின் செயலாளர் ராஜா பேருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதை யாருக்கும் தெரியாம தீபா மூடி மறைச்சிட்டாங்க.

கட்சி வளர்ப்பு நிதி என்ற பெயரில் திரும்பவும் பணம் பிடுங்கும் அத்தியாயம் நடந்துச்சி. எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தேன். அரசியலைமைப்பு ரீதியாகத்தான் தீபா பேரவை நடந்திட்டிருக்கு, ‘சங்க விதிகளின்படி, எந்த ஒரு பதிவும் உங்க பேரவைக்கு இல்லை என்பதை அறிந்தேன். இதுபற்றி ஏற்கெனவே உங்க செயலாளர் ராஜாவுக்கு மனு அனுப்பிட்டோம்’ என்று ரெஜிஸ்டர் ஆபிஸ்ல சொல்லிட்டாங்க. அப்போதான் தெரிஞ்சுது ஏற்கெனவே தீபா பேரவையில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறப்பட்ட ராஜாவும், அவரது மனைவி சரண்யாவும் இன்னமும் அதே பொறுப்புகளில் நீடிப்பது. அவர்களை இன்னமும் தீபா நீக்கவில்லை. நீக்கிட்டேன்னு சொன்னது எல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம் என்று எனக்குப் புரிஞ்சுது. நான் தீபாகிட்ட வந்து இதுபற்றிக் கேட்டேன். ஆனால், ஒரு பதிலும் சொல்லவில்லை. இத்தகவலை நான் எல்லார்கிட்டயும் சொன்னேன். பேரவை உயர்மட்டக் குழுவில் இருந்த 12 பேர் தீபாவை விட்டுப் பிரிஞ்சு போயிட்டாங்க. இவங்க கட்சி நடத்தல, கட்சிங்கற பேருல தன்னை நம்பி வந்த தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் சிட் ஃபண்ட் கம்பனி மாதிரி பேரவையை நடத்தி இதுவரை பல கோடி மோசடி செஞ்சுருக்காங்க. எனவேதான், போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார். 

மேலும், "அவங்களுக்குத் தேவை பணம். அதை மற்ற கட்சிகளிடம் இருந்து ராஜா, சரண்யா வாங்கினார்கள்.  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து தீபா பணம் வாங்கினாங்க. இன்னொரு பக்கம், பணம் பறிக்க தன் கணவரை தனியாகக் கட்சி ஆரம்பிக்கவைத்து, சும்மா நடிக்கச் சொல்லியிருக்காங்க. மொத்தத்தில் இவர்கள் அனைவரும் பணம் பறிக்கும் நாடகக் கும்பல். நான் இப்போ புகார் கொடுத்தது என் பணம் எனக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மட்டும் இல்லை. இனிமேலும் தீபாவை நம்பி யாரும் பணத்தை இழக்கக்கூடாது என்பதற்காகத்தான். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'என்னை யாருன்னே தெரியாது. இதுவரைக்கும் என்னைப் பார்த்ததே இல்லைன்னு' தீபா சொல்லியிருக்காங்க. நான் அவங்க கட்சியில சேரும்போது அவங்களே எடுத்த புகைப்படம், ஆர்.கே நகர்த் தொகுதியில்  பிரச்சாரத்தின்போது, ஒரே வண்டியில பக்கத்துல பக்கத்துல நின்னு பிரசாரம் செஞ்சது எல்லாம் மக்களுக்கு தெரியும்." என்றார்.

பிரச்சாரத்தில் தீபாவுடன், ஜானகிராமன்

இப்படி ஏகப்பட்ட குற்றசாட்டுகளினால் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' ஆரம்பித்த மிகக்குறுகிய காலத்திலேயே அரசியல் பயணத்தில் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தீபா தன் அரசியல் பயணத்தின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/87443-its-not-a-political-party-its-a-chit-fund-angered-cadre-express-his-anger-over-deepa-peravai.html

Categories: Tamilnadu-news

இறுக்கும் டெல்லி போலீஸ்... கைதாகிறாரா டி.டி.வி.தினகரன்?!

Tue, 25/04/2017 - 06:49
இறுக்கும் டெல்லி போலீஸ்... கைதாகிறாரா டி.டி.வி.தினகரன்?!
 
 

டி.டி.வி.தினகரன்

 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க பேரம் பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இரட்டை இலைச் சின்னத்துக்கு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை உரிமை கோரின. இதனால் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பு 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக டெல்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டி.டி.வி.தினகரன் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்தனர். அப்போது, டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் ரகசியத் தகவல் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் ஓட்டலில் சோதனை நடத்தி சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சுகேஷ் சந்திரசேகரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன், பணம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் கொடுத்ததாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். அடுத்து, தினகரன் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, டெல்லியிலிருந்து சென்னை வந்த போலீஸார், டி.டி.வி.தினகரனிடம் நேரில் சம்மனை கொடுத்தனர். அதன்பேரில் கடந்த 22-ம் தேதி விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் டெல்லி சென்றார். அங்கு அவரிடம் கடந்த மூன்று நாள்களாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 


விசாரணையில் டி.டி.வி.தினகரன் அளித்த பதில்கள் போலீஸாருக்கு திருப்திகரமாக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் தொடர்பு குறித்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அந்த ஆவணங்கள் அடிப்படையில் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்திவருகிறோம். எங்களது கேள்விகளுக்கு டி.டி.வி.தினகரன் மழுப்பலான பதில்களையே தெரிவித்துவருகிறார். மேலும், சில கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றே சொல்லிவருகிறார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். 

டி.டி.வி.தினகரன்


இதுகுறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த தயாராக 100க்கும் மேற்பட்ட கேள்விகளை தயாரித்துள்ளோம். அந்த கேள்விகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்ளன. இதற்காக தமிழ் தெரிந்த அதிகாரிகள் மூலம் டி.டி.வி.தினகரனிடம் கேள்விகளைக் கேட்டோம். எங்களின் விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் முழுஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வதில்லை. இதனால் விசாரணை தொடர்ந்து வருகிறது. 


புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்கு டி.டி.வி.தினகரனை அறிமுகப்படுத்தியவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தனித்தனியாக விசாரணை நடந்துவருகின்றது. ஒவ்வொருவரிடமும் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. ஏற்கெனவே சுகேஷ் சந்திரசேகரை கைதுசெய்துவிட்டோம். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எந்தவகையில் கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடந்துவருகிறது. அதில் எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. பணம் கொடுத்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மேலும் டி.டி.வி.தினகரன், அவருக்கு நெருக்கமானவர்களுடன் புரோக்கர் சுகேஷ்சந்திரசேகர் கடந்த சில வாரங்களாக நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், அதை டி.டி.வி.தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் முற்றிலும் மறுக்கின்றனர். டி.டி.வி.தினகரன் மீது நடவடிக்கை எடுக்க எங்களிடம் உள்ள ஆதாரங்கள் போதுமானது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம்" என்றனர். 


இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சுகேஷ் சந்திரசேகருக்கு கொச்சின், பெங்களூரு, சென்னை வழியாக ஹவாலா பணம் கைமாறப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சுகேஷ் சந்திரசேகரை டி.டி.வி.தினகரனுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் குறித்த விவரங்களும் கிடைத்துள்ளன. அவர்களும் எங்களது சந்தேக வளையத்துக்குள் இருக்கின்றனர். மேலும், டி.டி.வி.தினகரன், சுகேஷ்சந்திரசேகர் ஆகியோர் பேசிய போன் உரையாடல்களும் எங்களுக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன. இதனால் டி.டி.வி.தினகரன் விரைவில் கைது செய்யப்படுவார்" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/87412-ttv-dinakaran-might-get-arrested-soon.html

Categories: Tamilnadu-news

‘இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள் #VikatanExclusive

Tue, 25/04/2017 - 06:39
‘இணையும்... ஆனா இணையாது!’ பேச்சுவார்த்தை பின்னணியில் தினகரனின் 3 திட்டங்கள் #VikatanExclusive
 
 

ஓ.பி.எஸ்

ர் கூடித் தேர் இழுக்கத் தயாராகி வருகிறது அதிமுகவின் பிளவுபட்ட இரண்டு அணிகளும். ஆனால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 'உள்ளே வெளியே' ஆட்டத்தினால் இந்த இணைப்பு சாத்தியமல்ல என்ற கருத்து இரு அணிகளின் மூத்த நிர்வாகிகளிடையேயும் எழுந்துள்ளது இப்போது. 

ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட பல மாற்றங்களால் அதிருப்திக்குள்ளான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருடன்  கணிசமான எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் அணிவகுத்தனர். அதிமுக பிளவுபட்டதால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் புகழ்பெற்ற தனது இரட்டை இலைச் சின்னத்தை இழந்தது அக்கட்சி.

இதைத்தொடர்ந்து இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான பணப்பரிவர்த்தனை ஆவணங்கள் கைப்பற்றிய வருமான வரித்துறை தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்கள், அரசு அதிகாரியான கீதாலட்சுமி உள்ளிட்ட சிலரது வீடுகளில் ரெய்டு நடத்தி அரசியல் பரபரப்பை கொளுத்திப்போட்டது.

இரு அணிகளும் தீவிரமான மோதல்போக்கினை கையாண்டநிலையில் இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் கமிஷனுடன் பேரம் பேசியதாக தினகரனை வளைத்த டெல்லி போலீஸ், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவனை கைது செய்தது. தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது வழக்கு தொடுத்ததோடு அதுதொடர்பாக கடந்த 3 தினங்களாக தினகரனிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
கட்சியில் இந்தப் பதற்றமான சூழலில்  அதிருப்தி அணியினருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதென அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் அணிக்கு சமிக்ஞை தரப்பட்டது. ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனைகளுமின்றி பேசத்தயாரான மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ் அணி பின்னர் இந்தப் பேச்சுவார்த்தையில் 'உள்குத்து' ஏதாவது உள்ளதா என எழுந்த சந்தேகத்தினால்

சசிகலா

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை, சசிகலா, தினகரன் ஆகியோரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெறுவது, தேர்தல் கமிஷனில் அவர்கள் அளித்துள்ள பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. 

கடந்த வாரத்தில் இந்த  நிபந்தனைகளை  நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் இறங்கியதாக சொல்லப்பட்டது.  இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது அமைச்சர்களிடம் தினகரன் “ என்னை கழற்றிவிட்டு உங்களால் கட்சியை நடத்தமுடியாது. அப்படி ஒரு நிலைவந்தால் ஓ.பி.எஸ்ஸைவிட நான் பலமாக கட்சிக்கு எதிர்ப்பு நிலை எடுப்பேன். யோசித்து செய்யுங்கள். நீங்களே சித்தியை முன்னிருத்தினீர்கள். இப்போது நீங்களே அவருக்கு எதிர்ப்பு நிலையை எடுக்கிறீர்கள். கட்சிக்காக ஜெயில் வரை எங்கள் குடும்பம் சென்றுவிட்டது. இப்போது அதிகாரத்தை நீங்கள் சுவைப்பதற்காக இணைப்பு நாடகம் நடத்துகிறீர்களா” என  எகிறியதாக சொல்லப்படுகிறது. 

டி டி வி தினகரன்அப்போது, “மத்திய அரசுக்கு தமிழக அரசின் மீது கோபம் என்றால் இந்நேரம் ஆட்சியை கலைத்திருப்பார்கள். அதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. ஆனால் திரும்பத் திரும்ப உங்கள் குடும்பத்தினர் மீதுதான் மொத்த கோபமும் இருப்பதாக அவர்கள் நடவடிக்கையிலிருந்து தெரிகிறது. இந்நேரத்தில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றினால்தான் ஒட்டுமொத்தமாக நமக்கு நல்லது. அதற்காக நீங்கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும். சூழ்நிலை சாதகமானபின் வேறு மாற்று நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை ஒதுங்கியிருப்பது நல்லது” என அமைச்சர் தங்கமணி, தினகரனிடம் சொன்னாராம். “கட்சியிலிருந்து ஒதுங்கினால் எங்கள் குடும்பத்துக்கு இன்னும் சிக்கலை மத்திய அரசு ஏற்படுத்தும். யோசித்து முடிவெடுங்கள்” என அதற்கு தினகரன் டென்ஷனாக பதிலளித்தார் என்கிறார்கள். 

அதன்பிறகு திரும்ப இதே விஷயத்தை வலியுறுத்தி தினகரனிடம் போனில் பேசிய தம்பிதுரை, “ஆரம்பத்திலிருந்த நிலைமை இப்போது இல்லை. எங்களில் ஒருவர் ஆட்சி மற்றும் கட்சிக்கும் பொறுப்பேற்றால் பிரச்னை கிளம்பும் என்றே கட்சியின் நலன்கருதி உங்கள் சித்தியை தேர்வு செய்தோம். ஜெயலலிதாவுக்கு உள்ளதைப்போல மக்கள் செல்வாக்கினை அவருக்கு உருவாக்க எண்ணினோம். இப்போது அதுவே  பூமராங் போலாகிவிட்டது. உங்கள் சித்தி சிறைக்கும் சென்றுவிட்ட நிலையில் கட்சிக்கு அது நெகடிவ் ஆன விஷயமாகிவிட்டது. அதனால் இந்த முடிவை ஏற்கத்தான் வேண்டும். ஓ.பி.எஸ் வெளியே இருக்கும் வரை பிரச்னை இன்னும் பூதாகரமாகுமே தவிர குறையாது. அது உங்கள் குடும்பத்துக்குத்தான் சங்கடங்களைத்தரும்" என்றாராம்.  ஆனால் கோபத்தில் தினகரன் போனை வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

அதன்பின்னரே மீடியாவை அழைத்து தன் கருத்தை பொதுவெளியில் வெளிப்படையாக 'தினகரன் ஒதுங்கியிருக்கவேண்டும்' என்ற ரீதியில் முன்வைத்தாராம் தம்பிதுரை. 
கட்சியில் தனக்கு எதிராக எல்லோரும் ஒரே மனநிலைக்கு வந்துவிட்டதை உணர்ந்தே பத்திரிகையாளர்கள் சந்திப்பில், “நான் ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேனே” என ஆச்சர்ய பதிலளித்தார் தினகரன் என்கிறார்கள்.
 
தினகரனிடம் இருந்து இப்போதைக்கு பிரச்னை கிளம்பாது என்ற நம்பிக்கையில் ஓ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அடுத்தடுத்து காரியங்கள் நடக்கத்துவங்கின. ஜெயலலிதா காலத்திலேயே கட்சியின் அடுத்தகட்டத்தலைவராக மதிக்கப்பட்டவர் ஓ.பி.எஸ். அவர் ஜெயலலிதா, சசிகலா இல்லாத இந்த நேரத்தில் கட்சிக்குள் கால் வைப்பது தங்களது முக்கியத்துவத்தை குறைக்கும் எனக்கருதியே ஜெயக்குமார் போன்ற சில அமைச்சர்கள் முரணான பேட்டிகளை அளித்ததாக சொல்லப்பட்டது. ஓ.பி.எஸ் மற்ற நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் பின்வாங்கினால் அதற்குப் பதிலாக தனது முதல்வர் பதவியை காவு கேட்பார் என்று முதல்வர் எடப்பாடியும் இந்தப் பேச்சுவார்த்தை வைபவத்தை ரசிக்கவில்லையாம்.

இதுவும் ஓ.பி.எஸ் காதுக்கு எட்டியதால்தான் கே.பி முனுசாமி, “அவமானப்படுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். எடப்பாடி சசிகலா குடும்ப முதல்வராக இருக்கிறார்” என தங்களின் கோபத்தை சில தினங்களுக்கு முன் வெளிப்படுத்தினார் என்கிறார்கள். அதன்பிறகே  ஜெயக்குமார் தரப்பை அடக்கிவாசிக்க அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்டது. 'பேச்சுவார்த்தையின்போது ஜெயலலிதா மரணத்தின் மீதான சி.பி.ஐ விசாரணை தொடர்பான நிபந்தனையை ஓ.பி.எஸ்  அணி திரும்பப்பெற ஒப்புக்கொண்டால் அதற்கு ஈடாக முதல்வர் பதவியைத்தான் அவர்கள் குறிவைப்பார்கள்' என்பதால் அப்படி ஒரு கோரிக்கை முட்டுக்கட்டையிடவே நிதியமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத்தயார் என நேற்று ஜெயக்குமாரை பேட்டி கொடுக்கவைத்தனராம் சாதுர்யமாக. 

இதனிடையே இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கென ஓ.பி.எஸ் அணி சார்பில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், தினகரன் அணி சார்பில் ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் நேற்று மாலை பேச்சுவார்த்தையை துவக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நிகழவில்லை.

வைத்திலிங்கம்

ஆனால் தமிழகமே பரபரப்புடன் உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் அதிமுக விவகாரத்தில் பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றிபெறாது என்பதோடு அதிமுக இணைப்பு என்பது துளியும் சாத்தியமில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஆன காஞ்சி மாவட்ட நிர்வாகி ஒருவர், “இந்த இணைப்பு என்பதே ஒரு சசிகலா தரப்பு நடத்தும் ஒரு நாடகம். ஓ.பி.எஸ் அதிமுகவில் முரண்பட்டபோதே ஒரு டசன் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு தந்தது, அப்போதே சசிகலா தரப்புக்கு கிலி கொடுத்தது. இருப்பினும் அதிகார பலத்தால் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என சசி போட்ட கணக்கு பொய்யானது. ஓ.பி.எஸ் அணிக்கு மேலும் மேலும் மக்கள் ஆதரவு பெருகியதோடு முதலுக்கே மோசமாய் கட்சியின் சின்னம், ஆட்சி அதிகாரங்களும் கையை விட்டுப்போய்விடும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் இப்போது இணைப்பு என்ற நாடகத்தை கையிலெடுத்துள்ளனர் தினகரன் தரப்பு. 

இதில் 3 முக்கிய விஷயங்களுக்காக இதை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர். ஒன்று இரு அணிகளும் இணைவதன்மூலம் சட்டப்படி இரட்டை இலையை திரும்பப்பெறுவது. இரண்டாவது, அதிமுகவுக்குள் திரும்ப கொண்டுவருவதன்மூலம் ஓ.பி.எஸ் சுக்கு மக்கள் மத்தியில் இருக்கும்செல்வாக்கை நீர்த்துப்போகச்செய்வது, 3 வது, கட்சிக்கு திரும்பியபின் ஓ.பி.எஸ் அணி யின் தலைவர்களுக்கு பதவி பொறுப்புகள் வழங்கி அவர்களை தங்களின் ஆதரவாளர்களாக மாற்றுவது இதுதான் தினகரனின் திட்டம். அதன்முதற்படிதான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதுதொடர்பாக தனது அணியைத் தொடர்புகொண்ட ஒரு முன்னாள் அமைச்சரிடம் தனது முந்தைய குற்றச்சாட்டுகளில் முக்கியமானதான ஜெயலலிதாவின் மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை கேட்கும் கோரிக்கை மற்றும் சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக விலக்கிவைப்பது என்ற இரு  நிபந்தனைகைளில் எக்காரணம் கொண்டும் வாபஸ் வாங்குவதில்லை என உறுதியாக தெரிவித்தார் ஓ.பி.எஸ். 

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன் தினகரன் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஓ.பி.எஸ்ஸிடம் போனில் பேசினார். அப்போது, “இந்த இரண்டு நிபந்தனைகளில் சசிகலா தரப்பினரை விலக்கிவைப்பதற்கான நடவடிக்கைகள் முற்றிலும் முடிந்துவிட்டது. நீதிவிசாரணை விஸயத்தை மட்டும் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்... இனி எக்காலத்திலும் சசிகலா தரப்பு கட்சிக்குள் வரமாட்டார்கள்” என்றாராம். ஆனால், மக்கள் மத்தியில் தனக்கு எழுந்த எழுச்சிக்கு நீதிவிசாரணை விஷயமும் முக்கியமானது எனக்கருதிய ஓ.பி.எஸ், அதில் பின்வாங்கினால் மக்கள் ஆதரவை இழக்கநேரிடும் என்பதால் கறாராக மறுத்துவிட்டார். 

அதேசமயம் தினகரன் அணி தங்களை முட்டாளாக்குகிறதோ என சோதித்துப்பார்ப்பதற்காக தன்னிடம் பேசிய அமைச்சரிடம் 'சசிகலா அணி கட்சியிலிருந்து விலகுவதற்கு ஆதாரமாக அவர்கள் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்யவேண்டும். அதை தலைமைக்கழகத்தின்மூலம் உரிய முறையில் அறிவிப்பாக வெளியிடவேண்டும். அது வழக்கம்போல் ஜெயலலிதாவின் அறிக்கையைப்போன்று சட்டப்படியானதாக இருக்கவேண்டும்' என கோரிக்கை வைத்தார்.

கேட்டுச்சொல்வதாக சொல்லி சில மணிநேரங்கள் கழித்து லைனில் வந்த அமைச்சர், 'அண்ணே அது முடியாதுண்ணே...பாவம், அது அவங்களை அவமானப்படுத்தறதுமாதிரி ஆகிடும். நாமதானே அவங்களை பொறுப்பை ஏத்துக்க சொல்லி வற்புறுத்தி அழைச்சி வந்தோம். அதனால் அவங்களா விலகிடுவாங்க' என்று சொன்னாராம்.  இது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு ஐயத்தை தந்திருக்கிறது. அதேசமயம் தினகரன் தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்த கையோடு, தேர்தல் கமிஷனில் இரட்டை இலையைப் பெறுவதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பட்டியலை இன்னொரு பக்கம் சேகரித்துவருகிறது. இந்த விஷயங்கள்மூலம்தான் திட்டமிட்டு தினகரன் அணி நாடகம் நடத்துவதை ஓ.பி.எஸ் அணி உணர்ந்தது.  அதனால் நாம் போய் சேர்வதைவிட இன்னும் மக்கள் மத்தியில் எழுச்சியுடன் பணியாற்றி அங்கிருப்பவர்களை இங்கே வரவழைக்கலாம்' என்ற மனநிலையில் ஓ.பி.எஸ் இருக்கிறார்.

ஆனால் பேச்சுவார்த்தையை நாமே மறுத்ததாக இருக்கவேண்டாம். இன்னும் உறுதியாக நம் நிபந்தனைகளை முன்வைப்போம் என்ற எண்ணத்தில் உள்ளனர். 

உண்மையில் எடப்பாடியை முதல்வராகவே தொடரச்செய்வது வைத்திலிங்கத்தை பொதுச்செயலாளராக்குவது இதுதான் தினகரனின் மாஸ்டர் பிளான். இதை முடிவுசெய்துவிட்டு ஓ.பி.எஸ் அணியை கரைப்பதற்காக இந்த முயற்சிகளை எடுத்துவருகிறது. இதற்கு நாங்கள் பலியாகமாட்டோம்” என்றார்.

அரசியல் செய்வதில், கருணாநிதி ஜெயலலிதாவை மிஞ்சிவிடுவார்கள் போல இருக்கிறது அதிமுகவின் இரு அணித்தலைவர்களும்!

http://www.vikatan.com/news/tamilnadu/87436-aiadmk-faction-and-plan-of-dinakaran.html

Categories: Tamilnadu-news

தமிழக பந்த்: முழு அடைப்பு: தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவுமே ஓடவில்லை!

Tue, 25/04/2017 - 05:38

 No private vehciles running

தமிழக பந்த்: முழு அடைப்பு: தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவுமே ஓடவில்லை!

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் எதுவுமே இயங்கவில்லை. 

வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த 41 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இரண்டு முறை கூட்டப்பட்டது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்திப்பது, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது , மாநிலம் முழுவதும் மதுவிலக்கு, அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்துவது, நெல், கரும்பு ஆகியவற்றுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

வேலைநிறுத்த போராட்டம்: மேலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

முதல்வர் சந்திப்பு: இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போது விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார். இதனை ஏற்று விவசாயிகள் தமிழகம் திரும்பினர். 

தமிழகம் முழுவதும் பந்த்: இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

வாகன போக்குவரத்து: போராட்டத்தை முன்னிட்டு லாரிகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் எதுவுமே இயங்கவில்லை. சாலையில் போக்குவரத்து மிகவும் குறைவாக இருப்பதால் இரு சக்கர் வாகன ஓட்டிகள் மட்டுமே சாலைகளில் செல்வதை காண முடிகிறது.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Categories: Tamilnadu-news

சசிகலா ராஜ்ஜியம் சரிந்த கதை!

Mon, 24/04/2017 - 11:25
சசிகலா ராஜ்ஜியம் சரிந்த கதை!

 

33 ஆண்டு காலம்... அ.தி.மு.க-விலும், அதன் ஆட்சிகளிலும், அந்தக் கட்சியின் இரும்புப் பிம்பமாகத் திகழ்ந்த ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லத்திலும் தன்னிகரற்ற ஆதிக்கம் செலுத்தியவர் சசிகலா.

அந்த ஆதிக்கத்துக்கு ஆரம்பத்தில் பாதை போட்டுக் கொடுத்தார் சசிகலாவின் கணவர் நடராசன். அந்தப் பாதையில் அடிபிசகாமல் பயணித்தார் சசிகலா. அதன் விளைவு, ‘சசிகலா குடும்பம்’ என்ற முத்திரையோடு, சக்தி வாய்ந்த ஒரு கூட்டம் தமிழகத்தில் உருவானது. அரசியல், அதிகாரம், தொழில்கள், வியாபாரம் என அனைத்திலும் அந்தக் குடும்பம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுக்கு எனத் தனித்தனி ராஜ்ஜியங்களை உருவாக்கி ஆட்சி நடத்தினர். 33 ஆண்டு காலம் மெள்ள மெள்ள எழுப்பப்பட்ட அந்த சாம்ராஜ்ஜியங்கள் அனைத்தும், கடந்த மூன்று மாதங்களில் மளமளவென சரிந்து விழுந்தன.

P2.jpg

‘சின்னம்மா’ என்று அழைக்கப்பட்ட சசிகலா, சிறைக்குள் அடைபட்டுக்கிடக்கிறார். “நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துவோம்... எங்கள் குடும்பத்தின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கும்” என்று சொன்ன நடராசன், மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். “டெல்லியின் சூழ்ச்சிகளை ஒரு நொடியில் தூள்தூளாக்கினோம்” எனப் பெருமை பேசிய திவாகரன் மர்ம மௌனத்தில் தவிர்க்கிறார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் நடந்த அன்று சைரன் வைத்த காரில் பறந்த மகாதேவனை, மரணம் அழைத்துக்கொண்டது. ‘இனி, கட்சியும் ஆட்சியும் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் குடும்ப உறவுகளையே ஒதுக்கிவைத்த தினகரனை, அ.தி.மு.க அமைச்சர்கள் ஒதுக்கிவிட்டனர். ஐ.டி துறை அடுத்தடுத்து நடத்திய ரெய்டுகளால் டாக்டர் வெங்கடேஷ், குளிர்க் காய்ச்சலில் உறைந்துவிட்டார். ‘‘தற்போது, அ.தி.மு.க என்ற கட்சியில் அந்தக் குடும்பத்தின் பிடி அறவே இல்லை’’ என்கிறார்கள் மூத்த அமைச்சர்கள். ஆட்சி அதிகாரத்தில் அவர்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. எங்கே தொடங்கியது இந்த வீழ்ச்சி?

சசிகலாவும் மோடியும்

2011-ம் ஆண்டு, தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி. அந்த நேரத்தில் குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சி. அரசியலைத் தாண்டி ஜெயலலிதாவும் மோடியும் அக்கறையான நண்பர்களாக இருந்தனர். அந்த வகையில், ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள குஜராத்தில் இருந்து நர்ஸ் ஒருவரை போயஸ் தோட்டத்துக்கு அனுப்பிவைத்தார் மோடி. ஜெயலலிதாவின் டயட், உடற்பயிற்சி ஆகியவற்றை அந்த நர்ஸ் கவனித்துக்கொண்டார்.  திடீரென ஒருநாள், மோடியின் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட அந்த நர்ஸ், “என்னால் இங்கு இருக்க முடியாது. இந்த வீட்டில் உள்ள இரண்டு பெண்கள் என்னை மிரட்டுகிறார்கள். என் வேலையைப் பார்க்க அவர்கள் விடுவதில்லை” என்று புகார் வாசித்தார். மோடியின் கவனத்துக்கு அந்தப் புகார் போனது. உடனடியாகத் தொலைபேசியில் ஜெயலலிதாவைத் தொடர்புகொண்டார் மோடி. “நான் அனுப்பிய நர்ஸை அங்கே யாரோ இரண்டு பெண்கள் மிரட்டுகிறார்களாமே... யார் அவர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் விசாரித்தார். அந்தப் பெண்கள் சசிகலாவும் இளவரசியும்தான் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். ஆனால், அவர் அதை மோடியிடம் தெரிவிக்கவில்லை. ‘‘நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று சொன்ன ஜெயலலிதா, அதன் பிறகு அந்த நர்ஸைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

p2a.jpg

பிறகு, அந்தப் பெண்களில் ஒருவர் சசிகலா என்று மோடி தெரிந்துகொண்டார். சசிகலாவைப் பற்றி அவர் மனதில் நெகட்டிவ் பிம்பமே பதிந்தது. அடுத்தடுத்த நிகழ்வுகளும் மோடியின் எண்ணத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே நடந்தன. அதன் ஒட்டுமொத்த எதிர்வினையாக, சசிகலாவின் ராஜ்ஜியம் தற்போது சரிக்கப்பட்டுவிட்டது.

சசிகலாவின் அஸ்தமனம்!

2016 செப்டம்பர் 22-ம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதற்கு மறுநாளே, அப்போலோ மருத்துவமனையை சசிகலாவின் குடும்ப உறவுகள் ஆக்கிரமித்துக்கொண்டன. அவர்கள் அனைவரும் ஏற்கெனவே ஜெயலலிதாவால் துரத்திவிடப்பட்டவர்கள். கட்சியும் ஆட்சியும் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பி.ஜே.பி., ஆட்சிக்கலைப்பு என்ற கோஷத்தை தமிழகத்தில் பரவவிட்டது.

பி.ஜே.பி-யின் முயற்சியை முறியடிக்க நினைத்த சசிகலாவின் கணவர் நடராசன், ராகுல் காந்தியை அழைத்துவந்து அப்போலோ மருத்துவமனை முன்னால் நின்று பேட்டி கொடுக்கவைத்தார்.  “இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் ஆதரவை தெரிவிக்கவே வந்தேன்” என்றார் ராகுல் காந்தி. ஜெயலலிதாவைப் பார்க்கவந்த முதல் அகில இந்தியத் தலைவர் அவர்தான்.

அந்தக் கணமே அ.தி.மு.க-வை அழித்தொழிக்கும் வேலைகளை வேகமாகத் தொடங்கினார் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா. சசிகலாவின் குடும்பத்தை அகற்றினால் மட்டுமே அ.தி.மு.க-வைத் தங்கள் இஷ்டத்துக்கு ஆடவைக்க முடியும் என்று பி.ஜே.பி முடிவு செய்தது. விறுவிறுவெனக் காய்கள் நகர்த்தப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார் என்ற தகவல் டெல்லியை எட்டியதும், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு சென்னைக்கு வந்தார். அவருடைய தலைமையில், சசிகலாவுக்கு முதல் தலைவலி ஆரம்பித்தது. ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்க வேண்டும்’ என்பது சசிகலாவின் எண்ணமாக இருந்தது. அதற்கு முட்டுக்கட்டை போட்டார் வெங்கைய நாயுடு. அதன் பிறகு, வேறு வழியில்லாமல் பன்னீர்செல்வத்தையே முதல்வர் ஆக்கினார் சசிகலா. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, சசிகலா எடுத்துவைக்க நினைத்த முதல் அடியிலேயே அவருக்கு அடி விழுந்தது.

p2b.jpg

குடும்பத்துக்குள் வெட்டுக்குத்து!

‘ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இனி சசிகலாதான் எல்லாம்’ என்று அவருடைய குடும்பத்தின் குட்டி ராஜாக்கள் நினைத்தனர். சசிகலாவோடு இருந்து கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்த திவாகரன், மகாதேவன், பாஸ்கரன், தினகரன், டாக்டர் வெங்கடேஷ் என ஆளாளுக்குப் போட்டிபோட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தூது அனுப்பி, சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக முன்மொழியவைத்தார் திவாகரன். பன்னீர்செல்வமும் அப்படியே செய்தார். சசிகலா பொதுச் செயலாளர் ஆனதும், தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் கைகோத்துக்கொண்டனர். சசிகலாவை அவர்கள் இருவரும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். திவாகரன், பாஸ்கரன், மகாதேவன் என அனைரையும் ஒதுக்கிவைத்தனர். நடராசனால் இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு, அவருடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. பன்னீர்செல்வத்திடம் இருந்து பதவியைப் பறிக்க தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் சசிகலாவைத் தூண்டினார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சசிகலா, அவர்கள் சொன்னதை அப்படியே செய்தார். பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கப்பட்டது. பன்னீர்செல்வத்துக்கு பி.ஜே.பி கொடுத்த முதல்வர் பதவியை, தினகரனும் டாக்டர் வெங்கடேஷும் சசிகலாவை வைத்துப் பறித்தனர்.

தோண்டி எடுக்கப்பட்ட வழக்குகள்!

மத்தியில் இருக்கும் பி.ஜே.பி அரசு, சசிகலா குடும்பத்தின் இந்தச் செயலால் கொதித்துப்போனது. ‘ஆபரேஷன் சசிகலா’ ஆரம்பமானது. புதிய புகார்கள், புதிய வழக்குகள், புதிய சிக்கல்கள் எதுவும் தேவைப்படவில்லை. எல்லாவற்றுக்கும் 1991 - 96 காலகட்டத்தில் சசிகலாவும், அவருடைய குடும்பமும் செய்த காரியங்களே போதுமானவையாக இருந்தன. சட்டமன்ற ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. பன்னீர்செல்வம், கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினார்.

‘முதல்வராக வேண்டும்’ என்கிற சசிகலாவின் கனவை, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு தகர்த்தது. ஏழு மாதங்களாக தேதி அறிவிக்காமல் ஒத்திபோடப்பட்டு இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில், மிகச் சரியாக இந்தத் தருணத்தில் தீர்ப்புத் தேதி வெளியானது. நடராசன் மீதான வெளிநாட்டுக் கார்கள் வழக்கு விசாரணை, வேகம் பிடித்தது. தினகரன், சசிகலா மீதான ஃபெரா வழக்குகள் விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் நாற்காலியைப் பிடித்த சசிகலாவால், முதல்வர் நாற்காலியில் அமர முடியாமல் போனது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் அவர் அடைக்கப்பட்டார்.

p2c.jpg

துரத்தப்பட்ட தினகரன்!

சசிகலாவோடு அந்தக் குடும்பத்தின் சகாப்தம் முடிந்துவிடும் என்று நினைத்த மத்திய அரசுக்கு, தினகரன் தலைவலியாக மாறினார். கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக திடீரென ஆன அவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். பன்னீர் தரப்பு களத்தில் இறங்க, இரட்டை இலைச் சின்னம் பறிபோனது. ஆனால், தினகரன் அசரவில்லை. பணத்தைத் தண்ணீராக இறக்கி, வெற்றி முகம் காட்டினார். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார் என்று உளவுத்துறை ரிப்போர்ட் போனது.

இந்த நேரத்தில் தினகரனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளைத் தேடித்தேடி ரெய்டு நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளில் கிடைத்த ஆவணங்கள், இந்தியாவையே அதிரவைத்தன. ஆர்.கே. நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய, இது போதுமான ஆதாரமாக இருந்தது.

இதற்கிடையில், ‘இரட்டை இலைச் சின்னத்தைத் திரும்பப் பெற 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க தினகரன் முயன்றார்’ என்று சொல்லி, டெல்லி போலீஸ் வழக்குப் பதிவுசெய்தது. `தினகரனோடு இருக்கும் அமைச்சர்களின் வீடுகளும் ரெய்டு பட்டியலில் இருக்கின்றன’ என்ற செய்தி கசியவிடப்பட்டது. ‘இதற்கு மேல் தினகரனைத் தாங்கிப்பிடித்தால் தங்கள் மடிக்கு ஆபத்து வந்துவிடும்’ என்பதை அ.தி.மு.க அமைச்சர்கள் உணர்ந்தனர். தினகரனின் தலையீடு இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் இனி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதே நேரத்தில், ஃபெரா வழக்கு விசாரணையும் தீவிரம் பெற்றது. அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத தினகரன் “நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று கூலாகப் பேட்டி கொடுத்து சரண்டர் ஆகிவிட்டார்.

கப்சிப் ஆன டாக்டர் வெங்கடேஷ்!

இவ்வளவு சிக்கல்களில் சசிகலா குடும்பம் சிக்கிக்கொண்டதற்கும், அவர்களின் பிடி தளர்ந்ததற்கும், முக்கியக் காரணம் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன்தான். சசிகலாவை, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றத் துண்டியவர்கள் இவர்களே. சசிகலா சிறைக்குப் போனதுமே டாக்டர் வெங்கடேஷ் எங்கும் தென்படாமல் பதுங்கிக்கொண்டார். அதற்கு முக்கியக் காரணம், அடுத்தடுத்து நடந்த ரெய்டுகளால் அவர் அரண்டு போனதுதான். ஏனென்றால், டாக்டர் வெங்கடேஷ் வசம் இருக்கும் சொத்துகள் அப்படி. எதையும் பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அவர் கழுத்துக்கும் கத்தியை நீட்டுவதற்குத் தயாராகவே இருக்கிறது வருமானவரித் துறை.

முறைகேடாகச் சேர்த்த சொத்துகள், அதிகாரவெறியால் அவசரகதியில் எடுத்த முடிவுகள், குடும்ப உறவுகளுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிவைத்த குழிகள் ஆகியவையே சசிகலாவின் ராஜ்ஜியம் சரிந்துவிழக் காரணமாக அமைந்துவிட்டன.
 

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் : தினகரன்

Mon, 24/04/2017 - 10:31
சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் : தினகரன்

 

புதுடில்லி : சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் என விசாரணையின் போது தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

 

துருவி, துருவி விசாரணை :


இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் மொபைல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
 

 

ஒரே வரியில் பதில் :


ஏற்கனவே 2 நாட்களாக, தலா 10 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது பெரும்பாலான கேள்விகளுக்கு தினகரன் ஒரே வரியில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3வது நாளாக இன்றும் (ஏப்ரல் 24) விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தினகரன் ஆஜராக உள்ள நிலையில், நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது தனக்கு சுகேசை முன்பே தெரியும் என தினகரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

 

நீதிபதி என நினைத்தேன் :


இதற்கு முன்பு வரை சுகேசை தனக்கு யார் என்றே தெரியாது என தினகரன் கூறி வந்தார். ஆனால் நேற்று நடந்த விசாரணையின் போது, 'சுகேசை எனக்கு முன்பே தெரியும். அவரை ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசினேன்' என தினகரன் கூறி உள்ளதாக கூறப்படுகிறது. சுகேசுடன் தனக்கு தொடர்பு இருப்பதை தினகரன் ஒப்புக் கொண்டுள்ளதால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேசை அளித்துள்ள வாக்குமூலம் உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு டில்லி போலீஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758009

Categories: Tamilnadu-news

‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive

Mon, 24/04/2017 - 07:40
‘இப்படி இருந்தால் என்னதான் செய்வது?!’ - சிறையில் நொந்து புலம்பிய சசிகலா #VikatanExclusive
 
 

சசிகலா

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், இணைப்பு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. 'ஜெயலலிதா இருந்த நேரத்தில் அமைச்சரவை எப்படி இருந்ததோ, அதைப்போல நிதியமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என்பதுதான் அமைச்சர்களின் விருப்பம். இப்படியொரு இணைப்பு நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உள்ளடி வேலைகளும் தொடங்கிவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

‘சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருக்கக் கூடாது’ என்ற நிபந்தனையை முன்வைத்து, பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது குழுவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், மா.ஃபா. பாண்டியராஜன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதே போல், மாநிலங்களவை எம்பி., வைத்திலிங்கம் தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று மாலை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. "இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பின் தலைவர்களும் உறுதியாக இருந்தாலும், சிலரது இடையூறுகளால் 'பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடக்குமா?' என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 'அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கியாக வேண்டும்' என மூத்த அமைச்சர்கள் தூக்கிய போர்க்கொடிதான், தினகரனை ஒதுக்கி வைக்கும் அளவுக்குச் சென்றது. 'இந்த நடவடிக்கைகளின் பின்னால் திவாகரன் இருக்கிறார்' என்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. 'அவர் சிறையில் இருந்து வரும் வரையில் கமிட்டியே கட்சியை வழிநடத்த வேண்டும்' என்பதுதான் சசிகலா குடும்பத்தின் விருப்பம். அதைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

எடப்பாடி பழனிசாமி"சசிகலா குடும்பத்துடன் நேரடியாக சண்டையிட்டு, மக்களிடம் நியாயம் கேட்டுச் சென்றார் பன்னீர்செல்வம். அவருடைய முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிளம்பியது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எம்.எல்.ஏக்களை அவரால் இழுக்க முடியவில்லை. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தையும் நிரூபித்தார் பழனிசாமி. இந்நிலையில், இரண்டு தரப்பும் இணைந்து செயல்படலாம் என்ற முடிவை எட்டிய பிறகு, 'மீண்டும் முதல்வர் பதவியை பன்னீர்செல்வத்துக்குத் தர வேண்டும். சசிகலா ஆதரவு முதல்வரான பழனிசாமியை மக்கள் எப்படி ஏற்பார்கள்?' எனக் கொதித்தார் கே.பி.முனுசாமி. இதை ரசிக்காத பழனிசாமி தரப்பினரும் பன்னீர்செல்வம் அணியைக் கிண்டலடித்தார்கள். '122 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்களில் பலரும் எடப்பாடியை ஆதரிப்பார்கள்' என வரிந்து கட்டிக் கொண்டு அமைச்சர்கள் கிளம்பினர்.

இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, வைகைச் செல்வன், தங்க.தமிழ்ச்செல்வன், இன்பதுரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து, 'என்னுடைய உத்தரவில்லாமல் யாரும் எதையும் பேசக் கூடாது. விவகாரத்தை சுமூகமாக முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். உங்களுடைய பேச்சுக்களால் எதையும் கெடுத்துவிட வேண்டாம்' எனக் கறாராக உத்தரவிட, 'முதல்வர் சொன்னால்தான் பேசுவோம்' எனப் பேட்டி அளித்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதையடுத்து, 'அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கியாக வேண்டும். செம்மலை, பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். கே.பி.முனுசாமிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பன்னீர்செல்வம் தரப்பினர் முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைத்துள்ள குழு பேசி முடிவெடுக்கும். 'நிதி அமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வாரா?' என்பதும் பேச்சுவார்த்தையின் முடிவில் தெரியவரும்" என்றார் விரிவாக. 

பன்னீர்செல்வம்"கட்சி மற்றும் ஆட்சி ஆகிய இரண்டிலும் தலைமைப் பொறுப்பை வழங்க வேண்டும் என்பதுதான் பன்னீர்செல்வத்தின் விருப்பம். இது அவருடைய எண்ணம் மட்டுமே. இதற்கு டெல்லி பா.ஜ.க தலைமை எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. 'உங்கள் உள்கட்சி பிரச்னையை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் யார் பக்கமும் இல்லை' எனக் கூறிவிட்டனர். 'எடப்பாடி பழனிசாமியே முதல்வர் பதவியில் தொடர்வார்' என்பதை தம்பிதுரையும் உறுதியாகக் கூறிவிட்டார். இதனால், எதையும் கேட்டுப் பெற்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் பன்னீர்செல்வம். கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள், 'ஆட்சி அதிகாரம் பறிபோகட்டும்' என்ற மனநிலையில் பேசி வருகின்றனர். ஆனால், பன்னீர்செல்வம் மௌனமாக இருக்கிறார். ' பேச்சுவார்த்தைக்கு முன்பே நிபந்தனைகளைப் பற்றி வெளியில் எப்படிச் சொல்வது?' என நிதானமாகவே காய் நகர்த்தி வருகிறார். 'நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம்' என சசிகலா தரப்பு பேசுவதற்குக் காரணமே, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ரிவியூ மனு தாக்கல் செய்யும் முடிவில் இருப்பதால்தான். கடந்த வாரத்திலேயே இதற்கான பணிகளை வேகப்படுத்த இருந்தனர். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிக்கியதால், இந்த முயற்சி தாமதமாகிவிட்டது. ' இப்படி இருந்தால் என்னதான் செய்வது?' என மிகுந்த மனவேதனையில் இருக்கிறார் சசிகலா. தன்னை சந்திக்க வந்த வழக்கறிஞர் நாமக்கல் செந்திலிடம் வேதனையைச்  சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் இருந்து ஒதுங்கிவிட்டால், ரிவியூ மனு ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் சிறை வளாகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்" என்றார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

முதல்வர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசி வருகிறது. பொருளாளர் பதவி பிளஸ் இரண்டு அமைச்சர்கள் மற்றும் இரண்டு துணைப் பொதுச் செயலாளர் பதவிகளை பன்னீர்செல்வம் தரப்புக்கு வழங்க வேண்டும்; தலைமைக் கழகத்தில் உள்ள சசிகலா, தினகரன் படங்கள் அப்புறப்படுத்தப்படும்; ஜெயலலிதா மரணம் குறித்து நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் காத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

 

'இரண்டு அணிகளும் இணைவதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது' என்றெல்லாம் பேசி வந்த தங்க.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள், தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 'பேச்சுவார்த்தை தொடங்கும் நேரத்தில் இப்படியொரு கூட்டம் தேவைதானா?' என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் நிலையிலும் அவர்கள் இல்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/87375-sasikala-is-upset-over-aiadmk-developments.html

Categories: Tamilnadu-news

கலகலக்குமா... சலசலக்குமா..! பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியினர் இன்று முதல்கட்ட பேச்சு

Mon, 24/04/2017 - 06:28
கலகலக்குமா... சலசலக்குமா..! பன்னீர்செல்வம்- பழனிசாமி அணியினர் இன்று முதல்கட்ட பேச்சு
 
 

சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் எடப்பாடி அணி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Opsvs Eps
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. சசிகலா தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் உருவானது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சசிகலா அணியினர் தினகரன் உத்தரவுகளின் கீழ் செயல்பட்டதாக கூறப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது. மற்றொரு புறம் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இரட்டை இலைச் சின்னத்தை பெற இடைத்தரகர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தது டெல்லி போலீஸ். 

இதற்கிடையே சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அத்தகவலை உறுதிபடுத்தும் வகையில், ’அ.தி.மு.க-வின் இரு அணிகளும் சேர்வதற்கான பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், டி.டி.வி தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டதாக அறிவித்தனர்.

தற்போது, இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து இருதரப்பிலும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இரு அணிகளும் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஓபிஎஸ் அணியுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏழு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சுமுகமாக முடிந்தால் அதிமுக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருத்தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதால், தலைமை அலுவலகம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87367-admk-merger-two-teams-to-hold-first-level-meet.html

Categories: Tamilnadu-news

பெரியகுளத்தில் விழுந்த குருவும் சிஷ்யனும்!

Mon, 24/04/2017 - 05:43
மிஸ்டர் கழுகு: பெரியகுளத்தில் விழுந்த குருவும் சிஷ்யனும்!
 

மக்கு முன்பாகவே ஆபீஸுக்கு வந்து காத்திருந்த கழுகார், தன் லேப்டாப்பில் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். எழுத்தாளர் மாதவ ராஜ், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்ததைக் காட்டினார். 

‘அந்த சதுரங்க ஆட்டத்தின் ஒரு பக்கம் ஒன்றிரண்டு காய்களே இருந்தன. ராஜாவே இல்லை. மறுபக்கம் ஒன்றிரண்டு காய்கள் மட்டும்தான் இல்லை. ராஜா, ராணி, குதிரைகள், யானைகள் என படை பட்டாளங்களோடு இருந்தன. முடிந்த விளையாட்டை வைத்து ஒரே ஆள் யோசித்துக் கொண்டு இருந்தான். இரண்டு பக்கமும் அவனே காய்களை நகர்த்தினான். சிரித்துக்கொண்டான். வெட்டினான். கைதட்டிக்கொண்டான். எல்லாக் காய்களும் கருப்பு நிறத்திலேயே இருந்தன. இதையும் ஒரு விளையாட்டு என ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.’ என அந்தப் பதிவு நடப்பு அரசியலை விளாசியிருந்தது.

p42.jpg‘‘அமைச்சர் கே.சி.வீரமணி, ‘மத்திய அரசு, அ.தி.மு.க அரசைக் கலைக்கத் திட்டமிட்டது. ஒரு குடும்பத்துக்காக கட்சியையும் ஆட்சியையும் இழக்க விரும்பவில்லை. அதனால்தான், அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து, அந்தக் குடும்பத்தை விலக்கி வைத்துவிட்டோம்’ என ஜோலார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். உண்மைநிலையை இதைவிட அப்பட்டமாக சொல்லமுடியாது’’ என்றார் கழுகார். 

‘‘ஆனால், அ.தி.மு.க-வில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பேசுகிறார்களே?”

‘‘ஆமாம்! கட்சியினருக்கே தலை சுற்றுகிறது. ‘அ.தி.மு.க-வுக்குள் என்ன நடக்கிறது? என்னவெல்லாம் நடக்கும்? யார் பேசுவது நிஜம்? யாருக்கு யார் விசுவாசமாக இருக்கிறார்கள்? யார் எங்கெங்கு போட்டுக் கொடுக்கிறார்கள்’ என்றே தெரியவில்லை. இது எங்கே போய் நிற்கும் என்றும் தெரியவில்லை. உடைந்த கட்சி ஒட்டிக்கொள்ளுமா, இந்த ஆட்சி தொடர்ந்து நிலைக்குமா? என்ற கேள்விகளுக்குப் பதிலே இல்லை!” 

‘‘தினகரன் எப்படி திடீரென்று அவராகவே பின்வாங்கினார்?”

‘‘அவராக விலக தினகரன் என்ன அப்பாவியா? வேகமாக சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி, அதைவிட வேகமாக அவரை சிறைக்கு அனுப்பியதில் காரண கர்த்தாவாக தினகரன் இருக்கிறார். சசிகலா சிறைக்குப் போகும் நேரத்தில், தன்னையும் தனது மச்சான் வெங்கடேஷையும் மட்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள கையெழுத்துப் போட வைத்தவர் தினகரன். துணைப்பொதுச்செயலாளர் ஆன கோதாவில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். ‘போட்டியிட வேண்டாம்’ என சசிகலா சொன்னதை மீறித்தான் அவர் நின்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதும், உடனடியாக முதலமைச்சர் ஆவதும்தான் தினகரனின் திட்டம். அதில் மொத்தமாக மண் விழுந்துவிட்டது. இப்படி பதவிக்கு மேல் பதவிகளை அடைய பச்சையாகக் கிளம்பிய தினகரன், திடீரென்று, ‘நான் விலகிக்கொள்கிறேன்’ என்று சொன்னால் நம்ப முடியுமா என்ன?”

p42a.jpg

‘‘நம்ப முடியாதுதான். நீர் சொல்லும்... ஏன் இந்த முடிவாம்?”

‘‘வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, டெல்லி போலீஸ், தேர்தல் கமிஷன் என நாலாபுறமும் சாட்டைகள் சுழல, சுருண்டுவிட்டார் தினகரன். ‘ஏற்கெனவே ஃபெரா வழக்குகள் உள்ளன. இரட்டை இலையை வாங்க லஞ்சம் கொடுத்தார் என்று புது வழக்கும் பதிவாகி சம்மனும் வந்துவிட்டது. இதிலிருந்து மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். அ.தி.மு.கவை கைப்பற்றுவது, முதலமைச்சர் ஆவது என தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், வழக்குகளை இன்னும் இறுக்கி விடுவார்கள் என தினகரன் பயந்தார். அதனால்தான் இப்படி ஒரு முடிவை எடுத்தார்’ என்று சொல்கிறார்கள். இன்னொரு முக்கியக் காரணம்...”

‘‘அது என்ன?”

‘‘ஏப்ரல் 14-ம் தேதி தினகரன் வீட்டில் என்ன நடந்தது என்பதை கடந்த இதழில் உமது நிருபர் எழுதி இருந்தார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரும் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார் தினகரன். அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், உடுமலை ராதா கிருஷ்ணன் ஆகியோர் மட்டும்தான். எம்.எல்.ஏ-க்களில் எத்தனை பேர் தன் பக்கம் வருவார்கள் என கணக்கெடுத்தார் தினகரன். முதல் பட்டியலில் தனக்கு அறிமுகம் ஆன 40 எம்.எல்.ஏ-க்கள் பெயரை எழுதினார். அவர்களிடம் ஆட்கள் மூலமாக பேசத் தொடங்கியபிறகு 21 பேர் மட்டுமே லைனில் வந்தார்களாம். மற்றவர்கள் ‘என்ன ஏது’ என்றுகூட கேட்கவில்லையாம். ஒரு கட்டத்தில், ‘தன் பக்கம் நிற்பதற்கு பத்துப் பேருக்குமேல் தேறுவது கஷ்டம்’ என்பதும் அவருக்குத் தெரியவந்ததாம். இப்படியே போனால் தன்னை, கட்சியை விட்டே விலக்கி விடுவார்கள் என்று பயந்தாராம்!”

‘‘ஓஹோ!”

‘‘அவரே சில அமைச்சர்களுக்கு போன் போட்டு, ‘நான் வேண்டுமானால் விலகி விடுகிறேன்’ என்று சொல்லிப் பார்த்துள்ளார். ‘வேண்டாம்’ எனத் தடுப்பார்களா என்று ரியாக்‌ஷன் பார்ப்பதற்காகச் சொன்னாராம். ‘இவர் எப்படா சொல்வார்’ என்று காத்திருந்தது போல, ‘ஓகே’ என்றார்களாம். தினகரனின் குடும்பத்தினரும், ‘நீங்கள் எந்தப் பதவியிலும் இருக்க வேண்டாம். வெளியில் இருந்தால் போதும். இப்போது சுதாகரன் குடும்பம் அனுபவிக்கும் கஷ்டம் நமக்கும் வந்துவிடக் கூடாது’ என்றார்களாம். தினகரன் இதனால் குழப்பத்தில் இருந்தார்.’’

‘‘அப்படியா?”

‘‘இந்த நேரத்தில்தான், அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் கூடினார்கள். ‘தினகரன் குடும்பத்தினர் ஆதிக்கம் இருக்கக் கூடாது’ என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் சொல்லச் சொன்னார்கள். அவர் தயக்கத்தில் சொல்லவில்லை. மறுநாள் காலையில் தினகரனை அமைச்சர்கள் செங்கோட்டையனும் திண்டுக்கல் சீனிவாசனும் போய் பார்த்தார்கள். அப்போது இவர்கள் இருவரும் தன்னிடம் மனம்விட்டுப் பேசவில்லை என்பதை தினகரன் உணர்ந்தார். அதுவரை தங்கமணி, வேலுமணி கோஷ்டியில் இவர்கள் இருவரும் சேரவில்லை. ஆனால் அமைச்சர்கள் அனைவரிடமும் செங்கோட்டையனும் திண்டுக்கல் சீனிவாசனும் பேசியபோது, எல்லோருமே தினகரனுக்கு எதிர்ப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். மரியாதை நிமித்தமாகப் போய் தினகரனிடம் நைஸாகச் சொல்லவே இவர்கள் போனார்கள். ஆனால் சொல்லவில்லை. ஆனால், அனைத்தையும் உணர்ந்தவராக தினகரன் இருந்தார். இவர்கள் இருவரும் சொல்லாமலே, அமைச்சர்கள் மனதில் நினைப்பது தினகரனுக்குப் புரிந்தது. மோதல் வேண்டாம் என்று இறுதி முடிவை எடுத்தார்!”

‘‘தினகரன் விலகினாலும், எடப்பாடியும் பன்னீரும் சேருவது அவ்வளவு ஈஸியான விஷயம் போலத் தெரியவில்லையே?”

‘‘உண்மைதான். தினகரனை நீக்குவதோடு எல்லாப் பிரச்னையும் முடிந்துவிடுமா என்ன? பிரச்னையே முதலமைச்சர் பதவியை வைத்துத்தான் நடக்கிறது. ‘இணைப்புக்குத் தயார், எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும்’ என்பதுதான் பன்னீர்செல்வத்தின் கோரிக்கை. ‘முதல்வர் பதவியை விட்டுத்தர மாட்டேன்’ என்கிறார் எடப்பாடி பழனிசாமி. பிறகு எப்படி இணைப்பு சாத்தியம் ஆகும்?”

‘‘ம்!”

‘‘தற்போது அதிகாரம் பொருந்தியவராக ஆகிவிட்டார் எடப்பாடி. அனைத்து அமைச்சர்களும் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க் களும் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால், ‘யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே ஆட்சியை நடத்திச் செல்லலாம்’ என நினைக்கிறார். ‘இனி, பன்னீர் எதற்கு? எக்காரணம் கொண்டும் அம்மா ஆட்சியை அவர் கவிழ்க்கமாட்டார். ஏதாவது குழப்பினால், அவரது கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் பதவிக்காக நம் பக்கம் தாவிவிடுவார்கள். அதுவரை பொறுப்போம். பிறகு பார்க்கலாம்’ என எடப்பாடி கோஷ்டி அமைச்சர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் பகிரங்கமாகப் பேசியதாக தகவல். இது பன்னீர் காதுக்கு வந்து சேர்ந்ததும் பதற்றம் ஆகிவிட்டாராம். பன்னீர்செல்வத்திற்கு மீண்டும் நிதி அமைச்சர் பதவி தருவதாகவும், அவருடன் இருக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி தரத்தயார் என்றும் அரசல்புரசலாக சொல்லி அனுப்பினார்கள். மற்றபடி, முதல்வர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியெல்லாம எதிர்பார்த்தால்... ஒரு கும்பிடுதான் என தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். இது பன்னீர் அணியினரை டென்ஷன் ஆக்கியது. ‘நாங்கள் நினைத்தால், இரட்டை இலையை முடக்கி விடுவோம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டால், அவர்கள் பன்னீர்செல்வத்தைத்தான் ஆதரிப்பார்கள். தொண்டர்களும் அப்படித்தான். இது புரியாமல் ஆடினால் தக்க பதிலடி தருவோம்’ என சொல்ல ஆரம்பித்தார்கள்!”

‘‘ஈகோ போட்டி களை கட்டுகிறதோ?”

‘‘தினகரன் விலகுவதாகச் சொன்னதை, ‘இது எங்களின் தர்ம யுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி’ என்றார் பன்னீர். இது அமைச்சர் ஜெயக்குமாரை கோபப்படுத்தியது. ‘இப்படியே போனால் அமெரிக்காவில் ட்ரம்ப் ஜெயித்ததற்கும் தான்தான் காரணம் என்று பன்னீர் சொல்வார்’ என்று கிண்டல் அடித்தார். இது பன்னீரை எரிமலை ஆக்கியது. ‘ஏதோ நம்ப வைத்து கழுத்தறுக்கப் பார்க்கிறார்கள்’ என்று பன்னீருடன் இருக்கும் கே.பி.முனுசாமி கொதித்தார். ‘இன்னமும் அவர்கள் சசிகலாவை நீக்கவில்லை, தினகரனை நீக்கவில்லை, அவர்களை நீக்காமல் எந்த இணைப்பும் சாத்தியம் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில், இரண்டு நிபந்தனைகளை அவர்கள் முதலில் நிறைவேற்றவேண்டும். ஒன்று, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக் கடிதம் அனுப்பவேண்டும். மற்றொன்று, தினகரன், சசிகலா... இருவரிடமும் அதிகாரபூர்வமாக ராஜினாமா கடிதம் வாங்கி அதை அறிக்கையாகத் தரவேண்டும். இந்த இரண்டையும் செய்தால்தான், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வருவோம். ஏனென்றால், சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் குடுமிப்பிடி சண்டையில் தினகரனை வெளியேற்ற திவாகரனும், நடராசனும் எடப்பாடி கோஷ்டியினரை பகடைக்காயாக பயன்படுத்தி யிருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. தினகரன் வெளியேற்றமே ஒரு நாடகமாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. யாரோ ஒருவர் பாதுகாப்பில் விஜயபாஸ்கர் இருந்துவருகிறார்’ என வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தார் கே.பி.முனுசாமி. இப்படி வார்த்தைகள் இரண்டு பக்கமும் தடிப்பதால், ‘இணைப்பே சாத்தியம் இல்லை’ என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.”

‘‘அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடியை ஆதரிக்க ஆரம்பித்தது எப்படி?”

‘‘ரெய்டு அஸ்திரம்தான் காரணம். ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான பணப் பட்டுவாடா பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிடமிருந்து எடுத்தார்கள் அல்லவா? அதில் விஜயபாஸ்கர் முழிபிதுங்கி நிற்கிறார். அந்தப் பட்டியலில் பல அமைச்சர்களின் பெயர்கள் இருக்கின்றன. அனைத்து அமைச்சர்கள் வீடுகளுக்கும் வருமானவரித் துறை ரெய்டு வரப்போவதாக மிரட்டப்பட்டார்கள். ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலைப் பார்வையிட வந்த எம்.எல்.ஏ-க்களிடம், ‘கூவத்தூரில் நடந்த  பின்னணி விவகாரங்களின் ஆதாரங்களை வருமான வரித்துறை எடுத்துவிட்டது. அதனால் ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வீட்டிலும் ரெய்டு வரப் போகிறார்கள்’ என்று யாரோ வதந்தி கிளப்பினார்கள். தப்பிக்க என்ன வழி என்று உஷாரான ஒருவர் கேட்டாராம். ‘தினகரனை ஆதரிக்கக் கூடாது’ என்றாராம் அமைச்சர் ஒருவர். ‘அதனால் என்ன? நாம் தினகரனை ஆதரிக்க வேண்டாம்’ என்று அனைவரும் தலையாட்டினார்கள். அவ்வளவுதான். மொத்தமும் ஒரே ஒரு மிரட்டலில் முடிந்து விட்டதாம்!”

‘‘ம்!”

‘‘இதேபோல, ‘அமைச்சர்கள் பலரின் ஊழல் விஷயங்களைத் தோண்டி எடுத்துவிட்டார்கள். டெல்லி பி.ஜே.பி மேலிடத்துடன் இணக்கமாகப் போகவில்லை என்றால், நமக்கு அதோ கதிதான். இதில் யாருமே தப்ப முடியாது’ என்று படிப் படியாக ப்ரெய்ன் வாஷ் நடந்ததாம். அதையடுத்து தான், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியை கோரஸாக ஆதரிக்க ஆரம்பித்தார்கள்!”

‘‘திவாகரன் பங்கு இதில் இருப்பதாகச் சொல்கிறார்களே?’’

‘‘திவாகரன்தான் இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனையும் நடத்திவருவதாக டெல்டா ஏரியா அ.தி.மு.க பிரமுகர்கள் சொல்லி வருகிறார்கள். டெல்டா ஏரியாவில் கணிசமான எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் அவர் பேச்சைக் கேட்பார்கள். அதேநேரம், தஞ்சாவூரைச் சேர்ந்த எம்.பி. வைத்திலிங்கமும் முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்கு உள்ள தலைவர்தான். இவர் வசம் 9 எம்.எல்.ஏ-க்கள் 6 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சசிகலா குடும்பத்தினருடன் இவருக்கு மோதல் இருந்துவந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திவாகரனுடன் சமரசம் ஆகிவிட்டார் வைத்திலிங்கம்.’’

p42b.jpg

‘‘இவர் எப்படி எடப்பாடி பக்கம் வந்தார்?”

``எடப்பாடி கோஷ்டியினருக்கு டெல்டா ஏரியாவில் ஆதரவு இல்லை. இதை மனதில் கொண்டு, அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் வைத்திலிங்கத்தையும், அவரது சமூகத்தைச் சேர்ந்த திருச்சி எம்.பி-யான குமாரையும் தொடர்புகொண்டனர். அவர்கள் ஓகே சொன்னவுடன், எடப்பாடி கோஷ்டிக்கு ஆதரவு தேடும் படலம் சூடு பிடித்தது. வைத்திலிங்கத்துக்குப் பொதுச் செயலாளர் பதவி உண்டு என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம். தினகரன் விலகியதாக அறிவித்ததும், கட்சியின் இரண்டு கோஷ்டியினரும் ஒரே அணியில் சேரப்போவதை சுட்டிக்காட்டிய திவாகரன் மகன் ஜெயானந்த், தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வரவேற்று ட்வீட் போட்டிருந்தார். இந்த நிலையில், ‘சசிகலா தவிர வேறு யாரும் எங்கள் குடும்பத்தில் இருந்து நேரடி அரசியலுக்கு வரமாட்டார்கள். தினகரன் இதை மீறிவிட்டார். சசிகலாவின் ஆலோசனையைக் கேட்காமல் ஆர்.கே. நகரில் அவர் போட்டியிட்டதே தவறு. அவருக்கு உரிய பாடம் கற்பிப்போம்’ என்கிற ரீதியில் திவாகரன் சொன்னாராம். திவாகரன் பச்சைக்கொடி காட்ட... வைத்திலிங்கம் களத்தில் குதிக்க.. எடப்பாடி கோஷ்டிக்கு ஆதரவு குவிந்தது.”

‘‘இப்போது பி.ஜே.பி-யின் செல்லப்பிள்ளை ஓ.பி.எஸ்-ஸா... ஈ.பி.எஸ்-ஸா?”

‘‘பன்னீர்செல்வத்தால் தினகரனை விரட்ட முடியவில்லை. அதைச் செய்தது எடப்பாடி பழனிசாமி என்பதால், இப்போதைக்கு எடப்பாடிதான் பி.ஜே.பி-யின் செல்லப்பிள்ளை. பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செல்வாக்கான பக்கத்து மாநிலப்பதவியில் இருக்கும் பிரமுகர் ஒருவர்... இவர்களின் ஆலோசனைப்படி எடப்பாடி கோஷ்டி செயல்படுகிறது. பிரதமர் மோடிக்கு வேண்டப்பட்ட சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரின் ஆலோசனைப்படி ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பன்னீரை டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் ஆதரித்தனர். ஆனால், பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் அவர்பக்கம் இல்லை என்ற உண்மையை டெல்லி உணர்ந்துகொண்டிருக்கிறது. எடப்பாடி, பி.ஜே.பி-யின் எண்ண ஓட்டத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அரசியலில் காய் நகர்த்துகிறார். அது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. சமீபத்தில் நடந்திருக்கும் இரண்டு விஷயங்களைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம். தமிழக அரசு கேபிளுக்கு டிஜிட்டல்  உரிமை, கடந்த வாரம் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா கேட்டே கிடைக்காத விஷயம் இது. பிரதமர் மோடி தன் காரில் சிவப்பு விளக்கை அகற்றிய அடுத்த நாளே, தன் காரிலிருந்து சிவப்பு விளக்கை அகற்றுகிறார் எடப்பாடி. இதெல்லாம் பன்னீர் தரப்பை காய்ச்சலில் தள்ளி இருக்கிறது.”

‘‘இனி என்ன ஆகும்?”

‘‘குரு தினகரனைப் போலவே சிஷ்யர் பன்னீரும், அரசியல் காய் நகர்த்தலில் தாக்குப் பிடிக்க முடியாமல், பெரியப்குளத்தில் விழுந்து விட்டார். ‘நீயும் பொம்மை... நானும் பொம்மை...’ என இருவரும் சோக கீதம் இசைக்க வேண்டியது தான்!” என்ற கழுகார், சட்டென பறந்தார்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை!

Mon, 24/04/2017 - 05:31
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை!
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Kodanad
 

நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக  அங்கு பணியாற்றி இருக்கிறார். நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல், இவரைக் கொலைசெய்துவிட்டுத்  தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில், கொடநாடு எஸ்டேட் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த எஸ்டேட் தற்போது, டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், அவரைக் கொன்றுவிட்டுக் கொள்ளையடிக்க முயன்றனரா அல்லது முக்கிய ஆவணங்களைக் கடத்த முயன்றனரா என போலீஸார் தீவிர விசாரணை  நடத்திவருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87359-jayalalithaas-kodanad-estate-watchman-brutally-killed.html

Categories: Tamilnadu-news

இந்தி பேசாத மாநிலங்கள் மீது எறியப்பட்டிருக்கும் கொத்துக்குண்டு... என்ன செய்யப்போகிறோம்?

Sun, 23/04/2017 - 16:14

azhi_senthilnathan_3157200f.jpg

முதன்முறையாகத் தமிழகம் தவிர்த்த இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல்வாதிகளும்கூட அச்சப்படக்கூடியதாக அது இருந்தது. தனது முயற்சியில் மனம் தளராத மோடி அரசு மிகப் பெரிய கொத்துக்குண்டு ஒன்றை இந்தி பேசாத மாநிலங்களின் மீது வீசியிருக்கிறது. ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு என்கிற மத்திய அரசுக் குழு ஒன்றின் பரிந்துரைகளைக் கடந்த மார்ச் 31, 2017-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்று ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தப் பரிந்துரைகள் நமது வேலைவாய்ப்பு, கல்வி, மொழி உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதலாக அமைந்திருக்கின்றன.

குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் எல்லோரும், அவர்களுக்கு இந்தி எழுதப் பேசத் தெரியும் என்கிற பட்சத்தில், நாடாளுமன்றத்தில் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று பரிந்துரை 105 கூறுகிறது. இந்திய நாடாளுமன்றம் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது எனும் அடிப்படையையே இது மீறுகிறது.

யாருடைய நாடாளுமன்றம்?

இந்தியில் பேசத் தெரியாதவர்களுக்குப் பிரச்சினை இல்லைதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு சித்து விளையாட்டை இந்த இடத்தில் விளையாடியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது மாநில மொழிகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும் இந்திய அரசியல்சாசனத்தின் கூறு 120(2) ஐ உறுதிப்படுத்துவதற்காக முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். இதற்கு அடுத்த பரிந்துரையான 106 கூறுகிறது. இந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை. ஆனால், பரிந்துரை 106-க்குச் சாராம்சமாக உள்ள பரிந்துரை 105 உறுதிப்படுத்திவிடுகிறது. கூறு 120 (2)-ஐ நாடி அவர்கள் செல்வதற்கான காரணம் மிகவும் அபாயகரமானது. 1950-ல் தொடங்கி அடுத்த 15 ஆண்டுகள் கழித்தவுடன் நாடாளுமன்றத்திலிருந்து ஆங்கிலத்தை நீக்க வேண்டும் என்று அந்தக் கூறு முன்மொழிகிறது. நமது மொழிப் போராட்டங்களின் காரணமாக, அந்த 15 ஆண்டுகள் என்கிற எல்லையைத் தாண்டி, இன்னமும் ஆங்கிலம் நீடித்துவருகிறது. நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டால், எந்த மொழி இணைப்பு மொழியாக இருக்கும்? இந்தி!

இது இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து வரக்கூடிய இந்தி தெரியாத ஒரு எம்பி அமைச்சராக மட்டுமல்ல, உறுப்பினராகக்கூடச் செயல்பட முடியாத ஒரு நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறது மத்திய அரசு. ஏற்கெனவே, பிறப்புவீத மாற்றங்கள் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவதற்கான அபாயத்தில் நாம் இருக்கிறோம் . 1989-ல் உருவான தேசிய முன்னணி அரசு தொடங்கி ஐமுகூ வரை, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக, தென் மாநிலங்களின் உறுப்பினர்கள் மத்திய அரசில் முக்கியத்துவம் வகித்துவந்தார்கள். அதை ஒழிப்பதென்பது இப்போது வட இந்தியர்களின் ஆசையாக இருக்கிறது. இன்றைய மோடி அரசு வட இந்திய - மேற்கிந்தியக் கூட்டரசு. அதைப் போலவே, தங்கள் மாநிலங்களை வளர்க்காமல், வளர்ந்த மாநிலங்களில் உருவாகும் தொழில், வேலை, உயர்கல்வி வாய்ப்புகளையும் சுளையாக விழுங்கிவிட வேண்டும் என்பதுதான் இன்று அவர்களின் ‘தீர்வு’ம். அதற்கான மிகப் பெரிய ஆயுதம்தான் இந்தி.

யாருடைய மொழி கட்டாயம்?

பல்வேறு உலக அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டுதான், நாம் தாய் மொழியை ஒரு பாட மொழியாகவாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடிவருகிறோம். ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்றாலும் அதன் முக்கியத்துவம் கருதி அதைக் கற்பதற்கான வழிகளை நாடுகிறோம். இந்தியையோ மற்ற மொழியையோ விருப்பத்தின் அடிப்படையில் கற்கலாம் என்கிறோம். ஆனால், இந்திய அரசு என்ன சொல்கிறது?

அதனுடைய 47-வது பரிந்துரை இந்தியைப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டுமென நாடாளுமன்றம் சட்டம் இயற்றச் சொல்லி வலியுறுத்துகிறது. இதை நேரடியாக அப்படியே அமல்படுத்த இயலாத சட்டச் சூழல் இருப்பதால், தமிழ்நாடு போன்ற சி பிரிவு மாநிலங்களில் இதை மாநில அரசுகளோடு கலந்தாலோசித்துச் செய்ய வேண்டும் என்றும் மற்ற இடங்களில் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை திருத்தப்பட்டிருக்கிறது.

மாநிலங்களின் உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்படுகிற இந்தச் சமயத்தில், மாநிலங்களுடனான ஆலோசனை என்பதற்கு என்ன அர்த்தம்? சிவப்பு விளக்கு வேண்டாம் என்று மோடி சொன்ன அடுத்த நிமிடம், தானே காரில் ஏறித் தனது அதிகார விளக்கைத் தானே அகற்றும் எடப்பாடி பழனிச்சாமிகள், இந்தப் பரிந்துரைக்கு எதிராக இருக்கப்போகிறார்களா என்ன?

சிபிஎஸ்இ பள்ளிகளில் இப்போது இந்தியைக் கட்டாயப்படுத்தி, நாளை மற்ற பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயப்படுத்துகிற தனது திணிப்புக்கொள்கையை, 1938 முதல் இன்று வரை இந்தி வெறியர்கள் கைவிடவில்லை. இதை ஒட்டியே டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் அஷ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டிருக்கிறார்.

யாருக்கு வேலைவாய்ப்பு?

பரிந்துரைகளில் பல சூட்சுமமானவை. பரிந்துரைகள் 48, 88 ஆகியவை மத்திய அரசின் விளம்பரங்களைப் பற்றிப் பேசுகின்றன. வெளியிடப்படும் விளம்பரங்களில், குறைந்தபட்சம் 50% விளம்பரங்கள் இந்தியில் இருக்க வேண்டும் என்றும் மீதி விளம்பரங்கள் ஆங்கிலத்திலும் மாநில மொழிகளிலும் இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதிலேயே ஆங்கிலமும் இந்தியும் சரிசமமான ஆட்சிமொழிகள் இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் திருத்தப்பட்டு, ஆங்கிலத்திலும் மாநில மொழிகளிலும் ஒரு விளம்பரம் வெளியிடப்படுமானால் கட்டாயமாக அதை இந்தியிலும் வெளியிட்டாக வேண்டும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒருவேளை கோயம்புத்தூரிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கி ஒரு விளம்பரத்தைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வெளியிட்டால், கட்டாயம் அதை இந்தியிலும் வெளியிட்டாக வேண்டும். எப்படி வெளியிட வேண்டுமாம்? அதை பரிந்துரை 51 சொல்கிறது: விளம்பரத்துக்காக அதிகம் செலவிடக் கூடாது என்பதற்காக (!), அந்த விளம்பரங்கள் இந்திச் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் பெரிய அளவில் வெளியிடப்பட வேண்டும். ஆனால், ஆங்கிலச் செய்தித்தாளில் அதன் நடு அல்லது கடைசிப் பக்கங்களில் சிறிய அளவில் வெளியிட வேண்டும் (செளகரியமாக, மாநில மொழி தினசரிகளைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை). முடிந்தவரை ஆங்கிலம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது பரிந்துரை 49.

இங்கே ஆங்கிலம் என்பது அந்நிய மொழி இல்லை நண்பர்களே, இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த நம்முடைய இணைப்பு மொழி. அதைத் துண்டிக்க வேண்டும் என்கிறது டெல்லி. தமிழ்நாட்டின் மத்திய அரசு, பொதுத்துறை, வங்கிகளில் நிரம்பிக்கொண்டிருக்கிற பணியிடங்களில் யார் வந்து அமர்கிறார்கள் என்பதோடு இது தொடர்புடையது.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு விளம்பரத்தைப் பார்க்க ‘தைனிக் ஜாக்ரன்’ அல்லது ‘ராஜஸ்தான் பத்ரிகா’வை இனி நீங்கள் தேட வேண்டும் என்பதுதான் இதன் நிஜமான அர்த்தம். மத்திய அரசின் இந்தி ஆதிக்கக் கொள்கைகளைக் கேள்வியே கேட்காமல் வேடிக்கை பார்க்கும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் இந்தப் பரிந்துரைகள் சமர்ப்பணம்.

யாருக்குக் கல்வி வசதிகள்?

வேலைவாய்ப்பு இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்று வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையில், இந்திக் கல்வி கட்டாயம் என்கிற அஸ்திவாரத்தை அமைக்கிறது மத்திய அரசு. (பரிந்துரைகள் 44,46).

பரிந்துரை 35 மிகவும் விஷமமானது. அது இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில்கூட இந்தியில் தேர்வு எழுத வாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்கிறது. எவ்வளவு நீட்டான யோசனை? நாளை உத்தர பிரதேச மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கேயுள்ள உயர் கல்வி நிலையங்களில் நிரம்புவார்கள். அவர்களுக்கு நீங்கள் இந்தியிலேயே பாடம் சொல்லி இந்தியிலேயே தேர்வுவைக்க வேண்டுமாம் (அதாவது வாத்தியாரும் இந்திக்காரராக இருக்க வேண்டும்). அவர்கள் இங்கேயே தேர்ச்சிபெற்று இங்கேயே அரசு அலுவலகங்களில் வேலைசெய்வார்கள்!

நாம் தமிழில் தேர்வுவைத்தாலுமே, அதில் ஹரியாணாக்காரர்கள் 25-க்கு 24 மதிப்பெண் எடுத்துவிடுகிறார்கள்! (சமீபத்தில் அஞ்சல் துறையில் நடந்த இந்த மோசடி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்). அப்புறம் நாம் எப்படி இந்திக்காரர்களோடு இந்தியிலேயே போட்டி போடப்போகிறோம்? நேற்றுவரை, தமிழ்நாட்டுக்கு வெளியே வேலை வேண்டுமா இந்தியைப் படி என்றார்கள். ஆனால் இனி, தமிழ்நாட்டுக்கு உள்ளேயே வேலை வேண்டுமா, இந்தியைப் படி என்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதற்கு வேலை, அதை இந்திக்காரருக்குக் கொடு என்பார்கள்.

கருகத் திருவுளமோ?

இந்தியை மேம்படுத்துவதற்கான, அதைப் பரப்புவதற்கான சில பரிந்துரைகளைப் பொறுத்தவரை அதை நாம் மறுக்கப்போவதில்லை. நாம் கேட்பவை எளிமையானவை: எமது மொழிகளுக்கும் சம உரிமை கொடு, இந்தியைக் கட்டாயமாக்காதே, ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைத்திருக்கும் நிலையில் மாற்றம் செய்யாதே என்பதுதான்.

உயிர்த் தியாகங்கள் பல செய்து, மூன்று தலைமுறைகளாகப் போராடிப் பெற்ற பல மொழியுரிமைகளை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்: இந்திய ஆட்சி மொழிகள் (ஒன்றியத்தின் அலுவலக நோக்கங்களுக்கான பயன்பாடு) விதிகள் 1976 (திருத்தம், 1987) ஆனது, ஆட்சிமொழிச் சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது. இந்தச் சட்டமானது, இந்தியா முழுமைக்கும் பொருந்தும், தமிழ்நாடு நீங்கலாக என்று மேற்கண்ட விதிகள் ஆவணத்தின் பிரிவு 1 இரண்டாவது அம்சம் கூறுகிறது (They shall extend to the whole of India, except the State of Tamil Nadu).

இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான், நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டு இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பரிந்துரைகள் தமிழகத்துக்கு சட்டரீதியாகவே பொருந்தாதவை ஆகும். எனவே, தமிழ்நாட்டின் மொழியுரிமை, வேலைவாய்ப்பு உரிமை, தமிழகத்தில் பணியிலுள்ள மத்திய அரசு ஊழியர்களின் உரிமை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை ஆகியவற்றைக் காப்பதற்கு, முதல்கட்டமாக இந்தச் சட்டப் பாதுகாப்பை நாம் முன்னிறுத்த வேண்டும். ஆனால், எந்த நிமிடமும் தூக்கியெறியப்பட வாய்ப்புள்ள ஒரு ‘பாதுகாப்பு’தான் இது என்பதால், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்க நாம் போராட வேண்டும்.

மோடிக்குப் பிரியமான இன்னொரு வழி

நம்முடைய குரல்களுக்கும் போராட்டத்துக்கும் பதில் இருக்குமா? மன்மோகன் சிங் என்கிற பஞ்சாபியின் ஆட்சிக் காலத்தில், ப.சிதம்பரம் என்கிற தமிழர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தொகுக்கப்பட்டு, இப்போது நரேந்திர மோடி என்கிற குஜராத்தியரால் வலியுறுத்தப்பட்டு, பிரணாப் முகர்ஜி என்கிற வங்காளியின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் இந்தப் பரிந்துரைகளின் பின்னால் உள்ள மத்திய அரசை, இந்தி ஏகாதிபத்தியம் என்று மிகச் சரியாகவே நமது தமிழ் முன்னோடிகள் அழைத்தார்கள். அது அவ்வளவு எளிதில் நமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காது. ஆனால், மோடி அரசு தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆலோசனை நம்மிடம் இருக்கிறது: எதற்காக 117 பரிந்துரைகள் மோடிஜி? அவற்றுக்கு மாறாக, ஒரே ஒரு பரிந்துரையை நீங்கள் நிறைவேற்றிக்கொள்வது எளிதாக இருக்கும். “பேசாமல், இந்தி பேசாத மக்கள் இந்தியாவின் இரண்டாம்தரக் குடிமக்கள் என்று அறிவிக்கப்பட வேண்டும்.”

ஆழி செந்தில்நாதன் மொழிநிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (Campaign for Language Equality and Rights, CLEAR) அனைத்திந்தியச் செயலர் தொடர்புக்கு : zsenthil@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/இந்தி-பேசாத-மாநிலங்கள்-மீது-எறியப்பட்டிருக்கும்-கொத்துக்குண்டு-என்ன-செய்யப்போகிறோம்/article9658818.ece?homepage=true&ref=tnwn

Categories: Tamilnadu-news

பெசன்ட்நகரில் குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்

Sun, 23/04/2017 - 10:33
பெசன்ட்நகரில் குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்
 

குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை நாட்டு பணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
 
 
 துப்புரவு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்
 

திருவான்மியூர்:

பெசன்ட்நகரை சேர்ந்தவர் உமா. மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர் பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது ஒரு பையில் கட்டு கட்டாக இலங்கை நாட்டு பணம் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 11 லட்சத்து 89 ஆயிரம் ஆகும்.

அதனை தொழிலாளி உமா மீட்டு சாஸ்திரி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணத்தை வீசி சென்றவர்கள் யார்? கடத்தல் பணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை நாட்டு பணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/23145012/1081474/Sri-Lanka-pay-Rs11-lakh-in-the-garbage-tank-in-Besantanagar.vpf

Categories: Tamilnadu-news

எம்.ஜி.ஆர் இதை செய்திருந்தால் பன்னீர்செல்வம், சசிகலா எங்கிருந்திருப்பார்கள் தெரியுமா மக்களே?

Sat, 22/04/2017 - 12:12
எம்.ஜி.ஆர் இதை செய்திருந்தால் பன்னீர்செல்வம், சசிகலா எங்கிருந்திருப்பார்கள் தெரியுமா மக்களே?
 
 

சசிகலா | பன்னீர்செல்வம்

திமுகவின் பிளவுபட்ட இரு அணிகள் இணையுமா இல்லையா என்பதுதான் அரசியலின் இன்றைய  'வெரி ஹாட்' டாபிக். ஆனால் சுமார் 38 வருடங்களுக்கு முன் எம்.ஜி.ஆர் அதிமுகவை திமுகவுடனேயே இணைக்கும் ஒரு அதிரடி முடிவெடுத்த விஷயம், இன்றைய தலைமுறை அறிந்திராத சேதி. 

1979 ம் ஆண்டு தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. தமிழக அரசியலில் 1976ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு  அடுத்துவந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி 2 ஆண்டுகள் கடந்திருந்தது. பிரதமர் இந்திராவின் வெற்றிக்கு எதிராக ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் இந்திராவின் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் பதவியிழந்த இந்திரா எமர்ஜென்சியை அறிவித்து உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். 
அடுத்துவந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனதாக் கட்சி வெற்றிபெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார். தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுகவை வீழ்த்தி எம்.ஜி.ஆர் முதல்வராகியிருந்தார். 

தேர்தல் வெற்றிக்குப்பின் எலியும் பூனையுமாக முன்னைவிடவும் மோசமாக மேடைகளில் முட்டி மோதிக்கொண்டிருந்தனர் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி. 

இந்த நேரத்தில்தான் திமுக - அதிமுக இரண்டு கட்சிகளும் இணையப்போவதாக ஒரு செய்தி தமிழக அரசியலின் மேல்மட்டத்தலைவர்களிடம் பரவியது. ஆனால் இது நம்புவதற்கில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். காரணம் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் பலம்பொருந்திய ஒருவராக உருமாறியிருந்த நேரம் அது. மக்கள் ஆதரவு அவருக்கு இந்திய அளவில் பெரும் புகழையும், கவர்ச்சிமிக்க மனிதராகவும் அடையாளப்படுத்தியிருந்தது. ஆனால் திமுக மக்களிடம் தன் செல்வாக்கை இழந்து தன் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு அரசியல் செய்துகொண்டிருந்தது. 

கருணாநிதி | எம்.ஜி.ஆர்

இந்த சூழலில் அதிமுக - திமுக இணைப்பு என்பது நம்புவதற்கு துளியும் முகாந்திரம் இல்லாத தகவல் . ஆனாலும் சில வாரங்களில் அது நடப்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தபோது அதை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை எவராலும். 
1979 செப்டம்பர் முதல்வர் ஜனதாக் கட்சியின் ஒரிஸ்ஸா மாநில முதல்வர் பிஜூபட்நாயக் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தார். இரண்டு கட்சிகளின் இணைப்பதற்காகவே அவரின் இந்த பயணம் என்பது உறுதியானது. அடுத்த பயணமாக எம்.ஜி.ஆரின் தி.நகர் அலுவலகத்தில் பிஜூ பட்நாயக் வந்தார். பரபரப்பானது அரசியல் களம். திமுக அதிமுக இணைவது உறுதியானது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 13 ந்தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடந்தது. 


முன்னதாக அன்று காலை தமிழக அரசின் உளவுத்துறை டிஜிபியும், தனிப்பட்ட முறையில் தனக்கு நெருக்கமான மோகன்தாஸை ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்தார் எம்.ஜி.ஆர். அவருடன் உணவருந்தியபடியே 'திமுக - அதிமுக இணைவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என்றார். 

“மற்றவர்களுக்கு எப்படியோ இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் நிம்மதியடைவார்கள். அதிமுக உதயமான நாளில் இருந்து அவர்கள் ஒரு பதற்ற நிலையிலேயே இருக்கின்றனர். போராட்டம் மூலம் உங்கள் ஆட்சிக்கு சங்கடத்தைத் தர கருணாநிதி தன் தொண்டர்களை ஏவி விடுகிறார். பதிலுக்கு நீங்கள் காவல்துறையை ஏவி அதை ஒடுக்குகின்றனர். இதுதான் கடந்த 2 வருடங்களாக நடக்கின்றன. இரு கட்சிகளும் இணைந்தால் இதற்கு ஒரு விமோசனம் பிறக்கும். நீங்களும் மக்கள் நலனில் முழுமையாக கவனம் செலுத்தலாம்” என்றார். மோகன்தாஸின் பேச்சை காதுகொடுத்துக்கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர் நேரே பேச்சுவார்த்தை நடந்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.

பிஜூபட்நாயக்பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆருடன் நெடுஞ்செழியன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்றனர். திமுக சார்பில் கருணாநிதி மற்றும் அன்பழகன் பங்கேற்றனர். விருந்தினர் மாளிகையின் ஒரு அறையில் நெடுநாட்கள் கழித்து கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நீண்டநேரம் மனம்விட்டுப் பேசினர். 45 நிமிடங்களுக்குப்பின் அந்த அறையிலிருந்து வெளியேறிய இருவரது முகத்திலும் ஒருவித சாந்தம் தவழ்ந்தது. 

பின்னர் பிஜூபட்நாயக் உடன் நடந்த பொதுவான பேச்சுவார்த்தையில், கட்சிக்கு திமுக என்ற பெயரே தொடர்வது, அண்ணாவின் உருவம் பொறித்த அதிமுக வின் கொடியே கட்சியின் கொடியாக இருப்பது, முதல்வராக எம்.ஜி.ஆரே நீடிப்பது என்றும் கட்சியின் தலைவராக கருணாநிதி பொறுப்பு வகிப்பது எனவும் பேசப்பட்டன. இருதரப்பிலும் அது ஏற்கப்பட்டது. 

அடுத்துவரும் நாட்களில் இரண்டு கட்சிகளின் கிளைக்கழகங்கள் முதல் மாவட்டம் வரை தீர்மானங்கள் நிறைவேற்றி தத்தம் கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடுவதாக, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த  எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இரண்டு கட்சிகளின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற்று முடிவெடுத்து இணைப்பு நாளை உறுதிசெய்யும் என்று தெரிவித்தனர். 


இருவருக்கும் நடுவே ஒரு வரலாற்று சாதனையை படைத்துவிட்ட மகிழ்ச்சியில் நின்றிருந்தார் பிஜூ பட்நாயக். அதிமுக திமுக இணைப்பிற்கு ஜனதாக் கட்சி முக்கியத்துவம் அளிக்க காரணம், எமர்ஜென்சிக்குப் பிறகு அரசியலில் பெரும் மக்கள் ஆதரவை இழந்துநின்ற இந்திராகாந்தி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருந்தார். இந்திராவுக்கு எதிராக அணிதிரண்டு வென்ற ஜனதாக்கட்சி இந்திரா என்ற செத்த பாம்பு உயிர் பெறுவது ஆபத்து எனக் கருதி அவரது வளர்ச்சியை தடுக்க நினைத்தது. தமிழகத்தில் 3 வது சக்தியாக இருக்கும் காங்கிரஸ் ஒவ்வொரு தேர்தல்களிலும் திராவிடக்கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் முதுகில் ஏறி அரசியல் அதிகாரத்தை அடைவதால் இரண்டு திராவிடக்கட்சிகளை இணைத்து அதை நேர் எதிரியாக்கிவிட்டால் அதை தடுத்துவிடலாம் என்பதே.
 
திமுக - அதிமுக இணைவது உறுதி என பேசப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறின அடுத்துவந்த நாட்களில். எம்.ஜி.ஆர் கட்சிகள் இணைப்பு பற்றிப் பேசுவதை தவிர்த்தார். அதில் அவர் மர்மமான மவுனத்தையே கடைபிடித்தார். இதுதொடர்பாக பிஜூபட்நாயக் ஒரு முறை சென்னை வந்தபோது அவரை எம்.ஜி.ஆர் பார்க்காமல் தவிர்த்ததாக சொல்லப்பட்டது. மேடைகளில் வழக்கம்போல் திமுக, அதிமுக இருதரப்பும் காரசாரமாக பேசிக்கொள்ள ஆரம்பித்த பின்னர்தான் இந்த பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியதை மக்கள் உறுதி செய்தனர். 

எம்.ஜி.ஆர்

திமுக மற்றும் அதிமுக இணைப்பில் திமுக ஆர்வம் காட்டினாலும் எம்.ஜி.ஆர் ஏனோ இதை இறுதிநேரத்தில் மறுத்துவிட்டார் என்றார்கள். இந்த சம்பவம் குறித்து பின்னாளில் மோகன்தாஸ் தான் எழுதிய 'எம்.ஜி.ஆர்; நிழலும் நிஜமும்' என்ற நுாலில், 'எம்.ஜி.ஆர் மிகுந்த நுணுக்கமானவர். அவர் எல்லோரிடமும் ஒரு கருத்தை கேட்பார். ஆனால் முடிவு அவருடையதாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் இதைத்தான் செய்வார் என யாரும் அவரைக் கணிக்கமுடியாது.  தனது தனிப்பட்ட வாழ்க்கையானாலும் அரசியலானாலும் தனது உள்ளுணர்வு சொன்னபடியே அவர் நடந்துகொண்டார். அப்படித்தான் இரு கட்சிகளின் இணைப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் முடிவெடுத்த அவர் இறுதி நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கினார் ” என எழுதியிருந்தார். 

ஆனால் எம்.ஜி.ஆரின் இந்த முடிவுக்குப்பின்னால் ஒரு சுவாரஷ்யமான விஷயம் சொல்லப்பட்டது. திமுக - அதிமுக இணைப்பில் கருணாநிதிக்கு இருந்த அதே மகிழ்ச்சியும் விருப்பமும் எம்.ஜி.ஆருக்கும் இருந்தது. காரணம் திரையுலகில் பெரிய போட்டியின்றி ஒரு ராஜாவைப்போன்று விளங்கிய எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபின் தனது சுதந்திர உணர்வை இழந்ததோடு 24 மணிநேரமும் பதற்றமாகவே கழிக்கநேர்ந்தது. எந்த நேரமும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களோடு வாழ்வை நடத்துவதும் சோர்வைத் தந்தது அவருக்கு. அதன் காரணமாகவே முதல்வராகப்பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அவர் சினிமாவில் தான் மீண்டும் நடிக்கப்போவதாக தடாலடியாக அறிவித்தது. இந்த அரசியல் பரபரப்புகளிலிருந்தும் கருணாநிதியின் எதிர்ப்பு அரசியலிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான ஒரு முதல்வராக அரசு அதிகாரத்தை சுவைப்பதை அவர் விரும்பியிருக்கலாம். இதனாலேயே இணைப்பில் ஆர்வம் காட்டினார்.
ஆனால் நடந்தது...? 

எம்.ஜி.ஆர்

தன் தாய் சத்தியபாமா மீது உயிரையே வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவரது பேச்சை மீறி எந்த காரியத்திலும் ஈடுபட்டதில்லை. எந்த விஷயத்திலும் தன் தாயை வணங்கி மானசீகமாக  முடிவெப்பார் என்பார்கள். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நேரே தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் புறப்பட்டுவந்தார். அப்போது முதல்மாடியில் உள்ள தனது அறைக்கு செல்ல படியேறியபோது மாடிச் சந்திப்பில் மாட்டப்பட்டிருந்த சத்தியபாமாவின் படத்திலிருந்த மாலை அவிழ்ந்துவிழுந்தது. இதை அமங்களமாக அவர் கருதினார். ஒருவேளை தன் தாய் இந்த இணைப்பை விரும்பவில்லையோ என நினைத்து அந்த முடிவை அப்போதே கைகழுவினார் என்பார்கள்.

ஒருவேளை திமுக - அதிமுக இணைப்பு நிகழ்ந்திருந்தால் அரசியல் உலகில் என்னவெல்லாம் சுவாரஸ்யங்கள் அரங்கேறியிருக்கும் என்பதை அறிய முடியாமல் போனது தமிழர்களின் துரதிர்ஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும்!

http://www.vikatan.com/news/tamilnadu/87182-if-mgr-had-done-this-what-would-have-happened-to-sasikala-and-panneerselvam.html

Categories: Tamilnadu-news

சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி

Sat, 22/04/2017 - 11:29
சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி
 
 

டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள், இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் மலம் திண்ணும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர். 

TN farmers


டெல்லியில் 40வது  நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில்  காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். 

ANI‏Verifizierter Account @ANI_news 5 Std.vor 5 Stunden

 
 

Tamil Nadu farmers protesting at Delhi's Jantar Mantar over drought relief funds and waiver of farmers' loans, say "will drink urine today"

C9_kP1gUMAAbruH.jpg
C9_lOATUwAAI8SR.jpg
102 Antworten 270 Retweets 181 Gefällt mir
 
 
 
 
  •  
 
 

Tamil Nadu farmers drink urine protesting over drought relief funds and waiver of farmers' loans at Delhi's Jantar Mantar.

C9_48PwVwAA4FmB.jpg
C9_49h8U0AAFNEd.jpg
C9_4-yoU0AERS9-.jpg
 
இந்நிலையில் கடந்த 19ம் தேதி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விவசாயிகளை நேரில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகள் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், இரண்டு நாள்களுக்கு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். அத்துடன், மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கும் வரை காத்திருப்போம் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

ஆனால் நேற்று மாலை போராட்டக் குழுவின் கூடாரங்களை அகற்ற காவல்துறை முயற்சி செய்தது. இதனை கண்டித்த அய்யாக்கண்ணு, ”வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்காக  சிறுநீரை பாட்டிலில் பிடித்து போராட்டக்களத்தில் பார்வைக்கு வைத்துள்ளோம். நாளையும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதிகளை எழுத்து பூர்வமாக தராவிட்டால், மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று எச்சரித்தார்.

இதனிடையே, மத்திய அரசு தரப்பில் எந்தவித பதிலும் இல்லாததால், சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்!

 

http://www.vikatan.com/news/tamilnadu/87241-tamil-nadu-farmers-drink-urine-protesting-over-drought-relief-funds-and-waiver-of-farmers-loans-at-delhi.html

Categories: Tamilnadu-news

முகநூலில் திவாகரன் மகனுக்கு இளவரசி மகன் பதிலடி: சசிகலா குடும்பத்தில் வலுக்கும் கருத்து யுத்தம் - குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமா ஜெயானந்த் திருமணம்?

Sat, 22/04/2017 - 07:30
முகநூலில் திவாகரன் மகனுக்கு இளவரசி மகன் பதிலடி: சசிகலா குடும்பத்தில் வலுக்கும் கருத்து யுத்தம் - குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமா ஜெயானந்த் திருமணம்?

 

 
vivek_3156936f.jpg
 
 
 

டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து வெளியேற்றும் அமைச்சர்களின் முடிவு குறித்து சசிகலா குடும்பத்தினருக்குள் கருத்து யுத்தம் நடைபெற்று வரு கிறது. இதுதொடர்பாக முகநூலில் திவாகரன் மகன் பதிவுக்கு இளவரசி மகன் பதிலடி கொடுத்துள்ளார்.

கட்சி, ஆட்சியின் நலன் கருதி டிடிவி தினகரன் உள்ளிட்ட சசி கலா குடும்பத்தினரை அதிமுக வில் இருந்து நீக்க முடிவு செய்துள் ளதாக கடந்த 19-ம் தேதி அமைச்சர் கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்நிலையில், சசி கலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முக நூலில், “சசிகலாவைத் தவிர யாருக்கும் இடமில்லை. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என அமைச்சர்கள் தற்போது முடிவு செய்துள்ளதை, சில மாதங்களுக்கு முன்பே நாங்கள் ஆலோசனையாகக் கூறினோம். இது தாமதமான முடிவு என்றாலும் சரியான முடிவு” என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அந்த பதிவின் பின்னூட்டத்தில், “நடப்பவை கழகத் தின் நன்மைக்கானவை அல்ல. மாறாக, கழகம் சுக்குநூறாக ஆவற் கான வாய்ப்பை இவை உருவாக் கும்” என இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் பதிலடி கொடுத் துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெயானந்த் வெளியிட்டுள்ள பதி வில், “அமைச்சர்கள் முடிவெடுப்ப தற்கு முன்பாக, நடந்ததெல்லாம் நல்லதாக இருந்திருந்தால் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு கழகம் தள்ளப்பட்டது? கழகம் நோய்வாய்ப் பட்டதில் இருந்து மீள ஒரு சில கசப்பான மருந்து தேவை” என குறிப்பிட்டிருந்தார். மேலும், முக நூலில் பலரது கருத்துகளுக்கு பதிலளித்துள்ள ஜெயானந்த், “சசிகலாதான் கட்சியின் பொதுச் செயலாளர். அதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சியின் பொதுச் செயலா ளர் தேர்தலை அவர் எதிர் கொள் வார். தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக இங்கு குரல் எழுப்பு வோர், இடைத்தேர்தலில் பொதுச் செயலாளர் சசிகலாவின் பெயர், படத்தைக் குறிப்பிடாமல் பிரச்சாரம் செய்தபோது அமைதியாக இருந் தது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதுகுறித்து சசிகலா குடும்பத் துக்கு நெருக்கமான சிலரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

கட்சி நிர்வாகம் தினகரன் கட்டுப் பாட்டில் வந்த பிறகு அவரிடம், திவாகரனின் மகன் ஜெயானந்த் துக்கு அதிமுகவில் மாநில அளவி லான பதவி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை தினகரன் நிராகரித்து விட்டார். மேலும், “குடும்ப உறுப்பி னர்களிடம் இருந்து வரும் பரிந்துரை களையும் ஏற்க வேண்டாம்” என அமைச்சர்களுக்கு வலியுறுத்தி யதாகவும் கூறப்பட்டது. இது போன்ற செயல்களால் தினகரனுக் கும், திவாகரனுக்கும் இடையே விரிசல் அதிகமானது.

மீண்டும் ஒன்றுகூடலாம்

தந்தைக்கு எதிரான நிலைப்பாட் டில் இருந்த தினகரன் வீழ்த்தப்பட்ட தால், அதை வரவேற்று ஜெயா னந்த் இப்படியொரு கருத்தை பதிவு செய்திருக்கலாம். ஆனால், தங்களின் குடும்பம் இல்லாமல் அதிமுகவை யாராலும் ஒற்றுமை யாக வழிநடத்த முடியாது என்ற கருத்து சசிகலா குடும்பத்தினரிடம் இன்றளவும் நிலவுகிறது. அதன் வெளிப்பாடுதான் விவேக் ஜெயராமனின் பதிவு.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலுக்கு சசிகலா குடும்பத்தினருக்குள் ஒற்றுமை இல்லாததும் முக்கிய காரணம். சசிகலாவின் கணவர் நடராஜன் நல்ல நிலையில் இருந் தால், இந்நேரம் அனைவரையும் சமாதானம் செய்து வழிக்கு கொண்டு வந்திருப்பார்.

எனினும், எங்களுக்கு இன்னு மொரு நம்பிக்கை மீதமிருக்கிறது. திவாகரனின் மகன் ஜெயானந்த் துக்கும், டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் மகளுக்கும் திருமணம் செய்வதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இத்திருமணம் நடைபெறும்போது, நிச்சயம் அனைவரும் மீண்டும் ஒன்றுகூட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/முகநூலில்-திவாகரன்-மகனுக்கு-இளவரசி-மகன்-பதிலடி-சசிகலா-குடும்பத்தில்-வலுக்கும்-கருத்து-யுத்தம்-குடும்பப்-பிரச்சினையைத்-தீர்த்து-வைக்குமா-ஜெயானந்த்-திருமணம்/article9657472.ece?homepage=true

Categories: Tamilnadu-news

டெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்!

Sat, 22/04/2017 - 06:20
டெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்!
 
 

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் டி.டி.வி. தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகிறார். 

TTV Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில்,  கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.  அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல்செய்தனர்.

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். சுகேஷ் நேற்று முன்தினம் இரவு பெங்களூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு, பெங்களூருரில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அங்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறார்கள். 

இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், ஏப்ரல் 22-ம் தேதி (இன்று)  டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. விசாரணைக்கு ஆஜராக மூன்று நாள் அவகாசம் கேட்டிருந்தார் டி.டி.வி.தினகரன். இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜராகிறார்!

http://www.vikatan.com/news/tamilnadu/87214-ttv-dinakaran-to-appear-before-delhi-police-today.html

Categories: Tamilnadu-news

பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க.

Sat, 22/04/2017 - 06:19
பழனிசாமியா... பன்னீர்செல்வமா..?! தீவிர ஆலோசனையில் பா.ஜ.க.
 
 

                  எடப்பாடி

மிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியையே அந்தப் பதவியில் தொடர வைப்பதா அல்லது ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் முதல்வர் பதவியில் அமரவைப்பதா என்ற ஆலோசனையில் பாஜகவின் டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.கவுக்குள் நடக்கும் பதவி,அதிகாரப்பகிர்வு மோதலில் தங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்குமா என்று தி.மு.க. எதிர்பார்ப்பதைவிட பா.ஜனதா எதிர்பார்ப்பதுதான் அதிகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க.கட்சிக்குள்ளும் நடக்கும் உச்சக்கட்ட குழப்பங்கள், தமிழகத்தின் மாநில ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க. அணியினர் தங்களுக்குள் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள குழுக்கள் அமைத்து விவாதிக்க முடிவெடுத்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு அவர்களின் குழப்பங்கள் நீடிக்கும் என்றே தெரிகிறது.ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியினர் தமிழக முதல்வர் பதவியையே குறிவைத்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. 

இதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே முதல்வர் பதவியில் நீட்டிக்க செய்ய பா.ஜனதா டெல்லி மேலிடம் விரும்புவதாகவும் இப்போது செய்திகள் அடிபடுகின்றன.அதற்கு உதாரணமாக,கார்களில் உள்ள சிவப்பு விளக்கை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனே தலைமை செயலகத்தில் தனது காரில் இருந்த சிவப்புவிளக்கை அகற்றினார்.அங்கேயே செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தி பரபரப்பினைக் கூட்டினார்.அதனையடுத்து வரும் திங்கள் அன்று டெல்லியில் நடக்கும் 'நிதி ஆயோக்'கூட்டத்திலும் பழனிசாமி கலந்துகொள்கிறார்.அதில்,விவசாயிகள் பிரச்னை குறித்தும்,தீர்வு குறித்தும் அவர் பேசி,பிரதமரிடம் தீர்வைப் பெற்றுவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

               எடப்பாடி

ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்றிய மோடி!

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை கோரிக்கைகள் வைத்து இருந்தார்.அதை நீண்டகாலமாகக் கிடப்பில் வைத்திருந்த மத்திய அரசு,தற்போது நிறைவேற்றியுள்ளது.இது,எடப்பாடியின் அணுகுமுறைக்கு மோடி கொடுத்த பரிசு என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.இதே ஆதரவு நிலையை தமிழக முதல்வர் எடப்பாடிக்குக் கொடுக்க பிரதமர் விரும்புகிறார் என்பதற்கு இது உதாரணமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
            
போயஸ் கார்டனில் பூஜை!

ஜெயலலிதாவின் மரணம் அ.தி.மு.க. கட்சிக்குள் பிளவுகளையும், அரசு நிர்வாகத்தில் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கை மீண்டும் அ.தி.மு.கவில் ஓங்கியுள்ளது.தினகரன் அணி கடந்த சில நாட்களாக குழப்பத்தில் இருக்கிறது. தினகரனே 'நான் ஒதுங்கிக்கொள்கிறேன்' என்று தடாலடியாக அறிவித்துவிட்டு அமைதியாகிவிட்டார்.இதனால் அவருக்குப் பின்னால் இருந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் என்று அனைத்து முக்கிய நபர்களும் தங்களுக்குள் இரவு பகலாகக் கலந்து பேசி, ஓபிஎஸ் தலைமையை எப்படி ஏற்பது,அவர் தலைமையில் தமிழக அரசு அமைந்தால் தங்களுக்கு எந்த வகையில் ஏற்றம் தரும் என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

                     எடப்பாடி

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் கட்சிக்குள்ளும், ஆட்சி அதிகாரத்திலும் நிலவும் குழப்பங்களுக்கு காரணம் ஜெயலலிதா மரணம்தான். எனவே அவரின் ஆன்மாவை சாந்தப்படுத்தும் வகையில்,அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பூஜைகள் நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "ஜெயலலிதாவின்  ஆவி தொடர்பான பயம் டிடிவிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே,சசிகலா சிறை செல்ல நேர்ந்தது என்றும், மகாதேவன் மரணம் நிகழ்ந்தது என்றும், ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும் மன்னார்குடி உறவுகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சக்தி வாய்ந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் மன்னார்குடி உறவுகள். பரிகார பூஜைகளுக்காக கேரள மாநில மாந்திரீகர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளனர். அவர் விரைவில் போயஸ் கார்டன் இல்லத்தில்,பூஜை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்." என்றார்.  

http://www.vikatan.com/news/politics/87181-bjp-still-in-confusion-on-which-faction-to-support-in-tamil-nadu.html

Categories: Tamilnadu-news

ரஜினிகாந்த், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

Fri, 21/04/2017 - 20:28
ரஜினிகாந்த், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு
 
 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, தனது மகள் திருமண அழைப்பிதழை அளித்துள்ளார். 

C98Wo10UQAAg6dF_ad_22077.jpg


தமிழகத்தில் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதனால் ரஜினி அரசியலுக்கு வர உள்ளாரா? என்று ஊடகங்களில் செய்திகள் பரபரப்பாயின.

இதையடுதது ரஜினி ரசிகர்களுடனான சந்திப்பை ரத்து செய்தார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் வழங்கினார். சந்திப்பு குறித்து தெரிவித்த திருநாவுக்கரசர், 'தமிழக அரசியல் நிலவரம், மக்கள் பிரச்னை குறித்து ரஜினி கேட்டறிந்தார்' என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/87196-tn-congress-chair-person-thirunavukkarasar-met-rajinikanth.html

Categories: Tamilnadu-news

“கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” - சத்யராஜ்

Fri, 21/04/2017 - 19:25
``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ்

தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.

சத்யராஜ்படத்தின் காப்புரிமை facebook

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அமைப்புகள் சில கூறிவந்தன.

இந்நிலையில், பகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதால், சத்யராஜ் இந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால், தான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று தெரிவித்திருக்கும் சத்யராஜ், அதற்கு எடுத்துக்காட்டாக தன்னிடம் உதவியாளராக 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்ற திரு.சேகர் அவர்களின் தாய்மொழி கன்னடம் என்று கூறியிருக்கிறார்.

பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடித்துள்ள அவர், அத்திரைப்படத்தின் சிறியதொரு பகுதிதான் என்றும், தன்னால் பல ஆயிரம் பேரின் உழைப்பும், பணமும் விரயமாவதை விரும்பவில்லை என்றும், இந்த திரைப்படத்தை வாங்கியுள்ள கர்நாடக விநியோகஸ்தர்களும், திரையங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றும் சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், "தமிழீழ பிரச்சனை, காவிரி நதிநீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்பேன்" என்று சத்யராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உறுதிபட தெரிவிப்பதால், எதிர்காலத்தில் சத்யராஜை வைத்து படம் எடுத்தால் பிரச்சனைகள் வரும் என்று எண்ணும் தயாரிப்பாளர்கள், தன்னை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம், தன்னால் நஷ்டம் அடைய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

"ஒரு நடிகனாக இருப்பதைவிட, இறப்பதைவிட, எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.

அதனை எதித்து நடைபெற்ற கூட்டத்தில், பல தமிழ் நடிகர்கள் ஆவேசமாக பேசினர். அப்போது நடிகர் சத்யராஜ் பேசிய சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதற்குதான் சத்தியராஜ் இப்போது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அப்போது அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகர் சத்யராஜின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39667249

Categories: Tamilnadu-news