தமிழகச் செய்திகள்

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் திக்., திக்.,- அடுத்த வாரத்தில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட்

Mon, 06/02/2017 - 05:35
ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் திக்., திக்.,- அடுத்த வாரத்தில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட்

 

புதுடில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தயாராக உள்ளது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


ஜெ., சசிகலா, இளவரசி , சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக மாநிலம் சார்பில் வக்கீல் நேரில் ஆஜரானார். இவர், நீதிபதிகளிடம் இந்த வழக்கில் தீர்ப்பு இழுக்கப்படிக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என கேட்டார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள்; இந்த வழக்கில், தீர்ப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய தயாராகி விட்டது. அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர். 

 

பாதிப்பை ஏற்படுத்தும் :

 

ஜெ., மறைந்த நிலையில் , சசிகலா நேற்றுதான் ( பிப்., 5 ம்தேதி) அதிமுக சட்ட சபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நேரத்தில் இந்த தீர்ப்பு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1705468

Categories: Tamilnadu-news

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Sun, 08/01/2017 - 08:33
Rally in Chennai Marina demanding Jallikattu!Rally in Chennai Marina demanding Jallikattu! மெரீனாவை, மிரட்டிய ஜல்லிக்கட்டு பேரணி..... வேட்டியுடன் வரிந்து கட்டிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்.

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை மெரினாவில் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.

இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழகத்தில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

நன்றி தற்ஸ்  தமிழ்.

Categories: Tamilnadu-news

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

Mon, 19/12/2016 - 08:29
மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

சகுனி ஆட்டத்தைவிட மோசமான ஆட்டம்!

 

2014 செப்டம்பர் 27-ம் தேதி!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு எழுதுகிறார் நீதிபதி குன்ஹா. மதியம் 3 மணிக்கு சிறைக்குள் அடைக்கப்படுகிறார் ஜெயலலிதா.

2014 செப்டம்பர் 29-ம் தேதி!

சென்னை ராஜ்பவனில் பிற்பகல் 3 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அழுகாச்சியோடு பதவியேற்கிறது.

இந்த இரண்டு சம்பங்களுக்கும் இடைவெளி, இரண்டு நாட்கள். சரியாகச் சொன்னால் 48 மணி நேரம். வழக்கில் தண்டிக்கப்பட்ட உடனே ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோகிறது. தெய்வமாகவே பூஜிக்கும் தலைவி, சிறையில் தள்ளப்பட்டதுமே தவித்துப் போனார்கள் கட்சியினர். அழுது புரண்டார்கள். அறிவிக்கப்படாத பந்த் போல காட்சி அளித்தது தமிழ்நாடு. 48 மணி நேரம் காத்திருந்து கடைசியில் தான் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேம்பிப் தேம்பி அழுதபடியே பதவியேற்றது.

p6.jpg

2016 டிசம்பர் 5-ம் தேதி

அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாக அங்கே ஆஜர் ஆகிறார்கள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள். இரவு 7.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்ல மூன்று சொகுசுப் பேருந்துகள் கட்சி அலுவலக வாசலுக்கு வந்து நிற்கின்றன. ‘இரவு 11-30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார்’ என்கிற தகவலை அப்போலோ வெளியிடுகிறது. கிட்டத்தட்ட அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்டோர் ஒரே காரில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். உயிருக்கு உயிரான தலைவி உயிர்விட்ட பிறகு கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதாவின் உடல் அப்போலோவில் கிடக்க... இங்கே

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். நள்ளிரவு 12.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றனர். குளு குளு பஸ்களில் ஆளுநர் மாளிகை வந்து இறங்கினார்கள் எம்.எல்.ஏ-க்கள். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவை அடம்பிடிக்காமல்... அழாமல் பதவியேற்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஊரே அடங்கிய நள்ளிரவில் பதவிப் பிரமாணம்  நடந்த பெருமை தமிழகத்துக்குக் கிடைத்தது. அந்தப் பெருமையை விடுங்கள். ஜெயலலிதா உயிருடன் சிறையில் இருந்தபோது 48 மணி நேரம் பொறுத்து கர்சீஃப் நனைய பதவியேற்ற மாண்புமிகுகள், ஜெயலலிதா செத்த செய்தி தெரிந்தும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தினார்கள். அப்போலோவில் இருந்து அவர் உடல் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் நள்ளிரவில் அவசர அவசரமாக கண்ணீர் துளிகளைக்கூட சிந்தாமல் பதவியை ஏற்றார்களே... இவர்கள் இத்தனை காலம் ஜெயலலிதா மீது வைத்திருந்தது எல்லாம் வேஷமா? ஜெயலலிதா உயிருடன் சிறையில் இருந்தபோது 48 மணி நேரம் பொறுத்தவர்கள், ஜெயலலிதா இறந்த பிறகு சில மணி நேரம்கூட இவர்களால் பொறுக்க முடியாமல் போனதற்குப் பின்னால் இருந்த அரசியல் என்ன? மன்னார்குடி ஆட்கள் நடத்திய சதுரங்க ஆட்டம்தான் இது. மகாபாரதத்தில் சகுனி ஆடிய சதுரங்கத்தைவிட மோசமான அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டு கொண்டிருந்தது. ஜெயலலிதாவோடு 30 ஆண்டு காலமாக இருந்த சசிகலா, அவரிடம் கற்ற அரசியலை அவருக்கு பின்னால் ஆட ஆரம்பித்திருக்கிறார். பொதுக்குழுவுக்கு வந்தாலே ஜெயலலிதாவை வரவேற்று பேனர்களால் சென்னையை மூடி விடுவார்கள் கட்சிக்காரர்கள். கோட்டையில் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கே விடிய விடிய முழித்து போயஸ் கார்டன் டு கோட்டை வரையில் ஃப்ளக்ஸ் வைப்பார்கள். ஆனால், ஜெயலலிதா இறந்தபோது சென்னையில் இருந்த மொத்த அஞ்சலி போஸ்டர்கள் ஆயிரத்தைக்கூட தாண்டவில்லை. ஆனால், ‘கழகத்தின் பொதுச் செயலாளராக தலைமையேற்க தலைமகளே வா’ என்ற பேனர்கள் முளைத்தன. அதை தூக்கிவந்து வைத்தது ஜெயலலிதாவின் ஆவியா? ‘சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்!’ என்று எம்.ஜி.ஆர். பாடிவிட்டுப் போனதும்கூட தீர்க்கதரிசனம்தான் போல.

கட்சிக்குத் தலைமையேற்கச் சொல்லி, ‘சொல்லிவைத்தார் போல’ கட்சிக்காரர்கள் படை திரண்டிருக்கிறார்கள். கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது மீடியா முன்பு பேசாதவர்கள் எல்லாம், ‘‘அம்மாவை முதல்வர் ஆக்கியதில் சின்னம்மாவுக்குப் பங்கு உண்டு. கட்சியின் வெற்றிடத்தை நிறைவுசெய்ய சசிகலா வர வேண்டும்’’ என பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கொஞ்சமும் செவிசாய்க்காமல் பற்றற்ற துறவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா வின் உடலைச் சுற்றி அரண் அமைத்தவர்கள், ஜெயலலிதாவை எப்படி சுற்றி வளைத்தார்கள்? அரசியல் அரிச்சுவடியை சசிகலா எங்கே கற்றார். அவருக்குப் பின்னால் இருந்து இயக்கும் மன்னார்குடி ஆட்கள் செய்து வரும் மாயங்கள் என்ன? எப்படி வந்தார்கள்? வளர்ந்தார்கள்!

மன்னார்குடி ஜாதகத்தை அலசுவோம்.

அடுத்த இதழில்

http://www.vikatan.com

Categories: Tamilnadu-news

சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!

Fri, 09/12/2016 - 07:09
சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை! - புதிய தொடர்
 

சசிகலா

ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது; கேள்விகளுக்கு அப்பாற்பட்டது’. இதைச் சொல்வது கடினமாக இருக்கலாம்; கேட்பது எரிச்சலாக இருக்கலாம்; புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். ஆனால், ஜெ. - சசி நட்பின் வரலாற்றில், இதை ஆணித்தரமாய் எடுத்துச்சொல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா மனதார உணர்ந்திருந்தார். சசிகலா, ஜெயலலிதாவுக்கு அதைச் சரியான சந்தர்ப்பங்களில் உணர்த்தி இருந்தார். இந்த உணர்வுக்கடத்தல்தான், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு, உடலைவிட்டுப் பிரியும்வரை, சசிகலாவைப் அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணம். 

34 ஆண்டுகளுக்கு முன், கடலூரில் ஜெ. - சசியின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு, பார்த்தால் புன்னகைக்கும் அறிமுகமாக மாறியது; அந்த அறிமுகம், ஜெ. - சசி நட்பாக வளர்ந்தது; அந்த நட்பு, ‘சசிகலா என் உடன்பிறவா சகோதரி’ என்று ஜெயலலிதாவை அறிவிக்கத் தூண்டியது; அந்த அறிவிப்பே, “சசிகலாவைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை” என்ற முடிவுக்கு, ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவைத் தள்ளியது. கடலூரில் ஏற்பட்ட ஜெ. - சசி சந்திப்பின் வரலாறு, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முடிவுக்கு வந்தது. இடைப்பட்ட 34 வருடங்களில் நடந்தது என்ன? 

ஜெயலலிதாவின் வாழ்வில், கடினமான காலகட்டங்கள் உருவானபோது, சசிகலாவின் நட்பு, ஜெயலலிதாவுக்கு அரணாக நின்றது; எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், ரத்தக்களறியாய் கிடந்த, அரசியல் களத்தின் துரத்தல்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. வாழ்நாளின் இறுதிவரை, அபினைப் போல் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் அளித்தது. எதிர்திசையில் பார்த்தால், ஜெயலலிதாவின் நட்பு சசிகலாவுக்கு கோடிகளைக் கொட்டும் பம்பர் பரிசாய் அடித்தது; பொதுவில் அதிகமாய் தலைகாட்டாத சசிகலாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செய்யும் சக்தியைக் கொடுத்தது. கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவுக்கு, ‘நிழல்’ தலைவராக வலம்வரும் வாய்ப்பை வழங்கியது. அரசாங்கத்தில் எந்தப் பதவியிலும் அமராத சசிகலாவுக்கு, ‘நிழல்’ முதல்வராக ஆணையிடும் அதிகாரத்தைக் கொடுத்தது. அது எப்படி? 

286392_10116.jpg

இந்த வாய்ப்பைத் தக்கவைக்க, ஜெயலலிதாவின் பக்கம் இருந்த மற்ற காய்களை, சசிகலா கவனமாக வீழ்த்திக்கொண்டே இருந்தார். தன்னைத்தவிர... தன் குடும்பத்தைத்தவிர, ஜெயலலிதாவின் பக்கம், வேறு யாராவது சேர நினைத்தாலே... அவர்களைக் களையெடுத்துவிடுவார் சசிகலா. அதில், ஒருபோதும் சசிகலா அஜாக்கிரதையாக இருந்தது கிடையாது. இந்த விஷயத்தில் யாருக்கும், தயவுதாட்சண்யமே பார்க்கமாட்டார். சசிகலாவின் இந்த வியூகத்தால், ஜெயலலிதா யாரும் இல்லாதவர் ஆனார். வலம்புரிஜான், சசிகலா பற்றி ஒருமுறை குறிப்பிட்டபோது, “மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் மட்டும் சசிகலா இருந்திருந்தால், வெள்ளைக்காரனே இந்தியாவுக்குள் காலடி வைத்திருக்க முடியாது” என்றார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சசிகலாவை இப்படிக் கணித்திருந்தார். தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவை என்பதை காலம் நிரூபித்தது. அப்படி சசிகலா வீழ்த்திய காய்கள் யார்... யார்? 

ஜெ. - சசி நட்பால், தமிழகம் சந்தித்த வரலாற்றுச் சோதனைகள் என்ன... ஜெ. - சசி குவித்த சொத்துக்களின் பின்னணி என்ன.... தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் இருந்தும், விளாரில் இருந்தும் புற்றீசல்போல் கிளம்பிய சசிகலாவுடைய உறவுகளின் வரலாறு என்ன... 34 வருட ஜெ. - சசி நட்பின் பயணத்தில் மொத்தமாக சசிகலா செய்தது என்ன... செய்யாமல் தவிர்த்தது என்ன... இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பின்னாலும், ‘ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது’ என்று சொல்லப்படுவது எதன் பொருட்டு, அத்தனைக்கும் பதில் சொல்கிறது, ‘சசிகலா: ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான கதை!’ 

நாளை முதல்...

http://www.vikatan.com/news/coverstory/74533-how-sasikala-became-bestie-of-jayalalithaa-new-series.art

Categories: Tamilnadu-news