யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்

கறுப்பு ஜூலை

ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும்.

யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்

பெண்கள் போகக் கூடாதா ???????

2 months 1 week ago

பெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான்  அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா??? என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து  மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல.

ஆண்கள் சிறுவர்களாக இருந்தபோதும் சரி வாலிபர்களானபின்னும்சரி மணமுடித்த பின்னும்கூட தம் நண்பர்களுடன் சுதந்திரமாக திரிவதும், விடுமுறைக்குச் செல்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எம் சமூகத்தில் பெண்கள் தனியாக இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து விடுமுறைக்குச் செல்வது இலகுவாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இள வயதுப் பெண்கள் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டுச் செல்வது முடியாதது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபின்னும் பெண்ணுக்கு கணவனுடன் மட்டுமே விடுமுறையைக் கழிக்க வேண்டிய கட்டாயம்.

ஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்???????

இன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.

 

கரித்துண்டால் மதிலில் எழுதுவது.

2 months 1 week ago

கள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. 

உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான்.

பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் கெடுத்துவிடக்கூடாது. அது இதன் நோக்கமல்ல. ஒரு படைப்பாளியாக, விமர்சனங்களைச் சந்திக்கும் பக்குவம் உங்களிற்கு இருக்கும் என்ற அபார நம்பிக்கையில் இதை முன் வைக்கிறேன்.

மதிலும் கரிக்கட்டையும்

நாங்கள் அனைவரும் பதின்மத்தில் அல்லது அதிகபட்சம் இருபதுகளின் ஆரம்பத்தில் ‘மதிலும் கரிக்கட்டையும்’ என்றொரு பருவத்தைக் கடந்து வந்திருப்போம். ‘மதிலும் கரிக்கட்டையும்” என்பதனை வெறுமனே சுவற்றில் கரிக்கட்டையால் எழுதுவதாக இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, நமது கருத்து வெளிப்பாடுகளின் தன்மையினை அச்சொட்டாகப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு படிமமாகக் குறிப்பிட்டுக்கொள்கிறேன். அதாவது, ஒரு துணுக்கு நமக்குக் கிடைத்தவுடன் அது சார்ந்து எதிர்வினையாற்றுவது. பொழுதுபோக்குப் பெறுமதியில் நமக்குக் கிடைக்கும் ஒற்றைப் பரிமாணத்தைச் சுவற்றில் எழுதுவது (சுவர் இணையமாகக் கூட இருக்கட்டும்). சுடச்சுட எழுதியதைப் பார்த்து மக்கள் ஆற்றும் அனைத்து எதிர்வினைகளையும் எமது புகழாகக் கருதிக்கொள்ளுதல். ஆனால், எப்போதும் நாம் எவரும் நம்மைப் பற்றிச் சுவற்றில் எழுதுவதில்லை. மாற்றமின்றி மற்றையவரின் கதைகளே கிறுக்கப்படும். காரணம், கதை சார்ந்த பொறுப்பினை நாம் சட்டைசெய்வதில்லை. வரவு முழுவதும் எனக்கு இழப்பு முழுவதும் மற்றையவரிற்கு என்பதான மனநிலையில் செயற்பட்டுக்கொண்டிருப்போம்.

எவ்வளவிற்கு எவ்வளவு மேற்படி புகழிற்கு நாம் அடிமைப்படுகின்றோமோ அவ்வளவிற்கவ்வளவு நாம் அதிகம் அதிர்வேற்படுத்தும் கதைகளைத் தேடிச்செல்வோம். இந்த “மதிலும் கரிக்கட்டையும்” மனநிலை அதிகபட்சம் இரண்டாண்டுகள் நீடிக்கும். அனேகமாக ஒரு எதிர்பாராத் தருணத்தில் மற்றையவரிற்குத் தமது துணுக்கு ஏற்படுத்திய பாதிப்பின் கனதி இடியாக உணரப்படுவதில் இந்தக் கட்டத்தை நாங்கள் தாண்டுவது வழமையாக இருக்கும். பொதுவாக மிக இழமையில் நாம் இப்பருவத்தைத் தாண்டி விடுவது வழமையாக இருக்கும். குறிப்பாக எமது பிணைப்புக்கள் அது காதலோ, கலியாணமோ, குழந்தைகளோ, பணியோ, பணமோ என அதிகரிக்கையில் சுவரின் தாக்கம் இயல்பாக நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக மாறும். மற்றையவர் வலியினை நம்வலியாக உணர்ந்து கொள்ளல் சாத்தியப்படும். 

அப்படியாயின் மற்றையவர் கதைகளை நாம் பேசவே கூடாதா? ஊர்வம்பு பேசுதல் இல்லாத சமூகம் உள்ளதா? நிச்சயமாக மற்றையவர் கதைபேசுதல் தொன்மை மிகு மானிடத் தன்மை தான். ஆயினும், அனைத்தையும் போல இதன் பாத்திரம் மறக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.

ஊர்வம்பினால் என்ன லாபம்?

மனிதனின் தன்மைகளைக் குறிக்கும் படிமங்கள் வேண்டுமாயின் வரையறைக்குட்பட்டதாய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படிமத்திற்கும் எண்ணற்ற வெளிப்பாடுகள் சாத்தியம். மனிதன் ஒரு சமூக விலங்கு. நன்மையோ தீமையோ பிறருடன் பகிர்வதால் வாழ எத்தனிக்கும் ஒரு விலங்கு. அவ்வகையில் ஊர்வம்புகளின் மிகமுக்கிய பங்கு மனிதனின் தனிமையினைப் போக்குதல். அதாவது, உனக்கு என்னதான் பிரச்சினை உள்ளதாக—அது உடல், உள, உடமை எதுவாக வேண்டினும் இருக்கட்டும்—நீ நினைக்கிறாயோ அது உனக்கு மட்டுமானதல்ல. உன்னை ஒத்த பலர் உலகில் உள்ளார்கள். நீ தனியன் அல்ல. இப்பிரச்சினையில் இருந்து இவ்வாறு அவர்கள் மீண்டுவந்தார்கள் என்பதாக, ஒவ்வொரு தனிமையின் கனம்மிக்க தருணத்திலும் ஒரு கூட்டத்தைக் காட்டுவதில் ஊர்வம்புகள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

தன்னைப்போன்ற பிறரை ஒருவர் ஊர்வம்புக் கதைகள் வாயிலாகத் தனது அண்மையில் கண்டுகொள்ளல் சாத்தியம்.
ஆனால் ஊர்வம்பளப்பவரும் வளருதல் அவசியம். கரிக்கட்டையால் மதிலில் எழுதிய மனநிலையில் ஒரு வளர்ந்த எழுத்தாளர் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு வம்பைப் பேசத் துணியின், கதைமாந்தர் பக்க நியாயங்களிற்கும் நியாயம் செய்யவேண்டும். ஏனெனில் ஒருவர் கதையினை அவர் இல்லாதபோது பேசுபவர், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

பொழுதுபோக்கு

கதையின் பொழுதுபோக்கு அம்சத்தைக் கிஞ்சித்தும் கெடுக்காது, அதே நேரம் பொறுப்பாக எழுதல் சாத்தியம். ஆனால் அது உழைப்பினை வேண்டுவது. இதனால் தான் பல சமயங்களில் உண்மை மனிதரின் முகம் அடையாளப்படுத்தப்படமுடியாத வகையில் வம்பில் இருந்து புனைவிற்கு எழுத்தாளர்கள் மாறிக்கொள்கிறார்கள். இல்லை வம்மைப் தான் பேசுவேன் அப்போது தான் எனது கதைக்களம் நான் ரசித்த வகையில் வெளிப்படும் என்று எழுத்தாளர் உணரின், அவசியம் உழைப்புச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். தரவுகள் சரிபார்க்கப்படவேண்டும். பார்வைகள் நிறுக்கப்படவேண்டும். பாதிப்புக்கள் எடைபோடப்படவேண்டும். அனைவரிற்கும் குரல் கொடுக்கப்படவேண்டும். இல்லையேல், வழக்குகள் சட்டம் என்பனவற்றிற்கப்பால் மனசாட்சி சாட்டைவீசும். குறைந்தபட்சம் மனசாட்சியின் சாட்டையினை உணரப்பழகல் வேண்டும்.

மேற்படி தளத்தில் நின்று, சற்றும் குறையாத பொழுதுபோக்கினை வளங்குதல் முற்றிலும் சாத்தியம் என்பதற்கப்பால் அறமும் கூட.

புலப்பெயர்வைத் தொடர்ந்த குழந்தைத் தனம்

எமது சமூகத்தில் பல வளர்ந்தவர்கள் பதின்ம வயதின் தன்மையில் தங்கிநிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு ஏகப்பட்ட உளவியல் காரணங்களைக் காரணம் காட்டமுடியும் என்றபோதும், எனது அபிப்பிராயத்தில் இப்பிரச்சினை சார்ந்த முதற்படி எதிர்வினை காரணத்தைக் காட்டல் என்பதல்ல. மாறாக, இப்படி ஒரு பிரச்சினை சமூகத்தில் இருக்கின்றது என்பதை நாம் கருத்திற்கொள்வதே.

அண்மையில் எதேச்சையாக யாழ் இந்துவில் கூடப்படித்த ஒருவரை பலகாலம் கடந்து சந்திக்க நேர்ந்தது. எமது வகுப்பினரிற்கு ஒரு whatsapp குழுமம் இருப்பதாகவும் என்னை இணைக்கலாமா என்றும் கேட்டார். இணைந்தபோது மலைப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பில் இருந்த மனநிலை இன்னமும் அபரிமிதமாக குழுமத்தில் வெளிப்படுகிறது. நாற்பது வயது கடந்தும் பெண்களின் படம் பார்ப்பது அங்கு கிழர்ச்சி குடுக்கிறது. புரியவே இல்லை. பெண்களைப் பிடிக்கும் என்றால், பெண்துணை தேடிக்கொள்வது அத்தனை சிரமமா என்ன? எதனால் நாற்பது வயதிலும் ஒருவர் பதின்மப் பையன் போன்று படம் பார்த்துக் கிழுகிழுக்கின்றார்? எதனால் இந்தத் தேக்கம் நிகழ்ந்தது? சற்று இதுபற்றிச் சிந்திக்கையில் பதின்மத்தின் பல தன்மைகள் பலரில் நமது சமூகத்தில் அப்படியே தங்கி நிற்பதைக் காணமுடிகிறது. மதிலில் கரித்துண்டால் எழுதுவது கூட அத்தகைய ஒரு வெளிப்பாடு தான். 

இது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா? புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா? ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா? அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா? தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா? உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா? இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா? கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா?

இவ்வாறு பலகேள்விகளோடு இருந்த ஒரு பொழுதில் தான் தொடர்ந்து உங்கள் பதிவுகள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது மேற்படி விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. அதனால் இந்தப் பதிவு.

உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

யார் இந்த காளிதாசன்! (பாகம் 1)

2 months 3 weeks ago
காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை  இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.
 
pic1.jpg
 
அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;
 
“கற்கும்போதே
இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…
ஒன்று கலவி
மற்றொன்று காளிதாசனின் கவிதை….”
 
“காளிதாசனின் கவிதை
இளமையான வயது
கெட்டியான எருமைத் தயிர்
சர்க்கரை சேர்த்த பால்
மானின் மாமிசம்
அழகிய பெண் துணை
என் ஒவ்வொரு ஜன்மத்திலும்
இதெல்லாம் கிடைக்க வேண்டுமே!”.
 
காளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.
 
காளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள்.
 
உதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;
 
 
“மழையின் முதல் துளிகள்
அவளின் கண் இமைகளில்
சிறிது தங்கின…
பின் அவள் மார்பகங்களில்
சிதறின…
இறங்கி அவள் வயிற்று
சதைமடிப்பு வரிகளில்
தயங்கின…
வேகுநேரத்திற்கு பின்
அவள் நாபிச் சுழியில்
கலந்தன…”
 
இனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்.
 
தொடரும்..
 
நன்றி,
அருள்மொழிவர்மன்
(www.entamilpayanam.blogspot.com)

இலங்கைக் கோட்டகள்

2 months 4 weeks ago

இலங்கைக் கோட்டகள் பற்றிய தகவல்களை இணைப்பினூடாகக் காணலாம். குறிப்பாக யாழ் இராச்சிய காலத்து எச்சங்கள் தொடர்பாக யாராவது அறிந்திருக்கிறீர்களா? கீழுள்ள படத்தில் விபரங்களைக் காணலாம்.

Fortress+around+Nallur.jpg

யாழ்ப்பாண அரசின் நகர அமைப்பு

3 months ago

யாழ்ப்பாண அரசின் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது என்ற விளக்கமும் முப்பரிமாண விளக்கப்படமும் இச்சுட்டியில் உள்ளது.  வ. ந. கிரிதரன் எழுதிய நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்ற நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

Jaffna+kingdom%2527s+town+layout%252C+Na

வாழ்க்கை எப்படிப் போகின்றது?

3 months ago

முன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு.

போராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்கம் இப்படி இன்னபிற காரணிகளின் துணைகொண்டு) என்று நிரூபிப்பதை வாழ்வின் அர்தமாகக் கொண்டிருந்தார்கள். ஆக, ஏதோ ஒரு வகையில் போராட்டம் அர்தங்களின் விளைநிலமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு வெற்றிடம் சூழ்கிறது.

போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் வளர்ந்தவர்களாக வாழ்ந்தவர்கள் யாரேனும் யாழில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் அந்தக் காலம் தொன்றுதொட்ட பாரம்பரியம் சார்ந்ததாக, பாரம்பரியத்தில் இந்தப் பிரச்சினை கையாளப்படுவதற்காக இருந்த கூறுகளின் பிடியில் இப்படி ஒரு பிரச்சினை இருந்ததே தெரியாது நகர்ந்திருக்கலாம்?

தற்போது அர்த்தம் தேடுதல் மேட்டுக்குடிப் பிரச்சினை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பின்நவீனத்துவம் புரட்ச்சிகளைக் காலாவதியாக்கிவிட்டது. தொழில் நுட்பம் எல்லைகளைக் கரைத்து விட்டது. சந்தை பெறுமதிகளைப் புதைத்துவிட்டது. செல்வம் அனைவரிடம் நிறைந்து கிடக்கிறது. கல்வி என்ற பெயரில் கட்டழைகளால் மூளை நிறைகின்ற போதும் கல்வி தொலைந்து விட்டது, வீரம் அநாகரிகம் என்றாகிவிட்டது. மொத்தத்தில் கதாநாயகர்கள் கதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 

மேற்படி நிலை உணரப்பட்டதும் பிள்ளைகளில் மனதைக் குவியப்படுத்தித் தியாகிகள் ஆகிவிடப் பலர் முனைகிறார்கள். தமது வெற்றிடங்களைத் தமது பிள்ளைகளின் வெற்றிகொண்டு நிறைக்கத் தலைப்படுகின்றனர். ஆனால், இம்முயற்சி முயல்கொம்பு. இவர்களின் வெற்றிடம் பலமடங்கு பெரிதாகப் பிள்ளைகளிற்குள்ளும் வளர்கிறது. இப்போது கனடாவில் மிகப்பொதுவாக, பிள்ளைகளின் பல்கலைக்களக செலவு மட்டுமன்றி ஆடம்பர திருமணங்கள் ஊடாக வீடுகளைக் கூடப் பெற்றோர் பிள்ளைகளிற்கு வாங்கிக் கொடுப்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது, இதனால், நாற்பது வயதடைந்தபோது முன்னைய சந்ததி பெற்றுக் கொண்ட செல்வத்தின் சுதந்திரம் தற்போது இருபதுகளிற்கு வரப்பார்கக்pறது. ஒருவகையில் இது முன்னேற்றம் என்று பார்க்கினும், முன்னைய சந்ததி நாற்பது வயதில் சந்தித்த அர்த்தம் தேடல் தற்போது இருபதுகளில் ஆரம்பிக்கிறது. பேரன் பேத்தியில் மீண்டும் கதை ஆரம்பிக்கிறது.

உத்தியோக உயர்வு, உயர்பதவிகளில் உட்காரல், அதிகாரம் போன்றன எல்லாம் இன்றைக்குத் தேடல்கள் அல்ல என்றாகிவிட்டது. ஏனெனில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன. அதிவேக கார்கள் முதலான இதர பல அதிர்வுகள் அதில் நாட்டமுள்ள அனைவரிற்கும் கிடைக்கின்றன. நாம் வைத்திருக்கும் வாகனங்களின் உச்சப் பயன்பாட்டை அனுபவிக் அவற்றை றேஸ் திடலிற்கு எடுத்துச் சென்றே அனுபவிக்க முடியும் என்றளவிற்கு நாளாந்த தெருவிற்குச் சம்பந்தமற்ற வாசகனங்களைச் சர்வசாதாரணமாக ஓட்டிக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கிறோம். ஐந்தாயிரம் வரை கொடுத்து சிறந்த நாய்க்குட்டிகளை ஆராய்ச்சி செய்து பெற்றுக்கொள்கிறோம். ஆடம்பரச் சுற்றுலாக்கள் சர்வசாதாரணம். காதலும் காமமும் தாராளம், ஆனால் வெற்றிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

ஒரு முனையில் ஆன்மிக வியாபாரம் முதலியன மேற்படி வெற்றிடம் சார்ந்து எழுகின்றன. என்ன தான் எழுந்தாலும் அர்த்தம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. போதைகள் பலவிதம் ஆனால் அனைத்தும் தற்காலிகம். புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது. இசை, திரைப்படம், ஓவியம், சமையல் என்று எண்ணற்ற முனைகளில் ரசனையும் creativityயும் ஓடிக்கொண்டு நிறங்கள் தெரிந்து கொண்டும் இருப்பினும், ஒரு எல்லையினை வாழ்வு தாண்டியதும் வெற்றிடம் அறியப்பட்டுவிடுகிறது. அதன் பின்னால் கடிவாளங்கள் பலமிழந்து போகின்றன.

இந்தவகையில், யாழ்கள உறவுகளின் அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு…

முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa

3 months 1 week ago

 

முருகமூர்த்தி அவனுக்கு  பெற்றோர் இட்ட பெயர். பெற்றோர்கள் எந்த மதத்தை கடைப்பிடிக்கிறார்களோ அந்த மதக்கடவுளின் பெயர்களை வைப்பது எம்மவர்களின் மரபு அந்த வகையில் அவனுக்கும்  அந்த பெயர் அவனின் அனுமதியின்றி ஒட்டிக்கொண்டது.ஆசிரியர் இடாப்பு கூப்பிடும்பொழுது மட்டும் முருகமூர்த்தி என்று அழைப்பார்.மற்றும்படி முருகா,முருகு ,முருகன் என்றுதான் அழைப்பார்கள்,

 அவனது வீட்டுக்கு அருகில் முருகன் கோவில் உண்டு பரம்பரை பரம்பரையாக அவன‌து முன்னோர்கள் வழிபட்டு வந்த கோவில்.அவன் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே பாட்டி அழைத்து சென்று கற்பூரம் கொழுத்தி விளக்கேற்றி வருவார்,சில சமயம் கோவில் முற்றத்தை துப்பரவு செய்வார்.நான் இல்லாத காலத்தில் முருகு நீ தான் வெள்ளிக்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வைக்கவேணும். பாட்டிக்கு ஒம் என்று சொல்லிவிட்டான்

.அவனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது பாட்டி இறை பதமடைந்து விடவே .அவன் வெள்ளிக்கிழமைகளிள் தாயாருடன் சென்று விளக்கேற்றி வந்தான்.

ஒரு நாள் கோவிலுக்கு பின்னேரம் விளையாட போட்டிருந்த உடுப்புடன் போகதயாரானான்.அதை அவதானித்த தாயார்

"பாட்டி எப்படி கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லி தந்தவ"

"குளித்து சுத்தமா போகவேனும் என்று சொன்னவ,நான் காலம்பிற குளிச்சிட்டன்"

"உந்த புழுதிக்குள்ள உழுது திரிச்சனீயள்ளோ,காற்சட்டையையும் செர்ட்டையும் பார்,கைகாலை கழுவி வேறு சட்டையை போட்டுக்கொண்டு வா"

அவனுக்கு குளிக்கிறது என்றால் கொல்ல கொண்டு போறமாதிரி,கிணற்றடியில் கை காலை கழுவிட்டு ஓடி வந்து தீபாவளிக்கு சீத்தை துணியில் தைத்த சேர்ட்டையும் காற்சட்டையும் போட்டுக்கொண்டு வந்தான்.அந்த சேர்ட்டை அவன் போடமல் வைத்திருந்தமைக்கு காரணம் அதில் வரும் மண்ணெயின் மணம் தான்.

"டேய் கோவிலுக்கு போகும் பொழுது உது என்ன தியட்டருக்கு போற மாதிரி போட்டிருக்கிறாய், ஒடி போய் வெள்ளை சேர்ட்டை போடு"

"வெள்ளை சேர்ட் ஊத்தையாக இருக்கு அப்பா"

"அப்ப ,சேர்ட் போடாமல் போயிட்டு வா "

"ஐயோ நான் மாட்டேன்"

அவனை அழைத்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த தனது சால்வையை அவனது காற்சட்டைக்கு மேல் சுற்றிவிட்டு,விபூதி யை பூசி இப்ப நீ அம்மாவுடன் கோவிலுக்கு போகலாம் என்றார்.அவனுக்கு வெட்கமாக இருந்தாலும் தந்தைக்கு பயத்தில் கோவிலுக்கு தாயாருடன் சென்றான்.

இனிமேல் இப்படித்தான் கோவிலுக்கு வரவேனும் இது உனக்கு வடிவாயிருக்கிறது,ஒம் அம்மா என்று தலையாட்டினான்.தனியாக செல்லும் பொழுது வெள்ளை சேர்ட்டும் போட்டுகொண்டு போவான். அவன் சால்வையை வேஸ்டியாக கட்டும் வயதை தாண்டிவிட்டான் என உணர்ந்த தந்தை தீபாவளிக்கு இந்த தடவை அவனுக்கு வேஸ்டி வாங்கி கொடுத்தார். ஆனால் அவன் தந்தையின் பழைய வேஸ்டியைதான் கட்டிகொண்டு செல்வான் .

அந்த முருகனும் இரண்டு பட்டுத்துணியை மாறி மாறி அணிந்து இருப்பார் அதை அணிய வரும் ஐயரின் வெள்ளை நிற வேஸ்டி பழுப்பு நிறமாக இருக்கும்.அதில கறுப்பு நிறத்தில பட்டிக் டிசைன் தெரியும்.அது வேறு ஒன்றுமில்லை விளக்குதிரியின் முனையை பிடித்த பின்பு வேஸ்டியில் துடைத்தமையால் வந்த டிசைன்.

கால போக்கில் கோவிலுக்கு போறதை நிறுத்தி கொண்டான் .,இறக்குமதி செய்யப்பட்ட சித்தாத்தங்கள் அவனை ஆள் கொள்ள தொடங்க பரம்பரையாக க‌டைப்பிடித்த கொள்கைகள் விடுபட தொடங்கின .தாயார் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்துகொண்டிருந்தார்.முருகா இந்தமுருகை எங்கயாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடு என ஒவ்வொரு நாளும் முருகனை தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டாள்.

தாயாரின் வேண்டுதலுக்கு முருகன் செவிமடுத்து முருகை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்.

"இன்றைக்கு எத்தனை மணிக்கு வேலையால் வருவீங்கள்"

"வழமையா வாற நேரத்திற்கு"

"கொஞ்சம் எர்லியா வர முடியுமோ"

"ஏன்"

"முருகன் கோவில் கொடியெறிவிட்டுதல்லோ"

"எப்ப"

" இரண்டு நாளைக்கு முதல், நாட்டு நடப்புகள் தெரியாது.வேலைக்கு போறது வந்திருந்து  கொம்புயூட்டரை பார்க்கிறது"

"சரி சரி கத்தாதை வயசு போன நேரத்தில உனக்கு கூடாது"

"ஓ ஓ எனக்கு வயசு போய்யிற்று உங்களுக்கு மட்டும் வயசு அப்படியே நிற்குதாக்கும்"

"நான் மார்க்கண்டேயர் பரம்பரை"

"சும்மா கொதியை கிளப்பாதையுங்கோ ,நீங்கள் மார்கண்டேயர் பரம்பரை என்பதை நான் சொல்ல வேணும்"

"சரி பின்னேரம் எர்லியா வாறன்"

 

"முருகு, வரும் பொழுது சுதாவின்ட வீட்டை போய் என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்தனான் எடுத்துக் கொண்டு வாங்கோ"

 

"இப்ப என்ன அவசரம் பிறகு எடுக்கலாம் தானே"

"சீ சீ  நான் திருவிழாவுக்கு என்று தைச்ச பிளவுஸ்"

"திருவிழா முடிய இன்னும் ஐந்தாறு நாள் இருக்கே"

"முருகு அதுக்கு போட பிளவுஸ் இருக்கு இன்றைக்கு மஞ்சள் கலர்  சீலை தான் எல்லோரும் உடுப்பினம் அதுக்கு பிளவுஸ் இல்லை அதுதான் முருகு பிளிஸ்"

எதாவது தேவை என்றால் கொஞ்சி குலாவிதனது காரியத்தை முடித்து கொள்வாள்.

வேலை முடிந்து வரும் பொழுது சுதாவீட்டை போனவன் அழைப்புமணியை அழுத்தினான்.கையில் கத்தரிக்கோலுடன் வந்த சுதா

"வாங்கோ,வாங்கோ,உங்கன்ட மிஸிஸ் கோல் பண்ணின‌வ நீங்கள்  வருவீங்கள் எண்டு"

"பிளவுஸ் தைச்சாச்சோ"

"கை தைச்சு முடியல ஐந்து நிமிடம் இருங்கோ ட‌க் என்று தைச்சுதாரன்"

"என்ன பிசியோ"

"ஒமோம் முருகன் கோவில் கொடியெறிட்டுது எல்லோரும் ஆறு எழு பிளவுஸ் என்று தைக்க தந்திருக்கினம் அதுதான்"

"அட கோதாரி ஆறு ஏழு பிளவ்ஸா"

" உங்கன்ட மிசிசே பத்து பிளவ்ஸ் தைக்க கொடுத்தவ,மற்ற பிளவ்ஸ்களை முதலே எடுத்துகொண்டு போய்விட்டா,"

கதைத்தபடியே பிளவ்ஸை தைத்து முடித்து முருகிடம்  கொடுத்து விட்டாள் சுதா.

 

இன்றைக்கு மனிசி கோவிலுக்கு போய்விடும் நிம்மதியா வீட்டிலயிருந்து கதை ஒன்றை கிறுக்குவோம் என்று நினைத்தபடியே வந்தவன்,

"இந்தாரும் அப்ப உம்மட பிளவ்ஸ்"

"ஐயோ தாங்க்ஸ் அப்பா நான் நினைச்சேன் நீங்கள் மறந்துகிறந்து போய்விடியளோ என்று"

"நீர் சொல்லி நான் என்னத்த எப்ப மறந்திருக்கிறன் சொல்லும்"

"உந்த நக்கல் கதைக்கு மட்டும் குறைச்சலில்லை,நீங்களும் குளிச்சு போட்டு வாங்கோவன் கோவிலுக்கு போய்விட்டு வருவோம்"

"நான் வரவில்லை நீர் போயிற்றுவாரும்"

"சும்மா அடம் பிடிக்காமல் வாங்கோ, மஞ்சள் வேஸ்டி எடுத்து வைச்சிருக்கிறன் சுற்றி கொண்டு வாங்கோ"

முருகு கோவிலுக்கு யாராவது வரச்சொன்னால் போகாமல் இருக்கமாட்டான்.விருப்பமில்லாவிடிலும் பயம் காரணமாக சென்று விடுவான்.

முருகும் மஞ்சள் வேஸ்டி அணிந்து கோவிலுக்கு சென்றான்.

முருகனை பார்த்து அரோகரா என இரு கை தூக்கி கண்ணை மூடி திறந்தான் முருகன் மஞ்சள் பூக்களாலும் மஞ்சள் பட்டுத்துணியாலும் அலங்கரிக்கப்பட்டு அழககாக காட்சியளித்தார்.சற்றே திரும்பினான் தலைசுற்றி போனான் ,நின்ற ஐயர்மாரும் மஞ்சள் வேஸ்டியை அழகாக ஸ்திரி பண்ணி அணிந்திருந்தார்கள். பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க மஞ்சள்  சேலைகளினதும் ,மஞ்சள் வேஸ்டிகளினதும் எண்ணிக்கை அதிகமானது.பக்கத்தில் மெய்மறந்து நின்ற மனிசியிடம்

" என்னப்பா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி மஞ்சளில் வந்திருக்கினம் என்ன விசயம்"

"உங்களுக்கு தெரியாதே இன்றைக்கு எங்கன்ட சப்பேர்ப்காரரின்ட திருவிழா"

"அதுக்கும் மஞ்சளுக்கும் என்னடியாத்தை சம்பந்தம்"

" ஒவ்வொரு சப்பேர்ப்காரர்களுக்கும் ஒரு கலர் கொடுத்திருக்கினம்"

" யார் கொடுத்தது?முருகனே"

திருமதி முருகு அவனை சுற்றெரிப்பது போன்று பார்த்தாள்.

"கூல் கூல் சும்மா ஒரு பகடிக்குத்தான்"

"கோவிலில் நின்று என்ன பகடி வேண்டிக் கிடக்குது"

முருகா போற போக்கில எம்மவர்கள் உனக்கு கோர்ட் சூட் போட்டு அழகு பார்த்தாலும் பார்ப்பார்கள்.எனக்கு மனதில தோன்றியதை சொல்லி போட்டேன் யாவும் உன் செயலே....உனக்கும் டெர்ஸ்கொட்  கொண்டு வந்திட்டாங்கள் உன் பக்தர்கள்...முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா  ......dress code

ஊரிலயும் நீ அலங்கார‌மாகவும் புதுக் கோவிலிலும் வசதியாக இருப்பதாக கேள்வி ..நாற்பது வருடத்திற்கு முன்பு உன்னிட்ட வந்து விளக்கேற்றிய புண்ணியம் இன்றைக்கு என்னையும் உன்ட பக்தர்களின் dress code விளையாட்டுக்குள் இழுத்து  விட்டுள்ளது.

என எண்ணியபடியே முருகனை வலம் வந்தான் முருகு....

கொலிடே போறம்

3 months 1 week ago

புதிய ஊர்கள் நாடுகள் பார்ப்பதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விருப்பம் தான். ஆனாலும் பணம் பணம் என்று அதைச் சேர்ப்பதில் உள்ள ஆர்வம் செலவழிப்பதில் இருப்பதில்லை பலருக்கு. யேர்மனியில் வசித்தபோது நானும் கணவருமே முழுநேர வேலை செய்தோம். முழுநேரம் என்றால் எட்டே எட்டு மணிநேரம் தான். அதற்குமேல் பெரும்பாலானவர்கள் வேலை செய்வதில்லை.  ஆண்டில் ஆறு வாரங்கள் விடுமுறை  உண்டு. சம்பளத்துடன் ஒரு நாளுக்கு 32 டொச் மார்க்குகள் மேலதிகமாக விடுமுறைக்காகத் தரப்படும். அப்ப சொந்த வீடும் ஒருத்தரிட்டையும் இல்லை. அதனால் மற்றவரைப் பார்த்துப் புகைந்து நாமும் சொந்த வீடு வாங்கவேணும் எண்ட துன்பமும் இல்லை. வாடகை லண்டன் போல் உச்சத்துக்கு போவதும் இல்லை. ஒருவரின் உழைப்பிலேயே மிக மகிழ்வாக வாழக்கூடிய நிலை.

நத்தார் என்றால் இரு வாரங்களுக்கு எமது வேலையிடத்தில் விடுமுறை விடப்படும். அத்தோடு சேர்த்து நாம் ஆறு வாரங்களோ அல்லது ஒரு மாதமோ விடுமுறை எடுத்துக்கொண்டு நாடு பார்க்கக் கிளம்பிவிடுவோம். அப்போதெல்லாம் தாயகத்துக்குப் போவதை நினைத்தே பார்க்க முடியாதுதானே. அதால ஐரோப்பா, கனடா, இந்தியா,சிங்கபூர் எண்டு 1991 - 2003 வரை பல நாடுகளுக்குப் போய் வந்தாச்சு. 2003 லண்டன் வந்தபிறகு எங்களை லண்டனில் நிலைநிறுத்திக்கொள்ள மூன்று ஆண்டுகள் ஓடிப்போனது. அதன்பின் பிள்ளைகளின் படிப்பு, நாட்டு நிலை, கடை நடத்தியது என்று பெரிய விடுமுறை எமக்குக் கிடைத்ததே இல்லை. ஆனாலும் பெற்றோர் இருந்ததனால் அடிக்கடி ஜெர்மனிக்கும் வரும் வழியில் பிரான்ஸ், கொலன்ட் எண்டு ஒரு வாரமோ இரு வாரங்களோ மட்டும் விடுமுறையாகிப் போனது.

நாம் பிள்ளைகளுடன் கூடியிருந்து கதைக்கும்போது ஜெர்மனியில் இருந்ததும் விடுமுறைகளை மகிழ்வாகக் கழித்ததும் ஒரு கணாக் காலம் என்பார்கள். கடை வைத்திருந்து காசு பார்த்த மனம் கடை கொடுத்தபின்னரும் நல்லதொரு கடை தேடி அலைந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் புதிய வியாபாரம் தேடி களைத்துப்போய் எல்லோரும் கூடியிருந்து கதைத்தபோது மூத்தமகள் சொன்னாள் "அம்மா எதற்காக நீங்கள் இனியும் கடை வாங்க அலைகிறீர்கள். நாங்கள் இருவரும் படித்து முடித்து வேலை செய்கிறோம். இனி நீங்கள் கடை எடுத்தாலும் நாம் வந்து உதவி செய்ய முடியாது. அத்தோடு நீங்கள் இருவரும் நின்றால்த்தான் கடை ஒழுங்காக ஓடும். ஏதும் வருத்தம் வந்தால் என்ன செய்வீர்கள். அதனால் அப்பாவும் நீங்களும் எங்காவது மூன்று நான்கு நாள் வேலை செய்யுங்கள். அது போதும் உங்களுக்கு. நின்மதியான வேலை. எவ்விதப் பொறுப்புக்களும் இன்றி மகிழ்வாக ஊர் சுற்றலாம்" என்றாள்.

கணவரும் "எனக்கும் கடை எடுப்பதில் முழு விருப்பமும் இல்லை அம்மாவின் கரைச்சலால் தான் நான் ஓம் எண்டனான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். எனக்கு வந்த ரோசத்தில் "எனக்காக ஒருத்தரும் கடை தேட வேண்டாம். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கள்" என்று சொல்லி எழுந்து போய்விட்டேன். கடை எடுக்கிறது தானே என்ற எண்ணத்தில் சும்மா இருந்த மனிசன் எடுப்பதில்லை என்று முடிவு எடுத்த அடுத்த வாரமே ஒரு வேலையைத்தேடி எடுத்திட்டார். எனக்கு எங்கு வேலைக்குப் போவது என்ற யோசனை. கிட்டத்தட்ட  இருபது ஆண்டுகள் வேலை செய்தாச்சு இனியும் வேலைக்குப் போகவேணுமோ என்று ஒரு கேள்வி மனதில். அதுதான் பொழுது போறதுக்கு முகநூல் இருக்கே.

காலமை ஆறு மணிக்கு எழும்பி மனிசனுக்கு தனிப்பாலில ஒரு கோப்பி போட்டு நானும் குடிச்சிட்டு கடைக்குட்டிக்கு பள்ளிக்குச் சாப்பாடு கட்டி வேலைக்குப் போற மற்ற இருவருக்கும் பால் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்ப எட்டு மணியாவிடும். அதுக்குப் பிறகு காலை உணவை உண்டுவிட்டு பூங்கன்றுகளுடன் கிண்டிக் கிளறி பொழுதைப் போக்க பண்ணிரண்டாவிடும். அதுக்குப்பிறகு மதிய உணவைச் சமைத்து உண்டுவிட்டு யாருடனாவது போனில் அலட்டிவிட்டு தூக்கம் வந்தால் ஒருமணிநேரம் தூங்கி முடிய "உனக்குச் சாப்பிட்டிட்டு நித்திரை கொள்ளுறது தான் தொழிலோ"?? என்றபடி மனிசன் வந்து நிர்ப்பார். இன்னும் கொஞ்சநேரம் படுக்கலாம் என்ற நினைப்பை மனிசனின் குத்தல் கதை எழும்பி இருக்க வைக்கும். பிறகும் என்ன. மனிசனுக்குப் பால் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு நானும் ஒன்றைக் குடிக்கத் தொடங்க அதையும் நின்மதியாக் குடிக்க விடாமல் "எங்கையாவது வேலை தேடினனியோ"?? என்ற கேள்வி வந்து விழும். அந்த நேரங்களில தான் அட வந்தனாங்கள் முதலே லண்டன் வந்திருந்தால் இரண்டு வீட்டையாவது வாங்கி விட்டிருக்கலாம் என்ற ஆதங்கமும் கூடவே எழும்.

தப்பித்தவறி வாய் தடுமாறி மனுஷனுக்கு உதைச் சொன்னால் "தேவையில்லாமல் உடுப்புகளை வாங்கி எறியாமல் விட்டிஎண்டாலே  கன காசைச் சேர்த்திருக்கலாமே" எண்டோ "உந்தப் பூக்கண்டுகளை வாங்கி வாங்கி என்னத்தைக் கண்டனி?? ஒண்டுரண்டு பூக்கன்றுகள் காணாதே?? வீட்டுக்குள்ளதான் கண்ட இடமெல்லாம் பூக்கண்டை வைச்சு மனிசருக்கு எரிச்சலைக் கிளப்பிறாய் எண்டால் தோட்டம் முழுதும் பூக்கண்டை நட்டு காடாய்க் கிடக்கு. இரண்டு மரக்கறியை வச்சாலாவது  சாப்பிடவாவது உதவும்" என்று ஆலாபனை நடக்கும். முந்திஎண்டால் ஒண்டுக்கு ரெண்டு கதை நானும் சொல்லிக்கொண்டிருப்பன். இப்ப வேலை இல்லை எண்டதாலை கொஞ்சம் அடக்கிவாசிக்கிற எண்ணத்தில கேட்டும் கேட்காதமாதிரி இருக்க வெளிக்கிட்டன்.

ஆனால் அதுவும் செப்டெம்பர் வரை தான். அதுக்குப் பிறகு குளிரில தோட்டத்துக்குள்ளையும் போக ஏலாமல் வேலையும் இல்லாமல் மனிசனுக்கு பக்கத்திலேயே இருக்கவேண்டியதாப் போக ஒருநாளும் இல்லாதவாறு என்னுடன் மாமியார் இல்லாத குறையை என் மனிசன் நான்கு மாதங்கள் தீர்த்து வைத்தார். அதைத் தாங்க முடியாமல் ஒருவாறு தபாற்கந்தோர் ஒன்றில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை தேடி எடுத்தாச்சு. அதன் பின் மனிசனின் குத்தல் குடைச்சல் இல்லாமல் நின்மதி வந்தது.

என்னடா கொலிடே என்று தலைப்பைப் போட்டிட்டு தன்ர சோகக் கதையைச் சொல்லுறாவே என்று நீங்கள் மனதுக்குள்ள நினைக்கிறது எனக்குக் கேட்குது.

அடுத்தது அந்தக் கதைதான்........

 

ஆலமரமும் அழியாத ஞாபகமும்

3 months 2 weeks ago

ஆலமரமும் அழியாத ஞாபகமும்

- சாந்தி நேசக்கரம் -

__________________________________

வேர்கட்டிய மண்ணின்
ஆழத்தை அழி(ரி)த்தது மழை.

ஊர்கட்டி வளர்த்த 
காலத்தின் க(வி)தை
இறுக்கம் தளர்ந்து
சரியத் தொடங்கியது.

வல்லியர் காலத்து வைரம் 
வசந்தம் காணாமல்
இரவடி(ழி)த்த
மழையின் பெயரால் 
பாறி வீழ்ந்தது.

எம்மூரின் பரம்பரை 
ஆல்விழுதின் கதை 
விடிய முதல் 
ஆயுள் முடிந்தது.

இருந்தவரை நிழல்
நாங்கள் ஊஞ்சலாட விழுது 
ஊர் மடியில் கனத்தோரின்
கதையறிந்து 
கண்ணீர் துடைத்த தோழமை.

சோளகக் காலம்
கால்நடைகள் உணவாக
ஆலிலைகள் தந்த 
உரம் பாய்ந்த மரம்.

எங்கள் பெரிய ஆலமரம்
ஓரிரவில் குடைசாய்ந்து
ஓய்ந்தது உயிர்.

பங்கு பிரித்து கோடரிகள்
பல்லாண்டுப் பலம் 
பக்கமக்கம் எல்லாம் 
பிரிந்து போனது
குளையாக விறகாக.

கூடு கட்டிய பறவைகள் 
இடம்பெயரும் கண்ணீரை
அறியாத மனிதர்களும்
ஒருநாள் இடம் பெயர்ந்தோம்.

பறவைகளின் துயரறியாக் 
கண்ணீர் போல 
உலகறியாத - எங்கள் 
துயர் வலிகள்
இன்னும் புரியாதவர்களாய்.

உலகெலாம் அலைகிறோம். 
வேர்களை அங்கங்கே நாட்டி
வந்த வழி மறந்து 
வாழ்கிறோம்.

பெருமையும் பேரமும் 
பேசியே தொலைகிறோம். 
அருமை என்பதன்
பெருமை அறியாப் 
பேதமைகளோடு.

19. 11. 2016

(என் கிராமத்தில் நான் வாழ்ந்த குறிச்சி பெயர் பத்தகல் சமாதி கோவிலடி.  எங்கள் குறிச்சியில் இருந்த வைரவர் கோவிலடியில் இருந்த பெரிய ஆலமரம் 88ம் ஆண்டு பெய்த பெருமழையில் பாறிவிழுந்தது. அந்த ஆலமரத்தின் நினைவில் இக்கவிதை. வல்லிபுரம் (வல்லியர்) எனது பூட்டனார். அந்த ஆலமரம் பற்றி பலகதைகளைச் சொல்லியிருக்கிறார்)

Checked
Sun, 07/22/2018 - 06:32
யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் Latest Topics
Subscribe to யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் feed