ஊர்ப்புதினம்

ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்!

2 months 2 weeks ago

ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – வழமைப் போன்று இயங்கும் யாழ். நகர்!

jaffna-2-1-780x470.jpg

வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்த முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவில் உள்ள இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி வடக்கு – கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

முன்னதாக கடந்த 15ஆம் திகதி இந்த கதவடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களுக்காக இன்று திங்கட்கிழமை (18ஆம் திகதி) பிற்போடப்பட்டிருந்தது.

இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்த நிலையில், அதற்கு சமமாக எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து பொய்யான பிரச்சாரங்களால் மக்கள் ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், இந்த சம்பவத்தின் உண்மைகளைத் திரித்து, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், சில அரசியல் குழுக்கள் வடக்கு, கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனவே, இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு பொது மக்கள் ஏமாறக்கூடாது என்றும், உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/ஹர்த்தாலுக்கு-ஆதரவில்லை/

அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்?

2 months 2 weeks ago

அடுத்த வருடத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்?

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம். அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம். சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம்.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது. அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை. அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு.

மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார்.

https://www.samakalam.com/அடுத்த-வருடத்தில்-மாகாண/

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும்!

2 months 2 weeks ago

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும்!

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்தார்.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் மூலம் பலன்களைப் பெற்று வந்ததாக தலைவர் கூறினார்.

அதன்படி, இந்த மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்போது, அந்த எண்ணிக்கையை விட அதிகமான மீனவர்களுக்கு பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmefd6iwd02naqp4k9xg074bv

இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு

2 months 2 weeks ago

நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு

Aug 17, 2025 - 09:09 -

நீரில் மூழ்கி  257 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். 

இதற்கிடையில், நீரில் மூழ்கி விபத்துக்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmef4zsxz02n0qp4kfae9rzm6

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

2 months 2 weeks ago

17 AUG, 2025 | 07:34 PM

image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடு, எனவே  நாம்  அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது  கட்சியின் அரசியல் எழுச்சிளை தடை  செய்ய வேண்டும் என்பதற்காகவே, எனவே இச் சட்டத்தை பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம். எனவே பயங்கரவாத தடைச்சட்டதை நீக்குவதே எமது அரசின் நோக்கம் எனத் தெரிவித்த அமைச்சரிடம்  ஊடகவியலாளர்கள் இன்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ் நிலைகள் தொடர்ந்து நிலவுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை (17) முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலைமை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/222755

திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40வது ஆண்டு நினைவு நாள்

2 months 2 weeks ago

திருகோணமலையில் வரோதயாநகர் படுகொலையின் 40வது ஆண்டு நினைவு நாள்

17 AUG, 2025 | 07:52 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பாதாள வைரவர் ஆலயத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட 11 பேருக்கும் விசேட ஆத்ம சாந்திப் பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த படுகொலைச் சம்பவத்தில்,

குணராசா வசிகலா, குணராசா சங்கர், குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய எட்டுவயதான மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயிருந்தார்.

1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை கன்னியா பகுதியில் இருந்து வரோதயநகர் பகுதிக்குள் டிபென்டர் வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் வீதிவழியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் பாதுகாப்புத் தேடி அயல் வீடுகளிலும் தங்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

இதன்போது வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டைத் தட்டி கூப்பிட்டு அங்கு வந்த பிறீமாவில் வேலை செய்யும் வெள்ளையன் திருச்செல்வம் என்பவரை முதலாவதாக சுட்டுக் கொன்றனர். பின்னர் அங்கு ஓடி வந்த அவரது மாமனாரான கந்தன் மாணிக்கம் என்பவரை சுட்டுக் கொன்றனர். பின்னர் கந்தையா வீதிக்கு திரும்பிச் சென்றனர். இதன்போது அங்கு வந்த சீனியன் மாணிக்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனால் பயத்தில் இருந்த மக்கள் தம்பிராசா என்பவருடைய வீட்டில் தஞ்சமடைந்து பதுங்கியிருந்தனர். இதன்போது அங்கு பிள்ளைகளின் அழுகுரல் சத்தம் கேட்க கந்தையா வீதிக்கு திரும்பி அங்கு இரண்டாவதாக இருந்த தம்பிராசாவின் வீட்டை தட்டி எட்டிப்பார்த்து அங்கு நிறைய மக்கள் இருக்கவே அந்த அறைக்குள் கைக்குண்டு ஒன்றை போட்டு வெடிக்கச் செய்தனர்.

இதன்போது அங்கிருந்து காயங்களுடன் வெளியேறி ஓடியவர்களையும் சுட்டுக் கொன்றனர், இதன்போது அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் மாலையளவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு திருகோணமலை வைத்தியசாலைக்கு அக்கிராம மக்கள் கொண்டு சென்றனர்.

அங்கு காயமுற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய 8 வயதான பெண் குழந்தை காணாமல் போயிருந்தார். இதுவரை அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2025-08-17_at_14.54.51.jp

WhatsApp_Image_2025-08-17_at_14.54.38.jp

WhatsApp_Image_2025-08-17_at_14.54.42.jp

WhatsApp_Image_2025-08-17_at_14.54.35.jp

https://www.virakesari.lk/article/222744

ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் நான்கரை மணித்தியாலங்களுக்கு மேலாக தொடரும் விசாரணை

2 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

17 AUG, 2025 | 02:55 PM

image

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணனை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார்.

விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபன் அவர்களுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்துமணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் நான்கரை மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதுவரை விசாரணைகள் முடிவடையவில்லை.

https://www.virakesari.lk/article/222743

வாடகை வீடு தேடும் மகிந்த

2 months 2 weeks ago

வாடகை வீடு தேடும் மகிந்த

mahinda.jpg

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வரும் பின்னணியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் ஓய்வு காலத்தைஉத்தியோகபூர்வ இல்லத்திற்கு கழிக்க உரிமை இல்லை.

இந்நிலையில், அவர் தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது.

மெதமுலானையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் செல்ல விரும்பினாலும், கொழும்புக்கு கணிசமான தூரம் பயணிப்பதில் உள்ள சிரமத்தையும், அவரது மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமத்தையும் கருத்தில் கொண்டு அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவர் தங்குவதற்கு பொருத்தமான வீடுகள் குறித்து பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

https://akkinikkunchu.com/?p=337253

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி

2 months 2 weeks ago

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் – பயணிகள் பெரும் அவதி

colombo-780x470.jpg

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் குடியேற்ற மையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தங்கள் விமானங்களை தவறவிட்டதாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையம் அதிக கொள்ளளவுக்கு அதிகமாக இயங்கியதாகவும், ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இதனால் புறப்படும் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

குழப்பமான சூழ்நிலை குறித்து பலர் விரக்தியை வெளிப்படுத்தினர்.

எதிர்காலத்தில் இதுபோன்ற இடையூறுகளைத் தவிர்க்க பணியாளர்கள் மற்றும் திட்டமிடல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பலர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தினர்.

https://akkinikkunchu.com/?p=337247

இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரிசல்களை ஏற்படுத்தும் - அருட்தந்தை மா.சத்திவேல்

2 months 2 weeks ago

இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பது தமிழ், முஸ்லிம் இன விரிசல்களை ஏற்படுத்தும் - அருட்தந்தை மா.சத்திவேல்

shathivel.jpg

இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப் படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொடூர இனப்படுகொலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கும் அதன் இனப்படுகொலையை ஆதரிக்கும் நேச நாடுகளுக்கு எதிராகவும் நேற்றுமுன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரல்லை மலையன சுற்றுவட்டாரத்தில் ஆரம்பித்து கெம்பல் மைதானத்தில் நடந்த எதிர்ப்பு போராட்டம் எதிர்ப்பு கோசத்தோடு முடிவுக்கு வந்தது.

இப்போராட்டம் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து தொடர் இன அழிப்பிற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை முகம் சுழிக்க வைத்ததோடு ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறும் மனநிலையை உருவாக்கியமை வேதனைகுரியதே.

இலங்கையின் இனப்படுகொலைக்கு முழு மூச்சாக ஆதரவு தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர்களின் விடுதலை அமைப்பை பாசிச வாத அமைப்பு என்றும், தேசிய தலைவரை பாசிச வாதி எனவும் மேடை கட்டி பேசியவர்கள் கூட்ட முன் வரிசையை அலங்கரித்தோடு மேடை ஏறி வீர வசனம் பேசியமை மட்டுமல்ல நிகழ்வு ஆரம்பம் இலங்கை தேசியக்கொடி திரையில் அசைந்தாட தேசிய கீதத்தோடு ஆரம்பமானது.

இலங்கையில் இன அழிப்பு,இன சுத்திகரிப்பு, இனப்படுகொலை என்பன தேசிய கொடியோடும் தேசிய கீதத்தோடும் நடத்தப்பட்டதோடு அதன் வெற்றியின் அடையாளமாகவே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதம் அதனை தம் அடையாளமாக கொண்டுள்ளது.

பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு முழுமூச்சாக ஆதரவு தெரிவித்து படைக்கு தேவையானவர்களை கிராம புறத்தில் இருந்து திரட்டி கொடுத்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை பாதையில் பால் சோறு சமைத்து தேசிய வெற்றியாக கொண்டாட வைத்து மகிழ்ந்தவர்கள் பாலஸ்தீன மக்கள் முகம் கொடுக்கும் இனப்படுகொலைக்கு எதிரானவர்களாக இருப்பதாக காண்பிப்பது முஸ்லிம்களை தமது அரசியலுக்குள் இழுப்பதற்காகவே அன்றி வேறில்லை.

போராட்ட ஒழுங்கமைப்பினர் போராட்ட பேரணியில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையினை தமது பதாதைகளிலோ கோசங்களிலோ வெளிவராத வகையில் திட்டமிட்டிருந்தனர்.

இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளாத மனநிலை மட்டுமல்ல சிங்கள பௌத்தத்தையும் அதன் காவலர்களையும் இனப்படுகொலையாளர்களையும் பகைத்துக் கொள்ள விரும்பாத அரசியல் என்பதே உண்மை. அது மட்டும் அல்ல தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தையும் அரசியல் அபிலாசைகளையும் மறுக்கும் செயலாகவுமே நாம் கருதுகின்றோம்.

சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு 1948 ல் கிடைத்த சுதந்திரம் இனப்படுகொலைக்கும், இன சுத்திகரிப்பிற்கும், இன அழிப்பிற்குமான சுதந்திரம் என்பது எமது அனுபவம். இன்று பாலஸ்தீனர்கள் சந்திக்கும் இனப்படுகொலைக்கு முன்னர் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது என்பதை முஸ்லிம் உறவுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலை வழி நடத்தி இனப்படுகொலை புரியும் வல்லரசுகளை அன்று தமது அரசியலுக்காக இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதிகளை வழி நடத்தி பெரும் இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை மௌனிக்கச் செய்து தமிழர்களை அரசியல் ரீதியில் அங்கவீனமாக்கினர். தொடர்ந்து தமிழர்களின் அரசியலை அழிக்க பெரு முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களை பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களின் சுதந்திர தேசம் தமிழர்களின் போராட்டத்திற்கான அங்கீகாரமாகும். அதேபோன்று தமிழர்களின் சுதந்திர தாயகம் பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகத்திற்கான வெற்றியாகும். இத்தகைய அரசியலை மக்கள் மயப்படுத்தி போராட்டங்களை முன்னெடுத்தல் தமிழ்- முஸ்லிம் உறவை பலப்படுத்தும். மக்கள் விடுதலை போராட்டத்தில் மக்கள் அரசியலாகி மக்களைபெரும் சக்திகளாக கொண்டுவர வேண்டும்.

அதனை விடுத்து இனப்படுகொலையாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுப்பதும், இனப்படுகொலையாளர்களை பாதுகாப்பதும் தமிழ்- முஸ்லிம் இன விரிசல்களையே ஏற்படுத்தும் என்பதையும் மிக கவலையோடு கூறுகின்றோம்.

தற்போதைய ஆட்சியாளர்கள் இதற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கு முழுமையான ஆதரவளித்துள்ளனர் என கூறுவது தமிழ் முஸ்லிம் இன உறவுகளை பிரிக்கும் இன அழிப்பை தொடரும் கூற்றாகவே கொள்ளல் வேண்டும். புதிய அரசியல் உறவை பலப்படுத்தி இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவது காலத்தின் அரசியல் தேவையுமாகும் என வலியுறுத்துகின்றோம்.

https://akkinikkunchu.com/?p=337232

ஹர்த்தாலுக்கான அழைப்பின் மூலம் கேலிக்கூத்தாடும் இலங்கை தமிழரசு கட்சி!

2 months 2 weeks ago

ஹர்த்தாலுக்கான அழைப்பின் மூலம் கேலிக்கூத்தாடும் இலங்கை தமிழரசு கட்சி!

sumanthiran-1-780x470.jpg

ஹர்த்தாலுக்கு ஆதரவை திரட்டுமாறு தமிழரசுக் கட்சியின் உயர்மட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் குடைச்சலை கொடுத்து வருவதாக அறியமுடிகிறது.

அதாவது ஹர்த்தாலுக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை சந்தித்தும் இவ்வாறு ஆதரவை திரட்டுமாறு உயர்மட்டமானது கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் பதில் தலைவரானத சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்

சகல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல கௌரவ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும்

அன்புடையீர்.

எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதிய கடையடைப்பு (ஹர்த்தால்) தொடர்பானது

எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே. இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சி தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும்.

அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது.

கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கடையடைப்புகளை மேற்கொள்ளும்போது வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் அழைத்து கலந்துரையாடியே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது தமிழரசுக் கட்சியானது தன்னிச்சையாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, தங்களது அழைப்பானது நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இவ்வாறு ஊடக சந்திப்புகளையும், நேரடி சந்திப்புகளையும் நடாத்துமாறு உறுப்பினர்களை கட்டாயப்படுத்துவது கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

https://akkinikkunchu.com/?p=337186

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை: புதிய அரசியலமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல் நடைமுறை என்பன உள்வாங்கப்படும்

2 months 2 weeks ago

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை: புதிய அரசியலமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல் நடைமுறை என்பன உள்வாங்கப்படும்

17 Aug, 2025 | 09:53 AM

image

(நா.தனுஜா)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் 'இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளன.

அப்பிரேரணையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன.

அதேவேளை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் சர்வதேச கவனம் பெற்றிருக்கும் நிலையில், மனிதப்புதைகுழிகளுடன் தொடர்புடைய விடயங்களும் இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/222708

இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது - மீனாட்சி கங்குலி

2 months 2 weeks ago

இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது - மீனாட்சி கங்குலி

17 Aug, 2025 | 10:03 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த ஒரு கவலைக்குரிய சித்திரத்தை முன்வைப்பதுடன், சர்வதேச சமூகம் ஏன் இலங்கை விடயத்தில் தனது கண்காணிப்பைத் தளர்த்தக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவும் உள்ளது.

ஐ.நா. அறிக்கை குறிப்பிடும் கட்டமைப்பு ரீதியான காரணிகள் என்பது தற்காலிகப் பிரச்சினைகள் அல்ல மாறாக, அவை நாட்டின் நிர்வாக, சட்ட மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நீண்டகாலப் பிரச்சினைகளாகும். சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், தன்னிச்சையான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.

போர்க்குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது நம்பகரமான விசாரணைகள் இன்றி, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் நீடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகள் தோல்வியடைந்தமை என்பன சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்துகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் குறிப்பிடும் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் என்பது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு சர்வதேசப் பொறிமுறையாகும். இலங்கை இத்தகைய சர்வதேசப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து, நாட்டின் இறைமையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்துகிறது.

ஆகவே, எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது.

இலங்கையின் கட்டமைப்பு மாறாத வரை, சர்வதேசத்தின் கண்காணிப்பும் தளரக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார். 

https://www.virakesari.lk/article/222709

இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் - ரவிகரன் எம்.பி

2 months 2 weeks ago

இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் - ரவிகரன் எம்.பி

17 Aug, 2025 | 10:09 AM

image

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக  திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திரமான வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் வேண்டுமென்ற எமது அடிப்படை மனித உரிமைக் கோரிக்கையினை சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்வதற்காக அனைவரும் இக் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப்பரப்பில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கெதிராக எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்கக்கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த 07.08.2025அன்று, முத்துஐயன்கட்டு பகுதியிலுள்ள 63ஆவது இராணுவமுகாமைச்சேர்ந்த இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தின் குறித்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, இராணுவமுகாமிற்குச் சென்ற ஐவரில் ஒருவரான 32வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் காணாமல்போயிருந்தார்.

இந்நிலையில் இவ்வாறு காணாமல்போயிருந்தவர் கடந்த 09.08.2025அன்று முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்து, கடந்த 09.08.2025அன்று மேஜர் தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இரு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று இராணுவத்தினர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவமும், அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தின் முறையற்ற செயற்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதமிஞ்சிய இராணுவமயமாக்கமுமே காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக இராணுவத்தினர் தேவையற்றவிதத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப்பேணிவந்துள்ளனர். அத்தோடு அப்பகுதி மக்களின் வறுமைநிலையைப் பயன்படுத்தி இளைஞர்களை முறைகேடான, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் தூண்டிவிட்டுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்திவந்துள்ளனர்.

அந்தவகையில் இராணுவத்தினரால் அப்பகுதி இளைஞர்களுக்கு இராணுவமுகாமிலுள்ள பொருட்கள், தளபாடங்கள், எரிபொருள் என்பவற்றுடன் இராணுவத்தினரால் காட்டுமிருகங்கள் வேட்டையாடப்பட்டு இப்பகுதி இளைஞர்களிடம் விற்பனைக்காக வழங்கப்பட்டுவந்ததாகவும் அப்பகுதி மக்களாலேயே எமக்கு முறையிடப்பட்டது. 

இவ்வாறு இளைஞர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு மாற்றீடாக போதைப்பொருட்களைப் பெற்றுத்தருமாறு 63ஆவது இராணுவமுகாம் இராணுவத்தினர் அப்பகுதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுள்ளனர்.

இவ்வாறாக இராணுவத்தினரின் முறையற்ற செயற்பாடுகள், தொடர்பாடல்களின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கின்றது. 

இவ்வாறாக அப்பகுதி இளைஞர்களுடன் முறையற்றவிதத்தில் தொடர்பினைப் பேணிவந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவத்தினர் மூவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்தச் சம்பவத்திற்கு இராணுவத்தினரே முற்றுமுழுதான பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றனர்.

மேலும் அதிகரித்த இராணுவப் பிரசன்னமென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பெங்கும் அதிகரித்துள்ள நிலையே காணப்படுகின்றது.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகளாகியுள்ளநிலையில் வடக்கு, கிழக்கில் இவ்வாறான அதிகரித்த இராணுவப்பிரசன்னம் தேவையற்ற ஒன்றாகும்.

இவ்வாறாக யுத்தம் மௌனித்து ஒன்றரைத் தசாப்தகாலம் கடந்துவிட்ட சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் தொடர்ந்து இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

அதேவேளை இவ்வாறு வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப்பரப்பில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதன் பின்னணியில் இடம்பெறக்கூடிய கொடூரமான சம்பவங்களையும் தொடர்ந்தும் எம்மால் அனுமதிக்கமுடியாது.

எனவேதான் வடக்கு, கிழக்கில் இவ்வாறு அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை(18) வடக்கு, கிழக்கு தமிழர்தாயகம் தழுவியரீதியில் பூரணகர்த்தாலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அழைப்புவிடுத்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்டவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் கர்த்தாலுக்கான ஆதரவைநல்குமாறு கோரியுள்ளேன்.

அதேவேளை வன்னி மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிஎன்ற வகையில் வன்னியிலுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பிலுள்ள அனைவரும் இந்த பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவுநல்கி வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக எமது முழுமூச்சான எதிர்ப்பினை காண்பிக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கின்றேன்.

மேலும் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகள் ஆகியுள்ளசூழலில் வடக்கு,கிழக்கில் தொடர்ந்தும் இராணுவக் கெடுபிடிக்குள் எமது மக்களை வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்திலுள்ள எமது மக்கள் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளைப்போல தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பில், அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு மத்தியில் ஓர் அவல வாழ்வினையே வாழ்கின்றார்கள்.

எனவே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எமது மக்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்களைப்போல இராணுவப் பிரசன்னமில்லாது சுதந்திரமாக வாழவேண்டுமென்ற அடிப்படை மனித உரிமையினையே நாங்கள் கோருகின்றோம். அதற்காகவே இந்த வடக்கு, கிழக்குரீதியிலான பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இந்நிலையில் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர்மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் 18.08.2025அன்று இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்குத்தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுஆதரவினை நல்குவதன் ஊடாக, வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்ற எமது அடிப்படை மனிதஉரிமைக் கோரிக்கையினை முழுசர்வதேசத்திற்கும் வலுவாக முன்வைப்போம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/222715

வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

2 months 2 weeks ago

வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

17 Aug, 2025 | 11:08 AM

image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும்.

அதன் நீட்சியாக இவ்வருடமும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கிலும், கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விரு போராட்டங்களும் நடைபெறவிருக்கும் இடங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்திலும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். 

https://www.virakesari.lk/article/222724

பிள்ளையானின் கீழ் செயற்பட்ட மேலும் 6 துப்பாக்கிதாரிகளுக்கு சிஐடி வலைவீச்சு

2 months 2 weeks ago

பிள்ளையானின் கீழ் செயற்பட்ட மேலும் 6 துப்பாக்கிதாரிகளுக்கு சிஐடி வலைவீச்சு

17 August 2025

1755418000_3969119_hirunews.jpg

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள,பிள்ளையான் மற்றும் இனியபாரதி எனப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்தமை, கடத்தியமை மற்றும் காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://hirunews.lk/tm/415017/cid-nets-6-more-gunmen-who-operated-under-pillayan

முத்தையன்கட்டு சம்பவம்: அரசாங்க தரப்பு விரிவான விளக்கம்

2 months 2 weeks ago

முத்தையன்கட்டு சம்பவம்: அரசாங்க தரப்பு விரிவான விளக்கம்

17 August 2025

1755418244_9646128_hirunews.jpg

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

ஒட்டுச்சுட்டான் - முத்தையன்கட்டு பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் கடந்த 7 ஆம் திகதி 5 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.

அதன்போது, அங்கிருந்த சில சிப்பாய்கள் அவர்களை தாக்கி, அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

குறித்த நபர்களை அங்கிருந்த தப்பியோடியபோது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் உடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் காவல்துறையினர் தயாரித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கு, சில குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு எந்தவித பாரிய காயங்களுக்கு நேரடியாக பங்களிக்கவிலலை என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும் எச்சங்கள் உடற்கூறாய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ பேச்சாளரின் விளக்கம்

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, இராணுவம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார்.

முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முன்னதாகவும்,இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கு இராணுவத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை பேச்சாளரின் விளக்கம்

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எவ்.யூ.வுட்லர் விளக்கமளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான ஒட்டுச்சுட்டான் காவல்நிலையத்தினால் இரண்டு விசாரணைக்குழுகள் நியமிக்கப்பட்டுள்ளன.

13 இராணுவம் சிப்பாய்கள் உட்பட மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில், முகாமுக்குள் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் 2 இராணுவ சிப்பாய்களும், மற்றையவர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முகாமுக்குள் சந்தேகநபர்களை அனுமதித்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே இரு இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சிவிலியன்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேய மற்றைய சிப்பாய் தாக்குதல் தொடர்பில் செய்யப்பட்டதாகவும், அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவார் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

https://hirunews.lk/tm/415018/muthaiyankattu-incident-detailed-explanation-from-the-government#google_vignette

இந்தியாவில் இருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட சலுகை

2 months 2 weeks ago

இந்தியாவில் இருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட சலுகை

இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் பயணச் செலவு என அனைத்தையும் சிறப்புச் சலுகையாக 9,999 இந்திய ரூபாயாகக் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/இந்தியாவில்-இருந்து-கப்ப/

செம்மணி - துண்டி முகாம்கள் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரண தண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ!

2 months 2 weeks ago

செம்மணி - துண்டி முகாம் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ!

Published By: DIGITAL DESK 3

17 AUG, 2025 | 09:48 AM

image

(நா.தனுஜா)

அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக,  செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன் என்று அறிவித்துள்ள கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1996 களில் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டறியப்பட்டு, அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 141 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 1996 களில் செம்மணி முகாம் - துண்டி முகாம் வரை இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்துள்ளார். அவரது வெளிப்படுத்தல்களின் முதற்பகுதி வருமாறு:

'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதனூடாக வெளிப்படுத்துகிறேன். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு மேலதிகமாக, விடயங்களை யாழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு இதனை வெளிப்படுத்துகிறேன்.

எனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கடந்த 3 ஆம் திகதியன்று 'வீரகேசரி' பத்திரிகையில் முதற்பக்கத்தில் வெளியானது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகல விடயங்களும் உண்மையானவை என்பதை நான் யாழ் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக செம்மணிக்கு அப்பால் முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன்.

1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் வெளிப்படுத்தியபோது, அவை நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் கடவுளும், இயற்கையும் அவை உண்மை என்பதை நிரூபித்துள்ளன. 1998 ஆம் ஆண்டு எனக்கு மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கூற்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரியான நாமல் பண்டார என்ற அதிகாரி மூலம் எனக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அக்கடிதம் அமைச்சராலேயே எழுதப்பட்டிருந்தது. நான் மேல் நீதிமன்றத்தில் கூறிய விடயம் கோபத்தில் கூறப்பட்டது எனவும், அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அந்தக் கடிதத்தை வாசித்ததன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அதனைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த அதிகாரி, கடிதத்தை வாசித்துவிட்டுத் திருப்பித்தாருங்கள் என்றார். நான் அந்தக் கடிதத்தைத் திருப்பிக்கொடுப்பதற்கு மறுத்தபோது அவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் என்னை மிலேச்சத்தனமாகத் தாக்கிக் கொல்ல முற்பட்டனர். இருப்பினும் அங்கிருந்த ஏனைய சிறைக்கைதிகளின் தலையீட்டால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அவ்வதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்தொடர்ந்திருந்த போதிலும், அதற்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

1999 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலத்தை போகம்பரை சிறைச்சாலையில் சந்தித்தபோது கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை அவரிடம் கூறினேன். அப்போது அவர் என்னிடம் 'பயப்படாமல் இருங்கள். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று உங்களை விடுத்து செம்மணி வழக்கின் சாட்சியாளராக மாற்றுகிறேன்' எனக் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டு இந்த செம்மணி மனிதப்புதைகுழியைக் காண்பிப்பதற்காகச் சென்றபோது எனது சார்பில் முன்னிலையாவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவதற்கு குமார் பொன்னம்பலத்துக்கு விமானவசதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் அவர் திடீரெனப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவை அடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் செய்தியில், குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்னைய தினத்துக்குரிய திகதியே இடப்பட்டிருந்தது. இவ்விடயம் அவ்வேளையில் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதன்மூலம் குமார் பொன்னம்பலம் கொல்லப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி அந்த இரங்கல் செய்தியை எழுதியிருந்தார் என்பது தெளிவாகிறது.

1999 ஆம் ஆண்டு நான் மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களைக் காட்டிக்கொடுத்த வேளையில், அவற்றைக் காட்டிக்கொடுக்கவேண்டாம் எனவும், ஜனாதிபதி எனக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சிலவற்றை மாத்திரம் காட்டிக்கொடுத்ததன் பின்னர், அதனைக் கைவிட்டுவிட்டேன். இவ்விடயம் தொடர்பில் மேலதிகமாக பல விடயங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா வரை அறிந்திருந்தனர் என்பதை நான் யாழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன். அரியாலை 7 ஆவது இலங்கை இராணுவக் காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சி3 முகாமின் 7 ஆவது இராணுவக் காலாட்படைக்கு உரிய சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டம் என அறியப்படும் பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன. அது இராணுவக்கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளுக்கு வெளியே இருந்த பிரதேசமாகும். அவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பிரதேசம் (மணியம் தோட்டம்) எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். இதற்கு மேலதிகமாக பிரதான கைதுகள் செம்மணியில் இடம்பெற்றதுடன், அங்கு கைதுசெய்யப்படமுடியாதவர்கள் ஏனைய சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்டனர்.'

(சோமரத்ன ராஜபக்ஷவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயங்களின் தொடர்ச்சி எதிர்வரும் ஞாயிற்கிழமை (24) வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்படும்.)

https://www.virakesari.lk/article/222706

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!

2 months 2 weeks ago

images-3.jpg?resize=367%2C137&ssl=1

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

நேற்றையதினம் நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவில் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர்.

அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை, நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

https://athavannews.com/2025/1443294

Checked
Sun, 11/02/2025 - 14:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr