Published By: Vishnu
19 Sep, 2025 | 06:47 PM

(இராஜதுரை ஹஷான்)
2026நிதி ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் அரச செலவீனமாக 4,43,435 கோடியே 6,46,8000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4,21,824 கோடியே 8,018,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 21,610 கோடியே 8,450,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தை காட்டிலும் 2026ஆம் ஆண்டு வரவு, செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
அரச செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64,800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடயதானங்களுக்கு 61,744கோடியே 50இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக 3,055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் ஜனாதிபதிக்கான செலவீனமுமாக மொத்தம் 1,11,715 கோடியே 9,980,000இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக 299,29,80,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவீனமாக 11.377,980,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 8,385,000,000 ரூபா அதிகமாகும்.
பிரதமரின் விடயதானங்களுக்குரிய செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு 1,170,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக 9,75,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் 1,95,000,000 ரூபா குறைவானதாகும் .
அதேவேளை 2025ஆம் ஆண்டு , சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு உள்ளிட்ட இன்னும் சில அமைச்சுகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விடவும் 2026ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு ,செலவுத்திட்ட முன்மொழிவு எதிர்வரும் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் வருமாறு;
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு 14,500,000,000ரூபாவும், பௌத்த அலுவல்கள் திணைக்களம் 1,350,000,000ரூபாவும், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2,04,000,000ரூபாவும், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் 1,78,000,000 ரூபாவும், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2,85,000,000ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 6,34,782,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது 2025 ஆம் ஆண்டு இந்த அமைச்சுக்கு 7,14,177,500,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 7,9,395,500,000 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சுக்கு 4,55,000,000,000ரூபாவும், நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சுக்கு 5,8,500,000,000 ரூபாவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 5,54,999,998,000 ரூபாவும், வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2,3,000,000,000 ரூபாவும், வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 2,700,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு 4,46,000,000,000 ரூபாவும், கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2,21, 300,000,000ரூபாவும் வலுசக்தி அமைச்சுக்கு 23,100,000,000ரூபாவும், நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 1,03,500,000,000ரூபாவும், கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 3,8,600,000,000ரூபாவும், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு 3,01,000,000,000ரூபாவும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 5,96,000,000,000ரூபாவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 18,000,000,000ரூபாவும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கு 11,500,000,000 ரூபாவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 10,600,000,000 ரூபாவும், சுற்றாடல் அமைச்சுக்கு 18,300,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு 16,400,000,000ரூபாவும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு 16,000,000,000 ரூபாவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு 193,000,000,000ரூபாவும், தொழில் அமைச்சுக்கு 6,400,000,000ரூபாவும், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 13,500,000,000ரூபாவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கு 6,000,000,000 ரூபாவும் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவு, செலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 8ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
நவம்பர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை 6 நாட்கள் இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடத்தப்படுவதுடன் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்குத் டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு,செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும்.
https://www.virakesari.lk/article/225546