அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.
(புதியவன்)
அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.
அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.
இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள்.
இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ)
அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)